கெ.பாலமுருகன்

 

வணக்கம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே.

 

    நான் கே.பாலமுருகன் (மலேசியா). ஆயிரம்கால மண்டபங்களில் தொலைந்த என்ன இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். “சித்தி குட்டியுடன்எங்கோ ஒரு மண்டபத்தின் சிலைகளில் நானும் புதைந்து போயிருக்கக்கூடும் போல. வெள்ளம் போல ஆழ் கடலின் மௌனத்தைப் போல, எங்கோ ஓர் இடத்தில் தங்களின் அந்தக் கதைகள் எனக்குள் ஆழ்ந்து கிடக்கின்றன சில புதிர்களுடன். மறுவாசிப்பும் ஆழ்ந்த சிந்தனையும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

 

   சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் என் கதைக்கு பரிசு கிடைத்துள்ளது. ஆனால் வர இயலாத சூழ்நிலை. தொடர்ந்து 5 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அண்மைய எனது நாவலானநகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் மலேசிய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றது. இந்திய இதழ்களான யுகமாயினி, உயிரெழுத்து, வார்த்தை போன்ற இதழ்களில் என் படைப்புகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தங்களின் வலைத்தளத்தை ஆர்வமாகப் படித்து வருகிறேன்.

பதிலிட வேண்டுகிறேன்.

 

கே.பாலமுருகன்

மலேசியா

 

 

 

அன்புள்ள பாலமுருகன்

 

தாமதத்துக்கு மன்னிக்கவும். நலமாக இருக்கிறீர்களா?

 

நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். மலேசியாவில் நீங்களும் சிங்கப்பூரில் இந்திரஜித்தும் சமீபத்தில் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களாக உருப்பெற்று வருகிறீர்கள். மிக மகிழ்ச்சியான விஷயம் இது. உங்கள் கதைகள் சிலவற்றை இணையத்திலும் இதழ்களிலும் வாசித்தேன். பொதுவாக ஒருவரை அவரது கதைகளை நூல்வடிவில் வந்தபின்னர்தான் ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு  ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக இந்திரஜித்தின் கதைகளை நான் உயிர்மை வெளியீடாக அவ்ந்த தொகுப்பில் முழுமையாக வாசித்தபோது ஒரு கணிப்பு உருவானது.

 

ஆனால் முதல் சிறுகதைத்தொகுதியைக் கவனமாகவே கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தது ஐந்து வேறுபட்ட நல்ல கதைகள் இல்லாமல் வந்தால் சிறுகதைத்தொகுதி கவனிப்பற்றுப் போய்விட வாய்ப்புண்டு. ஒருமுறை பிடிக்காமல் போன எழுத்தாளரை தமிழ் வாசகர்கள் மறுபடியும் வாசிக்க பல வருடங்கள் ஆகும். முதல் சிறுகதைத்தொகுதியே பேசப்படுவது அவசியம்

 

இப்போதைக்கு உங்கள் கதைகளின் பலம் பலவீனம் இரண்டைப்பற்றிய முதல் மதிப்பீட்டைச் சொல்லிவிடுகிறேன். பலம், வித்தியாசமான கருக்கள். வெறுமே கூறுமுறைகளில் விளையாட்டுகளைச் செய்யாமல் கூறும் விஷயங்கள் சார்ந்து முன்னகர நினைக்கிறீர்கள். இத்தகைய அம்சம் கொண்ட எழுத்தாளர்கள் விரைவிலேயே தங்கள் தனித்த கூறுமுறையையும் கண்டுகொள்வார்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் கருக்கள் உங்களை தத்துவம், அரசியல், சமூகவியல்,அறிவியல் என பல தளங்களுக்குக் கொண்டு சென்று அலைக்கழிக்கும். அதன் மூலம் நீங்கள் புதிதாக எழுத வேண்டிய நிலை உருவாகும்.

 

இன்று உங்கள் கதைகளின் முக்கியமான குறைபாடு சித்தரிப்பு , உரையாடல் இரண்டிலும் உள்ள பயிற்சிக் குறைவுதான். பயிற்சிக்குறைவு இருக்கும்போது நிகழும் முதல் பிரச்சினை , வழக்கமான சொற்றொடர்கள் வந்து விழுவது. ஒரு கதையை எழுதியபின் ஆரம்பநாட்களில் அதில் உள்ள பழகிப்போன அம்சங்கள் என்னென்ன என்பதை கூர்ந்து நோக்கி பொறுக்கி வீசுவதுதான். ஒருமுறை அப்படி பொறுக்கி வீசியவை திரும்ப நிகழ்வதில்லை என்பது இலக்கிய ஆக்கத்தின் ரகசியங்களில் முக்கியமானது. டாக்டர் அந்த மனசனோட இறப்புக்கு என்ன சொல்லப் போறீங்க? அவரோட உடம்புகிட்ட உக்காந்து ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களே?”

 

என்ற சொற்றொடரைக் கவனியுங்கள். [மனித நகர்வும் இரண்டாவது பிளவும்]  எத்தனை சர்வ சாதாரணமான சொற்றொடர்.  அத்தகைய சொற்றொடர்கள் வணிகக்கதைகளுக்கே உரியவை. அது இல்லாமல் அந்த இடத்தைச் சொல்லிவிட முடியாதா என்ன? அப்படி சொல்வதற்கான வழிகளையே உங்கள் மனம் நாடவேண்டும்.

