நவீன ரசனைவிமர்சனம் என்பது அதன் அடிப்படையான செயல்பாட்டுமுறையை ஒட்டி செய்யப்படும் மிகப்பொதுவான அடையாளம். அதற்குச் சரியான சொல் அழகியல் விமர்சனம் என்பதே. ஆனால் ரசனைவிமர்சனம் என்ற பெயர் இடுகுறிச் சொல்லாக நிலைபெற்றுவிட்டது. அது எதைக்குறிக்கிறதென்பதும் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. ஆகவே அதை எங்கும் சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள்.மேலும் அழகியல் என்ற சொல் பிற்காலத்தில் மிகவிரிவாக ஆகிவிட்டிருக்கிறது.
இந்த முறைக்குள் பல்வேறுவகையான போக்குகள், பலவிதமான அழகியல்கொள்கைகள் உள்ளன. இலக்கிய இயக்கங்கள் உள்ளன. பொதுவாகப்பார்த்தால் ரசனை விமர்சனத்தின் தொடக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு அறிவொளிக்கால பிரிட்டிஷ் இலக்கியத்தில் நிகழ்ந்தது என அமைத்துக்கொள்வது மரபு. சாமுவேல் ஜான்சன்,கூல்ரிட்ஜ் போன்ற இலக்கியப்படைப்பாளிகளினாலேயே அது தெளிவான வடிவமும் வாதமுறையும் கொண்டது. அதிலிருந்து அதன் வளர்ச்சிநிலைகள் பல.
ஆங்கிலம் பெற்ற சர்வதேசப்பரவல் காரணமாக அந்த ரசனைவிமர்சன முறை உலகமெங்கும் சென்றது. அவைசென்ற இடங்களில் உள்ள இலக்கிய ரசனை முறைகளுடன் அது உரையாடியது. அதன் விளைவாக உலகமெங்கும் பல்வேறு வகையான ரசனை இலக்கியமுறைமைகள் உருவாகி வளர்ந்தன. எஃப்.ஆர்.லூயிஸ்,டி.எஸ்.எலியட் போன்றவர்களின் விரிவான செல்வாக்கு இந்தியா முதலிய நாடுகளின் ரசனைவிமர்சன மொழியில் நாம் இன்று காணும் முறைமையை உருவாகியது.
இந்தியச்சூழலில் இங்குள்ள ரசசித்தாந்தம், ஃபாவசித்தாந்தம் போன்ற அழகியல் கொள்கைகள் பிரிட்டிஷ் ரசனை விமர்சனமுறையுடன் கொண்ட நீண்ட விவாதங்களை நாம் காணலாம். மலையாளத்திலும் கன்னடத்திலும் முப்பதுநாற்பதுகளில் இவை மிகப்பெரிய அழகியல் விவாதங்களை உருவாக்கின. நவீனத் தமிழ் இலக்கிய விமர்சனத்தின் தொடக்கப்புள்ளியாகிய வ.வே.சு.அய்யர் அந்த விவாதத்தை ஆரம்பித்திருக்கிறார். விரிவான விவாதம் அச்சில் நிகழவில்லை
இந்த விவாதக்களம்தான் இந்திய இலக்கியத்தில் இன்று அறியப்படும் பெரிய இலக்கிய விமர்சன முன்னோடிகளை உருவாக்கியது. நாம் இன்று நின்று விவாதிக்கும் விவாதக்களம் என்பது அவர்கள் பேசி உருவாக்கியதன் நீட்சிதான். நம்ம்முடைய நவீன இலக்கிய அணுகுமுறை என்பது அவர்களின் எண்ணங்களை மரபுத்தொடர்ச்சியாகக் கற்றும், விவாதித்தும் உருவாக்கிக் கொண்டது. வேறெந்த மரபுப்பின்னணியைப்போலவும் இதையும் நாம் விவாதிக்கலாம், நிராகரிக்க முயலலாம். ஆனால் அந்த மரபு எப்போதும் அங்கேதான் இருக்கும். அப்படி ஒன்று இல்லை என்ற பாவனையில் இலக்கிய விமர்சனத்தை இன்றைய ஏதேனும் கோட்பாடுகளில் இருந்து அந்தரத்தில் ஆரம்பிக்கமுடியாது.
ரசனைவிமர்சனத்தின் கலைச்சொற்களைப்பற்றி இந்தப் பின்னணியிலேயே பேசுகிறேன். ரசனை விமர்சனம் என்பது பிற விமர்சனங்களைப்போல ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறையை, அறிவியல்துறையைப் பின்னணியாகக் கொண்டது அல்ல. அதாவது மொழியியல், குறியியல், உளவியல் போன்ற ஒரு துறையின் இலக்கியக்கருவியாக அது இலக்கியத்தை அணுகவில்லை. ஆகவே அதற்கு அவ்வாறு அறிவியல்பூர்வமாக வரையறைசெய்யப்பட்ட, கலைச்சொற்களை உருவாக்கி அளிக்கும், ஒரு துறைசார் அடித்தளம் இல்லை. ஆகவே அது பயன்படுத்தும் சொற்களை கலைச்சொற்கள் என சரியான அர்த்தத்தில் சொல்லவும் முடியாது. ஒர் அறிவுத்துறைக்குள் தனியாக வரையறைசெய்யப்பட்ட சொற்களே கலைச்சொற்கள்.
