ரசனை விமர்சனமும் ஜனநாயகமும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு

அன்புள்ள எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்களுக்கு,

உங்கள் கட்டுரை வாசித்தேன். கொஞ்சம்கொஞ்சமாக நாம் ஒரு தெளிவை நோக்கி வந்துகொண்டிருக்கிறோம்- அல்லது நான்.

பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் நீங்கள் பாரதிமகாகவி என்று சொல்லவில்லை என்பதில் மகிழ்ச்சி. மிகவும் பயந்துகொண்டிருந்தேன். எதிர்அறம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது. அதைப்பற்றி நிறைய பேசுகிறார்கள். உங்களிடம்தான் கேட்பதாக இருந்தேன்.

உங்கள் அணுகுமுறையில் தரவேற்றுமையும் அளவுகோலும் இல்லை என்று அறிந்தேன். பாரதியும் பாரதிதாசனும் வா.மு.சேதுராமனும் அப்துல்ரகுமானும் உங்கள் ஆய்வகத்தில் சமம்தான் என்பதை நானும் சொல்லியிருந்தேனே. பாரதி மகாகவி என்று நீங்கள் சொன்னபோது என்னது பின்நவீனத்துவர்களும் முதற்பேரிலக்கிய மரபை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற பீதி ஏற்பட்டது. சிவாஜி படத்தில் கதாநாயகி சிம்மக்குரலில் பேச ஆரம்பித்தால் அவர் என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்.

நான் மகாகவி என்ற சொல் மூலம் உத்தேசித்தது, உங்களுக்குக் கடிதமெழுதிய நூற்றுச்சொச்சம் அப்பாவிகளும் நினைத்தது, மகாகவி என்ற சொல் பிற கவிஞர்களை விட பாரதிக்கு இருக்கும் முதன்மை இடத்தைக் குறிக்கிறது என்றுதான். பாரதி மகாகவி என்பதன் மூலம் நீங்கள் பாரதிக்கு எந்தவிதமான முதன்மை இடமும் அளிக்கவில்லை என்று அறிந்ததில் தெளிவடைந்தேன். ஆக , அதிலும் நம்மிடம் எந்த முரண்பாடும் இல்லை.

ஆகவே நாம் அடிப்படைப்பிரச்சினையை மட்டுமே பேசவேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம். அதாவது ரசனைவிமர்சன மரபை ஒட்டுமொத்தமாக நீங்கள் நிராகரிக்க விரும்புகிறீர்கள். மூலப்பெரும்படைப்புக்ளாக எவற்றையுமே நிலைநிறுத்த விரும்புவதில்லை. அப்படி நிலைநிறுத்தும் ’கருத்தியல்யந்திரங்களை’க் கண்டுபிடித்து அவற்றின் அதிகாரப்பாத்திரத்தைக் கட்டுடைக்க முயல்கிறீர்கள். நல்லது, பின்நவீனத்துவம் செய்துவருவது அதைத்தான். நடுவே சம்பந்தமே இல்லாமல் மகாகவி என்ற சொல் வழியாக நீங்களும் canon ஐ உருவாக்குகிறீர்கள் என நான் நினைத்ததே பிரச்சினை.

’canonization தனிப்பட்ட விமர்சகனால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. ரசனை விமர்சகன் செயல்படும் காலகட்டத்திலுள்ள ஆதிக்க நிறுவனங்கள், அரசு, மத நிறுவனங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக அமைப்பினைப் புனிதமாக மாற்றிக் காப்பாற்றுகின்ற கருத்தியல் எந்திரங்கள்,போட்டி அமைப்புக்கள் எல்லாம் இணைந்தே பேரிலக்கியம் என்று ஒரு சிலவற்றை உச்சத்தில் வைக்கின்றன. ஜெயமோகன் பாரதிக்கு மகாகவி அந்தஸ்தைத் தர மறுத்து முன் வைக்கும் ரசனை விமர்சனமும் அவர் முன்னிறுத்துகிற அளவுகோல்களும் எந்தக் கருத்தியல் எந்திரங்களின் ( ideological apparatus) வழி கட்டமைக்கப்படுகின்றன என்று வாசகர்கள் பார்க்கவேண்டும்.’என்கிறீர்கள்.

