பூமணியின் நாவல்கள்

பூமணியின் படைப்புகளைத் தமிழின் இயல்பு வாதப் படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல் கட்டமென்றால் அவரது தனித் தன்மைகள் மூலம், அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்த கட்டமாகும். இந்த இரு கோணத்திலும் வாசித்தால் மட்டுமே அவரது முக்கியமான நாவல்களை நாம் முழுமையாக உணர முடியும். ஏனென்றால் எந்த முதன்மைப் படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாகப் பொருந்திப் போக மாட்டான். காரணம் அழகியல் இயக்கங்கள் கால கட்டம் சார்ந்தவை. படைப்பு,நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.

‘பிறகு’ பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதுடன், தமிழில் எழுதப்பட்ட நவீனச் செவ்விலக்கியப்பிரதிகளில் ஒன்று என்றும் இன்று பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது. தமிழின் யதார்த்தவாத நாவல்களுக்கு ரகுநாதனின் ’பஞ்சும் பசியும்’ முதல் புள்ளி. தமிழின் இயல்புவாத நாவல்களுக்கு ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ’நாகம்மாள்’ முதல் புள்ளி. அந்த இடத்திலிருந்து ஆரம்பித்துத் தொடர்ச்சியாக முக்கியமான ஆக்கங்களை நாம் இந்த அழகியல்தளத்தில் காணலாம். தமிழின் மிகத்தீவிரமான இலக்கிய அழகியல், சிறந்த விளைச்சல்களைக் கொடுத்த விளைநிலம், இதுவே என்று சொல்லலாம். நூற்றாண்டுகளாகத் தொன்மங்களிலும் புராணங்களிலும் மூழ்கிக்கிடந்த தமிழ் மனம் நவீன யுகத்தை எதிர்கொண்டதன் விளைவே அது யதார்த்த வாதத்தை இப்படி ஆவேசத்துடன் தழுவிக்கொண்டது.

தமிழில் மட்டுமல்ல மலையாளம் கன்னடம் இந்தி வங்காளி போன்ற மொழிகளிலும் யதார்த்தவாதமும் இயல்புவாதமும்தான் நவீன இலக்கியத்தின் இயல்பான அழகியல்கொள்கைகளாக இருந்துள்ளன. கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம். இயல்புவாதம் மரபான தொன்ம-புராணிகக் கதைசொல்லலில் இருந்து எப்படி வேறுபடுகிறது? மரபான கதைசொல்லல் மனிதர்களையும் வாழ்க்கையையும் ஓர் அழியாத பின்புலத்தில் , அறுபடாத ஓட்டத்தில் நிலைநிறுத்துகிறது. நேர்மாறாக யதார்த்தவாதம், குறிப்பாக இயல்புவாதம், இங்கே இப்போதே என வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. காலடிமண்ணில் உடனடிக்காலத்தில் மனிதர்களை அமைக்கிறது. ஆம், நெடுங்காலம் நேற்றைச் சொல்லிக்கொண்டிருந்த நம் கதைமரபில், எந்தக்கதையையும் ‘முன்னொரு காலத்தில் ஒரேஒரு ஊரிலே’ என ஆரம்பித்த பாரம்பரியத்தில் இங்கே இப்போது என்ன நிகழ்கிறது என்று சொல்லியாகவேண்டிய ஒரு கட்டாயத்தை நவீனத்துவம் உருவாக்கியது.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற நம்பிக்கை கொண்ட ஒரு சமூகம் கதாநாயகர்களை உருவாக்கி இலக்கியத்தில் நிலைநிறுத்தியது. விழுமியங்களை அவர்களைக்கொண்டு சுமக்கச்செய்தது. நவீன யுகத்தின் கலை,அந்த மரபைத் தாண்டிச்சென்றது. ஒவ்வொரு வாழ்க்கையிலும் நிகழ்வதைப்பற்றி மட்டும் அது அக்கறை கொண்டது.சாமானியர்களைப்பற்றிப் பேச ஆரம்பித்தது. சர்வ சாமானிய மக்கள் கதைநாயகர்களாக வர ஆரம்பித்தார்கள். நவீன இலக்கியம் உருவான காலகட்டத்தில் இந்த மாற்றம் மரபான மனநிலைகளில் உருவாக்கிய அதிர்ச்சியை சுந்தர ராமசாமி பதிவுசெய்திருக்கிறார். 1946இல் ’தோட்டியின் மகன்’ நாவல் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டபோது அது ஓர் ஆபாச இலக்கியமாக, நுண்ரசனைக்கு எதிரானதாகவே, சமன் குலைக்கும் அதிரடியாகவே இலக்கியவாசகர்களால் பார்க்கப்பட்டது. ஒரு தோட்டி எப்படிக் கதைநாயகனாக ஆக முடியும், அவன் வாழ்க்கையில் வரலாற்றுப் பதிவு செய்யக்கூடியதாக என்ன இருக்கிறது, பிறர் தெரிந்துகொள்ளக்கூடியதாக என்ன இருக்கிறது? அந்த வினாவுக்குத் தகழி ‘வாழ்க்கை’ என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னார்

பத்துவருடம் கழித்து அந்நாவலை சுந்தர ராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அதைப்பற்றிய விவாதம் ஒரு மார்க்ஸிய கம்யூனில் நிகழ்ந்தது. அது உருவாக்கிய குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். ‘தோட்டியைப்பற்றியா?’ என மூத்த மார்க்ஸியர் கேட்டார். ‘வேற யாரும் அதிலே இல்லியா?’ இல்லை என்பதை அவரால் ஏற்கவே முடியவில்லை. குறைந்தபட்சம் தியாகமும் சகாசமும் கலந்து விவரிக்கப்படும் ஒரு தோழர் கூடவா இல்லை? ஒரு தோட்டியின் வாழ்க்கையில் எப்படிக் காதல் வரமுடியும்? எப்படி உயர்ந்த பண்புகளை விவரிக்கமுடியும்? சரஸ்வதியில் தொடராக வெளிவந்த தோட்டியின் மகன் மார்க்ஸியச்சூழலிலேயே பரபரப்பை உருவாக்கியது

