‘பூச்சன் அப்புராணி மனுஷன்.தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். இருந்த இடம் தெரியாது. வாயலுங்க பேச மாட்டான். வேலைத்தனத்தில் மாடு பத்தும்போதுகூட மூக்கு முனக்கம்தான். யாராவது பேச்சுக்கொடுத்தால் நாலு வார்த்தைக்கு ஒண்ணு கிணற்றுக்குள்ளிருந்து வரும். பேசினவனுக்கு கடுப்பு தாங்காது…’ என்று ஆரம்பிக்கிறது பூமணியின் கதையான நாக்கு. ஊருக்குள் பூச்சனைப்பற்றி எப்போதும் பேச்சு அடிபடும். ஊரில் ரெண்டு பேருக்கு வார்த்தை தடித்துவிட்டால் அவன் பேர்தான் வரும் ‘ஆமா, பெரிய யோக்கியன். பேசவந்துட்டான். பூச்சனுக்கு தம்பிய போல’
அப்படிப்பட்ட பூச்சன் ஒருநாள் பருத்திக்கொட்டை வாங்கக் கோயில்பட்டி கடைவீதிக்குச் செல்கிறான். காட்டில் வேலையை முடித்துவிட்டுக் கிளம்புவதற்கே மாலைமயங்கிவிட்டது. நான்குகடை ஏறி இறங்கிப் பருத்திக்கொட்டை பார்த்து வாங்கிவருவதற்குள் இருட்டிவிட்டது. கடைசி பஸ் போய்விட்டது. வேறுவழியில்லாமல் கோயில்பட்டியில் பஸ் வரும் இடத்திலேயே பருத்திக்கொட்டை மூட்டையுடன் அமர்ந்திருக்கிறான். ரோந்து வரும் போலீஸ் அவனைப் பார்க்கிறது. பார்த்ததுமே அவர்களுக்குத் தெரிந்துவிட்டது ஆள் அப்புராணி என்று. ஆனால் மாசக்கடைசியில் சில்லறைக் கேஸ்களைப் போட்டு முடிக்க அவர்களுக்கு அவனைப்போன்ற அப்புராணிதான் தேவை.
பூச்சனை ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்கிறார்கள். மூர்க்கமாக அடிக்கிறார்கள். அவனிடம் சில குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி சொல்கிறார்கள். அவன், தான் ஒரு தப்புமே செய்யவில்லை என்கிறான். ஒரு தப்பும் செய்யவில்லை என்பது உண்மைதான், ஆனால் எங்களுக்குக் கேஸ் முடிக்கவேண்டியிருக்கிறது, ஒத்துக்கொள் என்கிறார்கள். பூச்சனுக்குப் புரியவில்லை, தான் ஒரு தப்பும் செய்யவில்லை என்று கதறுகிறான். எத்தனை அடித்தாலும் அதே அழுகைதான். இன்ஸ்பெக்டர் வருகிறார். இவன் இப்படியே மாஜிஸ்டிரேட்டிடம் சொன்னால் நமக்குப் பிரச்சினைதான். ஏதாவது பார்த்துசெய்யுங்கள் என்று எரிந்துவிழுகிறார்
போலீஸ்காரர்கள் பூச்சனின் நாக்கை அறுத்துவிடுகிறார்கள். தப்பி ஓடும்போது கீழேவிழுந்து நாக்கைக் கடித்துக்கொண்டான் என்று சொல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். பூச்சனால் பேசமுடியவில்லை. அவனுக்கு ஆறுமாதம் சிறைகிடைக்கிறது. ஆறுமாதம் சிறை சென்று மீண்டும் வரும் பூச்சன் வேறு ஆளாக இருக்கிறான். மூர்க்கமான கொந்தளிப்பான ஒருவனாக இருக்கிறான். அடிக்கிறான், கூச்சலிடுகிறான். அவன் உடம்பே நாக்காக ஆனதுபோல.