 

அதேபோல வடிவ அமைப்பில் எப்போதும் புதிய சாத்தியங்களுக்கான கவனம் தேவை. அது எழுதுவதன் ஆரம்பகால பயிற்சிகளில் முக்கியமானது. இதை அழுத்துதல்என்று சொல்வேன். கதையை ஓர் அழுத்து அழுத்தி எத்தனை குறைவான இடத்துக்குள் அது இருக்க முடியுமோ அபப்டி இருக்கச் செய்வது. செறிவாக்கம். அதை தமிழில் சுஜாதாவில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

 

நான் மனித நகர்வும் இரண்டாவது பிளவும் கதையை எழுதியிருந்தால்  எனக்கு முன் நின்றிருந்த அந்த வழிபோக்கன் ஒரே சமயங்களில் இரு வேறு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒன்று: என்னிடம் அவர் வீட்டைக் காட்டிக் கொண்டிருந்தான், மற்றொன்று அவனேதான் வேறு எங்கோ நடக்கத் தொடங்கினான். இரண்டு பிளவுகளாக அவனின் முகம் சிதைந்திருந்தது. கடவுளை நினைத்துக் கொண்டு, நேராக அவர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்

 

என்ற வரியில் கதையை ஆரம்பித்திருப்பேன். அதில் உள்ள கவன ஈர்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவன் போகும்வழியிலேயே அவன் உளநிலையைச் சொல்லி மனதத்துவ நிபுணர் அறைக்குள் கதையை கொண்டுசென்றிருப்பேன்.

 

கடைசியாக கதையை ஒரு ஒற்றைப்பரப்பாக -மொசைக் என்று சொல்லலாமா?– ஆக்கும் பயிற்சி. கதையின் ஓட்டத்தில் பொம்மலாட்டத்தில் ஆட்டக்காரன் கை தெரிவதுபோல ஆசிரியன் தெரியக்கூடாது. உங்கள் இக்கதையில் கதை நான்இல் இருந்து மருத்துவருக்குத் தாவும் இடம் அப்படிப்பட்டது. புனைவின் ஏதேனும் உத்தியைக் கொண்டு அதை இணைத்திருக்கலாம்.

 

இதெல்லாமே எழுதி எழுதி வரும் தேர்ச்சிகள் மட்டுமே. நம்கதையை நாமே வாசித்து வாசித்து குறைகண்டுபிடிப்பதன் வழியாக விவாதங்கள் வழியாக தாண்டிச்செல்லக் கூடியவை. தொடர்ச்சியாக எழுதுங்கள்.

 

அன்புடன்

 

ஜெ

 

அன்பின் ஜெயமோகன்

 

மார்ச் 09 உயிரெழுத்தில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம் என்னும் சிறுகதையை நீங்கள் வாசித்திருப்பீர்களா என்பது தெரியவில்லை. அந்த கதை படித்த போது எனக்கு உங்களின் மலம் (தலைப்பு சரியா என்பது தெரியவில்லை) கதை (சிறுகதையா குறுநாவலா என்பதையும் மறந்துவிட்டேன்) ஞாபகத்திற்கு வந்தது ஆசிரமபிண்ணனியில் மலம் கழிக்கும் பேஸினை சுத்தம் செய்ய அதனை தொடர்சியாக ஒருவர் அசுத்தபடுத்தியபடியே இருப்பார் அந்த கதையை படித்து முடித்தபோது என் உடலெங்கும் மலத்தின் வாசனை ஒட்டிக்கொண்டிருப்பதுபோன்ற பிரமை.

 

கே.பாலமுருகனின் சிறுகதையை இணைத்துள்ளேன். படித்துப்பாருங்கள் சமீபகாலமாக இவர் நிறைய சிறுகதைகள் எழுதிவருகிறார். இவர் எனது நண்பரும்கூட. இவரின் கதையை படித்த்தும் தொடர்புகொண்டு உங்களின் மலம் கதையை வாசித்த்துண்டா என்று கேட்டேன். இன்னும் வாசிக்கவில்லை என்றார்.

 

பாண்டித்துரை

 

 

 

அன்புள்ள பாண்டித்துரை அவர்களுக்கு

 

அந்தக்கதையை நான் ஏற்கனவே படித்திருந்தேன். இப்போது நீங்கள் குறிப்பிட்டமையால் மீண்டும் படித்தேன். கவனத்துக்குரிய கதைதான். மனிதநிலை என்பதன்மேல் கரிசனம் உள்ள கலைஞனுக்கு மனிதர்களின் எதுவுமே அருவருப்பும் வெறுப்பும் உருவாக்குவதல்ல என்பதே என் எண்ணம். என்னுடைய மலம் கதை தத்துவார்த்தமாக மும்மலம் என்னும் கருத்தை தொட்டுச்செல்கிறது. நீக்க நீக்க நீங்காத அழுக்கு– பின்னர் நீக்குவதையே ஒரு கொண்டாட்டமாக ஆக்கி தனக்குள் ஈர்த்துக்கொள்ளும் அழுக்கு…. பாலமுருகனின் இக்கதை மனித இஉப்பின் அவலத்தை மலத்தை ஒரு குறியீடாக்கி ஆராய்கிரது. அந்தச்சூழலும் அங்குள்ள மனிதர்களும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். நெருக்கமன பட்டிகளில் மனிதர்கள் மிருகங்கள் போல வாழும் ஒரு சித்திரம் எழுகிறது

 

இக்கதைக்குச் சமானமான கதை என்பது அசோகமித்திரன் எழுதிய தனியொருவனுக்கு…  . ஒரு வயோதிகரின் சிறுநீர்கழிப்பிடச்சிக்கல்களை மென்மையாகச் சொல்லும் வலுவான கதை அது. பெருநகரில் பட்டிகளில் வாழும் மனிதர்கள்

 

ஜெ

 

 

 

 

http://bala-balamurugan.blogspot.com

http://pandiidurai.wordpress.com/

 

முந்தைய கட்டுரைஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைபேரா.நா.தர்மராஜன், கடிதங்கள்