கவிஞர் சுரதாவை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். 1992ல், வாணியம்பாடி கலைக்கல்லூரியில் ஒரு தமிழ்விழாவுக்காக பேசச்சென்றிருந்தேன். எங்கள் பேச்சு முடிந்ததும் கவியரங்கம், அதில் சுரதா பேசுவதாக இருந்தது. நாங்கள் சென்றதுமே சுரதா வந்து கல்லூரி அறையில் காத்திருப்பதாகச் சொன்னார்கள். சென்றுபார்க்கலாமென உடனிருந்தவர்கள் சொன்னார்கள்.
எனக்கு சுரதா மீது கவிஞராக எந்தவிதமான நல்லெண்ணமும் இல்லை.பாரதிக்கு இருநூறாண்டுக்காலம் முந்தைய அழகியல் கொண்ட கவிதைகள். ஒரு கட்சிக்கொள்கை போல ஏற்றுக்கொண்ட முற்போக்கு நம்பிக்கைகள். அந்தவகை நம்பிக்கைகளுக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று எனக்கு தெரியும். அவை முழுக்கமுழுக்க மேடைக்கானவை. தனிவாழ்க்கையில் அவற்றை எவ்வகையிலும் அதைச்சொல்பவர்களும் கேட்பவர்களும் பொருட்படுத்துவதில்லை. ‘நல்ல’ திராவிட இயக்கத்தவரின் உதாரணமான சுரதா அவ்வகையிலேகூட பொருட்படுத்தத் தக்கவரல்ல என்பதே என் எண்ணம்.
சுரதா கல்லூரியின் ஆய்வுகூடம் போன்ற எதிலோ இருந்தார். ஒரு சாதாரண ஜிப்பா அணிந்து வேட்டியை காலிடுக்கில் சுருட்டிவைத்துக்கொண்டு காலை இரும்பு நாற்காலியில் தூக்கி வைத்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். கூடநாலைந்துபேர் இருந்தார்கள். நாங்கள் உள்ளே சென்றதும் எங்களை அறிமுகம்செய்துவைத்தார்கள். சுரதா என்னைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அவர் கேட்ட முதல் கேள்வியே ‘தம்பி என்ன சாதி?’ என்பதுதான்.
அவர் மட்டுமல்ல கணிசமான பழைய திராவிட இயக்கத்தவர் அந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள் என எனக்குத்தெரியும். நான் பிராமணனா தலித்தா என்பதுதான் அந்தக்கேள்வியின் சாராம்சம். இரண்டில் எதுவாக இருந்தாலும் என்னிடம் ஜாக்ரதையாகப் பேசவேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் வட்டாரம் சார்ந்து குணவேறுபாடுகளை கணித்தும் வைத்திருப்பார்கள். நான் சொன்னேன். ‘மலையாளத்தானா?’ என்றார் ஆர்வமில்லாமல்.
நாகர்கோயில் என்றதுமே சுந்தர ராமசாமி நினைவுக்கு வந்தது அவருக்கு. ‘அய்யிரு என்னையப்பத்தி சொல்லியிருக்காரு தெரியுமில்ல…’ என்றார். சுபமங்களாவில் வந்த பேட்டியில் சுந்தர ராமசாமி சுரதாவை குறிப்பிட்டிருந்தார். சுரதா பெருமை பொங்க ‘என்னையப்பத்தி நல்லாத்தான் சொல்லியிருக்காரு…அய்யமாரு அதையெல்லாம் உத்து கவனிப்பானுக… அன்னிக்கும் இன்னிக்கும் அவனுகதானே வாசிக்கிறது…நம்மாளுக எவன் வாசிக்கிறான்?’ என்றார்.
’நீங்க சினிமாலே வேலைபார்த்தீங்கல்ல?’ என்று கேட்டேன். ‘ஆமாமா…நெறைய பாட்டு வசனம் எளுதினேன்.அந்தக்காலத்திலே ஒண்ணும் மதிப்பு மரியாதை கிடையாது. நாம எளுதுறத அவனவன் தன் பேருக்கு போட்டுக்குவான்…சும்மா அடைப்பக்காரன் வேலை…தம்பி சர்க்கார் உத்யோகமா?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘விட்டிராதீங்க…எலக்கியத்த நம்பி சோறு திங்க முடியாது’ மீண்டும் நாகர்கோயில். நாஞ்சில்நாடனைப்பற்றி கேட்டார். ‘நாடாக்கமாரெல்லாம்கூட இப்ப எளுதுகானுக’ அவர் நாடார் இல்லை வேளாளர் என்றேன். ‘அப்டியா சொல்லுறீங்க?’