ரசனைவிமர்சனத்தின் புறவயமான அடிப்படை என்பது அது ஒரு சூழலில் பேரிலக்கியமாக முன்னிறுத்தும் படைப்புகள்தான். ரசனை விமர்சனம் தன் வாசகர்களிடம் எதிர்பார்க்கும் தகுதி என்பது அந்த மூலநூல்கள் மீதான வாசிப்பு மட்டுமே. பிற இலக்கிய விமர்சனங்களைப்போல ரசனை விமர்சனம் வாசகர்களை தான் நிற்கும் அறிவுத்தளம் நோக்கி வரச்சொல்வதில்லை. பொதுவாசகர்கள் நிற்கும் அறிவுத்தளம் நோக்கி அது செல்கிறது. ஒரு இலக்கியச்சூழலின் பொதுவான மொழிச்சூழலில் புழங்கும் சொற்களால் தன்னை முன்வைக்க முயல்கிறது.
அந்நிலையில் அது பொதுவான விவாதச்சூழலில் புழங்கும் கருத்துக்கள் மற்றும் சொற்கள் வழியாகவே தன்னைப் புறவயமாக முன்வைக்கமுடிகிறது. இலக்கியத்தில் சாராம்சமான பகுதி புறவய விவாதத்துக்குரியதல்ல என்று அது சொல்கிறது. அந்த சாராம்சமான பகுதியை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லும் புறவயமான விவாதத்தைப் பொதுவான மொழியில் சொல்லமுயல்கிறது.
ஆகவே ஆரம்பம் முதலே ரசனைவிமர்சனம் பிறஅறிவுத்துறைகளின் சொற்களை எடுத்தாள்வதன் மூலமே தன் தொடர்புறுத்தலை நிகழ்த்தி வருகிறது. அது உருவான ஆரம்ப கட்டத்தில் அது இறையியலின் சொல்லாட்சிகளை ஏராளமாகப் பயன்படுத்துவதைக் காணலாம். ஏனென்றால் அறிவொளிக்காலம் என்பது விரிவான இறையியல் விவாதங்களினாலானது. கேம்ப்ரிட்ஜ் ,ஆக்ஸ்போர்ட் இயக்கங்களிலிருந்து சொல்லாட்சிகள் இலக்கியவிமர்சனத்துக்குள் வந்துகொண்டே இருந்தன. தரிசனம், உள்ளொளி போன்ற சொற்களெல்லாமே இறையியலில் இருந்து பெற்றுக்கொண்டவை.
அதன் பின்னர் தத்துவத்தில் இருந்து, பல்வேறுசமூக அறிவியல்களில் இருந்து, உளவியல் போன்ற அறிவியல்துறைகளில் இருந்து அது சொற்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. ரஸ்ஸலுக்குப்பின் கணிதத்தில் இருந்து சொற்கள் உள்ளே வந்திருக்கின்றன. கற்பனாவாத காலகட்ட ரசனைவிமர்சனம் இசையில் இருந்தும் நவீனத்துவகால ரசனைவிமர்சனம் ஓவியத்தில் இருந்தும் சொற்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. அச்சொற்களைக்கொண்டே உலகின் எல்லா ரசனை விமர்சகர்களும் பேசியிருக்கிறார்கள், பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அதுவே சாத்தியமானது.
இந்தியச்சூழலில் நிகழ்ந்த நவீன ரசனைவிமர்சனம் ஒரு பெரும் விவாதம் வழியாக உருவாகிவந்தது என்றேன். அதன் ஒரு சரடு மேலைநாட்டு அழகியல்கொள்கைகள். இன்னொருதரப்பு இந்தியச் செவ்வியல் மரபின் அழகியல் கொள்கைகள். இரண்டு தரப்பிலிருந்தும் கலைச்சொற்கள் ரசனை விமர்சனத்தில் புழக்கத்துக்கு வந்தன. பலமேலைச்சொற்களுக்கு சமானமான இந்திய அழகியல் கலைச்சொற்கள் இங்கே கண்டடையப்பட்டன. உதாரணம் ’படைப்பு’. அப்போது அந்த மேலைக்கலைச்சொற்களின் அர்த்தங்கள் நுட்பமாக மாறுதலடைந்தன. ஏற்கனவே இங்கிருந்த பல சொற்கள் மேலைநாட்டு அர்த்தமேற்றப்பட்டு மாறுதலைடந்தன. உதாரணம் ’ரசனை’.
இவ்வாறு நவீன ரசனைவிமர்சனத்துக்கான ஒரு சொற்களஞ்சியம் இங்கே ஐம்பதுகளில் உருவானது. நம் மரபிலேயே வ.வே.சு.அய்யர், க.நா.சு, சுந்தர ராமசாமி எனத் தலைமுறைகள்தோறும் ரசனைவிமர்சனத்தின் சொற்களஞ்சியம் பெருகி வருவதைக் காணலாம். சொற்கள் பல தளங்களில் இருந்தும் பெறப்பட்டு விவாதமூலம் அர்த்தம் நிலைநாட்டப்பட்டு அவற்றுக்கான சொற்களன் உருவாக்கப்பட்டது . இதுவே மலையாளத்திலும் நிகழ்ந்திருப்பதை கவனித்திருக்கிறேன்
இவ்வாறு பிறகலைச்சொற்களை ரசனை விமர்சனம் எடுத்தாள்வதன் விதிகள் சில இயல்பாக உருவாகி வந்துள்ளன. ஒன்று ஒரு துறைக்குள் மட்டுமே புழங்கும் விசேஷமான கலைச்சொற்களை அது எடுத்தாள்வதில்லை. அச்சொல் பொதுவிவாத தளத்துக்கு வந்து சாதாரணமாக அர்த்தமளிக்கும் ஒன்றாக ஆனபின்னரே, அந்த பொதுத்தளத்தில் அது எந்த அர்த்தம் அளிக்கிறதோ அந்த அர்த்தத்திலேயே, அச்சொல்லை ரசனை விமர்சனம் கையாள்கிறது.
