இந்திய சிந்தனை:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்;

 


வணக்கம் தங்களுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்தேன்.


அதிலே முதலாவதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள் இந்த விளக்கங்களை எளிதாக அமைப்பதற்கே என்னுடைய மொழித்திறனை பயன்படுத்துகிறேனென்று முற்றிலும் உண்மை.
காரணம் இன்றைக்கு நீங்களே குறிப்பிடிருப்பதை போன்று இவற்றை பற்றியே தகவல்களை எல்லாம் வேதாந்த  நூல்களிலிருந்தே பெற முடிகிறது ஒன்று இரண்டாவாதாக அங்கே வெறும் மொழித்திறன் மாத்திரமே பயன்படுத்தப்படுவதால் கடுமையான பொருள் மயக்கம் ஏற்படுகிறது. விளைவு அதை படிக்கிற விருப்பமே அகன்று விடுகிறது.காரணம் சந்திர கிரகணத்தை பற்றிய விளக்கம்  அந்த நிகழ்வை விளக்க வேண்டுமே அன்றி சந்திரனுடைய அழகை விளக்க வேண்டிய அவசியமென்ன?


 
மொழியை  இவ்வளவு திட்டவட்டமாகவும் துல்லியமாகவும் நீங்கள் பயன்படுத்தியதே இந்த புத்தகத்தை இவ்வளவு தூரம் புரிந்து கொள்ள உதவியது.


உயிர்மையில் சமீபத்திய பேட்டியில் சந்தைப்படுத்துதலை பற்றிய உங்கள் கருத்து எனல்லும் உடன்பாடானதே. இருப்பினும் இவ்வளவு முக்கியமான புத்தகம் மறுபதிப்பு செய்யப்படாதது ஒரு வாசகனின் மனநிலையிலிருந்து மிகவும் துரதிர்ஷ்டமானது. உங்கள் பார்வையில் எங்களையும் ஒரு அங்கமாக கொல்லலாம்
இந்த புத்தகத்திற்கான தனி பிரதி எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.காடு நாவல் குறித்து தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டும்.


அன்புடன்
சந்தோஷ்

 

 

அன்புள்ள சந்தோஷ்

 

இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள் நூலில் நியாயம், மீமாம்சம் இரண்டையும் கொஞ்சம் விரிவாக்கி எழுதலாமென எண்ணினேன். ஆகவே வசந்தகுமாரிடம் மறுபதிப்பு போட கொஞ்சம் தாமதிக்கச் சொன்னேன். அந்த வேலை இன்னும் முடியவில்லை. நடுவே அங்குமிங்குமாக அலைச்சல். சிக்கல்கள். அடுத்த வருடம் மறு பதிப்பு வரும்.

 

அத்தகைய ஒரு நூலுக்கான தேவை பல்கலைகழக வட்டாரங்களில் இருந்தது, ஆகவே அது கொஞ்சம் வேகமாகவே விற்றுப்போயிற்று. இப்போது நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூல் அதேபோல பரவலாக பல்கலைக்கழக வட்டாரங்களுக்குக் கொண்டுபோகப்படலாம் என்பது என் எண்ணம். தமிழில் இத்தனை விரிவான தகவல்கள் உள்ள இந்தத் தளத்தைச் சேர்ந்த நூல் வேறு இல்லை. பலவருடங்களாக இலக்கியச் சூழலில் புழங்குபவர்களுக்கூட அதில் உள்ள பெரும்பாலான தகவல்கள் தெரிந்திருக்காது. அத்துடன் அதன் அடிப்படை விளக்கங்கள் விரிவானவை, எளிமையானவை.

