ருசி என்று நம்மால் கூறப்படுவது உண்மையில் என்ன? நான் கனடாவில் பயணம் செய்தபோது மாறி மாறிப் புதிய உணவுகளையும் பழக்கமான உணவுகளையும் உண்டு வந்தேன். புதிய உணவுகள் எனக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்ணும்போது ஓர் அதிர்ச்சியையும், அன்னியத்தன்மையையும், பிற்பாடு ஒருவிதமான அடைதல் உணர்வையும் அளித்தன. பழைய உணவுகள் நிறைவுணர்வைத் தந்தன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றோடொன்று கலந்ததே சுவையனுபவமாக இருந்தது. நான் விரும்பிய புது உணவுகளில் பழைய, பழகிய உணவுகளின் சுவைச்சாயல் இருந்தது. பழகிய உணவுகளில் சற்று புதுமை கலந்தபோது அதை நான் மிக ரசித்தேன். தாய்லாந்து உணவு கேரளச் சுவையுடன் என்னைக் கவர்ந்தது. புட்டுக்கு மேப்பிள் சிரப்பும் நன்றாக இருந்தது.ஆம், சுவை என்பது இவ்விரு கூறுகளும் கலந்ததுதான். புதுமையும், பழக்கமும்.
“மெனுகார்டை முழுக்கப் படித்துவிட்டு இட்டிலிக்கு உத்தரவிடுபவன் தமிழன். படித்தால் புரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஓர் உணவுக்கு உத்தரவிடுபவன் அமெரிக்கன்”-நண்பர் கூறினார். இதுவும் கலாச்சாரம் சார்ந்த ஒரு விஷயமே. ஒரு நாக்கு மரபுக்குப் பணிகிறது. இன்னொன்று புதுமைக்கு ஏங்குகிறது. ஒன்று தன்னுள் அமிழ்கிறது, தன்னுள் அடங்குகிறது. இன்னொன்று தேடியலைகிறது. பிறிதைத் தேடுகிறது. அப்படியானால் ருசி என்பது என்ன? அது ஒரு மனோபாவம். ஓர் உள உருவகம். ஒரு தேவை. எல்லா ருசிகளும் முற்றிலும் கலாச்சாரம் சார்ந்தவை மட்டுமே…
கலாச்சாரம் பற்றிப் பேசும்போது கேரள சிந்தனையாளர் எம்.கோவிந்தன் கூறினார். ‘நாக்குதான் கலாச்சாரத்தின் மையம். நாக்குதான் ருசி. நாக்குதான் மொழி’ ருசிக்கு அதிபதியும் கலைவாணிதான் போலும். நாம் ஒரு கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும்போது எப்போதும் சிலருசிகளில், அந்த ருசி சார்ந்த பழக்கங்களின் தொகையாகவே உருவகப்படுத்துகிறோம் என்று படுகிறது. தமிழ்ப் பண்பாடு என்பது என்ன? இட்லி, தோசை, சாம்பார், மசால்வடை, மோர்க்குழம்பு, பரதநாட்டியம், தெருக்கூத்து, நாதஸ்வரம், மிருதங்கம், பறை, ஒப்பாரி, தாலாட்டு, சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், மதுரை வீரபத்ரர் சிலை, மாமல்லபுரம் சிற்பங்கள், வேட்டி, புடவை, காஞ்சிப்பட்டு, மதுரை சுங்கிடி, நெல்லை சிலம்பாட்டம், கபடி, சுடுமண் சிற்பங்கள்… அனைத்துமே கண், காது, மூக்கு, நாக்கு, சித்தம் சார்ந்த சுவைகளைச் சார்ந்தவை. சுவைகள் மனதில் மொழியினூடாக வளர்கின்றன. நுண்வடிவம் கொள்கின்றன. மொழி,சுவைகளினாலான ஒரு பெரும்பரப்பு. சுவைகளின் ஒலிக்குறிகளின் தொகை அது.
எத்தனையோ காலமாக இலக்கிய ரசனையை சுவைத்தல் என்றே கூறிவருகிறோம். ‘இலக்கியச் சுவை’ என்ற சொல்லாட்சியில் அந்தச் சுவை எதைக் குறிக்கிறது? இலக்கியம் அளிக்கும் இன்பமா? அந்த இன்பம் எப்படிப்பட்டது? இலக்கியத் திறனாய்வின் கோட்பாட்டாளர்கள் இலக்கியத்தில் இன்பம் எவ்வகைப்பட்டது, எப்படி அது நிகழ்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். நாளையும் கொடுப்பார்கள். வகுத்து விட முடியாதது அது – எந்த ஒரு சுகவய அனுபவத்தைப்போல! “ஒரு புறவயமான குறியீட்டு அமைப்பினை முகாந்தரமாகக் கொண்டு மனதில் கற்பனை மூலம் நிகழ்த்தப்படும் அனுபவம்” என்று கலையனுபவத்தைக் கூறலாம்.