சுரதா எனக்கு ஒரு கிராமத்து கிழவராக தெரிய ஆரம்பித்தார். பல எழுத்தாளர்களைப்பற்றிய வம்புகள் வந்துசென்றன. எல்லாரையும் சாதியாலேயே சுட்டிச் சொன்னார். தற்செயலாக பேச்சு செந்தமிழ்ச்செல்வி இதழைப்பற்றி திரும்பியது. அதன்பின்னர் அவர் தகவல்களாக பொழிய ஆரம்பித்தார். செந்தமிழ்ச்செல்வியின் எல்லா இதழ்களும் தன்னிடமிருக்கின்றன என்று சொன்னார். ‘அதிலே தமிழர் திருமணம் பத்தி ஒரு டிஸ்கஷன் ஓடிச்சு தம்பி.நீங்க அவசியம் படிக்கணும்…கதையெல்லாம் எளுதிறீக’
மேலும் அரைமணிநேரத்தில் அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். ‘நாப்பத்தஞ்சு வருச தமிழ் வரலாறே கைவசம் இருக்கு…வந்து பாருங்க…எளவு எல்லாமே செல்லரிச்சு போயிருக்கு. எவன் படிக்கிறான்…ஒருத்தனுக்கும், இண்ட்ரெஸ்ட் இல்ல. எவனாவது அய்யமாரு வந்து வாசிச்சாத்தான் உண்டு…’ அவர் திராவிட இயக்கத்தின் பேசுபொருட்கள் எல்லாம் மறைந்துவிட்டன என்ற துயரம் கொண்டிருந்தார். ‘எனக்கு திராவிட இயக்கம் பத்தி ஒண்ணும் நல்ல அபிப்பிராயம் கெடையாது’ என்றேன். ‘நம்ம கவிதை வாசிப்பீங்களோ’ ‘வாசிச்சிருக்கேன்…வெறும் வார்த்தைகளா இருக்கு…ரொம்ப பழைய கவிதை…’
‘இருக்கலாம்…அதுக்கென்ன?’ என்றார். எனக்கு அந்த சகஜமான இயல்பு ஆச்சரியமளித்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. ‘நீங்க புதுக்கவிதை எளுதுறீங்க போல’ என்றார். ‘இல்ல நான் கவிதையெல்லாம் எழுதறதில்லை’ ‘இப்பதான் பலபேரு கெளம்பி என்னமோ கிறுக்கிறானுங்ங்களே க.நா.சுப்ரமணியம்னு ஒரு அய்யிரு..கையெல்லாம்கூட வீங்கியிருக்கும்…பாத்திருக்கேன்..அவருகூட நெறய கவிதைமாதிரி எளுதுவாரு… சரி எல்லாம் வரட்டும்..’ அவர் அப்போதுதான் எனக்கு பிடித்தமானவராக ஆனார். அவருக்கு இந்த ஆட்டத்திற்கு அப்பால் செல்லும் விரிவு உள்ளூர இருந்தது.
