வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோல்சிற்பம் போல உடம்பு அவருக்கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார்.
பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மேட்டில், அவர் பெயருடனேயே நினைவில் உதிக்கும் அந்த வினோத பாணியில் கால் மடக்கி அமர்ந்து, முன்னும் பின்னும் அசைந்தாடி, உடும்புத்தோல் உடுகை மூன்று விரல்களால் மீட்டி, எங்களூரின் எழுபது வருடக் கதையைப் பாடுவார். கீழ்வானில் பனைமர மண்டைகளின் ஊடே ஒற்றை வெள்ளி மினுங்க ஆரம்பித்துவிட்ட பிறகும் அவர் குரல் கேட்டுக் கொண்டிருக்கும். வைக்கோற் படுக்கையில் சாய்ந்தபடி தூக்க மயக்கத்துடன் கேட்போம். அப்படியே கனவில் பிரவேசித்து, சிங்கியின் குரல் பின்னணியில் ஒலிக்கும் விசித்திரப் பிரமைகளில் அலைவோம்.
சட்டென்று விழித்துக்கொள்ளும்போது, உலகுடன் பிணைக்கும் நிஜம் போல அவர் குரல் இருட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் கண்களில் மினுக்கம் தெரியும். விடிவதற்கு சற்று முன்புதான் அவர் தலை சரியும். குரல் உடைந்து இழுபட்டு ஒடுங்கும். அவர் கதை ஒரு போதும் முடிவடைந்ததில்லை. தரையில் அப்படியே சரிந்து விடுவார். விடிந்து வெயிலேறிய பிறகே அவரில் உயிர்க்களை வரும். அவரைச் சுற்றி எச்சில் சிதறிக் கிடக்கும்.
வாரியலும் கையுமாய் நின்று முத்தம்மா சத்தம் போடுவாள். “சீராத்தேன் இருக்கு, பறப்பயலுக்க ஒப்பரம் சேந்துக்கிட்டு ஏமான்மாரும் தலையெங்க காலெங்க எண்ணு கெடக்கியது. ஏமான், கொச்சேமான்…” என்று உசுப்புவாள். “வல்ல காரியம் உண்டுமா, இஞ்ச வந்து கெடக்கியதுக்கு? பனியோ தீனமோ வந்தெங்கி ஆருக்கு நட்டம்? இனி நான் காணட்டு. பிலேய் சிங்கி, பறப்பயலுக்க ஒறக்கத்தைப் பாரு. பிலேய்…” என்று கத்துவாள்.
வெறுந்தரையில் விசிறப்பட்டது போலச் சிங்கி கிடப்பார். அவர் அருகே இரவெல்லாம் எழுப்பிய ஒலியைத் தலைக்குள் ரீங்காரமாய் நினைவுறுத்தும் அந்த உடுக்கு. இரவின் நினைவுகள் பகல் ஒளியில் வெகுதூரமாய், கனவாய் மாறிவிட்டிருக்கும். அதற்கு சம்பந்தமேயற்றவராகச் சிங்கி அப்போது தென்படுவார். பனியும் புழுதியும் படிந்த கரிய வற்றி உடம்பு மூச்சில் மெல்ல அசையும். அவருக்கு வெயில் மழை பொருட்டல்ல, களத்து மூலைப் பனைமரம் போல.
பேச்சிப்பாறை அணைக்காக சர்வே எடுத்தபோது தான் அவர் பிறந்தார் என்பார் சிங்கி. எந்தக் கதையும் அவர் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகும். மெல்ல மெல்ல தாளம் கலந்து, உரை நீண்டு பாடலாக மாறும். உடுக்கு இயல்பாக இணைந்து கொள்ளும். அவருக்கு எத்தனை சொன்னாலும் அலுக்காத கதை செம்பன் துரையின் இதிகாசம்.
அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை. புலிபோட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப்படப்பு. வானம் தெரியாமல் இலைப்படப்பு. ஊடு வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒற்றையடிப்பாதை. அது பேச்சி மடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடுமங்காடு சுரம் தாண்டி, அனந்த பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டு மிருகத்தின் நகமும், காணிக்காரன் காலுமல்லாமல் நாட்டு வாசியின் வாசம் கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது. பிரம்மபுத்திரி பேச்சி மலைக்கு அரசி.
