அன்புள்ள ஜெ,
நவீன குருமார்களைப்பற்றி [கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள்? இது என்னவகை யோகம்?
ஆனந்த்
http://www.youtube.com/watch?v=tY7nBaFYOgM&feature=relmfu
http://www.youtube.com/watch?v=u5Axhwi70rM&feature=fvst
அன்புள்ள ஆனந்த்
பார்த்தேன்.
இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது? நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்?
உலகமெங்கும் அனேகமாக எல்லாப் பழங்குடிகளிலும் இந்த விஷயம் உள்ளது. சன்னதம் வந்து சாமியாடுதல் ஒரு வழிபாட்டுமுறையாகவே பழங்குடிகள் நடுவே இருக்கிறது. பழங்குடிகளின் கூட்டுநடனங்களின் உச்சத்தில் இந்த அம்சம் வெளிப்படுகிறது. பெரும்பாலான நாட்டார்கலைகளில் இந்தப் பித்துநிலை கைகூடுகிறது.
பழங்குடிமரபில் இருந்து பெருமத மரபுக்குள் இது குடியேறுகிறது. இந்துமதத்தில் சாக்தம் இதற்கு இடமளிக்க்கிறது. மண்டைக்காட்டிலோ சோட்டாணிக்கரையிலோ சர்வசாதாரணமாக பெண்கள் இந்த வகையான கட்டற்ற நிலைக்கு வந்து துள்ளியாடுவதைக் காணலாம். சபரிமலை சாஸ்தா வழிபாட்டில் பேட்டைதுள்ளல் போன்ற தருணங்களில் இதைக்காணலாம். குறைந்த அளவில் என்றாலும் சைவ வைணவ வழிபாடுகளிலும் பஜனைகளில் இவ்வகையான பித்துநிலை வெளிப்படுகிறது.
பெந்தேகொஸ்தே போன்ற கிறித்தவ வழிபாட்டுமுறைகள் இதை மட்டுமே வழிபாடாகச் செய்துவருகின்றன. அவர்களின் வழிபாட்டிடங்களில் வெளிப்படும் பித்துநிலை மானுடமனம் எத்தனை வன்மையானது எனக் காட்டி நம்மைப் பேதலிக்கச் செய்யக்கூடியது. பெந்தேகொஸ்தே வகை மதப்பிரிவுகள் தங்கள் உறுப்பினர்களை இழுப்பதைக்கண்ட கத்தோலிக்கர்கள் ’கரிஸ்மாட்டிக் பிரேயர்’ என்ற பேரில் அதேவகையான வழிபாட்டுக்கூட்டங்களைத் தங்களுக்குள்ளும் உருவாக்கினர். பிராட்டஸ்டண்ட் கிறித்தவர்கள் எழுப்புதல்-உபவாசக்கூட்டங்கள் என்ற பேரில் அதைத் தங்களுக்குள் வளர்த்தெடுத்தனர். அங்கெல்லாம் நிகழ்வது இதுவே.
மனிதமனம் எப்போதும் விழிப்பு [ஜாக்ரத்] நிலையில்தான் தன்னை அறிந்துகொண்டிருக்கிறது. அதற்கு அடியில் ஆழ்மன [ஸ்வப்ன] நிலையை அது அவ்வப்போது சென்று தொட்டுக்கொண்டு மீள்கிறது. அதற்குமப்பால் சுஷுப்தி நிலையில் மானுட அகம் தன்னை பிரபஞ்சத்தின் ஒரு துளியாக உணர்கிறது. துரிய நிலையில் அது பிரபஞ்சமாகவே உள்ளது. இந்து ஞான மரபில் ஆழ்மனம் என்பது ஸ்வப்ன,சுஷுப்தி என்னும் இரு அடுக்குகள் கொண்டது. துரியம் என்பது மனமற்ற நிலை.
மனிதமனத்துக்கு ஒரு விசித்திரமான சாபம் உண்டு. அதன் பிரச்சினைகள் எல்லாமே ஆழ்மனத்தில் உருவாகக்கூடியவை. ஆனால் அதன்விளைவான வலிகளும், சஞ்சலங்களும், இன்பங்களும் மட்டும் விழிப்புநிலையால் அனுபவிக்கப்படுகின்றன. கண்ணுக்குத்தெரியாத ஒரு பெரிய மிருகத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படும் சின்ன மிருகம்தான் நம் பிரக்ஞை.அந்தப் பதற்றமும் அச்சமும் எப்போதும் பிரக்ஞைமனத்தில் இருந்துகொண்டிருக்கிறது.
