அன்புள்ள ஜெயமோகன்,
உங்களது பூதம் மற்றும் தெய்வமிருகம் படித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஆனால் எனது ஆழ்மனம் கொஞ்சம் சிரிக்கின்றது. ஏனென்றால் எந்தந்தையும் என்னை பிச்சு, கிழிச்சு, ம்..ம்..கொல்ல மட்டும் செய்யாமல் என்னை விட்டுவைத்தார். இல்லை அதிலிருந்து நான் தப்பிவிட்டேன். பல அப்பாக்களுக்கு தன் அத்தனை குழந்தைகளில் குறிப்பாக ஒரு ஆண் குழந்தை மீது மட்டும் ஏன் இந்த கொலை வெறித்தாக்குதல்? தன் மனைவியின் மேலுள்ள கோபத்தை இவனின் மீது காட்டுகின்றார்களா? இல்லை, சிறுவயதிலேயே இவர்களுக்குத்தெரியுமா இவன்தான் வருங்காலத்தில் தனக்கு போட்டியாக இருக்கப்பொகிறானென்று.அல்லது தன் மனைவி தன்னிடம் காட்டுவதைவிட தன் மகனிடம் அதிக பாசம், அக்கறை காட்டுவதாலா?
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போதும் என்தந்தையின் பாசம் தொடர்கின்றது. ஆம், தான் இறந்தால் எனக்கு அந்த மரண சடங்கிற்கு அறிவிப்பு கொடுக்கவேண்டாமென்று வீட்டாரிடம் சொன்ன விவரத்தை என்னிடமும் சொன்னார். இதற்கும் மேலான வெறுப்பொன்றுளதோ?
கொஞ்சம் விளக்கமான பதில் தேவை.
இப்படிக்கு
கிறிஸ்டோபர்
அன்புள்ள கிறிஸ்டோபர்
பொதுவாக இம்மாதிரியான உறவுச்சிக்கல்களை கோட்பாட்டாளார்கள் உளவியல் சமூகவியல் அடிப்படையில் விளக்கி பொதுக்காரணத்தை அல்லது பொதுவிதியைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அப்படி எழுத்தாளன் சொல்லிவிடமுடியாது. அதில் இருந்தே அவனது எழுத்துக்கான தேஎடல் ஆரம்பிக்கிறது.
அப்பா மகன் உறவில் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது என்பது சிக்மண்ட் ·ப்ராய்டின் கோட்பாடு. மகன் தாய்க்கு ஒரு ஆணின் இடத்தை நிரப்ப ஆரம்பித்துவிடுவதனால் அப்பாவுக்கு மகனைப் பிடிக்காமல் ஆகிறது என்றும் அதேபோல அப்பாவை மகனும் வெறுக்கிறான் என்றும் இக்கோட்பாடு சொல்கிறது. என் நோக்கில் இது மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு நோக்கு. அப்பா மகன் உறவில் Inheritance வாரிசாதல் என்ற அம்சமே பெரும்பங்கை வகிக்கிறது. அப்பாவுக்கு மகன்மேலுள்ள உறவில் அவன் தன் நீட்சி என்ற உணர்வு அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது. அப்படி மகன் தன் இயல்புகளின் வாரிசாக இல்லையோ என்ற ஐயம் வெறுப்புக்கும் அடிப்படையாக அமைகிறது.
பொதுவாக நமக்கு ஒருவரை பிடிக்காமலாவதற்கான காரணங்களை நம்மாலேயே சொல்லிவிடமுடிவதில்லை. நமக்குப்பிடிக்காமல் இருக்கும் ஒருவரின் சாயலை ஒருவரில் கண்டால் நாம் அவரை வெறுக்கிறோம். நம்மில் இருக்கும் நமக்குப் பிடிக்காமல் இருக்கும் ஓர் அம்சத்தை இன்னொருவரில் கண்டால்கூட அவரை நாம் வெறுக்கிறோம். வெறுப்பின் ஊற்றுமுகங்கள் மிகமிக ஆழமானவை.
