எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம்,


உங்கள் குறிப்பு

காட்சிப்பிழை புரிதல்பிழை போன்ற பகடிகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நான் விவாதிக்கும்தளம், கேட்கும் வினாக்கள் அப்படியே பல படிகளாக விரிந்து நீடித்துக்கொண்டே செல்கின்றன. எனக்கு அவற்றின் மறுதரப்பு பற்றி மட்டுமே அக்கறை.

ஆக, கடைசியில் நாம் இன்னொரு பொதுவான புரிதலை அடைந்துவிட்டோம். உங்கள் அணுகுமுறை பின்நவீனத்துவ விமர்சனம் என்பதால் நீங்கள் பாரதியைத் தர அடிப்படையில் மகாகவி என வகைப்படுத்தவில்லை. என் விமர்சனம் முழுக்க அதைச் சார்ந்ததாகவே இருந்தது.

எலியட்டை பற்றிய உங்கள் அனுபவத்துக்கு ஆழ்ந்த வருத்தங்கள். தமிழ் கல்லூரி வகுப்புகளில் ஆத்திச்சூடியையே கோனார் உரைகொண்டுதான் விளக்க வேண்டியிருக்கிறது. எலியட்டைப் புரிந்துகொண்டிருந்தால்தான் ஏதாவது விபரீதமாக ஆகியிருக்கும்

ஆனால் எலியட்டின் பாழ்நிலம் 1940 முதல் உலக மொழிகள் பெரும்பாலானவற்றில் ஆழமான பாதிப்பைச் செலுத்திய கவிதை. முற்றிலும் ஐரோப்பியப் பண்பாடு மீதான விமர்சனமாகிய, ஐரோப்பிய பண்பாட்டுக்குறிகள் மண்டிய அக்கவிதை எப்படி சம்பந்தமே இல்லாத மொழி-பண்பாட்டுச்சூழல்களில் அத்தகைய செல்வாக்கை செலுத்தியது என்றே விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ‘எது மிக பிரந்தியத்தன்மை கொண்டதோ அதுவே உலகளாவியது’ என அதற்கு பதிலும் சொல்லப்பட்டுள்ளது.

நான் கவிதையின் உலகளாவிய தன்மைக்கு உதாரணம் காட்டுவதென்றால் எலியட்டைத்தான் சுட்டிக்காட்டுவேன். எலியட் கவிதையில் ஓர் ஆங்கிலேயன் மட்டுமே புரிந்துகொள்ளும் ஓர் அம்சம் உள்ளது. அது மொழியாக்கத்தில் விடப்படும். உலகமெங்கும் சென்று உரையாடும் ஓர் அம்சமும் உள்ளது. அதுவே அதை இருபதாம்நூற்றாண்டின் உலகப்பொதுக்கவிதைகளில் ஒன்றாக ஆக்கியது.

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் எலியட்டின் பாழ்நிலத்தின் பாதிப்பினால் எழுதப்பட்ட, அல்லது அதற்கு எதிர்வினையாற்றக்கூடிய நீள்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் கவிதைகளுமே இந்திய சுதந்திரத்துக்குப்பின் பத்தாண்டுகள் கழித்து, சுதந்திரப்போராட்ட நம்பிக்கைகள் கைவிடப்பட்ட பின் எழுதப்பட்டுள்ளன. பின்னர் நக்சலைட் இயக்கத்தின் தோல்விக்குப்பின் பாழ்நிலத்தை இன்னொரு வாசிப்பு கொடுத்து எழுதப்பட்ட கவிதைகள் வந்தன. இது மிகச் சுவாரசியமான ஒரு பண்பாட்டு அம்சமாக விரிவாக விவாதிக்கப்பட்ட ஒன்று .

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தமிழில் ந.பிச்சமூர்த்தியின் வழித்துணை கவிதையில் எலியட்டின் பாழ்நிலத்தின் பாதிப்பு உண்டு. அதை விரிவான அலசல் மூலம் சி.சு.செல்லப்பா விவாதித்திருக்கிறார். சி.மணி எழுதிய ’நரகம்’ என்ற நீள்கவிதை பாழ்நிலத்தின் பாதிப்பினால் உருவானது. நகுலன் கவிதைகளில் எலியட்டின் அழகியல்பாதிப்பு உண்டு. அவரேகூட அதைச் சொல்லியிருக்கிறார்

பாழ்நிலம் கவிதைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது தேவதேவனின் நீள்கவிதையான ‘அகழி’ . பாழ்நிலத்தின் அதே அழகியல்பாணியில் எழுதப்பட்ட அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்தால் தேவதேவன் எலியட் பாணியில் அளிக்கும் தமிழ்மரபு,பண்பாடு சார்ந்த எல்லா உட்குறிப்புகளும், அடிக்குறிப்புகளும் அர்த்தமிழக்கும். ஆனால் எந்த நல்ல ஆங்கில வாசகனும் அது அளிக்கும் பாழ்நிலத்துக்கான எதிர்வினையை உணர அறியமுடியும்.

