எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்

பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் பாரதி மகாகவியே என எம்.டி.முத்துக்குமாரசாமி அறிவித்திருப்பது பற்றி என்னுடைய எதிர்வினை. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது தவறு நான் சொல்வது சரி என்றுகூட நான் சொல்ல வரவில்லை. எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது பாரதி விவாதத்தில் தீர்ப்பு. நான் சொல்லியிருப்பது விவாதத்துக்கான ஒரு தரப்பு என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே எம்.டி.முத்துக்குமாரசாமி மீது நான் வன்முறையைச் செலுத்துகிறேன் என்று அவர் சொல்லாமலிருக்கவேண்டும்.

எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதியை நாம் மகாகவி என்று சொல்லி மகிழலாம் என்கிறார். இதேபோல பாவேந்தர் பாரதிதாசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து போன்ற பட்டங்ளையும் அங்கீகரித்து ‘சொல்லிக்கொள்ளலாம், தப்பில்லை’ என்று அவர் சொல்வாரென்றால் எனக்கு மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை. பின் நவீனத்துவ அணுகுமுறைப்படி இவர்கள் நடுவே வேறுபாடு காண்பது, தரவரிசை செய்வது எல்லாமே தவறு என அவர் சொல்லக்கூடும். அந்நிலையில் அவருக்குக் கடிதமெழுதி பாரதிக்காகக் கண்ணீர்விட்டு ஏங்கிய அந்த 292 பேரும்தான் அவருடன் பேசவேண்டும்.

இல்லை, அவர் ஒரு தரவேற்றுமை காண்கிறார், அதற்கான அளவுகோலை வைத்திருக்கிறார், அதனடிப்படையில்தான் பாரதியை மகாகவி என்கிறார் என்றால் அந்த உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என்று தயவுசெய்து சொல்லக்கூடாது.பாரதியை மகாகவி அல்ல என்று சொல்பவரும் அதேபோலத் தரவேற்றுமை காணலாம் , அதற்கான அளவுகோலைக் கொண்டிருக்கலாம், அது அவரது வன்முறைப் போக்கு அல்ல அவரும் நல்லவர்தான் என்று அவர் தயவுசெய்து ஒத்துக்கொள்ளவேண்டும்.

இனி எம்.டி.முத்துக்குமாரசாமி உருவாக்கும் வாதங்கள். ‘காற்றைத் தூலமான பொருளாக, ஆளாக உருவகித்து விளிக்கும்போதே அந்த வரி ஒரு நிகழ்த்துதன்மையை இரண்டே வார்த்தைகளில் அடைந்துவிடுகிறதுசங்க அக இலக்கியங்களிலிருந்து கவிதைக்கு ஒரு நிகழ்த்துதன்மையைத் தருகிற மரபின் நவீன நீட்சி இது’ என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஆகவேதான் பாரதியார் கவிதைகள் மொழியாக்கம்செய்யமுடியாத தன்மையுடன் இருக்கின்றனவாம்.

இந்த அம்சம் வேறு எந்த இந்தியக்கவிதையிலும் இல்லையா என்ன? அவை மொழியாக்கம் செய்யப்படவோ பொருள்கொள்ளப்படவோ இல்லையா? எவ்வளவு சாதாரணமாக ஒரு ஒரு பொதுமைப்படுத்தல் நிகழ்ந்து முடிகிறது இங்கே.

இந்தியமொழிகளின் கவிதைமரபு எப்போதுமே நிகழ்த்துகலைகளுடன் இணைந்தே இருந்தது. பிற்கால சம்ஸ்கிருத மகாகாவிய இயக்கம்தான் நிகழ்த்துகலைகளை விட்டு விலகி வந்த குறிப்பிடத்தக்க இலக்கிய அலை. அதன் உறைந்த நிலைக்குக் காரணம் அதுவே என சம்ஸ்கிருதத் திறனாய்வாளர் சொல்வதுண்டு. நான் வாசித்தவரை வங்க, கன்னட கவிதைகள் எப்போதும் நிகழ்த்துகலைகளின் பகுதிகளாகவே இருந்துள்ளன. தாகூரும் குவெம்புவும் இசைநாடகங்களை அதிகமாக எழுதியவர்கள்.

