ஆன்மீகம் தேவையா?

index

 

அன்பின் ஜெ,

தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி.

இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன:

எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இக்கேள்விகள் ஒரளவு என் மனநிலையை உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களை ஒரு குரு என்று நினைத்து இவைகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பராக மட்டுமே நினைத்து எழுதுகிறேன்.

1. ஆன்மீகமே தேவைதானா? கடவுள் என்ற கருதுகோள் அல்லது நம்பிக்கை அளிக்கும் நன்மைகளுடன் நின்றுவிட்டால் என்ன?

2. ஆன்மீகத்திற்கு நம்பிக்கை பலமா அல்லது தடையா? சில சமயங்களில் இது மிகப்பெரும் தடையாக எனக்குத் தோன்றுகிறது.

3. ஆன்மீகத் தேடல் (தேடலா?) – இதற்கு ஒரு குரு தேவையா?

4. ஒரு நல்ல குருவை எப்படி அடைவது? அவர் எப்படிப் பட்டவராயிருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வேண்டுமா? இந்த நம்பிக்கையுடன் நமது தேடலைக் கோர்த்தால் அதனால் ஏற்படக்கூடும் சங்கடங்கள் அல்லது இடையூறுகளை என்ன செய்வது?

5. சாஸ்திர ஞானம் ஆன்மீகத்திற்கு பலமா அல்லது தடையா? ஆதிசங்கரர் ஒருகட்டத்தில் தடையென்றே கூறுகிறார்.

6. ஆன்மீகத்திற்கு முறையான பயிற்சிகள் தேவையா? பலமுறை வெறும் மனப்பாய்ச்சல்கள் மட்டுமே ஏற்படுகிறது.

7. ஆன்மீகத்தின் குறிக்கோள் முழு மன அமைதியா? அப்படியென்றால சமநிலை அவ்வப்பொழுது முயலாமலே ஏற்படுகிறதே. அது தான் குறிக்கோளா? பல சமயங்களில் எவ்வளவு முயற்சித்தும் மனம் சமநிலையுடன் இருக்க மறுக்கிறதே. உண்மையில் இதுவே முதல் கேள்வியாயிருந்திருக்க வேண்டும்.

நன்றியுடன்,
சந்திரசேகர்.

அன்புள்ள சந்திரசேகர்,

இந்தக்கேள்விகளுக்கு ஒரு நண்பர் சகபயணி என்ற முறையில் நின்று பதில் சொல்கிறேன்.

1. ஆன்மீகமே தேவைதானா என்ற கேள்விக்கே அர்த்தமில்லை. ஆன்மீகம் என்பது ஒரு நிறைவின்மையை ஒருவர் உணர்வதில் இருந்து ஆரம்பிக்கிறது. ‘எனக்கு இந்த வாழ்க்கை போதவில்லை, நான் முழுமையான வாழ்க்கையைத் தேடுகிறேன்’ என ஒருவர் எண்ணும்போது ‘எனக்கு அனுபவம் மட்டும் போதாது அனுபவத்தை அறிவதும் வேண்டும்’ என ஒருவர் உணரும்போது அந்த நிறைவின்மை ஆரம்பிக்கிறது. அது வினாக்களாகிறது, தேடலாகிறது.

அந்த எண்ணங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளனவா என்ன? அந்த எண்ணங்கள் ஒருவருக்கு அவரது மன அமைப்பு வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே உருவாகின்றன. உருவான பின் அவை அவரை விடுவதில்லை.

வேண்டுமென்றால் இப்படிச் சொல்கிறேன். ஒருவருக்கு ஆன்மீகமான நிறைவின்மையும் தேடலும் உருவாகவில்லை என்றால் அவருக்கு அதை இன்னொருவர் உருவாக்கி அளிக்கவேண்டும் என்பதில்லை. கடவுளும் மதமும் அளிப்பவையே அவருக்குப் போதுமானவை. அதற்காக அவரைக் குறைத்து மதிப்பிடவேண்டும் என்பதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவருக்கான இயல்பும் அதையொட்டிய வாழ்க்கையும் உள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறேன். ஒருவருக்கு ஆன்மீகமான வினாக்கள் உருவானபின்னரும் அவரால் அவற்றை நிரந்தரமாகத் தவிர்த்து நிம்மதியாக லௌகீகத்தில், மதத்தில், கடவுளில் நீடிக்கமுடியும் என்றால் அதைச் செய்யலாம். தவிர்க்கமுடியாமை ஆன்மீகத்தேடலுக்கான காரணமாக அமைவதே மேல்.