எல்லா விவாதங்களிலும் பின்நவீனத்துவர் ரசனைவிமர்சனம் நோக்கிச் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுதான் இது. சமீபத்தில் இரு தருணங்களில் இருவேறு சிந்தனையாளர்களை நோக்கி ஏறக்குறைய இதே சொற்களில் விமர்சனம் சொல்லப்பட்டதை வாசித்தேன். ஸ்டீபன் கிங்குக்கு விருது வழங்கப்பட்டதைக் கண்டித்த ஹரால்ட் ப்ளூம் மீது. முதலியத்தின் சமீபகால நெருக்கடி பற்றி ஆக்ஸ்போர்டில் ஓர் உரைநிகழ்த்திய எரிக் ஹாப்ஸ்பாம் மீது. தேடினால் அவர்கள் சொன்ன பதிலை அப்படியேகூட எடுத்துவிடலாம். நானே சொந்தமாகச் சொல்ல முயல்கிறேன்.

முதற்பேரிலக்கியமரபைக் கட்டமைப்பதில் அரசு,மதம்,சமூக அடுக்கதிகாரம், சமூகத்தின் ஆசாரநம்பிக்கைகள் எல்லாமே இணைந்துதான் செயல்படுகின்றன என்பதை நான் மறுப்பதில்லை. எல்லா விமர்சனமும் அதிகார விருப்புறுதியின் வெளிப்பாடுதான் என்றே எப்போதும் சொல்லிவருகிறேன். தனிப்பட்ட விமர்சகனின் செயல்பாடாக நாம் அவற்றைப்பார்க்கிறோம். ஆனால் அவன் கடலில் காற்றால் எழுப்பப்படும் அலைமீது வரும் படகில் நிற்கும் மனிதனைப்போலத்தான். அவனுக்குப்பின்னால் பிரம்மாண்டமான பல அதிகார விசைகள் உள்ளன. அதையும் நான் மறுக்கவில்லை.

ஆனால் இது ஒற்றைப்படையானது என்பதை மட்டும்தான் உறுதியாக மறுக்கிறேன். இது அடக்குமுறை மூலமோ மேலாதிக்கம் மூலமோ தன்னிச்சையாக நிகழ்த்தப்படுவது அல்ல. இது எப்போதுமே ஓர் பிரம்மாண்டமான சிக்கலான விவாதம் மூலம்தான் நடத்தப்படுகிறது. தொடர்ந்து இடமாற்றம்செய்யப்படும் சமரசப்புள்ளியாகவே முதற்பேரிலக்கிய மரபு காணக்கிடைக்கிறது. ரசனை விமர்சகன் முதற்பேரிலக்கியத்தை உருவாக்கி நிலைநாட்டுபவன் என்ற வரி அவனை சரியாக மதிப்பிடுவதல்ல. அவன் அதை உடைத்து மறு உருவாக்கம் செய்பவனாகவே இருக்கிறான். முதற்பேரிலக்கியத்தை மறுவரையறை செய்யாத ரசனைவிமர்சகனே கிடையாது.

உதாரணங்களையே முன்வைத்துப்பேசுவோம். சங்க இலக்கியம் என்ற முதற்பேரிலக்கியத் தொகை எப்படி உருவாகியிருக்கும்? நாமறிந்தவரையில் அது எந்த அடக்குமுறையாலும் ஒற்றைப்படையாக உருவாக்கப்படவில்லை. ஒரு பெரிய விவாதம் நிகழ்ந்திருப்பதை நாம் அதிலேயே காணமுடிகிறது. தூலமாகவே அத்தகைய விவாதசபைகள் பல இருந்திருப்பதைப்பற்றி அறிகிறோம். பெருங்குடி மன்னர்கள் சிறுகுடிமன்னர்களை வென்று அழித்துப் பேரரசுகள் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட சங்கநூல்களில் சிறுகுடி மன்னர்களின் வரலாறும் அக்குடிகளின் குரல்களும் இணையாகவே பதிவாகியிருக்கின்றன.

முப்பெரும் மன்னர்கள் உச்ச அதிகாரத்தை அடைந்தபின் எழுதப்பட்ட ஐம்பெரும்காப்பியங்களில் முதலிரு காப்பியங்களுமே குடிமக்கள் காப்பியங்கள். குடிமைஅறங்களை அரசதிகாரத்துக்கு மேலாக, அரசதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விசையாக முன்வைக்கக்கூடியவை. அவை நம்முடைய முதற்பேரிலக்கியங்களில் முக்கியமான இடம்பெறுகின்றன, இன்றளவும். சாதியைத் தொல்காப்பியம் இலக்கணமாக்குகிறது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ’ என்று சொல்லும் நூல் முதற்பேரிலக்கியத்தில் முதலிடம் பெறுவதாகவும் வரமுடிகிறது.