பாரதியில் இருந்த அந்த நிகழ்த்துகலைத்தன்மை காரணமாக அது இந்திய அளவில் தொடர்புறுத்தப்படாது போயிற்று என்பதெல்லாம் என்னவகை வாசிப்பு என்றே தெரியவில்லை. மாறாக ஒரு சிறு நிகழ்த்துகலைக்கூறு இருந்தால்கூட சட்டென்று அக்கவிதை தொடர்புறுத்தலை நிகழ்த்துவதையே நாம் எந்த இந்தியமொழியிலும் காண்கிறோம்.

பாரதியின் இந்தவகை வசனக்கவிதைகள்தான் அவரது கவிதைகளிலேயே தமிழ்மொழிசார்ந்த தனித்தன்மைக்கு வெளியே செல்லக்கூடியவை. ஒரு பக்கம் அன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றிருந்த வால்ட் விட்மன் கவிதைகளின் நேரடிச்சாயல் கொண்டவையாக இருந்தன. இன்னொரு பக்கம் அன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த வேதசூக்தங்கள் உபநிடத சூத்திரங்களின் பாணியால் பாதிப்படைந்தவையாக இருந்தன

பருப்பொருளை முன்னிலைப்படுத்திப் பேசும் பாரதியின் வசனகவிதைப்பாணி சாமவேதத்தின் ஆக்னேய காண்டத்தில் அக்னியை முன்னிலைப்படுத்தி அழைக்கும் பாடல்களின் அதே தொனி கொண்டது. அந்த வேதசூக்தங்கள் கூட ஒருவகையில் நிகழ்த்துக்கலைத்தன்மையுடன் [நடிப்பு, உச்சரிப்பு,சைகைகள்] பாடப்பட்டு வந்தவையே. காற்றை முன்னிலைப்படுத்தி அழைக்கும் வேதவரிகளை பாரதியே கட்டுரைகளிலும் அந்த வசனகவிதையிலும் மேற்கோள்காட்டியிருக்கிறார்.

சரி, இந்த நிகழ்த்துகலை அம்சம் தமிழ் சங்கப்பாடல்களுக்கு மட்டுமே உரியது, இந்தியாவிலோ உலகிலோ எங்குமே இல்லாதது என்றே வைத்துக்கொள்வோம். சங்க அழகியலே பிராகிருதத்தில் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது என்ற உண்மை மிச்சம் கிடக்கிறது. கதாசப்தசதியின் பாடல்கள் சங்க இலக்கியத்தின் திணை,துறை வரையறைக்குக்கூட அடங்குபவை. ஆந்திரநாட்டு அகநானூறு என்றே தமிழில் அவை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. [ முனைவர் மதிவாணன்] சங்க அழகியல் இந்தியாவின் எந்த மொழியிலும் ஏதேனும் வகையில் சென்றடைந்து வலுவான செல்வாக்கைச் செலுத்தியிருக்கும்.

இன்னொருபக்கம் நம் பக்தி இயக்க கவிதைகளின் அழகியல் புஷ்டிமார்க்கம் வழியாக எல்லா இந்திய மொழிகளிலும் சென்று ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. பத்து நூற்றாண்டுக்காலம் நீண்டு நின்ற ஒரு அலை அது. ஆந்திரத்தில் நம்மாழ்வார், ஆண்டாள் கவிதைகளை அப்படியே நம்மால் கேட்க முடியும். ஒரு வங்க பவுலுக்கும் நம் பக்தி இயக்கப்பாடல்களுக்கும் நிகழ்த்துகலைத்தன்மை அல்லது மனநிலையில் வேறுபாடே காணமுடியாது.

தமிழின் சுவர்களுக்குள் மட்டுமே அடங்கி, தமிழுக்கு வெளியே இந்திய இலக்கிய வாசகர்களால் அடையாளம் காணவே முடியாத தனித்தன்மை என ஏதும் இல்லை. ஏனென்றால் ஐந்து நூற்றாண்டுக்காலம் வடக்கிலிருந்து பௌத்தமும் சமணமும் இங்கே வந்து நிறைந்தன. பத்து நூற்றாண்டுக்காலம் பக்தி இயக்கம் இங்கிருந்து வடக்கே சென்று நிறைந்தது. இந்தப் பரிமாற்றம் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. இதன்வழியாகக் கொஞ்சம்கூட வெளியே செல்லாத ஏதோ ஒரு மர்மமான தனித்தன்மை -அது நிகழ்த்துகலைத்தன்மை!- சங்கமரபில் இருந்து பக்தி இயக்கம் வழியாக பாரதியில் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி.

சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும் எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வதைப்பார்த்தால் அந்த ஒரே ஒரு அம்சம் அல்லாமல் பாரதியிடம் விசேஷமாக எதுவுமே இல்லை. அதை அறியாவிட்டால் ஒருவருக்கு பாரதி கவிஞனே இல்லை. இதுதான் சென்ற அரைநூற்றாண்டில் பாரதி மேல் வைக்கப்பட்ட மிகப்பெரிய வசை.

பாரதியின் வசன கவிதைகள் ஏற்கனவே இந்திய அளவில் இருந்துவந்த ஒரு விரிவான கவிதைக்கான சொற்களனில்தான் சென்று சேர்கின்றன. அவற்றின் ஐரோப்பிய அம்சமும் வைதிக அம்சமும் கவிதையைப் பொருள்கொண்டு ரசிக்கும் பொதுவான இந்திய பண்பாட்டு-மொழிப்புலனுக்கு எளிதில் தொட்டுணரக்கூடியவையாகவே உள்ளன.

ஆம், எந்தக்கவிதையிலும் ஓர் அம்சம் மொழியாக்கத்தில் விடப்படும். பழைய வரையறையைச் சொல்லவேண்டுமென்றால் ‘முழுக்க மொழிபெயர்க்கப்பட சாத்தியமானதும் முழுக்க மொழிபெயர்க்கப்பட சாத்தியமற்றதும் நல்ல கவிதை அல்ல’. நல்ல கவிதை வாசகன் அந்த விடப்படும் அம்சத்தை கருத்தில்கொண்டே கவிதையை வாசிப்பான். அதை அவனால் உய்த்துணர்ந்து வந்தடைந்துவிடவும் முடியும்.அப்படித்தான் நாம் பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பியக் கவிதையையும் பத்தாம்நூற்றாண்டு சீனக்கவிதையையும் வாசிக்கிறோம்.

பாரதி கவிதைகளைவிட நிகழ்த்துகலை அம்சம் கொண்டவையும், பாரதியில் இருந்த நவீனக்கூறு சற்றும் இல்லாதவையுமான சங்கப்பாடல்களையும் ஆழ்வார் பாடல்களையும் ஏ.கெ.ராமானுஜன் மொழியாக்கத்தில் வாசித்தவர்கள் அந்தக் கவிதைகளை வந்தடைய முடிந்தது. அவற்றை சர்வதேசக்கவிதையரங்குகளில் முற்றிலும் அன்னியமான பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் ரசிப்பதை நான் கண்டிருக்கிறேன். அவற்றைத்தான் பாரதிக்கு முன்னோடிகளாக எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்கிறார்.

மரபான தமிழ் பக்திக் கவிதைகளில் உள்ள இறைவனை முன்னிறுத்தி வேண்டிக்கொள்ளும் முறை பாரதியில் தனக்குத்தானே வேண்டிக்கொள்ளும் போக்காக மாறியிருப்பதை சுட்டி அது ஒரு மகத்தான தருணம் என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அது நல்ல கவிதை என அவர் நினைத்தால் அது வேறு. ஆனால் ’தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்ற மகத்தான தருணமது’ என்கிறார் அவர்.

தமிழ் இலக்கியவரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசும் கவித்துவக் குரலே இல்லையா என்ன? திருமூலரில் இருந்து வள்ளலார் வரை? அகம் என்பதை பாரதி தமிழில் கட்டமைத்தார் என்று சொல்லும் வரியை நினைத்துக்கொண்டு நெடுநேரம் அமர்ந்துவிட்டேன்.

பாரதியின் காலகட்டத்தில்தான் தமிழனின் நவீன சுயம் உருவாகிவந்தது எனலாம். அதில் அவரது பங்களிப்பு முக்கியமானது என்பதுதான் என் எண்ணம். அதைச் சொல்லியே இந்த விவாதத்தை ஆரம்பித்தேன். அந்த நவீன சுயம் வெளிப்படும் பல வரிகளை நாம் காணலாம். ஆனால் அது முழுக்க முழுக்க அவருடைய கவிதையின் சிருஷ்டி என்று சொல்வதைக் கொஞ்சம் அதிகமாகவே எம்புதல் என்றுதான் சொல்வேன்.