பூமணியின் ’நாக்கு’ கதையை அவரது ஒட்டுமொத்த கதையுலகுக்கும் ஆதாரமான ஒரு படிமம் என்று சொல்லலாம். நாக்கறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கொந்தளிப்புகள் அக்கதைகள். ஆனால் கதைகளின் மேல்தளம் எப்போதுமே கலங்கலற்று அலைகளற்று சீரான ஒழுக்குடன் இருக்கிறது. ஆழத்தில் கால்வைப்பவர்கள் மட்டுமே ஆயிரம் மலைப்பாம்புகள் போல இழுத்துச்சுழற்றிச் செல்லும் வேகத்தை உணரமுடியும். மிக அபூர்வமாகவே கோபத்தையும்,வன்மத்தையும் வெளிப்படுத்தும் வரிகள் கதைகளில் வெளிப்படுகின்றன. அவை எப்போதுமே கதைமாந்தர் குரல்கள். பூமணியின் ஆசிரியக்குரல் சொல்லி விலகி நிற்பதாக மட்டுமே எப்போதும் ஒலிக்கிறது
பூமணியின் சிலகதைகளை வாசிக்கையில் எதிர்ப்பின், வன்மத்தின் தீவிரம் துணுக்குற வைக்குமளவுக்கு நம்மை வந்தடைகிறது. இரண்டாவது சிந்தனையில்தான் அந்தக்கதைகள் எந்த அளவுக்குக் குறைவான சொற்களுடன் எந்த அளவுக்கு எளிமையான சித்தரிப்புடன் ஒரு மளிகைக்கடைப்பட்டியல் போன்ற தகவல்தன்மையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவரது புகழ்பெற்ற கதைகளில் ஒன்றாகிய ’எதிர்கொண்டு’ ஒரு சிறுவனின் எதிர்ப்பைப் பற்றியது. தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தைச்சேர்ந்த சிறுவன். பள்ளிக்கூடம் செல்லாத கிராமத்துப்பட்டாளத்தில் ஒருவன் .’ பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. குண்டி கிழிந்த கால்சட்டையைப் போட்டுக்கொண்டு எப்படிப் போவதாம். அய்யாவிடம் கேட்டால் ‘அது ஒண்ணுதான் கொறச்சலாக்கும் ‘ என்கிறார்’ என சாதாரணமாக அவன் வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் வந்து விடுகிறது
’ஊரில் நிறையப் பேர் ஆடுமாடு மேய்க்கிறார்கள். சாணியெடுக்கிறார்கள். எல்லாம் மத்தியான நேரம் ஊருணிக்கரையில் கூடினால் ஒரு கூட்டமே திரண்டு விடும். பள்ளிகூடப் பிள்ளைகள் அவ்வளவு இருக்காது’ என்று கிராமத்துப் பிள்ளைகளின் கதை சொல்லப்படுகிறது. அவர்களுக்கு எதிரி கீழவீட்டுக்காரி. அவர்கள் கிணற்றில் இறங்கிக் குளித்தால் அவளுக்குப் பொறுப்பதில்லை. நீரைத் தீட்டாக்கிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு. கற்களைப் பொறுக்கி எறிகிறாள். அவள் வைதுகொண்டே இருக்கிறாள். தோட்டத்தில் நுழைந்ததற்கு. குழை ஒடித்ததற்கு.
அதற்கெதிராக சிறுவர்களின் மனதில் உருவாகும் உக்கிரமான வெறுப்பு சிறுவர்களே அறியாதது. அவள் மண்டையை உடைக்கவேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் செய்யமுடியாது. அவளுடைய கோழியைப் பிடித்துக் கொன்று வேலியில் செருகிவிட்டு வந்துவிடுகிறார்கள். அதை வெருகு பாதி தின்றுவிடுகிறது. வெருகை சபித்துத் திட்டும் கீழவீட்டுக்காரியின் குரலைக் கேட்டுப் பையன் இன்புறுகிறான். அதுவும் போதவில்லை என்று அவளின் தொழுவத்திற்குள் நுழைந்து பசுக்கன்றைக் கொன்றுவிடுகிறான்.
