ஆதமிண்டே மகன் அபு

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களின் நீண்டநாள் வாசகன், “ஆதமின்டே மகன் அபு” திரைப்படம் பற்றி ஓர் அறிமுகக் கட்டுரை எழுத முயற்சித்தேன், இந்த வாரம் உயிரோசையில் வெளிவந்துள்ள அக்கட்டுரை இங்கு தாங்கள் பார்வைக்கு,
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4923
It can be readable in my blog also,
http://bhilalraja.blogspot.com/2011/10/blog-post_24.html

அன்புடன்

பிலால் ராஜா

அன்புள்ள பிலால்ராஜா

இன்னும் கூட விரிவாகவே அந்தப்படத்தைப்பற்றி எழுதியிருக்கலாம். படத்தைப்பற்றி எழுதும்போது நம்மை விகடன் குமுதம் வகை எழுத்துக்கள் கட்டுப்படுத்துகின்றன. படத்தின் கதையைச் சொல்லி, ஒரு மதிப்பீட்டை முன்வைத்து முடிக்கிறோம். இணையத்தில் அதிகம் தென்படுவது இத்தகைய விமர்சனங்கள்தான்.

உண்மையில் திரைப்படத்தைப்பற்றிய நம்முடைய புரிதல்களை மட்டுப்படுத்துவதே இந்தவகையான சுருக்கமான பேச்சுதான். ஒரு படம் அளித்த எல்லா சிந்தனைகளையும் முன்வைக்க முயலவேண்டும். அதன் எல்லா சிறு அம்சங்களையும் கருத்தில்கொண்டு பேசவேண்டும். அப்போதுதான் சினிமா பற்றிய நம்முடைய விவாதம் பயனுள்ளதாக அமையும்.

ஆதமிண்டே மகன் அபு ஒரு நல்ல படம். ஆனால் உணர்ச்சிகரமான படம் மட்டும் அல்ல. மிக மென்மையாக அது சில சிந்தனைகளை முன்வைக்கிறது. மதமும் பாரம்பரியமும் நமக்கு அளிக்கும் அறத்தை அப்படியே கடைப்பிடிப்பதல்ல சரியான வழி என்று சொல்கிறது இல்லையா? நம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் அந்த அறத்தை இன்னும் நீட்டித்துக்கொள்ள அது அறைகூவுகிறது. அபு சென்று சேர்வது மதம் சார்ந்த அறத்தை அல்ல. மதம் சார்ந்த அறத்தில் வேரூன்றி நின்றுகொண்டு மனிதம் சார்ந்த நவீன அறம் ஒன்றை அவர் தொடுகிறார்.

அந்த மையம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்து விவாதிக்கும்போதுதான் நாம் அந்தப்படத்தைப்பற்றிய உண்மையான எதிர்வினையை ஆற்றுகிறோம். அதுவே அந்தப் படத்துக்கு நாம் ஆற்றும் கௌரவம்.

சலீம்குமார் அற்புதமான நடிகர். நான் எழுதும் எல்லாப் படங்களுக்கும் அவரை இங்கே பரிந்துரை செய்திருக்கிறேன். நடக்கவில்லை.

சமீபத்தில்கூட பல நல்ல படங்கள் வெளிவந்தன. பிராஞ்சியேட்டன் ஆண்ட் த செயிண்ட் [இயக்கம் ரஞ்சித்] முக்கியமான படம். இன்னொரு தளத்தில் சால்ட் ஆண்ட் பெப்பர் [இயக்குநர் ஆஷிக் அபு] முக்கியமான படம்

ஜெ

முந்தைய கட்டுரைகுற்றமும் தண்டனையும்
அடுத்த கட்டுரைநோபல் பரிசு இந்தியருக்கு