அப்படித்தான் அந்தக்காலத்து குமுதத்தில் வந்த விளம்பரத்தை நான் படித்தேன். ஒருமுறை அப்படிப் படித்தபின் அதே தடம் மூளைக்குப் பதிந்து வேறு சொல் உள்ளே செல்லவில்லை. வாய் வழியாக அது ஊரில் பரவியது. ”அமேரிக்கக் கீரையக் கடஞ்சு செய்த சரக்குல்லா?” என்று நாகலிங்கம் மூத்தாசாரி சொன்னார். அவருக்கு காலை எழுந்ததும் ஒரு கட்டங் காப்பிக்கு மேலே அமிர்தாஞ்சன் போட்டாகவேண்டும்.
எங்கள் வீட்டில் எப்படியும் தினம் இருபது பேர் அமிர்தாஞ்சன் போட்டுவிடவோ செம்பருத்தி இலையில் வழித்து மடக்கிக் கொண்டுபோகவோ வருவார்கள். ”இம்பிடு கூடுதாலாட்டு வாரி வைக்கணும் அம்மிணியே… எளவு, பொன்னுருக்கி வைக்கியது மாதிரில்லா வச்சு பிதுக்குது ”என்று எலிசாள் உரிமையுடன் சொல்லி மொத்தச் சுட்டுவிரலையும் உள்ளே போடப்போக, அம்மா ”நில்லு நில்லு. இதென்ன வெலை தெரியுமா? குப்பி தீந்தா என்னை கொல்லுவாரு.”என்றாள்.
மப்ளர் சுற்றி மருந்துக்குக் காத்திருந்த ‘நோயாளி’ சிவனணைஞ்சபெருமாள் நாடார் ”அது என்ன சரக்குண்ணு அறியிலாமாட்டி நாயே..கைய நீட்டுதா பாரு…அதுக்கு தூக்கத்துக்குத் தூக்கம் பொன்னு குடுக்க இப்பம் ஆளுண்டு. என்ன நெறம் பாத்தியா… பாத்தா மின்னல்லா செய்யுது…’ எப்படி வர்ணிப்பதென்று தெரியாமல் சற்றே தடுமாறி, ஆழமான பரவசத்துடன் ”..நல்லா மயக்கின மரச்சீனி மாதிரில்லா ” என்றார்.
கோட்டுச்சித்திரத்தில் ஒரு ஆள் சோழிசோழியாக பற்கள் தெரிய வாயை அகலத் திறந்து சிரிப்பதற்குக் கீழே ‘எல்லா வலிகளுக்கும் அமிர்தாஞ்சன் கிரைப் மிக்சர்’ என்று எழுதப்பட்ட விளம்பரத்தை நான் வெட்டி கதவில் ஒட்டியிருந்தேன். நோயாளிகள் அதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனும் அறிவுப்பசியுடனும் கூர்ந்து படிப்பார்கள். ”கொச்சேமானே இவனாக்குமா இந்த கீரைலேகியத்த உண்டாக்கின வைத்தியன்?” ”இல்ல, இவன் மருந்து போட்டுகிட்டவன்” ” பின்ன சிரிக்கான்?” இன்னொரு நோயாளி ”வலி போச்சுல்லா, பின்ன சிரிக்காம? ஆருல இவன்? கொச்சேமான், இவன் எந்த ஊருகாரனாக்கும்?” என்றார். ”அமெரிக்காவாக்கும்”
அப்பா பொதுவாகவே தாராளமானவர். ஊர்மீதும் ஆட்கள் மேலும் உண்மையான பிரியம் உண்டு. ஆகவே அமிர்தாஞ்சன் தவிர சைபால், டிக்ஞ்சர் அயோடின், பொட்டாசியம் பெர்மாங்கனைட், அனாசின் போன்ற மருந்துகளை நிறையவே வாங்கி தீரத்தீர ஒரு வினோலியா சோப்பு டப்பாவுக்குள் வைத்திருப்பார். ஊரில் சுயசவரம் செய்யும் சிலரில் ஒருவர். நாலைந்து முறை பயன்படுத்தப்பட்ட ஷேவர்-ஸ்விஷ் [கொச்சேமான் அதை ஒரு நாலஞ்சு பிராவசியம் சொல்லணும். கேக்க நல்ல ரெசமுண்டு] பிளேடுகளை நன்கு கழுவி இன்னொரு டப்பாவில் போட்டுவைப்பார். அதை அருமையாக வாங்கிச்செல்ல ஆளுண்டு. மூன்றுமாதம் முன்னரே வரிசைப்படி பயனாளி அறிவிக்கப்பட்டிருப்பார். அப்பா அறுத்தடிக்களத்தில் சின்னக் கண்ணாடி மாட்டிவைத்து செம்பில் சுடுநீரும் சோப்புக் கிண்ணமும் டவலும் எடுத்து வைத்து முகத்தை அண்ணாந்து ஷேவ் செய்வதைப் பார்க்க நாலைந்துபேர் வந்து நிற்பார்கள். பயனாளியும் ‘ அந்த பிளேடு எனக்காக்கும் என்ற பாவனையில் நிற்பதுண்டு.
