விவாதத்தின் நெறிமுறைகள்

ஜெ,

2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும்.

மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு புத்தகத்தைத் தனி அறையில் படித்துக் குருடன் யானையைப் பார்த்த கதையாக ஒரு குறிப்பிட்ட கருத்தை வளர்த்துக் கொண்டு இருந்த மனப்பான்மை விலகுகிறது. பல புதிய கோணங்கள் வெளிப்படுகிறது. கூடவே நட்பான சச்சரவுகளும் சில சமயம் வெளிப்படுகிறது. :-) அதனால் விவாதம் சில சமயம் திசை மாறுகிறது. புறவயமான கருத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.

சமீபத்தில் ஜடாயு கலந்து கொண்ட பொழுது கம்ப ராமாயாணம் விவாதம் நடந்தது. அவரின் ஞானம் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் என்பதால் அனேகமாக ஒரு வகுப்பு மாதிரி நடந்து முடிந்தாலும் மகிழ்ச்சி தருவது என்னவென்றால் ஒரு கட்டமைப்புக்குள் அடங்கியது என்பதே. இதனால் அந்த மூன்று மணி நேரம் தரமான நேரமாக அமைந்தது.

இது போல் பிற மாதக் கூட்டங்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்? எனக்கு இருக்கும் சில கேள்விகள்

1) இந்த மாதிரி புத்தகக் குழு விவாதிப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது எப்படி? – இப்பொழுது நடப்பது என்னவென்றால் எல்லோரும் தங்கள் கருத்துகளைத் தன் போக்கில் தோன்றியவாறெல்லாம் பேசுகிறோம். இதனால் பல கருத்துக்கள் சிதறி ஒருங்கிணைக்க முடியாமல் போய் விடுகிறது.

2) பொதுவாக ஒரு புத்தக விவாதிப்பிற்கு வேண்டிய அம்சங்கள் யாவை?

3) புத்தகத்தின் எந்தக் கூறுகளை விவாதிப்பது? உதாரணத்திற்கு, ஆசிரியரின் சரிதை, புத்தகத்தின் கதைச் சுருக்கம், கதையின் கருத்து, கருத்துக்களில் சார்பு நிலை எடுத்துக் கொண்டு குழுக்களாக பிரிந்து விவாதிப்பது போன்றவை. இவற்றில் விவாதிக்கத் தக்கவை எவை, விவாதிக்க வேண்டாதவை எவை? இது தவிர வேறு எது விவாதிக்கப் பட வேண்டியவை?

4) ஒரு case study மூலம் இதை விவரிக்க முடியுமா? உதாரணம் 18ஆம் அட்சக் கோடு என்ற புத்தகத்தை எப்படியெல்லாம் விவாதிக்கலாம்?

5) முக்கிய கேள்வி – கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? என்ன சாதித்திருக்க வேண்டும்?

6) வேறு என்ன இதன் நோக்கமாக இருக்க வேண்டும்?

இதற்கு ஒரு கோனார் நோட்ஸ் நீங்கள் போட்டால் மிக உதவியாக இருக்கும்.

நன்றி.
bags

 

அன்புள்ள bags

முப்பது வருடங்களுக்கு முன்னரே பயணம், விவாதம் ஆகியவற்றைப்பற்றி நித்யா சில விதிகளை அமெரிக்க குருகுலத்திற்காக எழுதியிருந்தார். அவற்றின் நடைமுறைப்பயன்பாடுகளைக் கண்டு நானே கொஞ்சம் அவ்விதிகளைக் கொஞ்சமாக விரித்துக்கொண்டேன். அவற்றைப் பல தருணங்களிலாக நண்பர்களுக்கு எழுதியிருக்கிறேன்.

இவை விவாதங்களுக்கான நடைமுறை விதிகள். நான் நடத்திய பல்வேறு கூட்டங்கள் வழியாக அடைந்த அனுபவ அறிவு என இதைச்சொல்லலாம்.