மேலும் ஒன்று, பாரதியின் அந்த வரிகள் எழுதப்பட்டபோது பிரம்மசமாஜம் ஒரு நிறுவனமாக வலுப்பெற்றுவிட்டிருந்தது. பாரதி அதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தான். பிரம்மசமாஜம் உருவற்ற அகவய வடிவமான கடவுளை உருவகம் செய்து அதை வழிபட்டது. பிரம்மசமாஜத்தின் பாடல்கள் பலவற்றில் கடவுள் இல்லாமல் தன் அகத்துடன் பேசிக்கொள்ளும் இதற்கிணையான வேண்டுதல்கள் பல உள்ளன. அந்த மனநிலையை நான் அன்று இந்தியா முழுக்க உருவாகிவந்த ஆழ்நிலைசுயம் என்ற கருத்தின் ஒரு வெளிப்பாடாகவே காண்கிறேன்

நான் பார்ப்பதற்கும் எம்.டி.முத்துக்குமார்சாமி பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? நான் பாரதியில் உள்ள தனித்தன்மைகளை ஐரோப்பியமரபு, வைதீகஞானமரபு, தமிழ் அழகியல் மரபு, அன்று உருவாகிவந்த நவீன இந்திய மறுமலர்ச்சிப்போக்கு ஆகியவற்றின் பாதிப்புகளால் உருவானவை என்று காண்கிறேன். எம்.டி.முத்துக்குமார்சாமி அவை தமிழ் மரபில் இருந்து மட்டுமே உருவானவை என்றும் ஆகவே பிற இந்தியச்சூழல்களுடன் அது உரையாடவே முடியாது என்றும் நிறுவ முயல்கிறார்.

கடைசியாக எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்வது பாரதி நாட்டார்மரபை நவீன வடிவங்களுக்குள் உள்வாங்குகிறார் என்பது. எல்லா இந்திய மொழிகளிலும் பாரதிக்குச் சமானமான காலகட்டத்தில் கவிஞர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். குவெம்பு,ஆசான், தாகூர் எல்லாருமே. உதாரணமாக தாகூர் பவுல் போன்ற வங்க நாட்டார்பாடல்களையும் வங்காள நாட்டார் இசைநாடக மரபான ஜாத்ராவின் வடிவத்தையும் நவீனகவிதையால் மறு ஆக்கம் செய்வதை சுட்டிக்காட்டலாம்.

இதற்கு ஒரு வரலாற்றுக்காரணம் உண்டு. இந்தியாவெங்கும் பதினெட்டாம் நூற்றாண்டு முதலே செவ்வியல் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியால் நிலப்பிரபுத்துவ அமைப்பு அழிக்கப்பட்டு செவ்வியல்கலைகளை பேணுபவர்கள் அழிந்ததே காரணம். அதன்பின்னர் செவ்வியலின் தேங்கிப்போன சிறுசிறு வடிவங்களே நீடித்தன. நம் சிற்றிலக்கியங்கள் போலஆனால் நாட்டாரிலக்கியம் அதே வீச்சுடன் நீடித்தது

சிறிதுகாலம் கழித்து பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய நவீனக்கல்வியால் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகி வந்தது. ஜனநாயக யுகத்தின் தொடக்கம் நிகழ்ந்தது. அப்போது உருவானவர்கள் பாரதி தாகூர் போன்ற நவகவிஞர்கள். அவர்கள் அந்த படித்த நடுத்தரவர்க்கத்தை நோக்கிப் பேசியவர்கள். ஒருபக்கம் அவர்கள் நவீனத்துவத்தைக் கொண்டுவந்தார்கள். இன்னொருபக்கம் அவர்கள் மரபைத் திருப்பி எழுப்ப முயன்றார்கள். தேங்கிப்போன செவ்வியலை விட உயிர்த்துடிப்புள்ள நாட்டார் மரபு அவர்களுக்கு அதிக ஈர்ப்புடையதாக இருந்தது.