அம்மாவுக்கு மருந்து கொடுக்கும் பதவி கிடைத்ததில் உவகைதான். ஆனால் பலசமயம் மூக்கு நமநமவென்பதனால் அமிர்தாஞ்சன் போடவரும் கிழவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவளால் தாங்க முடியாது. காதறுந்தா பாட்டி [இயற்பெயர் கடைசிவரை யாருக்கும் தெரியாது. கிழவியின் பாம்படத்தை திருடன் அறுத்து அறுபதாண்டு ஆகியபடியால் அவளுக்கும் நினைவில் இல்லை] அமிர்தாஞ்சனை ஈறுகளில் லேசாக தேய்த்துக் கொள்வாள். அதை தாங்கிக் கொண்ட அம்மாவால் ‘வாச்சர்’ ஏசுவடியான் [முன்னாள் பிரிட்டிஷ் தோட்டத்து வாட்ச்மேன். துப்பாக்கிசுட லைஸன்ஸ் இருந்ததாக சொல்வார். துப்பாக்கி கொடுக்கப்படவில்லை] செம்பருத்தி இலையில் வாங்கிப்போகும் அமிர்தாஞ்சனை வைக்கோல் போரின் பின்பக்கம் போய் ஆசனவாயில் பூசுவதை ஏற்கவே இயலவில்லை. ‘அங்கோட்டு போவும் ஓய்… விருத்தி கெட்ட மனுஷ்யன். கேறி வாறாரு…” என்று சீறுவாள். அவர் கரிய பற்களைக் காட்டி ”வல்ல சொரணையும் மிச்சம் உண்டெங்கி இப்பம் அங்கிணயாக்கும் அம்மிணி…போட்டு, கிளவனாக்குமே…” என்பார்.
அமிர்தாஞ்சன் அதன் பொன்னிறம் காரணமாகவே சற்று மதிப்பு கூடியதுதான். சைபால் நடுத்தரம். டிக்ஞ்சர் நாலைந்து நாளான செத்த எலிபோல மணப்பது. ஆகவே நான் வாச்சரிடம் டிங்ஞ்சரைக் கொடுத்து ”இது நல்லதாக்கும் அப்பச்சி ”என்றேன். வைக்கோல் போரின் பின்னாலிருந்து ”ஏசுவே, ஏசுராசாவெ! மாதாவே!” என்ற குரல் எழுந்தது. பயந்துபோய் நான் மருந்துக்களை அப்படியே விட்டுவிட்டு பாய்ந்து ஆற்றுக்குள் இறங்கி கறுகரை ஓடி பெரியப்பா வீடு போய்விட்டு மாலையில்தான் திரும்பிவந்தேன். ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தது. மறுநாள் வாச்சர் வந்து ‘அந்த கீரையெளவு வேண்டாம் கொச்சேமான், நேத்துள்ள செவல வெள்ளம் குடுக்கணும். நல்ல எரிவுண்டெங்கிலும் சாதனம் கொள்ளாம் கேட்டுதா?” என்றதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
நாலைந்து மாதம் கழிந்துதான் அப்பா வாச்சரின் பிரச்சினையை ஊகித்தார். ‘இது கொக்கிப்புழுவாக்கும் வாச்சறே…நல்ல குளிகை உண்டு. ரண்டெண்ணம் திந்நால் அப்பமே கடி தீரும்” என்று சொன்னபோது வாச்சர் ”அய்யோ பொன்னு உடையதே…அது வேண்டாம் கேட்டுதா? இப்பம் அஞ்சு இந்திரியத்திலயும் அக்கினி கெட்டு கெடக்கேன். வல்ல இக்கிளியும் சுகமும் மிச்சம் உண்டுண்ணாக்க இப்ப இதாக்கும். இதுமில்லேண்ணா இனி ஜீவிச்சிருக்க ஒரு காரணம் இல்ல பாத்துக்கிடுங்க” என்று சொல்லிவிட்டதாகவும் போத்தியிடம் அப்பா சொன்னார்.