அதாவது அரச,சமூக அதிகாரங்களின் நேரடியான கருவியாக நீங்கள் சொல்லும் கருத்தியல் இயந்திரம் செயல்படுகிறது என்று சொல்வது எளிமைப்படுத்தல். இது ஏற்கனவே மார்க்ஸியர் முன்வைத்த பொருளியல் அடித்தளம் சார்ந்த குறுக்கல்வாதத்தின் இன்னொரு முகம் மட்டுமே. ஒட்டுமொத்தக் கலையிலக்கியமே ஆதிக்கவர்க்கத்தால் ஆதிக்கத்தை நிலைநாட்டி செயல்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட கருத்தியல்கருவி மட்டுமே என்று அவர்கள் சொன்னதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு? அந்த இயந்திரவாதத்தையா நீங்கள் வேறு சொற்களில் முன்வைக்கிறீர்கள்?

இத்தகைய சிறுமைப்படுத்தல்களை இலக்கியத்தின் உள்ளியக்கங்களை ஒருபோதும் அறியமுடியாத கோட்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இலக்கிய வாசகன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.இலக்கியப்படைப்பின் வழிகள் கரவுகளும் மர்மங்களும் கொண்டவை. இலக்கியம் ஒற்றைப்படையாகப் பேசுவதில்லை, முரணியக்கம் நிறைந்த ஒரு வடிவத்தை முன்வைக்கிறது. இலக்கியம் யதார்த்தமும் கனவும், எதிர்ப்பும் சமரசமும், ஆதிக்கமும் ஆதிக்க எதிர்ப்பும் ஊடுபாவாக ஓடும் ஒரு பெரிய மொழிவெளி என்றே நான் காண்கிறேன்.நல்ல வாசகன் அதன் எல்லாத் தளங்களுடனும் தொடர்புகொண்டுதான் அதை வாசித்துக்கொண்டிருக்கிறான்.

ஆகவே எந்தப் பேரிலக்கியஆக்கத்தையும் ஒரு காலகட்டத்தின், ஒரு வர்க்கத்தின், ஒரு மேலாதிக்கத்தின் ஒற்றைப்படையான குரல் என்று முத்திரையிடுவதை ஓர் அவமதிப்பாகவே நான் கொள்வேன். கண்டிப்பாக அதில் மேலாதிக்கத்தின் குரல் இருக்கும். கூடவே அதை எதிர்க்கும் குரல்களும் முயங்கியிருக்கும் .மீறிச்செல்லும் குரலும் ஒலிக்கும். தமிழகத்தின் தீவிரமான சாதிய அடுக்கதிகாரத்தை உருவாக்கிய சோழப்பேரரசின் மேலாதிக்க கருத்தியலின் வெளிப்பாடாகக் கம்பராமாணத்தை வாசிக்கலாம். கூடவே ’குகனொடும் ஐவரானோம்’ என ஒலிக்கும் மானுடசமத்துவத்துக்கான அறத்தின் குரலாகவும் வாசிக்கலாம். குகப்படலத்திலும் வாலிவதைப்படலத்திலும் எல்லாம் ஒலிக்கும் அடித்தள மக்களின் குரல்கள் நிறைந்த நூலாகவும் வாசிக்கலாம்.

இப்படித்தான் முதற்பேரிலக்கியங்களும். அவையும் ஒற்றைப்படையானவை அல்ல. ஒரேதரப்பால் திரட்டப்பட்டு ஒற்றைப்படையாக சமூகம் மீது சுமத்தப்பட்டவையும் அல்ல. தமிழின் முதற்பேரிலக்கியத்தொகையில் வைதீகக்கருத்தியலும் அவைதீகக் கருத்தியலும் முரண்பட்டு இயங்குவதைக் காணலாம். அப்படி ஏராளமான உள்முரண்களால் அது அமைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் அதிகார மையத்தையே நான் ஒரு சமரசப்புள்ளியாகத்தான் பார்க்கிறேன், மேலாதிக்க மையமாக அல்ல. முதற்பேரிலக்கியத்தொகை சமூக அதிகாரத்துடன் கொள்ளும் முரணியக்கமாக உருவாகிவந்தது என்னும்போது அது கண்டிப்பாக ஆதிக்க அதிகாரத்தின் ஒற்றைக்குரல் அல்ல.

