அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். நேற்று நான் உங்களை புதுச்சேரி இல் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
உங்களுடைய பயண கட்டுரைகளின் தூண்டுதலினால் நானும் வாரம் ஒருமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்ற இடங்களில், சிலவற்றை குறிப்பாக பழைய தொண்டை நாட்டு சமண கோவில்களை பற்றி நான் இணையத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்து இருக்கிறேன்.கடந்த ஓராண்டு காலமாக இணையம் வழியாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் பெரும்பாலான கட்டுரை நூல்களை படித்துவிட்டேன். குறிப்பாக இன்றைய காந்தி என்னை மிகவும் பாதித்த நூல்.விஷ்ணுபுரம் எனக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. எப்படியும் படிப்பேன்.
I) Wikipedia article
Thirakoil wikipedia article
II) Wikimapia Additions
1) Arugan jain temple, Poondi, Arani.
2) Ponnur jain Temple
3) Elangadu Jain Temple
4) Kilsathamangalam Jain temple
5) Thunandar Rock cut jain temple, Seeyamangalam
6) Perumal Parai (jain inscriptions)
7) Thirakoil Jain temple
8.) Seenapuram Jain Temple
9) Jain Ahimsa Trust, Kund kund nagar
10) vizhukkam jain temple
11) Jain-Cave-Parsawanathar
இதில் திறக்கோயில் பற்றி எழுதியது என்னுடைய நண்பர் ராஜேஷ் கண்ணன். மேல்சித்தாமூர்- ஐ போலவே போளூர்க்கு அருகில் இருக்கும் திருமலை சமண மடமும் முக்கியமானது ( http://www.youtube.com/watch?v=zQAjryH3nUU). இந்த சமணர் கோவிலுக்கு அருகில் வாழும் சமணர்கள் அனைவருமே நூறு சதம் விவசாயிகள் (எனினும் இப்போது இருக்கும் தலைமுறையினர் கல்வி கற்று வெளியூர் சென்று விட்டனர்)என்பது எனக்கு ஆச்சரியம் ஊட்டியது. இன்னும் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக அதை பற்றி உங்களுக்கு மெயில் செய்வேன்.
தமிழ்நாட்டில் இருக்கும் சமணர் கோவில் புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணையத்தளம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
(http://www.jainworld.com/jaintemples/tamilnaduphotoclips.asp)
நேற்று நடந்த கூட்டத்தில் நான் கேட்க விரும்பிய கேள்வி இப்போது கேட்க விரும்புகிறேன். பௌத்த சமண மதங்கள் கோலோச்சிய காலகட்டங்களில் பஞ்சமர்கள் என்றொரு பிரிவு இருந்ததா? அல்லது நால் வருண பாகுபாடு மட்டும் இருந்ததா? நாள் வருண பாகுபாடு மட்டும் இருந்தது என்றால், சூத்திரர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? தீண்டாமை என்பது வைதீகத்தின் உருவாக்கமா?
என்றும் தங்கள் அன்புள்ள,
க. சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்
மிக முக்கியமான பணி. நான் இந்த எல்லா இடங்களுக்குமே செல்லவேண்டுமென்ற திட்டத்துடன் இருக்கிறேன்
உங்கள் கேள்விக்கு மிக விரிவாகவே பதில் சொல்லவேண்டும். மூன்று அடிப்படைப்புரிதல்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்
ஒன்று, சாதிக்கும் வருணத்துக்கும் சம்பந்தமில்லை. சாதி இந்தியாவிலிருந்த பலநூறு பழங்குடி இனங்கள், குலக்குழுக்கள் ஒரு பொது சமூகமாக திரட்டப்பட்டபோது உருவானது. மேல் கீழ் அடுக்கு உருவாகாமல் நிலவுடைமைச் சமூக அமைப்பு உருவாக முடியாது என்பதனால் சாதி அதிகார அமைப்பாகவே உருவாகி அப்படியே நீடித்தது. வருணம் என்பது அந்த சாதிகள் மேல் போடப்பட்ட ஒரு பொதுவான அடையாளம் மட்டுமே. எந்த சாதி எந்த வருணத்தைச் சேர்ந்தது என்பது எப்போதுமே பிரச்சினைக்குரியதாக, தோராயமானதாக மட்டுமே இருந்தது.
இரண்டு, சாதி ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. சமூகத்தை கட்டி எழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது அல்ல. அதுதான் பலவகைப்பட்ட மக்களால் ஆன இந்திய சமூகத்தை ஒரே சமூகமாக நாடுகளாக ஆக்கியது. கூடவே அது மேல் கீழ் அமைப்பை உருவாக்கியது. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் உருவாக்கியது.
மூன்று, சாதிக்கும் நில உடைமை அதிகாரத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. எந்தச் சாதி நிலம் வைத்திருக்கிறதோ அது மேலே செல்லும். நிலத்தை இழந்தால் கீழே செல்லும்
சாதியமுறை தமிழகத்தில் வரலாற்றின் ஆரம்பம் முதல், சங்ககாலத்துக்கும் முன்னாலேயே, இருந்து வந்தது. சொல்லப்போனால் சாதி வழியாகவே நம் சமூகம் உருவாகி வந்தது. அதுதான் நம் சமூகத்தை தொகுத்தது. நில அதிகாரம் மாறமாற சாதிகள் சில மேலே சென்றன , சில கீழே சென்றன.
பௌத்த சமண காலகட்டத்தில் நில உடைமையுடன் மேலே நின்ற சாதிகள் பௌத்தமும் சமணமும் வீழ்ந்தபோது நிலத்தை இழந்து கீழே சென்றன என்பதுதான் பரவலாக பேசப்படும் கொள்கையாக உள்ளது
நாம் மீண்டும் சந்திப்போம்.
ஜெ