தன் மனநிலைக்குத் தன் ஆழமே காரணம் என அறிந்தாலும் தனக்குள் சென்று ஆழத்தில் கூர்ந்து நோக்க மனிதர்களால் முடிவதில்லை. தன் ஆழத்தை அவன் எப்போதும் தொடமுயன்றபடியே தான் இருக்கிறான். சாதாரண மனிதர்கள்கூட ’என்னன்னே தெரியல’ என்று சொல்லி அந்த மனநிலையை அளைந்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஆனால் உள்ளே செல்வது சாத்தியமில்லை. காரணம், பிரக்ஞையைக்கொண்டே உள்ளே செல்லமுடியும், ஆனால் உள்ளே செல்வதற்கான தடையே பிரக்ஞைதான்.
ஆழத்து கனவுமனதை மூடியிருக்கும் நனவுமனதின் திரை மிகச்சிக்கலான ஒன்று. அதை விலக்க முயன்றால் அது விசித்திரமான ஒரு நாடகம் மூலம் அந்த முயற்சியைத் தோற்கடிக்கிறது. விலக்கிப்பார்க்க முயலும் பிரக்ஞையாக அது தன் ஒருபகுதியை மாற்றிக்கொள்கிறது. அந்தப்பகுதியால் பார்க்கப்படுவதாகத் தன் இன்னொரு பகுதியை உருமாற்றிக்கொள்கிறது. நாம் நம் ஆழ்மனதை அறிவதற்காகப் பிரக்ஞைபூர்வமாக எந்த முயற்சியை எடுத்தாலும் அந்தப் பிரக்ஞைக்கு ஏற்ப மாற்றப்பட்ட ஓர் ஆழ்மனதையே நாம் அறிகிறோம். அது ஆழ்மனமே அல்ல, மாறுவேடமிட்ட பிரக்ஞை மட்டுமே.
ஆகவே எல்லா மனிதர்களும் பிரக்ஞைநிலையை மழுங்கடிப்பதை விரும்புகிறார்கள். பிரக்ஞை விலகி ஆழத்து கனவுநிலை வெளிப்படும் கணங்களைத்தான் பெரும்பாலும் இனிய தருணங்கள் என மக்கள் சொல்கிறார்கள். கனவுகள், தூக்கத்துக்குச் செல்வதற்கு முந்தைய கணங்கள், தூக்கம் விழிப்பதன் கணங்கள், இசைகேட்கும்போது உருவாகும் கணங்கள், உடலுறவின் உச்ச கணங்கள். ‘மெய்மறந்துட்டேன் ‘என்னையே மறந்துட்டேன்’ என்று அவ்வனுபவங்களைச் சொல்கிறார்கள். மானுடகுலத்துக்கு போதை மீதுள்ள பெரும் ஈடுபாடுக்குக் காரணமும் இதுவே. என்னென்ன வகையான போதைகள். மருந்துகள் மாத்திரைகள் புகைகள் பானங்கள்…
அவையெல்லாம் பிரக்ஞைநிலையைக் கிழித்து வீசிக் கனவுநிலையைக் கட்டில்லாமல் வெளிப்படச்செய்வதற்கான முயற்சிகளே. எப்போதும் சஞ்சலத்துடன் இருக்கும் மேல்மனம் விலகி நிற்பதே பெரும் விடுதலையுணர்ச்சியை அளிக்கிறது. அந்த விடுதலைக்கான தவிப்பே இந்தவகையான பித்துநிலைகளை நோக்கிக் கொண்டு செல்கிறது. இதைப் பிரக்ஞைநிலைமீது போடப்பட்டும் ஒரு கிழிசல் என்று சொல்லலாம்.
பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது.
மழுங்கிய பிரக்ஞையைப் படிமங்கள் எளிதில் ஊடுருவமுடியும். ஆழ்மனதை அவை தீவிரமாகத் தாக்கும். அந்தப் படிமங்கள் நம்முடைய பண்பாட்டின் ஆழத்தில் தொல்படிமங்களாக இருந்துகொண்டிருப்பவற்றின் மறுவடிவங்கள் என்றால் அவற்றின் வல்லமை அளவிறந்தது. மதம் சார்ந்த படிமங்கள் நம்முடைய சிந்தனைநிலை உருவாவதற்கு முன்னரே நமக்குள் செலுத்தப்பட்டுவிட்டவை. அவற்றுக்கான வேகம் மிக அதிகம்.