ஆருக்கும் அடங்காத பேச்சியை அடக்க வந்தவன்தான் செம்பன்துரை. அவன் கருப்புக்கட்டியும் கஞ்சாவும் கொடுத்து காணிக்காரர்களைத்தான் முதலில் வசப்படுத்தினான். காற்றுக்கும் அஞ்சாமல், காலனுக்கும் அஞ்சாமல், காடெல்லாம் சுற்றி அலைந்தான். அவன் கால்பட்ட இடமெல்லாம் பச்சை கருகிப் பாழாகப் போயிற்று. காட்டு மிருகங்களெல்லாம் அவனைக் கண்டு கவைக்கிடையே வால் செருகி, கும்பிப் பதறி ஓடின. பறவையெல்லாம் சிறகடித்து வானத்திலே தவித்தன.
அவன் விரல் நீட்டி நில் என்றால் புலிகூட வால் நீட்டி, உடல் நெளித்து, முகம் தாழ்த்தி நின்றுவிடும். செம்பன்துரை மானுடனே அல்ல. இந்திரன் ராஜ்ஜியத்தில் இந்திராணி அரண்மனையில் காவல் நின்று வந்த கரும்பூதம். கடமையிலே தவறு வர, கடும்சாபம் பெற்று, மனித உருப்பெற்று, மந்திரவசப்பட்டு, பூலோகம் வந்தவன். மந்திரத்தால் பூதத்தைக் கும்பினியான் கட்டியாண்டான். தூக்காத சுமையெல்லாம் தூக்க வைத்தான். செய்யாத சோலி எல்லாம் செய்ய வைத்தான். பேச்சியின் திமிரடக்கி, வள்ளியைப் பெண்டாள, வரமும் வரிசையும் கொண்டு, உத்தரவும் தீட்டூரமும் பெற்று, செம்பன்துரை வந்தான் என்று சிங்கி பாடுவார்.
எங்கள் இளம் பருவத்திலேயே வள்ளியாறு ஒரு நீலரிப்பன் போல ஆகிவிட்டிருந்தது. மழைக்காலத்தில் வெகு அபூர்வமாய் இருகரை தொட்டு சகதி மணக்க சுழித்தோடுவதுண்டு. “அவ கெடந்த கெட என்னா? நடந்த நட என்னா… பிடிச்சிக் கெட்டிப் போட்டோனே செம்பன்தொரெ! கள்ள அறுவாணிக்க ஊற்றத்த அடக்கிப் போட்டானே” என்பார் சிங்கி. கை நீட்டி சிவன்கோயில் முற்றத்தைக் காட்டி, அது வரை வெள்ளம் வரும் என்பார்.
“நீங்க என்னத்த கண்டிய கொச்சேமான்? அறுதலித் தேவடியா மொவ கொஞ்ச பேருக்க தாலியவா அறுத்திருக்கா? கொல நிண்ண வாளையையும் மண்டை பூத்த தெங்கயுமில்லியா பிளுதுகிட்டு வருவா மூடோட? இப்பம் கண்டுதா மூதிக்க கெடப்ப? அடிச்சுப் போட்ட சாரப்பாம்பு கணக்காட்டு. அம்பிடும் வெஷம். செம்பன் தொர வராம இருந்தானெங்கி கூறுகெட்ட தேவடியா மவ ராச்சியத்த மிளுங்கிப்போட மாட்டாளா?” சிங்கி வாயெடுத்தால் வள்ளிக்குக் கெட்ட வார்த்தைதான். ஒரு மழைக் காலத்தில் அவள் பேய் பிடித்து ஓடியதில் சிங்கியின் அப்பனும், அம்மையும், வீடும், சிறு தோப்பும் மொத்தமாய் தேங்காய்ப்பட்டணம் கடலுக்குப் போய்விட்டன. “கண்ணில்லாத மூளி, கொலம் கெடுத்த பாவி” என்பார் சிங்கி.
ஈரக்கண்ணாடி போல வானம் இருந்த ஒரு மாலை நேரம். நாங்கள் பேச்சிப்பாறை பெரிய அணையைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கு ஆக்ரோஷமான வள்ளியைக் கட்டிப் போட்டிருக்கவில்லை. குலஸ்திரீ போல சிமிட்டி வளைப்புக்குள் நீலம் நெளியக் கிடந்தாள். மதகு வழியாகக் கண்ணீர் போலக் கொஞ்சம் நீர் வழிந்தது. விளிம்பெல்லாம் ஓராயிரம் காலடிச்சுவடுகள் பதிந்து உலர்ந்த தவிட்டுநிறச் சேறு. தூரத்து மலையைச் சுட்டிக்காட்டி ராதாகிருஷ்ணன் சொன்னான், அதுதான் சிங்கியின் வண்ணத்துப் பூச்சிகளின் படுகை இருக்குமிடம் என்று. அந்த மலை நீலநிறப் புகையால் செய்யப்பட்டது போலிருந்தது. அதற்கு மேல் இலேசாக ஒளிர்ந்த மேகம் படிகச் சிற்பம் போல உறைந்து நின்று விட்டிருந்தது.
