அன்னா ஹசாரே, தாலிபானியம்?

உயர்திரு சார்,

வணக்கம். தொந்தரவுக்கு மன்னிக்கவும். மீண்டும் அண்ணா ஹசாரே பற்றிய கேள்வி. இக்கேள்விகளுக்கு நீங்கள் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம். நான் கவனிக்கவில்லை. இனி எனது கேள்வி இல்லை இல்லை. தமிழ் ஊடகங்களில் அண்ணா பற்றி வந்த கட்டுரையை முன்வைத்து

ராலேகன் சித்தியில் மது ,திரைப்படம், தொலைகாட்சி (கேபிள் டிவி),சினிமா பாடல்கள் பஞ்சாயத்து தேர்தல்கள் போன்றவை கிடையாது என்றும் மீறி யாரவது அதை பயன் படுத்தினால் அவர்களை அண்ணாவே கட்டி வைத்து தனது பெல்ட்டால் அடிப்பாராமே?.

பணிவன்புடன்
கண்ணன்
திருச்சி


அன்பின் ஜெ..

ஸ்வாமிநாதன் அய்யர் ஒரு புத்திசாலியான பத்தி எழுத்தாளர். மரபான பொருளாதார விஷயங்களை எழுதும் நிபுணர். அண்ணா ஹஸாரேயின் குழு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய அவரது பத்தி. இதில், முரண்பாடான பல விஷயங்கள் இருந்தாலும், அடிப்படையான ப்ரச்சினை ஒன்று – ஹஸாரேயின் இயக்கத்துக்கு கறை சேர்ப்பது கிரண் பேடியும், கேஜ்ரிவாலும் நடந்து கொள்ளும் முறை. “நாங்கள் தவறு செய்திருந்தால், எங்களைத் தூக்கில் போடுங்கள்; ஆனால், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுங்கள்” என்னும் கேஜ்ரிவாலின் பேச்சு மிக முட்டாள்தனமான ஒன்று. Confession statement போல இருக்கிறது.

என்கவுண்டர் காவலர்கள் என்று ஒரு குழு உண்டு. அவர்கள் சமூக எதிரிகளை சுட்டுக் கொள்வது, ஒரு பெரும் cleansing என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கொஞ்சம் அருகில் சென்றதும் தான் தெரிகிறது – அதுவும் ஒரு தொழில்தான். (மும்பையில்). எடுத்துக் காட்டாக, ஒரு செல்வந்தருக்கு, பணம் கேட்டு மிரட்டல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர், அகில உலகப் பிரசித்தி பெற்ற போக்கிரியாக இருந்தார், மரியாதையாகக் கொடுத்து விடுவார். லோக்கலாக, இருந்தால், ஒரு பொருளாதார அளவீடு செய்வார். கேட்கும் தொகை அதிகமாக இருந்தால், என்கவுண்டர் காவலரிடம் செல்வார். அவர்கள், அந்த லோக்கல் போக்கிரியைக் குறைந்த செலவில் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவர். (கொஞ்சம் அருகில் இருந்து பார்த்த ஒரு சம்பவமே இதன் மூலம்).

அப்படி எதுவும் ஆகிவிடாமல், பாரதத்தையும், அண்ணா ஹஸாரேயையும் எப்போதும்போல் இறைவன் காப்பாற்றுவாராக..

பாலா

அன்புள்ள ஜெயமோகன்,

காந்தியவாதி என்று நம்பியிருந்த ஹசாரே பவாருக்கு அறை விழுந்த விஷயமாய்ப்பேசியிருக்கும் பேச்சு நம்பிக்கைகளை ஆட்டம் காண வைக்கிறது. ஒரு உடனடிஎதிர்வினையாக நகைச்சுவைக்காக என்றாலுமே கூட அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது. அதற்கு பிறகு அதற்கு சப்பைக் கட்டாக நான் விவரம் தெரிந்துக்கொள்ளத்தான் அப்படிக் கேட்டேன் என்று சொல்லியிருப்பது நல்ல காமெடி -காந்தி அப்படிப் பேசியிருந்தால் அதற்கு ஒரு உண்ணாவிரதம் இருந்துபிராயச்சித்தம் செய்திருப்பார். உண்மையையும் ஒப்புக் கொண்டிருப்பார்.
இவரை இனியும் காந்தீயவாதி என்று நம்பத்தான் வேண்டுமா? உங்கள் பதில்தெளிவு தரும் என்ற நம்பிக்கையில் இக்கேள்வியை இங்கே முன்வைக்கிறேன்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=355293

அன்புடன்,
நாயகி

அன்புள்ள நண்பர்களுக்கு,

பொதுவாக இப்போது இவ்வகையான கடிதங்கள் நிறையவே வருகின்றன. இதில் ஒரு பொதுத்தன்மையைக் காண்கிறேன். அண்ணா ஹசாரே போராட்டம் உச்ச நிலையில் நிகழ்ந்தபோது அதன்மேல் ஐயங்களை வீசியவர்கள், எதிர்த்தவர்களே இப்போது அண்ணா ஹசாரே மீது நம்பிக்கை போய்விட்டது என எழுதுகிறார்கள்

அண்ணா ஹசாரே குழு மீது ஊடகங்களும் அரசும் மெல்லமெல்ல கடுமையான அவதூறு மற்றும் ஆளுமைஅழிப்புத் தாக்குதல்களை தொடுக்கும் என நான் முன்னரே ஊகித்திருந்தேன், சொல்லியிருந்தேன். ஏனென்றால் அதுதான் நம் வரலாறு. நேற்று வினோபாவுக்கும் , ராம் மனோகர் லோகியாவுக்கும், ஜெயப்பிரகாஷ்நாராயணனுக்கும் எந்த ’மருந்து’ கொடுக்கப்பட்டதோ அதுவே இவருக்கும் கொடுக்கப்படும்

