அள்ளிப் பதுக்கும் பண்பாடு

வணக்கம் ஜெயமோகன்,   

நம் கலாச்சாரம் குறித்த சில கேள்விகள்! மதிப்பிற்குரிய ஜெயமோகன், நான் தங்களின் இரண்டாம் நாவலான கன்னியாகுமரி வெளி வந்த பொழுதுகளிலிருந்து தங்கள் எழுத்தை வாசித்து வருகிறேன் (எட்டு வருடங்கள் இருக்குமா?).உங்களை நான் இதுவரை தொடர்பு கொண்டது இல்லையே தவிர, நான் அணுக்கமாக உணரும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். அதனாலேயே இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது குறித்து சொல்வதற்கு முன் நான் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. அடிப்படையில் நான் ஒரு ஓவியன்.நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டதின் ஒரத்தநாடு என்னும் ஒரு சிற்றூரில் (அருண்மொழியின் சொந்த ஊரான பட்டுகோட்டைக்குப் போகும் வழியில் பார்த்து இருப்பீர்கள்) வணிக குலத்தில். எப்படியோ அந்த குலத்திற்கு உள்ள எந்த ஒரு குணமும் இன்றி தப்பித்து வந்து விட்டேன்.

இப்படி சொல்ல காரணங்கள் உள்ளன. என்னுடைய உறவினர்களில், அவர்கள் சார்ந்த மக்களைப் பொறுத்த வரையில் படிப்பு என்றால் பொறியியல் அல்லது மருத்துவம் மட்டுமே. பணம் சம்பாதிக்க உதவாத எது ஒன்றுமே வீண்தான்.முதல் முறை என்னுடைய ஓவியம் ஒன்று தேசிய அளவிலான கண்காட்சியில் இடம் பெற்ற பொழுது என்னிடம் அவர்கள் கேட்ட முதல் கேள்வி அதற்கு எவ்வளவு பணம் தந்தார்கள் என்பதுதான். நல்லவேளையாக படிக்கச் சென்ற பினà! ��பு நான் எப்போதும் அந்த சூழ்நிலையில் இருந்து தனித்து இருந்து கொண்டதால், நான் என் இயல்பை தொலைக்காமல் தப்பித்தேன்.நிற்க. நான் தற்போது அனிமேஷன் துறையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெங்களூரில் பணி புரிந்து வருகிறேன்.

இந்த நிறுவனத்தில் பணி புரியும் சக கலைஞர்கள் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வந்தவர்கள்.(அவர்களில் சிலர் ஆஸ்கார் முதல் உலகின் தலை சிறந்த விருதுகளை வென்ற உன்னதமான கலைஞர்கள்.) ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் நுழையும் பொழுதும் மிகவும் ஆசீர்வதிகப்பட்டவனாகவே உணர்கின்றேன். ஒருவர் வயலினை வசித்து கொண்டிருப்பார். ஒருவர் விளைய்டிகொண்டிருக்க, மற்றவர் ஆப்பிரிக்க காட்டு வாத்தியத்தை வாசிக்க அலுவலகம் ஒரு கலைக்கூடம் போல இருக்கிறது.

நான் பலமுறை வியந்திருக்கிறேன்.எப்படி இவ்விதம் இவர்கள் இருக்கிறார்கள் என்று.அவர்களில் பலர் வருட கணக்கில் இசைப் பயிற்சி பெற்றவர்கள்.இசை தவிர நடனம், புகைப்படம் என மற்ற கலைகளில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.வாழ்கையை கொண்டாடுவது என்பத! ு அà ��ர்களிடமிருந்து நம் கற்று கொள்ள வேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது.