அணைக்கு இப்பால் ஒரு செயற்கைத் தோட்டம். காட்டுக்குள் வழி தவறி வந்த நகரத்துக் குழந்தை போல குரோட்டன்ஸ் சிவப்புடன் நின்று கொண்டிருந்தது. பிரம்மாண்டமான ஏழெட்டு மரங்கள் தூங்கி விட்டிருந்தன. நீர் நெளியும் ஒலி. பறவைகள் கூடணையும் ரகளை. மேற்கு முனையில், தேக்குமரமொன்றின் அடியில் செம்பன்துரையின் சமாதி கிடந்தது. ஏனோ அதற்குக் கண்ணில் குத்துகிற மஞ்சள் நிறம் பூசியிருந்தார்கள். துரைக்குப் பிடித்தமான பச்சைநிறம் பூசியிருக்கலாம். அல்லது சிவப்பு நிறம்.
“இஞ்ச பாருங்க கொச்சேமான் சென்னா நம்பாது. அந்த மாதிரி ஒரு மனியன இனிம பார்த்துக்கிட ஒக்காது. கொச்சேமான் செவல நெறத்தில மனியனைப் பாத்திருக்குதா? செவலத் தலமுடி, செவலக் கண்ணு, செவல மூக்கு… தல தொட்டு காலு வரெ செவல நெறந்தேன். என்னத்தைத் தின்னுவானோ பய சிரிச்சாண்ணு சென்னா புலி வாயைப் பெளந்தது மாதிரியேன் இருக்கும். ஒண்ணும் செல்லாண்டாம் ஏமானே, ஆளைக்கண்டா மதி; மூத்திரம் தன்னால போவும். பூதமில்லா அவன், செவலப்பூதம்!”
பேச்சியை வென்ற செம்பன்துரை பறவைகளின் எச்சம் வீச்சமடித்த மரத்தடியில் பசுந்தழைப் புதருக்குள் தனிமையில் கிடந்தார். அந்தப் பெயரை வாசிக்க இயலவில்லை. சகட்டு மேனிக்கு சாயம் பூசி விட்டிருந்தார்கள். அவருக்கு நடமாட முடிந்ததென்றால் அப்பகுதியிலேயே இருக்கமாட்டார் என்றேன். குரோட்டன்ஸ் செடிகளின் நிழலை அவர் எப்படித் தாங்கிக் கொள்வார்? அவரென்ன பேச்சிக்கூடத்தான் ஓடிப் போயிருப்பாள் என்றான் ராதாகிருஷ்ணன், அந்தச் சிறு பிரதிஷ்டையைச் சுட்டிக் காட்டியபடி, சதுர வடிவிலான பெரிய கல் மேடை மீது கரடு முரடான பிரம்மாண்டமான ஒரு மரம் நின்றிருந்தது. பெரிய, தடித்த இலைகள் மண்டிய, கிளைகள் நான்கு பக்கமும் தழைந்து கீழே வந்து கூடாரம் போலக் கவிழ்ந்திருந்தன. உள்ளே அரை இருள். ஈரமாய் சருகு மக்கிய சொத சொதவென்ற தரை. மரத்திலே அறையப்பட்டதாய் அம்மனின் வெண்கல முகம். கீழே கரிய பலிபீடம். ஒரு வாரத்துக்கு முந்தைய பூக்கள் சிதறிக் கிடந்தன. சகட்டு மேனிக்குக் குங்குமம் அப்பப்பட்டிருந்தது.
பேச்சியம்மன் சோரயில்லா
பேய்ஞ்சுது மலை மேலே
பேச்சியம்மன் முடியல்லோ
பிளுதெறிஞ்சான் செம்பன்தொரெ…
என்று சிங்கியின் குரல் கேட்பது போலிருந்தது.
காணிக்காரர்கள் வழிகாட்ட, வேட்டை நாய்கள் பின்தொடர. சிவப்புக் குதிரை மீதேறி, செம்பன்துரை வள்ளியைப் பெண் பார்க்கப் போனான். சுழித்தோடிய கன்னியைக் கண்டு உற்சாகம் கொண்டு சிரித்தான்.
“ஓடுதியா? ஓடு. எம்பிடு நாளைக்கு ஓடுவே எண்ணு நானும் பாக்குதேன்” என்றான்.
