மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன்.

உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி

இந்தியமொழிகளின் சென்றகால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் மொழியாக்கம் என்ற கருதுகோளே இங்கே இல்லை என்று தெரிகிறது. ஐரோப்பியர் தொடர்புக்கு முன்னால் ஒரு நூலை வரிக்குவரி மொழிபெயர்த்த எந்த நூலும் நம்மிடமில்லை. வேதங்கள் , கீதை, பிரம்மசூத்திரம் போன்ற முதனூல்கள்கூட மொழிபெயர்க்கப்பட்டதில்லை. நமக்கிருப்பது மறு ஆக்கங்கள்தான், கம்பராமாயணம்போலவோ பெருங்கதை போலவோ போலவோ. இலக்கியம் மட்டுமல்ல ஆகமங்கள், இலக்கணங்கள் போன்றவைகூட இங்கே மறுஆக்கமே செய்யப்பட்டுள்ளன.

ஆனால் பதினாறாம்நூற்றாண்டு வாக்கில் கீதை மட்டும் தமிழில் ஏறத்தாழ வரிக்குவரி மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளதாக பொ.வேல்சாமி குறிப்பிட்டார். அந்த மொழியாக்கம் பற்றி அறிஞர்கள் அதிகமாகப் பொருட்படுத்தியதில்லை என்றார். நான் அந்நூலைப் பார்த்ததில்லை.

இன்னொரு வகையிலும் உலகில் மொழிபெயர்ப்பு நடந்துள்ளது. திபெத்திய மொழி மொழிபெயர்ப்பையே முக்கியமான இலக்கியச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. பௌத்த மூலநூல்கள் மொழியாக்கம்செய்யப்பட்டு திபெத்திய மதக்கல்விச்சாலைகளில் பேணப்பட்டன. அவை வெளியே தெரியவந்ததே இருபதாம்நூற்றாண்டில்தான்

உண்மையில், மூலத்தை மொழியாக்கம் செய்யலாமென்ற பரவலான எண்ணம் உலகளாவிய தளத்தில் பைபிள் மொழியாக்கங்கள் வழியாகவே உருவானது. அராமிக் மொழியிலிருந்து கிரேக்கத்துக்கும் பின் கிரேக்கமொழியில் இருந்து ஐரோப்பிய மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யப்பட்ட பைபிள் வரிக்குவரி மொழியாக்கம் என்பதன் மிகச்சிறந்த உதாரணம். அது எம்மொழிக்கும் எந்த ஊருக்கும் உரிய மூலநூலாகக் கருதப்பட்டமையால் அப்படி சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் வலியுறுத்தப்பட்டது.

பதினாறாம்நூற்றாண்டு முதல் மதப்பிரச்சாரகர்களால் பைபிள் உலகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. அந்தமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது. அவ்வாறாக மொழியாக்கம் என்ற உலகளாவிய பண்பாட்டுச்செயல்பாடு ஆரம்பித்தது. அது பின்னர் உலகமெங்குமிருந்து இலக்கியத்தை ஐரோப்பிய மொழிகளுக்குத் திரும்பக்கொண்டுவரவும் வழியமைத்தது. பதினேழாம்நூற்றாண்டில் காலனியாதிக்கத்தின் மொழிகளாகிய ஆங்கில, பிரெஞ்சு,ஜெர்மனி, ஸ்பானிஷ் மொழிகளில் உலகின் முக்கியமான இலக்கியமூலநூல்கள் மொழியாக்கம்செய்யப்பட்டுவந்தன.

அப்போதுதான் அதுவரை உலக இலக்கியத்தில் இல்லாமலிருந்த ஒன்றை அறிஞர்கள் கண்டனர். ஒரு மொழியில் உலகின் பேரிலக்கியங்களெல்லாம் வாசிக்கக்கிடைத்தன. இலக்கியவடிவில் உலகம் கண்முன் வந்து கிடந்தது. அது உருவாக்கிய மன எழுச்சிதான் இலக்கிய சிந்தனையில் சென்ற பத்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மகத்தான ஒரு விஷயம். ஜெர்மனிய கவிஞரும் அழகியலாளருமான கதே அதை ’உலகஇலக்கியம்’ என்று அழைத்தார்.

அன்றுவரை ஒரு வாசகனுக்கு இலக்கியம் என்றால் அவனுடைய மொழி அவனுக்கு அளிப்பதே. பெரும்பாலான பண்பாடுகளில் அறிஞர்கள் இன்னொரு செவ்வியல்மொழியையும் கூடவே கற்றிருப்பது வழக்கம். ஐரோப்பாவுக்கு லத்தீனும் கிரேக்கமும் அந்த இடத்தில் இருந்தன. அந்த செவ்வியல்மொழி வழியாகத் தங்கள் பண்பாடுகளுக்குப் பொதுவாக அமைந்த சென்றகாலப்பண்பாட்டை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால் தங்கள் மொழிகளைத்தாண்டி ஒரு பொது அழகியலை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருப்பதில்லை.