சமீபத்தில் என்னுடைய வீட்டில் எனக்கு திருமண பேச்சை ஆரம்பித்த பொழுது நான் கேட்டுக்கொண்டது இது மட்டுமே. பெண் ஏதேனும் ஒரு கலையில் தேர்ச்சி பெற்றவராய் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது.ஆனால் பின்பு தெரிய வந்தது அதிர்ச்சியாக இருந்தது,எவரோருவரையுமே கண்டு பிடிக்க இயலவில்லை. நாங்கள் கண்டடைந்தவர்கள் அனைவரும் நன்கு படித்து இருக்கிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.என்றாலும் வேலையை தவிர எது ஒன்றிலும் ஆர்வமே இல்லாதவர்களையே (நான் எந்த ஒரு குறிபிட்ட இனத்திலும் கூட தனியாக தேட வில்லை.) இசையில் தேர்ச்சி பெற்ற சிலரை பார்க்க முடிந்தது என்றாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களாகவே இருக்கக் கண்டேன்.( கலப்பு திருமணத்திற்கு நாம் தயாராக இருந்தாலும் அவர்கள் இருப்பது இல்லை என்பது வேறு கதை.)

தங்களுடைய சங்க சித்திரங்களில் நீங்கள் விவரித்திருந்த நுட்பமான கவிதா தருணங்களை கலையாக்கிய ஒரு மரபு இன்று வெறும் தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று பொருள் ஈட்டும் எந்திரங்களை உருவாக்கும் கலாச்சாரமாக மாறியது போல தோன்றுகிறது. இந்த மாற்றம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்ததா? இல்லை நம் மரபு எபொழுதும் இப்படித்தான் இருந்தே வந்திருக்கிறதா? (பொருளாதாரம் மட்டுமே சார்ந்த ஒன்றாக) எனில் இந்த மகத்தான படைப்புகள் எவ்விதம் உருவாகி வந்திருக்கக் கூடும்? அந்த கலைஞர்கள் தங்கள் வாழ்நாளின் பொழுதுகளில் விளிம்பு நிலை மனிதர்களை போலவே நடத்த பட்டிருப்பார்களா என்ன?

நான் வெகு நாட்களாக நினைத்துக் கொண்டதுண்டு. நம்முடைய கலாச்சாரமே மிக நுட்பமானதும் மேலானதும் என்றும், மேற்கத்திய கலாச்சாரம் வெறும் மேலோட்டமானதும், முற்றிலும் வணிகம் சார்ந்த, புற வயமானதும் என்றும். அனால் இப்பொது நான் உணர்வது முற்றிலும் நேர் எதிராய்.இது வெறும் மேலோட்டமான புரிதல் தானா? அல்லது உண்மை தானா? பொருளீட்டுவதை தவிர வேறு உன்னதங்கள் எதையுமே அறியாத வாழ்கையை வாழ நேர்வது எவ்வளவு பெரிய கொடுமை? அதை எப்படி ஒரு சமூகமே ஒரு வாழ்க்கை முறையாக்கிக் கொண்டிருக்கிறது? இப்படி உருவாக்கப்படும் ஒரு தலைமுறை நாளை தங்கள் சந்ததியினரை எப்படி உருவாக்கும்? இதை விடவும் மேலதிகமாய் பொருள் சார்ந்த தலை முறையையா?

மிக நீண்ட கடிதத்திற்கு மன்னிக்கவும்.

 

– ஏ.வி.மணிகண்டன்

www.livingincolours.bl ogspot.com

அன்புள்ள மணிகண்டன்,

உங்கள் கடிதம் கிடைத்து நெடுநாட்கள் ஆகின்றன. நான் உடனடியாக பதிலளிக்காமைக்குக் காரணம் நான் அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர்கள் சிலரிடம் அதைப்பற்றி அவர்களின் கருத்துக்களைக் கேட்டு விவாதித்தேன். என் எண்ணங்களை ஒருவாறாக தொகுத்துக்கோண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இதெல்லாம் ஊகங்களும் அனுமானங்களும் மட்டுமே. கோட்பாடாகச் சொல்ல வெகுதூரம் செல்லவேண்டும்.

தரையில் கிடக்கும் ஒரு கூழாங்கல் எப்படி உருவாகிறது? ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு வடிவம். ஒவ்வொரு நிறம். அந்தக்கூழாங்கல்லின் ரசாயனக்கட்டமைப்புக்கும் அந்தச்சூழலில் பெய்த மழை, அடித்த வெயில், வீசிய காற்று போன்ற பலநூறு இயறகைச்சக்திகளுக்கும் நடுவே உள்ள ஒரு சமநிலைப்புள்ளியே அந்த வடிவம்.