கண், காது, மொழிப்புலன் ஆகியவை தொட்டு உணர்கின்றன. படைத்தல் என்பது ஒர் அனுபவத்தைக் குறியீட்டமைப்பாக மாற்றுவது போன்றது. காட்சியைத் திரைப்படமாக மாற்றுவது போல! திரைப்படம் ஒளி வீழ்த்தி மூலம் மனத்திரையில் மீண்டும் காட்சியாகிறது. இலக்கியம் முழுக்க முழுக்க மனதில் நிகழ்கிறது. காரணமூலமாக அப்படைப்பு இருக்கிறது. சுவையனுபவமும் அப்படி மனதில் நிகழ்வதே. சுவைபடுபொருள் ஒரு வகைத் தூலமான குறியீட்டுப் பொருளே. ஒருவகை ‘ஆர்வமூட்டும் அதீத மனத்தாவல்’தான் இது என்று அறிவேன். ஆயினும் இதைச் செய்து பார்க்கலாம். ஒரு சாக்லேட் என்பது ஒரு குறியீட்டுப் பொருள்.ஒரு கவிதைப்படிமம் போல. நாக்கை ஊடகமாகக் கொண்டு மனதில் விரிந்து அனுபவத்தை உருவாக்குகிறது சாக்லேட். படிமமும் மொழிப்புலத்தை ஊடகமாகக் கொண்டு அதையே நிகழ்த்துகிறது. ஆகவே சுவையனுபவம் என்பது பொதுவானதுதான். சுவையின் இருவிதிகளும் இங்கும் பொருந்தும், பழக்கம் மற்றும் புதுமை நாட்டம் ஆகியவற்றாலான முரணியக்கம்தான் இச்சுவையும்.
இலக்கியம் என்பது சுவை மட்டுமல்ல என்பதை நாம் அறிவோம். இலக்கியத்தில் கருத்தியல் செயல்படுகிறது (அல்லது தத்துவச் சட்டகம் அல்லது சிந்தனை செயல்படுகிறது) தத்துவக்கூறு இல்லாத இலக்கியப்படைப்பு அதன் அனைத்துச் சுவைகளுடனும்கூட பலவீனமான அனுபவமாகவே இருக்கும். மொழியைச் சிந்தனையிலிருந்து பிரிக்க இயலாது. மொழியோ வாழ்வின் அனைத்துக் கூறுகளுடனும் பின்னியிருக்கிறது- ஆகவே இலக்கியமும் வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் பற்றிச் சிந்திப்பதாக உள்ளது. பிற நுண்கலைகளிலிருந்து இலக்கியத்தைப் பிரிப்பது இந்த அம்சம்தான். இதுவே இலக்கியத்தின் எலும்புக்கட்டமைப்பு என்று நான் உருவகிக்கிறேன். ஆகவே பெரும்பாலும் இலக்கியப் படைப்புகளின் வடிவத்தைத் தீர்மானிப்பதும் இதுவே. இலக்கியப்படைப்பில் மிகவும் ‘பருண்மை’யான கூறும் இதுவே.
ஆகவேதான் இலக்கிய நுண்ணுணர்வு இல்லாதவர்களால் எளிதில் தொட்டு உணரக்கூடியதாக இது உள்ளது. உலகில் இலக்கியம் குறித்து மிக அதிகமாகப் பேசப்பட்டுள்ளது அதில் அடங்கியுள்ள கருத்தியல் குறித்துத்தான். கருத்தியல் ஒருபோதும் தன்னளவில் இலக்கியத்தை உருவாக்குவதில்லை என்பது இலக்கியவாதிகளால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக உக்கிரமான, மிக நேர்மையான, முழுமையான கருத்தியல் வெளிப்பாடுகூட இலக்கியத்தை உருவாக்கிவிட முடியாது என்பதற்கு உலகில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன – மிகச் சிறந்த தமிழ் உதாரணம் ரகுநாதன், கெ.டானியல் போன்றவர்களின் ஆக்கங்கள்.
இலக்கியத்தின் சாரமாக நான் கருதுவது அதன் ஆன்மிக உள்ளடக்கத்தையே (வழக்கம்போல விளக்கம் – மதம், கடவுள், பொருள் உலக நிராகரிப்பு ஆகியவையல்ல நான் கூறும் ஆன்மிகம் என்பது. அது தருணம் சார்ந்து சிதைவடையக்கூடிய எளிய உண்மைகளைச் சாராமல் முழுமுற்றான உண்மைகளை நோக்கித் தாவுதல். தர்க்கம், கற்பனை ஆகியவற்றுடன் உள்ளுணர்வையும் அதற்காகப் பயன்படுத்துதல்) படைப்பில் உள்ள கருத்தியலுக்கு நேர் மறுஎல்லையில் உள்ள அம்சம் இது என்று நான் உருவகித்துக் கொண்டிருக்கிறேன். கருத்தியல் எப்போதும் இரு அடிப்படைகளைச் சார்ந்தது.
1. அது தூலமான புற உலகின் நியதிகளை அவதானித்து அதைத் தர்க்கப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையது.
