பாரதி -கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கடிதம். முதலில் என் சீனா பற்றிய கடிதத்திற்குப் பல நாள் இடைவெளியில் பதில் அளித்ததற்கு அது காட்டும் மரியாதைக்கு மிக்க நன்றி.

இந்த பாரதி பற்றிய விவாதங்கள் மிக நுட்பமானவை.ரசிக்கும் படியானவை. அதே சமயத்தில் இன்றைய சமுகத்தில் அறிவு சார்ந்த விவாதங்கள் எவ்வளவு கடினமானவை என்றும் காட்டுகிறது. பல கடிதங்களில் வடிவங்களில் வரும் வினாக்களுக்கு நீங்களும் ஒரே பதிலைத்தான் அளிக்கவேண்டியுள்ளது – நான் நோக்கும் தளத்திலிருந்து எனது பார்வை இது – பாரதியின் பங்களிப்பை ஒரு விசாலமான கால அளவில் இலக்கிய காப்பிய அளவுகோலில் என்ன என்பதே. இது உணச்சிகளுக்கப்பால் அறிவார்த்தமான விவாதமாகும் எனவும் அந்த மதிப்பீட்டில் தங்கள் எண்ணம் என்ன என்றும் அவை உருவாவதற்கான காரணங்கள் என்ன என்றும் நீங்கள் சொல்லிமுடிந்த பின்பும். மீண்டும் மீண்டும் உங்கள் காரணங்களை விவாதிக்காமல் உணர்வு ரீதியான வேறு தளத்தில் பாரதியின் மதிப்பீடுகளும் காரணங்களும் எதிர் வினாக்களாக முன் வைக்கப்படுகிறது. தங்களும் அசராமல் இதே பதிலை மீண்டும் மீண்டும் அளிக்கிறீர்கள். தங்கள் பொறுமை வியப்பளிக்கிறது.

அன்புடன்,
வே. விஜயகிருஷ்ணன்.

அன்புள்ள விஜயகிருஷ்ணன்,

உலகத்தில் எந்த மொழியிலும் இந்தவகையான விவாதங்கள் வழியாகவே இலக்கிய விமர்சனம் நிகழ்கிறது. எந்த ஆரோக்கியமான இலக்கியச்சூழலிலும் விரிவாக விவாதித்து ஆராயப்படாத பிம்பங்கள் எதுவுமே இருக்க முடியாது. ஒன்றை அறிவதற்கு அதை ஆராயவேண்டியிருக்கிறது. அறிதல் என்பது கடந்துசெல்லுதல்.

தமிழில் இந்தப் ‘புனிதங்களைக் கட்டுடைத்தல்’ ‘பொதுப்பார்வைக்கு எதிரான கலகம்’ போன்ற வரிகளெல்லாம் அந்த வகை விமர்சனச்சூழலில் இருந்து பொறுக்கிக் கொள்ளப்பட்டவையே. ஆனால் நடைமுறையில் ஒருபோதும் அதிகாரத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களோ, அல்லது பரவலான நம்பிக்கைகளோ, அவிழ்த்து ஆராயப்படுவதே இல்லை. அறிவுஜீவிகளும் விமர்சகர்களும் பொதுபோக்குக்குப் பக்கமாக நிற்பதே நல்லது என்ற முடிவை எடுத்துக்கொள்வதையே நாம் காண்கிறோம்

பாரதியைப்பற்றிய இந்த விமர்சனம் என்பது மூன்றுதலைமுறையாகத் தொடர்ந்து சொல்லப்படுவது. இப்போது ஒரு பொதுவெளிக்கு மீண்டும் வருகிறது, அவ்வளவுதான். இந்தப்பொதுவெளியில் பாடப்புத்தக சிந்தனைகளை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதைக்கேட்கும்போது அதிர்ச்சி உருவாகிறது.வழக்கமான எதிர்வினைகளை ஆற்றுகிறார்கள்.

இதைவிட மோசமான முறையில் பாரதிக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. அவை பொருட்படுத்தப்படவில்லை. இதன்மேல் என்ன இவ்வளவு பதற்றம் ? இது உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கிறது, கணிசமான இளம் வாசகர்கள் தங்கள் அகத்தில் உணரக்கூடியதாக இருக்கிறது, ஆகவே இது தன்னை நிறுவிக்கொள்ளக்கூடும்– இதுதான் காரணம்

ஆனால் அந்தப் பதற்றம் அர்த்தமற்றது. இந்த விவாதத்தால் இருவகையினர் மட்டுமே பாரதியை ஆழ்ந்துபரிசீலனைசெய்வார்கள். பாரதியில் இருந்து பின்னால்சென்று தமிழின் பெரும் கவிமரபைத் தொட்டறிய முயல்பவர்கள். பாரதியில் இருந்து முன்னகர்ந்து தமிழ்நவீனகவிதை சாதித்தவற்றை அளவிட முயல்பவர்கள். அவர்கள் மிகச்சிறுபான்மையினரே.