கூழாங்கற்களின் தணித்த ரசாயங்னகள் அவற்றின் தனியமைப்பை உருவாக்குகின்றன என்றால் அபப்குதியின் இயற்கையே அங்குள்ள கூழாங்கற்களின் பொது அமைப்பை உருவாக்குகின்றது. அங்கேதான் நாம் பொதுவிதிகளை பொதுவான காரணங்களைத் தேடமுடியும். சமூகத்தின் பொதுப்பண்புகளையும் அவ்வாறே வரலாற்றில் தேடுவதே உசிதமானது என்று தோன்றுகிறது.

வரலாற்றில் நம் சமூகம் எத்தகையதாக இருந்திருக்கிறது? நெடுநாட்களுக்கு முன்னர் மலையாளச் சிந்தனையாளரான பேரா.எம்.கங்காதரன் என்னிடம் கேட்டார். உலகின் மிக அழகான சிற்பங்கள் இருக்கும் பகுதிகளில் ஒன்று தமிழகம்.  ஆனால் உலகின் மிகக்கேவலமான சிலைகளை முச்சந்திதோறும் செய்து நிறுத்தியிருப்பதும் தமிழகமே. ஏன் இந்த முரண்பாடு?

இதை இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு என்றே என் மனம் எடுத்துக்கொள்கிறது. நம்முடைய தொன்மையான பண்பாட்டுச்சிறப்பையும் இன்றைய நிலையையும் பற்றிய விவாதத்துக்கு முன்னர் நாம் பொதுவாக பண்பாட்டுமேன்மை என்ற விஷயத்தை ஒரு விவாத வசதிக்காக மூன்றாகப் பிரித்துப் பார்ப்பது அவசியம். இல்லையேல் தவறான ஒப்புமைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம். பொதுவாக பேசுபவர்கள் நம்முடைய கிராமியப் பண்பாட்டையும் ஐரோப்பிய நவீனப்பண்பாட்டையும் ஒப்பிடுவது போல.

பண்பாடுகளின் இயல்புகளை வைத்து அப்பிரிவினையை நிகழ்த்தலாம். ஒன்று தொன்மையான பழங்குடிப்பண்பாடு. அதன் நீட்சியான நாட்டார்-கிராமியப்பண்பாடு. இதை ஒட்டுமொத்தமாக குடிப்பண்பாடு என்று சொல்லலாம். நம்முடைய கிராமங்களில் உள்ள பல பண்பாட்டுக்கூறுகள் இத்தகையவையே. விருந்தோம்புதல், சகோதரத்துவம், சமத்துவம், உதவும் மனநிலை, இயற்கையுடனான உறவு, பல்வேறு வகையிலான கலைகள், கொண்டாட்டங்கள், தொல்படிமங்கள், வழிபாட்டுமுறைகள் போன்றவை இதன் கூறுகள்.

‘நாகரீகம்’ இல்லாதவர்கள் என்று சொல்லபப்டும் பழங்குடியினர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய பண்பாட்டுச்செழிப்புடன் இருப்பதைக் காணலாம். பழங்குடியினரை பண்பாடு இல்லாதவர்கள் என்று சொல்லும் குறைத்தல்வாத நோக்கு கொண்டவர்கள் அவர்களின் பண்பாட்டை நவீனப்பண்பாட்டுடன் பொருந்தாமுறையில் ஒப்பிடுபவர்கள். அதேபோல கற்பனாவாத நோக்குடன் பழங்குடிப்பண்பாட்டை விதந்தோதி நவீனப்பண்பாட்டை நிராகரிப்பவர்கள் நவீனகாலத்தை சரியாகப்புரிந்துகொள்ளாதவர்கள். இரண்டுமே வேறு வேறாவை

குடிப்பண்பாட்டில் இருந்து கிளைத்து பல்வேறு புறப்பாதிப்புகளை ஏற்று தன்னை விரிவாக்கம் செய்துகொண்டு பேருருவம் கொண்ட பண்பாட்டை செவ்வியல் பண்பாடு எனலாம். செவ்வியல்பண்பாட்டுக்குத்தான் பேரிலக்கியங்களையும் கலைகளையும் உயர்தத்துவங்களையும் பெருமதங்களையும் உருவாக்கும் தன்மை உண்டு. அது ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் உச்சகட்டம்.

