நோபல் பரிசு இந்தியருக்கு

அன்புள்ள ஜெ,

அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா?

சரவணன்

சச்சிதானந்தன்

[கெ.சச்சிதானந்தன்]

அன்புள்ள சரவணன்

சச்சிதானந்தன் இந்தவருடம் சிபாரிசுசெய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் நெடுங்காலம் சாகித்ய அக்காதமி செயலர், தலைவர் பொறுப்பில் இருந்தார். உலக அளவில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் சுயமுன்னேற்றத்துக்காக ஓயாது உழைப்பவர். ஆகவே அவருக்கு நிறுவன பின்புலம் உண்டு. அவரது கவிதைகள் ஒரு உலகசராசரியைக் கொண்டவை– வடிவத்தில் முற்போக்கு உள்ளடக்கத்தில். ஆகவே அவருக்குக் கிடைக்கவும் கூடும்.

ஆனால் அப்படி நோபல்பரிசு கிடைத்தால் அது தவறான நிகழ்வு என்றே நான் சொல்வேன். தனிப்பட்ட முறையில் எனக்கு இலக்கியத்தை விரிவாக அறிமுகம் செய்தவரென்ற முறையில் நான் பெருமதிப்புக் கொண்டிருக்கும் சச்சிதானந்தன் அத்தகைய முக்கியத்துவம் உள்ள கவிஞரே அல்ல. அவரது கவிதைகள் பெரும்பாலும் செயற்கையானவை, அவற்றின் உள்ளடக்கம் காலாவதியானது. அவருக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டால்கூட அது பொருத்தமற்ற விருது என்றே நினைப்பேன்.

ஆனால் இந்தவகை சிபாரிசுகளுக்கு பெரிய பொருளேதுமில்லை. நெடுங்காலமாகவே இம்மாதிரி சிபாரிசுகள் செய்யப்படுகின்றன. பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கமலாதாஸ் தொடர்ந்து நோபல்பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டார். இதழியலில் இருந்த அவரது குடும்பச்செல்வாக்கு உதவியது. மாதவிக்குட்டி நல்ல படைப்பாளி என்றாலும் அவரது கலை மிகமிக எல்லைக்குட்பட்ட ஒன்று.

அதேபோல கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி. சர்வசாதாரணமான பிரச்சார எழுத்து அவருடையது. அவரை சர்வதேசப்புகழ்பெற்ற மொழியியலாளர் காயத்ரி ஸ்பிவாக் உலக அரங்கில் நிலைநாட்ட முயன்றுகொண்டே இருந்தார். இவர்கள் எவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருந்தாலும் அது தகுதியற்ற பரிசாகவே அமைந்திருக்கும்.

அமிதவ் கோஷ்

[அமிதவ் கோஷ்]

விருதுகள் ரசனையும் விமர்சனத்திறனும் கொண்ட குழுவால் வழங்கப்படுபவை அல்ல. அவை நிறுவனங்களுக்குள் நுழைந்து அதிகாரத்தில் இருப்பவர்களால் அளிக்கப்படுபவை. அவர்களில் நல்ல நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். ரசனை கொண்டவர்களும் இருக்கலாம். அவர்களின் கவனத்துக்கு ஓர் இலக்கியவாதியைக் கொண்டுசென்றுசேர்க்கும் இலக்கியச்செயல்பாட்டாளர்கள்தான் விருதுகளுக்குக் காரணமாக அமைகிறார்கள். அதாவது ஒரு தகுதியான எழுத்தாளர் சரியான முறையில் இலக்கியச்செயல்பாட்டாளர்களால் நெடுங்காலமாகப் படிப்படியாகப் பரிசுகளை நோக்கி முன்னகர்த்திக்கொண்டுசெல்லப்படவேண்டும்.

கன்னடத்துக்கும் மலையாளத்துக்கும் வங்கமொழிக்கும் அப்படிப்பட்ட இலக்கியச்செயல்பாட்டாளர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் தகுதியானவர்களை முன்னெடுக்கிறார்கள். தமிழில் அது நிகழ்வதில்லை. இங்கே பெரும் விசையுடன் அப்படி முன்னெடுத்துச்செல்லும் எழுத்தாளர்கள் மிக மேலோட்டமான வணிக எழுத்தாளர்கள், அல்லது அரசியல்வாதிகள். ஆகவேதான் தரமான எழுத்தாளர்கள் இங்கே விருதுகள் பெறுவதில்லை.

ஞானபீடத்துக்கான போட்டியிலேயே தமிழின் நல்ல படைப்பாளிகளைக் கொண்டுசென்று சேர்க்கமுடியவில்லை என்னும்போது நோபல்பரிசுக்கான போட்டிகளைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தகுதியை மட்டும் வைத்துப்பார்த்தால் அசோகமித்திரன் நோபல்பரிசுக்குரியவர். கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா, வங்க எழுத்தாளரான அதீன் பந்யோபாத்யாய, இந்தி எழுத்தாளர் கிரிராஜ் கிஷோர் எனப் பலரை சுட்டிக்காட்டமுடியும். இப்போதைக்குச் சாத்தியங்களும் தகுதியும் இணைந்த எழுத்தாளர் என்றால் யு.ஆர்.அனந்தமூர்த்தியைச் சொல்லலாம்.