ஆனால் இருபதாண்டுகளில் நிலைமை மாறியது. இலக்கியமே இன்னொருதிசை நோக்கிச் சென்றது. ’ஜே.ஜே.சிலகுறிப்புகள்’ நாவலில் சரித்திரக்கதையாசிரியரான **** சொல்கிறார் ‘இப்போது இலக்கியத்தையே மாற்றிவிட்டார்கள். தோட்டி மூட்டைசுமப்பவன் கூட்டிக்கொடுப்பவன் யார் வேண்டுமானாலும் இலக்கியத்தில் வரலாம். இலைபோட்டு சாப்பிடுகிறவன் மட்டும் வரவே கூடாது என்கிறார்கள்’ நவீன இலக்கியத்தின் போக்கின் மாற்றத்தை மரபான மனங்கள் எதிர்கொண்ட விதம் அது.

பூமணி தமிழில் எழுதவந்தபோது இங்கே ஏற்கனவே யதார்த்தவாதம் அதன் முக்கியமான படைப்புகள் பலவற்றை உருவாக்கிவிட்டிருந்தது. பூமணியின் சமகாலம் என்பது தமிழில் முற்போக்கு யதார்த்தவாதத்தின் முக்கியமான ஆக்கங்கள் வெளிவந்த காலகட்டமாகும். கு.சின்னப்பபாரதியின் ’தாகம்’,டி செல்வராஜின் ’மலரும்சருகும்’,பொன்னீலனின் ’கரிசல்’,ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘புத்தம்வீடு’,நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்’,ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப்பருந்து’ போன்றவை பெரிதும் பேசப்பட்டுக்கொண்டிருந்தன. பூமணியின் ’பிறகு’அந்த வரிசையைச் சேர்ந்த ஒரு படைப்பாகவே தமிழில் முன்வைக்கப்பட்டது. அந்த யதார்த்தவாத விளைநிலத்தில் முளைத்த ஆக்கம்தான் அது என்பதை மறுக்கமுடியாது. அந்தப் பின்புலத்தில் இருந்து தன்னுடைய தனித்தன்மையால் தன் இடத்தைக் கண்டடைந்து கொண்டது அது.

‘பிறகு’ நாவலுக்கு மலையாள இலக்கியத்தில் தோட்டியின் மகனுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் உண்டு. தமிழில் ஒரு பகடையைக் கதநாயனாக ஆக்கி எழுதப்பட்ட முதல்நாவல். அழகிரிப்பகடை தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம். தமிழ்ப்பண்பாட்டின் மிக அடித்தட்டில் உள்ள சமூகத்தைச்சேர்ந்தவர். தமிழ்ப்பண்பாட்டின் ‘கண்ணுக்குத்தெரியாத’ ஆழத்தில் வாழ்பவர். தகழியின் தோட்டியின் மகன் ஒரு தோட்டியை மனிதனாகக் காட்டியது என்பார்கள். அவருடைய பாசம், பொறுப்பு, இடர்கள், மரபு என அது அவரை நம்மைப்போன்ற ஒருவராகக் காட்டியது. பிறகு அழகிரிப்பகடையை நம்மை விட மேலான ஓர் ஆளுமையாக, உழைப்பாலும் பிரியத்தாலும் கனிந்த மனம் கொண்டவராகக் காட்டுகிறது. ’பிறகு’ நாவலின் முக்கியமான அழகே அழகிரிப்பகடையின் நிதானமான குணச்சித்திரம்தான்.

‘பிறகு’ ஒரு வரலாற்று நாவலும் கூட. எல்லா இலக்கியங்களும் மாற்றுவரலாறுகளே என்பார்கள். ஒரு சம்பிரதாயமான வரலாற்றுச்சித்திரத்தால் விட்டுவிடப்படும் நுண்ணிய வாழ்க்கைக்கூறுகளை எழுதிச்சேர்ப்பதையே எல்லா இலக்கியங்களும் செய்கின்றன. ஆனால் ’பிறகு’ வரலாறோ மொழியோ சென்று தொடாத ஆழத்தில் வாழும் ஒருவரைக் கதாநாயகனாக்குகிறது. அதன் வழியாக வரலாற்றால் எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப்படாத ஓர் அடித்தள வரலாற்றை எழுதி முன்வைக்கிறது.

நாவல் தொடங்குவது இந்திய சுதந்திரப்போராட்டம் முடிந்து இந்தியா சுதந்திரம்பெறும்போது.’ சுதந்திரம் கிடைத்தது என்கிறார்களே, நம்மை யாராவது கட்டிப்போட்டிருந்தார்களா என்ன?’ என்ற சாமானியர் ஒருவரின் குரல் நாவலின் ஆரம்பத்திலேயே ஒலிக்கிறது. சுதந்திரம் கிடைத்தது உண்மையில் யாருக்கு என்ற எப்போதுமுள்ள வினாதான். சமூகம் சாதிய அடுக்குகளாக அமைந்திருக்கிறது. அடித்தளச்சாதிகள் மேல் ஒட்டுமொத்தச் சமூகத்தின் பாரமும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சுதந்திரத்தின் பொருளே தெரியாது. சுதந்திரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாறுதல்களை அவர்கள் உணரப்போவதில்லை.