அண்ணா ஹசாரே போன்றவர்களை ஊழல், முறைகேடு போன்றவற்றில் சிக்கவைக்க முடியாது. ஆனால் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெல்லமெல்ல அவரைப்பற்றிய பிம்பத்தைக் கட்டமைக்கும். அன்றாடச் செலவுக்குக் காசில்லாமல் வாழ்ந்து மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் மேல் கூட இவ்வகை தாக்குதலை தொடந்ந்து நிகழ்த்தியது நம் ஊடக உலகம்

அதைவிட வலுவான ஆயுதம் என்பது கேலிப்பொருளாக்குதல். ஜெயப்பிரகாஷ் நாராயணன் முதல் அண்ணா ஹசாரே வரையிலானவர்கள் ராஜதந்திரிகள் அல்ல. அரசியல்வாதிகளும் அல்ல. ராஜதந்திரிகள் எண்ணிஎண்ணி சொற்களைச் சொல்வார்கள். அரசியல்வாதிகள் எப்போதுமே சம்பிரதாயமான தேய்வழக்குகளை மட்டுமே சொல்வார்கள். அவ்வாறு செயல்படுபவர்களை ஊடகங்கள் எளிதில் மடக்க முடியாது.

ஆனால் உண்மையான மக்கள் தொண்டர்கள் மக்களிடையே இருந்து எழுந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். மக்களின் மொழியில் பேசுபவர்களாகவும், மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் பேச்சு தன்னிச்சையாக வெளிவரக்கூடியதாகவே இருக்கும். மிகமிக எளிதாக நம் ஊடகங்கள் அவற்றை திரிக்கமுடியும். முன்பின் முரண்களாக காட்டமுடியும். உளறல்களாக சித்தரிக்க முடியும்.

சென்றகாலங்களில் இந்த உத்திக்கு பலியாகி வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட பலர் உண்டு. முக்கியமான களப்பலி ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான். எழுபதுகளின் ஆங்கில ஊடகங்களை எடுத்துப்பார்த்தால் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப்புரட்சி என்ற கருதுகோள் எப்படியெல்லாம் கிண்டலும் நக்கலும் செய்யப்பட்டு ஒருவகை கிறுக்குத்தனமாகச் சித்தரிக்கப்பட்டது என்பதைக் கண்டு ரத்தம்கொதிக்கலாம்.

நான் இப்போது தொடர்ச்சியாக லோகியா-ஜெ.பி-கிருபளானி காலகட்டத்தைக் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஐம்பதுகளிலேயே இந்தியாவுக்கு நேரு அளித்த பொருளியல் மாதிரியின் பெருந்தோல்வியை முன்னுணர்ந்தவர்கள் இவர்கள். ஐந்தாண்டுத்திட்டம்- பசுமைப்புரட்சி- நகர்மயமாதல் என்ற முக்கோணம் கடைசியில் கிராமப்பொருளியலை அழிப்பதிலேயே சென்று நிற்கும் என உணர்ந்தவர்கள்.

விவசாயிகளின் தற்கொலை பற்றி அறுபதுகளிலேயே பல இடங்களில் ஜெயபிரகாஷ்நாராயணன் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். ஒட்டுமொத்த பொருளியல் திட்டத்தையே கிராமம் சார்ந்த நோக்குடன் மறு அமைப்பு செய்யவேண்டும் என லோகியா சொன்னார். அதை ஜெயபிரகாஷ்நாராயணன் வழிமொழிந்தார். அந்த ஒட்டுமொத்த மாற்றத்தையே ஜெயப்பிரகாஷ்நாராயணன் முழுப்புரட்சி என்றார். அதை ஒரு மாபெரும் மக்களியக்கமாக ஆக்கவும் அவரால் முடிந்தது. மேலோட்டமாக முதலில் அதை ஆதரித்தன ஊடகங்கள், ஏனென்றால் நம் மக்களின் மனநிலை அதற்குச்சாதகமாக இருந்தது.

அடிப்படையில் இந்தியாவின் பெருமுதலாளித்துவத்துக்கு எதிரானது ஜெயப்பிரகாஷ்நாராயணனின் இயக்கம். ஆகவே மெல்லமெல்ல அதை அவர்கள் கேலிப்பொருளாக ஆக்க ஆரம்பித்தனர். அவரது ஒவ்வொரு பேச்சும் திரிக்கப்பட்டது. முன்னுக்குப்பின் முரணாக உளறும் வயோதிகர் என்ற சித்திரம் அவரைப்பற்றி உருவாக்கப்பட்டது. அவர் பேசியவை உதிரி வரிகளாக மேற்கோள் காட்டப்பட்டு அவர் மீதான எதிர்மறைபிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆச்சரியமென்னவென்றால் முழுப்புரட்சிக்கு அறைகூவி வட இந்தியாவையே கொந்தளிக்கசெய்த ஜெயப்பிரகாஷ்நாராயணன் ஐந்தாண்டுகளுக்குள் ஒருவகை கோமாளியாக மக்கள் மனதில் ஊடகங்களால் நிறுவப்பட்டுவிட்டார். இன்றும்கூட அந்தச்சித்திரமே நீடிக்கிறது.