“அவள் வீட்டு வெளித் தொழுவில் பசுங்கண்ணுக்குட்டி மட்டும் கட்டிக் கிடந்தது. மதியந்தான். பசுமாட்டை அவுத்துக் கொண்டு காட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டில் யாருமே இல்லை. சரி இதுதான் சமயமென்று கோலி தட்டும் கம்பியை எடுத்துப் போய் அதுக்கு நடுமண்டையில் ஒரேயடி. சொதுக்கென்று செத்து விழுந்தது. கயிற்றை அவுத்து நிறைசலுக்குத் தூக்கிக்கொண்டு போய்த் தூணோரம் நிற்கிற வாக்கில் தண்ணீர்ப் பானைக்குள் மூஞ்சியை ஒட்டிவைத்துவிட்டு மெல்ல நழுவும் வரை பிச்சமணி அடிக்கடி வெளியே வந்து ஆள் பார்த்தான்’’ என்று அந்தக் கொடூரமான நிகழ்ச்சி சாதாரணமாகச் சொல்லப்பட்டுவிடுகிறது.
கீழவீட்டுக்காரி கதறுவதைக் கேட்கக் காத்திருக்கிறான். அப்போதுதான் கதை ஆரம்பிக்கிறது.’’ கீழத் தெருவில் இருட்டைத் தள்ளிக் கொண்டு வசவுச் சத்தம் பெருகிவந்தது. படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்த சுந்தரம் வாசலிலிருந்த அய்யாவை நெரித்து அம்மாவைத் தாண்டி ஓடி வெளிப்பானையில் வாய் நிறையத் தண்ணீர் கொப்புளித்து முற்றத்தில் வட்ட வட்டமாகப் பீச்சி விளையாடினான்.’படுக்கிற முத்தத்தப் பாழாக்கிறியே ஒனக்கென்ன கோட்டியாலே இப்ப வந்தம்னாத் தெரியுமா?’ என்று அம்மா வீரிடுகிறாள். வீட்டுக்குள் சிறுநீர் கழிக்கும் சின்னப்பையன்தான் அவன் இப்போதும் அம்மாவுக்கு. நாளை கீழ்விட்டுக்காரி துப்புக் கிடைத்து சண்டைக்கு வந்தால்கூட அம்மா அரிவாளைக் கையில் எடுத்துக்கொள்வாள், பிஞ்சுபாலகனைப்பற்றி அவ்வளவு பெரிய பழியைச் சொன்னதற்காக.
தீவிரமான ஒரு பழிவாங்கலின் கதை ஒரு எளிய அன்றாட நிகழ்ச்சிபோல சொல்லி முடிக்கப்படுகிறது. அந்த சித்தரிப்பில் தெரியும் பையனின் ஆளுமை , அவனுடைய துணிச்சலும் தந்திரமும் ,நாளை அவன் எப்படிப்பட்டவனாக இருக்கப்போகிறான் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நினைக்க நினைக்க ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பாக, வரப்போகும் ஒரு காலகட்டத்தின் எதிர்ப்பாக நமக்குள் விரிந்துகொண்டே செல்லும் கதை இது. ஒரு தூரத்து இடிமுழக்கம். இந்தக்கதையை பூமணி எழுபதுகளில் எழுதியிருக்கிறார். தொண்ணூறுகளில் இந்நிலப்பகுதியில் உருவான சமூக எதிர்ப்பியக்கத்தின் வெம்மையையும் தீவிரத்தையும் இந்தக்கதையிலேயே காணமுடிகிறது, ஆலமரத்தை விதையில் பார்ப்பது போல.
பூமணியின் கதைகளில் சிறுவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவரது புகழ்பெற்ற கதைகள் பலவும் சிறுவர்களைப் பற்றியது. நேரடியான காரணம் என்றால் அவர் கரிசலில் வாழ்ந்த நாட்களின் நினைவில் இருந்து எழுந்த கதைகள் அவை என்பதுதான் முக்கியமானது.ஆனால் சிறுவர்களை அவர் எழுதத் தேர்வுசெய்வதற்குக் கலைரீதியான காரணம், இன்னும் நுட்பமான காரணம் இருக்கக்கூடும். ‘கரிசலிலே சின்னப்பசங்கதான் அலைஞ்சுகிட்டே இருப்பாங்க.எங்க எதுன்னு அவனுகளுக்குத்தான் தெரியும். மத்தவங்க அவங்களுக்கான வழிகளிலேயும் எடங்களிலேயும் எங்கியோ செட் ஆயிட்டிருப்பாங்க…கரிசல்னா அது ஆடுமேய்க்கிற பசங்களோடதுதான்’ என்றார் பூமணி. ஆடுமேய்க்கும் பையன்கள் அலையும் வெளியாகவே அவருக்குக் கரிசல் பதிவாகியிருக்கிறது. கரிசலில் இருந்து அந்தப் பையன்களைப் பிரித்துப்பார்க்க முடிவதில்லை.