இரண்டாவதாக, இவ்வாறு பயன்படுத்தப்படும் கலைச்சொற்களை அது தனக்கேற்ப மாற்றிக்கொள்கிறது. தொடர்விவாதம் மூலம் அச்சொல்மீது அர்த்தம் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அர்த்தம் இலக்கியத்துக்குள் தனியாக உருவாகிவிடுகிறது. அந்நிலையில்தான் அது இலக்கியக்கலைச்சொல் என்னும் நிலையை அடைகிறது.
உதாரணமாக இறையியலில் உள்ள insight என்ற சொல் தொடர்ந்த இறையியல் விவாதங்கள் மூலம் சாதாரணமாகப் புழக்கத்துக்கு வந்தபிறகே அதை ரசனைவிமர்சனம் கையாள ஆரம்பித்தது. அச்சொல்லை இறையியல் மிகக் குறிப்பான ஒரு அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறது. ஆனால் இலக்கியம் அதைப் பொதுத்தளத்தில் உள்ள அர்த்ததிலேயே கையாள்கிறது. இறையியலில் அது இக உலக வாழ்க்கையின் திரையை மீறி இறைவனின் சான்னித்தியத்தைக் காணும் அகப்பார்வை. இலக்கியத்தில் சாதாரணமான கருத்துநிலைகளை மீறி ஆழத்தையோ ஒட்டுமொத்தத்தையோ பார்க்கும் எழுத்தாளனின் நுண்ணுணர்வு.
அச்சொல்லை அறிவொளிக்கால விமர்சகர்கள் பயன்படுத்திய அர்த்தம்கூட அடுத்த நூறாண்டுகளில் பெரிதும் மாறிவிட்டது என்பதைக் காணலாம். இலக்கியப் படைப்புகளை முன்வைத்து நிகழ்த்தப்படும் குறிப்பான விவாதங்களே அந்த அர்த்தமாற்றத்தை நிகழ்த்துகின்றன. ஆகவே ரசனை விமர்சனத்தில் ஒரு கலைச்சொல்லின் இடம் முழுமுற்றாக, கடைசியாக வரையறைசெய்யப்பட்டிருப்பதில்லை. அது அந்த விவாதச்சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டேதான் இருக்கும். அறிவியல் அல்லாத எந்தத் தளத்திலும் கலைச்சொல்லின் அர்த்தம் அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது என்றாலும் ரசனை விமர்சனத்தில் மொழி மிக அகவயமானதென்பதனால் அந்த மாறுதல் மிக அதிகம்.
தமிழில் மொழியியல் சார்ந்த விமர்சனத்தை முன்வைப்பவர்கள்கூட நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை இந்தப் பொதுவிமர்சனத்தளத்தில் இருந்து பெற்றுக்கொண்டுதான் பேசுகிறார்கள். பலசமயம் அவற்றை மொழியியல் சார்ந்து மறு வரையறை செய்துகொள்கிறார்கள். மேலதிக அர்த்தமேற்றல் நிகழ்த்திக்கொள்கிறார்கள்.
மறுபக்கமாக, சென்ற இருபத்தைந்தாண்டுகாலத்தில் மொழியியல்விமர்சனத்தில் இருந்து பொதுத்தளத்தில் வந்து நிலைத்த பெரும்பாலான கலைச்சொற்களை ரசனை விமர்சகர்கள் உலகமெங்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல பல பழைய கலைச்சொற்களுக்கு மொழியியல் கொடுத்த மேலதிக அர்த்தத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் கலைச்சொற்களையும் இவற்றுக்குப்பின்னால் உள்ள பார்வையையும் பொதுத்தளத்துக்கு அளித்ததே மொழியியலின் பங்களிப்பு என்றும் சொல்லலாம். text,context,discourse போன்ற சொற்களெல்லாமே இன்று இந்த மேலதிக அர்த்ததிலேயே கையாளப்படுகின்றன.
அதனால் ரசனை விமர்சனம் மொழியியலின் அணுகுமுறையை முழுக்க ஏற்றுக்கொண்டதாகவோ, மேற்கொண்டு மொழியியலின் விதிகளுக்குள் அது செயல்படப்போகிறதென்றோ பொருள் இல்லை. அது பயன்படுத்திவந்த முந்தைய கருத்துக்களையும் சொற்களையும் கைவிட்டுவிடுகிறதென்றோ அல்லது அச்சொற்களையும் இவற்றையும் கலக்காது என்றோ சொல்லமுடியாது. இச்சொற்களைப் பொதுவான தளத்தில் வைத்தே அது கையாள்கிறது. அதன் விவாதம் மூலம் அதில் மேலதிக பொருளேற்றம் நிகழ்த்துகிறது.
தமிழில் தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி ,நாகார்ஜுனன் உள்ளிட்ட அமைப்புவாதிகள், பின்அமைப்புவாதிகள் உருவாக்கிய கலைச்சொற்களில் பல இன்று அவ்வாறு பொதுத்தளத்துக்கு வந்து விட்டன. பிரதி, சொல்லாடல் போன்றவற்றை உதாரணம் காட்டலாம். அச்சொற்களையே நான் கையாள்கிறேன். மொழியியலின் உள்ளே மட்டுமே பொருள் அளிக்கும் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை.