மேலும் இந்தப் புதிய ஜனநாயக யுகத்தில் கவிதை பெருவாரியான மக்களிடம் பேசவேண்டியிருந்தது. பயிற்சி பெற்ற ஒரு வட்டத்துடன் அல்ல. அதற்கு ஜனநாயக விழுமியங்களை முன்வைக்கவேண்டிய கடமை இருந்தது. அதற்கு அக்கவிதை நாட்டாரியலை உள்வாங்கியதாக இருப்பதே உவப்பானது. அவை எல்லாமே அச்சுக்காக எழுதப்பட்ட அந்தரங்க வாசிப்புக்கு உகந்த context free modern forms தான். நிகழ்த்துகலை அம்சம் , நாட்டார் அம்சம் அவற்றில் ஒரு அன்றைய பொதுவாசகர் எளிதில் அடையாளம் காணும் ஒரு நுண்அழகியல் கூறாக உருமாற்றம் அடைந்தது. பாரதி செய்ததும் அதுவே.

ஆனால் பாரதியின் பெரும்பாலான கவிதைகளில் நாட்டார் அழகியல் மறு ஆக்கம்செய்யப்படவே இல்லை என்பதே உண்மை. கோபாலகிருஷ்ண பாரதியின் ‘மாடுதின்னும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ?’என்ற பாடலுக்கும் பாரதி அதை மறு ஆக்கம் செய்த ’தொண்டு செய்யும் அடிமை – உனக்குச் சுதந்திர நினைவோடா?’ என்ற பாடலுக்கும் என்ன அழகியல் வேறுபாடு உள்ளது? போலி மிகப்பெரும்பாலான பாடல்களை சம்பிரதாயமான கீர்த்தனை வடிவிலேயே பாரதி எழுதியிருக்கிறார். விதிவிலக்கானவை சிலவே. அவை சிறந்த கவிதைகள் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.

என் பார்வையில் தமிழ் நவீனத்துவத்தின் தெளிவான ஒரு தொடக்கப்புள்ளி என பாரதியைச் சொல்லலாம். அவரே அந்த வரிசையில் முதன்மையானவர் என்றும் சொல்வேன். ஆனால் அது அவரது சிருஷ்டி மட்டுமே என்பது இலக்கியவரலாற்று நோக்கே அல்ல. நவீனத்துவத்தின் தொடக்கத்தை இந்தப் பின்நவீனத்துவர்களைக் காட்டிலும் நவீனத்துவரான க.நா.சுவே தெளிவாக விவாதித்திருக்கிறார். க.நா.சு முன்வைக்கும் முன்னோடிகள் பலர்.

மரபான மதத்தில் இருந்து நவீன ஆழ்நிலை ஆன்மீகம் ஒன்றை உருவாக்கி அதற்கான நவீன ஜனநாயகத்தன்மை கொண்ட கவிமொழியையும் உருவாக்கிய வள்ளலார் முக்கியமான முன்னோடி என்கிறார் க.நா.சு. பாரதியின் கவிமொழியளவுக்கே பல வகையிலும் நவீனமான கவிமொழியை வள்ளலார் பல கவிதைகளில் அடைந்திருப்பதைக் காணலாம். மரபான மதக்கூறுகளை உதறி நவீனஆன்மீகத்தை முன்வைத்தது, நாட்டார் பண்புகளை உள்வாங்கி நவீனக் கவிமொழியை அமைத்தது என பாரதிக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரங்களில் பெரும்பகுதியை வள்ளலாருக்கும் கொடுக்கலாம்.

பாரதியை இன்று இவ்வாறு மிகையாகத் தூக்கிக் கொண்டு முன்னே நிறுத்தும்போது மௌனமாக வள்ளலார் கீழே இறக்கப்படுகிறார். இந்தவகையான ஒற்றைப்படையாக்கப் போக்குகளை, இதிலுள்ள அதிகார உருவாக்கத்தை எதிர்த்தே பின்நவீனத்துவ அணுகுமுறை மேற்கே உருவானது. எம்.டி.முத்துக்குமார்சாமி போன்றோரால் எனக்களிக்கப்பட்டுள்ள அடையாளத்தைக்கொண்டு பார்த்தால் எம்.டி.முத்துக்குமார்சாமி சொன்னதையெல்லாம் நான் சொல்ல நான் இப்போது சொல்பவற்றை எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்லியிருக்கவேண்டும். எப்படி இது இப்படித் தலைகீழாக ஆனது தெரியவில்லை.