பிறர் இந்தவிவாதத்தை ஒரு அன்றாட அலையாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இந்த விவாதம் ஒரு சுட்டுபலகை. இது இரு பெரிய மரபை தனக்கு ஆதரவாகச் சுட்டிக்காட்டுகிறது. அந்த மரபுகளை நோக்கிச் சென்றாலொழிய எதையும் வாசகர்கள் உணரமுடியாது. அப்படிச் செல்லாதவர்கள் தங்களுக்குத் தங்கள் எளிய பாடப்புத்தக வாசிப்பு அளித்த சித்திரத்தையே தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வாகள்

அதாவது இந்த விவாதத்தை ஒரு பதினைந்தாயிரம் பேர் இப்போது கவனிக்கிறார்கள். ஒரு ஆயிரம் பேருக்குத்தான் இது பயன்படும். அவர்களுக்காகவே இது எழுதப்படுகிறது

ஜெ

அன்புள்ள ஜெ.,

உங்கள் நிலையைப் பார்த்தால் வியக்காமல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு விஷயத்தை நூறு முறை சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பதில் உள்ள பொறுமையைப் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

ஆனால் சில விஷயங்களை சொல்லிப் புரியவைக்க முடியுமா என்று தெரியவில்ல. நவீன ஓவியம் பற்றித் தெரியாத ஒருவருக்கு எம்.எஃப்.ஹுசேன் பற்றி நீங்கள் எப்படி விளக்க முடியும். எத்தனை முறை கவியனுபவம் பற்றிப் பேசினாலும், அதை அடையும் வரை ஒருவரால் உங்கள் கூற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. (அப்படி முடியாதவர்களில் நானும் ஒருவன்)

ஆனால் உண்மையிலேயே இதில் உள்ள கஷ்டம் என்னவென்றால், கவிதையும் ஒரு எழுத்துவடிவக் கலை என்பதால், சிறந்த எழுத்துக்களைப் படிக்கும் ரசனை உள்ள ஒருவர், கவிதையின் ரசனையும் தன்னிடம் இருப்பதாக பிரமை கொண்டுவிடுகிறார் என்று நினைக்கிறேன். என்னிடமும் அந்த எண்ணம் இருந்தது – கவிதைகளைப் பற்றிய உங்களது பல்வேறு கட்டுரைகளைப் படிக்கும் வரை. கம்பனையும் பாரதியையும் நான் படித்த பக்கங்கள் பத்துக்கு மேல் தாண்டாது. ஆயினும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கூட, கம்பனில் எனக்குக் கிடைக்கும் இன்பம் பாரதியில் கைகூடியதில்லை. கவிதை மொழி எனக்கு மிகப்புதியது என்றாலும், கம்பனில் உள்ள ஒரு வசீகரம், மின்னல் பொழுதில் நம் பார்வையோடு வெட்டிச் செல்லும் இளம்பெண்ணின் ஓரப்பார்வை போல மனதில் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

விவாதங்கள் எதுவானாலும் பொறுமை அவசியமானதே. பரஸ்பர நல்லெண்ணம் இல்லாத சூழலில் விவாதங்கள் தனிப்பட்ட எல்லையை மீறுகின்றன. ஆனாலும் அவை பொதுவாக சிலவற்றைத் திரட்டிக்கொள்கின்றன. இந்த விவாதமே கூடப் பொதுவில் சில விஷயங்களைக் கவனிக்கச்செய்துள்ளது இல்லையா?

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

மிகவும் சிறப்பான விவாதமாக இருந்தது. இன்னும் உயர் ரசனை நோக்கிய தளத்தை நோக்கித் தாங்கள் எங்களை நகர்த்துவதற்க்கு முயல்வது நன்றாகத் தெரிகிறது. அந்தக் குமரகுருபரர் பாடல் உண்மையிலேயே அற்புதம். இன்னும் நிறைய படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் பாடலுக்குச் சொன்ன பொருள்போல் சொந்தமாகப் படித்தால் கொள்ளமுடியுமா என்று தோன்றவில்லை. அப்படி சிறப்பாக உரை எழுதப்பட்ட புத்தகங்களும் கிடைக்குமா என்று தெரியவில்லை. உங்களைப்போன்ற ஒரு நல்ல ஆசிரியர் அமைந்தாலே அது சாத்தியமாகலாம். ஆம் நீங்கள் உணர்ச்சி கலக்காமல் சொன்னது உண்மைதான். நாம் மிகப்பெரும் கடலின் கரையிலேயே அமர்ந்திருக்கிறோம்.

பாரதியின் கடிதங்களைப் படித்தேன். மீண்டும் ஒரு நகைச்சுவைப் பதிவிற்குத் தயாராகியிருப்பீர்கள் என நினைக்கிறேன். Body mind கடிதம் நன்றாக இருந்தது.

நன்றி.

