இரு மொழிபெயர்ப்புக் கதைகள் – வி .கெ .என்

கேரள நகைச்சுவை எழுத்தாளரான வி கெ நாராயணன்குட்டி மேனோன் என்ற வி கெ என் கடந்த ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இது அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்று. பழைய இலக்கியம் நவீன அரசியல் கேரள வரலாறு கிரிக்கெட் எனப் பல தளங்களில் ஆழமான புலமை கொண்ட அங்கத எழுத்தாளரான அவரது கதாபாத்திரங்கள் பலவும் கேரளத்தில் ஐதீகங்களாக மாறியவை. வைக்கம் முகம்மது பஷீருக்குப் பிறகு கேரளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர் அவரே என்று சொல்வதுண்டு. அவரது மிகச்சிறந்த அங்கதக் கதைகள் மலையாளப் பண்பாட்டின் நுட்பங்களை உள்ளடக்கியவை என்பதனால் மொழியாக்கம் செய்வது சிரமம். கேரளத்தின் முக்கியமான ஆளுமைகளான இ.எம் எஸ், நாராயணகுரு முதலியவர்களைப்பற்றி வி கெ என் உருவாக்கிய கதைகள் பல அவர்களுடைய வரலாற்றிலேயே கலந்துவிட்டவை.

கெளபாய்

ரவு எட்டு மணிக்கு திரிச்சூர் தேக்கின்காடு மைதானத்துக்கு வந்த கெளபாய் வில்சன் குதிரையிலிருந்து இறங்கினான். இறுக்கமான கால்சட்டை தோல் கோட்டு அகலமான தொப்பி. பெல்ட்டில் இரு துப்பாக்கிகள்.

கெளபாய் குதிரையை ஒரு தேக்குமரத்தில் கட்டிவிட்டு ஒரு விசிலடித்தான். நேராக கடைத்தெருவுக்குப் போனான்.

அன்றைய வியாபாரம் முடிந்து இரும்புக்கடை வாறுண்ணியும் சீடப்பையன் பெளலோஸும் சேர்ந்து ரூபாய் எண்ணிக் கொண்டிருந்த நேரம். இரு நூறு மில்லிக்குத் தேவையான பணம் ஒதுக்கிவைத்து மறுஎண்ணிக்கையைத் தொடங்கும்போது கெளபாய் உள்ளே வந்தான்.

துப்பாக்கி இரண்டையும் நீட்டி, “ஹாண்ட்ஸ் அப்”

சோடாப்புட்டி மீதாக வாறுண்ணி பார்த்தார். சீடனிடம் “ஏதடா இந்த செயித்தான்?”

கெளபாயைக் கூர்ந்து நோக்கி பெளலோஸ் சொன்னான், “ங்ங்ங்க உள்ளவனில்லே.”

“என்ன வேணும்ணு கேள்டா, செய்த்தானே.”

“என்ன வேணும்? “

“ஹான்ஸப்! டன்! “

“என்னமாம் புடி கிடைச்சாடே?” என்றார் வாறுண்ணி குழம்பி.

“என்னமோ சாமான் வேணுமாம் மொதலாளி”

“கடை பூட்டியாச்சு. நாளைக்கு வரச்சொல்லுடா செய்த்தான்”

“யோவ், நீ நாளைக்கு வா. இண்ணைக்கு சேல்ஸ் இல்லை”

கெளபாய் கர்ஜித்தான் “ஹாண்ட்ஸ், அப் ஐ ஸே!!!!”

வாறுண்ணி நோட்டு எண்ணுவதை நிறுத்திவிட்டு சொன்னார் “டே,செய்த்தானே. அது துப்பாக்கி கேட்டியா ? வெடிச்சுப்போடும். பாத்து… “

ஷெர்லக் ஹோம்ஸ்

காப்டன் சொன்னார். ஒருமுறை ஹோம்சும் ஒரு நண்பரும் கடைத்திண்ணையில் நின்று கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட நாம் நிற்பது போலத்தான். மழையில்லை என்று நினைக்கிறேன். அப்போது அவ்வழியாக ஒரு பையை எடுத்துக் கொண்டு கையில் சில வார இதழ்களுமாக ஒரு ஐம்பதுவயது ஆசாமி சென்றான். ஹோம்ஸ் அவரை சுட்டிக்காட்டி சொன்னார்.

“அதோ போகிற ஆசாமி ஒரு இந்தியன். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவன், மனைவியை இழந்தவன், பிள்ளைகள் இருக்கிறார்கள்.”

ஹோம்ஸைப் பரிசோதிக்கலாமென்று நினைத்து நண்பர் நேராகச் சென்று அவனிடம் விபரம் கேட்டான். எல்லாம் உண்மை. இதெப்படி என்றார் நண்பர். நிபுணர் சொன்னார். “வெப்ப நாட்டைச் சேர்ந்த ஒருவனுடைய நிறம் அது. ஆனால் மிக வெப்ப நாடுமல்ல. ஆகவே இந்தியா. உடலைக்கண்டால் ராணுவசேவை. வயதைப்பார்த்தால் ஓய்வு பெற்றவன். பையைப்பார்த்தால் அவன் காய்கறிக்கடைக்குப் போய்வருவது தெரியும். மனைவி இருந்தால் ஏன் அவன் போகிறான்? அவன் கையிலிருப்பது சிறுவர் மலர்கள், ஆகவே குழந்தைகள் உண்டு”

எனக்கும் திடீரென்று ஹோம்ஸ் வித்தை தலைக்கு ஏறியது. “அதோ ஒரு குடையை ஏந்தி, கையில் புத்தகங்களுடன், சேலையைக் கணுக்கால் ஏற்றி உடுத்து விடுவிடுவென்று பாய்ந்து செல்லும் பெண்ணைப்பார்க்கிறீர்களா?”

“ஆமாம்”

“அவள் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குக் கணவனும் குழந்தைகளும் உண்டு. மத்தியானம் சாப்பிடாமல் போகிறாள்.”

“அடாடா நீங்கள் ஹோம்சையே தாண்டிவிட்டீர்கள். எப்படித் தெரியும்?”

“அளவான மேக்கப். ஆகவே ஆரம்பப் பள்ளி ஆசிரியை. உயர்நிலைப்பள்ளி ஆசிரியை என்றால் பெளடர் மணத்தால் நாம் இங்கே நிற்க முடியுமா? கையில் உள்ளநோட்டில் மலையாள செய்தித்தாளால் அட்டை போட்டிருக்கிறது. ஆகவே அது நான்காம் வகுப்பு நோட்டு. மேலே வகுப்பென்றால் ஒன்று அட்டை இருக்காது, அல்லது ஆங்கிலப்பேப்பர் அட்டை இருக்கும். கணவனும் குழந்தைகளும் வீட்டுக்கு வந்திருப்பார்கள் என்பதனால்தான் இந்த மழையில் வேகு வேகென்று ஓடுகிறாள். கண்கள் குழிவிழுந்திருப்பதைப் பார்த்தால் மதியம் சாப்பிடவில்லை என்று தெரியும்…”

“நீங்கள் சொன்னதை சரிபார்த்து விடுகிறேனே… “

“தேவையில்லை. அவள் என் மனைவி, அம்முக்குட்டி”

முந்தைய கட்டுரைமௌனகீதம்
அடுத்த கட்டுரைமலையாளம் விக்கி