கரிசலில் பையன்களின் வாழ்க்கையைச் சொல்லும்போது பூமணி அந்தப் பையன்களின் கண்கள் வழியாகவே கரிசலை விவரிக்க முயல்கிறார். ’’கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையும், கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது’’ என்பது அந்த ஆடுமேய்க்கும் பையன்களின் பார்வைதான். அடுத்த வரியிலேயே அந்தப்பையன்கள் அந்தச் சுட்டெரியும் பொட்டல்வெளிக்கு அளிக்கும் எதிர்வினை உள்ளது. “செருப்புக் காலோட ஒரு ஓட்டம் ஓடி ஆட்டத் திருப்பீட்டு வந்துரு. எங்கயாச்சும் பெறப்புடுவோம்” அந்த மண்ணில் கூட அவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வீட்டில் கஞ்சி இல்லாமல் ஒட்டியவயிறுடன் ஆடுமேய்க்க வரும்போதுகூட.
அந்த விளையாட்டில் இருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்படும் கதைகளைப் பூமணி பலமுறை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் அவரது திரைப்படமான கருவேலம்பூக்கள் கூட விளையாட்டு பறிக்கப்பட்ட பிள்ளைகளின் கதைதான். ’கோலி’ கதையில் பள்ளிக்கூடம் செல்வதை வெறுக்கும் சிறுவனைச் சொல்லும்போது ‘சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது,நிற்பது,பாடுவது,படிப்பது,ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது,சாப்பிடுவது,தண்ணீர் குடிப்பது,ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும்போது ஒண்ணுக்கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றில்லாமல் இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடிக் கால்வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்து விட்டு உருண்டு திரும்பணும். பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக் கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண்சொருகணும்.’ என முதல் பத்தியிலேயே அவன் இழந்த கரிசல்வெளியைச் சித்தரித்துக்கொண்டுதான் கதையை ஆரம்பிக்கிறார். விளையாட்டுக்காக செய்யப்பட்ட ஒரு பெரிய சுயபலி அந்தக்கதையில் விவரிக்கப்படுகிறது.
‘’பூமணியின் சிறுகதைகள் மிகுந்த சொற்சிக்கனத்துடனும் செட்டான வடிவமைப்புடனும் இலக்கண சுத்தமான சங்கீதம்போல அமைந்தவை.தேவையற்ற வார்த்தை ஒன்றுகூடப் பார்க்க முடியாது.அவருடைய எழுத்தின் மற்றுமொரு சிறப்பு கதைமாந்தர்களை அவரவர் கதியில் வாழ அனுமதித்திருக்கும் பாங்கு.எக்கருத்தையும் அல்லது எத்தகைய உணர்வையும் கதாபாத்திரத்தின் மீது ஏற்றிச் சொல்லும் தன்மையை அவருடைய ஒரு கதையில் கூடக் காண முடியாது. ஆனாலும் அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படைப்பாளிதான்.அவருடைய வர்க்கசார்பு வார்த்தைகளில் வெளிப்பட்டதேயில்லை .ஆனால் அவருடைய கதைத்தேர்வில் அது அழுத்தமாக வெளிப்பட்டு நிற்கும்.அவருடைய எழுத்து யாருக்காகவும் கண்ணீர் வடிப்பதுமில்லை.நம் கண்ணீரைக்கோரி நிற்பதுமில்லை.ஆனால் அவர் எழுதிச்செல்லும் வாழ்வின் உண்மை,துயரம் நம் வாசக மனங்களைப் பற்றி அழுத்தும்.நம்மை அறியாமல் நம் கண்களில் நீரும் கோபமும் இயலாமையின் துயரும் வழியும் ’’-ச.தமிழ்ச்செல்வன்.