கலைச்சொற்களையே இங்கே அமைப்புவாதம் உருவாக்கியது என்று நான் சொல்வது அது ஒரு கொடை என்ற மிக நேர்மறையான அர்த்தத்திலேயே. தமிழவன் எம்.டி.முத்துக்குமார்சாமி, நாகார்ஜுனன் முதலியோர் மேல் எனக்குள்ள மரியாதையே அதன்பொருட்டுதான். அக்கலைச்சொற்களையும் அவற்றின் கருத்துக்களையும் ஏற்று என் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதிலும் எனக்குத் தயக்கமில்லை. அவர்கள் அச்சொற்களைக்கொண்டு இங்குள்ள எழுத்துக்கள் மேல் எந்த விதமான மேலதிகத் திறப்புகளையும் நிகழ்த்தவில்லை என்பதே என் விமர்சனம்.
இச்சொற்கள் உருவான பின்னணியை உணர்ந்தே இவற்றைப் பயன்படுத்துகிறேன் என்றே நான் நினைக்கிறேன். பிரதி என்ற சொல்லையே காணலாம். பாடம் என்ற சொல்லே பழைய மொழியாக்கம்.இது பயிலப்படக்கூடியது என்ற பொருளை மட்டுமே அளிக்கிறது. எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வதைப்போல ஒரு நூலை ’வாசிப்புச்சூழலில் தொடர்ச்சியாக அர்த்தங்களை உற்பத்திசெய்வது’ என்ற அர்த்தத்தில்தான் பிரதி என்கிறது மொழியியல். அந்த அர்த்ததை ஏற்றுக்கொண்டுதான் பிரதி என்ற சொல்லைக் கையாள்கிறேன்.
ஏனென்றால் ஒரு நூல் வாசிப்பின் பல்வேறு சாத்தியக்கூறுகளையே உருவாக்குகிறது என்பதில் ரசனைவிமர்சனத்துக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. வேறு வகையில் நூலை நுண்ஆய்வு செய்யும் பிரதிசார் விமர்சனமுறைமையை முன்வைத்த அமெரிக்க புதுத்திறனாய்வும் அதையே சொல்லிக்கொண்டிருந்தது. அந்தக் கோணத்தை மேலும் திட்டவட்டமாக ஆக்கிக்கொள்ள அமைப்புவாதத்தின் கோணம் உதவியாக இருக்கிறது.
எங்கெல்லாம் இலக்கியப்படைப்பை வாசிப்பின்மூலம் அர்த்த உருவாக்கம் நிகழ்த்தும் ஒன்றாக முன்வைக்கிறோமோ அங்கெல்லாம் பிரதி என்ற சொல்லையே பயன்படுத்துகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி பயன்படுத்தும் அதே பொருளில். ஆனால் அவரது மொழியியல்அணுகுமுறை அதற்களித்துக்கொண்டே செல்லும் எல்லா அர்த்தச்சுமையையும் நான் கையாளும் சொல் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவேதான் அதைப் பொதுத்தளத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறேன் என்கிறேன். அதை ரசனை விமர்சனத்தின் நடைமுறைக்காகப் பயன்படுத்தும்போது அது அர்த்தமாறறம் கொண்டபடியும் உள்ளது. அச்சூழலைக்கொண்டே அதைப் புரிந்துகொள்ளமுடியும்.இதுவே ரசனை விமர்சனத்தின் வழிமுறை.
உலகமெங்கும் நிகழ்வது போல மொழியியல் சார்ந்த பலசொற்களை, அவற்றின்பின் உள்ள கருத்துக்களுடன் எடுத்துக்கொள்வதன் வழியாக நான் என்னுடைய ரசனை விமர்சனத்தை முன்வைப்பதற்கான மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதேபோல உளவியலின் சொற்கள், அரசியலின் சொற்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன. நரம்பியலின் சொற்களை நாளை எடுத்தாளலாம். இன்னும் வரவிருக்கும் சொற்களையும் எடுத்தாள்வேன்.
அப்படி சொற்களை கையாளும்போது நான் அளிக்கும் அர்த்தம் மட்டுமே உள்ள ஒரு புதிய தமிழ்ச்சொல்லை நான் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அதைச் செய்யக்கூடாதென்பதே என் எண்ணம். அதை விரிவாகவே விவாதித்திருக்கிறேன். அதாவது ஏற்கனவே புழக்கத்தில் ஒரு சொல் இருக்கையில், அது பொதுத்தளத்தில் அளிக்கும் அர்த்தத்தை நாம் பெருமளவு ஏற்றுக்கொள்ளும்போது, அச்சொல்லைப் பயன்படுத்துவதே நல்லது. நம்முடைய விவாதம் உருவாக்கும் மொழிக்களம் அதற்கு நாம் உத்தேசிக்கும் மேலதிக அர்த்தத்தை அல்லது குறிப்பான அர்த்ததை அளிக்கும். எல்லாச் சொற்களுமே அப்படித்தான் பொருள்கொள்ளப்படுகின்றன. பொருள் மாறுபாடு அடைந்தபடியே உள்ளன.
எனது இந்த எண்ணத்துக்குக் காரணம் தமிழில் கலைச்சொல்லாக்கத்தில் உள்ள கட்டற்ற போக்குதான். நாலாபக்கமும் ஆளுக்காள் கலைச்சொற்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அமைப்புவாத விமர்சனத்திலேயே ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு ஒவ்வொரு விமர்சகரும் ஒரு மொழியாக்கச்சொல் வைத்திருக்கிறார். deconstruction என்ற சொல்லானது கட்டுடைப்பு, கட்டவிழ்ப்பு, தகர்ப்பமைப்பு, எதிர்கட்டமைப்பு என்றெல்லாம் பத்துப்பதினைந்து வகையாக மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கோபிசந்த் நாரங் எழுதி சாகித்ய அக்காதமி வெளியிட்ட அமைப்புவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக்காவிய இயல் என்ற மொழியாக்க நூல் ஏறத்தாழ எல்லாச் சொற்களையுமே புதியதாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
சொற்களை அப்படிப் பெருக்கிக்கொண்டே செல்வதில் அர்த்தமே இல்லை. அவற்றைப் பயன்படுத்திப் புழக்கத்தளத்தில் அர்த்தமுள்ளவையாக ஆக்குவதே தேவை என்பது என் எண்ணம். ஆகவே ஒரு சொல் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் நான் அதையே பயன்படுத்துகிறேன். அதன் அர்த்தம் நான் உத்தேசிப்பதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டிருந்தாலும்கூட. கல்வித்துறை, மொழிபெயர்ப்புத்துறை, சிற்றிதழ்க்களம் மூன்றில் இருந்தும் சொற்களை எடுத்துக்கொள்கிறேன்.