2. ஆகவே அது உருவாக்கப்படும் காலத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்டது. ஆகவே காலாவதியாகாத கருத்தியல் என்று ஒன்று இல்லை.
ஆன்மிகம் இவ்விரண்டு கூறுகளையும் நிராகரிப்பதாகும். அது புறவய உலகு மீதான அவதானிப்பு நம்மை ஒரு சூழலுக்குக் கட்டுப்பட்டவர்களாக்கும் என்றும், ஆகவே நாம் காணும் உண்மையை வரையறைக்கு உட்படுத்திவிடும் என்றும் கருதுகிறது. அது சம காலத்தன்மையை ஏற்பதில்லை – உண்மை என்பது காலாதீதமானதாகும் என்று நம்புகிறது. இலக்கியத்தின் சாரமான வெளிப்பாடுகளாகத் தெரியவரும் அன்பு, கருணை, பாசம், தியாகம், நீதியுணர்வு, விடுதலை முதலிய எண்ண ஓட்டங்கள் இந்த ஆன்மிகமான கூறினால் கண்டடையப்பட்டவையேயாகும். அவற்றுக்குச் சமகால வாழ்வில் எவ்விதமான தர்க்க மதிப்பும் இல்லை என்பதை நாம் அறிவோம். எக்காலத்திலும் அது அப்படித்தான் இருந்திருக்கக்கூடும்.
இப்பண்புகளைத் தர்க்கபூர்வமாக நம்மால் நிறுவமுடியுமா? ஒருவன் தியாகம் செய்ய வேண்டும் என்பதை அவனுக்குக் கருத்தியல் சார்ந்து, விவாதம் செய்து, விளக்கி ஏற்கச் செய்துவிட முடியுமா? இவை ஒருபோதும் கருத்தியல் நிலைப்பாடுகளாக இருந்ததில்லை. இவை ஒரு பிரத்யேக மன எழுச்சியின் மூலம் தொடப்படும் உச்ச நிலைகளாகவே இலக்கியத்தில் அறியப்படுகின்றன. அவை வெளிப்படும்போது அத்தருணம் தர்க்கத்துக்குப் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது. அவை இலக்கியத்தில்தான் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றன. இலக்கியமே அவற்றை மீண்டும் மீண்டும் சமூக மனதில் நிலைநிறுத்தி வந்துள்ளது. அவற்றின் வெளிப்பாட்டுப் புள்ளியைக் கலையிலக்கியங்களில் காண நேரும்போது ஒரு கருத்தியல் உண்மையை அறியும்போது ஏற்படும் மகிழ்ச்சியோ நிறைவோ நம்மில் உருவாவதில்லை. மாறாக மனம் பொங்குகிறது, பிரபஞ்சத்தின் சாரத்தையே கண்டறிந்துவிட்ட பரவசமும் உத்வேகமும் உருவாகிறது.கடவுள் சன்னதியில் நிற்பதுபோலக் கண்ணீர் மல்கி உருகி நிற்கிறோம். ஆன்மிக அம்சம் என்று நுண்மையாகக் குறிப்பிடப்படும் இலக்கிய சாரத்தை அனுபவபூர்வமாக நாம் கண்டடைவது இங்குதான்.
இலக்கியப் படைப்பில் ஆன்மா என்பது இதுவே. கருத்தியல் என்பது இந்த ஆன்மாவைத் தாங்கி நிற்கும் சட்டகம்.இந்தக் கருவறையைச் சூழும் பிராகார விரிவு. இந்த மையம் வரை வந்து சேரும் வழி இத்திரவம் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரம். இப்படிக் கூறுகிறேன், இலக்கிய வாசகர்கள் யோசித்துப் பார்க்கலாம். ஒரு படைப்பில் கருத்தியல் தனித்துச் செயல்பட முடியும், ஆனால் அப்போது அது உயிரற்ற கட்டுமானமாக இருக்கும். அதன் ஆன்மிகமான எழுச்சி கருத்தியல் மூலமும் செயல்படமுடியும். ஆனால் அதுவே படைப்பின் உயிர்.
படைப்பின் கருத்தியல் எலும்புக் கூட்டுக்கும்,அருவமான ஆன்மாவுக்கும் இடையே அது இயங்கும் உடலை உருவாக்கும் கூறு என்ன? படைப்பு என்று நாம் சாதாரணமாக உணர்வதும் சுட்டுவதும் எதை? அதுதான் படைப்பில் நாம் ‘சுவைக்கும்’ பகுதி. அதன் ‘சாறு’. படைப்பின் சதை அது என்பது மேலை மரபு. நாம் அதை சாறு அல்லது ‘ரசம்’ என்கிறோம். ஒன்பது வகை ருசிகளாக அந்த ரசத்தை நாம் பகுத்திருக்கிறோம். நம்முள் கற்பனை மூலம் சுவையனுபவத்தைத் தூண்டும் பலவகையான கலாச்சாரக் குறியீடுகளிலான பெரும் வலைப்பின்னலே படைப்பின் சதை.