1. ஒருவிவாதத்துக்கு எப்படியும் ஒரு மட்டுறுத்துநர் [moderator] தேவை. அவர் யார் என்பதைப் பொதுவாகத் தீர்மானிக்கலாம். ஆனால் அவர் ஒரு கட்டுப்பாட்டுச் சக்தியாக செயல்பட்டாகவேண்டும். அந்த விவாதத்தில் அவரது சொல்லுக்குப் பிறர் அடங்கியாகவேண்டும். கூடவே அவர் ஒரு சமரச சக்தியாகவும் செயல்படவேண்டும். அவர் ஒரு தரப்புக்காக செயல்படாமல் எல்லாத் தரப்பும் தங்கள் சிறந்த கருத்துக்களை முன்வைக்க உதவக்கூடியவராக இருந்தாகவேண்டும்.

2. ஓர் அமர்வுக்கு எப்போதுமே பேசுதளம் வரையறுக்கப்பட்டாகவேண்டும். [Frame of Reference] ஒரு விவாதத்தில் அந்த விவாதக்குழு எந்தத் தளத்தில் நின்றுபேசப்போகிறது என்பதை அவர்கள் பொதுவாக ஒத்துக்கொண்டாகவேண்டும். ஒரு தலைப்பு, அந்தத் தலைப்பை ஒட்டிப் பேச்சுக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள், அங்கே விவாதிக்கவேண்டிய விவாதமுறைமை ஆகியவற்றைப்பற்றிய ஒரு பொதுவான புரிதல் இது.

உதராணமாக அசோகமித்திரனின் நாவல்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேசலாம். அப்போது விஷயம் அசோகமித்திரனின் எழுத்து என்ற தளத்தை முதல் வட்டமாகக் கொண்டுள்ளது. இது முதல் பேசுதளம். அசோகமித்திரன் செயல்படும் நவீன இலக்கியச்சூழல் அதை உள்ளடக்கிய இரண்டாவது வட்டம், அதாவது இரண்டாவது பேசுதளம். உலகநவீன இலக்கியச் சூழல் மூன்றாவது பேசுதளம். இலக்கியம் பொதுவாக நான்காவது பேசுதளம். சமகால அரசியல் அல்லது சினிமா அல்லது வரலாறு போன்றவை பேசுதளத்துக்கு வெளியே உள்ளவை.

எப்போதுமே ஒரு தலைப்பை, ஒரு மையத்தை வைத்துக்கொண்டே பேசவேண்டும். எல்லாப் பேச்சும் கண்டிப்பாக மையத்தைத் தொடர்புகொள்வதாக மட்டுமே இருக்கவேண்டும் . ஒருபோதும் விவாதம் பேசுதளத்துக்கு வெளியே செல்ல மட்டுறுத்துநர் அனுமதிக்கக் கூடாது. மன்னிக்கவும் இது வெளியே செல்கிறது, நாம் விஷயத்துக்குத் திரும்புவோம் என அவர் திருப்பிக் கொண்டு வரவேண்டும். உண்மையிலேயே முக்கியமான விஷயம் ஒன்று பேசுதளத்துக்கு வெளியே பேச்சில் உருவாகி வந்தாலும்கூட அனுமதிக்கக் கூடாது. அதற்கு வேறு ஒரு அமர்வு வைத்துக்கொள்ளலாம். அதைச் சொல்லி விட்டு விவாதத்தைப் பேசுதளத்துக்குள் கொண்டு வந்தாகவேண்டும்

தலைப்பை ஒட்டி முதற்பேசுதளத்திலேயே விவாதம் நிகழ அனைவரும் முயலவேண்டும். அதற்கே அதிக நேரம் அளிக்கப்படவேண்டும். தேவை என்றால் இரண்டாவது மூன்றாவது தளத்துக்குச் செல்ல அனுமதிக்கலாம். மிகவும் தேவை என்றால் நான்காவது தளத்துக்குச் செல்ல அனுமதிக்கலாம். ஆனால் அளிக்கப்படும் நேரம் அந்த விகிதாச்சாரப்படியே இருக்கவேண்டும்.

அதாவது அசோகமித்திரன் பற்றிய விவாதத்தில் ஒருவர் ஞானக்கூத்தனைப்பற்றி இருபது நிமிடம் பேசலாம். ஐசக் பாஷவிஸ் சிங்கரைப்பற்றி பத்துநிமிடம் பேசலாம். கம்பனைப்பற்றி ஐந்து நிமிடம் பேசலாம். கமபனைப்பற்றி ஒருமணிநேரம் பேசி அதேபோலத்தான் அசோகமித்திரன் என சொல்வதையெல்லாம் அனுமதிக்கக்கூடாது.