ஜெயப்பிரகாஷ்நாராயணன் உணர்ச்சிபூர்வமானவர். மேடைகளில் இதயம் திறந்து பேசக்கூடியவர்.’அடித்து விரட்டவேண்டும்’ ‘நொறுக்கவேண்டும்’ என்றெல்லாம் மேடையில் நாட்டுப்புற இந்தியில் அவர் சொன்ன வரிகளை மீண்டும்மீண்டும் செய்தியாக்கி காந்தியவாதியான அவரை ஒரு வன்முறையாளராக சித்தரித்தது ஊடகம். அவர் இந்தியாவின் கட்டமைப்பை அழிக்க முனைகிறார், அராஜகத்தை தூண்டுகிறார், இளைஞர்களை வன்முறைப்பாதைக்குக் கொண்டுசெல்கிறார் என்று காட்டியது அது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் கிராமியப்பொருளியல் மேல் இந்திய அரசின் கவனத்தை திருப்புவதற்காக செய்த மாபெரும் முயற்சியை இந்திய நடுத்தரவர்க்கத்தின் அவநம்பிக்கையை தூண்டி முழுமையாக முறியடித்தது ஊடகம்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்துக்கும் அண்ணா ஹசாரே இயக்கத்துக்கும் நெருக்கமான சமானத்தன்மை உள்ளது. அண்ணா ஹசாரே இயக்கமும் அடிப்படையில் பெருந்தொழில்- நகர்மயமாக்கம்- ஊழல் என்ற முக்கோணத்துக்கு எதிரானது. விவசாயிகள் கைவிடப்பட்டு அழியும் யதார்த்தத்தில் இருந்து உருவாகி வந்தது. ஜெயப்பிரகாஷ்நாராயணனைப்போல அண்ணா ஹசாரேயும் அரசியல்வாதி அல்ல.மக்கள்நடுவே இருந்து உருவாகி வந்த மக்கள்சேவகர் மட்டுமே. ஆகவே அவரது மொழி அரசியல்வாதியின் மொழியோ ராஜதந்திரியின் மொழியோ அல்ல. மக்களின் உணர்ச்சிகளை அதுவும் சகஜமாக பிரதிபலிக்கிறது. அதைத்தான் ஊடகம் மிக எளிதாக கேலிக்குரியதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.

அண்ணா ஹசாரே காந்திய வழியில் முழுமையாக இல்லை என்று இப்போது சொல்பவர்கள் காந்திய வழி சரி என்றும், அதை பெரும்பாலும் அண்ணா ஹாசாரே கடைப்பிடிக்கிறார் என்றும் இந்த விஷயத்தில் மட்டும் அவர் சறுக்கிவிட்டார் என்றும் சொல்கிறார்கள் என்றால் நல்லது. ஆனால் அவர்கள் இப்போது கண்முன் உள்ள எதிரியை அழிக்கவே இந்த மாய்மாலத்தை முன்வைக்கிறார்கள். இந்த விவாதத்தில் எந்த நேர்மையையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.

ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குச் செய்தது போலவே அண்ணா ஹசாரே அல்லது ஹசாரே குழுவினர் பேசும் உதிரி வரிகளை தொடர்ச்சியாக அறிக்கையாக்கி அவற்றை ஊழலில் மூழ்கிய நம் நடுத்தரவர்க்கத்தின் ஒருபகுதியினரின் கேலிக்கும் விவாதத்துக்கும் உள்ளாக்கிக்கொண்டிருக்கிறது ஊடகம்.அவர்களும் அண்ணா ஹசாரே ஏன் இப்படிச் சொன்னார், அவர் அப்படிச் சொல்லியிருக்கககூடாது, இப்படிச் சொல்வது காந்தியமா என்றெல்லாம் அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காந்திக்கு நோபல் பரிசு ஏன் கொடுக்கப்படவில்லை தெரியுமா? பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு வர விரும்பும் அகதிகளுக்கு பாதுக்காப்பளிக்கவில்லை என்றால் இருநாடுகள் நடுவே போர் மூளக்கூடும் என்று அவர் சொன்னார். அது பாகிஸதானுக்கான மிரட்டல் என்றும், ஆகவே அவர் உலக அமைதிக்கு எதிரானவர் என்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அதை நோபல் கமிட்டி நம்பியது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அந்த அவதூறு காந்திமீது இருந்தது. அதைப்பற்றி காந்தியிடம் விளக்கம்கேட்கப்பட்டது, காந்தி அந்த விளக்கத்தைக்கொடுக்க முற்படவில்லை. தனக்கு அதில் ஆர்வமில்லை என்று சொல்லிவிட்டார்

காந்தி அண்ணா ஹசாரேவைப்போல அதிகம் படிக்காதவர் அல்ல. எளிய பின்னணி கொண்டவரோ பாமரர்நடுவே பணியாற்றியவரோ அல்ல. அவர் மிகச்சிறந்த வழக்கறிஞர். மாபெரும் ராஜந்தந்திரி. தன் நாக்கு மீது அபாரமான கட்டுப்பாடு கொண்டவர். அவருக்கே இந்த கதி. பலமுறை அவர் சொற்கள் திரிக்கப்பட்டுள்ளன. பலமுறை அவர் வன்முறையாளராக, இனவெறியராக, மதவெறியராக ஆங்கில ஊடகங்களால் காட்டப்பட்டுள்ளார். அண்ணா ஹசாரே இப்போது இப்படி வதைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை.