இதெல்லாமே மிகப்பரிச்சயமான உருவகங்கள்தான். நான் இங்கே சூத்திரங்களை உருவாக்க முயலவில்லை. வாசகர் ஏற்கனவே அறிந்திருக்கும் விஷயங்களைத் தொகுத்து நினைவூட்ட விரும்புகிறேன். ஒரு வெறும் பிரசாரப் படைப்பு ‘சதைப்பற்றில்லாதது’ என்று கூறப்படுகிறது. வெற்று ஆன்மீகக் கற்பனை ‘அந்தரத்தில் நிற்கும் புகை’ என்று கூறப்படுகிறது. இப்படித் தோன்றுகிறது, படைப்பின் விதை அதன் ஆன்மிக அம்சம்,அதுவே முளைத்தெழும் வல்லமை கொண்டது. அதைப் பரவச் செய்வதே படைப்பின் நோக்கம். அப்படைப்பின் சதை என்பது ருசியின் மூலம் அவ்விதையை விரும்ப வைப்பது – பரவச் செய்வது! இலக்கியப்படைப்பில் சதை மொழியின் விரிவானது.
படைப்பின் சதை என்று கூறப்படும் இவ்வம்சத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன?
1. அது முழுக்க முழுக்கக் கற்பனையையே தன் வாகனமாகக் கொண்டது. அதாவது கருத்தியலானது தர்க்கத்தையும், ஆன்மிக அம்சம் உள்ளுணர்வையும் வாகனமாகக் கொண்டிருப்பதைப் போல.
2. அது முழுக்க முழுக்க அப்படைப்பு உருவான கலாச்சாரத்தின் விளைகனி. அதை அது பிறந்து விளைந்த சூழலில் இருந்து பிரிக்க முடியாது. கனி என்பது மண்ணின் திரண்ட சுவையே.
3. அது மேலும் மேலும் பிராந்தியத்தன்மை கொண்டதாக ஆகியபடியே செல்லும். தி.ஜானகிராமனின் படைப்புகள் இந்தியத்தன்மை கொண்டவை. உதாரணம் இந்திய இசை, அவை தமிழ்த்தன்மை கொண்டவை உதாரணம் கதை மொழி, அவை தஞ்சை மண்ணைச் சார்ந்தவை. அவை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவை.
4. அது முழுக்க முழுக்கக் கலாச்சாரத்தில் நுண் கூறுகளான படிமங்களாலும் உருவகங்களாலும் ஆனது. தி. ஜானகிராமன் படைப்புகளில் காவிரிப் படித்துறை, கும்பகோணம் வெற்றிலை, சாய்ப்ப்பு இறக்கிய வீடு போன்றவை சித்திரங்கள் மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையின் படிமங்களும்கூட. அவை அந்த நுண்கலாச்சாரக் கூறைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாசகமனதுக்கு அளிக்கும் அனுபவத்தூண்டலைப் பிறருக்கு அளிக்காது.
5. ஆகவேதான் இலக்கியத்தின் ‘சதை’ அம்சம் பெரும்பாலும் மொழிமாற்றம் செய்யும்போது தவறிவிடக்கூடியதாக உள்ளது.
6. இலக்கியப்படைப்பின் பெருமொழிபு [Macro narration] பெரும்பாலும் அதன் கருத்தியல் சார்ந்ததாக இருக்கும்போது நுண்மொழிபு [MicroNarration] அதன் ரசனைக்கூறு சார்ந்ததாக உள்ளது. படைப்பின் பெருங்கட்டுமானத்தைக் கருத்தியல்தான் நிகழ்த்துகிறது. ரசனைக்கூறுகள் அதில் உயிரை நிறைக்கின்றன.
இக்காரணத்தால் ஒரு குறிப்பிடத்தக்க விளைவு உருவாகிறது. ரசனை அம்சம் மேலோங்க,கருத்தியல் அம்சம் உள்ளடங்கியிருக்கப் படைப்பாளிகளால் பெரிய நாவல்களை உருவாக்க இயல்வதில்லை, உருவாக்குவதிலும் அவை நாவலுக்குரிய தீவிரம் கொண்டிராமல் நுண்சித்தரிப்புக்களினால் நிலைநாட்டப்படுவனவாக உள்ளன. உதாரணம் முறையே வண்ணதாசன் மற்றும் தி.ஜானகிராமன்.
இலக்கியரசனை என்பது பெரும்பாலும் அதன் நுண்கூறுகள் நம் மனதில் வளர்ந்து விரியும் அனுபவமேயாகும். இலக்கியத்தின் மைய ஊடகம் கற்பனையே. இலக்கியம் அதன் ஒவ்வொரு வரியிலும் புதைந்துள்ள முடிவில்லாத வாசிப்புச் சாத்தியங்களைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. ஆகவே ரசனைக்கூறுகளையே நாம் பொதுவாக இலக்கியம் என்கிறோம். ஆயினும் பிற இரு கூறுகளும் முக்கியமானவையே. இப்படிக் கூறலாம், ஒரு படைப்பின் கருத்தியலும் ஆன்மிகமும் அதன் ரசனைத்தளம் வழியாக மட்டுமே வாசகனை அடைய இயலும். அதுவே இலக்கியத்தில் இயல்பான வழிமுறையாகும்.