அத்துடன், ஏற்கனவே சொன்னதுபோல முதற்பேரிலக்கியத்தொகை இடைவிடாமல் மறுபரிசீலனைக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மையம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் முதற்பேரிலக்கியத்தொகையில் வைதிகநூல்கள் எல்லாமே பின்னகர்ந்து அவைதிகநூல்கள் மேலே வந்திருப்பதைக் காணலாம். அது மிக முற்போக்கான ஒரு நகர்வென்றே நான் நினைக்கிறேன். ஆகவே முதற்பேரிலக்கியத்தைக் கட்டுவதென்பதை வெறுமே ஆதிக்க கருத்தியல் யந்திரத்தின் செயல்பாடு எனக் குறுக்கிக்கொள்ளவேண்டாம்.

ஒரு ரசனைவிமர்சகனாக என்னுடைய செயல்பாட்டை ஏற்கனவே இருக்கும் முதற்பேரிலக்கியத்தை வலியுறுத்துவது என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களோ என ஐயமாக இருக்கிறது.நேர்மாறாகப் பண்டைய இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் முதற்பேரிலக்கியத்தொகையை மறுகட்டமைப்பு செய்யவே நான் முயல்கிறேன். அதையே எந்த ரசனைவிமர்சகனும் செய்வான் என நினைக்கிறேன். ரசனை விமர்சனம் உருவாக்கும் விவாதம் முதற்பேரிலக்கியத்தின் மையத்தை நகர்த்துவதாகவே அமையும்.

அந்த மாற்றமானது ஆதிக்கக்கருத்தியலின் நேரடி விளைவாக மட்டுமே இருக்கமுடியும் என நீங்கள் சொன்னால் நான் அதை வலுவாகவே மறுப்பேன். நேர்மாறாக அதை இன்றுள்ள எல்லா சமூகக்கூறுகளுக்கும் பங்களிப்புள்ளதாக, இன்னும் ஜனநாயகத்தன்மை கொண்டதாக மாற்றும் செயல்பாடாகவே அதை நான் நிகழ்த்தி வருகிறேன். என்னுடைய எழுத்தில் நீங்கள் அதை காணலாம்.

உதாரணமாக சமீபத்தில் அயோத்திதாசர் பற்றி நான் எழுதிய கட்டுரை. அது தமிழ் நவீனசிந்தனைக்கான முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்க முயல்கிறது. அதற்கான விவாதம் ஒன்றைத் தொடங்கி வைக்கிறது. இன்று கவனத்துக்கு வந்துள்ள அயோத்திதாசரின் சிந்தனைகளையும் உள்ளடக்கி மூலப்பேரிலக்கியத்தொகையை மாற்றியமைக்கும் முயற்சிதான் அது. அது ஆதிக்கக்கருத்தியல்இயந்திரத்தால் உருவாக்கப்படுவதுமட்டுமே என்று சொல்லமாட்டீர்களென நினைக்கிறேன்.

அந்த உருவகம் அப்படியே என்னால் நிறுவப்படுவது சாத்தியமே அல்ல என நான் அறிவேன். என் கருத்து ஒரு விவாதத்தளத்தில் சென்று நிற்கும். அங்கே பலகாலமாக விவாதம் நிகழும். அது சமூக அதிகாரத்தின் சமநிலையால், கருத்தியல் அதிகாரத்தின் சமநிலையால் மெல்லமெல்ல ஒரு பொதுவான புள்ளியைக் கண்டடையும். அயோத்திதாசரை அது மேலே கொண்டுசெல்லலாம் கீழேயும் இறக்கலாம். ஆனால் அவரையும் உள்ளிட்ட ஒரு மூலநூல்தொகையை உருவாக்கும். இப்படித்தான் ரசனைவிமர்சனம் செயல்படுகிறது. ஆம், அது ஆதிக்கத்தை நிலைநாட்டும் செயல்பாடல்ல. அது ஒரு பிரம்மாண்டமான ஜனநாயகச் செயல்பாடு.