2. சாதாரணமாக உறுதியான நம்பிக்கை ஆன்மீகத்துக்கு எதிரானதே. அது லௌகீகத்தில் கடவுளைப் பிடித்துக்கொண்டு முன்னேறுவதற்குரியது. அந்த நம்பிக்கை என்பது ஆன்மீகத்தேடலுக்குரிய சுதந்திரம் இல்லாமல் செய்துவிடுகிறது.

ஆன்மீகத்தேடல் என்பது எல்லா திசைகளுக்கும் விரியக்கூடியதாகவே இருந்தாகவேண்டும். அதற்கு முன் நிபந்தனைகள் இருக்கக் கூடாது. முன்மாதிரிகள் இருக்கலாகாது. முன்பயிற்சி இருக்கக் கூடாது.

ஆயுர்வேத சிகிழ்ச்சை முறையானது தன் நோயாளியை முதலில் அருகம்புல் சாறுவழியாகச் சுத்தப்படுத்திய பின்னரே மருந்தைக் கொடுக்கும். அதுவரை நோயாளி உண்ட எல்லா மருந்துகளையும் அவன் உடலில் இருந்து நீக்குவதுதான் அது.

அது ஆன்மீகப்பயிற்சிக்கும் வேறுவகையில் தேவையாகிறது. முந்தைய நம்பிக்கைகளிலும் ஆசாரங்களிலும் இருந்து விடுபடாமல் ஆன்மீகத்தேடல் சாத்தியமில்லை. முன்னாளில் எல்லா குருகுலங்களிலும் இந்த முறை இருந்தது. இன்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ எல்லாரும் அதையே சொல்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்.

ஆனால் ஆன்மீக சாதனையில் ஒரு முக்கியமான பகுதியாக உள்ள உபாசனை முறையில் முழுமையான பாவபக்தி என்பது இன்றியமையாதது. அது ஓர் ஆன்மீக வழிமுறை. அதற்கும் லௌகீக பக்திக்கும் வேறுபாடுண்டு.

3 .ஆன்மீகம் என்பது தேடல்தான். உபநிடதமே அதைத்தான் சொல்கிறது. அதற்கு கண்டிப்பாகக் குரு தேவை. குரு அமையும்வரை நான் சொல்வது புரியாது. ஒருவனின் அடியாழத்தை அவன் எவரிடமும் திறப்பதில்லை. அது திறக்கப்படாமல் அவனுக்கு விடுதலையும் இல்லை. எங்கோ அவன் அதை திறந்து பரிசீலித்தாகவேண்டும். அதற்கான முன்னிலையே குரு.

அலோபதி மருந்துகள் ஒட்டுமொத்தமாகத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன. அதுவே மதம் அளிக்கும் விடை.ஆயுர்வேத மருந்து நோயாளியைத் தனிப்பட்டமுறையில் நன்கறிந்த மருத்துவன் அவனுக்காகவே தனியாக உருவாக்குவது. அதைப் போன்றதே ஆன்மீகம் அளிக்கும் விடை. அதை ஒரு தனிமனிதரே அளிக்க முடியும்.நூல்கள் அல்ல. அவை ஒரு பொதுத்தகுதியை மட்டுமே உருவாக்கும்.

ஆனால் நான் சொல்வது பிரம்மாண்டமான திரள்களைக் கூட்டும் நவீன குருநாதர்களை அல்ல. அங்கே தனிப்பட்ட உறவே இல்லை

4. நல்ல குருவைத் தேடுவது பற்றித் தொடர்ந்து இந்தத் தளத்தில் பலர் கேட்டிருக்கிறார்கள். தாகம் நம்மை நீர் அருகே இட்டுச்செல்லும். அதுதான் வழிகாட்டிச்செல்லும் விசை. ஆனால் நீர் கிடைத்தாகவேண்டும் என்பதில்லை.