இலக்கியப் படைப்புகளின் இயங்குமுறையில் உள்ள ஒரு கூறு பெரும்பாலும் எல்லாத் திறனாய்வாளர்களாலும் சுட்டப்படுகிறது. இலக்கியப்படைப்பு ஒரு தரப்பை மேற்கொள்ளும்போது அத்தரப்பை ‘நிரூபிக்க’ அது எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. வாசிப்பின் கணங்களில் படைப்புக்கும் வாசகனுக்கும் இடையேயான அந்தரங்கமான உறவே அத்தரப்பை வாசக மனதில் நிலைநாட்டிவிடுகிறது. ஆம், இலக்கியம் கூறும் உண்மை என்பது,நிரூபிக்கப்படாமல் நிறுவப்படும் ஒன்று. இது எப்படி நிகழ்கிறது? இலக்கியம் தன் தரப்பை ஒரு புனைவுப்பரப்பாக விரித்து உண்மையான வாழ்வுக்கு இணையாக ‘நிகழ்த்திக்’ காட்டுகிறது. அந்நிகழ்த்துதலில் வாசகன் பங்குபெறும்போது அத்தரப்பை உண்மை என (குறைந்த பட்சம் அந்த வாசிப்புக்களங்களிலாவது) நம்ப ஆரம்பிக்கிறான்.
இப்படிப்பார்க்கையில் இலக்கியப்படைப்பின் உடல்தான் அதை நம்முன் நிகழ்த்திக் காட்டுகிறது என்றும் ஆகவே ரசனை என்ற அம்சமே இலக்கியத்தின் நம்பவைத்தல் பணியைப் பெரும்பகுதி நிறைவேற்றுகிறது என்றும் காணலாம். படைப்பின் தத்துவ – தர்க்க வல்லமை என்னவாக இருப்பினும் சரி, அதன் ஆன்மிக ஆழம் எத்தகையதாக இருப்பினும் சரி, அதன் வடிவை நம் வாசிப்புக்கு முன்னால் உருவாக்கி நிறுத்துவது ரசனைக்கூறுகளே. நம்மை அதில் ஈடுபடுத்துவதும், அப்படைப்பு காட்டுவது உண்மையான வாழ்க்கை என்று நம்ப வைப்பதும் அதுவே. நாம் ஒரு படைப்பில் முதலில் தொட்டு அறியும் தளம் இதுவே. ஒரு இலக்கியப்படைப்பு இலக்கியத்தரம் கொண்டதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் தகுதி இதுவேயாகும். பிறகூறுகள் அனைத்தும் இந்தத் தூலத்தின் மீது செயல்படும் நுண்தளங்களே.
இலக்கியப் படைப்பின் ரசனைக் கூறுகள் எதனால் ஆனவை? ஏற்கனவே கூறியதுபோல ருசி என்பது முற்றிலும் கலாச்சாரத்தின் சிருஷ்டி. இட்டிலியை நம் நாக்குக்குப் பழகியதாகக் காட்டுவதும் சரி, பிட்ஸாவைப் புதிதாகக் காட்டுவதும் சரி நமது உணவுப்பழக்கமே. ருசி என்பது நேரடியாகவே வாழ்க்கை முறையின் விளைவாக உள்ளது. வாழ்க்கை முறையோ இங்குள்ள பல்வேறு இயற்கைக் காரணிகளை, முன்மரபுகளை, வரலாற்றுக்கூறுகளைத் தன்னுள் கொண்டு உருவாகி வந்த ஒன்று. இங்குள்ள தட்பவெப்பநிலை காரணமாக அதிகமாக விளைபவை நெல்லும் உளுந்தும். அவையே இட்லியை உருவாக்கியுள்ளன. இட்லிக்கு நாம் தொட்டுக் கொள்ளும் சாம்பார் மராட்டியர் வழியாக இங்கு வந்து உருமாறிய ஓர் உணவு. இட்லியுடன் வடையை இணைத்துக்கொள்வது தஞ்சையிலிருந்து பரவிய பழக்கம். இட்லி வாழையிலையில் பரிமாறப்படும்போதுதான் நமக்கு அழகியல் திருப்தி கிடைக்கிறது. ஒரு ருசிக்குப் பின்னால் ஒரு பண்பாட்டின் நீண்ட இறந்தகாலமே நின்று செயல்படுகிறது. குங்குமம் போட்ட முகம் நமக்கு அமைதியானதாகத் தெரிகிறது. ஏதோ ஒரு பொட்டு இல்லாவிடில் முகம் காலியான ஒன்றாகத் தெரிகிறது. புடவை அடக்கமான உடையாகத் தோன்றுகிறது. நாம் ரசிக்கும் அனைத்துமே இவ்வாறு காலப்போக்கில் நம்முள் ஊறிக்குடியேறியவைதான்.