‘பளைய கவிதைன்னு சொன்னீங்க தம்பி…பளசுன்னு தெரிஞ்சுதான் எளுதினது…அதுக்குண்டான தேவைய நீங்க புரிஞ்சுகிடணும்….எதுக்கு பளையமாதிரி எளுதினோம்? ஏன்னாக்க நமக்குன்னு ஒரு மரபு இருக்கு. ஒலகத்திலே ஒண்ணோ ரெண்டோ மொழிக்காரனுக்குத்தான் அந்த மரபு இருக்கு…அந்தமரப நாம விட்டுட்டோம்னா அப்றம் நாம யாரு? சரி கேக்குறேன், இந்த மரப விட்டா பின்ன நமக்கு எளுத என்ன இருக்கு? வெள்ளைக்காரன் விமானத்த கண்டுபிடிச்சான். அத கொண்டுபோயி குண்டு போட்டு ஊரையெல்லாம் இடிச்சான்…அவனுக்கு எளுதறதுக்கு என்னென்னமோ இருக்கு. நாம என்ன மயித்த எளுதிர முடியும்? புளிச்சதண்ணிய குடிச்சுட்டு தெருவில வெளிக்குபோற சனங்க நாம…நாம அப்டி என்னத்த எளுதிருவோம்? உங்க சுந்தர ராமசாமி என்ன மயித்த எளுதிட்டார்? நான் கேட்டேன்னு போயி கேளுங்க’
கரகர தொண்டையில் கோபமே இல்லாமல் சாதாரணமாக பேசிக்கொண்டே சென்றார். ‘நம்மகிட்ட இருக்கிறது மரபு மட்டும்தான். அவ்ளவு பெரிய மரபு. மொதல்ல அங்க இருந்து ஒரு தொடர்ச்சிய உண்டு பண்ணுவோம்னு நினைச்சோம். பாரதிய எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த அய்யிருக்கு இந்த மரபு என்னான்னு தெரியும். ஆனா அவருக்கு வேதம் முக்கியம். வேதமுடைய தமிழ்நாடுங்கிறான். அது அவன் சாதிப்புத்தி. அவன் எல்லாத்தையும் விட்டுட்டு சொம்மா கீர்த்தனையா பாடி வச்சுட்டான். நாம அப்டி விட்டிர முடியாதுல்ல? நமக்கு மரபு இருக்குல்ல? அதனால அங்க ஆரம்பிச்சோம்…அத உடைச்சுகிட்டு புதிசா ஒண்ணு வந்தா வரட்டும்னு நினைச்சோம்…எங்களுக்கும் புதுக்கவிதைன்னு நாலு வார்த்தய பொட்லமா மடிக்க தெரியாதா என்ன? ஆனா செய்யல்ல. மரப படிச்சு, மொழிய படிச்,சு புதிசா அதை உருவாக்கணும்னு நினைச்சோம்…
’நாங்க தோத்துட்டோம்னு சொல்றீங்க… அது எங்களுக்கே தெரியாதா என்ன? இந்தா வாறானுக , கவியரங்க கவிதைன்னு என்னமோ எளவையெல்லாம் கொண்டாந்து வாசிக்கிறானுக… ஒருபய ஒண்ணும் வாசிக்கிறதில்லை. எல்லாம் வேலையத்த பொளைப்பா போச்சு இப்ப…அதுக்காக நாங்க செய்தது இல்லேண்ணு ஆயிடுமா என்ன? எல்லாம் இங்கதான் இருக்கும்… அந்தக்காலத்திலே சுத்திவச்ச மண்சட்டிய எல்லாம் தோண்டி எடுக்கானுக. அதை மாதிரி இதையும் எடுக்கட்டுமே. இப்ப என்ன குறைஞ்சுபோச்சு? மண்ணு இருக்கே அது எல்லாத்தையும் வச்சுகிடும்… தமிழ் மண்ணுல என்னெனமோ இருக்கு தம்பி…இதுவும் இருந்துட்டு போவுது’
எனக்கு பேசுவதற்கு அழைப்பு. நான் பேசி முடிந்து வந்தபோதும் கவிஞர் அதே இடத்தில் அப்படியே இருந்தார். ‘வாங்கதம்பி பேசியாச்சா? என்னத்தை பேசினிங்க? சனங்களுக்கு ஒண்ணும் புரியறதில்ல. தமிழ் வாழ்க்கை அது பாட்டுல எங்கியோ இருக்கு. நீங்கள்லாம் எங்கியோ என்னமோ பேசிட்டிருக்கீங்க…ஒக்காருங்க…நீங்க அய்யிரோட ஆளா இருந்தாலும் பழசெல்லாம் படிக்கிறீங்க. ரொம்பநாள் கழிச்சு செந்தமிழ்ச்செல்விபத்தி எங்கிட்ட கேக்கிற முத சின்னப்பையன் நீங்கன்னு வைங்க….நேரம் கிடைக்கிறப்ப வீட்டுக்கு வாங்க…ஆற அமர எல்லாத்தையும் காட்டுறேன். பிடிச்சிருந்தா நம்ம வீட்டிலே வேணுங்கிறமாதிரி தங்கிக்கூட எல்லாத்தையும் படிங்க…
‘என்னென்னமோ இருக்கு தம்பி…ஏகப்பட்டது பேசியிருக்காங்க. பேசிப்பேசி உண்டுபண்ணி எடுத்திருக்காங்க…ஒண்ணுமே இல்லியே. தமிழனுக்கு திருவோடு மட்டும்ல இருந்தது… எல்லாம் பேசி பேசி கண்டுபிடிச்சு வச்சதுதானே? இப்பகூட நமக்கு நம்மளப்பத்தி ஒண்ணும் தெரியாது….பெரிசா புறநாநூறு புடலங்கான்னு பேசிட்டிருக்கோம்….ஒருத்தனுக்கு ஒரு மயிரும் தெரியாது…. இப்ப கேக்கிறேன். சங்கப்பாட்டிலே ஆதன்னு ஒரு சொல்லு வருதே அதுக்கு என்ன அர்த்தம்?’