குரு மீதான உறவில் இரு படிகள் உள்ளன. அவரை சோதித்து விசாரணைசெய்து ஏற்பது. அங்கே அவநம்பிக்கையே அளவுகோல். ஏற்றபின் நம்பிக்கைதான் மேலும் நெடுந்தூரம் எடுத்துச்செல்லும்.

ஒரு பழங்குடி வழிகாட்டியுடன் காட்டுக்குச் சென்றோம். பகல் முழுக்க அவர் காட்டிய வழியைப்பற்றி சந்தேகமும் விளக்கமும் கேட்டுக்கொண்டிருந்தோம். திரும்பும்போது கூரிருள். அப்போது ஒன்றுமே கேட்கவில்லை. அவர் கையை மட்டும் பிடித்துக்கொண்டு வந்தோம்.முழு நம்பிக்கையுடன். ஆன்மீகத்தில் அப்படி ஒரு இருட்டுப்பிராந்தியம் உண்டு

அத்துடன் ஒரு நல்ல குரு நம்மை உடைத்து வார்ப்பார். நம் மீது அவரது பிரக்ஞை மோதுவதன் வலி பயங்கரமானது. நாம் நம்மை இழப்பதை உணர்வோம். அந்நிலையில் நாம் நம்மைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுவோம். குருவை நிராகரிக்கக் காரணங்கள் தேடுவோம். அப்போது அந்த ஆரம்ப ஐயம் நமக்கிருந்தால் நாம் அதைப் பெரிதாக்கி அவரை எளிதாக விட்டுவிட்டுச்செல்வோம். அதனால் நமக்கே இழப்பு. நம்மை உடைக்காதவர் நமக்குப் புதியதாக எதையும் தருவதில்லை. நம்மை அவமதிக்காதவர் நமக்கு உண்மை எதையும் காட்டுவதில்லை.

5. சாஸ்திர ஞானம் ஆரம்பகாலத்தில் தேவையானது. அது நம்மை வழிதவறாமல் சாராம்சம் நோக்கி நேராகக் கொண்டுசெல்லும். ஒரு கோயிலைப்பற்றிய சிற்பவியல் அறிமுகம் இருந்தால் நீங்கள் நேராகவே கருவறைக்குள் செல்லமுடியும். முதன்முதலாகக் கோயிலுக்குள் நுழைந்தால் கோபுரவாசல் புஷ்பயட்சி சிற்பத்தையே கடவுளாக நினைக்கக்கூடும் இல்லையா?

இப்போது ஆன்மீகச்சொற்பொழிவுகள் ஆற்றுபவர்கள், ஆன்மீககுருக்களாகத் தங்களை காட்டிக்கொள்பவர்கள் மிக அதிகம். வணிக ரீதியாகப் பெரும்பிம்பத்துடன் திரட்டப்பட்ட குருக்களும் அதிகம். அவர்கள் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் மிகச்சாதாரணமானவை. அவை மரபில் நெடுங்காலமாகவே பேசப்பட்டு வந்தவை. எளிய சாஸ்திர ஞானம் இருந்தால்கூட அவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்வோம். அது இல்லாததனால் அந்தச் சில்லறைக் கருத்துக்களிலேயே பிரமித்து அதிலேயே சிக்கிக் கொள்வோம்.

அதேபோல சாஸ்திர ஞானம் இல்லாத நிலையில் நம் மனதில் தற்செயலாக தோன்றும் எளிய கருத்துக்களை அரிய ஞானத் திறப்புகளாக எண்ணிக்கொள்வோம். அவை ஏற்கனவே மரபில் பெரிய அளவில் பேசப்பட்டவை என்பதை அறிந்திருக்க மாட்டோம்

அந்நிலையில் அரிய ஞானத்துளிகளைப் பெற்றுக்கொண்டு உள்வாங்கிக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்வோம். நம்மை நாமே ஒரு பீடத்தில் வைத்துக்கொள்வோம். அந்த மாயை மிக மிக அபாயகரமானது

இது ஓஷோ அல்லது ஜே.கே.போன்றவர்களின் ஒருசில நூல்களை மட்டும் வாசித்து உதிரியான கருத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கும் பொருந்தும். சாஸ்திர ஞானம் என்பது ஒட்டுமொத்தமான ஒரு பார்வை அளிக்கும். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் நிறுத்தும்.