அந்தவகையிலேயே பாரதி பற்றிய விவாதத்தையும் நான் முன்னெடுக்கிறேன். பாரதி மகாகவி என்று நிறுவி மூலநூல்தொகையில் அவரது இடத்தை உச்சிக்குக் கொண்டுசென்ற ’கருத்தியல்யந்திரம்’ என்ன என்பதை, அது செயல்பட நேர்ந்த வரலாற்றுச்சூழலை மிக விரிவாகவே நான் பேசுகிறேன் என்பதை நீங்கள் காணலாம். இப்போது அந்த மறுபரிசீலனையை ஆவேசமும் கண்ணீருமாக எதிர்ப்பவர்களுக்குப் பின்னால் உள்ள ‘கருத்தியல் யந்திரத்தையும்’ நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் பாரதியின் கவிதையை அவருடைய ஆளுமைசார்ந்த, தமிழ்மரபு சார்ந்த தனித்தன்மைகளால் மட்டுமே விவரித்து அவரை திருவுரு ஆக்க முயல்கையில் நான் அவரது கவித்துவத்தையும் அவரது சிந்தனைகளையும் தேசமளாவிய, உலகளாவிய ஒரு பிரம்மாண்டமான ஒரு பண்பாட்டு உரையாடலின் விளைவாகக் காண்பதை வாசகர்கள் நம் விவாதங்களில் இருந்து அறிய முடியும். என்னுடையதே ஜனநாயகபூர்வமான இலக்கிய செயல்பாடு என அவர்கள் உணரவும் கூடும்

நான் பாரதி பற்றித் தீர்ப்பளிக்கவில்லை எம்.டி.எம். நான் அதை முன்னரே சொல்லிக்கொண்டுதானே பேச ஆரம்பித்தேன்? நான் பாரதியை மகாகவி என நிறுவிய canonization இன் கருத்தியலை வரலாற்றுபூர்வமாக அடையாளம் காண முயல்கிறேன். ரசனை விமர்சனத்திற்குரிய வழிமுறைகளைக்கொண்டு அந்த canon ஐ மறுபரிசீலனை செய்கிறேன். அது ஆதிக்கக்கருத்தியலின் செயல்பாடல்ல, அதற்கு நேர் எதிரான ஜனநாயகச் செயல்பாடு. அந்த செயல்பாடு எல்லா canon மீதும் நிகழவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் அமைப்புவாதியாக, பின்நவீனத்துவராக பதில் சொல்லியிருந்தால் பாரதியை மகாகவி என நிறுவிய கருத்தியல் யந்திரத்தைத்தான் முதலில் சுட்டிக்காட்டியிருப்பீர்கள். அதற்கு எதிரான விவாதம் என்பது பல்வேறு பண்பாட்டுக்குரல்களையும் கருத்தில்கொண்டு மூலநூல்தொகையின் மையத்தை இடம் மாற்றும் செயல்தான் என்று சொல்லியிருப்பீர்கள். அது ஒரு பண்பாட்டுச்சூழலில் நிகழும் ஜனநாயகச் செயல்பாடே என்பதை எடுத்துக்காட்டியிருப்பீர்கள்.

என்னுடைய ரசனை விமர்சனம் அதிகார உள்ளடக்கம் கொண்டதா என்றால் ஆம் என்றே நான் சொல்வேன். இங்குள்ள கருத்தியலதிகாரத்தில் என்னுடைய தரப்பையும் ஒரு விசையாகச் செலுத்தி என் சார்பான ஒரு மாற்றத்தை நிகழ்த்தவே நான் எழுதுகிறேன். அதன் நோக்கம் என்ன என்பதை அதன் விளைவுகளைக்கொண்டு மதிப்பிடுங்கள் என வாசகர்களிடம் நானும் கோருகிறேன். அது எப்போதுமே இறந்தகாலத்தின் மதிப்பீடுகளை நவீன ஜனநாயக அடிப்படைகளுக்கு ஏற்ப மறுவரையறை செய்வதாகவே இருக்கும் என சொல்ல விரும்புகிறேன்.

ஆனால் என்னுடைய ரசனை விமர்சனம் மட்டுமல்ல உங்களுடைய அமைப்புவாத கட்டுடைப்பு விமர்சனமும்கூடக் கருத்தியல்யந்திரங்களால் கட்டமைக்கப்படுவதுதான். அதிகார உள்ளடக்கம் கொண்டதுதான். அது வெறுமே உடைப்பதில்லை, உடைப்பதனூடாக சிலவற்றைக் கட்டமைக்கவும் செய்கிறது. இன்றைய இந்தியச்சூழலில் உங்களைப்போன்றவர்களின் கட்டுடைப்புவிமர்சனத்தின் கருத்தியல்யந்திரம் எது, அதன் நோக்கமும் செயல்பாடும் என்னென்ன எனப் பிறிதொருமுறை பேசுகிறேன்.

ஜெ

[நான் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். ரசனை விமர்சனத்தின் கலைச்சொல் பயன்பாடு பற்றி நாளை எழுதுகிறேன்]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபூமணிக்கு விஷ்ணுபுரம் விருது