இத்தகைய பலநூறு, பல்லாயிரம் ரசனைக் கூறுகளின் சரடுகள் ஊடுபாவுகளாகப் பின்னிவேய்ந்து உருவாகும் இலக்கியப்பரப்பின் உள்ளுறையாக உள்ளது கலாச்சாரமேதான். சிறந்த படைப்பாளிகளை ஒரு நிலச்சூழலில் இருந்து பிரித்துப் பார்க்க முடிவதில்லை. சிலர் அந்நிலத்தின் பகுதிகளாகவே உள்ளனர். மார்க் ட்வைனின் மிஸிஸிப்பி நதி, ஷோலக்கோவின் டான் நதிக்கரையின் ஸ்டெப்பி, தகழியின் குட்டநாடு, எஸ்.எஸ். பைரப்பாவின் மைசூர், தி.ஜானகிராமனின் கும்பகோணம், தி.ராஜநாராயணனின் கரிசல்நிலம்… அந்த மண்ணில் ததும்பும் உயிர்த்துடிப்புள்ள வாழ்வில் இருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட ரசனையின் துளிகள் நிரம்பிய தேன்கூடுதான் அவர்களின் படைப்புகள். நாம் ஷோலக்கோவைப் படிக்கும்போது பெறுவது ஸ்பெயினின் கொசாக்குகளின் மிகவும் தனித்தன்மை உடைய ஒரு வாழ்க்கை முறையை. அதை நாம் நாமறிந்த நமது மண்ணின் வாழ்க்கை முறையை வைத்துப் புரிந்து கொள்கிறோம். வாழ்க்கையின் சாரமான அனுபவம் எப்போதும் மானுடப் பொதுவானது, வேறுபாடுகள் நுட்பங்களில்தான் உள்ளன என்பதனால் இது சாத்தியமாகிறது.
இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது ஏன் இப்படி வகுத்துக் கூறக்கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. படைப்பில் ஒரு பண்பாடு வெளிப்படும் பகுதி அதன் ரசனைத்தளம் மட்டுமே அதில் உள்ள சிந்தனையும் ஆன்மிகமான எழுச்சியும் அப்படைப்பாளியின் தனிமனம், தனி ஆளுமை சார்ந்தவை. ஒரு படைப்பில் நாம் நம்மை அடையாளம் காணுமிடம் அதன் ரசனைப்பகுதி. நாம் அப்படைப்பாளியை அடையாளம் காணுமிடங்களே சிந்தனையும் ஆன்மீகமும். நாம் நம்மை அடையாளம் காண்பதனூடாகவே ஒரு படைப்புடன் ஒன்றுகிறோம். அது காட்டும் வாழ்வை நாமும் வாழ்கிறோம். அது கூறும் உண்மையை நம் உண்மையாக உணர்கிறோம். அதாவது படைப்பில் நமக்கும் அப்படைப்பாளிக்கும் பொதுவான பகுதி அதன் ரசனைத்தளம்தான்.அதுதான் ஊடகம். படைப்பாளிக்கு நாம்- அல்லது நமக்குப் படைப்பாளி சென்று/வந்து சேர்வது அதன் வழியாகவே. ஒரு மேலான படைப்பில் அதன் சிந்தனைத்தளமும் ஆன்மிகத்தளமும் அது உருவாக்கும் ரசனைத்தளத்தில் பாலில் நெய் போல நுண் வடிவில் கலந்து ஊடுருவியிருக்கும் என்று ஊகிக்கலாம்.
இவ்விரிவான முன்னுரையுடன் தமிழ்ப் படைப்பாளிகளை அணுகும்போது கிடைக்கும் சித்திரம் என்ன? புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், ப.சிங்காரம், ஆ.மாதவன் என நாம் முக்கியப்படுத்தும் அனைத்துப் படைப்பாளிகளிலும் நம் கலாச்சாரத்தின் நுண்ணிய ரசனைக் கூறுகளை உள்வாங்கி அவற்றைக் கோர்த்துத் தங்கள் படைப்பின் உடலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே. புதுமைப்பித்தனின் நெல்லை, அழகிரிசாமியின் கரிசல், சுந்தர ராமசாமியின் நாகர்கோயில், ப.சிங்காரத்தின் மதுரை, தி.ஜானகிராமனின் கும்பகோணம் நம் ரசனையின் நினைவில் ஆழமாக ஊறியுள்ளது. இவர்கள் படைப்பாளிகளாக ஆவது இதனாலேயே. இவர்களுடைய படைப்புலகில் நாம் ஒன்றும் இடம் இதுவே. இது வழியாகவே இவர்கள் எண்ணுவதும் எய்தியதும் நம்மிடம் வருகின்றன. இவர்களில் நேரடியாகவே இயற்கையை, சூழலை எழுதிய படைப்பாளிகள் உண்டு. நுட்பமாக அவற்றைத் தங்கள் புனைவுகளுக்குள் ஊடாடவிட்டவர்கள் உண்டு. உதாரணமாக கு.அழகிரிசாமியும் வண்ண நிலவனும் நேரடியாக சூழலைச் சொல்வதில்லை. அவர்களுக்கு மனிதர்கள் மீதுதான் அக்கறை. ப.சிங்காரமும் கி.ராஜநாராயணனும் முதலில் நிலத்தையும் சூழலையும்தான் சொல்கிறார்கள். அந்த மண்ணில் முளைத்த செடிகளைப் போலத்தான் அவர்களுக்கு மனிதர்கள்.