பிரேம்குமார்
மதுரை.

அன்புள்ள பிரேம்குமார்

ஏதோ ஒருவகையில் ஒரு நிறைவின்மை நல்ல கவிதைவாசகனுக்குத் தேவைப்படுகிறது. ஒன்றில் இருந்து இன்னொன்றைநோக்கித் தேடிக்கொண்டுசெல்லும்தன்மை. அப்படி தேடுதல் இருந்தால் நாம் தமிழில் மேலும் மேலும் நுட்பமான கவிதைநோக்கிச் செல்லமுடியும். விமர்சனம் என்பதே அந்த முன்னகர்வுக்கான விசையை நாமே விவாதம் மூலம் உருவாக்கிக்கொள்வதுதான்.

நீங்கள் சொன்னது சரி. சட்டென்று இந்த பத்துப்பதினைந்து வருடங்களில் நமக்குப்பின்னால் மரபின் வாசல்கள் மூடிக்கொண்டிருக்கின்றன. இதை எவரும் உணர்வதில்லை. மரபிலக்கியம் பற்றிப் பேச விளக்கக்கூடியவர்கள் அருகி வருகிறார்கள். மரபிலக்கியமென்பது தொடர்ச்சியான விவாதம் மூலமே நீடிக்கக்கூடியது. அந்த மரபிலக்கியத்தின் பின்னணி நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அந்தப் பின்னணி விளக்கத்தைக் கடந்த நூறாண்டுகளாக மேடைப்பேச்சுக்கள் நிலைநிறுத்தி வந்தன

மேடையில் கம்பரை, சேக்கிழாரை,சைவ, வைணவ இலக்கியங்களை விரிவாகப் பேசிவிளக்கும் நல்ல பேச்சாளர்கள் மூன்றுதலைமுறையாக நமக்கிருந்தார்கள். ஞானியார் அடிகள் முதல் குன்றக்குடி அடிகளார் வழியாக ம.ரா.பொ.குருசாமி வரை. அவர்கள் எல்லாருமே முதிர்ந்து பழுத்துவிட்டார்கள். அதேபோலக் கல்லூரிகளில் நல்ல தமிழறிஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஓய்வுபெற்றுவிட்டார்கள்.

ஐம்பது வயதுக்குக் குறைவான தமிழறிஞர்கள் மிகமிகக் குறைவு என்பது வருத்தமளிக்கும் நிலைமை. மரபின்மைந்தன் முத்தையா, கரு ஆறுமுகத்தமிழன், ப.சரவணன்,ஆ.இரா.வெங்கடசலபதி என நான்கு பெயரை மட்டுமே என்னால் சொல்லமுடிகிறது. எதிர்காலத்தில் இந்த மாபெரும் செல்வத்தை நம்மால் தொடவே முடியாமல் ஆகலாம்.

ஜெ

அன்புள்ள ஜெ

பாரதி பற்றி விவாதங்களைப் படித்து வருகிறேன். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.

கூர்மையான நியாயம் (logic), சொல்ல வந்த விஷயத்தின் மீதான focus , உங்களது வாதத்தை உறுதிப்படுத்துகிறது. ‘ஐயோ! பாரதி மகாகவி இல்லையா(யோ)’ என்கிற சாத்தியப்பாடு நெஞ்சைச் சுடுகிறது. இது உணர்வு பூர்வமான விஷயம் தான். வாதத்திறன் ஏதும் இல்லைதான். இருப்பினும்..

‘நாரத கலகப்பரிய:’ என்பது போல் ‘விவாத ஜெயமோஹப்ரிய:’ சொல்ல வேண்டுமோ!

சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் போது, முதலில் மயக்கமும் (மற்றும் அதிர்ச்சியும்) பின் தெளிவும் உண்டாகலாம். இந்த நம்பிக்கையில், இந்த விவாதத் திரியைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

அன்புடன்
முரளி

அன்புள்ள முரளி

இது கலகம் இல்லை, ஒரு சின்ன சலனம். மேலோட்டமாகக் கேட்கும் குரல்கள் முக்கியமானவை அல்ல. உள்ளே மௌனமாக வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு பதினைந்தாயிரம்பேர் உள்ளனர். அவர்களே முக்கியமானவர்கள்.

இந்த அதிர்ச்சியை நான் சாதகமாகவே புரிந்துகொள்கிறேன். இலக்கியம் சம்பந்தமில்லாத விஷயங்களில் எனக்கே இந்த மனநிலைதான். இளையராஜா, மகாராஜபுரம் சந்தானம் போன்று எனக்குப்பிடித்த கலைஞர்களைத் தகுதியுள்ள விமர்சகர் விமர்சனம் செய்தால் எனக்கும்தான் உடம்பு பதற ஆரம்பிக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைபாரதி விவாதம் -6 – இறை,உரைநடை
அடுத்த கட்டுரைபாரதி விவாதம்-7 – கநாசு