ஏனென்றால் சொல்லுக்கான அர்த்தம் என்பது பெரும்பாலும் இடுகுறித்தன்மை கொண்டது. சிறுகதை, நாவல் போன்ற கலைச்சொற்களுக்கு அவை உருவான காலகட்டத்தில் இருந்த அர்த்தமல்ல இன்று. அவ்வடிவங்கள் வளர்ந்து உருமாறும்போது புதிய அர்த்தங்களுக்கேற்ப சொல்லை மாற்றிக்கொண்டிருப்பதில்லை. ஏன் விமர்சனம் என்ற சொல்லே அந்தச்சொல்லின் நேர்ப்பொருளில் நம்மால் பயன்படுத்தப்படுவதில்லை. நாம் ஏற்றிக்கொண்ட பொருளில்தான் கையாளப்படுகிறது.
ஆனால் அதே சமயம் அமைப்புவாதத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத பகுதிகள் உள்ளன. அது படைப்பை மொழியில் நிகழும் உற்பத்தி என்றே சொல்லும். அந்தக்கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமுடியாது. அது என் ரசனை விமர்சனம் இலக்கிய ஆக்கத்தை வகுத்துக்கொள்வதற்கு நேர் எதிரானது. நான் இலக்கிய ஆக்கத்தையும் வாசிப்பையும் அந்தரங்கமான நிகழ்வு என்றும் பகுத்தறிய முடியாத பலநூறு பண்பாட்டு விசைகளின் தற்செயல் புள்ளி என்றும்தான் நினைக்கிறேன். ஆகவெ நான் படைப்பு என்றே சொல்வேன்.ஆக்கம் என்றே சொல்வேன்.
அதைக்கண்டு ஒரு அமைப்புவாதி நான் இரு வேறு தளங்களைச் சேர்ந்த கலைச்சொற்களைச் சேர்ந்தாற்போலப் பயன்படுத்துகிறேன் என்று சொல்லலாம். ஆனால் அப்படி அமைப்புவாதத்துக்குள் பயன்படுத்தினால்தான் தவறு. நான் பேசிக்கொண்டிருக்கும் தளத்தில் ஒரு கலைச்சொல்லும் சிந்தனையும் ஏற்கப்பட்டிருக்கிறது, இன்னொன்று ஏற்கப்படவில்லை என்றே பொருள்.
ஓர் அமைப்புவாத விமர்சகன் மொழியியலின் அடிப்படையில் படைப்பின்முன் நிற்கிறான். அவன் அமைப்புவாதத்தின் கலைச்சொற்களைப் போட்டு அதைப் பார்க்கிறான். ஆகவே அவன் கலைச்சொற்களை சீராகக் கையாளலாம். மேலும் தமிழில் பேசும் கோட்பாட்டு எழுத்தாளர்கள் எவரும் தாங்கள் வாசித்தவற்றுக்கு அப்பால் எதையும் தங்கள் சொந்தச் சிந்தனைமூலம் சொல்வதில்லை. ஆகவே அவர்களின் கலைச்சொற்களில் விவாதமாற்றம் நிகழ்வதுமில்லை.
நான் ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறையின் பிரதிநிதியாக நிற்கவில்லை. இந்தக் காலகட்டத்தின் பொதுவான சிந்தனைத்தளத்தைச் சார்ந்த ஒரு வாசகனாகவே நிற்கிறேன். இந்தப் பொதுத்தளம் என்பதே இன்றுவரை இங்கே வந்து சேர்ந்த பலதுறைகளைச்சேர்ந்த பலதரப்பட்ட சிந்தனைகளின் சிக்கலான முரணியக்கம் மூலம் உருவாகி வந்திருப்பதுதான். இதிலுள்ள எல்லாக் கலைச்சொற்களுமே ஏதேனும் ஒரு சிந்தனைத்துறையைச் சார்ந்தவைதான்.
இங்கே இருந்தே நான் என் சொற்களையும் கருத்துக்களையும் எடுத்துக்கொள்கிறேன். இதற்குள் இருக்கும் இன்னொருவரிடம் நான் அடைந்த சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். இது புதியதுமல்ல. இப்படித்தான் எல்லாவற்றையுமே பகிர்ந்துகொள்கிறோம். ஒரு சாதாரண உரையாடலிலேயே பல்வேறு துறைசார்ந்த கலைச்சொற்களைக் கையாள்கிறோம். இது நுட்பமான பகிர்தல் என்பதனால் மேலதிக க்லைச்சொற்கள் பயன்படுத்தபடுகின்றன.