நாம் யோசிக்கவேண்டியது ஒன்றுதான். அண்ணா ஹசாரேவுக்கும் அவர்மேல் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் பெரிய ஒரு வேறுபாடுள்ளது. அண்ணா பேசுபவர் அல்ல. ஊடகவியலாளர் அல்ல.கூரிய சொற்களைச் சொல்பவராகவோ அரிய சிந்தனைகளை முன்வைப்பவராகவோ அவர் தன்னை காட்டிக்கொண்டதில்லை. அவர் ஒரு மக்கள்சேவகர். அந்த தளத்தில் தன் அர்ப்பணிப்பை நேர்மையை செயல்திறனை நிரூபித்தபின் பொதுவாழ்க்கைக்கு வந்தவர். மக்களின் குரலாக பேசுவதற்கான ஒரு வரலாற்றுத்தருணம் அவருக்கு வந்தது, அவர் இயல்பாக மக்களின் மொழியை பேசுகிறார்.

நடுத்தரவர்க்க படிப்பாளிகளாகிய நாம் ஏன் அண்ணா ஹசாரேவின் இறந்த காலத்தை, அவரது சாதனைகளை நம்பவில்லை, ஏன் ஆங்கில ஊடகங்களில் எழுதும் சகல அரைவேக்காட்டு இதழாளர்களையும் முழுமையாக நம்புகிறோம்? எந்த மூளைச்சலவை இது? நாம் உண்மையில் சிந்திக்கவேண்டியது இதைப்பற்றித்தான்.

அண்ணா ஹசாரே பற்றிய எல்லா விவாதங்களிலும் ஒரு முக்கியமான வாதம் கிளம்பி வருகிறது. குறிப்பாக ஆங்கில ஊடகங்களில் கட்டுரைகள் எழுதும் நட்சத்திர ஓட்டல் எழுத்தாளர்கள் மீளமீள இதைச் சொல்கின்றனர். இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. இவர்கள் அண்ணா ஹசாரே படிக்காதவர், ஆங்கிலம் பேசத்தெரியாதவர், பாமரர் என்று எல்லா கட்டுரைகளிலும் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப்படித்தமேதைகள் கல்விநிலையங்களில் கற்ற ஆங்கிலமும் அரைகுறைக் கோட்பாடுகளும் மொழிபெயர்க்கப்பட்ட சித்தாந்தங்களும் சேர்ந்துதான் நம்முடைய சிந்தனையை சமூகச்செயல்பாடுகளை இந்த அளவுக்கு சீரழித்து உறையச்செய்துள்ளன என்பதே உண்மை. இந்த நாட்டின் கோடிக்கணக்கான எளிய மக்களை புரிந்துகொள்ள இவர்களால் முடியவில்லை. அந்த மக்களைச் சுரண்டி வாழ தங்களுக்கு உரிமையுண்டு என எண்ணும் மேல்தட்டு வர்க்கத்தின் குரலாலகவே நம் ’படித்தவர்கள்’ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா ஹசாரே அடித்தள மக்களிடமிருந்து உருவாகி வந்தவர். அவர்களில் ஒருவர். காந்திக்கு இந்தியாவின் எளியமக்கள் அளித்த எதிர்வினை என்று அண்ணா ஹசாரேவைச் சொல்லலாம். அவர் காந்தியக் கோட்பாடுகளைக் கற்று செயலாற்றவந்தவர் அல்ல. தன்னைச்சுற்றி இருந்த சீரழிவுக்கு எதிராக இயல்பாக எதிர்வினையாற்ற ஆரம்பித்து அந்தச் செயல்பாடுகள் வழியாக காந்தியை நோக்கி வந்தவர். காந்தியை நிர்மாணத்திட்டங்கள் வழியாக கண்டடைந்தவர் அவர்.

இந்த கோணத்தில் பார்த்தால் மட்டுமே அண்ணா ஹசாரே என்ன சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ளமுடியும். அவர் ராலேகான் சித்திக்குச் சென்றபோது அது கள்ளச்சாராயத்துக்குப் புகழ்பெற்ற ஒரு கிராமமாக இருந்தது. அந்த கிராமத்தில் அவர் தன் தார்மீக ஆற்றல் ஒன்றைக்கொண்டே ஒரு மாற்றத்தை உருவாக்க முயன்றார். அவர் நூற்றாண்டுகள் பழமை உள்ள கிராமிய பஞ்சாயத்துமுறையை திருப்பி கொண்டுவந்தார். ஆனால் அந்த பஞ்சாயத்துமுறையில் இருந்துவந்த சாதிய மேலாதிக்கத்தை இல்லாமலாக்கினார். அதில் எல்லா சாதியினருக்கும் சம இடத்தையும் பங்களிப்பையும் உருவாக்கினார். அப்படி எல்லா சாதியினரும் பங்கெடுக்காமல் நிர்மாணத் திட்டங்களைச் செயலாக்க முடியாது என்ற உண்மையை அம்மக்களை நம்பவைத்து அதைச் சாதித்தார். ராலேகான் சித்திக்கு நேரில் சென்று நான் அதைக் கண்டிருக்கிறேன். அனேகமாக வட இந்தியாவில் கிராமிய அமைப்பில் தலித்துக்களுக்கு நேரடி அதிகாரப்பகிர்வு உள்ள ஒரே கிராமமும் அதுவே.