நாட்டார் அழகியலை செறிவான நவீன கலையனுபவத்துக்கு அருகே கொண்டு வந்த கோபாலகிருஷ்ணபாரதியையும் க.நா.சு தமிழ் நவீனத்துவத்தின் சிற்பிகளில் ஒருவராகக் குறிப்பிடுகிறார். ராஜம் அய்யர், அ.மாதவையா வ.வே.சு அய்யர் ஆகியோரின் பங்களிப்பையும் இணைத்துக்கொண்டு ஒரு கூட்டான அறிவியக்கமாகவே அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பேன்.

இது இலக்கியத்தளத்தில் மட்டுமே. அரசியலையும் உள்ளிட்ட தளத்தில் என்றால் சிங்காரவேலரையும் , அயோத்திதாசரையும் உள்ளடக்கியே நாம் தமிழின் நவீனத்துவத்தைப்பற்றி பேசமுடியும். அதுதான் நான் சொல்லவரும் விவாததன்மை கொண்ட மதிப்பீடு. எம்.டி.முத்துக்குமாரசாமி பாணி பின்நவீனத்துவ நோக்கில் பாரதியில் தமிழ் நவீனத்துவம் பிறந்த அந்த சரியான பிரசவநேரத்தைக் கண்டுபிடித்து ஜாதகம் எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பின் நவீன அணுகுமுறையில் அதற்கு சந்துவழி இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆயினும் பாரதியைத் தமிழ் நவீனத்துவத்தின் படைப்பாளி என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவரைப்போன்ற ஒரு கவிஞனிலேயே அந்தத் திருப்பம் படைப்பெழுச்சியுடன் நிகழ்கிறது. அதுவே தீவிரமான முன்னுதாரணமாக ஆகிறது. அவர் தமிழ் உரைநடையின் சிற்பி என்பதிலும் தயக்கமில்லை. அவரில்தான் அது உச்சம் கொண்டது.

இக்காரணத்தால் பாரதி மகாகவி என்றால் கன்னடர்களுக்கு குவெம்பு மகாகவி. மலையாளிகளுக்கு ஆசானும் வள்ளத்தோளும் மகாகவிகள். இந்தியில் மகாவீர் பிரசாத் திவிவேதி அவர்களுக்கு மகாகவி. அப்படி அவர்களின் பாடநூல்கள் சொல்லவும் செய்கின்றன. கெ.எம்.ஜார்ஜ் தொகுத்த இந்திய ஒப்பிலக்கியத் தொகைநூல்களில் எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதிக்கு அளிக்கும் இதே சாதனைப்பட்டியல் இந்தக் கவிஞர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்படித்தான் எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதியையும் சொல்கிறார் என்றால் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

நான் முன்வைக்கும் அளவுகோல்கள் வேறு. பாரதி மிகச்சிறந்த கவிதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறான் என்றே நானும் கொள்கிறேன். நான் பேசிக்கொண்டிருப்பது க.நா.சு முன்வைத்த அளவுகோலைக்கொண்டு. கவிதை என்ற அளவிலேயே நம்முடன் பேசக்கூடிய படைப்புகளைப்பற்றி. ஷேக்ஸ்பியரும் கதேயும் வேர்ட்ஸ்வெர்த்தும் கம்பனும் காளிதாசனும் நம்மை எங்கே தொடுகிறார்களோ அங்கே சென்று தொடும் கவிதைகளைப்பற்றி. அத்தகைய கவிதைகளை பாரதி மிகக்குறைவாகவே அடையமுடிந்திருக்கிறது, அவரை ஒரு மகாகவி என்று வகுக்க அவை போதாது என்பதே என்னுடைய தரப்பு

பாரதியை மகாகவி என்றும் யுககவி என்றும் வகுத்து எப்போதைக்குமாக வகுக்கும் போக்கு நல்லதல்ல. அதன் வழியாக நாம் பாரதியின் கவித்துவம் மீது நம் நுண்ணிய ரசனையை செலுத்த முடியாமலாகிறது. பாரதிக்கு முந்தைய கவிதைகளை அணுக அது தடையாகிறது. பாரதிக்குப்பின் உருவாகி வந்த நவகவிதையின் அழகியலே நமக்குப் பிடிகிடைக்காமலும் போகிறது. அவ்வடையாளங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாக மறுபரிசீலனைசெய்துகொள்வதன் வழியாகவே இலக்கிய மதிப்பீடுகள் உயிர்ப்புடன் இருக்கமுடியும். இலக்கிய மதிப்பீடு எதுவும் எப்போதும் ஒரு விவாதநிலையிலேயே இருக்கும், இருக்கவேண்டும் என்று எப்போதும் சொல்வதை இப்போதும் சொல்கிறேன்