“ஒன்னியக் கெட்டிப் போட்டுத் தானெடி இந்தச் செம்பன்தொரெ போவான்” என்று பயமுறுத்தினான்.
பயந்துபோன வள்ளி பேச்சிமுன் சென்று நின்று புலம்பினாள். கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன்துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலைமேலே கால் வைத்து, மேகத்திலே தலைவைத்து, கொடும்பல்லும், விஷநாக்கும், கனல்கண்ணும், இடிச்சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள். சகல ஜீவசாலங்களும் அப்படியே உறைந்தன. பறந்த குருவி வானத்திலே நிற்க, விழுந்த அருவி மலைமேலே தொக்க, காடெல்லாம் நடுநடுங்க, வானமெல்லாம் எதிரொலிக்க இடிபோல குரலெழுப்பி, மின்னல் போலே பல்காட்டி பேச்சி கேட்டாள்: “எந் தலமுடிய வெட்டுயதுக்கா வந்தே மக்கா? என் மவளெ பிடிச்சு கெட்டுயதுக்கா வந்தே மக்கா?”
துரை பதறவில்லை. “ஓமெடி பேச்சி, நீ பேயானா நான் பேயன். ஒனக்க ஆட்டத்தைக் கண்டு பயந்து போவேன் எண்ணு நெனச்சியா? வளிய விட்டு மாறி நில்லுடி மூதி” என்றான். அவன் சாமானியனல்ல, இதில் எதோ சூதிருக்கிறது என்று பேச்சியும் உடனே புரிந்து கொண்டாள். மானம் முட்டும் உடல் சுருக்கி, மலைக்குறத்தி உருவம் கொண்டு, முத்தாரமும் முதுசந்தனமும் அணிந்து, தேன் போல மொழியும் தெவங்காத சிரிப்புமாய் வந்து ஒசிந்து நின்றாள். சிருங்கார பாவம் காட்டிச் சிரித்தாள்.
ஒன்றுக்கு நூறென்று மாயங்கள் சொல்லி வாதம் செய்தாள். பிரம்மா கொடுத்த அதிகாரம் பேச்சிக்கு. பேச்சி தந்த வரம் வள்ளிக்கு. வள்ளியைக் கட்டுவது பேச்சியைக் கட்டுவது. பிரம்மசாபம் செகமழிக்கும். மலையரசி பேச்சி நாடு காக்கும் தெய்வம். நோய் தீர்க்க மருந்தும் நோம்புக்கு வாசனையும் தந்து ரட்சிப்பவள். காட்டு மிருகங்களும் காணிக்காரர்களும் அவள் பிள்ளைகள். பேச்சியின் மடி தீண்டி அன்னியன் நடமாடலாகாது. அவள் பிள்ளைகளைத் தீட்டு செய்யலாகாது. பேச்சி தாங்கமாட்டாள். அம்மை கோபம் குலமழிக்கும். ஊர் முடிக்கும். சோதிக்காதே ஓடிப் போ என்றாள். துரை மசியவில்லை. “சோலியைப் பாத்துக்கிட்டுப் போடி. நான் வள்ளியைக் கெட்டத்தான் வந்தேன். கெட்டிப் போட்டுத்தான் போவேன். ஒன்னால முடிஞ்சதைச் செய்யி” என்று சொல்லிவிட்டான்.
கோபம் தாங்காமல் பேச்சி உடல் நடுங்கினாள். மார்பை அறைந்து, மதம் கொண்டு அலறி, காற்றாய் மாறிக் காட்டுக்குள் விரைந்தாள். நாணல்புதல் போலே காட்டு மரம் கூத்தாட, மானும் மிளாவும் மானத்திலே பறக்க, சுழற் கூத்தாடினாள். மலையிறங்கி ஊருக்குள் புகுந்தாள். வீட்டுக் கூரையெல்லாம் பட்டம் போலே பறக்க, ஆடும் மாடும் பறந்து விழுந்து சாக, ஊரைச் சூறையாடினாள். நாலாம் நாள் பேய்மாரி. வீடேது தோப்பேது வயலேது வரப்பேது என்று தெரியாதபடி வெள்ளம்.