ஆனால் நோபல்பரிசு இந்தியாவுக்கு அளிக்கப்படுமென்றால் தொண்ணூற்றொன்பது விழுக்காடு இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் எவருக்கேனும்தான் அளிக்கப்படும். அருந்ததி ராய் சீராக அதற்கான பிம்ப உருவாக்க வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு ஐரோப்பிய கிறித்தவப்பின்புலமுள்ள பல அமைப்புகள் உதவிவருகின்றன. ஆகவே தொடர்ந்து பல்வேறு அமைப்புகளால் அவர் சிபாரிசும் செய்யப்படுகிறார். தகுதி அடிப்படையில் நெருங்கிச் செல்லக்கூடியவர் என்றால் அமிதவ் கோஷ்.

என்ன காரணம் என்றால் உலக அளவில் இந்திய இலக்கியம் என்றால் இந்திய ஆங்கில இலக்கியமே முன்வைக்கப்படுகிறது. நான் கண்டவரை பிற இந்திய எழுத்தாளர்கள் எவரையுமே மேலைநாட்டு நல்ல வாசகர்கூட கேள்விப்பட்டதில்லை.

யூ.ஆர்.அனந்தமூர்தி

[யூ.ஆர்.அனந்தமூர்த்தி]

காரணம் இந்திய ஆங்கில இலக்கியம் மேலைவாசகர்களின் பொது ருசிக்கு ஏற்ப எழுதப்படுகிறது. அதன் மொழிநடை ஆங்கில நவீன இலக்கிய நடையில் அமைந்துள்ளது. அதேசமயம் வங்க இலக்கிய மேதைகளின் நூல்கள் கூட இன்னமும் நல்ல ஆங்கிலநடையில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இந்தியாவில் பிரபலமாக உள்ள பாடப்புத்தக நடையில் மொழியாக்கம் செய்யப்பட்டமையால் அனேகமாக எந்த இந்திய எழுத்தாளரும் உலகளாவிய கவனத்தைப்பெறவில்லை. சிறிய விதிவிலக்கு ஏ.கே.ராமானுஜனால் மொழியாக்கம்செய்யப்பட்ட யு.ஆர்.அனந்தமூர்த்தி.

முக்கியமான உதாரணம் என்றால் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் ‘பாதேர் பாஞ்சாலி’ நாவலைச் சொல்லலாம். அந்நாவலின் திரைவடிவம் சத்யஜித் ரேயால் உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டது. உலகமெங்கும் அந்த சினிமாமூலம் அந்நாவலின் கதையும் கதாபத்திரங்களும் ரசிக்கப்பட்டனர். ஆனால் அதற்கான ஆங்கில மொழியாக்கமோ பிற ஐரோப்பிய மொழிகளில் வந்த மொழியாக்கங்களோ எவ்வகையான கவனத்தையும் பெறவில்லை.

அவ்வாறு இந்திய ஆங்கில எழுத்துக்கு இந்தியாவுக்கான இலக்கிய நோபல்பரிசு அளிக்கப்படுமென்றால் அது இந்தியப்பண்பாட்டுக்கு இழைக்கப்படும் அவமதிப்பே. இந்தியாவின் மகத்தான இலக்கியப்பாரம்பரியம் புறக்கணிக்கப்படுவதுதான் அது . ’உங்கள் இலக்கியங்களை கவனிக்கவோ அங்கீகரிக்கவோ முற்படமாட்டோம், அவற்றுக்காக சிறிய அளவில்கூட கவனம் கொள்ள மாட்டோம் , அந்த பெரும் குவையில் கைப்பிடி அள்ளி அதை எங்களுக்குப்பிடித்தமுறையில் மறுசமையல் செய்கிறவர்களை மட்டுமே நாங்கள் அங்கீகரிப்போம்’ என்ற ஐரோப்பிய மேட்டிமை நிலைப்பாடுதான் அது.

அசோகமித்ரன்

[அசோகமித்திரன்]

ஆனால் அதுதான் நிகழப்போகிறது. அனேகமாக இன்னும் சில வருடங்களில். இந்திய ஆங்கில எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசு பெறப்போகிறார். இந்திய இலக்கியத்தின் உச்சகட்ட சாதனையாளர் அவர்தான் என்று நமக்கு நம் ஆங்கில ஊடகங்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். இந்திய ஆங்கில இலக்கியவாதிகளில் அசோகமித்திரனுக்கு நிகரான ஒருவர் இன்னும் உருவாகவில்லை என்று நாம் எத்தனை சொன்னாலும் அது ஏற்கப்படாது.

ஆகவே இன்றைய சூழலில் இந்திய இலக்கிய வாசகன் நிறைவும்கொள்ளக்கூடிய ஒரு இலக்கிய நோபல்பரிசு இந்தியாவுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பே கண்ணுக்குத் தெரியவில்லை. முண்டி முண்டி முன்னால் சென்றுகொண்டிருப்பவர்கள் எல்லாருமே அமைப்பை வெல்லத்தெரிந்த இரண்டாம்தர எழுத்தாளர்கள்தான்.

ஜெ

முந்தைய கட்டுரைஆதமிண்டே மகன் அபு
அடுத்த கட்டுரைசமணம்,சாதிகள்-கடிதம்