கடிதங்கள்

அழகிய பெண்,அன்னை, ஆதர்ச பெண்…

ஒவ்வொரு ஆணும் ஜூலியா ராபர்ட்ஸ் வடிவில் தன் அன்னையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான் என்று ஓஷோ ஒருமுறை சொன்னார்…

நாலாவது முறை அவன் கண்டது தன் ஆதர்சப் பெண்ணின் வடிவில் தன் அன்னையைத்தான்.. திரும்பிப் பார்க்கும் முன்பே அது அவனுக்கும் நன்றாகத் தெரியும்…

இதுதான் என்னுடைய புரிதல்… ஆயினும் மோனோலிசா புன்னகை போல விளக்கியும் விளக்க முடியாத ஒரு புதிர் இந்தக் கதையில்(அந்தமுகம்) உள்ளது… ஒருவேளை நம் அந்தரங்கத்திற்குத் தெரியுமோ என்னவோ…

நன்றி
ரத்தன்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

என் கடிதத்தை உங்கள் இனையதளத்தில் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.நீங்கள் கூறுவது 100% உண்மையே..என் சித்தப்பா 6 ஆண்டு முன்னர் குடியினால் உயிர் இறந்தார், அவரது குடும்பம் இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து மீளவில்லை..

என் வயது 29 தான், நான் இன்றைய தலைமுறை என்று பள்ளி மற்றும் கால்லுரி மாணவர்களை மனதில் வைத்துக் கூறிவிட்டேன். என் சொந்த ஊர் விழுப்புரம் MBA முடித்துவிட்டு 15 மாதம் சென்னயில் வேலை செய்தேன், பிறகு 6 ஆண்டு முன்னர் நான் பெங்களூரு வந்தேன்.தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் துணை மேனேஜர் ஆக உள்ளேன்.எனக்கும் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் புகை மற்றும் மதுப் பழக்கம் இருந்தது..பெங்களுரு வந்த பின் 5 ஆண்டு முன்னர் அப்பழக்கத்தை அறவே விட்டுவிட்டேன்.ஒரு முறை ஆனந்த விகடனில் நடிகர் திரு.சிவகுமார் அவர்களின் கட்டுரை ஒன்று படிக்க நேர்ந்தது.அதில் இருந்து நான் இன்று வரை புகைப்பதில்லை,
குடிபதில்லை.உங்களின் எழுத்து மற்றும் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.நாஞ்சில் நாடன் போன்றோர்களின் எழுதுக்களைப் படிக்கும் போது நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஓர் ஒழுக்கத்தைக் கற்கின்றேன்.

கடத்த ஆண்டு டிசம்பர் 31 இரவு குடி போதையில் தமிழகத்தில் இறந்த மாணவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 15 அதனால் அந்த ஆதங்கத்தில் அப்படிக் கூறிவிட்டேன்.என் புத்தக வாசிப்புப் பழக்கம் ஆனந்த விகடனில் இருந்து தொடங்கியது.எனக்கு உங்களின் முதல் அறிமுகம் ஆனந்த விகடனில் “நான் கடவுள்” படத்தைப் பற்றிய உங்களின் கட்டுரை.

இப்போதும் எனக்கு ஓர் ஆசை உண்டு, அது நீங்கள் திரும்பவும் ஆனந்த விகடனில் எழுத வேண்டும் என்று(உங்களின் எழுத்து பலருக்கும் சென்று சேரவேண்டும் அதற்காக அப்படிக் கூறினேன்).உங்களின் ஊரில் உங்களை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்ற ஆசை உண்டு.உங்களுக்கு பெங்களூருக்கு வரும் திட்டம் ஏதும் உள்ளதா,தெரிவு படுத்தவும்.எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு

அன்புடன்
ரா. அ.பாலாஜி
பெங்களூரு.

வாழ்த்துக்கள் ஜே எம்.

உங்கள் அறம் தொகுப்பைப் பற்றி
நேற்று தான் டாக்டர் ராமானுஜம் என்னிடம்
அலைபேசியில் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்
இன்று காஞ்சிபுரம் தோழர் மோகன் அவசரமாக அந்தப்
புத்தகத்தை வாங்கி அவருக்கு இன்றே அனுப்ப முடியுமா
என்று கேட்கவும், தி நகர் புக் லேண்ட்ஸ் சென்று வாங்கினேன்.

வேண்டுமென்றே தவறவிட்ட ஒரு பேருந்து, பிறகு தொற்றிக் கொண்டு
ஏறிய அடுத்தது இவற்றில் பயணம் செய்தபடியும் இறங்கிக் கொஞ்சமுமாக
கூரியரில் (வருத்ததோடு!) சேர்க்குமுன் அறம் வாசித்து முடித்து
அசந்து போனேன்…(எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் கதை என்று பிறகு
மாலையில் ராமானுஜம் பேசுகையில் சொன்னார்)…அப்புறம் இந்தக்
கதைகள் எழுதப் புகுந்த வரலாறும், இலட்சிய மனிதர்கள் மீதான
கனிவான பார்வையுமாக உங்கள் அறிமுகப் பக்கத்தையும் வாசித்தேன்.

மதிப்பிற்குரிய எளிய மனிதர் தோழர் ஜே ஹெச் அவர்களை நீங்கள் நினைவு
கூர்ந்திருப்பதும், அவருக்கு இந்தப் புத்தகத்தை அன்போடு சமர்ப்பித்திருப்பதும்
மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது….கூடவே சில கேள்விகளையும்.. அவரைக் குறித்தான உங்கள் முழு புனைவுக் கதையை வாசிக்கக் காத்திருக்கிறேன்..

யாரையும் கவர்ந்துவிடும் அந்தப் பெருந்தகையை
எங்கள் வாழ்விலும் மறக்க இயலாது..

ஏற்கெனவே சோற்றுக் கணக்கு கதையில் என் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறேன்.
யானை டாக்டர் பற்றிப் பேசத் தனிக் கட்டுரை எழுத வேண்டும்…அறம் தொகுப்பை முழுமையாக வாசித்து விட்டு எழுதுகிறேன்..
வாழ்த்துக்கள் ஜே.எம்.

எஸ் வி வேணுகோபாலன்

முந்தைய கட்டுரைஎண்ணியிருப்பேனோ
அடுத்த கட்டுரையோகமும் பித்தும்