இவ்வாறு கலைச்சொற்களை எடுத்துக்கொள்வதில் எனக்கென்று ஒரு கவனம் இருப்பதை எவரும் காணலாம். எம்.டி.முத்துக்குமாரசாமி அமைப்பியல் என்கிறார். நான் அச்சொல்லை எடுத்துக்கொள்வதில்லை. அங்கே க.பூரணசந்திரன் சொல்வதை ஏற்கிறேன். இயல் என்பது ஒரு தனி அறிவுத்துறைக்கான பின்னொட்டு. மொழியியலின் ஒரு கொள்கைதான் அமைப்புவாதம் என்கிறார் அவர்.
discourse என்ற சொல்லுக்கு நாகார்ஜுனன் அளிக்கும் மொழியாக்கம் சொல்லாடல். ஒரு மொழிக்களத்தில் ஒரு கொடுக்கல்வாங்கலாக அர்த்தம் உருவாகி மாறிக்கொண்டே இருக்கிறது என்ற பொருளில் அமைக்கப்பட்ட சொல். அதை நான் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் அந்தக் கருத்து மொழியியலின் ஒரு கொள்கையாக மட்டுமே தெரிகிறது. அக்கொள்கையைக் குறிப்பிடுவதற்காக அச்சொல்லைக் கையாளலாம். மொழியில் அர்த்தங்களை உருவாக்கும் சொற்களின் பரப்பையே discourse என்னும்போது நான் உத்தேசிக்கிறேன். ஆகவே கல்வித்துறை மொழியாக்கமான சொற்களன் என்ற சொல்லைக் கையாள்கிறேன்.
அவ்வாறு நான் கையாளும் எல்லாச் சொற்களையுமே அவற்றின் உருவாக்கத்தை, அவற்றுக்குப்பின்னாலுள்ள சிந்தனையைப் பரிசீலித்துத்தான் கையாள்கிறேன். ஒரு சொல்லைத் தமிழவனிடமும் ஒரு சொல்லை க.பூரணசந்திரனிடமும் எடுத்துக்கொள்வது அதனாலேயே. ஒருசொல்லுக்குப் பின்னாலுள்ள சிந்தனையை ஓரளவேனும் ஏற்றுக்கொண்டால்தான் அச்சொல்லைப் பயன்படுத்துகிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்ட சிந்தனைகளாலும் சொற்களாலும் ஆனது என் அகம். அதையே படைப்புகளை எதிர்கொள்ளவும் விளக்கவும் பயன்படுத்துகிறேன்.
பொதுவிவாதத்துக்கு வரும்போது எந்த ஒரு அறிவுத்துறையும் கொஞ்சமேனும் இவ்வியல்பைக் கொண்டிருப்பதைத் தவிர்க்கவும் முடியாது. இந்த விவாதத்திலேயே மொழியியலாளர் தரப்பில் canon என்ற சொல் அதிகமாகப் புழங்கியது. அது இறையியல் கலைச்சொல்தான். பைபிளில் கிறித்தவ மரபில் திருச்சபையால் முதல்மூலநூலாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளே canon. அப்படி ஏற்கப்படாமல் இரண்டாம் கட்ட முக்கியத்துவம் கொண்ட பகுதிகள் apocrypha எனப்பட்டன. பின்னர் அது முதற்பேரிலக்கியமரபு என்ற பொருளில் இலக்கியத்தில் கையாளப்பட்டது. மதம் சார்ந்த விவாதங்களில் மூலநூல் என்ற சொல்லையே நான் கையாள்கிறேன்.
ஓர் இறையியலாளர் எம்.டி.முத்துக்குமாரசாமியிடம் ‘நீங்கள் இறையியல் கலைச்சொற்களையும் மொழியியல் கலைச்சொற்களையும் முறைமை இல்லாமல் கலக்கிறீர்கள்’ என்று குற்றம்சாட்டலாம். ‘இல்லை, இறையியல் கலைச்சொல்லான canon பொது மொழித்தளத்தில் இருந்து மொழியியலால் எடுத்தாளப்பட்டு மேலதிக அர்த்த ஏற்றம் அளிக்கப்பட்டு இன்று மொழியியல் கலைச்சொல்லாக உள்ளது’ என அவர் பதில் சொல்லலாம். அது ரசனை விமர்சனத்தில் இன்னும் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான்.
எம்.டி.முத்துக்குமாரசாமி அடையும் இடர்கள் இருவகை. ஒன்று நான் கையாளும் சொற்களை அவரது மொழியியல்புலத்துக்குள் கொண்டு சென்று வாசிப்பது. மொழியியல் சாராத சொற்களை அங்கே கொண்டுசெல்லமுடியாமல் இருக்கும்போது அதை முரண்பாடாக எடுத்துக்கொள்வது. என் சொற்களினூடாக நான் சொல்லவருவது எப்போதுமே தெளிவாகவே உள்ளது. அதை வந்து சேர்வதற்குத் துறைசார் கட்டுடைப்புகள் தேவையில்லை. ரசனை விமர்சனம் இலக்கியத்தை அணுகச்சாத்தியமான பொதுவாசகனுக்காக அவனுடைய மொழியிலேயே எழுதப்படுகிறது.
இன்னொன்று, என்னைத் திட்டவட்டமாக அவருக்குத் தோன்றியமுறையில் வகுத்துக்கொள்வது. வலதுசாரி என்ற ஒற்றைச் சொல்லில் என் எண்ணங்களை, என் ஆளுமையை முற்றாக வகுத்துவிட்டபின் அதற்கு வெளியே உள்ள அனைத்தையும் என் முரண்பாடாகக் காண்பது. இந்த வகையான எளிய சட்டகத்துக்குள் என்னை மட்டுமல்ல ஆக்கபூர்வமான கருத்துச்சொல்லும் எவரையுமே வகுத்துவிடமுடியாது.