இவ்வாறு பிரக்ஞை மழுங்கடிக்கப்பட்ட சூழலில், ஆழ்மனம் படிமங்களால் ஊடுருவ நேரும்போது சட்டென்று நம் பிரக்ஞைநிலை கழன்று விழக் காண்கிறோம். நம் ஆழ்மனம், ஸ்வப்னநிலை, சீண்டப்பட்டு சீறி வெளிவருகிறது. அணையை உடைத்து வரும் வெள்ளம்போல. அது வடிந்து முடிந்ததும் ஆழ்மான அமைதி. விடுதலை உணர்வு, நிறைவு. அது கொஞ்ச நேரத்துக்குத்தான். ஆனால் உண்மையில் இது நம்முடைய இறுக்கங்களை இல்லாமலாக்கிவிடுகிறது.
பழங்குடிகளுக்கே இது தேவையாக இருக்கிறது என்னும்போது மன அழுத்தம் நிறைந்த நவீன வாழ்க்கைக்கு அது தவிர்க்கமுடியாதது ஆகிறது. ஏதோ ஒருவடிவில் இது எல்லா சமூகங்களிலும் இருந்துகொண்டிருக்கிறது. சென்னையின் சில இரவு விடுதி நடனங்களில் இதே வெறியாட்டத்தைக் கண்டிருக்கிறேன். கஞ்சா அல்லது போதைமாத்திரைகள் துணையுடன். ஹெவிமெட்டல் இசை துணைசேர்க்க ஆடித் திமிறுபவர்களுக்கும் சோட்டாணிக்கரையில் ஆடுபவர்களுக்கும் பெந்தேகொஸ்தே சபையில் கூச்சலிட்டு மயிரைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
அத்தகைய ஒரு வெளிப்பாட்டையே நித்யானந்தர், கல்கிசாமியார், கரிஷ்மாட்டிக் பாதிரியார் போன்றவர்கள் செய்கிறார்கள். அவரது வேடங்கள், அங்குள்ள ஒளி அமைப்பு, தாளம், அவருடைய பேச்சு, அனைத்தையும் விட முக்கியமாக முதலில் சிலர் ‘செயற்கையாக’ ஆட ஆரம்பிப்பது எல்லாம் சேர்ந்து பிறரைப் பித்துக் கொள்ளச்செய்கின்றன. எத்தனை அதிகம் பேர் பித்துக் கொள்கிறார்களோ அத்தனை விரைவாக அதில் உள்ளவர்களை அந்த மனநிலை பற்றிக்கொள்கிறது. பொதுவாக ஆண்களை விடப் பெண்களின் பிரக்ஞைநிலை எளிதில் சூழலுக்கு வசப்படக்கூடியது.
ஆச்சரியம் என்னவென்றால் இதையெல்லாம் அரசியல் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாமென ஹிட்லர் அவரது மெய்ன்காம்ப் நூலில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டம் பெரிதாக இருக்கும்தோறும், இசை ஒளியமைப்பு மற்றும் சூழலின் உணர்ச்சிகரம் மூலம் அதை ஒரே வெறிநிலை கொண்டதாக ஆக்கமுடியும் என்கிறார் அவர்.
நான் இந்தியச்சூழலில் இந்தவகையான எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை, ஏனென்றால் அறிவார்ந்த ஒரு எதிர்நிலை எனக்குள் உண்டு. ஆனால் அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் சூதாட்ட விடுதிகள் நடுவே செல்கையில் அங்கிருந்த துடிப்பான இசை, ஒளியசைவுகள், போதையூட்டும் சூழல் ஆகியவற்றை வேடிக்கைபார்க்க ஆரம்பித்து ஒருகட்டத்தில் சற்று பிரக்ஞையழிந்த நிலைக்கு வந்துவிட்டேன். அதை நானே உணர்ந்து என்னை மீட்டுக்கொண்டேன். நம் ஆழ்மனம் நம்முடையதல்ல. நாம் அந்தப் பெருவிலங்கின் கழுத்தில் கட்டப்பட்ட பலவீனமான சங்கிலியை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த வகையில் ஆழ்மனதைக் கட்டவிழ்த்துவிடும் பித்துநிலைக்கும் யோகம் கூறும் கடந்தநிலைக்கும் என்ன வேறுபாடு? இது ஜாக்ரத்தை தற்காலிகமாக ரத்துசெய்யும் ஒரு முயற்சி மட்டுமே. இதற்கு யோகம் தேவையே இல்லை. இதை கஞ்சாப் புகை மூலமே எளிதில் அடைய முடியும். யோகம் என்பது முற்றிலும் மாறுபட்டது.