மூன்றாவது காலகட்டமே நவீன காலகட்டம். நவீன காலகட்டம் கடந்த முந்நூறு வருடங்களுக்குள் உருவாகிவந்த ஒன்று. தேசங்களும் பண்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உரையாடி உலகளாவிய நோக்கு ஒன்று உருவாவதன் விளைவு என அதைச் சொல்லலாம். முதன்முதலில் அந்த நவீன நோக்கு ஐரோப்பாவில் உருவானது. ஐரோப்பிய நாடுகளுக்குள் உருவான உறவுகள் மூலமே பூமியில் முதல் உலகளாவல் என்னும் போக்கு தொடங்கியது. அதுவே நவீனமயமாதலின் முதல் எழுச்சி. அதையே நாம் ஐரோப்பிய மறுமலர்ச்சி என்று சொல்கிறோம்.

தமிழ்ப்பண்பாட்டை எடுத்துக்கொண்டால் நமக்கு மிகத்தொன்மையானதும் இன்றும் நீடிக்கக் கூடியதுமான ஒரு சிறந்த குடிப்பண்பாடு உள்ளது. நம் குடிப்பண்பாட்டின் வேர் ஆதிச்சநல்லூரின் தாழிகளின் காலகட்டத்துக்கு, இன்றைக்கு ஏழாயிரம் எட்டாயிரம் வருடத்தொன்மைக்குச் செல்கிறது. நம் ஆசாரங்கள் நம் நம்பிக்கைகள் நம்முடைய மதத்தின் வேர்கள் அந்த ஆழத்தில் இருந்து எழுந்தவை.

அடுத்தகட்டமாக நமக்கு ஒரு பெரும் செவ்வியல் பாரம்பரியம் உள்ளது. கம்பராமாயணத்தையும் தஞ்சைபெரியகோயிலையும் எல்லாம் உருவாக்கிய செவ்வியல். இலக்கியம், இசை, ஓவியம், மருத்துவம்,சிற்பக்கலை, சண்டைப்பயிற்சி, தத்துவம், மதம் என எல்லா தளங்களிலும் நாம் பெருமிதம் கொள்ளும் சாதனைகளை அக்காலகட்டம் உருவாக்கியது. அதில் நாம் சீன,கிரேக்க, ரோமப் பண்பாடுகளுடன் மட்டுமே நம்மை ஒப்பிட்டுக்கொள்ள முடியும்.

மூன்றாவதான நவீனப்பண்பாடு நமக்கு உருவாகி வருவதற்கு பலநூறு ஆண்டுகள் தாம்தம் ஏற்பட்டது. இன்னும் அந்த உருவாக்கம் வலுப்பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த அம்சத்தில்தான் நாம் மேலைநாட்டினருடன் ஒப்பிடும்போது மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். இதையே நீங்களும் உங்கள் கடிதத்தில் சொல்கிறீர்கள்.

நவீனப்பண்பாட்டின் அடிப்படைகள் சில உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாக ‘குடிமை உணர்ச்சி'[சிவிக் சென்ஸ்] என்று சொல்லலாம். பல்வேறு இனக்குழுக்களாக பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பின்னர் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அவர்கள் நாடுகளாகவும் குறுநாடுகளாகவும் தொகுக்கப்பட்டார்கள். அவர்களை நவீன சமூகங்களாக ஆக்கியது நவீனமயமாதல்தான். [நவீனமயமாதலை மார்க்ஸிய கோணத்தில் முதலியமயமாதல் என்று சொல்லவேண்டும்] ஆகவே நவீனமயமாதலின் மிகப்பெரிய ஆக்கம் என்பது குடிமை உணர்வுதான்

பொதுக்கல்வி, பொதுவான போக்குவரத்துவசதி, பெருந்தொழில் உற்பத்தி , வெகுமக்களுக்கும் அதிகாரத்தில் பங்களிப்பு போன்றவற்றின் விளைவாக உருவானது என்று குடிமை உணர்வை குறிப்பிடலாம். மானுடசமத்துவம் சார்ந்த நீதியுணர்வு, ஜனநாயக உணர்வு, தனிமனித உரிமைகள், பொதுத்தளத்தில் நேர்மை, அறிவியல் நோக்கு போன்றவை அதன் அடிப்படைக் குணாம்சங்கள்.