‘அவங்க ஒரு அரசகுலம் இல்ல?’ என்றேன். சிரித்து ‘சரிதான் கவனிச்சிருக்கீங்க…ஆனா ஆராய்ச்சி பண்ணல…ஆனா கவனிச்சதே பெரிய விசயம்…சங்கப்பாட்ட கூர்ந்து படிக்கிறீங்க பாருங்க அதுவே பெரிய விஷயம்… ஆதன்னா ஒரு தனி இனமா இருந்திருக்கலாம்னு தோணுது. ஆதன்கிற அடைமொழியோட நெறைய பேரு இருந்திருக்காங்க. நல்லாதனார் மாதிரி கவிஞனுங்க…பல அரசர்கள்…அவனுங்க யாரு…ஆதன்னாக்க ஒரு பேரு மட்டும்னு சொல்லிட முடியாது…ஆதர்கள் வெளிய இருந்து வந்தவனுகளா இல்ல இங்க இருந்த பழங்குடிகளா? ஆதன்னா தந்தைன்னு அர்த்தமுண்டு. அப்ப அவனுக ரொம்ப முக்கியமான ஒரு சின்ன குடி… பின்னாடி பெருங்குடி மன்னனுங்க அவனுங்கள அழிச்சிருக்கணும்….எல்லாம் போட்டு நோண்டி பாத்தா தெரியும்…இப்ப எவனுக்கு அக்கற? கொஞ்சம் குறிப்பு வச்சிருக்கேன்…வாங்க எல்லாத்தையும் காட்டுறேன்’
‘அய்யா கவியரங்கு ஆரம்பமாகிவிட்டது…’ என ஒருவர். ‘தமிழிலே பேசணுமானா தமிழிலே பேசு..அதென்ன ஆரம்பம்…’ என முனகியபடி எழுந்து ஜிப்பாவை தலைவழியாக கழட்டினார். பளபளவென இன்னொரு ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கொண்டார். ஒரு சின்னப்பொட்டலத்தை திறந்து பவுடர் எடுத்து போட்டுக்கொண்டார். அது அங்கே இருந்த போரிக் பவுடரோ என்னவோ என நான் பதைப்படைந்தேன். தலையை சீவியபின் ‘கிளம்பலாமா தம்பி? கவியரங்க கவிஞர்கள் அனைவரும் வந்துவிட்டார்களா?’ என செந்தமிழ் பேசி கிளம்பிச்சென்றார்.
அதன்பின் நான் அவரைப்பார்க்கவில்லை. சென்னையில் அவரது சிலையை தாண்டிச்செல்லும்போது ஒருமுறை நண்பரிடம் சொன்னேன் பளபளா ஜிப்பா மாட்டி பௌடர் போட்ட சுரதாவுக்குத்தான் அந்த சிலை வைக்கப்பட்டிருக்கிறது என.
திண்ணையில் வே.சபாநாயகம் சுரதா பற்றி எழுதிய குறிப்பு
சுரதா-பெருமாள் முருகனின் அஞ்சலி