அப்படி ஒரு பொது அழகியலை உருவாக்கிக்கொள்ளாமல் பேசமுடியாதபடி புதியதாக உருவாகிவந்த உலக இலக்கியம் அவர்களை அறைகூவியது. ஷேக்ஸ்பியரும் காளிதாசனும் தாந்தேயும் கதேயும் புஷ்கினும் எல்லாம் அர்த்தமளிக்கும் ஒரு பொதுவாசிப்புத்தளம் அம்மொழிகளில் உருவாகியது. அந்த பொதுவாசிப்புத்தளத்தின் அழகியலையும் மதிப்பீடுகளையும் உருவாக்கிக்கொள்வதற்கான பெருவிவாதம் ஆரம்பித்தது. அன்றுவரை இருந்த எல்லா மதிப்பீடுகளும் கொள்கைகளும் அந்த பொதுத்தளத்தில் வைத்து பரிசீலிக்கப்பட்டன. விக்டோரியன் யுகத்து பிரிட்டிஷ் இலக்கியக்களம் அந்த விவாதத்தாலேயே முன்னெடுக்கப்பட்டது. நாம் இன்று இலக்கிய அழகியல் சார்ந்து பேசும் பெரும்பாலான கலைச்சொற்களும் கருதுகோள்களும் அப்போது உருவாகி உலகமெங்கும் சென்று சேர்ந்தவைதான்.

இவ்வாறு உலக இலக்கியம் என்ற அந்த கருத்துருவம் உருவாகி அதற்காக உலகளாவிய அழகியல்மதிப்பீடுகள் உருவானபோதுதான் உலகளாவிய பேரிலக்கியவாதிகள் எவர் என்ற வினா எழுந்தது. அல்லது கூல்ரிட்ஜ் சொல்வதுபோல உலகளாவிய பேரிலக்கியவாதிகள் யார் என்ற விவாதம் வழியாகவே உலகளாவிய இலக்கிய மதிப்பீடுகள் உருவாயின. ’யார் மகாகவி’ என்ற விவாதம் அதன் விளைவே. Great Poet என்ற சொல்லாட்சி பற்றி உலக இலக்கிய விமர்சனத்தில் விவாதிக்க்கப்பட்ட அளவுக்கு வேறெதுவும் விவாதிக்கப்பட்டதில்லை.

விளைவாக விமர்சகர்களால் உலகமகாகவிகளின் பட்டியல்கள் போடப்பட்டன. அவற்றின்மேல் விவாதம் நிகழ்ந்தது. மேலும் திருத்தப்பட்ட பட்டியல்கள். மெல்லமெல்ல அப்பட்டியல்களில் நீக்கவே முடியாத சிலர் இருப்பது உறுதிப்பட்டது. அதன் விளிம்புகளைப்பற்றி மட்டுமே எப்போதும் விவாதம் நிகழமுடியும் என்ற நிலை வந்தது அவதானிக்கப்பட்டது. அரவிந்தரும் வ.வே.சு.அய்யரும் எல்லாம் அப்படி ஒரு பட்டியலைப்போட்டு விவாதித்திருக்கிறார்கள் என்பதைக்காணலாம்.

இன்றும் அப்பட்டியல் வளர்கிறது., விவாதம் நீடிக்கிறது. சமீபகாலமாக சீனப்பெருங்கவிஞர்கள் பலர் உள்ளே வந்துகொண்டிருப்பதை காணலாம். உலகம் தன்னை இந்த விவாதம் மூலமே திரட்டிக்கொண்டிருக்கிறது. உலக இலக்கியங்கள் எல்லாம் இந்தப் பொதுப்புள்ளியில் சந்தித்து உரையாடி தங்கள் இடத்தைக் கண்டடைகின்றன எனலாம்

இந்த விவாதத்துக்கான தேவை என்ன என்று கேட்கலாம். உடனடியான பதில் இப்படி ஒரு ஒப்பீட்டையும் தரவரிசையையும் உருவாக்கிக்கொள்ளாமல் வாசிப்பது மனிதமனத்துக்குச் சாத்தியமே அல்ல என்பதுதான். அதுதான் மனித ரசனையின் இயல்பான வழி, எந்த விஷயத்திலும். மதிப்பிடுவதென்பதே ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு மதிப்பிடுவதுதான். ஒப்பிடவும் மதிப்பிடவும் மாட்டேன் என்பது விவாதத்துக்கான ஒரு பாவனை மட்டுமே.

மெய்யியல் தளத்தில் பார்த்தால் ஐரோப்பிய மொழிகளில் உலகஇலக்கியம் உருவான அந்தக் காலகட்டத்தில்தான் உலகம் என்று நாம் இன்று சொல்லும் யதார்த்தம் உருவாகி வந்தது. அதுவரை அது ஒரு தத்துவார்த்த உருவகம் மட்டுமே. கப்பல்பயணங்கள் வழியாக உலகமெங்கும் ஐரோப்பியர் செல்ல ஆரம்பித்து, உலக வரைபடங்கள் அச்சாகி வர ஆரம்பித்து, உலகம் முழுக்க இருந்து பல்வேறு மக்களையும் நாடுகளையும் பற்றிய செய்திகள் வந்து குவிய ஆரம்பித்து மெல்லமெல்ல உலகம் என்ற சொல் நடைமுறை அர்த்தம் கொள்ள ஆரம்பித்தது.