நவீனமயமான ஐரோப்பா அடைந்தது அந்தக் குடிமையுணர்வைத்தான். ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பது இருகட்டங்கள் கொண்டது. ஐரோப்பா ஒன்றாக தன்னை உணர்ந்தது அதன் முதல்கட்டம். ஐரோப்பியக்கலைகளும் சிந்தனைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. சிந்தனைக்கொந்தளிப்பு உருவானது. தேசம், மக்கள், உரிமைகள் ஆகியவை குறித்த நவீன சிந்தனைகள் உருவாயின.

அடுத்த கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் உலகை காலனியாக்க ஆரம்பித்தன. காலனி நாடுகளில் இருந்து கலைகளும் சிந்தனையும் ஐரோப்பாவுக்கு வந்து குவிந்தன. செலவமும்தான். ஆகவே அவர்களுக்கு ‘உலகம்’ என்னும் ஒரு அகச்சித்திரம் உருவானது. உலக இலக்கியம் , உலகக் கலை, உலகசிந்தனை என்று. அது நவீனமயமாதலின் உத்வேகமான அடுத்த தளம்.

இவ்விரு தளத்திலும் ஐரோப்பா பெரும் கலைஞர்களை, எழுத்தாளர்களை, தத்துவமேதைகளை,அறிவியலாளர்களை, அரசியல்சித்தாந்திகளை உருவாக்கியது. அவர்களே நவீனமயத்தின் சிற்பிகள். மொஸார்த், கதே, ஹெகல், நியூடன், வால்ட்டேர் ஆகியோருக்கு ஐரோப்பிய மறுமலர்ச்சியில் உள்ள பங்கினைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன.

நம் நாட்டில் நவீன காலகட்டம் ஐரோப்பியர்களால் கோண்டுவரபப்ட்டது. அவர்கள் இங்கே கொண்டுவந்த கல்வி, போக்குவரத்து, நீதி, நிர்வாகம் ஆகியவற்றில் இருந்து மெல்லமெல்ல அது இங்கே பிறந்து வேருன்றியது. அந்த நவீனமயமாதலுக்கும் நம்முடைய செழுமையான குடிப்பண்பாட்டுக்கும் செவ்வியல் பண்பாட்டுக்கும் இடையேயான மோதலையும் இணைப்பையுமே நாம் நம் கலையிலக்கியங்களில் காண்கிற்றோம்

ஆனால் இங்கே இன்னும் நவீனமயமாதல் போதிய அளவு உருவாகவில்லை. பாரதி, அ.மாதவையா, அயோத்திதாச பண்டிதர், ஈ.வே.ரா போன்றவர்கள் அனைவருமே நவீனமயமாதலை முன்வைத்த முன்னோடிகள்தான். ஆனால் அது நம் சமுகத்தின் தேவைக்குப் போதுமானதாக இல்லை. ஏனென்றால் இது ஆழ வேரூன்றிய தொன்மையான சமூகம். அத்தனை எளிதில் இது தன்னை மாற்றிக்கொள்ளாது.

ஆகவே நமக்கு இன்னும் குடிமை உணர்வே உருவாகவில்லை. நமக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடே இதுதான். சமத்துவ நீதி, ஜனநாயக நெறிகள், பொதுநேர்மை போன்றவற்றில் நாம் மிகமிகப் பின்தங்கியிருக்கிறோம் என்பது கண்கூடு. ஆனால் அதற்காக நாம் இழிவானவர்கள் என்றோ குறைவானவர்கள் என்றோ சொல்ல முடியாது. ஐரோப்பிய மறுமலர்ச்சி என்பது முந்நூறுவருடம் நடந்த ஒன்று. நம் அந்தப்பாதையில் முக்கால்நூற்றாண்டாகவே முன்னால்சென்றுகொண்டிருக்கிறோம்.