ஐந்தாம்நாள் வள்ளி வந்தாள். பனங்குலைபோலே கூந்தலவிழ்த்துப் போட்டு, மார்பில் அறைந்து கூவியபடி, சிவப்புச் சேலை அலைபாய ஊருக்குள் புகுந்தாள். வைக்கோல் போர் முதல் அடுக்களைப் பானை வரை அள்ளிச் சுருட்டிச் சென்றாள். பத்தாம் நாள் விடியலில் மெழுகிப் போட்டது போல் ஊரெல்லாம் சேறு. எங்கிருந்து வந்தனவோ, எங்குப் பார்த்தாலும் பறவைகள். காக்கையும், கழுகும், கொக்கும், குருவியும் சேற்றுப் பரப்பின்மீது சிறகடித்தன. குரலெழுப்பிச் சண்டை போட்டன. ராத்தியெல்லாம் வீட்டுக் கூரைமீது வந்தமர்ந்து ‘பேச்சியம்மோ பேச்சியம்மோ’ என்று குரலெழுப்பின. ஜனங்கள் பயந்தனர். பிரம்ம கோபமோ இந்திர சாபமோ என்று நடுங்கினர். மலைக்கோவில் பகவதிக்கும் முடிப்புரையில் தேவிக்கும் கொடை நேர்ந்தனர். கும்பி கொதிப்பாற்ற ஆம்பற்கிழங்கும் சேற்றுமீனும் சேகரிக்க சகதியில் துழாவி அலைந்தனர்.
பேச்சி அடங்கவில்லை. அவள் கல்மனசு கரையவில்லை. தழையுடை அணிந்து, நார்ப்பெட்டி இடையில் ஏந்தி கனல் போலக் கண்ணும் துருத்தி போல மூச்சுமாய் ஊருக்குள் நடமாடினாள். “ஏனக்க பிள்ளியள விட்டுப்போடு பேச்சி” என்று காலில் விழுந்த முடிப்புரை அம்மையை, பேச்சி முடியைப் பிடித்து சுழற்றி வீசினாள். வாளும் சூலமும் ஏந்திப் போருக்குப் போன மலைக்காவில் தேவியை உதைத்துக் தள்ளினாள். பிரம்மா சொன்னாலும் அடங்கமாட்டேன் என்று கொக்கரித்தாள். கை நிறைய விஷவித்துக்களை வாரி ஊரெங்கும் தூவினாள்.
மின்னல்பட்ட காடுபோல விஷம் விழுந்த இடமெல்லாம் கருகிப் போயிற்று. அவள் கால் போன இடமெல்லாம் மசானப் புகை மணத்தது. மலைக்காவில் பகவதியும் முடிப்புரையில் அம்மையும் கோயில்களுக்குள் முடங்கிக் கண்ணீர் வடித்தனர். பேச்சியைக் கட்ட ஆளில்லை. அவள் நடமாட்டத்தைக் கண்டவன் பூசாரி முத்தன் மட்டுமே. “பேச்சி எறங்கிப் போட்டா, ஊரைக் குளம் தோண்டிப் போட்டுத்தான் அடங்குவா” என்று அவன் தெருத்தெருவாய் நின்று பிரச்சாரம் பண்ணினான். துரை பேச்சியைத் தீண்டி அசுத்தம் செய்ததுதான் ஊர் அழியக் காரணம் என விளக்கினான்.
பேச்சியை தணுப்பிக்க வள்ளியாற்றங்கரையில் கிடா வெட்டி, பூஜை போடவேணும் என்றாள். “அங்களம் முடிஞ்ச பூசெ. அதுக்கிப்பம் கிடாய்க்கு எங்க போறது பூசாரியாரே” என்றவர்களை முத்தன் ரத்தம் கட்டிய கண்களால் உற்றுப் பார்த்து, “முத்தனுக்ககிட்ட சொன்னது போகட்டும். பேச்சிக்க அடுக்க செல்ல நிக்காண்டாம். பிடாரியாக்கும் அவ” என்று எச்சரித்தான்.
எல்லாரும் துரையைச் சபித்தார்கள். அவனை ஒழிக்க பூசாரி முத்தன் செய்வினை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அது அத்தனை எளிதல்ல என்றான் முத்தன். மாந்திரிக திருஷ்டியால் பார்த்து துரை மனிதனல்ல பூதம் என்பதைக் கண்டு வெளிப்படுத்தினான். பசியில் பறந்த ஜனம் செலவேறிய பூசைக்கு மட்டும் ஒப்பவேயில்லை.
அப்போதுதான் துரையே குதிரைமீது ஏறி அங்கு வந்ததாய் சிங்கி உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வார். சிவப்புக் குதிரைமீது அமர்ந்து, தொப்பியும் கால்சராயும் சட்டையும் அணிந்து, ரெட்டைக்குழல் துப்பாக்கியும் கையுமாய், செண்டை வாத்தியக்காரன் முன்னால்வர, ஊர் நாய்கள் புடைசூழ, காணிகள் இருவர் காவல் வர, அவன் வந்த ஜோரைக் கண்டு பெண்களும் குழந்தைகளும் ஓடி ஒளிந்து கொண்டனர். செண்டைக்காரன் ஊர் ஜனங்கள் வந்துகூட வேண்டும் என அறிவித்தும் ரொம்ப தைரியசாலிகளான சிலர் மட்டும் வந்து பார்த்தார்கள்.