உதாரணமாக நான் இலக்கியத்தையும் அதற்கு ஆதாரமான பண்பாட்டையும் எல்லாம் பொருளியல்அடித்தளத்தின் நேரடி விளைவான மேற்கட்டுமானமாகப் பார்ப்பதில்லை. இலக்கியத்தின் அகவயமான படைப்புநிலையையே நம்புகிறேன். அது புறச்சூழலின் ஆக்கமல்ல என்றே நினைக்கிறேன். ஆகவே அதற்கான அகவயமான சொல்லாட்சிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துவேன். அகத்தூண்டல், படைப்பாக்கம் என்றெல்லாம் சொல்வேன். உடனே என்னை வலதுசாரி என ஒரு மார்க்ஸியர் முத்திரைகுத்தலாம்
ஆனால் வரலாற்றை அறிவதற்கு மார்க்ஸிய முரணியக்க வரலாற்றுப் பொருள்முதல்வாதமே மிகச்சிறந்த கருவி என நினைக்கிறேன். கூடுமானவரை வரலாற்றை அதைக்கொண்டே புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயல்வேன். உபரி, மூலதனம், ஆதிக்கக்கருத்தியல் போன்ற கருத்தாக்கங்களைப் பயன்படுத்துவேன். உடனே வலதுசாரிசிந்தனை கொண்ட ஒருவர் மார்க்ஸியக் கலைச்சொற்களைக் குழப்புகிறார் என்று சொல்ல ஆரம்பித்தால் நான் ஒன்றும் சொல்ல முடியாது. என்னுடைய சவால் படைப்பு குறித்த அகவயப்பார்வையையும் வரலாறு குறித்த புறவயப்பார்வையையும் இணைக்கும் புள்ளியிலேயே இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட துறையின் கட்டுப்பாட்டுக்குள் நின்று எழுதுபவர்கள், ஒரு குறிப்பிட்ட சிந்தனைகளை மட்டும் திருப்பிச் சொல்பவர்கள் அந்தத் துறையின் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம். கல்வித்துறையில் அது ஒரு கட்டுப்பாடாகவே இருக்கலாம். ஆனால் இலக்கியத்தையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயலும் ஒருவருக்கு எல்லா சிந்தனைகளும் அவருக்கான கருவிகளே.அவற்றைக்கொண்டு அவர் ஓர் விவாதத்தை உருவாக்குகிறார்.
ஆம், துறைசார் மயக்கம் என்ற சிக்கல் உண்டுதான். அதை நான் கவனமாகத் தவிர்க்கும் இடங்கள் உண்டு. உதாரணமாக இலக்கியத்தின் பலநுட்பமான விஷயங்களைச் சொல்ல அத்வைதத்தின் கலைச்சொற்கள் உதவக்கூடும். பொருளேற்றம் பொருளுருவாக்கம் போன்றவற்றை நுட்பமாக விளக்கும் ஃபானம்,ஃபாசம் போன்ற கலைச்சொற்கள் பல உள்ளன. ஆனால் அவற்றை இலக்கியத்துக்குள் கொண்டுவருவதில்லை. ஏனென்றால் அவை இங்கே பொதுத்தளத்துக்கு வரவில்லை. அவை இன்னும்கூட அத்வைதச்சொற்களே.
கலைச்சொல்லைக் கையாள்வதைப்பற்றிய எம்.டி.முத்துக்குமாரசாமியின் இதே குற்றச்சாட்டு மு.தளையசிங்கம் மீதும் எஸ்.என்.நாகராஜன் மீதும் ஞானிமீதும் கடுமையாக முன்வைக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. மு.தளையசிங்கம் மார்க்ஸியக் கலைச்சொற்களையும் அத்வைதக் கலைச்சொற்களையும் தானே உருவாக்கிய கலைச்சொற்களையும் கொண்டுதான் தன் சிந்தனைகளை முன்வைத்தார். அவற்றுக்குத் தான் உருவாக்கிய தனி சொற்களனில் அர்த்த உருவாக்கம் நிகழ்த்தினார்.
எஸ்.என்.நாகராஜன் வைணவ மெய்யியல் கலைச்சொற்களை மார்க்ஸிய கலைச்சொற்களுடன் இயல்பாகக் கலந்து பேசுகிறார். அவர்களுடையது மிக அசலான முன்னோடிச்சிந்தனை என்பதனால் அது தேவையாகிறது. ஏதேனும் வரையறுக்கப்பட்ட அறிவுத்துறையை முழுக்கச் சார்ந்து அதன் குரலாக ஒலிக்காமல் தன் சுயமான அறிதலைப் பொதுத்தளத்தில் சொல்லமுயலும் எவரும் ஓரளவுக்கு அதைச் செய்யாமல் இருக்கமுடியாது.
சாதாரண தளத்திலேயேகூட ஒருவர் தன்னுடைய சிந்தனைகளை அவ்வாறு சூழலில் இருந்து எடுத்த பல்வேறு கலைச்சொற்களைக்கொண்டே தொடர்புறுத்த முடியும். அவர் அச்சூழலில் அக்கலைச்சொற்களைக் கையாளும் விதத்தை அந்த உரையாடலிலேயே எளிதில் வாசகர் உணரவும் முடியும். தொடர்புறுத்தலை மறுப்பதற்காக வேண்டுமென்றால்தான் அச்சொற்களை அவற்றின் மூல அறிவுத்தளத்தில் வைத்து மட்டுமே பார்ப்பேன், நீ தரும் அர்த்தத்தை ஏற்கமாட்டேன் என ஒருவர் வாதிடலாம்.