ஒவ்வொரு படைப்பாளியின் கதைகளையும் என்னுடைய ரசனையின் அடிப்படையில் சில படிமங்களாகவே தொகுத்து வைத்திருக்கிறேன். தி.ஜானகிராமனின் கதைகள் எனக்கு எப்படியோ வீணையை நினைவுறுத்துகின்றன. ஆழ்ந்த அரக்கு நிறத்தின் சருமப்பளபளப்புள்ள குடத்துடன் தொட்டாலே இசையை உருவாக்கும்படியாக சுருதிகூட்டி வைக்கப்பட்டிருக்கும் வீணை. வண்ணதாசன் கதைகளைப் பெட்டிக்குள் துணியுடன் சேர்த்து வைக்கப்பட்ட மல்லிகை மலர்களின் சருகுகள் என்று உருவகித்து வைத்திருக்கிறேன். அந்த வாசனை அந்தத் துணியை அந்தத் துணியணியும் மனிதரை அந்த மனிதருடனான எல்லா உறவுகளையும் நினைவில் இழுத்துவந்து நிறுத்துகிறது. புதுமைப்பித்தனின் கதைகள் விதவிதமான கூரிய ஆயுதங்களும் அழகிய தொன்மையான நகைகளும் கலந்து கொட்டப்பட்டிருக்கும் ஒரு பெட்டி. அழகின் கவர்ச்சியும் கூர்மையின் அச்சமும் கலந்த முடிவடையாத சஞ்சலத்தை அவை அளிக்கின்றன.
பூமணியின் கதைகளை உறைந்து கறுத்த ரத்தத்துளிகளாகவே என்னால் உணர முடிகிறது. இந்த மனப்பிம்பத்தை உருவாக்கிய கதைகள் எவை என்பதை அறிவதற்காக அவரது புனைவுலகுக்குள் சென்றுகொண்டே இருக்கிறேன். கரிசலில் தாகம் மேலோங்கி அலையும் சிறுவர்களா? [ரீதி],கூடை முடைந்து கொண்டுபோய் முதலாளியின் வீட்டுமுற்றத்தில் இறக்கிவிட்டு கூலித்தவசத்துக்காகக் கெஞ்சிக் கையேந்தி நிற்கும் வேலாண்டியா [தேவை],கொத்துவேலைக்கான அழைப்பை எதிர்பார்த்து அதிகாலையில் இருந்தே காத்து நிற்கும் நொண்டி முத்தையாவா ?[ஏலம்],எல்லாக் கதைகளிலும் இருப்பது தீவிரமான மானுட அவலம். ஆனால் அடிபட்ட காயத்தில் இருந்து வழியும் குருதியாக அவை இல்லை. என்றோ எப்போதோ பட்ட அடியில் இருந்து சொட்டி உலந்து கருகி கரிப்பொட்டாக ஆகி எஞ்சியிருக்கும் குருதி. தொட்டு முகர்ந்தால் மட்டுமே அது குருதி என்று தெரிகிறது
மிகச்சிறந்த உதாரணமெனச் சொல்லத்தக்க கதை ‘கசிவு’. தமிழ்ச்சிறுகதையின் சாதாரணமான ஒரு வாசகன் அந்தக்கதை அளிக்கும் முடிவின் தீவிரத்தை ஊகிக்க முடியாது. ‘அவருக்கு சிரிப்பாணி வந்தது. பழைய துணிக்கிழிசல் மாதிரி வாயை அகலித்து சிரித்தார். மேல்தாடையில் ரெண்டுபல் விழுந்த கொடுவாய் தெளிவாகத் தெரிந்தது’ என்ற ஆரம்பிக்கிறது கதை. ’முத்துமாடனும் சொள்ளமுத்துப்பயலும் ஒருவாய் சோளத்தட்டைக்குப்போய் அப்படி மல்லுகெட்டி அடிச்சுகிட்டு கெடந்தாகளப்பா’எனப் பழைய நினைவுகளில் இனிமையாகத் தோயும் கிழட்டு சண்டியரின் கதை.சிறுவர்களால் கிண்டல் செய்யப்படும் நகரமுடியாத கிழம். ஒருவாய்க் கஞ்சியைக் குடித்துவிட்டுப் பகலெல்லாம் திண்ணையிலேயே அமர்ந்திருக்கிறது. அதன் பலவீனங்கள் வீராப்புகள்