 

இந்நூல்களை அறிஞர்கல் எழுதவேண்டும். எழுத்தாளர்கள் எழுதும் நிலை ஏன் ஏற்படுகிறது என்றால் அறிஞர்கள் நம்மிடையே குறைவு, இருப்பவர்களும் மிகச்சிக்கலான மொழியில் எழுதுகிறார்கள் என்பதே

 

 

 

 

 

ஜெமோ,
    “சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்
உரையை வாசித்தேன். தொக்கி நிற்கும் சில கேள்விகளை இங்கே முன்வைக்கிறேன்.தமிழ் பண்பாடு என்று கூறும் போது அவற்றின் நிலம் எதுவென புரிகிறது. சம்ஸ்கிருத/வேத பண்பாடு, இவற்றின் நிலம் எது? எங்கிருந்து தோன்றியதாக நீங்கள் கருதுகிறீர்கள்?தன் தத்துவதரிசனங்களை விவாதங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டிய வரலாற்றுத்தருணம் தமிழ்பப்ண்பாட்டுக்கு அமையவில்லை”, என்றும், “பிறசிந்தனைகளை எதிர்கொள்ளும் படைக்கருவியாக ஆக்க வேண்டிய தேவையே தமிழ்பண்பாட்டிற்க்கு உருவாகவில்லைஎன்றும் சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட உன்னதமான, எக்காலத்திற்க்கும் ஏற்ற ஒரு பண்பாட்டை எவராலும் உருவாக்க முடியுமா? மாற்றம் என்பதே தேவைபடாத ஒரு பண்பாடு உலகில் எப்போதேனும் தோன்றியது உண்டா? அப்படியிருக்கையில் தமிழ்பண்பாட்டை எக்காலத்திற்க்கும் ஏற்றது, மாற்றங்கள் ஏதும் தேவைபடாத ஒன்று, என்பதை போல சித்தரிப்பது எப்படி சாத்தியம்?அன்புடன்

Hari

1.

2. ”

 

 

 

அன்புள்ள ஹரி,

 

தங்கள் கடிதம்.சிந்தனைகளுக்கு என்று ஒரு திட்டவட்டமான நிலம்தேவை கிடையாது. அச்சிந்தனைகளை உருவாக்கிய பண்பாட்டு சூழல், அந்தப்பண்பாட்டின் மக்கள்திரள் மட்டுமே தேவை. அவர்கள் நகர்ந்துகொண்டிருக்கவும் செய்யலாம்.

 

1. வேதப்பண்பாடு ந்று சொல்லப்படும் பண்பாட்டின் மக்கள் வட இந்தியாவில் சிந்து கரைகளில் வாழ்ந்திருந்தவர்கள். அது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அவர்கள் ஆரியர்களா,  மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களா என்றெல்லாம் கேட்டால் அதற்கு என் பதில் அவை வெறும் ஊகங்கள் மட்டுமே என்பதுதான்.

 

வேதப்பண்பாட்டின் கடைசிக்காலகட்டம் அதர்வ வேதத்தின் காலம்.   அந்தக் காலகட்டம் கங்கைகரையிலும் சுற்றிலும் இருந்த பல்வேறு சமூகங்களுடன் வேதப்பண்பாடு உரையாடி விவாதித்து கொண்டும் கொடுத்தும் உருவாக்கிக் கொண்ட ஒன்று. அதன்பின் உபநிடத காலக்ட்டம். அது வேதங்களின் நீட்சியும் மறுப்பும் ஆகும். அவ்வாறு வேதப் பண்பாடு வளர்ந்தது

 

2. உன்னதமான எக்காலகட்டத்துக்கும் உரிய பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்று நான் சொல்லவில்லை. கிமு இரண்டாம் நூற்றாண்டுவாக்கில் ஆசீவகமும் சமணமும் பின்பு பௌத்தமும் தமிழகத்திற்கு வருவதற்கு முந்தைய தமிழ்ச்சிந்தனையின் நிலையையே அவ்வாறு ஊகித்துக் கூறினேன்.

 

அன்றைய தமிழ்ப்பண்பாட்டுக்கு இயற்கை மற்றும் பிறவிச்சுழற்சி சார்ந்த தரிசனங்களும் தத்துவநோக்கும் இருந்துள்ளது. அதை உலுக்கும் அளவுக்கு வலுவான வெளிப்பாதிப்புகள் அப்போது உருவாகவில்லை. ஆகவே அது தன் கருத்துக்களை தொகுக்கும் நெறிகளை மட்டுமே உருவாக்கியது. பிறருடன் விவாதிக்கும் நெறிகளை உருவாக்கவில்லை என்பது என் ஊகம். அக்காலத்தமிழில் நூல்வைப்புமுறை இருக்கிறது ஆனால் தர்க்கமுறை இல்லை.