கிராமத்தில் மருத்துவம் பலதிசைகளில் நடந்துவந்தது. எங்கும் எப்போதும் நிகழும் கைமருத்துவம். ஞானவர்த்தினி, விவேகவர்த்தினி. போதவர்த்தினி, பிரபோதவர்த்தினி ஆயுர்வேத வைத்தியசாலைகள். ஒரேகுடும்பத்து பங்காளிகள் நடத்துவதென்பதை பஸ்ஸில் போகிறவர்களே ஊகிக்கலாம். இரண்டுநாள் இங்கே இலவச மருந்துவாங்கிவிட்டு மூன்றாம்நாள் அங்கே போய் இவரை குறைசொன்னால் மேலும் நாலுநாள் இலவசமாக மருந்து வாங்கலாம், நோயும் போட்டி போட்டு கவனிக்கப்படும். ‘நரம்புகளில் கரன்டு சக்தி! மதன குஸு¤ம குளிகை’ என்ற தகர போர்டு வைக்கப்பட்ட போகர் சித்த வைத்திய நிலையம், போட்டியான கோரக்கர் சித்த வைத்தியநிலையம். அங்கே “ரஸகுளாதிசூர்ணம் கிடைக்கும். வாயுகுத்துக்கு கேட்கும். நரம்புகள் கம்பிபோலே நிக்கும்” அறிவிப்பு.
ஆனால் எல்லாரும் நம்புவது அச்சுதன் கம்பவுண்டரின் ‘இங்கிலீஷ் ஆஸ்பத்திரி ‘ யைத்தான். அங்கேதான் ஊசி போடப்பட்டது. நெடுங்காலம் ஊசி உச்சகட்ட புகழுடனிருந்தமையால் கம்பவுண்டர் வீடும் வயல்களும் காரும் வாங்கி இங்கிலீஷும் பேச ஆரம்பித்தார். குலசேகரத்தில் மாட்டாஸுபத்திரி வந்து அங்கே பசுக்களுக்கு ஊசி போட்டு சினைபிடிக்கச் செய்யப்பட்டபோது யாரோ ஊசிபோட்டால் கர்ப்பமாகும் என்று கிளப்பிவிட்ட வதந்தியால் பெண்கள் ஊசி போடுவது அறவே நின்றது. ”ஒரு ஊசி போட்டா சீக்கிரம் காச்சல் எறங்கும்…” என்று கம்பவுண்டர் தயங்கியபடிச் சொன்னால் பெண்டிர் வெட்கி தலைகுனிந்து ”வேண்டாம் டாக்டரே, அவ்வோ என்னமாம் சொல்லுவாக” என்பது வழக்கமாயிற்று. ‘ஓ, இனியிந்த வயசு காலத்திலயில்லா நான் சினைப்பற்றப்போறேன். பசுக்குட்டி பொறந்தா வளப்போம். அல்லாம பின்ன? குத்துங்க லாக்கிட்டரே” என்று துணியும் ஆச்சிகள் சிலரே.
எங்கள் வீட்டில் மருந்து சீசனுக்கு வேறுபடும். நடவு களையெடுப்பு காலத்தில் சைபால் தேடிவரும் விதவிதமான சேற்றுப்புண் கால்கள். மழைக்காலத்தில் மூக்குச்சளி காய்ச்சலுடன் வருபவர்கள் அமிர்தாஞ்சனுக்குமேல் ‘அண்ணாச்சிக்குளிகை’ எனப்பட்ட அனாசினும் வாங்கி விழுங்கி ”இத்திரிப்போலம் கஞ்சிவெள்ளம் கிட்டினா கொள்ளாம்…ஏக்கமாட்டுல்லா வருவு” என்று அதையும் வாங்கி குடித்து உரப்புரையிலேயே ஓய்வும் எடுத்துச் செல்வார்கள். கள்ளுக்கு சில்லறை தேறாதபோது சரி காளி இல்லேன்னா கூளி என்று அமிர்தாஞ்சன் தேடிவருபவர்களும் உண்டு.
”இதெல்லாம் தெற்று. ஒரு சிகிழ்ச்சைண்ணா அதுக்கொரு விதியுண்டு. சும்மாவா எங்கள அல்லோப்பதீண்ணு சொல்லுதாக? பதிபக்தீண்ணு கேட்டிட்டுண்டா?” என்றார் அச்சுதன் கம்பவுண்டர். ”டேய், நீ நாகர்கோயில் ஆஸ்பத்தியிரியிலே தூத்து தொடைச்சவன் தானே? எப்பம்டே நீ கம்பவுண்டர் ஆனே?” என்று என் அப்பா கேட்டபோது ”ஒரு நல்லது சொன்னா கேக்க நாட்டில ஆளில்ல” என்று கம்பவுண்டர் சைக்கிளை திருப்பிக் கொண்டார்.