3. ஓர் அமர்வுக்கு விவாதப்புள்ளிகள் [ Premises] முதலிலேயே முன்வைக்கப்படவேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு சிறுகுழு விவாதிக்கப்போகும் விஷயம் பற்றிய தங்கள் தரப்பை அடிப்படையான வாதங்களாகத் தொகுத்து முன்வைக்கவேண்டும். நம் மரபில் இதற்குத் தோற்றுகை என்று பெயர். அந்த வாதங்களை அவர்கள் விரிவான தர்க்கங்கள் மூலம் நிறுவலாம். அங்கே உள்ள பிறர் அந்தத் தர்க்கங்களைப் பரிசீலித்து மறுதர்க்கங்களை உருவாக்கி அவர்கள் முன்வைக்கும் விவாதப்புள்ளிகளை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம்.

தோற்றுகைகள் எப்போதுமே ஒன்றில் இருந்து ஒன்றாக நீளும் சில விவாதப்புள்ளிகளாகவே இருக்கும். அதாவது அசோகமித்திரனைப்பற்றிய ஓர் அரங்கில் ஒருவர் இப்படிச் சொல்லலாம். ‘அசோகமித்திரன்தான் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர். ஏனென்றால் அவர் அன்றாட யதார்த்ததை எழுதுகிறார். அன்றாடவாழ்க்கையே பெரும் போராட்டாமாக இருக்கும் இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அன்றாடயதார்த்தத்தை சிறப்பாகச் சொல்வதே மிகச்சிறந்த கலையாக இருக்கமுடியும்’ இந்த மூன்று வரிகளும் மூன்று படிகள் கொண்ட ஒரு வாதமுகம், தோற்றுகை.

அதற்கு ஆதாரமாக அவர் தமிழில் எழுதப்பட்ட அன்றாட யதார்த்தக்கதைகளின் சிறப்பை விளக்கியிருக்கலாம். அன்றாட யதார்த்த அம்சமே இல்லாத தமிழ்க் கதைகள் எப்படி உண்மையான அனுபவத்தை அளிக்காமல் இருக்கின்றன என்று வாதாடலாம். உதாரணங்களைச் சொல்லலாம். அப்படி பல வாதங்களை முன்வைக்கலாம்.

விவாதத்துக்கு வந்தவர்கள் அந்த வாதங்களை எதிர்த்து மறுப்பைத் தெரிவித்து அந்த முதல்கூற்றுகளை மறுக்கலாம். உதாரணமாக அவர்கள் புதுமைப்பித்தனின் கபாடபுரம் போன்ற கதைகளை சுட்டிக்காட்டலாம். இந்திய சூழலில் வரலாறு எப்போதுமே மிகப்பெரிய அன்றாடப்பிரச்சினை என்று விளக்கலாம். வரலாற்றைத் தொன்மங்கள் மூலம்தான் சொல்லமுடியும், அதற்கு அன்றாட யதார்த்தக் கதைகள் உதவாது என்று சொல்லலாம். இப்படித்தான் நல்ல விவாதம் நகரமுடியும்.

இவ்வாறு நல்ல விவாதம் நிகழ நான் மட்டுறுத்துநராக இருக்கும் சபைகளில் நடைமுறையில் செய்பவை சில உண்டு. எப்போதுமே ஒரு மையக்கட்டுரை அல்லது உரை இருக்கும்படி செய்வேன். அது 10 நிமிடத்துக்குள் முடியக்கூடியதாக இருக்கவேண்டும். அந்தக்கட்டுரையில் தெளிவாகத் தோற்றுகைகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். விரிவான வரலாற்று விளக்கமோ பட்டியல்களோ எல்லாம் இருக்கக்கூடாது. அத்துடன் அந்தக் கட்டுரையாளரிடமே ஒட்டுமொத்தமாக நீங்கள் சொல்லவருவது இதுதானே என்று கேட்டுத் தோற்றுகைகளைத் தெளிவாக்கியபின் அதன் மேல் விவாதிக்கப் பிறரை அழைப்பேன். அதுதான் தோற்றுகை, அதை ஏற்கலாம் மறுக்கலாம் ஆனால் அந்த எல்லைக்கு வெளியே செல்லவேண்டாம் எனக் கோருவேன்.