கி.ராஜநாராயணனின் உலகத்தைச் சார்ந்தவர் பூமணி. ஒரு கட்டுரையில் கி.ராஜநாராயணனை பூமணியே முன்னத்தி ஏர் என்று கூறுகிறார். நேர்உரையாடலில் அவர் எழுதவந்தமைக்குக் காரணமே கி.ராஜநாராயணன்தான் என்கிறார். கி.ராஜநாராயணனும் பூமணியும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். கோவில்பட்டி அவர்களின் மையம். நெடுங்காலமாக அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பவர்களாகவும் இருந்துள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரே வாழ்வையே இருவரும் எழுதியிருக்கிறார்கள். கி.ராஜநாராயணனின் படைப்புகளில் பூமணி ஆழமாக ஒரு போதாமையை உணர்ந்திருக்கிறார். எந்த ஒரு கலைஞனிடமும் இன்னொரு கலைஞன் கண்டடையும் போதாமைதான் அது. அவனுக்கு மட்டுமே உரிய அந்தரங்க உலகின், அந்த அந்தரங்கம் அறியும் புறஉலகின் குறைவு என்று அந்தப் போதாமையைக் கூற முடியும். அதை நிரப்புவதற்காகவே பூமணி எழுத ஆரம்பித்திருக்கிறார்.
கி.ராஜநாராயணன் பற்றிய என்னுடைய நீண்ட விமரிசன ஆய்வில் கி.ரா.வை இனக்குழு அரசியலின் முன்னோடி என்று வரையறை செய்திருந்தேன். அவரது இலக்கியம் இனக்குழு மனநிலை சார்ந்தது என்றோ அவரது நோக்கு இனக்குழு சார்ந்தது என்றோ அதற்குப் பொருள் இல்லை. தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களை அவர்களின் இனக்குழுப் பின்புலத்தில் வைத்துப் பார்த்து அதனூடாக அவர்களின் உளவியல் ஆழத்திற்கும் வரலாற்று ஆழத்திற்கும் செல்வதற்கான ஒரு முயற்சி என்றே அதைச் சொல்லவேண்டும். ராஜநாராயணன் முன்வைப்பது அந்த இனக்குழு அரசியலின் நுண்ணிய சுவையை. ஆனால் அதிலுள்ள முக்கியமான குறைபாடு என்னவென்றால் அது அந்த இனக்குழுவின் புற அடையாளங்களுக்குள் நின்றுவிடுகிறது என்பதுதான். கி.ரா. கதைகளில் பிற இனக்குழுக்கள் வருவது அபூர்வம் அவை பெரும்பாலும் நாயக்கர்களின் கதைகளே. அந்நிலப்பகுதியின் முக்கியமான சமூகமாகிய தேவேந்திரர் (அல்லது பள்ளர்) அவற்றில் குறைவாகவே வருகிறார்கள். பூமணி கி.ராஜநாராயணனில் கண்டறிந்து நிரப்பும் முக்கியமான இடைவெளி இதுதான். பூமணியின் புனைவுலகு பெரும்பாலும் நாயக்கர்கள் அல்லாத அடித்தள மக்களை நோக்கிச் செல்கிறது.
பூமணியின் புனைவுலகை அவர் கி.ராவின் புனைவுலகில் எதையெல்லாம் நிரப்புகிறார் என்பதைக் கொண்டே சொல்லிவிடமுடியும். கி.ராவின் கதைகளில் மண்ணும் விவசாயமும் உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்யும் மக்களின் கோணத்திலேயே உள்ளன. கரிசல் காட்டில் ஒரு சம்சாரி போல எங்கெல்லாம் நிலம் மீதான பெரும் பித்து வெளிப்படுகிறதோ அங்குதான் கி.ரா ஆவேசமாக வெளிப்பாடு கொள்கிறார். கண்ணால் நாவால் காதால் மூக்கால் உடலால் ஆன்மாவால் நிலத்தை உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள் கி.ராவின் கதைமாந்தர்கள் – கி.ராவும் கூடத்தான். நேர்மாறாகப் பூமணியின் பெரும்பாலான கதைமாந்தர்களுக்கு நிலம் அவர்கள் உழைத்து உணவு தேடும் களம் மட்டுமாக இருக்கிறது. அவர்கள் மண்டையை மோதி உடைக்கும் பலிபீடம் போலிருக்கிறது. அவர்களை ஆட்டிப்படைக்கும் குரூரமான தெய்வம் போலிருக்கிறது. பூமணி காட்டும் வறண்ட கரிசலில் வறண்ட மனிதர்கள் வெந்து எரிந்து பசித்து வியர்த்து வாழ்கிறார்கள். இவர்கள் வேறு மனிதர்கள். இவர்களுக்கு நிலம் மீதான மோகம் இல்லை. மிக எளிதாக இவர்கள் நிலத்தை உதறிப் பஞ்சம் பிழைக்கவோ தீப்பெட்டி ஒட்டவோ போகக் கூடும். அவர்கள் நிலத்தை ஆன்மாவில் சுமந்தலைவதில்லை. தங்கள் வயிற்றுப்பசியில் ஒரு நினைவாகவே கொண்டிருக்கிறார்கள்.