என்ன வேறுபாடு? இதை ஏரியின் கரையை உடைத்துவிடுதல் எனலாம். ஆனால் யோகம் என்பது ஏரிநீரை மடைகள் வழியாக சீராக முழுமையாக வெளியேற்றுதல். ஜாக்ரத்தை ‘ரத்து’ செய்வதல்ல யோகம், ஜாக்ரத்தை மெல்லமெல்லப் பழக்கி ஸ்வப்னத்தைக் கண்டறிய முயல்வதே யோகம். ஆழ்மனதை அவிழ்த்துவிடுவதல்ல, ஆழ்மனதை அறிதலே யோகத்தின் வழி. அது இப்படி ஒரேநாளில் நிகழாது. மிகமிக கவனமாக, நெடுநாள் பழகிப்பழகி செய்யவேண்டியது. ஜாக்ரத் மூலம் ஸ்வப்னத்தையும் ஸ்வப்னம் மூலம் சுஷுப்தியையும் சுஷுப்திமூலம் துரியத்தையும் அறியும் நிலை. அறிதலும் அமைதலும் ஒன்றாக ஆகும் நிலை.
யோகத்தை இப்படிக் கூட்டாகச் செய்ய முடியாது. எளிய தியானப்பயிற்சிகளை மட்டுமே இப்படிச் செய்யமுடியும். யோகத்தின் வழி ஒவ்வொருவருக்கும் ஒன்று. அதில் பல்வேறு பிழைகள் நிகழும், அவற்றை நேரடி குரு வழிகாட்டல்மூலம் களைந்து முன்னகர வேண்டும். ஒருவரின் சிக்கல் இன்னொருவருக்கு இருக்காது.ஒவ்வொன்றும் ஒவ்வொருமுறையும் புதியவை.
யோகப்பயிற்சியில் இரண்டாவது நிலையில் ஸ்வப்னநிலை சீண்டப்படும்போது கொந்தளிப்பு உண்டு. சரியான வழிகாட்டல் இல்லாத பலர் அந்நிலையில் பித்துக் கொள்வதும், மீளமுடியாது செல்வதும் உண்டு. ஆனால் அதுகூட மிரண்டு துள்ளும் காட்டுக் குதிரைக்குட்டியை அடக்கி வசப்படுத்தும் முயற்சி மட்டுமே. அங்கே கட்டுப்படுத்தும் சக்தியாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஜாக்ரத் கூடவே வரவேண்டும்.
ஆக, நவீன காலகட்டத்தில் தேவையாக இருக்கும் ஒரு ‘சேவை’யை நித்யானந்தா கொடுக்கிறார் என்றே எனக்குப்படுகிறது. மூடிய அறைக்குள் கிறுக்காகக் கொஞ்ச நேரம் இருப்பது பொதுவெளியில் நிதானமாக இருக்க உதவக்கூடியது. அதை எந்தவகையான குறியீடுகள் சாத்தியமாக்குகிறதோ அதை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலருக்கு டிஸ்கோதே, சிலருக்கு நித்யானந்தா, சிலருக்கு பெந்தெகொஸ்தே. மற்றபடி இதற்கும் இந்து மதத்துக்கும் தியானத்துக்கும் யோகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஜெ
[ பெந்தெகொஸ்தே. ஃபாதர் கே ஏ ஆபிரகாம்]
http://www.youtube.com/watch?v=UKT-CCqaeZM&feature=related
[கரிஷ்மாட்டிக் பிரேயர். பினு ஜோஸ் சாக்கோ]
http://www.youtube.com/watch?v=63-WB3SQklQ&feature=related
எதியோப்பியாவில் ஒரு பெந்தேகொஸ்தே கூட்டம்
http://www.youtube.com/watch?v=u6ck5vTmdNQ&feature=related
அமெரிக்கா தேவாலயமொன்றில் பரிசுத்த ஆவி வந்த பெண்கள்
http://www.youtube.com/watch?v=Jg-Z9_RIqCA&feature=endscreen&NR=1
கைகளின் நீளத்தை சரிசெய்கிறார் பாதிரியார்
கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?
ஆன்மீகம் தேவையா?
நான் இந்துவா?
தத்துவம் தியானம்-கடிதம்