அன்புள்ள ஜெ,
‘மாபெரும்பயணம்’ மறுபடியும் படித்தேன்.
எருமைகள் பகல் சாயத்தான் சென்றுசேர முடியும். அவற்றின் காலம் மேலும் அகன்றது . உருளும் பாறைக்கூட்டங்கள் போல அவை பின்னால் ஓலமிடும் வண்டிகளுக்கு வழிவிடாது செல்லும் . பெரிய உருண்டவிழிகளை விழித்து பசுமையை பார்க்கும் . ஆள்கூட்டத்தில் எவருடைய சாயலையாவது கண்டடைந்து ம்றே ? என வினவும் .தண்ணீர்கண்டால் முட்டி மோதி சென்று படுத்துக் கொள்ளும்.அசைபோட்டுக் கொண்டு யோக மோனத்தில் ஆழ்ந்துவிடும். வாழ்க்கை பற்றி துயரத்துடன் ஆழ்ந்து சிந்தித்து பெருமூச்சுவிடும். கொம்பு தோளில் படாமல் நாசூக்காக திரும்பிப்பார்க்கும்.
என்ற வரிகளின் வழியாக எருமையின் நிதானத்தில் மெல்லக் கலந்து, நரம்புகள் தளர்ந்து இளகி அசைவற்று இருக்கையில்
நாசியில் மிளகாய்ப் பொடி ஏற்றி அவற்றைக் கிளப்பவேண்டும்.
என்ற வரி சுருக்கென்று குத்தும் எரிச்சலுடன் படிப்பவனையும் கிளப்புகிறது – அடிமாடுகளின் மரணத்திற்கான பயணத்தை நோக்கி!
புரட்சி, சித்தாந்தம், ஆயுதம், போர், பலி, கொள்கை, தியாகம் என்றெல்லாம் “நீர்சிகிட்சை நிபுணர்களால்” வாயில் குடம் குடமாகக் கொட்டப்பட்ட நீரால் உடல் உப்பிப் பளபளப்பாகத் தொடர்கிறது அடிமாடுகளின் பயனம் – சாவை நோக்கி.
காஷ்மீர் போராளி, இலங்கைப் புரட்சியாளன் இன்னும் பலவாறு பகல் கற்பனை செய்து கொள்ளும் எல்லா அடிமாடுகளும் வழிகாட்டி மாடுகளின் பின்னால் சென்று கில்லட்டினை அடைந்ததும் தோலையும், காதுகளையும் இழந்து உயிருடன் இருந்த உருவத்திலிருந்து முற்றிலும் வேறாக மாறி எல்லாம் ஒன்றுபோல குருதி சொட்டும் சிவப்பு மாமிசப் பிண்டமாகிக் கொக்கியில் தொங்குகின்றன. காஷ்மீரோ, இலங்கையோ- ‘கொம்பின்’ வடிவத்திற்கேற்ப கசாப்புக்கட்டையில் சரிந்த தலைகள், கழுத்து வெட்டப்படும் முன் கண்டடைந்த ஞானத்தைச் சொல்லத் துடித்து, சொல்லப்படாமல், வெறித்த விழிகளுடன் கிடக்கின்றன.
கோலப்பன் தற்கொலை செய்து கொண்டாலும், வாழ்வில் எல்லாவற்றையும் மறந்து வெகுதூரம் வந்து விட்ட கதை சொல்லி, உருக்கள் நதியாகச் சுழித்து மரணத்தின் பீடத்தை நோக்கிச் செல்லும் அந்தப் பொள்ளாச்சி சாலைக்கே சைபீரிய நாரை போல தன்னையறியாமல் வந்து சேர்கிறான். கதை சொல்லிக்குப் பெயரே இல்லை – வெறும் ‘அவன்’ தான். ஆம், அடிமாடுகளாக இழுத்துச் செல்லப்படும் யாராக இருந்தாலும் அது ‘அவன்’ தான். ராவ்ஜி, கோலப்பனுக்குப் பிறகு ‘அவன்’. மீண்டும் நீர்சிகிட்சை, மீண்டும் பயணம், மீண்டும் கில்லட்டின்.
பிறந்து விழுந்தது முதல் தவழ்ந்தும், நடந்தும் மரணத்தை நோக்கியே செல்லும் ஒரு மிகச் சிறிய நேர்கோட்டுப் பயணம் தானா வாழ்க்கை? அதைப் பெரும்பயணமாக்குவது மீண்டும் மீண்டும் வரும் ‘அவன்’களால் வட்டத்தின் முடிவின்மை போல் சுழலும் இந்த அடிமாட்டு வாழ்க்கை தானா?
ஏதேதோ காரணங்களுக்காக இழுத்துச் செல்லப்பட்டு கும்பலாக மடியும் போராளிகள் – அடிமாடுகளின் பயணம் என்கிற குறியீடு, பொருள் கொள்ளலுக்குத் தரும் சாத்தியங்கள் முடிவிலியாக விரிகின்றன.
நன்றி ஜெ,
அன்புடன்,
பிரகாஷ்.