கிராமியப்பஞ்சாயத்து முறையைக் கொண்டு எப்படி சாராய மேலாதிக்கத்தை எதிர்த்தோம் என்றுதான் அண்ணா ஹசாரே சொல்கிறார். அவர் காந்திய வழிமுறைகளை கற்றுத்தேர்ந்து அவற்றை அமல்படுத்திப்பார்க்கும்பொருட்டு அங்கே சேவைக்குச் செல்லவில்லை. அந்த மக்களில் ஒருவராகவே சென்றார், செயலாற்றினார். அவர்களின் நம்பிக்கைகள் அவருக்கும் இருப்பது இயல்பே. கிராமியப்பொருளியலையே அழித்துக்கொண்டிருப்பது குடி என்பதை எந்த சமநிலையுள்ள மனிதரும் ஏற்பார்கள். அந்த சமூகத்தீமைக்கு எதிரான ஒரு சமூகவிலக்கை ,சமூகத்தண்டனையை உருவாக்க அவர் கிராமியப்பஞ்சாயத்து வழியாக முயன்றிருக்கக்கூடும்.

ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றன. அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியின் சர்வாதிகாரி அல்ல. அவர் தமிழ்சினிமாக்களில் வருவதுபோல சர்வ வல்லமைகொண்ட நிலக்கிழார் அல்ல. ஊர்க்கோயிலில் தங்கியிருக்கும் சமூகசேவகர் அவர். அந்த எளிமைமூலம் கிடைத்த தார்மீக அதிகாரமே அவருடையது. அவர் பேசுவது அவரது அதிகாரத்தைப்பற்றியல்ல, கிராமப்பஞ்சாயத்தின் அதிகாரத்தைப்பற்றித்தான்.

அண்ணா ஹசாரே அங்கே அரசியல்சார்ந்த தேர்தல்கள் நிகழவேண்டியதில்லை என நினைத்தமைக்கு அந்தக்கிராமம் சார்ந்த காரணங்கள் உண்டு. கட்சிமுறை தேர்தல் மூலம் கிராமத்துக்குள் பிளவு நிகழ்ந்தால் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்த பெரும் நிர்மாணப்பணிகள் பாதிக்கப்படும் என அவர் நினைத்தார். அவர் அங்கே கட்சியரசியலை தன் சொந்த அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்தவில்லை. கட்சியரசியல் தேவையில்லை என நினைத்தது அந்த கிராமப்பஞ்சாயத்துதான். அதற்குப்பதிலாக பேசி கூடி முடிவெடுத்து தலைமையை நிர்ணயிக்கும் பாரம்பரிய முறை அங்கே கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த முடிவு சரியா என்பதை அந்தச்சூழலை கணக்கில்கொண்டே தீர்மானிக்கமுடியும். அது அங்கே மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்கியது, நேர்மாறாக கட்சியரசியல் மூலம் கிராமப்பஞ்சாயத்துகள் அமைந்த நம் கிராமங்கள் ஊழலில் சிக்கி அழிகின்றன. தட்டிக்கேட்கக்கூட முடியாத அளவு கட்சி அரசியல் மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்பது யதார்த்தம். ஊடகங்கள் அவர் தன் சுயநலத்துக்காக கட்சியரசியலை தடைசெய்து வைத்திருந்தார் என்ற சித்திரத்தை உருவாக்குகின்றன. அவரது சாதனைகளும் அதை நிகழ்த்திய அர்ப்பணிப்பும் புறக்கணிக்கப்பட்டு அவரை கையில் பெல்ட்டுடன் ‘அஹ்ஹஹ்ஹா!’ என்று சிரித்துக்கொண்டு நிற்கும் ஒரு கிராமப்பண்ணையாராக காட்ட அவை முயல்கின்றன

அண்ணா ஹசாரே இந்த சேவையில் இருந்தது எண்பதுகளில். அப்போது அந்தக்கிராமத்துக்கு வெளியே அவருக்கு பார்வையோ நோக்கங்களோ இருந்ததில்லை. அவரது சாதனைகளை இந்திய காந்திய இயக்கமும் சூழியல் அமைப்புகளும் வெளியே கொண்டுசென்றபின்னரே அவர் அறியப்பட்டார். நான் ராலேகான் சித்திக்குச் சென்றது எண்பத்தேழில்.அப்போது கூட அவருக்கு ராலேகான் சித்திக்கு வெளியே எந்த இலக்கும் இல்லை என்றே தோன்றியது. ராலேகான் சித்தியில் அவர் சந்தித்த ஊழலையும் அரசு ஒடுக்குமுறையையும் ஒரு நேர்மையான சமூகப் போராளியாக அவர் எதிர்த்தார். அவ்வாறுதான் அவர் மகாராஷ்டிர அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் வந்து சேர்ந்தார்.

அண்ணா ஹசாரேவை ‘அப்பழுக்கற்ற’ காந்தியர் என்று எவரும் சித்தரித்ததாக நான் நினைக்கவில்லை. அவர் காந்தியத்தை நோக்கி நடைமுறை மூலம் நகர்ந்த ஒரு சமூகசேவகர். மட்டுமே. காந்தியம் என்பது ஒரு மதக்கொள்கை போல முழுமையும் தூய்மையும் கொண்டது அல்ல. அது ஒரு தரிசனம், அதற்கான நடைமுறை வழிகாட்டல் இரண்டும் கொண்டது. அந்த தரிசனத்தை நோக்கி அந்த நடைமுறை வழிகாட்டல் வழியாக ஒவ்வொரு காந்தியரும் தங்கள் அளவில் முன்னேறுகிறார்கள்.