பேச்சிப் பாறையில் கூலி வேலைக்கு வருபவர்களுக்குத் தினம் இரண்டணா படித்தரமும், வயிறு முட்ட சீரகச்சம்பா அரிசிச் சோறும் என்று செண்டைக்காரன் கூவினான். அதெல்லாம் தரமாட்டான், சும்மா சொல்கிறான் என்று ஊரார் தயங்கினார்கள். உடனே துரை அதை மூன்றணாவாய் உயர்த்தினான். தலைப்புலையன் கண்டன் ஏழெட்டுதரம் அதைக்கேட்டு உறுதி செய்து கொண்டபிறகு, “எங்க சாதியே அங்க வாறதுக்கு ஒருக்கம்தேன் ஏமானே” என்று செண்டைக்காரன் காலிலே விழுந்தான்.
மூன்று வேளை சோறும் மூன்றணாவும் என்ற மந்திரம் ஊர் ஊராகப் பரவியது. பேச்சியின் ராச்சியத்திலா என்று மூத்த பறையர்கள் பிரமித்தார்கள். ஊர் அழியப் போகிறது என்று நாயர்கள் அடியாளரைக் கூட்டி உபதேசம் செய்தார்கள். “பேச்சியைக் செண்ணு மயித்தச் செல்லு” என்று இளவட்டங்கள் காறித் துப்பினார்கள். வயிற்றுப்பாட்டுச் சனம் அலை பாய்ந்தது. பூசாரி முத்தன் சன்னதம் வந்து தெருத்தெருவாய் நின்று ஆடினான். “பேச்சிக்க சக்தி அறியணுமா? திருட்டாந்தம் காட்டணுமா? காட்டினது போராதா?” என்று துள்ளினான்.
முதற்கும்பல் புறப்படுவதுவரை குழப்பம்தான். “இங்க கெடந்து நாறுவதைக் காட்டிலும் அங்க செண்ணு சாவிலாம். தொரை கஞ்சி வெள்ளமெங்கிலும் தாறதாச் செல்லுதான். பேச்சி இஞ்ச மட்டும் கெடக்கவிடுதாளா அறுதலி மூதி” என்று கண்டன் புலையன் ஒரு கும்பலோடு கிளம்பிப் போனான். மறுநாள் முதல் ஊரே குடிபெயரத் தொடங்கியது. மந்தைகள் வள்ளியாற்றங்கரையில் கண்ணில் பட்டதையெல்லாம் மேய்ந்தும், கழிவிட்டும், கூச்சலிட்டு ரகளை செய்தும், இராத்தங்கி முன்னேறின. அவற்றின் குளம்படியோசை சேறுபடிந்த ஊர்களின் மீது எதிரொலி செய்தது.
நிம்மதி கெட்டு இடம் பெயர்ந்த நதிக்கரை நீர்க்கோழிகள் ஊருக்குள் புகுந்து குரலெழுப்பி அச்சான்னியம் சொல்லின. ஊர்களெங்கும் பீதியும் மவுனமும் நிலவியது. ரொம்பவும் விசுவாசமாய் இருந்தவர்கள் கூட கடைசியில் புறப்பட்டு விட்டமை கண்டு மனம் பொறாத பூசாரி முத்தன் குறுக்கே பாய்ந்து வழிமறித்தான். ஞானமணி என்ற விடலை அவனைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டான். நீந்திக் கரையேறிவிடுவான் என நம்பியே அப்படிச் செய்ததாய் அவன் பிற்பாடு சொன்னான். ஆனால் பூசாரி முத்தன் பிறகு தென்படவில்லை.