முக்கால்வாசி கதைக்குப் பின்னர்தான் ‘நான் கலியாணம் முடிக்கிறதுக்கு முந்தி பெரிய சண்டியரு. கையிலே எந்நேரமும் கம்பு இருக்கும். இல்ல அருவா இருக்கும். என் சண்டியத்தனத்தை பார்த்துத்தான் ஊரில காவலு போட்டாங்க. எவன்னு பாக்கிறதில்ல சுளிக்குத்தமா பேசிட்டான்னா படீர்னு கைநீட்டிருவேன். நம்ம கிட்ட வெரலு வைக்க முடியாது’ எனக் கிழவரின் ஆழத்தில் இருந்து வாக்குமூலம் கிளம்பி வருகிறது. தன்னுடைய பழைய கூட்டாளிகளைப்பற்றி, பழைய திருட்டுகளைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார். நீர் வற்றி அடிக்கிணறு கலங்கி வருவதைப்போலக் கதைகள் எழுந்து வருகின்றன. ‘பருத்திக்காடு ஏராளம். ஏகக்கரிசல். மதியத்துக்கு அந்தப்பாதையிலே நடந்தோம். என்னவோ ஒரு ஊரைத்தாண்டி ரொம்பதூரத்திலே ஒருத்தி ஒத்தையிலே பருத்தி எடுத்திட்டிருந்தா. கழுத்திலயும் காதுலயும் நெறய போட்டிருந்தா. பத்து பதினைஞ்சு தேறும். மூணுநாலு வெயசுப்பய பக்கத்திலே உக்காந்து வெளையாடிட்டிருந்தான்’என ஒரு அந்தரங்கமான கதை ஆரம்பிக்கிறது.
கிணற்றில் கைகால்கள் கழுவப்போன தாயையும் மகனையும் தனியாளாக அரிவாளுடன் மறிக்கிறார். ‘அவ என்னைப்பாத்ததும் பரக்கப்பரக்க முழிச்சா. பாக்கிறதுக்கு ரெம்ப லச்சணமா இருந்தா சிறு பெராயம்.நல்ல மொகக்கள..இறுகின ஒடல்கட்டு. மாராப்ப இழுத்து சொருகியிருந்தா..’ என ஆரம்பிக்கும் விவரணை, அவருக்குள் எழுந்த எல்லா ஆவேசத்தையும் வெறியையும் ‘எனக்கு தாகமா இருந்தது’என்ற சிறு சொற்றொடரில் முடித்துக்கொள்கிறது. பாம்படத்தையும் சங்கியலையும் கொடுத்துவிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறாள் . ‘அழுதிட்டிருந்த சின்னப்பய தலைய சீவினேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவ தலையவும் சீவினேன். அருவாள கழுவீட்டு பட்டுன்னு கெணத்தை விட்டு வெளியேறிட்டேன்’ என்று அந்த மொத்த நிகழ்ச்சியையும் சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார். இரு கொலைகள் இரு சொற்றொடர்களில். மகனைக் கொன்றுபோட்டு அந்தப் பிணம் அருகே போட்டுத் தாயை கற்பழித்தது ’கொஞ்சநேரம் கழிச்சு’ எனஅரைச்சொற்றொடரில்.