இந்த மூன்று அம்சங்களும் எந்த விவாதத்துக்கும் முக்கியமானவை. இதை நாம் பள்ளியிலேயே படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நமக்குச் சொல்லித்தருவதில்லை. ஆகவே ஒரு விவாதத்தில் சம்பந்தமே இல்லாமல் அப்போது மனதுக்கு தோன்றியதைச் சொல்கிறோம். விவாதத்தை ஒட்டுமொத்தமாகக் கடத்திக்கொண்டு செல்கிறோம். வாதங்களின் பலமே இல்லாமல் அதிரடியாகப் பேச ஆரம்பிக்கிறோம். கோபாவேசமாகப் பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் தாக்கி பேச ஆரம்பிக்கிறோம். பலசந்தர்ப்பங்களில் நம்முடைய அரசியல் நம்பிக்கைகளை எல்லா விவாதங்களிலும் சொல்ல ஆரம்பிக்கிறோம். சிலர் சொந்த அனுபவங்களை எல்லாப் பேச்சுகளிலும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

நிறைய தருணங்களில் இங்கே வாதிட வருபவர்கள் எல்லா திசையிலும் பரவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரமே இல்லாமல் அடுக்கியபின்னரே ஒரு விவாதக்க்கருத்தை சொல்கிறார்கள். பலவகையான முத்திரைகளுக்குப்பின்னரே பேச ஆரம்பிக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் ‘ஜெயமோகன் ஓர் இந்துத்துவ சாதியவெறியர், மலையாளமேட்டிமைவாதம் பேசுபவர், அவர் பூமணி இயல்புவாத எழுத்தாளர் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். இயல்புவாதம் ஓர் குறைவான அழகியல்கொள்கை’ என விவாதத்துக்கு வந்தால் நான் என்ன செய்ய முடியும்? பூமணியையோ இயல்புவாதத்தையோ எடுத்துப் பேசமுடியுமா என்ன? முதலில் அவர் சொல்லும் ஒற்றைவரியிலான முத்திரைகளை எல்லாம் நிராகரித்து விளக்கி அவரை இழுத்து பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் கொண்டு வந்து நிறுத்தியபின்னரே பேச ஆரம்பிக்க முடியும். ஆனால் இதற்கே இருபது பக்கம் செலவிடவேண்டியிருக்கும். தமிழில் வேறு வழியே இருப்பதில்லை

ஆகவேதான் இந்த வகையான நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. அத்துடன் சில நடைமுறை விதிகளைக் கைக்கொள்ளவேண்டியிருக்கிறது. அந்த விதிகளை இப்படிச் சொல்லலாம்

1. ஓர் எல்லைக்குமேல் கடுமையான கருத்துக்களைப் பொது விவாதங்களில் சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட தனிக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது விவாதத்துக்கு உரியதல்ல. ஒருவர் ஒரு சபையில் ‘மன்மோகன்சிங் இந்தியாவின் சாபக்கேடு’ என்றோ ‘புதுமைப்பித்தன் இலக்கியவாதியே இல்லை’ என்றோ அதிரடியாகச் சொல்லப்போனால் விவாதமே உருவாகாது. அதை அதேமாதிரியான அதிரடிக்கருத்துக்களால்தான் மறுக்கமுடியும்.வெறும் சண்டைதான் மிச்சமாகும்

2. உணர்ச்சிகரமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது. ஏனென்றால் அதன்பின் விவாதமே நிகழமுடியாது. அதேபோலப் பிறரும் உணர்ச்சிவசப்படுவார்கள்

3. விவாதத்தில் சிலசமயம் இருவர் ஒருவருக்கொருவர் பேசுவார்கள். ஒருவரை சிலர் சேர்ந்து மடக்குவார்கள். அதை மட்டுறுத்துநர் அனுமதிக்கக் கூடாது

4.விவாதத்தில் எவரும் தங்களுக்குள் தனியாகப்பேச அனுமதிக்கக்கூடாது

5.தனிப்பட்ட விஷயங்களைப் பேச அனுமதிக்கக்கூடாது.