ஆம், நாம் முன்னால்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். நம் சமூகத்தில் உருவாகிவரும் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள், உரிமைக்குரல்கள் எல்லாம் அதையே காட்டுகின்றன. எத்தனையோ நூற்றாண்டுகளாக கவனிக்கப்படாமல் கிடந்த சமூகங்களெல்லாம் தங்கள் உரிமைக்குரலை எழுப்புவதும் அதற்கான வெளியை அளிக்கும் ஓர் அரசியல் இங்கே இருப்பதும் நாம் ஜனநாயகத்தின் பாதையில் முன்னேறுகிறோம் என்பதற்கான சான்றுகள்.

நாம் பின் தங்கியமைக்கு முக்கியமான வரலாற்றுக் காரணங்கள் சில உண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் உறுதியான அரசுகள் மெல்லமெல்ல சிதைந்தன. வட இந்தியா தொடர்ச்சியான படையெடுப்புகளைச் சந்தித்தது. அதன் விளைவுகள் தென்னிந்தியாவை பாதித்தன. பதினாறு பதினேழு பதினெண்டாம் நூற்றாண்டுகள் அராஜகத்தின் காலகட்டம். அரசியல் அராஜகம் பெரும் பஞ்சங்களை உருவாக்கும். இந்திய மக்கள் வறுமையால் உச்சகட்ட கொடுமையை அனுபவித்த காலம் இது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 1730ல் நாயக்கர் ஆட்சி அழிந்தபிறகு 1830ல் வெள்ளையர் ஆட்சி வேரூன்றும் காலம் வரை நூறாண்டுக்காலம் அராஜகமே நிலவியது. கொடும் பஞ்சங்கள் எழுந்து நம் மண்ணை உருக்குலைத்தன. அதைப்பற்றிய தகவல்கள் ஜேசுசபை பாதிரியார்களின் குறிப்புகளிலும் நாட்டார் பாடல்களிலும் நிறைந்துள்ளன. பெரும் தாதுவருஷப் பஞ்சம் குறித்து அறியாதவர் சிலரே.

தமிழ்மக்களின் கால்வாசிப்பேர் தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றுக்கொண்ட காலகட்டம் இது. உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் இக்காலகட்டத்தில் சென்றவர்களே. பட்டினியால் லட்சக்கணக்கில் மனிதர்கள் செத்தார்கள். இது மீண்டும் மீண்டும் ஒரு நூறாண்டு நீடித்தது. வெள்ளையர் காலகட்டத்திலும் அந்த பஞ்சங்கள் தொடர்ந்தன. அவர்களின் ஆட்சியின்  இறுதிக்காலத்தில் நேரடியாக பிரிட்டிஷ் அரசின் பொறுப்புக்கு இந்தியா சென்றபின்னர்தான் பெரும் நீர்ப்பாசனத்திட்டங்கள் மூலம் அந்த பஞ்சங்கள் கட்டுக்குக்கொண்டுவரப்ப்பட்டன.

தனிப்பட்ட ஆர்வத்தால் தமிழகத்துக்கு அணைக்கட்டுமானங்களை உருவாக்குவதில் வாழ்க்கையை அர்ப்பணித்த வெள்ளையர்களை நாம் இன்று நினைப்பதில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள வேண்டும். பெரியார் அணையைக் கட்டிய பென்ன்னி குக் மதுரைப்பகுதியின் பொட்டல் வாழ் மக்களுக்கு வாழ்க்கையை மீட்டு அளித்தார். மேட்டூர் அணையைக் கட்டிய ஸ்டேன்லி, அதற்கு பெருமுயற்சி எடுத்த சர் சி.பி.ராமசாமி அய்யர், பேச்சிப்பாறை  அணையைக் கட்டிய அலக்ஸாண்டர் மிஞ்சின் மற்றும் மூலதிருநாள் மகாராஜா ஆகியோரையும் நாம் நினைவில் போற்றவேண்டியிருக்கிறது. இவ்வணைகள் மூலமே மெல்லமெல்ல அந்த பெரும் வறுமை கட்டுக்குள் வந்தது