 

அக்காலத்திலேயே வந்து விட்ட வேதநெறி அத்தகைய ஆழமான தத்துவப் பாதிப்பைச் செலுத்தவில்லை என்பதை சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. வேதியர் மதிப்புக்குரிய அன்னியராகவே சங்கப்பாடல்களில் சுட்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் வேள்விச்செயல் மட்டுமே குறிப்பிடப்படுகிறது, அவர்களின் தத்துவம் பேசப்படவில்லை. வேதநெறி உபநிடத காலகட்டத்தில் தரிசனங்களுடனும் பின்ற்ற் ஆசீவக சமண மதங்களுடனும் விவாதிக்க ஆரம்பித்த பின்னரே திட்டவட்டமான தத்துவ அடிப்படையை தனக்கென உருவாக்கிக் கொண்டது.

 

தமிழ்ப்பண்பாட்டை உலுக்கியவை ஆசீவகமும் சமணமும். அதன்பின் மிகவிரிவான தத்துவ விவாதங்கள் உருவாகி தமிழ்ப்பண்பாடே முற்றிலுமாக உருமாறி அடுத்த காலகட்டத்துக்குச் சென்றது. அதை என் கட்டுரையில் விரிவாக எடுத்துச் சொல்லலியிருக்கிறேன். தமிழ்ப்பண்பாடு என நாம் இன்று சொல்லும் கூறுகளில் பெரும்பாலானவை சமண- பௌத்த மதங்களுக்கு கடன்பட்டவை.

 

நான் சொன்ன கருத்தை முற்றிலும் வேறான ஒரு கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். காரணம் விவாதத்தை தனிச்சொற்றொடர்களாக நீங்கள் எடுத்துப்புரிந்துகொண்டமை. மீண்டும் கவனியுங்கள்.

 

ஜெ

ஜெ,
   நன்றி. மீண்டும் படித்தேன். நீங்கள் சொல்ல வருவது புரிந்தது.

வேதியரின் பண்பாடு(example, வேள்விசெயல்) குறித்து சங்க இலக்கியங்கள் பேசுவதாக சொன்னீர்கள். இதை, சங்ககால சமூகம் வேதியரின் ஒரு சில பண்பாட்டு கூறுகளை நடைமுறையில் தானும் ஏற்று கொண்டதாக கருத இடமுண்டா, அல்லது அந்த காலகட்டத்தின் வேதியரின் செயல்பாடுகளின் பதிவாக மட்டுமே கருதலாமா?

In other words, சங்க கால சிந்தனைகள் வேதகால சிந்தனைகள், இந்த இரு சிந்தனைகளும் பரஸ்பரம் தங்களை பாதித்ததா? அல்லது, வேதகால சிந்தனைகள் மட்டுமே சங்ககால சிந்தனைகளில் இருந்து கடன் வாங்கியதா?

நான் இது போன்ற விஷயங்களை அதிக அறிந்தவனில்லை. ஆதலால் இந்த கேள்விகள்

நன்றி
Hari

அன்புள்ள ஹரி

நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி சங்க காலத்தில் வேதியர் இங்கே இருந்திருப்பதும் வேள்விச்செயல்கள் நிறைய நடந்திருப்பதும் தெரியவருகிறது. ஆனால் தத்துவ உரையாடல்கள் நடந்தது போலத்தெரியவில்லை. இரு பண்பாடுகளின் குறியீடுகளும் ஆசாரங்களும் சொற்களும் கைமாறப்பட்டிருக்கலாம். தத்துவ உரையாடல் என்பது  ஆசீவகத்துக்குப் பிறகே ஆரம்பித்தது என்று தோன்றுகிறது

ஜெ

 

 

 

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

முந்தைய கட்டுரைசுசீந்திரம்
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி