தத்துவத்தைக் கண்காணித்தல்

அன்புள்ள ஜெ சார்.

1980-90 களில் ரஜ்னீஷ் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியை படித்துவிட்டு நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டிருப்போம். ஒரு நெருங்கிய நண்பர் திடீரென்று ஒரு நாள் மொட்டை அடித்துக் கொண்டு வெள்ளை ஜிப்பா, வேஷ்டி அணிந்துகொண்டு வந்தார். ‘நான் இன்றுதான் பிறந்திருக்கிறேன். என்னை நான் diseducate செய்து கொண்டேன்.’ என்றார். (அச்சில் வருவதை… பாடப்புத்தகங்கள் உள்பட… உண்மை என்று என்று நம்பிக்கொண்டிருந்த கால கட்டம் அது)

சிறிது நேரம் கழித்து ‘பசிக்கிறது… மசால் வடை சாப்பிடலாமா’ என்றார். மற்றொரு நண்பர் ‘மசால் வடையை diseducate செய்யவில்லையா’ என்று கேட்டார். அவ்வளவுதான்.. அந்த நண்பர் சட்டென்று எழுந்து சென்று விட்டார். அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர 5 வருடங்கள் ஆனது.

அன்றிலிருந்து நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். எந்த புத்தகத்தை படித்தாலும் அதிலிருந்து விலகி நின்று பார்ப்பதற்காக, கடைசியில் ஒரு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டுமென்று. (சென்னைத் தமிழில், ………அதுக்கின்னா இப்போ?)

ஒரு மாத காலமாக தங்களின் தத்துவம் குறித்த ஆழ்ந்த கட்டுரைகளையும் விவாதங்களையும் படித்த பின்னர் எனக்கு தோன்றிய ஞாபகச் சிதறல்கள் இவை.

தத்துவம் குறித்த பல்வேறு நூல்களை ஆழ்ந்து ஆனால் விலகி நின்றே வாசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் அதன் சாரங்களை உங்களால் deepப்பாக analyse செய்ய முடிந்திருக்கிறது. நான் அதிகம் படித்ததில்லை. படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.

மேலும் நீங்கள்… நீங்களாகவே இருப்பதுவும் வியப்பாக இருந்தது.

இளம்பரிதி

***

அன்புள்ள இளம்பரிதி சார்,

நித்யாவின் பிரியமான சொற்றொடர் ஒன்றுண்டு. ”ஒரு புதிய கருத்தை கேட்கும்போது அது புதியது என்பதனாலேயே மனஎழுச்சி கொள்ளாமலிருப்பதே தத்துவ சிந்தனையின் முதற்படி.”

தத்துவப்பயிற்சி ஒருபோதும் அப்படி ஒரு கருத்தில் நம்மை அடித்துக்கொண்டு செல்ல வைக்காது என்பதே என் எண்ணம். பொதுவாக ஓர் அடிப்படை தர்க்கமன அமைப்பும் நான் சிந்திப்பவன் என்னும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் அவர்கள் வாசிக்க நேரும் முதல் வலுவான சிந்தனையால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். கொஞ்சநாள் கழித்துத்தான் அவர்கள் அதிலிருந்து மீள முடியும்.

ஆனால் அது தத்துவமல்ல. அது ஒரு கருத்து மட்டுமே. தத்துவம் கருத்துநிலையாக அறிமுகம் ஆகாது, ஓர் விவாதக்களமாக முழுமையாகவே நமக்கு அறிமுகமாகும்.

தமிழில் முன்வைக்கப்படும் பெரும்பாலான சிந்தனைகள் இப்படிப்பட்ட உடனடி உணர்ச்சி வசப்படுதலின் விளைவாகவே அவை ‘இதோ சிந்தனையின் கடைசி வார்த்தை’ என்ற ஆரவாரத்துடன் முன்வைக்கப்படுகின்றன.

கொஞ்ச நேரம் முன்பு ரவிக்குமார் [விடுதலைச் சிறுத்தைகள்] உரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ரவிக்குமார் ஓர் அனுபவத்தைச் சொல்கிறார். ரணஜித் குகா என்ற ஆய்வாளர் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஒரு நூல் எழுதினார். அதில் தலைகீழாக்கம் என்னும் கருத்தை முன்வைத்தார். [inversion] யாருக்கு எதிராக போராடுகிறோமோ அவர்கள் உருவாக்கிய அனைத்தையும் தலைகீழாக ஆக்குதல் என்னும் போராட்ட வடிவம்தான் அது.

அதை படித்த தலித் சிந்தனையாளர் பேரா.ராஜ்கௌதமன் பெரிதும் ஊக்கம் கொண்டு அப்போது உருவாகிவந்த தலித் சிந்தனைகளில் அதை போட்டுப் பார்த்தார். விளைவாக ‘தலித் பண்பாடு’ என்ற நூலை எழுதினார். தலித்துக்கள் உயர்சாதியினர் உருவாக்கிய விழுமியங்களை தலைகீழாக்கவேண்டும் என்றும் தலைகீழாக்கக் கோட்பாட்டை அதில் முன்வைத்தார்.

தலித்துக்கள் குடிக்கவேண்டும், அழுக்காக இருக்க வேண்டும், ஆபாசமாக பேசவேண்டும், குடும்பம் ஒழுக்கம் போன்ற அமைப்புகளை நிராகரிக்க வேண்டும், வேலை செய்யக்கூடாது, சம்பாதிக்கக் கூடாது என்று அதில் வாதிட்டார். அந்நூலை தான் வெளியிட்டதாகச் சொல்லும் ரவிக்குமார் அந்த நூல் குறித்து தனக்கு அப்போதே ஐயம் இருந்ததாகவும் அதைப்பற்றி பின்னர் தலித் தலைவர்களிடம் பேசியபோது எளிய பட்டறிவின் அடிப்படையில் அவர்கள் அதை நிராகரிப்பதைக் கண்டு தெளிவடைந்ததாகவும் சொல்கிறார்.

இந்த நூல் இன்று ராஜ்கௌதமனாலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்றும்கூட பல இளைஞர்களிடையே ஆழமான செல்வாக்கை செலுத்தும் நூல் இது. குறிப்பாக குடியை ஒரு கலகமாக காட்டுவதில் இந்நூல் வெற்றியடைந்தது என்கிறார் ரவிக்குமார். பல தலித் படைப்பாளிகள் குடியை ஆதர்சமாகக் கொண்டு வழிமாற இது காரணமாகியது. குடி என்பது தலித்துக்கள் மீது மேல்சாதியினரால் செலுத்தப்படும் கொடும் சுரண்டல் என்ற தன் இப்போதைய கருத்தை ரவிக்குமார் முன்வைக்கிறார்.

இந்நூல் குறித்து அது வெளிவந்த காலத்திலேயே நான் கடுமையான எதிர்க்கருத்தை எழுதி பழமைவாதி என்று விமரிசிக்கப் பட்டிருக்கிறேன். ராஜ் கௌதமனின் இந்நுல் சொல்லும் கருத்துக்களை எந்த தலித்தும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒரு தலித்தின் முதற்கனவே நிலம் வாங்குவதும் வீடுகட்டுவதுமாகத்தான் இருக்க முடியும். அதுவே இயல்பு என எழுதினேன்.

ராஜ்கௌதமனின் அந்நூலின் முக்கியமான குறையே இது ஒரு கருத்தை புதுமை என்பதனாலேயே ஏற்றுக் கொள்கிறது என்பதுதான். அதற்கிணையான எத்தனை கருத்துக்கள்! பழமலை கவிதைகளுக்கான முன்னுரையில் அ.மார்க்ஸ் ஒரு வேடிக்கை செய்கிறார். ஃப்ராய்ட் பண்பாட்டு உளவியலை குதமைய நோக்கு–வாய் மைய நோக்கு என பிரிப்பதை அப்படியே ‘கச்சாவாக’ கவிதையில் போட்டுப் பார்க்கிறார். நாகார்ஜுனன் முன்பு பிரம்மராஜன் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையில் தெரிதாவின் கட்டவிழ்ப்பு உத்தியை கவிதையை சொல்லாராய்ச்சி செய்வதுபோல பயன்படுத்தினார். பின்னர் அவர்களே அவற்றிலிருந்து வெகுவாக முன்னே சென்றுவிட்டார்கள்.

தமிழில் அமைப்பியல், பின்நவீனத்துவம் எல்லாமே இப்படித்தான் அறிமுகமாகின்றன. தமிழவன் ஒருமுறை சொன்னார், இந்திய மொழிகளிலேயே அவர்தான் அமைப்பியலை அறிமுகம் செய்தவர் என்று. அதன் பயன்மதிப்பு, உண்மை என்பதைவிட அதன் புதுமையே முக்கியமாக இருக்கும் மனநிலை இங்கே தெரிகிறது.

தமிழவன் நூல்களில் அவர் அப்போது பேசும் சிந்தனைகளுக்கு கொஞ்சம் முன்னால் உள்ள சிந்தனைகளை எல்லாம் ‘பாடாவதி’ சிந்தனை என்று முத்திரை குத்துவதைக் காணலாம். சமீபத்தில் எம்.ஜி.சுரேஷ் டில்யூஸ்-கத்தாரி பற்றி எழுதிய சிறு நூலில் அவர்கள் ஃப்ராய்டை ‘கொட்டிக்கவிழ்த்து’ விட்டதாக எழுதியிருந்தார். இதுவும் ஆகப்புதிதே உண்மை என்ற எளிமையான மனநிலையின் வெளிப்பாடே.

கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக நான் தத்துவத் தளங்களில் கருத்துக்களைக் கையாளும் விதம் குறித்து எழுதி வந்திருக்கிறேன். தத்துவத்தில் உள்ள எக்கருத்தும் நிரூபணம் சார்ந்தது அல்ல. ஆகவே எதுவுமே ‘காலாவதியாகி’ விடுவதில்லை. மறுக்கப்படாத கருத்தே தத்துவத்தில் இல்லை. முழுமையாக நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் கூட அழிந்துவிடுவதில்லை. நவீனத்துவ காலகட்டத்தில் முற்றிலுமாக நிராகரிக்கபப்ட்ட நீட்சே மற்றும் ஹெகல் போன்றவர்கள் பின் நவீனத்துவ காலகட்டத்தில் மீண்டெழுந்து வந்தார்கள்.

சிலசமயம் கருத்துருவங்கள் காலப்போக்கில் படிமங்களாக மாறி மீண்டு வரக்கூடும். ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் பிற்காலத்தில் ழாக் லக்கான் போன்றவர்களால் உளவியல் சார்ந்த ஒரு உருவகமாகவே கையாளப்பட்டது.

இன்னும் ஒன்று உள்ளது. தத்துவத்தின் நடைமுறையில் உள்ள எந்த சமகாலக் கருத்துக்கும் முதல்தொன்மைக் காலத்திலேயே கருத்து சார்ந்த ஒரு வேர் இருக்கும். தத்துவத்தில் முற்றிலும் புதிய கருத்தே சாத்தியமில்லை.

நான் என் வாசிப்பின், சிந்தனையின் வழியாக குத்துமதிப்பாக புரிந்துகொண்ட விஷயங்களை பின்னர் மாபெரும் தத்துவ ஆசிரியரான நித்ய சைதன்ய யதியின் காலடியில் அமர்ந்து தெளிவுபடுத்திக் கொண்டேன்.

என் நோக்கில் தத்துவக் கருத்துக்களின் பெறுமதியை அறியும் மதிப்பீடுகள் சில உள்ளன. அவற்றை பத்து விதிகளாகவே சொல்கிறேன்.

  1. தர்க்கபூர்வமாக சரியாக இருப்பதனாலேயே ஒரு கருத்து உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. அது தருக்கபூர்வமான உண்மை மட்டுமே.
  2. ஒரு சரியான கருத்து அதற்கு நேர் எதிரான கருத்தை தவறாக ஆக்க வேண்டும் என்பதில்லை. இரண்டுமே சரிகளாக இருக்கலாம். அவை வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
  3. இலக்கியம் ஒருபோதும் தத்துவத்தை முன்வைப்பதில்லை. தத்துவத்தின் சாயலையே அது முன்வைக்கிறது. தத்துவ சிந்தனையை உருவாக்கும் மனநிலைகளை வாசகனில் அது எழுப்புகிறது.
  4. ஓர் இலட்சியவாதக் கருத்து நடைமுறைத் தளத்தில் ஓரளவேனும் செல்லுபடியாக வேண்டும். முற்றிலும் இலட்சிய வாதத்தனமாக உள்ள கருத்து என்பது பெரும்பாலும் பயனற்றதே.
  5. ஒரு திட்டவட்டமான கருத்தை அருவமாக்கியும் ஓர் அருவமான கருத்தை திட்டவட்டமாக ஆக்கியும் அதன் உண்மை மதிப்பை ஊணர முடியும்.
  6. ஓர் நடைமுறைக் கருத்து ஒருபோதும் திட்டவட்டமாக – முடிவானதாக இருக்கலாகாது. அது சற்றேனும் ஐயத்துக்கும் மாறுதலுக்கும் இடமளிக்கும்போது மட்டுமே அது நேர்மையானதாக இருக்க முடியும்.
  7. ஒரு மீபொருண்மைக் [மெடபிஸிகல்] கருத்து கவித்துவம் மூலம் நிலைநாட்டப்படாமல் அதிகாரம் அல்லது நம்பிக்கை மூலம் நிலைநாட்டப்படுமென்றால் அதை முற்றாக நிராகரிப்பதே முறை.
  8. தத்துவத்துடன் எப்போதுமே நேரடியான அதிகாரம் தொடர்பு கொண்டுள்ளது. பெரும்பாலும் தத்துவ விவாதங்கள் அதிகாரங்கள் நடுவே உள்ள விவாதங்களே. ஆகவே நட்பான தளம் இல்லாவிட்டால் ஒருபோதும் தத்துவ விவாதம் செய்யலாகாது. அது உடனடியாக தத்துவத்தின் தளத்தை விட்டு வெளியே சென்றுவிடும்.
  9. அன்றாட வாழ்க்கைக்கு எவ்வகையிலேனும் பயனளிக்குமா என்ற கேள்வி தத்துவத்தின் பெறுமதியை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது.

ஜெ

[முதற்பிரசுரம் மார்ச் 2009/ மறுபிரசுரம்]

***

விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்

கவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்

கென் வில்பர்:இருகடிதங்கள்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்
அடுத்த கட்டுரைகோவையில் உரையாற்றுகிறேன்