இன்னொருபக்கம் போலி சாஸ்திரங்கள் நம்மைக் குழப்புகின்றன. சாதி சார்ந்தும் ஆசாரங்கள் சார்ந்தும் நம்மைக் கட்டிப்போடும் அந்த சாஸ்திரங்களைச் சொல்பவர்கள் நமக்கு சாஸ்திரம் தெரியவில்லை என்றால் எல்லாமறிந்தவர்களாக நமக்குத் தோற்றமளிக்கிறார்கள். பலசமயம் நம் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த சாதி, மத அமைப்புகள் நம்மை அத்தகைய போலி சாஸ்திரங்களில் சிக்கவைக்கின்றன. சாஸ்திர ஞானம் அவற்றின் உண்மையான மதிப்பை நமக்குக் காட்டுகிறது.

ஆன்மீகஞானிகளின் வாழ்க்கையில் அவர்கள் அந்த ஆரம்பகால வழிமயக்கங்களை வெல்ல சாஸ்திர ஞானத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருப்பதை காண்கிறோம். நாராயணகுரு போலத் தாழ்த்தப்பட்ட சமூகப்புலத்தில் பிறந்த குரு அவர்மீது அன்றைய சமூகம் ஏற்றிவைத்த எல்லா இரும்புப்பாறைகளையும் தன் ஞானத்தைக்கொண்டு தூக்கி வீசிவிட்டிருக்கிறார்

ஆனால் சாஸ்திரம் ‘கற்று மறக்கப்படவேண்டியது’ என்பது ஆன்மீக மரபில் எப்போதும் சொல்லப்படுகிறது. நீங்கள் அணியிலக்கணம் படித்தவர். வெளியே சென்று ஒரு பூவைப்பார்த்து அணியிலக்கண விதிகளின்படி பரவசம்கொண்டீர்கள் என்றால் அது அனுபவம் தானா? ஆன்மீக அக அனுபவமென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமுறையும் தனித்துவமானது. முன்னால் வகுக்கப்பட்ட எந்த விதியும் அதை விளக்காது, வரையறைசெய்யாது. இலக்கணம் மறந்துதான் கவிதையை வாசிக்கமுடியும். சாஸ்திரம் மறந்து மட்டுமே ஆன்மீகத்தை அடையமுடியும்

6. ஆம், கண்டிப்பாகப் பயிற்சி தேவை. பயிற்சி என்பது என்ன?ஏற்கனவே ஒருவர் அடைந்த அனுபவத்தில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொள்வதுதானே? நான் பதஞ்சலிக்கு முந்தைய காலகட்டத்தில் நின்றுகொண்டு யோகசாதனையை ஆரம்பிக்கவேண்டுமா என்ன? ஆன்மீகத்தேடல் என்பது மிக மிக அகவயமானதென்றாலும் எல்லாரும் மானுடரே என்ப்ற வகையில் மிகப் பொதுவான தளங்களே அதிகம். அவை பொதுவாக வரையறைசெய்யப்பட்டு விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. அவை முக்கியமானவை.

ஒரு புது ஊருக்குச் செல்கிறோம். நாமே வழி கண்டுபிடித்துச்சென்றால் ஒரு சின்னக் குறுக்குவழி தெரியாமல் முழுநாளும் நடக்க நேரிடலாம். ஒரு வரைபடம் அந்தச் சிக்கலை சாதாரணமாகத் தீர்த்துவைக்கும். சிலசமயம் மிக எளிமையான ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமல் நாம் வெகுதூரம் சுற்றி வருடங்களை இழக்க நேரிடலாம். அதற்குப் பயிற்சிகள் உதவும்.