எங்கோ எப்படியோ முளைவிட்டு, எளிதில் மந்தை தோறும் பரவிய, ஒருவித உற்சாகம் அவர்களையும் ஆட்கொண்டது. களிவெறி கொண்ட கும்பல் உரத்த குரலில் பாடியது. தாளமிட்டுக் கூத்தாடியது. வானம் சிவக்கும்போது மரத்தடிகளில் நெருப்பு மூட்டி சமையல் செய்கையில் ஆணும் பெண்ணும் வட்டமிட்டு நின்று ஆடினார்கள். பள்ளுப்பறை பதினெட்டு சாதியும் உறவு முறை மறந்து புணர்ந்தன. இரவின் அமைதியில் தூக்கமின்றிக் கிடக்கும் ஊரார் காதுகளைக் கூசச் செய்யும் பாடல்கள் மிதந்தலைந்தன. வண்ணத்துப் பூச்சிகளின் படுகையில் மரங்களே இல்லையென்பார் சிங்கி. சரிவான சதுப்பு நிலம் அது. அங்கு ஒரு போதும் ஈரம் ஆறுவதில்லை. அங்கு வெயிலுக்கு ஒளி மட்டும்தான் உண்டு. அங்குள்ள காற்று பட்ட இடம் ஈரமாகிவிடும். அங்கு முழுக்க செடிகள்தான்.
“பச்ச நெறத்த அங்கு மாதிரி வேற எங்கயும் பாத்துக்கிட ஒக்காது கொச்சேமான்! வெயிலு கேறியாச்சிண்ணு சென்னா, ஆகெ ஒரு மணந்தேன். பச்சில மணம் கேட்டு தலை தரிச்சு நிக்கப் பளுதில்ல அங்க. செடி நெறச்சு பூக்க… எல காணாம எதளு… செவலயும் மஞ்சயும் நீலமும்… என்னத்துக்கு செல்லுயது, அங்க இல்லாத நெறம் உண்டுமா? அங்கு இல்லாத பூ உண்டுமா? அது பேச்சிக்க அடிவயிறுல்லா! அவ ஆரு? அம்மெயில்லா!” என்பார். கண்கள் விரியும். வார்த்தைகள் தடைபடும். மவுனத்தில். உடுக்கு துரித கதியில் முழங்கும். சட்டென்று தலையை முன்னால் தழைத்து மூச்சிழுத்துப் பாட ஆரம்பிப்பார்.
கொரட்டி மலையின் வடக்கு வளைவில் வள்ளியைத் தடுத்து நிறுத்தத்தான் செம்பன்துரை முதலில் திட்டம் போட்டான். வள்ளி சற்று உடல் ஒடுங்கிப் போகும் இடம் அது. பேச்சியின் உடலை எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தன. வலது முலையை அரித்துக் குடைந்தன. இடது முலையில் வீக்கம். இம்சை தாளாமல் பேச்சி புரண்டாள். ஒரே தேய்ப்பு. எறும்புகளும் அவற்றின் கூடுகளும் கூளம். வள்ளி பிடியை உதறி எக்காளமிட்டபடி, சரிவில் சாடினாள். மலையிருந்த இடத்தில் கணவாய். துரை மனம் தளரவில்லை. நொய்யரிசி கையிலிருக்க எறும்புக்கென்ன பஞ்சம்? சற்று தள்ளி மீண்டும் கட்டிப் பார்த்தான்.
வான்மீது பேச்சியின் யானைப்படை குவிந்தது. வெள்ளித் தந்தம் மின்ன மோதிப் புரண்டது. பூமியும் வானமும் மூட, நீர் கொட்டியது. யானை புரளும் ஓட்டம் வள்ளிக்கு. பெரும்பாம்பு போல அவள் மலைகளைச் சுற்றிப் பிணைத்துக் கொண்டு நெளிந்து துடித்தாள். இலுப்பமலை நொறுங்கி விழுந்தது. கடம்பமலை விரிசல் கண்டது. பத்து நாள் கழித்து வானம் வெளுத்தபோது கால் தடங்கள் கழுவப்பட்டுக் காடு பரிசுத்தமாய் இருந்தது. பச்சையிலைப் படப்பெங்கும் “பேச்சி”, “பேச்சி” என்று பாடின. இரை விழுங்கிய வள்ளி மெல்ல வளைந்தபடி கிடந்தாள்.
அதற்கு மேல் தாங்க துரைக்கும் திராணி இருக்கவில்லை. பேச்சி காலில் விழுந்தான். “பிழை பொறு பேச்சி” என்று கண்ணீர் விட்டான். கொடுங்காட்டில் யாக குண்டம் கட்டி தபஸ் செய்தான். ஆடும் கிடாயும் வெட்டி அவிஸாக்கினான். கூடப் பிறந்த பூத கணங்களையெல்லாம் கூட்டி வைத்துப் பேச்சிக்குக் கொடை போட்டான். பேச்சி மசியவில்லை. கெஞ்சி அழுதான். வழிமூட்டியபோது உடைவாளை உருவிக் கழுத்தில் வைத்து துரை கர்ஜனை செய்தான். “பூதத்தலை இண்ணா பேச்சி. பிரம்மாமேல சத்தியம்! பலிய எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு.”