ஆனால் இது எழுபதுகளில் இடதுசாரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப்பாடம் மட்டுமே என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். இந்தியாமீதான பிரிட்டிஷ் சுரண்டலே இரு பெரும் பஞ்சங்களையும் இரு பெரும் போர்களையும் இந்தியசமூகம் மீது சுமத்தியது. இந்திய கிராமங்களின் பொருளியல் கட்டுமானம் முழுமையாக அழிந்தது. அதன் விளைவுகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்களே. இந்தியா முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட இரு செயற்கைப்பஞ்சங்களால் கொல்லப்பட்ட ஏறத்தாழ ஏழுகோடி மக்களில் ஐந்துகோடிபேராவது அடித்தளச்சாதியினராகவே இருந்திருப்பார்கள். இந்தியாவில் இருந்து அடிமைகளாக உலகமெங்கும் இடம்பெயர்ந்து அந்த இடப்பெயர்வால் கொல்லப்பட்ட இரண்டுகோடிக்கும் மேலான மக்களில் முக்கால்வாசிப்பேர் அடித்தளச்சாதியைச்சேர்ந்தவர்களே.

இந்திய சுதந்திரத்தின் உடனடி விளைவை அறிந்தவர்களும் தலித்துக்களே. சென்ற ஐம்பதாண்டுக்கால வரலாறு இன்று எவராலும் பரிசீலிக்கத்தக்கது. இந்த அரைநூற்றாண்டின் முதல் இருபதாண்டுக்காலத்தில் அடித்தளச் சாதிகள் கல்விக்கு வந்து சேர்ந்தார்கள். அடுத்த இருபதாண்டுக்காலத்தில்தான் அவர்கள் அரசு வேலைகளுக்கும் நில உடைமைக்கும் வந்திருக்கிறார்கள். இந்த இருபதாண்டுக்காலத்தில்தான் அரசியல் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் கண்கூடான இந்த எழுச்சியை இந்திய சுதந்திரத்தின் சாதனை என்றே சொல்லமுடியும். அப்படி நிகழவில்லை என்பது இடதுசாரிகள் எழுபதுகள் வரை சொல்லிவந்த பல்லவி. பூமணி அந்தக் கருத்தை ஓரு நாவலாசிரியராக ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஆனால் இன்னொரு கோணமும் உள்ளது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்தை ஒரு சில வாழ்க்கைகளினூடாகப் பார்க்கையில் அது மிகச்சிறிய சலனமாக மட்டுமே கண்ணுக்குப்படக்கூடும். பூமணியின் நாவல்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றத்தைச் சொல்லக்கூடியவை அல்ல. அவை சில துளிகளில் வாழ்க்கையைச் சித்தரித்துக்காட்டக்கூடியவை. ஆகவே அந்த ஒட்டுமொத்த மாற்றம் இந்த சிறு துளியில் மெல்லிய அசைவாக மட்டும் தெரிகிறது. அதையே நாம் ’பிறகு’ நாவலில் காண்கிறோம் . சுதந்திரத்துக்குப் பிறகு ஐம்பதாண்டுக்காலகட்டத்தில் கரிசலின் கிராமச்சூழலில், அடித்தள மக்களின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது பூமணியின் கோணத்தில் மாறுதலின்மைகள்] இந்நாவலில் கூறப் படுகின்றன. அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார். மணலூத்து கிராமத்திற்கு அழகிரி வந்த நினைவில் இருந்து ஆரம்பிக்கிறது நாவல். துரைசாமிப்புரத்தில் இருந்து அவன் மனைவி காளியுடனும் மகள் முத்துமாரியுடனும் வெயில் எரியும் கோடைகாலத்தில் வந்துசேர்கிறார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வருடம் அது.

அதன்பின் அழகிரிப்பகடையின் வாழ்க்கையை சீரான எளிய நிகழ்ச்சிகள் மூலம் சொல்லிச்செல்கிறது நாவல். புதிய ஊரின் அருந்ததியர் சமூகத்துடன் இணைந்துகொண்டாலும் கடைசிவரை அழகிரி வரத்தனாகவே இருப்பதைக் காண்கிறோம். காளி நோயுற்று இறந்தபின் அழகிரி ஆவடையை மணக்கிறான். அந்த மண உறவு ஏற்படும் விதம் மிக நுட்பமான யதார்த்ததுடன் வருமிடத்திலேயே இந்த நாவலில் செவ்வியல் தன்மை கைகூட ஆரம்பிக்கிறது. மாடுகளை விற்றுப் புதிய மாடுகள் வாங்கசென்ற இடத்தில் ஆவடை அறிமுகமாகிறாள். அழகிரியின் துயரத்தைக் கேட்டுக்கொள்கிறாள். அழகிரி ஊருக்கு வண்டி ஏறியபோது ஆவடை நிதானமாக வண்டிக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டாள். அவ்வளவுதான்.

நாவல் முழுக்க இந்த செவ்வியல்தன்மை கொண்ட நிதானம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அழகிரிக்கும் கந்தையா நாயக்கருக்குமான உறவுதான் இந்நாவலின் செவ்வியல்தன்மையைக் கடைசி வரிவரை நிலைநிறுத்தும் அம்சம் என்று சொல்லலாம். அந்தக்கிராமத்தின் ஆதிக்கசாதி கந்தையா. அங்குள்ள மிக அடித்தளச்சாதி அழகிரி. அழகிரியை துரைசாமியாபுரத்திற்கு வந்து கூப்பிடுபவர் கந்தையாதான். அதன் பின் கடைசிநாள் வரை அவர்களிடையே ஆழமான நட்பு நிலவுகிறது. ‘சாமி’ என்றுதான் அழகிரி சொல்கிறார். ‘அடேய்’ என்றுதான் நாயக்கர் அழைக்கிறார். அதைமீறி அவர்கள் நடுவே ஒரு சமநிலை நிலவிக்கொண்டே இருப்பதை நாம் உணரமுடிகிறது. கந்தையா நாயக்கரின் மரணப்படுக்கையில் அழகிரி அவரைச்சென்று சந்திக்கும் இடம் தமிழ் நாவல்களின் நுட்பமான காட்சிகளில் ஒன்று. சற்றும் மிகையற்ற யதார்த்தமான காட்சி அது. ‘எங்காலமும் ஓடியடைஞ்சுட்டுதுடா’ ‘அப்டிச்சொல்லாதீங்க சாமி’ ‘இனியென்னடா பொழப்பு. எந்திரிச்சு காவக்கம்பு தூக்குற நாளும் வரப்போகுதாக்கும்?’ என எளிய நேரடி உரையாடல்கள் வழியாக ஒரு உச்சகட்ட நிகழ்ச்சி காட்டப்படுகிறது