அவ்வாறு உலகமென்ற அகஉருவகம் உருவாவதற்கு உலகஇலக்கியம் சார்ந்த பண்பாட்டுவிவாதங்கள் உதவியிருக்கின்றன. ஒரு பெருங்கவிஞன் தன் பண்பாட்டின் சாராம்சத்தையே தன்னுடன் கொண்டு வருகிறான். இன்றுள்ள பண்பாடு சார்ந்த உலக உருவகமே உலகப்பெருங்கவிஞர்கள் தங்களுக்குள் உரையாடி உருவாக்கிக்கொண்டதுதான் என்றுகூடச் சொல்லலாம்.

அவ்வாறு உலகம் என்ற ஒன்றை உருவகிக்கும்போது எல்லா அடையாளங்களையும் எல்லா மதிப்பீடுகளையும் உலகம் முழுமைக்குமாக யோசித்துப்பார்க்கவேண்டியிருந்தது. தங்கள் அறங்களையும் விழுமியங்களையும் உலகம் முழுமைக்குமாக ஆக்கிக்கொள்ள ஐரோப்பியருக்கு இருநூறாண்டுகள் தேவைப்பட்டன என்பார்கள். ஷேக்ஸ்பியர் முக்கியமான கவிஞர் என்று நினைக்கும் ஒருவர் அந்த மதிப்பீட்டுக்கு இந்தியாவில் என்ன அர்த்தம் சீனாவில் என்ன பெறுமானம் என யோசிக்காமலிருக்க முடியாது என்னும் நிலை உருவானது.

இந்த விவாதத்தின் விளைவாகவே அறமதிப்பீடுகளும் அழகியல் மதிப்பீடுகளும் மானுடத்தளத்துக்கு கொண்டு சென்று விவாதிக்கப்பட்டன. அந்தப்பார்வையே நாம் இன்று காணும் உலகத்தை உருவாக்கி நமக்களித்தது என்றால் மிகையல்ல. ஷேக்ஸ்பியரையும் தாந்தேயையும் நாம் நம்முடைய கவிஞர்களாக இன்று சாதாரணமாக உள்வாங்கிக் கொள்கிறோம். நம் அன்றாடவிவாதங்களில் அவர்கள் வந்துசெல்கிறார்கள். பண்பாட்டுத்தளத்தில் உலகமனிதன் என்ற கருதுகோள் உருவாகி வலுப்பெற்றது அந்தப் பெருவிவாதம் மூலமே. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான இலட்சியவாதங்கள் எல்லாமே அந்த உலகம் உலகமனிதன் என்ற கருதுகோளை ஒட்டி உருவானவையே.

ஆம், உலக ஆதிக்கம் என்ற கருதுகோளும் அப்போது உருவானதுதான். ஆனால் அதற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள எல்லா எதிர்ப்புக்குரல்களும் உலகளாவிய பார்வையால், உலகமனிதன் என்ற கருதுகோளால் கட்டமைக்கப்பட்டவைதான்.

ஆகவே உலகமகாகவி என்ற சொல்லாட்சி என்பது வெறுமே ஓர் இலக்கியவிவாதப்பொருள் மட்டும் அல்ல. அது உலகப்பண்பாட்டைத் தொகுத்துக்கொள்வதற்காக ,சாராம்சப்படுத்திக்கொள்வதற்காக, ஒவ்வொருவரும் தன்னை அந்த உலகப்பண்பாட்டில் ஓர் அங்கமாக உணர்வதற்காக செய்யும் ஒரு முயற்சி. அது மானுடவரலாற்றின் பெரும் இலட்சியவாதங்களில் ஒன்று

உலகப்பெருங்கவிஞன் ஒருவனை வாசிக்க நாம் அவன் முன் உலகக்குடிமகனாக நிற்கவேண்டியிருக்கிறது. அல்லது அவனை நாம் வாசிக்கையில் அவன் நம்மை உலகக்குடிமகனாக மாற்றுகிறான். நம்முடைய மொழி, பண்பாடு, இனம் சார்ந்த அடையாளங்களை விட்டு விலகி மானுடத்தன்மையுடன் நின்று அவனை நாம் அறிகிறோம். அந்த இலட்சியப்புள்ளியை வாசிப்பின் உச்சமாக எடுத்துக்கொண்டு எல்லா மதிப்பீடுகளையும் அந்த இடம் நோக்கிக் கொண்டுசெல்ல முயல்கின்றது ‘’மகாகவி யார்?’’ என்ற விவாதம்.

நூறுவருடங்களாக மகாகவி யார் என உலக இலக்கியத்தில் நிகழ்ந்த விவாதம் அதன் பொது அளவுகோல்களை ஒருவாறாக உருவாக்கிக்கொண்டிருக்கிறதென்றே சொல்லலாம். ஒருவன் தன்னை உலகமனிதனாக நிறுத்திக்கொண்டு வாசிக்கக்கூடிய அந்தத் தளத்தில் எவர் பெருங்கவிஞர் என்று அர்த்தப்படுகிறாரோ அவரே உலகமகாகவி. அந்தக்கவிதையுலகம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் குறிகள், குறியீடுகள், குறிப்புகள் வழியாக நம்மிடம் உரையாடுவதாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட பண்பாட்டுப்புலத்தை நாம் கொஞ்சம் பழகிக்கொள்ளாமல் அவனுள் நுழையமுடியாமல் போகலாம். ஆனால் அவன் நமக்களிப்பது ஒரு மானுட அனுபவத்தை.

