திண்ணை இதழில் ஆய்வாளர் அ.கணேசனும் தி.ராமச்சந்திரனும் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் முக்கியமான ஒன்று. ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றுக்கான பதில் அது.
சென்ற பல ஆண்டுகளாகத் தமிழில் முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கருத்து தமிழகம் மீது பிராமண- வைதீக ஆதிக்கம் மேலோங்கியிருந்தமையால் ‘தன்னியல்பாக’ ‘அடித்தள மக்களால்’ உருவாக்கப்பட்ட ஒர் அரசியலெழுச்சிதான் திராவிட இயக்கம் என்பது. திராவிட இயக்கம் தமிழைக் காக்கவே செயல்பட்டது என்னும் மாயை. இதற்கு மாறானவற்றை எழுதவோ பேசவோ ஆளில்லாமல் இருந்தது.
இன்று திராவிட இயக்கம் எவரால் எந்த அரசியல் நோக்குடன் கட்டமைக்கப்பட்டது, அதன் பயன்கள் எங்கெல்லாம் சென்று சேர்ந்தன என்பது இன்று மிக விரிவாகப் பேசப்படுகிறது. ஒருபக்கம் தலித் ஆய்வாளர்களால்,இன்னொரு பக்கம் சமநிலை நோக்குள்ள நவீன வரலாற்றாசிரியர்களால்.
அவ்வாறு ஆய்வுகள் எழும்போதெல்லாம் அவற்றை எளிய சாதியமுத்திரைகளைக் குத்தித் தாண்டிச்செல்வதே திராவிட இயக்க ஆய்வாளர்களின் வழக்கம். பொதுவாகவே அவர்களுடையது பிறரைக் குற்றம்சாட்டித் தாக்குதல் தொடுப்பதனூடாகத் தங்களைக் காத்துக்கொள்ளும் உத்திதான். இன்று அந்த உத்திகள் அவர்களுக்கு உதவாமலாகிவிட்டிருக்கின்றன. அடிப்படையான வலுவான வினாக்கள், திட்டவட்டமான ஆதாரங்களுடன் எழுந்து வந்தபடியே இருக்கின்றன.
அதை மீண்டும் இக்கட்டுரையில் காண்கிறேன்