இந்த அளவீடுகளை தரவரிசையை ஏன் உருவாக்குகிறேன்? ஏன் உருவானவற்றை மறுபரிசீலனை செய்கிறேன்? எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வதுபோல இது தீர்ப்போ சுயவலியுறுத்தலோ அல்ல. ரசனை விமர்சனம் எப்போதுமே முதற்பேரிலக்கிய மரபு [canon] ஒன்றை நிறுவிக்கொண்டுதான் பேசும். அதுவே அதன் வழிமுறை. அந்த முதற்பேரிலக்கிய மரபிலிருந்துதான் அது தன் அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளும். ஒப்பிடுவதன் மூலமே அது தன் தரமதிப்பீடுகளை உருவாக்கும்

முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்கும்போது ஒவ்வொரு படைப்பாளியையும் அவருக்கான இடத்தில் அமரச்செய்துதான் அந்த அமைப்பை உருவாக்க முடியும். வள்ளுவன்போல் கம்பன்போல் இளங்கோவைப்போல் என பாரதி செய்தது அதையே. நான் முன்வைத்த அந்த இடவரையறைகள் என்னுடையவை அல்ல, தமிழில் தொடர்ந்து நிகழ்ந்துவந்த ரசனைசார்ந்த விமர்சன மரபின் நீட்சியாகவே நான் பேசுகிறேன் என்பதைத் தெளிவாகச் சொல்லியே நான் ஆரம்பித்தேன்

கபிலனும் வள்ளுவனும் ஔவையும் கம்பனும் கொண்ட ஒரு முதற்பேரிலக்கியத் தொகையை உருவாக்கும்போது அதில் பாரதி எங்கே வருகிறார் என்பதே இந்த விவாதத்துக்கான அடிப்படைக் கேள்வி. தாகூரும் குவெம்புவும் ஆசானும் மிர்சாகாலிப்பும் காளிதாசனும் பவபூதியும் கொண்ட ஒரு முதற்பேரிலக்கியத்தொகையை உருவாக்கும்போது பாரதி எங்கே வருகிறார் என்பது அடுத்த வினா. ஷேக்ஸ்பியரும் கதேயும் தாந்தேயும் து ஃபுவும் அடங்கிய முதற்பேரிலக்கியத் தொகையில் எங்கே வருகிறார் என்பது அடுத்த வினா.

இந்தச் செயல்பாட்டை ரசனை விமர்சனம் ஓயாது செய்துகொண்டிருக்க வேண்டும். உலகமெங்கும் ரசனைவிமர்சனத்தின் வழியே அதுதான். ஹரால்ட் ப்ளூமோ ஃப்ராங் கெர்மோடோ ஷேக்ஸ்பியரை மையமாகக்கொண்ட ஒரு முதற்பேரிலக்கியதொகையைத் நிறுவுவது அதற்காகவே. வ.வே.சு அய்யரும், தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், வையாபுரிப்பிள்ளையும், ரா.ஸ்ரீ.தேசிகனும்,க.நா.சுவும் செய்தது அதையே. ஒரு தனி விமர்சகனின் விசித்திரமான அகங்கார வெளிப்பாடு அல்ல அது. அது ரசனை விமர்சனத்தின் அடிப்படைச் செயல்பாடு. நாளை இன்னொரு விமர்சகன் இதை முன்னெடுப்பான்.

சமகாலத்துப் பிற கவிஞர்களிடமிருந்து பாரதியை முதல்பெரும் கவிஞனாக மேலே தூக்கி நிலைநிறுத்தியது வ.வே.சு.அய்யரில் ஆரம்பிக்கும் ரசனை விமர்சனம்தான். எந்த அமைப்புவாத அலசலும் அல்ல. அவர்கள் கம்பனை முதன்மையாகக் கொண்ட முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்கி அதனடிப்படையிலேயே அதைச் செய்தார்கள். அதே அளவுகோலின்படித்தான் இன்னும்பெரிய ஒரு முதல்பேரிலக்கியத்தொகையின் பின்னணியில் பாரதியை மறுவரையறை செய்ய நேர்கிறது.