அழகிரியின் வாழ்க்கையை ஒரு காவியத்துயரத்துடன்தான் நாவல் சித்தரித்துச்செல்கிறது. எப்போதுமே உறவுகளின் பொறுப்பு தோளில் இருக்கிறது. கடுமையான உழைப்பு அவரை வாழ்க்கை முழுக்கக் கொண்டு செலுத்துகிறது. நாவலின் இறுதியில், வாழ்க்கையில் அடைந்தவற்றை எல்லாம் இழந்து எஞ்சும்போது மிஞ்சுவது மீண்டும் உறவின் பெரும்பொறுப்புடன் தீவிரமான உழைப்பில் அமர்ந்திருக்கும் அழகிரியைத்தான். இந்நாவலில் அழகிரியின் ஆளுமைக்கு நிகரான ஆளுமையாக ஆவடை வருகிறாள். முத்துமாரி அவளுக்கு மூத்தாள்மகள். ஆனால் ஒரு இடத்தில்கூட அவளுக்கு முத்துமாரி அன்னியக்குழந்தையாகத் தெரியவில்லை. அவளுடைய வாழ்க்கையே முத்துமாரிக்காக செலவிடப்படுகிறதெனத் தோன்றுகிறது. அயலூர் மாப்பிள்ளைக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட முத்துமாரி,கணவனுடன் கிளம்பிச்செல்லும்போது ஆதுரத்துடன் பின்னால் செல்லும் ஆவடை ஊர் தாண்டியதும் பையில் வைத்திருக்கும் புதுச்செருப்பை எடுத்துப் போட்டுக்கொள்ளச் சொல்லும் இடம் இந்நாவலின் அழகிய காட்சிகளில் ஒன்று. ’அழகிய வேலேந்திய கணவனுடன் என் மகள் செல்லும் பாதையெங்கும் மென்மணல் பரவியிருக்கட்டும், மலர்கள் பொழிந்திருக்கட்டும்’என வாழ்த்தும் சங்ககால செவிலித்தாயின் அகத்தை அக்காட்சியில் காணமுடிந்தது.

உறவுகளின் நுட்பமான பின்னல்களில் வாசகன் தன் கற்பனையாலும் வாழ்வனுபவத்தாலும் வாசித்தெடுக்கவேண்டிய இடைவெளிகள் கொண்ட படைப்பு ’பிறகு’. ஊருக்கு அனாதையாக வந்த கருப்பனை அடைக்கலம் கொடுத்து ஆளாக்கியவன் அழகிரிதான். முத்துமாரி சடங்காகும்போது மாமன்சீர் செய்தவனும் அவன்தான். நாவல் முழுக்க கருப்பனுக்கும் முத்துமாரிக்கும் இடையே புரிந்தும் புரியாமலும் ஓர் உறவு ஓடிக்கொண்டே இருக்கிறது. முத்துமாரிக்குப் பக்கத்து ஊர் பட்டாளத்தானை மணமகனாகக் கண்டடைகிறார் அழகிரி. முத்துமாரி கணவன்கூடச் செல்லும்போது கருப்பன் அடையும் துயரம் எளிய சொற்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. கணவனிடம் வதைபட்டு வாழாமல் குழந்தை சுடலையை விட்டுவிட்டுத் திரும்பி வருகிறாள் முத்துமாரி. மீண்டும் ஒரு திருமணம். இம்முறை முனியாண்டி. இருமுறையும் கருப்பன் நினைவு வரவேயில்லை அழகிரி மனதில். மாப்பிள்ளை என்றுதான் அவன் கருப்பனை அழைக்கிறான், ஆனால் மகளைக்கொடுக்கவில்லை. அதற்கான காரணம் நாவலில் இல்லை. அழகிரியின் மனதை வைத்து ஊகித்துக்கொள்ள முடியும், கருப்பன் என்ன சாதி என்று உறுதியாகச் சொல்லிவிடமுடியாதென்பதுதான். அவன் அனாதை, அன்னியன். அந்த எல்லையை அழகிரி போன்ற ஒருவரால் மீற முடியாது

முத்துமாரியின் கதை ஒரு துயரநாடகம். அடித்தளத்துச் சாதியைச்சேர்ந்தவர்களை விட அடித்தளத்தில் இருப்பது பெண்தான் போல. முதல்கணவனிடம் வதைபட்டு மீண்டு வந்து இன்னொரு வாழ்க்கை. முதல்கணவனின் தந்தையின் மரணத்துக்கு துக்கம் விசாரிக்கச்சென்றதனால் இரண்டாம் கணவனிடம் அடிபட்டு சட்டென்று ஒரு முடிவெடுக்கிறாள். அந்த மன ஓட்டங்கள் எதுவும் நாவலில் சொல்லப்படுவதில்லை. நிகழ்ச்சிகள் மட்டும் இறகுநுனியால் மணலில் வருடியது போல மிக மென்மையாகச் சொல்லிச்செல்லப்படுகின்றன. தானிருந்தும் தன் மகன் அனாதையாக ஆவதன் ஆங்காரம் முத்துமாரியை அந்த முடிவெடுக்கச் செய்ததா? இல்லை, அவளுக்குள் எங்கோ கருப்பனின் மனம் புரிந்திருந்ததா?