நம் சமூகத்தின் இன்றைய மனநிலைகள் பெரும்பாலும் அந்தப் பஞ்சகாலத்தில் உருவானவை. முழுமையான லௌகீகப்பார்வையும், லௌகீகம் அல்லாத அனைத்தையுமே முழுக்க நிராகரிக்கும் நோக்கும் அவ்வாறு உருவானதே. ஜாக் லண்டன் என்னும் அமெரிக்க சாகஸக்கதை எழுத்தாளரின் ‘காட்டின் அழைப்பு’ என்னும் கதையில் மெக்ஸிகோவில் பொன் தேடிச்செல்லும் ஒருவன் பனிப்பாலையில் மாட்டிக்கொள்கிறான். பல நாள் கடும் பட்டினியில் புழுப்பூச்சிகளை தின்று தவழ்ந்து தவழ்ந்து கடற்கரையை அடைகிறான். அவனை கப்பலில் வந்த சிலர் கண்டு காப்பாற்றுகிறார்கள். அவன் மனநிலை பிறழ்ந்துவிடுகிறது. எங்கே உணவைக் கண்டாலும் கொண்டுபோய் தன் அறைக்குள் ஒளித்துக்கொள்கிறான். அவன் அறையே உணவால் அழுகி நாறுகிறது

இந்த மனநிலையில் இருக்கிறோம் நாம். நம் மொழியையும் பழக்கவழக்கங்களையும் பாருங்கள். நமக்கு உணவு எந்த அளவுக்கு முக்கியம் என்று தெரியும். ஒருவரை ஒருவர் பார்த்ததுமே ”சாப்பிட்டாச்சா?” என்று கேட்கும் ஒரே மக்கள் நாம்தான். வீட்டுக்கு யாராவது வந்தால் நாம் அவர்களுக்கு உணவு கொடுத்தாகவேண்டும். குழந்தைகளைப் பார்த்தால் உடனே உணவு கொடுக்கிறோம். உண்பது என்பது அத்தனை அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நம்மை உக்கிரமாகக் கடந்துசென்றிருக்கிறது.

இந்தக் காலகட்டம் நம் தொன்மையான பண்பாட்டில் இருந்து நம்மை துண்டித்திவிட்டது. பசிவந்திட பறந்துபோன பத்தில் நம் மரபும் ஒன்று. நம் கலைகள் அக்காலகட்டத்தில் அழிந்தன. நம் மருத்துவம் கைவிடப்பட்டது. தத்துவம் மறக்கப்பட்டது. ஒரு பெரும் தூண்டிப்பு. பின்னர் நாம் நம்மை ஆராய்ந்த ஐரோப்பியரின் கண்வழியாக அவற்றை மீண்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.

இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானவர்கள் வாழ்வதே இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையின் இன்பமே கிடையாது. ஒவ்வொரு கணமும் அவர்கள் சேமிக்கிறார்கள். சேமிப்பே இன்பம். சேமிப்பே வாழ்க்கையின் சாரம். அந்த அளவுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் நம்முள் நிறைந்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைப்பது மட்டுமே கனவு. இந்நிலையில் என்ன கலை இலக்கியம் இருக்க முடியும்?

என் தலைமுறையில் அப்பா அம்மாக்கள் பிள்ளைகளுக்க்காக பட்டினிகிடந்தால்தான் பிள்ளைகள் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது 70 வயதான பெற்றோர்கள் சிறிய இன்பங்களைக்கூட தங்களுக்காக தேடியிருக்க மாட்டார்கள். எங்கள் தலைமுறையில் அத்தனை கடுமையான வேலையில்லா திண்டாட்டம். பெற்றொர் சேர்த்து வைத்தால் மட்டுமே பிள்ளைகள் வாழ முடியும். பெண்களை ‘கரையேற்றும்’ பொறுப்பு என்னும் பெரும் சுமை வேறு.