அப்படியென்றால் இலக்கியம் பற்றிய எந்தப் பேச்சையுமே நிராகரிக்கலாம். அதன் எல்லாக் கலைச்சொற்களும் ஏதேனும் அறிவுத்துறையை, பிற கலைகளைச் சார்ந்தவையே. அதாவது எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லும் இதே வாதத்தை ஒரு இறையியலாளர் சொல்லலாம். உள்ளொளி, தரிசனம் என எல்லாச் சொல்லையும் இறையியலுக்குள் வந்து வாதிட அவர் அறைகூவலாம். கூடவே நீ ஆழ்மனம் என்கிறாய், அது உளவியல் கலைச்சொல் அதை இதனுடன் குழப்பாதே, ஆன்மா என்று மட்டும் சொல் என அவர் கூறலாம்.
கடைசியாக ஒன்று. இதை எம்.டி.எம் இன்னும் சொல்லவில்லை. ஆனால் உலகமெங்கும் ரசனைவிமர்சனத்துக்கு எதிரான கோட்பாட்டுத்தள தாக்குதல்களில் ஒலிக்கும் வாதம் இது என்பதனால் இதற்கும் விளக்கமளித்துவிடுகிறேன். ரசனை விமர்சனத்தின் மொழி என்பது துறைசார்விமர்சனத்தின் கறாரான புறவயத்தன்மை கொண்டதாக இருப்பதில்லை. அது இலக்கியம்போலவே படிமங்களும், வர்ணனைகளும் ,சித்தரிப்புகளும் அணிகளும் கொண்ட அகவயமொழியாகவே இருக்கிறது. கவிதை பற்றிக் கவிதையின் வழிகளையே கையாண்டு அது பேசக்கூடும். கலைச்சொற்களைக்கூட அது அவ்வாறு படிமங்களாக ஆக்கிக்க்கொள்ளக்கூடும்.
இலக்கியம் பொருள்குறிப்பதை விடவும் பொருள்மயக்கத்தையே [ambiguity] முக்கியமான மொழிக்கருவியாக எண்ணுகிறது. அதைப் பின்பற்றும் ரசனை விமர்சனம் உண்டு. வாசகனின் தர்க்கத்தைவிடக் கற்பனையை எதிர்கொள்ளும் ரசனைவிமர்சன மொழிநடை உண்டு. அதை இலக்கியம்போலவே வாசகன் வாசிக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் ரசனை விமர்சனம் படைப்பை முழுமையாக புறவயமாக விவாதித்து நிர்ணயித்துவிடமுடியும் என்ற நம்பிக்கைக்கு எதிரானது. தன் அகவய வாசிப்பை வாசகனின் அகவய வாசிப்புக்குப் பக்கமாகக் கொண்டுசெல்வதே அதன் இலக்கு. படைப்பில் புறவயமாகச் சொல்லப்பட சாத்தியமான எல்லாவற்றையும் சொன்னபின் அது அக அனுபவத்தை அகவய மொழியிலேயே சொல்லக்கூடும்.
ரசனை விமர்சனத்தின் இவ்வியல்பைப் புறவயத்தர்க்கத்துக்கு எதிரானது என்று கோட்பாட்டாளர்கள் நிராகரிப்பதுண்டு. ஆனால் பின்நவீனத்துவ விமர்சகர்களில் பலர் உளவியல்விமர்சனங்களைக் கூட இந்தமொழியில் எழுதியிருக்கிறார்கள், புறவயத்தன்மையே மொழியில் சாத்தியமில்லை என வாதாடியிருக்கிறார்கள் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது. ரசனை விமர்சனம் புறவய விவாதத்துக்குக் கறாரான எல்லை வகுத்துக்கொண்டுள்ளது. அந்த எல்லைக்கு அப்பால் புறவயமாகப் பேசுவதென்பது வெற்றுத் தர்க்கத்தால் படைப்பின் சிக்கலான உள்ளியக்கத்தை மதிப்பிடும் பிழைக்குக் கொண்டுசெல்லும் என அது நினைக்கிறது.
பலசமயம் இங்கே கருத்துவிவாதம் என்ற பேரில் நிகழ்வது பேசப்படும் மொழியை,வழிமுறையை நிராகரிப்பதுதான். இரண்டாயிரத்தைநூறு வருடம் முன்பு நியாய சாஸ்திரம் தர்க்கத்தில் செய்யவேகூடாத பிழை என அதை வரையறைசெய்கிறது. எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் இடையே மொழி என்பது ஒரு பரஸ்பர ஒத்துக்கொள்ளல் மூலம் உருவாவதே. இருவேறு தளங்களில் நிற்பவர்கள் நடுவே விவாதத்துக்கான மொழி என்பது தற்காலிகமாகவேனும் பரஸ்பரம் ஏற்கப்படுவதே. அதை நிராகரிப்பது விவாதமல்ல, விவாத நிராகரிப்பு மட்டுமே.
நான் முன்வைக்கும் வாதங்கள், இதன் மொழி போன்றவை ரசனைவிமர்சனம் தனியான ஒரு விமர்சனமரபில் நின்றுகொண்டு அதன் வழிமுறைகளின்படி செய்யப்படுபவை. இன்னொரு விமர்சனமரபான மொழியியல் முறைமையில் நின்று கொண்டு அதை எதிர்கொள்வதற்கு விரிவான வழிகள் உள்ளன. அவற்றின் வழிமுறைகள் நடுவே விவாதம் இல்லை. இது மேலான வழி தெரியுமா என்ற வாக்கியத்துக்கும் அர்த்தமில்லை. அந்த வழிமுறைமூலம் பேசுபொருளில் எது புதியதாக வெளிப்படுகிறது, எது நான் சொல்வனவற்றை அர்த்தபூர்வமாக நிராகரிக்கிறது என்பதே முக்கியமானது.