முத்துமாரியின் சடலத்தைக் கண்டுபிடிப்பவன் கருப்பன்தான். ‘கெணறு நெறைய மெதக்காளே…நீயெல்லாம் ஒரு மனுஷன் போல..அவள வம்பா கொன்னுட்டியே பாவி’ என்று அழகிரியை அடிக்க முன்வருகிறான் கருப்பன். ஒருபோதும் அவனிடம் வெளிப்படாத அந்தக் காதல் வெளிப்படும் அரைக்கணம் அது. ஆனால் உடனேயே அழுகையில் கரைந்து தளர்ந்து விழுகிறான். அழகிரி துயரம் முற்றிக் கசப்புடன் சொல்கிறான் ‘கோட்டித்தனம் பண்ணி கேவலப்படுத்திட்டு போய்ட்டாளே சாமி என் வகுத்துல பொறந்தது’

நாவல் முழுக்க வந்துகொண்டே இருக்கும் கருப்பனின் கதாபாத்திரமும் விசித்திரமான செவ்வியல் அமைதி கொண்டது. தீண்டக்கூடாதென்று அவன் சட்டியில் சோற்றை வீசியெறியும் முதலாளிவீட்டம்மாவை தண்டிப்பதற்காக சட்டிக்குள் நிறைய தண்ணீர் வைத்து அவள் முகத்தில் மொத்த நீரும் திருப்பியடிக்கச் செய்தபின் ஒன்றும்தெரியாதவன் போலப் பேசும் ஆள் அவன். அனைத்தையும் அறிந்தவன். ஆனால் கவலை இல்லாமல் கல் மேடையை சிம்மாசனமாக ஆக்கிப் பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறான். ஊரில் மழைபெய்யாதபோது அவனைத்தான் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் விடுகிறார்கள். அதுவும் அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை. தன்னுடைய அந்தரங்கமான ஒரு சிம்மாசனத்தில் அவன் தனியாக இருக்கிறான் என்று ஒருமுறையும் தனக்குள் அழுதுகொண்டிருக்கிறானோ என்று மறுமுறையும் தோன்றுகிறது

சுடலையில் வந்து முடிகிறது நாவல். அவன் பள்ளிக்கூடம் செல்கிறான் என்பது மிக முக்கியமான திருப்பம். பையன் படிப்பில் சூட்டிகை என்பதை சொல்லிச்செல்கிறது நாவல். ’பிறகு’ என நாவலின் தலைப்பு கேட்கும் வினாவுக்கான பதில் அது. ‘ஏலேய் சக்கிலியத்தாயளி, மாடு பாருடா…’ என்று அழகிரியை நோக்கிக் கூவும் குரலுடன் ஆரம்பிக்கும் நாவல் தன் பேரனை நோக்கி அழகிரி ‘அடேய் கீழ விழுந்துராதடா’ என அறைகூவும் இடத்தில் முடிகிறது. கச்சிதமான ஒரு காவியத்தன்மை அதன் மூலம் இந்தச்சிறுநாவலுக்கு அமைந்துள்ளது.

பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக் கூடிய நாவலான ’சினுவா ஆச்சிபி’யின் ‘சிதைவுகள்’ [Things fall apart] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே. காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித் தெரிகிறது. குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக்காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது. மாறாகப் ‘பிறகு’ காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது. மிகவும் சகஜமாக, மிகவும் நுட்பமாக, அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட! இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக, சமநிலை கொண்டவையாகக் காணப்படுகின்றன

இந்தியாவின் அடித்தள சாதி மக்களைப்பற்றி இன்று நிறையவே எழுதப்பட்டுவிட்டது. தலித் இலக்கியமும் விளிம்புநிலை எழுத்தும் அவ்வகை எழுத்துக்களைப் பெரிய அளவில் உருவாக்கும் கருத்தியல்களை இன்று உருவாக்கியிள்ளன. அவற்றில் பெரும்பகுதி இன்று மொழியாக்கங்களில் வாசிக்கவும் கிடைக்கின்றன. என்னுடைய வாசிப்பில் அடித்தள மக்களைப்பற்றிப் பேசும் நாவல்களில் சிவராமகாரந்தின் ’சோமனதுடி’ பூமணியின் ‘பிறகு’ இருநாவல்களே தலையானவை என நினைக்கிறேன். இவ்விரு நாவல்களுக்கும் இடையே பலவகையிலும் நெருக்கமான உறவுண்டு.

’சோமனதுடி’ இந்திய மொழிகளில் அடித்தள மக்களில் ஒருவரைக் கதாநாயகனாக ஆக்கி எழுதப்பட்ட முதல்நாவல். 1931லேயே இந்நாவலை சிவராம காரந்த் எழுதிவிட்டார். சோமன் தீண்டாமைக்குள்ளான சாதியைச்சேர்ந்தவர். ஒரு துண்டு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ஒரு விவசாயியாக ஆகிவிடவேண்டும் என்பதே அவருடைய கனவு. அந்தக்கனவுக்காக இரவும்பகலும் வாழ்க்கை முழுக்க உழைத்து உழைத்து இறுதியை நோக்கிச் செல்கிறார். அவரது மனக்கொந்தளிப்பின், எதிர்ப்பின், துயரத்தின் குரலாகத் துடி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நாவற்ற மனிதனின் நாக்கு அந்தத் துடி. பூமணியின் நாவலை விட ஒரு படி மேலாக சோமனதுடியை நிலைநிறுத்தும் அம்சம் ஆழந்த கவித்துபபடிமமாக ஆகி நாவலைப் பல தளங்களுக்குக் கொண்டுசெல்லும் அந்த துடிதான்.