காந்திய ’கோட்பாட்டுக்கு’ முழு விசுவாசமாக இருக்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? ஒன்றுமே செய்யாமல் காந்தியக்கோட்பாட்டை மட்டும் பேசிக்கொண்டிருக்கவேண்டும். நடைமுறையில் களத்தில் இறங்கி சேவைசெய்து விளைவுகளை அடையும் ஒருவர் அதை பலவாறாக விளக்கிக்கொண்டு சிலசமயம் விலகிக்கொண்டு அபூர்வமாக சிலவற்றை மறுத்துக்கொண்டு தான் செயல்பட முடியும். அண்ணா ஹசாரே அவரது கிராமத்தில் செய்த கிராமிய பொருளியல் மறுநிர்மாணமும் சரி, அவர் தேசிய அளவில் நிகழ்த்திவரும் ஊழலுக்கெதிரான போராட்டமும் சரி முழுக்கமுழுக்க காந்திய நோக்கில் அமைந்தவை என்பதனால்தான் அவர் காந்தியர் என்கிறோம்.

நம்முடைய நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள் எது அகிம்சை, எது தர்மம் என்பதில் ஐயமில்லாத தெளிவுடன் இருப்பது நிறைவளிக்கிறது. இத்தகையவர்களை ஸ்திதப்பிரதிக்ஞர்கள் என கீதை சொல்கிறது. கீதையைக் கேட்டும் அர்ஜுனன்கூட கடைசி வரை அந்நிலையை அடையவில்லை. காந்தியும்தான். காந்திக்கு கடைசிவரை எது அகிம்சை என்ற ஐயம் இருந்தது. முதல் உலகப்போரில் அவர் இந்தியர்கள் ராணுவத்தில் சேர்ந்து பிரிட்டிஷாருக்காக போராடவேண்டும் என அறைகூவல் விடுத்தார்.உலக அளவில் பிரிட்டிஷார் பெரும் தார்மீகசக்திகள், அவர்கள் தோற்கலாகாது என அவர் நினைத்தார். பிரிட்டிஷார் வென்றபின் இந்தியாவுக்கு மேலும் அதிக ஜனநாயக உரிமைகள் அளிப்பார்கள் என்றும் அதன்மூலம் இந்தியா ஒரு நவீன ஜனநாயக சமூகத்துக்கான பயிற்சியை பெறும் என்றும் நினைத்தார்

ஆனால் காந்தி பேசிவந்த அகிம்சைக்கு அது நேர் எதிரானது என்று காந்தியின் மாணவர்களிலேயே பலர் நினைத்தனர். அவர்களை பேசி நிறைவடையச்செய்ய அவரால் முடியவில்லை. என்னுடைய உள்ளுணர்வின்படிச் சொல்கிறேன் என்று நிறுத்திக்கொண்டார். போருக்கு ஆள் சேர்க்க பிரச்சாரநடவடிக்கைகளில் ஈடுபட்டு கிராமங்களுக்கு காந்தி சென்றபோது சாதாரண மக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார்கள். அவர் தன்னை அவர்கள் நம்பும்படி கோரினார். அவரது நேர்மைமீதும் ஆளுமை மீதும் இந்தியமக்களில் பெரும்பாலானவர்கள் கொண்ட நம்பிக்கையே அவரை பின்பற்றச் செய்தது, கோட்பாட்டுத்தெளிவு அல்ல

கடைசிவரை அந்த அறக்குழப்பம் அவருக்கிருந்தது. அதற்காகவே அவர் கீதையை மீண்டும்மீண்டும் வாசித்தார். ஏழை மக்கள் மதக்கலவரங்களில் கொல்லப்படும் இடங்களில் ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும் என அவர் கோரினார். அது அகிம்சைக்கு எதிரானது என அவர் நினைக்கவில்லை. ஆனால் அவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பியடிப்பதை தவிர்க்கவேண்டுமென சொன்னார். எதிரியை மன்னிப்பதையே அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதை அகிம்சைமார்க்கம் என்று விளக்கினார். அன்றும் இன்றும் அவரது அகிம்சை என்பது நடைமுறைத்தன்மைக்கும் இலட்சியவாதத்துக்கும் ஒரே சமயம் இடம்கொடுப்பதென்பதை அறிவுஜீவிகள் புரிந்துகொள்ளவில்லை.

காந்தியமென்பது ஒரு முழுமுற்றான கொள்கை அல்லது கோட்பாடு உள்ளதல்ல. தன்னுடைய காந்திய கிராமத்தில் கண்டிப்பாக மதுக்கடை வேண்டும் என்று சொன்ன லாரி பேக்கரும் காந்தியர்தான். முழுக்குடியரான லே வலேசாவை ‘போலந்து காந்தி’ என்றுதான் அவரது ஆதரவாளர்கள் சொன்னார்கள்.

காந்தியம் என்பது பல தளங்களில் புரிந்துகொள்ளத்தக்கது.