மனித வாழ்க்கையை நுட்பமாக புரிந்துகொள்வது மனிதவாழ்க்கையில் இருந்து நுட்பமாக விலகி நிற்பதற்கு நமக்கு உதவவேண்டும்.அப்போதுதான் உறவுகளை நம்மால் நிதானமாக கையாள முடியும். அதற்கு மட்டுமே இந்தச் சிந்தனைகள் உதவுகின்றன. மற்றபடி வாழ்க்கையை நேரடியாக ஈடுபட்டுக் கையாள்வதற்கு கோட்பாடுகளும் சிந்தனைகளும் எவ்வகையிலும் உதவாது. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். வாழ்க்கைத்தருணங்களோ முடிவிலாதவை
ஆகவே அப்பாவை அல்லது பிற உறவுகளை எளிமைப்படுத்தி விளக்கிக் கொள்ள முயலவேண்டாம். சற்றே விலகி நின்று என் கதை அல்ல இது என்பது போல பார்த்து அறிய முயல்வதே நல்லது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
நலம் அறிய விருப்பம் சார்; ‘நிகழ்தல்” புத்தகத்தை வாசித்தேன். முதல் சில கட்டுரைகளை வாசித்து கொண்டு இருக்கும்போது; “ஆறிலிருந்து அறுபது வரை” என்ற படத்தை பார்த்திருகீர்களா? (பார்க்கவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை) அதில் ஒரு டயலாக் இரண்டு முறை வரும் ஓன்று சொல்வது மாதிரி மற்றொன்று உணர்வது மாதிரி ;”ஒருவனுக்கு தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால் அவனை கடவுள் எதிர்காலத்தில் ஏதோ நல்ல காரியத்திற்கு தயார் செய்ய விரும்புகிறார் ” என்று சில கட்டுரைகளை தாண்டும்போது ஒரு ரியல் டைம் எடுத்துகாட்டாக பதிகிறீர்கள். அந்த அனுபவங்கள் தான் பிறகு வரும் அடுத்த கட்டுரைகளில் சாதரண நிகழ்ச்சிகள் என்று அலசியபடுத்தப்படும்
அநேகரால்(என்னையும் சேர்த்து) பல சம்பவங்களுக்கு அதன் அருமை உங்களால் நுண்ணுனர்வையும் நெகிழ்வையும் கொண்டாட்டத்தையும் உணர வைக்கிறது. அதற்கு பிறகு வரும் ” மொழியும் நானும் ” மற்றும் அனைத்து கட்டுரைகளையும் ஒவ்வொன்றாக சொல்லி கொண்டே போகலாம். எல்லாம் சம அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. (கொஞ்சமான எக்ஸ்செப்ட் ஷோலே).உங்கள் சம கால எழுத்துகளை நான் ரொம்பவும் படித்ததில்லை. இதில் கவனிக்கும் போது இன்னும் தீவிரம் கலந்த இன்னும் சுவாரசியாமான நடை;”ஒரு பொருளியல் விபத்து ” என்ற கட்டுரை வந்து “ஏழாம் உலகம்” நாவலின் “பனிவிழும் மலர்வனம்” போத்தியை ஞாபகம் செய்கிறது. முடிக்கும் போது உங்கள் மீதான ஆளுமையின் மதிப்பு பல மடங்கு கூடி விடுவதை உணர்கிறேன் . .
மிக உன்னதமான கட்டுரை இலக்கிய படைப்பு
இதன் அச்சுநேர்த்தி குறிப்பாக பெரிய எழுத்துகளில் ஆன தலைப்பு எனக்கு பிடித்து இருந்தது.ரொம்ப நன்றி சார் , சுகுமாரன் அவர்களின் கவிதைக்கும் சேர்த்து ;
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
நெடுங்காலம் கழியும்போது நாம் வாழ்க்கையில் இருந்து மெல்ல விலக ஆரம்பிக்கிறோம்.அப்போது நம்மால் வாழ்க்கையைப்பற்றி சற்றே தொகுத்து எழுத முடிகிறது. நிகழ்தல் அப்படி எழுதப்பட்ட கட்டுரை-கதைகள் அடங்கியது. அதில் உள்ள தெய்வமிருகம் போன்ற கடுரைகளை கொஞ்சகாலம் முன்னால் என்னால் எழுதியிருக்க முடியாது.
நானெழுதிய ‘வாழ்விலே ஒருமுறை‘ என்ற நூலில் இக்கட்டுரைக்கதைகளுக்கு முன்வடிவமான பல படைப்புகள் உள்ளன. கவிதா பிரசுரம்
ஜெ
அன்புள்ள ஜெ..சார்,
தங்களின் ATM அனுபவத்தை ரசித்துப்படித்தேன். அனைவருக்கும் அடிக்கடி ஏற்படும் அனுபவங்கள்தான். தாங்கள் எழுதி இருந்த விதம் (முக்கியமாக ‘தற்கொலை‘ நினைப்பு) வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது.
இந்த சர்தார்ஜி ஜோக்கும் நினைவுக்கு வந்தது.
இரண்டு சர்தார்ஜிகள் ATM centre க்கு சென்றார்கள்.
முதல் சர்தார்ஜி பணம் எடுத்துக் கொண்டிருந்தான்.
பின்னாலிருந்தவன் எட்டிப்பார்த்துவிட்டு,
‘உன் password ஐ பார்த்துவிட்டேனே….6 ஸ்டார் தானே?’ என்றான்.
அதற்கு முன்னால் இருந்த சர்தார்ஜி சொன்னான், ‘தப்பு…அது 673457′
—
elamparuthy