வாளை ஓங்கிய தருணம் பேச்சி மனமிரங்கினாள். ஓமத்தீயில் உருக்கொண்டு கூத்தாடினாள். காற்றாக வந்து திசை அதிரச் சிரித்தாள். “கொண்டா, பலிகொண்டா” என்று ஆர்ப்பரித்தாள். “நரபலி கொண்டா, சூடுசேர கொண்டா” என்று ஆட்டம் போட்டாள். “எம்பிடு வேணும்? அத மட்டும் செல்லு” என்றான் துரை. “ஆயிரத்தொண்ணு” என்றாள் பேச்சி. “அதுக்கென்ன தாறேன்” என்றான் துரை சற்றும் அயராமல். “எங்க? எங்க?” என்று பறந்தாள். “பன்னிமலைச் சரிவிலே ஆயிரம் குடிலிருக்கு எடுத்துக்க பேச்சி. ஆயிரமில்லடி மூதி அய்யாயிரம். எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு” என்றான் துரை. அக்கக்கா என்று காடதிரச் சிரித்தாள். “சத்தியம் பண்ணு, குடிச்ச சோரைக்க கட்டுப்படுவேன் எண்ணு சத்தியம் பண்ணு” என்றான் துரை. பேச்சி வெறி கொண்டு ஆடினாள். கூந்தலைச் சுழற்றி நிலத்தில் அறைந்து சத்தியம் செய்தாள்.
அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் அடங்கின. அன்றுமுதல் பத்துநாள் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து வெறி தீர்த்தாள். பத்தாம்நாள் வாக்குத் தந்தபடி வந்து துரை முன் நின்றாள். துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி, வேங்கை மரத்தடியில் அறைந்து நிறுத்தினான். வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். வள்ளியின் கஷ்ட காலம் தொடங்கியது. பேச்சி அடங்கிய பிறகு கேட்க நாதியில்லை. கூந்தலைச் சுழற்றிப் பிடித்து மடக்கி அவள் கொட்டத்தை அடக்கினான் செம்பன்துரை.
பன்றிமலைச் சரிவிலே இளவெயில் பரந்த வண்ணத்துப் பூச்சிகளின் படுகை சிங்கியின் நினைவை மெல்லிய வலிபோல உணர வைத்தது. கண் எட்டிய தூரம் வரை செடிகள் அடர்ந்து கிடந்தன. கண்களை நிரப்பித் தவிக்கச் செய்யும் நிறவிரிவாய்ப் பூக்கள். ஒரு சிறு காற்றில் மலர்க்கம்பளம் நெளியத் தொடங்கிவிடும். பறக்கும் பூக்கள் போல எங்கும் வண்ணத்துப் பூச்சிகள். நம்ப முடியாத அளவு பெரியவை. “மண்ணாத்திப் பக்கிய பிடிச்சப்பிடாது கொச்சேமான்” சிங்கி சொல்வார். “செத்து போனவியளுக்கு கண்ணாக்கும் அதொக்கெ. துடிச்சு துடிச்சு அலையுத கதிகிட்டாத்த ஆத்மாக்களாக்கும்”
இமையிறகுகளை அடித்தபடி பறந்தலையும் கண்கள். திசைகளெங்கும் அவற்றின் பார்வை. நான் ராதாகிருஷ்ணன் கைகளைப் பற்றிக் கொண்டேன். “போலாம்” என்றேன். படுகையிலிருந்து வந்த பூச்சிகள் சரிவிலும் பள்ளத்தாக்கிலும் பரவியிருந்தன. நீர்ப்பரப்பில் உதிர்ந்து சுழித்தன. குடிநீரில் விழுந்து துடித்தன. பேச்சியின் உடலைத் துளைத்துத் தடதடத்த யந்திரங்கள் மீதும், அவள் உயிரை நகரங்களுக்குக் கொண்டு செல்லும் கம்பிகள் மீதும் அமர்ந்து அதிர்ந்தன. சகதியில் வண்ணக் காகிதக் கிழிசல்கள் போலப் பரவிக் கிடந்தன. கரிய ஈரமான கூரைகளின் மீது ஒட்டியிருந்தன. பேருந்து முகப்புக் கண்ணாடியில் அறைபட்டு சரிந்தபடியே இருந்தன. காட்டின் பசிய ஈரத்தின் உள்ளேயிருந்து அவை முடிவற்று வந்து கொண்டிருந்தன.
***