ஒன்று: காந்தியத்தின் சமூக நோக்கு. அதை அதிகாரப்பரவலாக்கம், மைய மறுப்பு, சிறிய அலகுகளில் முழுமையை அடைய முயலும்போக்கு, நுகர்வு மறுப்பு போன்ற அம்சங்கள் கொண்டது என வரையறை செய்யலாம்

இரண்டு, காந்திய அரசியல். பிரிவினைக்குப்பதில் ஒருமைப்பாட்டின் வழியை நாடுவது. சமரசம் வழியாக முன்னேற முயல்வது. அகிம்சைப்போராட்டம் மூலம் உரிமைகளை நோக்கிச் செல்வது

மூன்று: காந்திய தனிமனித அறம். அது தனிமனித நேர்மை, எளிமை, போக மறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இன்று காந்தியர்கள் என சொல்லப்படுபவர்களில் பலர் இவற்றில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடிக்க முயன்றவர்கள், அதில் வெற்றிகண்டவர்கள்தான். இ.எஃப்.ஷுமாக்கர் காந்தியவாதி. ஆனால் காந்தியின் முதல் கொள்கையை மட்டுமே கடைப்பிடித்தவர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் காந்தியவாதி. ஆனால் அவர் காந்தியில் இரண்டாம் வழியை மட்டுமே எடுத்துக்கொண்டார். வினோபா காந்தியில் மூன்றாம் அம்சத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார்

ஆகவே மார்ட்டின் லூதர்கிங்கின் தனிப்பட்ட ஒழுக்கத்தை வைத்து அவரை நிராகரிப்பது என்பது அபத்தமாகவே இருக்கும். காந்தியே காந்தியத்தை முழுமையாக வந்தடைந்தது மிகமிக கடைசியில்தான். ஆரம்பத்தில் காந்தி போர்களை ஆதரித்திருக்கிறார். அவர் அடைந்த உச்சத்தை அங்கிருந்து ஒருவர் ஆரம்பித்து முன்னால்செல்லவேண்டுமென எதிர்பார்ப்பதுபோல அசட்டுத்தனம் வேறில்லை.

அண்ணா ஹசாரே அவரது ஆளுமையின் எல்லைக்குள் காந்தியப்பொருளியலைநம்பி சாதித்துக்காட்டியிருக்கிறார். காந்தியின் தனிப்பட்ட ஒழுக்க நெறியை நம்புபவராக, தனிவாழ்க்கையில் அதில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார். காந்திய அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பவராக இருக்கிறார்.

காந்தியின் எல்லா வரிகளையும் முழுக்க ஏற்றுக்கொண்டு முழுமையாக காந்தியாக வாழ்ந்தால் மட்டும்தான் அவர் காந்தியர் என்பது இல்லை. அண்ணா காந்தியிடம் முரண்படும் இடங்கள் இருக்கலாம். உண்மையிலேயே சமூகச்சூழலில் ஓரளவு வன்முறை தேவை என அவர் நம்பலாம். அதை அவர் நடைமுறையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். காந்தியும் நடைமுறைவாதியாகவே இருந்தார்

காந்திய நோக்கில் அண்ணா ஹசாரேவின் அந்த நம்பிக்கை பிழையானது என நாம் வாதிடலாம்.அவரை அந்த அம்சத்தில் நிராகரிக்கலாம். ஆனால் அதைக்கொண்டு அவரை ஃபாசிஸ்டு என்றும், கோமாளி என்றும், முட்டாள் என்றும் காந்திக்கே எதிரானவர் என்றும் சித்தரிப்பது அப்பட்டமான அவதூறு. இந்தியாவில் நம் ஆங்கில ஊடகங்கள் என்றும் செய்து வருவது ஒரு ஆளுமைப்படுகொலை. காந்திக்கே அந்த விஷத்தைத்தான் அவர்கள் கொடுத்தார்கள்.

காந்தி முன்வைத்த கிராமசுயராஜ்யம் பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன். எனக்கு அதில் ஆழமான ஐயங்கள் உண்டு. என் ஐயங்களையும் பதிவுசெய்திருக்கிறேன். உலகப்பொதுவான பொருளியல்போக்குக்கு மாறாக ஒரு கிராமத்தில் அல்லது ஒரு வட்டாரத்தில் கிராமசுயராஜ்ய அமைப்புகளை உருவாக்க முடியாதென்றே நான் நினைக்கிறேன். அது நீடித்து நிற்காது. ஒருதலைமுறைக்காலம் நீடிக்கலாம் அவ்வளவுதான். அந்த கிராமம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் எதிராக போராடிக்கொண்டே இருக்கவேண்டும். எல்லா வாசல்களையும் சாற்றிக்கொண்டிருக்கவேண்டும். அது கிராமியக்கட்டுப்பாடுகள், ஊர்விலக்கம் போன்ற தண்டனைகள் மூலமே நீடிக்கமுடியும். அது ஒரு குறுங்கனவு மட்டுமே. ராலேகான் சித்திக்குச் சென்று வந்து மலையாளத்தில் நான் எழுதிய கட்டுரையிலேயே இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

காந்தியின் கிராமப்பஞ்சாயத்துமுறை மற்றும் கிராமசுயராஜ்ய பொருளியல் போன்றவற்றை இன்றையச் சூழலில் மிகவிரிவாக வளர்த்தெடுத்து நவீன வடிவுக்குக் கொண்டுவந்தாகவேண்டும். அதற்கு ஜெ.சி.குமரப்பா, இ.எஃப்.ஷுமாக்கர் போன்றவர்களின் வழியே உகந்தது என்பதே என் எண்ணம்.