ஆகவே அவனை அளவிடும் மதிப்பீடுகள் எல்லாமே அந்த மானுடத்தன்மை சார்ந்தவையாகவே இருக்கமுடியும். அக்கவியுலகம் எந்தப்பண்பாட்டில், எந்த சிறு வட்டத்தில் உருவானதாக இருந்தாலும் உலகின் எந்தமூலையிலும் வாழக்கூடிய ஒரு மனிதனின் அந்தரங்கமான மானுட அம்சம் ஒன்றுடன் உரையாடக்கூடியதாகவே அது இருக்கும் என்பது அந்த மதிப்பீடுகளில் முக்கியமானது. எது மிக பிராந்தியத்தன்மை கொண்டதோ அதுவே உலகளாவியது என்று சொல்லப்படுவது அதுதான். ஒரு வாசகன் தன்னை ஒரு வெறும்மனிதனாக உணரும்தளத்தில் அந்தக்கவியுலககைத் தன்னுடையதாக உணர முடியும். அதன் நுட்பங்களைத் தன் அகத்தால் உள்வாங்கிக்கொள்ளமுடியும்.

இரண்டாவதாக, ஒரு பெருங்கவிஞனின் அகம் ஒருபோதும் வாழ்க்கையின் ஒருபுள்ளியில் குவிவதாக இருக்காது. வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் அளவுக்கு வாழ்க்கையில் இருந்து விலகியும் வாழ்க்கையின் எல்லா நுட்பங்களையும் பார்க்குமளவுக்கு வாழ்க்கையுடன் நெருக்கமாகவும் பெருங்கவிஞன் இருப்பான் என்று சொல்லலாம். அவன் தன் வாழ்க்கையைப் பாடினாலும் சரி, தன் சமூகத்தின் வாழ்க்கையைப்பாடினாலும் சரி, அது மானுட வாழ்க்கையைப்பற்றியதாக ஆகிவிட்டிருக்கும். அது வாழ்க்கையின் துளிகளையும் அலைகளையும் அல்ல வாழ்க்கையையே காட்டக்கூடியதாக இருக்கும்.

மூன்றாவதாக, ஒரு பெருங்கவிஞனின் படைப்பு ஒரு பண்பாட்டின் சாரமாக அமைந்திருக்கும். அந்தப்பண்பாட்டை முழுமையாகப் பிரதிபலிக்கும். உலகளாவிய மானுடப்பண்பாட்டில் அந்தக் குறிப்பிட்ட பண்பாட்டின் தூலவடிவமாக அந்தக் கவியுலகை வைக்கமுடியும்.

இந்தமூன்று இயல்புகளும்தான் எப்போதுமே ஒரு கவிஞனை உலகப்பெருங்கவிஞனாகக் கொள்வதற்கான அளவுகோல்களாகக் கொள்ளப்படுகின்றன என்பதை சென்ற இருநூறாண்டுக்கால இலக்கியவிமர்சன மரபை வாசிக்கும் எவரும் உணர முடியும்.

இந்த அளவுகோல்களுக்குப்பின்னால் உள்ளது பண்பாடுகளை, மொழிகளை, கால இட வேறுபாடுகளைக் கடந்து மானுடம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் இலட்சியவாதம். மானுடம் என்ற ஒன்றை அந்தரங்கத்தில் உணர்வதன் எழுச்சி. அதை வெளியே படைப்புகளில் தேடும் வாசகனின் தாகம். அதுவே இந்த அளவுகோல்களை உருவாக்கி நிலைநாட்டியிருக்கிறது. அந்த அளவுகோல் எழுதப்பட்டும் படாமலும் ஒரு விவாதமையப்புள்ளி வடிவில் உலகஇலக்கிய வாசிப்பில் இருந்துகொண்டே இருக்கிறது. அது இருப்பதனால்தான் சென்ற இருபதாண்டுக்காலத்தில் து ஃபு போன்ற சீனப்பெருங்கவிஞர்கள் மொழியாக்கம்மூலம் வெளிப்படும்போது மிக இயல்பாக அவர்கள் உலகப்பெருங்கவிஞர்களின் இடத்தில் சென்றமர்கிறார்கள்.

சென்ற சில மாதங்களாக நான் க.சுப்ரமணியம் மொழியாக்கத்தில் தாந்தேயின் விண்ணோர் பாட்டு [டிவைன் காமெடி] வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப்பெருங்காவியத்துக்கும் எனக்கும் பொதுவாக ஏதுமில்லை. இது ஒரு கத்தோலிக்கக் காவியம். மூலமொழியில் இருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்தது. இது பேசும் பண்பாடும் வாழ்க்கைமுறையும் எனக்கு முற்றிலும் அன்னியமானது. இதன் தகவல்களை விக்கிபீடியாவில் பார்த்துப்பார்த்து நான் வாசிக்கிறேன். ஆனால் இது என்னைப் பெருங்கடல் அலை போல உள்ளே கொண்டுசெல்கிறது.

