பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தமிழில் நாட்டாரியல் என்னும் துறையின் உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பாற்றியிருக்கிறது. அதற்கு மூலகாரணமாக இருந்தவர் பேரா.தே.லூர்து. 1936 ல் பர்மாவில் பிறந்தவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். அங்கே நாட்டாரியல் துறை உருவானபோது அதன் பேராசிரியராக ஆனார். நாடோடி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்த துறைக்கு நாட்டாரியல் என்ற பெயரை அளித்தவர் லூர்துதான். இப்போது சென்ற வருடம் காலமானார்
பேரா.தே.லூர்து நாட்டாரியல் குறித்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிற்பாடு நாட்டாரியலாய்வில் குறிப்பிடத்தக்கவர்களாக வளர்ந்த நா.ராமச்சந்திரன், ஞா.ஸ்டீ·பன் ஆகியோர் லூர்துவின் மாணவர்கள். லூர்து 1971 வாக்கில் பழமொழிகளைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வு ஒன்றை தொடங்கினார். பல்வேரு தடைகளுக்குப் பின்னர் ஆய்வு 1982 ல்தான் முடிவடைந்தது. அந்த ஆய்வேட்டின் நூல்வடிவம்தான் ‘தமிழ்ப் பழமொழிகள் — அமைப்பு, பொருண்மை,.செயல்பாடு’ என்னும் நூல்.
இந்நூலின் ஆய்வில் உலகப்புகழ்பெற்ற நாட்டாரியலாளரான் ஆலன் டண்டிஸ் வழிகாட்டி உதவியிருக்கிறார். ஆர்ச்சர் லேலர், மத்திகூசி போன்ற மேனாடு ஆய்வாளர்களும் உதவியிருக்கிறார்கள்.
தமிழ் மரபில் நடந்த பழமொழிகளை தொகுக்கும் பணியை முழுமையாக தொகுத்தளித்த்தபடி தன் ஆய்வை தொடங்குகிறார். முன்றுறையரையாரின் பழமொழி நாநூறு முனோட்டியான முதல் தொகுப்பு. தண்டறையார் சதகம் அடுத்த முன்னோடி முயற்சி. பீட்டர் பெர்ஸிவல், ஜான் லாஸரஸ், செல்வக்கேசவராய முதலியார், அனவரதம் பிள்ளை, இராமசுப்ரமணிய நாவலர், மு.அண்ணமலை, கெ.எஸ்.லட்சுமணன்,சாமிதுர்கா தாஸ்,பூவை எஸ்.ஆறுமுகம் போன்ற பழமொழித்தொகுப்பாளர்களின் ஆய்வுகளை பட்டியலிட்டுகிறார்.
தமிழ்ப்பழமொழிகளை வகைப்படுத்தி வரையறை செய்வதில் முன்னோடியாக இருந்தவர் டேனிஷ்காரரான ஹெர்மான் ஜென்ஸன் என்பவர். வ.பெருமாள் என்னும் ஆய்வாளர் பழமொழிக்ளை வரையறைசெய்வது பற்றி ஆங்கிலத்தில் இரு கட்டுரைகளை எழுதி முன்னோடியாக அமைந்தார் என்று கூறும் தே.லூர்து அவரது வகைப்பாடுகளை விரிவாக விவாதிக்கிறார்.
பொதுவாக தமிழில் பழமொழி தொகுப்புகள் நிகழ்ந்த அளவுக்கு பழமொழி குறித்த கோட்பாட்டு ஆய்வுகள் நடக்கவில்லை என்று குறிப்பிடும் தே.லூர்து பி.எல்சாமி, நா.வானமாமலை. ப.முருகன், சாலை இளந்திரையன் போன்றவர்களின் ஆய்வுகளைப்பற்றிய தன் மதிப்பீட்டினை அளிக்கிறார். தொடர்ந்து பழமொழிகளை கள ஆய்வின் மூலம் தேடிச்சேகரிப்பதன் விதிகளையும் வழக்கங்களையும் விவரிக்கிறார்
அதன் பின் பழமொழிகளின் இயல்புகளை தொகுத்து ஓர் வரையறையை உருவாக்குகிறார். பழமொழிகள் சொலவடைகள் இரண்டையும் நாம் எப்போதுமே ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்கிறோம். உதாரணமாக அவன் பருப்பு இங்க வேகாது என்பது சொலவடை. ‘பயந்தமனுஷி பருப்பெடுக்கப்போனாளாம் இருந்தவங்கள்லாம் எழுந்தோடிப்போனாங்களாம்’ என்றால் அது பழமொழி.. பழமொழி சொலவடை சொல்லாட்சி போன்றவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை விவரித்து எது பழமொழி என்பதை இந்நூலில் வரையறை செய்கிறார் லூர்து.
பழமொழிகளைப்பற்றிய மேலைநாட்டு ஆய்வாளர்களின் கருத்துக்களைச் சுருக்கி இவ்வாறு சொல்கிறார் லூர்து 1.பழமொழிகள் உருவகங்கள் 2.அவை குறுகிய வாக்கியங்கள் 3. உவமைத்தொடர்கள் பழமொழிகள் அல்ல 4.பேச்சுவழக்கில் உள்ள செறிவான அறிவுமொழிகள் அவை.
தே.லூர்து தமிழில் தொல்காப்பியரே பழமொழிக்கு தெளிவான வரையறையைச் சொல்லிவிட்டார் என்று சொல்கிறார்.
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத்தோன்றி
குறித்த பொருளை முடித்தற்கு வரும்
ஏது நுதலிய முது மொழி என்ப
என்ற தொல்காப்பிய சூத்திரம் போதுமான வரையறையே என்று கூறுகிறார்.
நாட்டர் வழக்காற்றியல்றென்னும் தனி அறிவுத்துறையின் விதிகளை ஒட்டி பழமொழிகளின் கட்டமைப்பை ஆய்வுசெய்வதை விரிவாக முன்வைக்கிறார் தே.லூர்து. அமைப்பியல் நாட்டாரியல் துறைக்குள் செல்வாக்கான ஆய்வுமுறையாக எப்படி உருவானது என்பதை விவரிக்கிறார். அந்த கருத்துக்கருவிகளின் அடிப்படையில் பழமொழிகளின் அமைப்பைய்ம் செயல்பாட்டையும் விளக்குகிறார்.
ஒவ்வொருநாளும் நாம் பழமொழிகளை கையாண்டுகொண்டிருக்கிறோம். கவிதை போலவே மொழியின் உச்சகட்ட நுட்பங்கள் சாத்தியமாகக்கூடிய ஒரு தளம் அது. பழமொழிகளை விரிவான புலத்தில் வைத்து சிந்திப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கியளிக்கும் நூல் இது
‘தமிழ்ப் பழமொழிகள் — அமைப்பு, பொருண்மை,.செயல்பாடு’ : தே.லூர்து. யுனைட்டட் ரைட்டர்ஸ். [தமிழினி பதிப்பகம்] சென்னை