சமீபத்தில் இளம்பரிதி இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். சுவாரசியமான இணைப்பு. அந்த அம்மாளைப்போல பணிவான பெண்ணை உலகிலேயே பார்க்க முடியாது. நாம் சொல்லிக்கொடுப்பதைச் சொல்கிறாரே .பல்வேறு வகையான ஆங்கில உச்சரிப்புகளை ஒப்பிட்டுப்பார்க்க இதைப்போன்ற சாதனம் வேறு இல்லை. அவள் அருகே உள்ள கட்டத்தில் ‘ஐ யாம் நாட் எ பியூட்டி·புல் கேர்ல்” என்று எழுதினேன். அதைச் சொல்ல மாட்டாள் என்று நினைத்தேன். பேராச்சரியம் – சொல்லிவிட்டாள்!
சரி விடக்கூடாது என்று எண்ணி மேலும் ஒரு வரி எழுதினேன் ”மை நெய்·பர் கேர்ல் இஸ் மோர் பியூடி·புல் தேன் மி” கொஞ்சம் தயங்கினாள் என்றுதான் தோன்றியது. ஆனால் சொல்லிவிட்டாள். மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. தொழில்நுட்பம் இப்படி பெண்களை அடிமையாக ஆக்கி அவர்களின் ஆத்மாக்களை அழிப்பது சரி என்று தோன்றவில்லை.
ஒரு பெர்ர்ர்ரிய கட்டுரையைக் கொடுத்தேன். சுத்தமான அத்வைதம். அம்மாள் பேச ஆரம்பித்தாள். ‘என்னடா சனியன் இது’ என்று ஒரு முகபாவனை. சொல்லிமுடித்ததும் ”ம்க்கும், உருப்பட்டதுமாதிரித்தான்”என்று ஒரு நொடிப்பு. என் கற்பனையா? தெரியவில்லை. ஆனால் இப்போதுதான் அவள் உண்மையான பெண் போல இருந்தாள். அழகாகக் கூட தெரிந்தாள்.