ஆனால் இப்போது தனியார்மயம் வந்து, தகவல் தொழில்நுட்பம் வந்து, படித்ததுமே பிள்ளைகள் வேலைக்குப்போகும் நிலை உருவானதுமே மெல்லமெல்ல பெற்றோரின் பார்வை மாறி வருகிறது. சில இன்பங்களை நாடலாம் தப்பில்லை என்ற மனநிலை உருவாகிரது. பயணங்கள் செல்கிறார்கள். தங்களுக்கென தனித்திட்டங்களை மேற்கொள்கிறார்கள். நம் மனநிலை நம் நூற்றாண்டுக்கால சூட்டுத்தழும்பில் இருந்து மெல்லமெல்லத்தான் விடுபட முடியும்.

பொருளியல் பதற்றங்கள் ஓரளவாவது மட்டுப்பட்ட ஒரு சமூகத்திலேயே கலை இலக்கியத்துக்கு இடமிருக்க முடியும். நான் இப்போது கல்லூரிகளுக்குச் செல்வதுண்டு. மாணவர்களிடம் படியுங்கள் என்று சொல்லி நூல்களை அறிமுகம் செய்வேன். சமீபத்தில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை தமிழ்த்துறைத்தலைவர் அ.ராமசாமி சொன்னார், நம் குழந்தைகளை பிளஸ் டூ வரை படிக்காதே எதையுமே படிக்காதே பாடத்தை மட்டுமே படி என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறோம். கல்லூரிக்கு வந்ததுமே எல்லாவ்ற்றையும் படி என்றும் சொல்கிறோம். ஆளுமை உருவாக்கம் நிகழும் வயதில் படிக்காதே என்று சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் எப்படி சட்டென்று தங்களை மாற்றிக்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டில் நாம் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில்லை. நாம் அளிப்பது வெறும் பயிசியை. லௌகீக வெற்றியை அடைவதற்கான பயிற்சி. நம்மில் அனேகமாக அனைவருமே ‘தொழில் திறமை’ கொண்டவர்கள். அறிவு கொண்டவர்கள் அல்ல. இதுவே இன்ரைய பண்பாட்டுச்சூழல். இங்கே நீங்கள் இன்னொரு அறிவுள்ள பண்பாட்டுப்பயிற்சி உள்ள ஒருவரை தற்செயலாக மட்டுமே கண்டடைய முடியும்.

உண்மையைச் சொல்கிறேனே, எனக்கு என் மகனைப்பற்றி அந்தப் பதற்றம் இருக்கிறது. அவனுடைய எதிர்காலம் குறித்த அச்சம். அவன் இத்தனை புத்தகங்களைப் படிக்காமல் பாடங்களை மட்டும் படிப்பவனாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம். நாம் எவரை குறை சொல்வது? இந்த மனநிலையே ஐரோப்பியத் தந்தையிடம் இருக்காது.

நமக்கும் நம்முடைய தொன்மையானச் செவ்வியல் பண்பாடுக்கும் நடுவே அந்த நடுக்கால பஞ்சங்கள் உருவாக்கிய பெரும் அகழி இருக்கிரது. நமக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே இருநூறு வருட பண்பாட்டு வளர்ச்சியின் இடைவெளி இருக்கிறது. நாம் இன்று ஒரு பதற்றம் கொண்ட தலைமுறை. அள்ளி அள்ளிப் பதுக்குவதை மட்டுமே மனதில் கொண்ட ஜாக் லண்டனின் கதநாயகர்கள் நாம்.

நாம் பொருளாதார வளர்ச்சி பெறும்போது, நவீனமயம் நம்மில் முழுமை பெறும்போது இந்தச் சிக்கல்கள் தானாகவே மறையும். நவீனப்பண்பாடு அப்போது நம்மில் உருவாகும். அந்த நிலையில்தான் நாம் நம்மை ஐரோப்பியருடன் ஒப்பிட இயலும். அந்நிலை வரும் என் நினைக்கிறேன். காத்திருப்போம்

ஜெ

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Apr 17, 2009 

 

முந்தைய கட்டுரைபதிவுகள் இணையப்பக்கத் தொகுதி
அடுத்த கட்டுரைவெண்முரசும் கனவும்