இதன் எளிய உரைவடிவை முன்னர் வாசித்திருக்கிறேன். முழுமையாகக் காவியவடிவம் அளிக்கும் அனுபவத்தை ஒரு மனிதன் மானுடனாக உருமாறுதல் என்றே சொல்வேன். நான் கம்பராமாயணத்தில், ரகுவம்சத்தில், அறிந்த அனுபவமும் இதுவே. மொத்த வாழ்க்கையையும் வாழ்க்கைக்குமேல் நின்று பார்க்கும் சஞ்சயப் பார்வையை நான் பெறுகிறேன். நான் இந்த விவாதத்தில் சொல்வதென்ன என்பது ஏதேனும் வகையில் காவிய அனுபவத்தை அறிந்த ஒருவரால் மட்டுமே உள்வாங்கிக்கொள்ளமுடியும். நான் உத்தேசிப்பதும் அவர்களை மட்டுமே.

உலகஇலக்கியம் என்ற ஒன்று ஐரோப்பிய மொழிகளில் உருவானபின் அதன் பிரதிபலிப்பு உலகமெங்கும் சென்றது. தமிழ் போன்ற மொழிகளில் உலகஇலக்கியம் ஆங்கிலம் மூலமே ஆரம்பத்தில் அறியப்பட்டது. அதன்பின் மெல்லமெல்லப் பேரிலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம்செய்யப்பட்டன. அந்த வேகம் ஆரம்பித்த காலகட்டத்தில்தான் ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் , கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடினான். இன்று உலகப்பேரிலக்கியங்களில் கணிசமான பகுதியைத் தமிழிலும் வாசிக்கலாம். ஆங்கிலத்தில் வாசிக்கும் வழக்கமில்லாத பல தமிழ்வாசகர்கள் தமிழ் மூலமே அப்படி உலகஇலக்கிய அடித்தளம் சார்ந்த தெளிவுடன் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

இவ்வாறு உலக இலக்கியம் தமிழில் கிடைக்கும்போது ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் என்ன நடந்ததோ அதுவே இங்கும் நடக்கவேண்டும். நாம் நம் பெரும்படைப்பாளிகளை அந்த உலக இலக்கியப்பரப்பில் வைத்துப் பரிசீலிப்போம். அவர்களின் இடத்தை மதிப்பிடுவோம். அதைச் செய்யாமல் இருந்தால் நாம் வாசிக்கவில்லை என்றே பொருள். அப்படிச்செய்தால் நம் கவிஞர்களின் இடம் குன்றிவிடுமென நாம் அஞ்சினோமென்றால் ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்’ சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

இங்கே இலக்கிய விமர்சனம் என ஒன்று ஆரம்பித்த தொடக்கப்புள்ளியிலேயே வ.வே.சு.அய்யர் கம்பனை உலகஇலக்கியப்பரப்பில் வைத்துப்பார்க்க ஆரம்பிப்பதை நாம் காணலாம். அதுவே விமர்சனத்தின் இயல்பு. அதன்பின் இத்தனை வருடங்களில் கம்பனுடன் உலக இலக்கியப்பெருங்கவிஞர்கள் அனைவருமே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய தேசிய எழுச்சியை ஒட்டி இந்திய மொழிப் படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்க ஆரம்பித்தன. அவையே இந்திய இலக்கியம் என்ற ஒரு வடிவத்தை உருவகம்செய்யவைத்தன. தொடர்ந்து இந்தியமொழிகளிடையே மொழியாக்கங்கள் ஆரம்பித்தன. இந்தியப்பெருங்கவிஞர்களின் ஆக்கங்கள் சுதந்திரத்துக்கு முன்னரே தமிழாக்கம்செய்யப்பட்டுவிட்டன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இவ்வாறு இந்திய இலக்கியம் என்ற ஒன்று உருவாகி வந்தது.

இயல்பாகவே நம்முடைய இலக்கியங்களை நாம் அந்த இந்தியஇலக்கியங்களுடன் ஒப்பிட்டு வாசிக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய இலக்கிய மதிப்பீடுகளுக்கு இந்திய இலக்கியச் சூழலில் என்ன பெறுமதி என்று பரிசீலிக்க ஆரம்பிக்கிறோம். எப்படி உலகளாவிய இலக்கிய மதிப்பீடுகள் உருவானதோ அவ்வாறு இந்திய அளவில் இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறோம். கம்பனையும் காளிதாசனையும் ஒப்பிடுகிறோம். பாரதியையும் தாகூரையும் ஒப்பிடுகிறோம். இது மிக இயல்பான இலக்கியச்செயல்பாடு. அந்தப் பெரும்பரப்பில் ஒவ்வொருவரையும் எங்கே நிறுத்துகிறோம் என்பதே இந்திய இலக்கியம் என்ற ஒன்றை நாம் நம் மனதில் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளம்.

இந்த உருவகம் ஒரு தொடர்ச்சியான பொது இலக்கியவிவாதம் மூலமே முன்னெடுக்கப்படுகிறது. கல்வித்துறையில் ஒப்பிலக்கிய ஆய்வுகள் மூலம் பலநூறு ஒப்பீடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால் இந்திய இலக்கியமேதைகளை அவர்களின் தனி இயல்புகளைக் கணக்கில்கொண்டு ஒரு பொதுவாசகத் தளத்தில் நிறுத்தி செய்யப்படும் மதிப்பீடுகளும் விவாதங்களும் நிகழ்ந்தபடியே உள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக க.நா.சு எழுதியிருக்கிறார்.