ஓர் உதாரணம் , நித்யா சொன்னது. ஒருவர் அவரது தனியறையில் தேவையற்ற பொருட்களை குவித்துப் போட்டு நடுவே அமர்ந்து தியானம்செய்துவந்தார். நித்யாவிடம் அவர் தன்னுடைய தியானச்சிக்கல்கள் சிலவற்றைச் சொல்ல நித்யா அவரது அறையை சென்று பார்த்தார். அதன்பின் சொன்னார், அந்தப்பொருட்கள் அவரது ஆழ்மனதைப் பாதிக்கின்றன என்று. புறப்பொருட்கள் மனிதர்களின் ஆழ்மனதில் இயல்பாகவே படிமங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சுற்றியிருக்கும் பொருட்கள், அடிக்கடி கண்ணில் படுவதன் மூலம் நம் ஆழ்மனத்தை வடிவமைப்பவை. ஆகவே புற சூழலை ஒழுங்காக வைக்காமல் அகச்சூழலை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது. அதற்காகவே பதஞ்சலி யம நியமங்களைச் சொல்கிறார்.

இது யோகமுறையில். ஆனால்சாதாரணமாக சிந்தனைக்குக் கூட நமக்குப் பயிற்சி தேவையாகிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தேன். அப்போது புதிய சிந்தனைகள் மேல் எனக்குப் பெரும் மோகம் இருந்தது. புதிய கருதுகோள்கள், புதிய கலைச்சொற்களை ஆவேசத்துடன் அள்ளிச்சேர்த்துக்கொண்டிருந்தேன். நித்யாதான் அந்த மயக்கத்தை உடைத்தார்.

பழையதோ புதியதோ எல்லாக் கருதுகோள்களும், எல்லாக் கலைச்சொற்களும் வெறும் புற அடையாளங்களே என்றார். அந்த அடையாளங்களை நாம் நமக்கேற்ப மாற்றிக்கொண்டு நாம் அனுபவித்ததையும் சிந்தித்ததையும் முன்வைப்பதே முக்கியமானது. புதிய கலைச்சொற்களையும் கருதுகோள்களையும் சுடச்சுடக் கற்றுச் சொல்லவேண்டியவர்கள் பேராசிரியர்கள்– சிந்தனையாளர்கள் அல்ல. கலையும் ஆன்மீகமும் ’புதியதாக’ அறியக்கூடியவை, அந்த அறிதலைச் சொல்லமுயலக்கூடியவை.

இதேபோல நம் சிந்தனையில் ஏராளமான பிழைகள் நிகழ்ந்தபடியே உள்ளன. முறையான பயிற்சி நாம் சிந்தனையில் கொண்டுள்ள ஏராளமான பிழைகளை, வழிச்சுற்றுகளை சரி செய்துவிடும். அதற்காகவே பழங்காலம் முதல் குருகுல அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

7. ஓர் அறிவியல் ஆய்வாளனிடம் அவனுடைய ஆய்வில் முழு அமைதியை உணர்கிறானா என்று கேட்டால் என்ன சொல்வான்? அறிவியலே அப்படி என்றால் இன்னும் அகவயமான ஆழ்ந்த தேடலாகிய ஆன்மிகம் எப்படி அமைதி கொண்டதாக இருக்கமுடியும்?

மன அமைதிக்கான ஆன்மீகம் என்று சொல்லப்படுவதே வேறு. அது லௌகீகத்தில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதற்காக ஆன்மீகத்தைப் பிடித்துக்கொள்வதுதான். அதற்கு பக்தி பயன்படும். தியானத்தின் ஆரம்பநிலைகள் பயன்படும்.

ஆன்மீகத்தேடலில் அமைதி உள்ளது. ’நான் எனக்குரியதைச் செய்கிறேன்’ என உணரும்போது ஏற்படும் அகநிறைவு. லௌகீகத்தின் கொந்தளிப்புகளில் இருந்து ஓடுக்குள் புளியம்பழம்போல விலகி நிற்பதன் சமநிலை.

ஆனால் ஆன்மீகமே உருவாக்கும் கொந்தளிப்பு நிலைகள் பல உள்ளன. யோகப்பயிற்சிகளில் முதலில் குவிநிலையின்மை, பின்னர் குவிநிலை, பின்னர் கொந்தளிப்பு என்றே அதன் பாதை உள்ளது. அவற்றின் தளங்கள் மிகச் சிக்கலானவை. அவற்றைப்பற்றி இதற்குமேல் பேசமுடியாது.

ஜெ

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்Nov 2, 2011

முந்தைய கட்டுரையட்சி -கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : குமரகுருபரன்