ஆகவேதான் கி.ராஜநாராயணன் காட்டும் கரிசலின் ருசியும் பூமணி காட்டும் கரிசலின் ருசியும் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன. கி.ரா ஒரு கற்பனாவாத யதார்த்தத்தைக் கட்டமைக்கிறார். அவரது உலகில் சுவாரசியங்களும் நளினங்களும் அதிகம். சங்கீதம், புராணம், தொன்மங்கள், கிசுகிசுக்கள், சாப்பாடு, பருவநிலைகள் என நுண்மையான சுவைகளிலேயே ஊறிக்கிடக்கிறது கி.ராவின் புனைவுலகு. தமிழ்ப் புனைவுலகின் சாதனைகளில் ஒன்றாகக் கி.ராவின் அந்த உலகம் நிலை கொள்வதற்கான காரணமும் அந்தச் சுவைதான். வாசகன் மலர் வெளியில் பறந்தலையும் தேனீ போல அந்தப் புனைவு வெளியில் அலைகின்றான். வண்ணங்களின் முடிவில்லாத இனிமையை அந்தப் புனைவுலகில் சுவைக்கிறான்.
நேர்மாறாகப் பூமணியின் உலகம் இயல்புவாதத் தன்மை கொண்டது. தமிழின் இயல்புவாத முன்னோடிகளில் ஆர்.ஷண்முக சுந்தரம், ஆ.மாதவன், நீல பத்மநாபன் ஆகியோருக்குப் பின் குறிப்பிடத்தக்க பெரும் படைப்பாளி பூமணியே. இங்கே சுவைகள் எல்லாமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உக்கிரமான கொடும் வெயில் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த வெயில் எல்லாத் தாவரங்களையும் சருகாக்குகிறது. ஈரங்களை வற்றச் செய்கிறது. மணங்களை ஆவியாக்கிவிடுகிறது. எஞ்சுவது அங்கும் உயிர் இருந்ததைச் சொல்லும் மெல்லிய ஒரு வாசனைதான். அந்த மெல்லிய வாசனையை வாசகனுக்குக் கடத்த வேண்டும் என்பதற்காகவே பூமணி இயல்புவாதத்தைத் தன் அழகியலாகக் கொண்டிருக்கிறார்.
மிக மிகத் தாழ்ந்த சுருதியில் ஒலிக்கும் இசை போன்றது இயல்புவாதம். தேர்ந்த காதுகளுக்கு மட்டுமே இசையை அளிப்பது அது. பெரும்பாலும் சாதாரணமான விஷயங்களை சாதாரணமாகச் சொல்லிச் செல்வது. சாதாரணமான விஷயங்களில் இருந்து அசாதாரணமான விஷயங்களைத் தொட்டறியும் வல்லமை கொண்டவர்களுக்கு மட்டுமாக எழுதப்பட்டது. அவ்வகையில் வண்ணங்கள் பீறிடும் கி.ராவின் உலகுக்கு நேர் எதிரானது. நீர்வண்ண ஒவியத்தை நீர் கழுவி மென்மையாக்கும் ஜப்பானிய ஓவிய முறையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். குறைவுறக் கூறுதல், குறைத்துக் கூறுதல், புறவயமாகக் கூறுதல் என்பதையே இலக்கணமாகக் கொண்டது இது.
கி.ராஜநாராயணனின் கதை ஒன்றில் ஒரு கரிசல் காட்டு சம்சாரி மூத்துப் பழுத்தும் சாகாமல் இழுத்துக்கிடப்பார். என்னென்னவோ கொடுத்துப்பார்ப்பார்கள். கடைசியில் ஒரு குவளை நீரில் கரிசல் மண்ணை ஒரு சிட்டிகை எடுத்துக் கலக்கிக் கொடுப்பார்கள். ஆன்மா நிறைந்து அவர் உயிர்விடுவார். வீரிய மணமும் தீவிரச் சுவையும் உடைய எந்தப் பானத்திற்கும் இல்லாத வேகம் அந்தச் சிட்டிகை மண்ணில் இருந்த உப்புக்கும் மணத்திற்கும் இருந்தது. பூமணி படைப்புகளில் உள்ள ருசி அவ்வளவுதான். அந்த அளவு. அந்த வீச்சு.