அழகிரி சோமனைப்போல நாவற்றவராக சொல்லப்படவில்லை. எப்போதும் கச்சிதமாகவும் நுட்பமாகவும் பேசக்கூடியவராகக் காட்டப்படுகிறார். தேவையான இடத்தில் வலுவாக எதிர்வினையாற்றவும் அவரால் முடிகிறது. தன் சாதிப்பெண்ணைக் கெடுக்கவரும் அப்பையாவை விறகுக்கட்டையை எடுத்து சாத்துவதற்கு அழகிரி தயங்கவில்லை. ஆனால் அழகிரிக்கு சோமனைப்போல கனவுகள் இல்லை. தன் தொழிலில் நிறைவும் பெருமையும் இருக்கிறது. கூலிவேலைக்குக் கூப்பிடும்போது தன்னுடைய தொழிலைவிட்டுவிட்டுப் போவதில்லை என்ற முடிவுடன் இருக்கிறார். ஆனால் மெல்லமெல்ல ஊருக்குள் மோட்டார் வருகிறது. கமலை இல்லாமலாகிறது. அழகிரி கடைசியில் கூலிவேலைக்கு வந்து கதிரு அடிக்கும் காட்சியில்தான் நாவல் முடிகிறது.

சோமனைப்போல அழகிரிக்கு ஒரு துடி இல்லை. அழகிரியின் தோல் தையலை சோமனின் துடியுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். ஆனால் அந்தவகையான கவித்துவ அழுத்தமேதும் பூமணியால் அளிக்கப்படுவதில்லை. அழகிரி மரத்தடியில் தன் தையல்வேலையுடன் தன்னுள் நிறைவு கண்டு அமர்ந்திருக்கிறார். சுரண்டலும் சாதிய இழிவும் எல்லாமே அவருக்கு வாழ்க்கையின் இயல்பான தளமாக மட்டுமே தெரிகின்றன. அதை மீறி உறவுகளின் அழகுகளை அவரால் காணமுடிகிறது.

அழகிரிப்பகடை பின்னர் தமிழில் மீண்டும் மீண்டும் பிறந்துவந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரம். இமையத்தின் ஆரோக்கியம் [கோவேறுகழுதைகள்] ,சோ.தருமனின் மாடத்தி [தூர்வை] போன்ற பலகதாபாத்திரங்களைச் சுட்டிக்காட்டலாம். சமூகத்தால் கடைப்படியாகக் கருதப் படும் ஒரு குலத்தில், சகல இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப் பகடையில் குடி கொள்ளும் ஆழமான மானுட நேயமும், வாழ்க்கை குறித்த புரிதலும், சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆழமான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு சராசரித் தமிழ் மனம் அழகிரியை ‘சான்றோர்’ என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டு கொள்ளலாம், அது வேறு விஷயம்] ஆனால் அழகிரிப் பகடை அச்சமூக மனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா.பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ‘ அச்சு இலட்சியவாத’க் கதாபாத்திரமல்ல. இங்கு தான் பூமணியின் அப்பட்டமான இயல்பு வாதம் அவருக்குக் கைகொடுக்கிறது. அழகிரிப் பகடை ‘எது மேலான வாழ்க்கையின் இலக்கணம்’ என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பி விடுகிறார்.

‘பிறகு’வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தைப் ‘ பிறகு’ தவிர்த்துவிடும் இடம் எது? அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும், சாராம்சப்படுத்தும் குரலும் தவிர்க்கப்பட்டுள்ளன. அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதைதான் ‘பிறகு’. இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை – இயல்புவாதமேயானாலும்! ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தைப் பூமணி ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம். மனித வாழ்க்கையும், வரலாறும், மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணியின் இயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும், சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.

‘வெக்கை’, பிறகு வெளிவந்து சில காலம் கழித்து தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது. புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு. எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல். ஆனால் நவீனத்துவநாவல்களுக்குரிய அகவய அம்சம் இந்நாவலில் இல்லை. இதுவும் அழகியல் நோக்கில் இயல்புவாத நாவலேயாகும். சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை. இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது. இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான். இது அடையாளம் இல்லாத ‘ஒரு மனிதனின்’ கதை அல்ல.மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. அத்தகைய கதைகளுக்குரிய எந்தவகையான குறியீட்டுத்தன்மையையும் நோக்கி நகராமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது.

ஒருநாவல் என்று வெக்கையைச் சொல்ல முடியாது. அதன் அமைப்பைக்கொண்டு அதை குறுநாவல் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஊடுபாவுகள் இல்லாத நேரடியான கதையோட்டம் கொண்டது இது. தன்னுடைய குடும்ப நிலத்தை அபகரிக்க முயன்று அண்ணனைப்பலிகொண்ட வடக்கூரானின் கையை வெட்ட நினைத்துத் தாக்குகிறான் சிதம்பரம். வெட்டு தவறுதலாக விலாவில்பட்டு வடக்கூரான் பலியாகிறான். அவனைக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடும் சிதம்பரம் ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவது வரையிலான நிகழ்ச்சிகள்தான் இந்நாவல். சிதம்பரத்தின் அப்பா ஒரு ஜின்னிங் ஃபாக்டரியில் வேலை செய்கிறார். உள்ளூர் நிலக்கிழாரான வடக்கூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் வளைத்துப்போட எல்லாவழிகளையும் கையாளக்கூடியவர். சிதம்பரத்தின் குடும்பத்தின் நிலம் மீதும் அவரது கண்விழும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