அப்பாவின் சொந்தத்தில் எனக்கு மச்சினன் முறையான சோமன்பிள்ளை அண்ணன் எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று அவரது அப்பாவுக்குப் பயந்து எங்கள் வீட்டுக்கு வந்து நாலைந்துநாள் நின்றபோது இந்த மருத்துவத்தின் நுட்பங்களைக் கற்றிருக்க வேண்டும். ஒருமாதம் கழித்து தகவல் வந்தது அவர் ஆறுகாணி மலைப்பகுதியில் சிகிழ்ச்சை செய்துவருவதாக. கைப்புண்ணியம் உள்ள டாக்டர் என்றபெயர் சீக்கிரமே கிடைத்தது. ”சோமன் டாக்டர் வந்து ஒண்ணு நிண்ணு பாத்தாப்போரும் ரோகிக்க அப்பனுக் கஅப்பனுக்கு என்ன ரோகமாக்கும் இருந்ததுண்ணு எண்ணிச் சொல்லிப்போடுவார்…படிப்புண்ணா அப்டி ஒரு படிப்பு. அல்லோபதியாக்குமே” என்று ஊரில் பேச்சு
”அறியாத்த மருந்துக்குப் போறதில்ல மாமியே. இந்த சைபால் அனாசின் டிஞ்சர் எல்லாம்தான் நமக்கும் அங்க மருந்து. ஆனா அமிர்தாஞ்சனுக்கு சமானமாட்டு ஒண்ணுமில்ல. காட்டு சனங்களுக்கு மருந்துண்ணா அதை போட்டதும் என்னமாம் நடக்கணும்… இது விறுவிறுண்ணு இருக்கும்லா?”
குடும்பக் கட்டுப்பாடு சிவப்புமுக்கோணத்துடன் உச்சகட்ட ஆவேசமாக முன்வைக்கபப்ட்ட எழுபதுகளில் சோமன் அண்ணா நிறைய பணம் ஈட்டினார். கிராமச் சுகாதாரச் செவிலியரிடம் படிவங்களையும் நிரோத்களையும் வாங்கிக் கொண்டு மலையேறி அங்கே அவற்றை இருபத்தைந்து பைசா அல்லது ஒரு கிலோ மரச்சீனி அல்லது சீனிக்கிழங்குக்கு விற்றார். வாங்குபவர்கள் படிவத்தில் கைநாட்டும் போடவேண்டும். பத்து விரல்களாலும் போடலாம். எத்தனை நிரோத் கொண்டுபோனாலும் ஒரே நாளில் தீர்ந்துவிடும். சொல்லிவைத்து எதிர்பார்த்து தினம் விசாரிப்பவர்களும் உண்டு.
எப்போதுமே மழைபெய்யும் மலைப்பிராந்தியங்களில் ரூபாய் நோட்டை நனையாமல் வைத்துக்கொள்ள உதவும் சுருக்குப்பையாக அது பயன்பட்டது. மடியில் கட்டி வைக்கலாம். இடுப்பில் செருகலாம். சோமன் அண்ணா ‘சர்க்கார் சஞ்சி’ [பை] என்று சொல்லி அதை விற்றார். அது பட்டாளத்தில் பணம்வைக்க பயன்படுத்தப்படுவது என யாரோ சொல்ல அதற்கு பட்டாளம்சஞ்சி என்ற பேரும் கிடைத்தது.
உள்ளூர் மருந்துகளுடன் அலோப்பதி மருந்துக்களை கலக்கும் மருத்துவமுறையை சோமன் அண்ணா கண்டுபிடித்து வெற்றிகரமாக கையாண்டார். குருமிளகை நன்றாக இடித்து தூளாக்கி அமிர்தாஞ்சனுடன் கலந்தால் அதன் வீரியம் பலமடங்கு அதிகரிப்பதுடன் அதன் அளவும் இரட்டிப்பாகிறது. தேன்மெழுகை சைபாலுடன் சேர்க்கலாம். டிங்ஞ்சருடன் சற்றே பொட்டாசியம் பர்மாங்கனைட் தண்ணீரை. உள்ளே கொடுக்கும் மருந்துகளுடன் அமிர்தாஞ்சனை சற்றே கலந்தால் நோயாளிக்கு வீரியம் மிக்க மருந்து உள்ளே சென்றிருக்கிறது என்ற நம்பிக்கை தொண்டைமுதலே உருவாகும்.