இன்றுவரை அந்தச்செயல்பாடு நிகழ்ந்தபடியே இருக்கிறது. அதன் வழியாகவே இந்திய இலக்கியத்தில் சில மேதைகள் மேலெழுந்து வந்தார்கள். தாராசங்கர் பானர்ஜியும் ,விபூதிபூஷன் பானர்ஜியும், சிவராம காரந்தும், குர்அதுலைன் ஹைதரும் எல்லாம் இந்திய இலக்கிய மேதைகளாக நம்மால் அறியப்படுவது அப்படித்தான். இந்தப் படைப்புகளை நாம் எப்படி வாசிக்கிறோம்? ஒரு வங்க நிலம் நாம் அறியாததாக இருக்கலாம். வங்காளத்தின் சாதியடுக்கு, சமூக வழக்கங்கள் எதுவுமே நமக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் ஒரு வாசகனாக நாம் இந்த ஆக்கங்கள் முன் நிற்கும்போது அந்த எல்லைகளைத் தாண்டி அந்த ஆக்கங்களுக்குள் செல்ல நம்மால் முடிகிறது.

இவ்வாறு உலக அளவில், இந்திய அளவில் இலக்கிய அளவீடுகள் உருவாகி வருகின்றன. அந்த அளவுகோல்களைக்கொண்டுதான் நானும் இந்த விவாதத்தை நடத்துகிறேன். மகாகவி என்ற சொல்லை நான் பொருள்கொள்வது இந்த விரிந்த விவாதக்களத்தில் வைத்துத்தான்.

மகாகவி என்ற சொல்லானது அன்றைய பிரிட்டிஷ் இலக்கிய விவாதத்தில் இருந்த great poet என்ற சொல்லின் தமிழாக்கமாக இங்கே கையாளப்பட்டது. அச்சொல்லை அப்படி உலக இலக்கியம் சார்ந்த இலக்கிய அளவீடுகளுடன் கையாள்வதை ஆரம்பித்து வைத்தவர் வ.வே.சு.அய்யர். அதை ஒட்டித்தான் வ.ரா பாரதி உலகமகாகவி என்று சொன்னார். உலகின் மகாகவிகளாக வ.வே.சு.அய்யர் முதலியோர் முன்வைத்த எந்த ஒரு கவிஞருக்கும் நிகரானவர் அல்லது மேலானவர் பாரதி என்று வ.ரா சொன்னார். அதையொட்டித்தான் பாரதி மகாகவியா என்ற விவாதம் ஆரம்பித்தது. அந்த விவாதத்தின் நீட்சியாகவே அவரை மகாகவி பாரதி என்று போட ஆரம்பித்தார்கள். பட்டங்களில் நமக்குள்ள மோகம் காரணமாக அந்த அடைமொழி இன்றிச் சொல்வதே அபச்சாரம் என்ற மனநிலை வந்துவிட்டது.

எந்த இலக்கியவிமர்சகனையும்போல எனக்கும் பொதுவாகச் சொல்லப்படுவதில் முழுநம்பிக்கை இல்லை. என் மதிப்பீடுகளை நான் என் வாசிப்பில், நான் செயல்படும் விவாதக்களத்தில் வைத்தே கூறமுடியும். அவ்வாறு கூறும்போது பாரதியை எங்கே வைக்கிறேன் என்னும் வினா எழுந்தது. பாரதி மகாகவி என்பது ஒரு பொத்தாம்பொது சொல்லாட்சியாக ஆகிவிட்டிருந்தது. ஒருவர்கூட மகாகவி என்பதற்கான வரையறையைச் சொல்ல முயல்வதில்லை. இந்த விவாதத்திலும்கூட என்பதை கவனிக்கலாம்.

நான் அந்தச் சொல்லை வரையறை செய்துகொள்ள முதலில் முயல்கிறேன். மகாகவி அதாவது great poet என்றால் என்ன? எந்தச் சூழலில், எந்த பின்னணியில்? விமர்சகனாக அதைத்தான் நான் கேட்டுக்கொள்ளவேண்டும். வ.ரா போன்றவர்கள் சொன்னது உலக இலக்கிய பின்னணியில். அந்தப்பின்னணியில் ஒருவரை மகாகவி என்று சொல்வதற்கான அளவுகோல்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதன்படி பாரதியை மகாகவி என்று சொல்ல முடியாது. அங்கே நாம் பாரதியை தாந்தே, விர்ஜில், ஷேக்ஸ்பியர், கதே, து ஃபு, காளிதாசன் என ஒப்பிடுகிறோம்.

இந்திய இலக்கியச் சூழலில்? இங்கேயும் அந்த அளவுகோல்களைக் கொஞ்சம் இந்திய அளவுக்கு மாற்றித்தான் நாம் பயன்படுத்தவேண்டும். மொழி,பண்பாட்டுச்சூழல், அரசியல்பின்னணி, சமூகப்பின்னணி அனைத்தையும் மீறி ஓர் இந்தியன் அந்தப்படைப்பின் முன் வாசகனாக நின்று கவிதையின் உயிரை உணரமுடியவேண்டும். வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் வெளிப்படும் தன்மை கொண்டிருக்கவேண்டும். தமிழ்ப்பண்பாட்டின் பிரதிநிதியாக இந்தியப் பண்பாட்டுச்சூழலில் நிற்கும் தன்மை கொண்டிருக்கவேண்டும்.