பாழ்நிலத்தின் அழகியல்பாதிப்பு கவிதைகள் வழியாகவே நீடித்தது. அப்படி அடையாளம் காட்டப்படக்கூடிய பத்து முக்கியமான புதுக்கவிதைகளையாவது தமிழில் எடுத்துவிடமுடியும். ராஜ சுந்தரராஜனின் உயிர்மீட்சி’உதாரணம்.மறைந்த இளம் கவிஞர் அப்பாஸ்கூட மிகச்சமீபத்தில் ஒன்று எழுதியிருக்கிறார். மூன்று தலைமுறைகளாகத் தமிழ்க் கவிதையில் ஆழமான பாதிப்பைச் செலுத்தி நீடிக்கும் கவிதை பாழ்நிலம்.

மலையாளத்தில் ஐயப்பப் பணிக்கர் எழுதிய ‘குருஷேத்ரம்’ என்ற கவிதை பாழ்நிலத்தின் பாதிப்பினால் எழுதப்பட்டது. மிகவிரிவான ஒப்பீட்டாய்வுகள் வெளிவந்துள்ளன. பின்னர் பல கவிதைகள். கெ.சச்சிதானந்தன் வரையில் பலரால் எழுதப்பட்டுள்ளன. மலையாள எலியட் என்றே என்.என்.கக்காடு அழைக்கப்படுகிறார்.

கன்னடத்தில் கோபாலகிருஷ்ண அடிகா எலியட்டின் பாழ்நிலத்தின் பாதிப்புள்ள இரு நீள்கவிதைகளை எழுதியிருக்கிறார். கன்னட எலியட் என்றே விமர்சனபூர்வமாகவும் பாராட்டாகவும் அழைக்கப்படுகிறார். அடிகாவையும் எலியட்டையும் ஒப்பிட்டுக் கன்னடத்தில் பல விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.

தன் கட்டுரை ஒன்றில் கெ.சச்சிதானந்தன் இந்தியப் புதுக்கவிதையில் எலியட் கவிதைகளின், குறிப்பாக பாழ்நிலத்தின், செல்வாக்கை மட்டுமே மதிப்பிட்டு விரிவான ஓர் ஆய்வை முன்வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களான ஷெல்லி கீட்ஸ் வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் செல்வாக்கினால் இந்தியமொழிகளில் மரபுக்கவிதைக்குள் நவீன அழகியல் வந்தது என்றும் எலியட்டின் பாதிப்பினால் வசனகவிதை அல்லது புதுக்கவிதை உருவானது என்றும் அவர் அவதானிக்கிறார்.

ஆகவே எலியட் ஆங்கிலப்பண்பாட்டில் உள்ளூறியவர், அவரது பாழ்நிலம் ஆங்கிலப்பண்பாட்டுக்கு வெளியே செல்வாக்கைச் செலுத்தவே செய்யாது, நோபல் பரிசைப் பிடுங்கிக்கொள் என்று பிற மொழியினர் சொல்வார்கள் என்ற அடிப்படையில் பேச ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அது உண்மை அல்ல. அவருக்கு இன்னொரு நோபல்பரிசு கொடுக்கும்படி குரலெழுப்பும் கவிஞர்கள் பர்மிய மொழியிலோ ஸ்வாகிலியிலோகூட இருப்பார்கள்.

நல்ல கவிதை அது உருவான மொழியில், பண்பாட்டில் மட்டுமே உருவாகக்கூடியதாகவே இருக்கும். ஆனால் உலகமெங்கும் சென்று சேரும் ஓர் அம்சமும் அதற்கிருக்கும். அதைக் கட்டுடைத்துக் காணமுடியாது. ரசனை விமர்சனம் உணர்த்திக்காட்டமுடியும்.

’மொழிபெயர்ப்புகளிலும் வேலை செய்யக்கூடிய கவிதைகளே தரமான கவிதைகள் அவற்றை எழுதவே தமிழ்க்கவிஞர்கள் உத்தேசிக்க வேண்டும் அவற்றை உலக சந்தையில் விற்கவேண்டும்’ என்பது உங்கள் வரி. என்னுடைய வரி ‘முழுக்கமொழிபெயர்க்கப்படக்கூடியதும் முழுக்க மொழிபெயர்க்கப்படமுடியாததும் நல்ல கவிதை அல்ல’ என்றுதான். இப்படித்தான் பிரதி கட்டுடைக்கப்படுகிறதென்றால் பயமாகவே இருக்கிறது. திரித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் சொல்லும் பதில் எனக்குச் சொல்லப்படுவதல்ல என்றே எடுத்துக்கொள்கிறேன்.

எலியட் மூலம் பாரதி விளக்கப்படும்போது Diachronic அணுகுமுறையின் வாய்ப்புகள் மீண்டும் உறுதியாகின்றன.மகிழ்ச்சி.

ஜெ

முந்தைய கட்டுரைஇரு பழைய கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎலியட்-எம்டிஎம்-எதிர்வினை