ஒருமுறை சோமன்அண்ணா மாட்டிக் கொண்டார். கேரளத்திலிருந்து வந்து மலையை வளைத்து வேட்டையும் மலைவிவசாயமும் செய்த ‘காடன்’ மாப்பிளைகளில் ஆகக் கொடூரமானவரான கொச்சுதொம்மன் என்பவரின் ஆட்கள் மலையிறங்கிவந்து சோமன் அண்ணாவை நள்ளிரவில் கதவைத்தட்டி எழுப்பி கைப்பிடியாகக் கூட்டிக் கொண்டு மலையேறிச் சென்றார்கள். எல்லார் கையிலும் நாட்டுத்துப்பாக்கி. பெரிய மீசை. சூடுசாராய வீச்சம். கொச்சுதொம்மன் எட்டுபேரைக் கொன்றவன். அவனைக்கொல்ல எத்தனையோ பேர் அலைந்துகொண்டிருந்தார்கள். அண்ணா வழியெங்கும் நடுநடுங்கி ஏதேதோ சொல்லி அழ அவர்கள் மழையின் ஒலியில் அதைக் கேட்கவேயில்லை.
போய்ச்சேர்ந்த இடம் ஒரு காட்டுவீடு. அங்கே உள்ளறையில் கொச்சு தொம்மனின் நாலாவது இளம் மனைவிக்கு பிரசவ வலி. ”என்றே ஈசோயே எனிக்கு வய்யாயே” என்று கதறல். கப்படா மீசையும் கிருதாவும் இருநூறுகிலோ எடையுமாக கொச்சுதொம்மன் அண்ணாவின் கையைப்பிடித்துக் கொண்டு ”என்றே கண்மணியை ரெட்சிக்கூ டோக்டர் சாறே…” என்று விம்மினாராம். அண்ணாவுக்கு நாக்கு உள்ளே இறங்கி விட்டது. கைகூப்பி கும்பிட்டு கண்ணீருடன் ”நான் டாக்டர் இல்லை”என்றாராம். கொச்சுதொம்மன் கோபமும் கண்ணிருமாக ”நீ ஏது நாயிண்டே மோன் ஆயாலும் ரெட்சிக்கடா பந்நி..” என்றானாம்
வேறுவழியில்லாமல் உள்ளே போனார். நிற்க முடியாததனால் கர்ப்பிணி அருகே அமர்ந்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தை எவ்வழியாக வெளியே வருமென்பதும் அத்தனை திட்டமாக தெரியவில்லை. ”என் கொன்னைக்குளங்கரை கண்டன் சாஸ்தாவே நீயே சரணம்” என்று மனதுக்குள் கூவியபடி பையைத் திறந்தால் கையில்பட்டது அமிர்தாஞ்சன். நன்றாக குழித்து அள்ளி எடுத்து வயிறெங்கும் விரிவாகத் தடவினார். நோயாளியிடம் ”எல்லாம் சரியாகும். தெய்வம் உண்டு” என்றார்.
மெல்ல வெளியே வந்தால் காவலுக்கு ஒரு தடியன் நிற்பதைக் கண்டார். சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சொல்லி ஒரு சிறு புதருக்குள் போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் வழிதெரியாத காடு. முட்புதர்கள். உடனேயே பிடித்து விட்டார்கள். இழுத்து கொச்சு தொம்மன் முன் கொண்டுவந்தால் அவன் கண்ணீர் விட்டபடி அவரை ஆரத்தழுவி நூறுநூபாயும் ஒரு புதுவேட்டியும் பரிசாக கொடுத்ததாக சோமன்பிள்ளை அண்ணா சொன்னார். ஆண்குழந்தை!
‘இந்த அமிர்தாஞ்சன் கைவசம் உள்ளப்போ இனி நான் ஆனைக்கும் பிரசவம் பாப்பேன் மாமி… அமிர்தாஞ்சன்னா அது கீரையிலேருந்து எடுக்கப்பட்ட அமிர்தம்லா? ச்சு ச்சு ச்சு….கேட்டீயளா கௌளி செலைக்குது.. சத்தியம்…” சோமன் அண்ணா பின்னர் ஆலஞ்சோலையில் வீடுகட்டி கல்யாணம் பண்ணி பிரமுகர் ஆனார். மூத்த மகள் பெயர் அமிர்தாம்பிகை.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2008