அந்த அளவுக்கு உலர்ந்து கருகியிருக்கிறது குருதி. சாதாரணமாக அதை எவரும் கவனிக்கமுடியாது. நெடுநாட்கள் கழித்து ஆழ்நெஞ்சின் அடித்தூரில் இருந்து அந்தக்கதை கிளம்பி வருகிறது. ஒருவரிடமும் பகிர்ந்துகொள்ளாத கதை. ஆனால் யாருக்கும் சொல்ல முடியவில்லை. காளியப்பன் மகன் என்று மட்டும் சொல்கிறார். சின்னப்பயல்களின் கூட்டத்திலிருந்து காளியப்பன் மகனைக் கொண்டு வந்து அருகே அமர்த்துகிறார்கள். ‘தீக்கு முன்னால் முழிச்சமாதிரி கண்ணத்திறந்தார். கையை நீட்டிப் பயலைத் தடவித்தடவிக் கொடுத்தார். மூஞ்சி முதுகு எல்லாம் தடவியாயிற்று. கழுத்தை மட்டும் தடவிக்கொண்டே இருந்தார். கை சோர்ந்து போயிற்று’ எனக் கதை முடிகிறது. தமிழிலக்கியத்தில் சொல்லப்பட்ட பெரும் கொடூரங்களில் ஒன்று ஒரு தபால்கார்டில் எழுதியனுப்புவது போல சர்வசாதாரணமாக காட்டப்படுகிறது. இந்த சுருக்கமே பூமணியின் அழகியல்.
பூமணியின் சிறுகதைகளில் பெரும்பாலானவற்றைப் பசியின் கதைகள் என்று சொல்லிவிடமுடியும். கடும் உழைப்புக்குப்பின் பட்டினிகிடக்கும் மக்களைப்பற்றியே கணிசமான கதைகள் பேசுகின்றன. அடிவயிற்றைச் சுண்டி இழுக்கும் பசியில் இருந்து விலக லேசாகக் குனிந்துகொண்டு மண் வெட்டும் சண்முகம் [கலங்கல்] ஓர் உதாரணம். நாய்சீந்தாத உணவைக்கூடக் குழந்தைகளுக்குக் கொடுக்கமுடியாதது அவன் வாழ்க்கை. குழந்தைகளுக்கு சட்டியில் கஞ்சியைத் திண்ணையில் கொண்டு வைத்துவிட்டுக் காட்டுவேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அவை கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால்கூடப் பசித்தலையும் நாய்கள் அவற்றைக் குடித்துவிடும். எந்நேரமும் பசியுடன் கிராமத்தில் விளையாடிக்கொண்டிருக்கின்றன குழந்தைகள். பூமணியின் கதைகளில் வரும் கிழடுகளின் சித்திரங்கள் இன்னும் தீவிரமானவை. ஒருநாளுக்கு ஒருவேளைதான் உணவு. அந்தப் புளித்தகஞ்சியைக் குடித்தபின்னர் அடுத்தவேளைக்காக இரவுபகலாகக் காத்திருக்கிறார்கள். வாழ்நாளெல்லாம் உழைத்தவர்கள் உணவே கடவுளாகத் தவமிருக்கும் அந்தக்காட்சி அளிக்கும் ஆழமான கசப்பு பூமணியின் பல கதைகளை கனம் மிக்கவையாக ஆக்குகிறது.
பூமணியின் பக்கத்து ஊர்க்காரரும் எழுத்தாளருமான பா.செயப்பிரகாசம் ஒரு கட்டுரையில் சொல்கிறார் ’நகரம் அவருக்குள் இன்னும் பதிவாகவில்லை. அவருக்குள் கிராமத்தான் இன்னும் சப்பணமிட்டு அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கிறது.எந்த இடத்திலிருந்து முளைத்துவந்தாரோ அந்த வட்டாரமும் எந்த இடத்தில் அவர் உதயமாகி பதியமாகிப் போனாரோ அந்த வரலாறும்தான் பூமனியின் படைப்புகளாக வருகின்றன. பெருவாரிக்கதைகள் அங்கிருந்து எடுத்து மலத்திப்போட்டவை’.
கரிசலின் மணம் கொண்டவை பூமணியின் கதைகள். கரிசலில் பெய்யும் புதுமழையின் மணம் கொண்டவை கி.ராஜநாராயணனின் கதைகள். கோடையில் வேகும் கரிசலின் மெல்லிய வெக்கைவாடை கொண்டவை இவை.