6.விவாதம் முடிந்தபின் கண்டிப்பாக ஒரு நட்பான அளவளாவல் பொதுவாக நிகழவேண்டும். அதில் விவாத விஷயங்களை விட்டுவிட்டு வேறு பொது விஷயங்கள்தான் பேசப்பட்டாகவேண்டும்.

இந்தவகையான விதிகளை சிலர் கட்டுப்பாடு , அதிகாரம் , அடக்குமுறை, ஒழுக்கம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளைப்போட்டு விமர்சிப்பார்கள். இதெல்லாம் இல்லாத ’சுதந்திர’ விவாதம் தேவை என்பார்கள். எங்கள் விவாதங்களெல்லாமே அப்படி விமர்சிக்கப்பட்டுப் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அப்படிச் சொன்னவர்கள் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் குறுக்கிட்டாலே கொந்தளிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.

கட்டுப்பாடற்ற விவாதம் என்பது நேர விரயம். ஏனென்றால் விவாத நேரம் அனைவருக்குமானது. பிறர் நேரத்தை வீணடிக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆகவே நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதற்கான ஒரு சுய ஒழுங்குதான் இவை. ஹிப்பிகளின் சபைகளில்கூட இத்தகைய ஒழுங்குகள் இருந்ததை நித்யா பதிவு செய்திருக்கிறார்

இதெல்லாம் என் வழிகள். இவை நடைமுறையில் பயனளித்துள்ளது என்பதையே கிட்டத்தட்ட 20 விவாத அரங்குகளை நிகழ்த்திய அனுபவத்தில் இருந்து அறிகிறேன். பல அரங்குகளில் மிகமிகச்சூடான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன– குறிப்பாக தமிழ், மலையாள அரங்குகளில். ஆனால் நட்பின் எல்லை மீறப்படவில்லை. நேர விரயமும் நிகழவில்லை.

நித்யா சொல்வார், சிரிக்காமல் முடியக்கூடிய எந்த விவாதமும் கதவுகளைத் திறப்பதாக இருக்காது. மூடுவதாகவே இருக்கும்

*

ஒரு புத்தகத்தை எப்படி விவாதிப்பது என்று கேட்டிருக்கிறீர்கள். பல அரங்குகளில் இது சார்ந்த சிக்கல்களை நான் கண்டிருக்கிறேன். புத்தகத்தை இரு வகைகளில் விவாதிக்கலாம்.

ஒன்று, புத்தக அறிமுகம். சபைக்கு அறிமுகமில்லாத ஒரு நூலை ஒருவர் அறிமுகம் செய்யலாம். அப்போது அவர் அந்நூலின் உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றை விளக்கவேண்டும். அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டவேண்டும். உதாரணம் ராய் மாக்ஸ்ஹாமின் ’இந்தியாவின் மிகப்பெரிய வேலி’ பற்றி நான் எழுதிய நூல் அறிமுகம். நூல் அறிமுகம் மீது விவாதமே நிகழமுடியாது. மேலதிக விளக்கங்கள் மட்டுமே கேட்கப்பட முடியும்

இரண்டு, நூல் விவாதம். அதற்கு முன்னதாகவே அந்நூலை விவாதிப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே வாசிக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அந்நூலைப்பற்றி ஒருவர் ஒரு மையக்கட்டுரையை முன்வைப்பது நல்லது. அந்த கட்டுரையில் அவர் அந்நூலை அந்நூலைப்பற்றிய ஒரு மதிப்பீட்டை மட்டுமே முன்வைக்கவேண்டும்.வெறுமே தகவல்களை சொல்லகூடாது.

அந்தக்கட்டுரையில் அவர் அந்நூல் பற்றிச் சொல்லும் மதிப்பீடே விவாதத்துக்கான தோற்றுகை . அந்த தோற்றுகைக்கு ஆதாரமாக அவர் சில வாதங்களை முன்வைக்கலாம். அந்த வாதங்களுக்காக அவர் எந்தத் தகவலையும் சொல்லலாம். அந்த வாதங்களின் மீது விவாதசபை தங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.