ஒரு மாலை நேரத்தில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும் வடக்கூரானை சிதம்பரம் வெட்டுகிறான்.பிடிக்க வருபவர்கள் மீது கையெறிகுண்டை வீசித் தப்பிக்கிறான். அவன் ஊருக்குச்செல்வதற்குள்ளாகவே செய்தி ஊரை எட்டிவிட்டிருக்கிறது. சிதம்பரம் அரிவாளைக் கழுவிவிட்டுப் பதுங்கிநடந்து ஊருக்குள் நுழைகிறான். அவனுடைய மாமா அவனுக்காகக் காத்திருக்கிறார். தேர்ந்த வேட்டைக்காரன் போல சிதம்பரம் ஊருக்குள் செல்லும் காட்சியிலேயே நாவல் எத்தகையது என்று வாசகர் ஊகித்துவிட முடிகிறது. துண்டால் செண்டா காட்டி தன்னை அடையாளப்படுத்துகிறான். மாமா ‘ஆரது?’ என்னும்போது ‘நம்மாளுதான்’ என்கிறான். ‘நம்மாளுன்னா?’ ‘பெரியமனுசனா வாங்க வாங்க ‘ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். வடக்கூரானின் ஆட்கள் திருப்பியடிக்க வந்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அவர்கள் காவலிருக்கிறார்கள். மாமா சிதம்பரத்தின் அம்மா, தங்கை இருவரையும் அவனுடைய சித்தியின் ஊருக்கு அனுப்பிவிட்டிருக்கிறார். நாயும் அப்பாவும் வேறுபக்கமாகச் சென்றிருக்கிறார்கள்

சரசரவென உறவுகள் அறிமுகமாகிக்கொண்டே இருப்பதுதான் வேகமாக ஓடும் இந்த நாவலின் அழகு. சிதம்பரம் அப்பாவைப்பற்றித்தான் கேட்கிறான்.’அய்யாவுக்குத் தெரியுமா?’.மாமா கச்சிதமான பதிலைச் சொல்கிறார் ‘அவரு பெத்த பயதானே நீ?’உண்மையில் சிதம்பரம் வெட்டுவதை அப்பா கண்டிருக்கிறார். ஓடிவந்து ‘நம்ம செவலக்குட்டி மொசலெடுத்திருக்கான்’ என்று சொல்லிவிட்டு அவர் அப்பால் சென்றிருக்கிறார்.பின்னர் அப்பாவைச் சந்திக்கும்போது மேலும் மேலும் உறவுகளின் உணர்ச்சிகரமான வலை விரிகிறது ‘’எக்குதப்பா எறங்கி லாவநட்டம் வந்தா என்னாகிறது? ஏற்கனவே மூத்தவனையும் வங்கொலையா சாகக்கொடுத்தாச்சு. நீ ஒருத்தன் தான் இருக்க. ஒன்னவும் பறிகுடுத்துட்டு நாங்க பொழைக்கவா? மொதல்ல ஒன் அத்தைக்கும் மாமாவுக்கும் சொல்லி முடியுமா? மனுசி அழுதே செத்திருவா’ உடைமுள் கூட்டங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து ஒரே படலமாக ஆகிவிட்ட உறவுகளைக் காட்டுகிறதென்பதே வெக்கையின் நுட்பம்

விசித்திரமான முறையில் வன்முறையும் அன்பும் கலந்த ஒரு வெளியாக இருக்கிறது வெக்கையின் கதைப்புலம். பொட்டல்களில், மலைப்பாறைகளில் தங்குகிறார்கள். சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருமுறையும் பையன் சாப்பிடுவதை, வசதியாகத் தூங்குவதைப்பற்றி அப்பா கவலைப்படுகிறார். ’தனியா இருந்துக்கிடுவியா?’ ‘எனக்கென்ன பயம்?’ ‘அதுக்குச் சொல்லல.. பேச்சுத்தொணையில்லாம கெடந்தா மனசுக்கு ஒருமாதிரியா இருக்கும். ஆயுந்தந்தான் பேச்சுத்தொண. அருவாள எடுத்து தலைக்கு வச்சுக்கோ. தூக்கம் சொக்கீட்டு வரும். வேட்டுகள மானாங்காணியா வச்சிட்டு அயத்து மறந்து பெரண்டு படுத்துரக்கூடாது’ அப்பாவின் குரலில் இருக்கும் அன்பும் அக்கறையும் ஆயுதத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. கிளம்பும்போது அன்புடன் சொல்கிறார் ‘எவனாவது ஒத்தைக்கொத்தைக்கு வந்து லாந்தினான்னா ஓடீறாத. மலப்பொரும்புக்கு பலிகுடுத்திரு’

வெக்கை உறவுகளைப்பற்றிய நினைவுகளின் தொகுதியாக நீள்கிறது. பழிவாங்கியபின்னர் அகத்தின் கொந்தளிப்பைக் கடந்தகால நினைவுகளின் இனிமை வழியாக சமனப்படுத்திக்கொள்கிறார்கள் போல.அப்பாவுக்கும் பையனுக்குமான உரையாடலில் இருக்கும் பிரியம் தமிழில் மிகக்குறைவான நாவல்களிலேயே இதுபோல பதிவாகியிருக்கிறது/ ‘கறி ரெண்டுபேருக்கு ரெம்பத்தான்.மொசக்கைய நாறவச்சு வறட்டித்தின்னாத்தான் ருசி’ ‘இனியொண்ணு வேணும்பீங்களே?’ அய்யா தலை நிமிர்ந்தார். முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. ’நீ சின்னப்புள்ளை. ஒனக்கென்ன தெரியும் அந்த ருசி? இவ்வளவு கறிக்கு தண்ணியிருந்தா அதுக்கு ருசியே வேறதான்’ ‘அதெங்க மறக்கும் இவ்வளவுக்குப் பெறகும்?’இங்கே பதினைந்து வயது மகன் அப்பாவைக் கண்டிக்கும் தந்தைத் தன்மையுடன் பேச அவர் அந்தக் கண்டிப்பை மீறிச்செல்லும் குழந்தைத்தன்மையைக் காட்டுகிறார். உரையாடல்கள் மூலமே இவை அனைத்தையும் சொல்லிச் செல்வதே பூமணியின் கலையாக இருக்கிறது.