நம்மிடம் இருவகை ஆட்களே இருக்கிறார்கள். ஒருதரப்பினர் அண்ணா ஹசாரேவை அஞ்சுபவர்கள். அவரை நிராகரிக்க ஏதேனும் ஒரு காரணம் போதும் அவர்களுக்கு. உடனே வசைகளையும், அவதூறுகளையும் ஆரம்பித்துவிடுவார்கள்.ஆனால் அவர்கள் நம்பும் தலைவர்களின் மலைபோன்ற பிழைகளை, நேர்மையின்மைகளை அவர்கள் நூறு நூறு சொற்களால் நியாயப்படுத்துவார்கள்

இன்னொருசாரார் நம்பிக்கைவாதிகள். அவர்களுக்குத் தேவை ஒரு தேவதூதன். எந்த குறையுமில்லாத முழுமனிதன். குறைகளுக்காக அவர்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். கண்டடைந்ததும் ஒரு நிம்மதி. ஆகா அவரும் அப்படிதான் என ஒரு எக்களிப்பு. இன்று காந்தியே வந்தாலும் கூட அவரில் குறைகள்தானே கண்டடையப்படும். காந்தியைப்பற்றி சொல்லப்படாத வசைகளா அண்ணாவைப்பற்றி வரப்போகின்றன?

நம்மிடையே இன்று இருப்பவர் காந்தியத்தை தன் சாத்தியங்களில், தன்னுடைய எல்லைகளில், தன்னுடைய நடைமுறைகளில் மேலெடுக்கமுனையும் ஒரு செயல்வீரர். ஆகவே காந்தியர். அவர் காந்தியைவிட பெரிய காந்தியோ, தேவதூதரோ அல்ல. அவரது நேர்மை இன்றுவரை இத்தனை அவதூறாளர்களால் வேட்டையாடப்பட்டும்கூட அப்பழுக்கற்றதாகவே இருக்கிறது. அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை விமர்சிக்கும் ஆசாமிகளை அரைமணி நேரம் ஆராய்ந்தாலே போதும், ஒருவாரம் பின் தொடர்ந்தாலே போதும், அவர்களின் அந்தரங்கம் அழுகிச்சொட்டுவதைக் காணலாம்.

இன்று நம் மக்களின் நாவாக அவர்களில் ஒருவர் உருவாகி வந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகத்தான பங்களிப்பு இன்றுள்ளது. நம்முடைய பொதுவாழ்க்கையில் தார்மீகத்தை அவர் வலியுறுத்துகிறார். நாம் சமரசம் செய்துகொண்ட பொதுஅறத்தை அவர் முன்வைக்கிறார். எந்த ஒரு அரசியல்கட்சிக்கும் அதைசெய்யும் தார்மீகத்தகுதி இன்றில்லை. அனைவருமே ஒருவகையில் அல்லது இன்னொரு வகையில் சமரசம் செய்துகொண்டவர்கள். அப்படி சமரசம் செய்துகொள்ளாமல் இங்கே தேர்தலரசியலை சந்திக்கமுடியாது. அதற்கு அப்பால் நிற்கும் அண்ணா போன்ற ஒருவராலேயே அதைச்செய்ய முடியும்

தேர்தலரசியலின் அனைத்து ஊழல்களிலும் ஊறிக்கிடக்கிறது நம் முதலாளித்துவ மேலாதிக்கம். அந்த முதலாளித்துவ மேலாதிக்கத்தாலேயே நம்முடைய ஊடகங்கள் நடத்தப்படுகின்றன.அந்த ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் அதிகாரத்தரகர்கள். அவர்களுக்கு எதிரான ஒரு சக்தி அண்ணா ஹசாரே என்பதனாலேயே அவரை அவர்கள் ஒழித்துக்கட்ட முயல்கிறார்கள். அதற்கு ஊடகதந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

நான் அரசியலியக்கமொன்றின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஓர் உண்மையை அறிந்து அதிர்ந்திருக்கிறேன். தமிழகத்தில் பல தொழிலதிபர்கள் நக்சலைட்பாணி அமைப்புகளின் தொழிற்சங்கங்களுக்கு நிதியுதவி அளித்து வளர்ப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உண்மையான எதிரி இடதுவலது கம்யூனிஸ்டுக்கட்சிகளின் சங்கங்களே. அந்தச்சங்கங்களை வசைபாடி அவதூறு செய்து பலவீனப்படுத்த இந்த தீவிர இடதுசாரிகள் உதவுவார்கள். இவர்கள் எப்போதுமே எண்ணிக்கைபலம் அடையமாட்டார்கள் என்பதனால் இவர்களால் பயமில்லை.

இதையே இந்திய முதலாளித்துவம் செய்கிறது. உண்மையான அபாயம் அண்ணா ஹசாரே போன்ற மக்களாதரவுள்ள போராளிகள்தான். அவர்களை மக்களாதரவை திரட்டமுடியாத ’அதிதீவிர’ ஆசாமிகளைக்கொண்டு அவதூறு செய்து ஒழிக்கமுடியும். இந்த காகிதப்புலிகள் ஒரு போதும் மக்களை திரட்டமுடியாது. அந்த ’அதிதீவிர’க்குரல்களையே நாம் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இன்னொரு தரப்பு, ஆயிரம் நியாயங்களை வெளியே பேசும்போது அப்பட்டமான மதவெறியை, மானுடவிரோத போக்கை உள்ளே ஒளித்துவைத்திருப்பவர்கள். அவர்களையும் நம் ஊடகங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவுக்கு அண்ணா ஹசாரே ஒரு மாபெரும் வாய்ப்பு. ஒரு வரலாற்றுத்தருணம். அதை இந்தியா வெல்லவேண்டுமா இல்லை ஜெயப்பிரகாஷ் நாராயணனை இழந்ததுபோல இழக்க வேண்டுமா என்பது அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்விகளில் ஒன்று. நம் மனசாட்சியுடன் அந்தரங்கமாக நம்மால் பேசமுடிந்தால்தான் அதற்கான பதிலை நாம் சொல்லமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த முகம்?
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்