உதாரணமாக ஒருவர் பதினெட்டாவது அட்சக்கோடு ஒரு ‘வயதடைதல்’ [Coming of age ]வகை நாவல் எனலாம். கதைநாயகன் இளமையில் இருந்து வளர்ந்து அரசியல் சூழல்கள் வழியாக அவனுடைய ஆளுமையை அடைவது வரை அது காட்டுகிறது என்று வாதிடலாம். அதற்கான காரணங்களை விவரிக்கலாம். அந்நாவலில் பல இடங்களைச் சுட்டிக்காட்டலாம். ஜெ.டி.சாலிங்கரின் The Catcher in the Rye போன்ற நாவல்களைச் சுட்டிக்காட்டி ஒப்பிடலாம். அல்லது வில்லியம் சரோயனின் My Name is Aram கதைகளின் நடையுடன் அந்நாவலின் இளமைக்காலச் சித்திரங்களை ஒப்பிடலாம்.

இப்படி ஒரு கருத்தை விவாதத்துக்காக வைக்காமல் ‘நல்ல நாவல்’ ‘வாசிக்கவேண்டிய படைப்பு’ ‘நல்ல அனுபவத்தை அளித்தது’ என்றெல்லாம் சொல்லும் கருத்துக்கள் எந்த விவாதத்தையும் உருவாக்காது. அப்படி ஏதேனும் ஒரு விமர்சனமையம் மூலக்கட்டுரைக்கு இருக்கும்படி முன்னரே திட்டமிட்டுக்கூட அமைக்கலாம்

அந்த மையத்தை மறுத்து இல்லை, இந்தியச்சூழலில் ஓரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு அரசியல் சார்ந்த புறமும் அரசியலே இல்லாத அகமுமாக இரட்டை வாழ்க்கை ஒன்று இருப்பதை அந்நாவல் சொல்கிறது என ஒருவர் மறுக்கலாம். அதற்கான காரணங்களை விவரிக்கலாம். அல்லது அது ஒரு நடுத்தர குடிமகனை அவனுக்குச் சம்பந்தமே இல்லாத அரசியல் அலைக்கழிப்பதைப்பற்றிச் சொல்கிறது என்று சொல்லலாம்.

இப்படி தோற்றுகை, விவாதக்களம் இரண்டையும் வரையறை செய்துகொண்டபின் விவாதிப்பதே சிறந்தது. இதற்கு வெளியே செல்லும் விவாதங்கள் எதையும் தவிர்த்தால் பல்வேறு வாசிப்புகள் அங்கே முன்வைக்கப்படும். அது நல்ல விவாதத்தை உருவாக்கும்.

கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? என்ன சாதித்திருக்க வேண்டும்? ஒரு விவாதத்தில் ஒருவர் சொல்லும் கருத்து என்பது அவரது ஆளுமை, அவரது வாசிப்பு, அவரது அனுபவம் சார்ந்தது. அதை அவர் விவாதம் மூலம் மாற்றிக்கொள்ளமுடியாது. ஆகவே விவாதம் மூலம் எவரும் வெல்லவோ தோற்கவோ முடியாது. அந்த நோக்கமே பிழை

நல்ல வாதங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் பங்கெடுத்தவருக்கு ஒரேசமயம் பல கோணங்களைக் கண்ட அனுபவம் ஏற்படுகிறது. அது அவரது வாசிப்பை விரிவடையச்செய்கிறது. அத்துடன் தன் சொந்தக்கருத்தைச் சரியான சொற்றொடர்களில் முன்வைக்கும் திறன் அமைகிறது. அது அவரது சிந்தனைத்திறனை வளர்க்கிறது. ஒரு விவாதத்தில் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடியது இதுவே.

ஜெ

Nov 11, 2011 மறுபிரசுரம்

 


விவாதம் என்னும் முரணியக்கம்

விவாதிப்பவர்களைப்பற்றி
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
மலையாளவாதம்
விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்
அந்த பார்வையாளர்கள்
கலைஞர்களை வழிபடலாமா?
சிலகேள்விகள்
விவாதங்களின் எல்லை…
இணையத்தில் விவாதம்…
எனது அரசியல்

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல் – முத்துக்குமார்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை:-40