வெக்கை இலக்கியக்கலையை உருவாக்குவதில் தகவல்களுக்கிருக்கும் பங்கென்ன என்பதைக் காட்டும் படைப்பும்கூட.கொலைக்குப்பின் தகப்பனும் மகனும் தலைமறைவாகும் அந்தப்பொட்டலின் நிலத்தைப்பற்றிய விரிவான விவரணை இந்நாவலில் உள்ளது. கரிசல் நிலத்தைப்பற்றி கி.ராஜநாராயணனும் பூமணிக்குப்பின் பலரும் எழுதியிருந்தாலும்கூட வெக்கையில்தான் கரிசல் கண்முன் ஓர் காட்சியனுபவமாக விரிகிறது. பொட்டலில் கிடைத்ததைக்கொண்டு செய்யப்படும் சமையல், பொட்டலின் செடிகொடிகள், பறவைகள்,. இரவும் பகலும் கொள்ளும் வாசனை வேறுபாடுகள் என தகவல்கள் வந்தபடியே உள்ளன. நாவல் என்பது தகவல்களின் கலை என்ற விவரணைக்கு பொருத்தமான ஆக்கம் இது.

ஒளிந்து வாழும் வாழ்க்கை மெல்ல மெல்ல அதன் வீரியத்தை இழக்கிறது. சலிப்பும் தனிமையும் மேலோங்குகிறது. செய்திருக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழுந்தடங்குகிறது. நாவலின் கடைசியில் இனியென்ன என்ற விவாதமே உரையாடல்கள் தோறும் ஒலிக்கிறது. ‘என்னப்பா இப்டி கட்கட்னு இருமுற? தடுமம் வசமா புடிச்சிருக்கே. சளி நெஞ்சில தாவிடுச்சுன்னா இருமலு வலுத்துக்கிடும். கண்ட கண்ட தண்ணியக்குடிச்சவென.இதில சாப்பாடு நேரத்துக்குக் கெடையாது. மண்டையிடிக்குதா?’ என்று கேட்கிறார் அப்பா.சிறையைப்பற்றிய எண்ணங்கள். ‘இங்கியே இப்பிடின்னா செயிலுக்குள்ள போடுற சோத்த தின்னுட்டு சமாளிக்கணுமே..சோறாவா போடுவான்? ஒன்னச் சொல்லி குத்தமில்ல. எம்புத்திய செருப்புட்டு போடணும்’ கடைசியில் நீதிமன்றத்தில் சரணடையச் செல்லும்போது நாவல் முடிகிறது. வெக்கை மெல்லமெல்லத் தணிகிறது.

உச்சகட்ட வன்முறையில், அதற்கான நியாயங்களில், ஆரம்பிக்கும் வெக்கை மெதுவாக வன்முறையின் அர்த்தமின்மையை உறவுகளின் நெருக்கம் மூலமே சித்தரித்து நிறைவடைகிறது என்று தோன்றுகிறது. ஒருவகையில் ‘அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை’ என்ற குறளின் விளக்கமாக அமையும் நாவல் வெக்கை. இந்நாவலின் வன்முறைகூட ஆழமான அன்பின் விளைவே. கொல்லப்பட்ட அண்ணன் மேல் சிதம்பரம் கொண்டுள்ள பிரியம்தான் அந்த வன்மத்தை அவனுக்குள் நிறைக்கிறது. அவன் அந்தத் தலைமறைவு வாழ்க்கை வழியாக மெதுவாக முதிர்ந்து கனிவதன் சித்திரத்தை வெக்கை அளிக்கிறது. அவ்வகையில் ஒரு வாசகனாக எனக்கு வெக்கை என்ற சொல் அளிக்கும் அர்த்தமே வேறு. எங்களூரில் மாம்பழத்தையும் பலாப்பழத்தையும் புகையிட்ட அறைக்குள் வைப்பதையே வெக்கைக்கு வைப்பது என்போம். இந்நாவலில் சிதம்பரம் காய்நிலையில் வெக்கைக்கு வைக்கப்பட்டிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்.

பூமணி நைவேத்யம் வாய்க்கால்கள் வரப்புகள் என மேலும் மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். நைவேத்யம் அவரது முதலிரு நாவல்களின் அளவுக்கு படைப்பூக்கம் கைவராது போன ஆக்கம். ஆனால் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பறைசாற்றுகிறது. படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி, சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ‘ நம்பவைத்தலுக்கும்’ படைப்புக்குத் தேவையான படிமங்களை உருவாக்கவும்தான் அது பயன்படுகிறது. கரிசல் காட்டுக் கிராமத்துக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப் படிமங்களாகும் போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவுதான். தனக்குப் பழகிப் போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும், கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும், புதிய தடங்களை நோக்கிச் செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும்தான் காட்டுகிறது. அத்துடன் அச்சாதி மற்றும் நிலப் பின்னணியைத் தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.

பூமணியின் பெரும்படைப்பு என்று சொல்லத்தக்க அஞ்ஞாடி இப்போது அச்சுநிலையில் உள்ளது. இருநூறாண்டுக்காலம் கரிசலில் நிகழ்ந்த வாழ்க்கையின் சித்திரத்தை அளிக்கும் ஆக்கம் அது என்றார். வரலாற்றை விரிவாக ஆராய்ந்து தகவல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு ஆவணப்படைப்பு அது.

முந்தைய கட்டுரைஅன்புள்ள ஜெயமோகன் – ஒரு நூல்
அடுத்த கட்டுரைஅம்மா