இங்கே நாம் பாரதியை தாகூருடன் ஒப்பிடுகிறோம். தாகூரின் படைப்புலகம் அதன் பிரம்மாண்டமான பன்மைத்தன்மையுடன் மேலே சொன்ன எல்லா அம்சங்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆகவே அவரை ஓர் நவீன இந்திய மகாகவி என்று சொல்லலாம். பாரதியைச் சொல்லமுடியாது. இதுவே என் மதிப்பீடு.

கடைசியாக, சென்ற நூறாண்டுகளில் நாம் நம் செவ்வியல் மரபை மறுகண்டுபிடிப்பு செய்திருக்கிறோம். அவற்றைப்பற்றி அழகியல் சார்ந்து அறவியல் சார்ந்தும் நீண்ட விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த விவாதத்தின் விளைவாக அவற்றின் தரவரிசை ஒன்று இலக்கியவாசகரிடம் உருவாகி உள்ளது. அந்த மரபில் பாரதியை வைத்துப்பார்க்கிறோம். அந்தப் பேரிலக்கியப்பின்னணியில் பாரதியின் மதிப்பென்ன என்று பார்க்கிறோம். ஏற்கனவே சொன்ன அதே மூன்று அடிப்படை மதிப்பீடுகள்தான். அதுவே கம்பனை உலகப்பெரும் கவிஞர்களில் ஒருவராக நமக்குக் காட்டுகிறது. பாரதியை சிறிதாக்குகிறது.

ஆனால் பாரதியை சென்ற முந்நூறாண்டுகளில் தமிழ் கண்ட முதற்கவிஞன் என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. தமிழின் நவீனத்துவத்தை உருவாக்கிய முன்னோடி என்றும் தமிழ் உரைநடையின் முன்னோடிகளில் முதன்மையானவர் என்றும் நினைக்கிறேன். பாரதியின் கவித்துவத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட நான் முயலமாட்டேன். இன்று வரை தமிழில் எழுதும் எந்த ஒரு கவிஞனையும் பாரதியுடன் ஒப்பிட்டே மதிப்பிடுவேன். இவற்றை எல்லாம் முதல் பத்தியிலேயே சொன்னபின்னர்தான் இந்த விவாதத்தையே ஆரம்பித்தேன்.

இந்த விவாதமே நான் முன்னரே சொன்னது போல பாரதியின் படைப்புகளை இந்தியச்சூழலில் உலகக்கவிச்சூழலில் வைத்துப்பார்ப்பதன் மூலமாக நம்முடைய கவிதைபற்றிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதற்காகவே. இவ்வாறு ஒரு கவிஞனைத் திட்டவட்டமாக உலக, இந்தியப் பின்னணியில் வைத்து விவாதிக்காமல் நம்மால் நம் அளவுகோல்களை வகுத்துக்கொள்ளமுடியாது. மறு பரிசீலனைசெய்யவும் முடியாது.

பாரதி பற்றிய மதிப்பீடு மட்டுமல்ல, எந்த ஒரு இலக்கிய மதிப்பீடும் எப்போதுமே விவாதநிலையில்தான் உள்ளது, இருக்கவேண்டும். ஷேக்ஸ்பியர் மகாகவியா என்ற விவாதம் கூட அதற்கான புதிய வாதங்களுடன் சொல்லப்பட்டால் முக்கியமானதேயாகும்.


விவாதத்தின் மையம்

மகாகவி என்ற பட்டம் முதன்மையைக் குறிக்கிறது. பிற கவிஞர்களிடமிருந்து பாரதி கொண்டுள்ள முதன்மையைச் சுட்டவே அச்சொல் இன்றுவரை கையாளப்பட்டுள்ளது. தமிழில் எழுபதாண்டுக்காலமாக முன்வைக்கப்படும் இந்தப்பார்வை சுட்டுவதுபோல உலக, இந்திய இலக்கியச்சூழலில் பாரதியை ஒரு மகாகவி என்று சொல்லமுடியுமா என்ற வினாவுடன் ஆரம்பித்தது இந்த விவாதம்.

அவ்வாறு சொல்லமுடியாதென்பது என் மதிப்பீடு என்ற என் தரப்பை நான் முன்வைத்தேன். ஏற்கனவே சொன்ன மூன்று அளவுகோல்களையே நான் கையாண்டேன். பாரதியின் கவிதைகளில் பெரும்பாலானவை அவை நின்று பேசிய காலகட்டத்தைத் தாண்டி அதே கவித்துவ வீச்சுடன் நிலைகொள்ள முடியாதவையாக உள்ளன என்பதே என் முதல் பதிவு. அவை அரசியல், சமூகவியல் தளங்களைச் சார்ந்து நேரடியாகப்பேசுபவை. வேகம் காரணமாக மட்டுமே கவித்துவத்தை அடைபவை. அத்தகைய கருத்துக்களை அதேபோன்ற வேகத்துடன் சொன்ன கவிஞர்கள் அக்காலகட்டத்தில் பிற இந்தியமொழிகளிலும் உருவானார்கள். அவை பாரதிக்கு உலக அளவில் அல்லது இந்திய அளவில் தனித்தன்மை எதையும் அளிக்கவில்லை.