அதாவது எந்த ரசனைவிமர்சனம் பாரதி மகாகவி என்றதோ அதே ரசனை விமர்சனம்தான் அப்படி சொல்லமுடியுமா என்ற ஐயத்தை எழுப்பி விவாதிக்கிறது. மகாகவி என்று வகுக்கும்போது அது செல்லுபடியாகக்கூடியதும் ஐயப்படும்போது அர்த்தமற்றதுமாக ஆகுமா என்ன?

ரசனை விமர்சனத்தின் வழி முதற்பேரிலக்கியத்தொகையை வரையறைசெய்து நிலைநாட்டுவது என்பதனாலேயே அதனுள் நிகழும் எல்லா சலனங்களும் அந்த முதற்பேரிலக்கிய உருவகத்தை மாற்றுவதற்கானவையாகவே அமைய முடியும். முதற்பேரிலக்கியம் என்பது புனிதமான மதநூல் அல்ல. அப்படி நம்ப ஆரம்பிக்கையில் ரசனை தேக்கமுறுகிறது. எல்லா முதல்பேரிலக்கியங்களும் அழகியல்நோக்கில் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யப்பட்டபடியே இருக்கவேண்டும். அரசியல்,சமூகவியல் நோக்கில் அவை தொடர்ந்து மறுபரிசீலனைசெய்யப்படவேண்டும்.

நம் சூழலில் எப்போதுமே அந்த மறுபரிசீலனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் கந்தபுராணம் ஒரு மாபெரும் முதல்பேரிலக்கியம். இன்று அந்த இடத்தில் அது இல்லை. கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எனச் சொல்லும்போதே பாரதி அன்று அவர்களுக்கும் மேலான இடத்தில் இருந்த மாணிக்கவாசகரை இறக்கி விடுகிறான். கம்பராமாயணம் மீது நடந்த விவாதங்களை இன்று குறள்மேல் நடக்கும் எதிர்விவாதங்களை எல்லாமே நான் இவ்வகையில்தான் அணுகுகிறேன்.

ரசனை விமர்சனத்தில் எந்த ஒரு விமர்சகனின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் முதற்பேரிலக்கியத்தின் அமைப்பில் உருவாக்கும் மாற்றமாகவே இருக்கும். அதன் வழியாகத் தரவரிசையில் அவன் செய்யும் மாறுதலாகவே நிகழும். அதன் வழியாகவே அவன் இலக்கியவாசிப்பில் ஒரு வழியைத் திறக்கிறான்.எனக்கும் பாரதி எழுச்சியை ஊட்டும் கவியே. ஆனால் இந்த விவாதம் வழியாக நான் முன்வைப்பது இன்னும் விரிவான இலக்கிய அணுகுமுறையை. உருவாக்க நினைப்பது இன்னும் கூரிய ரசனையை.


எம்.டி.முத்துக்குமாரசாமி, அறிமுகம்

[எம்.டி.முத்துக்குமார்சாமி நெல்லையைச் சேர்ந்தவர். இலக்கியத்திலும் தத்துவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பாரதக்கூத்து -குறியியல் ஆய்வு என்ற தலைப்பில் நாட்டாரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் நாட்டாரியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நியூடெல்லி அலுவலகத்தில் நாட்டாரியல் ஆலோசகராகப் பணியாற்றினார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் தேசிய அளவிலான நாட்டாரியல் வளார்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

1997 ல் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் முழுமையான நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் செண்டர் என்ற அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர்களில் ஒருவர். தொடக்கம் முதல் அதன் செயல்அறங்காவலராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். எம்.டி.முத்துக்குமாரசாமி அடிப்படையில் இலக்கிய விமர்சகர், அமைப்புவாத ஆய்வாளர். சில்வியா என்றபேரில் கதைகள் எழுதியிருக்கிறார். பிரம்மனைத்தேடி என்ற பேரில் தொகுதியாக வெளிவந்துள்ளது. அவரது நவீன நாடகம் காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்து ஒரு முன்னோடி முயற்சியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது]

முந்தைய கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…
அடுத்த கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமி-ஒரு கடிதம்