இரண்டாவதாக, பாரதியின் பாடல்களில் கணிசமானவை மரபார்ந்த தோத்திரப்பாடல்கள். தமிழின் நீண்ட பக்தியிலக்கிய மரபு உருவாக்கிய பக்திமனநிலையின் வெளிப்பாடுகள். நவீன இந்தியச்சூழலில் உருவாகிவந்த ஆழ்நிலை இறையுணர்வு வெளிப்பட்ட பாடல்கள் மிகவும் குறைவு. அவரது வேதாந்தப்பாடல்களில் உள்ள வேதாந்த தரிசனம் என்பது இந்திய நவவேதாந்த அலையின் ஒரு பகுதியாகவே ஒலிக்கிறது. அவரது தனித்துவம் கொண்ட குரலாக அல்ல.

இவை எதையும் பாரதியின் கவித்துவத்தை மறுக்க்கும்பொருட்டு நான் சொல்லவில்லை. மாறாக உலக இலக்கியச் சூழலில், இந்திய இலக்கியச் சூழலில், அவரை ஒரு மகாகவி என்ற அடையாளத்துடன் நிறுவ அவை போதுமானவை அல்ல என்ற அர்த்தத்திலேயே சொன்னேன்.

பாரதியின் கவித்துவம் அவரது அந்தரங்கமான குரல் ஒலிக்கும் சிலகவிதைகளிலேயே உச்சமாக வெளிப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன். அக்கவிதைகளில் பாரதி ஒரு அரசியல் பிரச்சாரகராகவோ அல்லது சமூகசீர்திருத்தவாதியாகவோ மரபார்ந்த மதநம்பிக்கையாளனாகவோ வெளிப்படவில்லை. அவரது அந்தரங்கத்தின் பித்தின் தாண்டவமும் சஞ்சலமும் அமைதியும் பதிவாகியுள்ளன. அவற்றையே பாரதியின் மிகச்சிறந்த கவிதைகளாக எண்ணுவேன் என்றேன். ஆனால் அத்தகைய கவிதைகள் மிகமிகக் குறைவே. இது என் மதிப்பீடு மட்டுமல்ல, சென்ற முக்கால்நூற்றாண்டாக தமிழ் இலக்கிய விமர்சனத் தளத்தில் சொல்லப்பட்டுவரும் கருத்தும்கூட.

இதற்கு மறுதரப்புகளாகச் சொல்லப்பட்டவை இந்தக் கூற்றுகளை எந்த அளவுக்கு அர்த்தபூர்வமாக மறுதலிக்கின்றன என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதுவரை சொல்லப்பட்டவற்றில் பாரதியின் சமூகசீர்திருத்த , அரசியல் போராட்டக் கவிதைகளை முன்வைத்து எவரும் வாதாடவில்லை. அவையே எண்ணிக்கையில் அதிகம். எஞ்சியவை அவரது ஆன்மீகக் கவிதைகளே. அவற்றில் உள்ள தோத்திரப்பாடல்களில் அவனுக்கிருந்த நேரடி இறையனுபவம் வெளிப்பட்டுள்ளது, அது தமிழின் பக்திப்பெருமரபில் இருந்ததை விட வேறானது, புதியது என்பது ஒரு வாதம்.

பாரதியின் கவிதைகள் தமிழில் ஒரு நவீன அகம்நோக்கிய குரலைக் கட்டமைக்கின்றன என்பது இன்னொரு வாதம். அந்த அகம்நோக்கிய குரல் ஆத்மார்த்தமானது. அன்றைய யதார்த்தங்களால் தீவிரமாக பாதிப்பு கொண்டது. அது தமிழின் நிகழ்த்துகலைத்தன்மையுடன் வெளிப்பட்டிருப்பதனால் அதை மொழியாக்கம்செய்து இன்னொரு மொழியில் வாசித்து மதிப்பிட முடியாது. ஆகவே தமிழுக்குள், இன்றைக்கு, பாரதி மகாகவிதான். இது இன்னொரு தரப்பு.

நான் முன்வைக்கும் வாதங்களை இவை எங்கே எதிர்கொள்கின்றன, மறுக்கின்றன என வாசகர்கள் சிந்தித்துப்பார்க்கலாம். இந்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் பாரதியை உலகஇலக்கிய தளத்திலும் இந்தியச்சூழலிலும் தமிழ்ப்பெருமரபின் பின்னணியிலும் மகாகவி என முடிவு கட்டுவாரென்றால் அது அவரது வாசிப்பு.

நான் வாசகர்களிடம் கோருவது ஒரு மறுபரிசீலனையை.அந்த மறுபரிசீலனையை அவர்கள் தமிழில் இன்று கிடைக்கும் உலக இலக்கியங்களை வாசிப்பதனூடாக, தமிழ் மரபின் பேரிலக்கியங்களை வாசிப்பதனூடாக நிகழ்த்திக்கொள்ளலாம்

முந்தைய கட்டுரைநன்றி, முத்துக்குமாரசாமி
அடுத்த கட்டுரைபாரதி மகாகவியே