ஜெயமோகன் ,
தபோவனத்தில் என்னைப் பயிற்றுவித்த ஆசிரியர்களிடம் சித்பவானந்தர் பற்றிய உங்கள் தளத்தில் நடந்த விவாதம் பற்றிக் கலந்துரையாடினேன். ராமகிருஷ்ண மடத்துக்கும், சித்பவானந்தருக்குமான கருத்து வேறுபாடுகளைப் பொறுத்த வரை, ஏறக்குறைய தாங்கள் எழுதிருக்கும் அனைத்தும் உண்மை என்றே தெரிந்தது. சித்பவானந்தரிடம் நெருங்கிப் பழகிய என் அறிவியல் ஆசிரியர்(சோமசுந்தரம்), ராமகிருஷ்ண மடத்துக்கும் சித்பவானந்தருக்கும் இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளின் போது, சித்பவானந்தர் தனது கருத்துக்களை மூடி மறைக்காமல் மிக பகிரங்கமாகவே வைத்தார் என்று சொன்னார். மேலும் ராமகிருஷ்ண மிஷன், செயல்பாடுகள் குறித்து அதன் முக்கிய கிளைகளுக்கெல்லாம் கடிதம் எழுதினார் என்றும் பிராமண ஆதிக்கத்தைப் பற்றி மற்றவர்களைவிட சித்பவானந்தர் மிகத் தெளிவான கருத்துக்களோடு இருந்தார் என்று தெரிவித்தார். கடிந்தங்களின் பெறுனராகிய, ராமகிருஷ்ண மடங்கள் இது பற்றி பூசி மெழுகாமல் தேடினால் இந்தக் கடிதங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
சித்பவானந்தரின் இறுதிக் காலத்தை மட்டுமே பார்த்த எனக்கு அவரது சிரித்த முகத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. விரிவாக இது பற்றி எழுதுமாறு என் ஆசிரியரைக் கேட்டிருக்கிறேன். சில தெளிவுகளை அது உருவாக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி
அழகேசபாண்டியன்
—
D. Alagesa Pandian
mapunity.in
அன்புள்ள அழகேசபாண்டியன்
இவ்வகை விஷயங்கள் சமகால வரலாற்றின் முக்கியமான பக்கங்கள். நம்முடைய சமூகக் கோப்பின் உட்சிக்கல்களை வெளிப்படையாகப் பேசுபவை, நம்மை நாமே பரிசீலனை செய்துகொள்ள அவசியமானவை
ஆனால் நம் மரபில் இத்தகைய விவாதங்கள் எல்லாமே பெரிய ஆளுமைகளைப்பற்றிய அவதூறுகளாக அல்லது அவர்களின் அந்தரங்கங்களுக்குள் நுழைபவையாக மட்டுமே கருதப்படுகின்றன. அவர்கள் இறந்தவர்கள் என்றால் அது கடவுள் நிந்தனையாகவே எண்ணப்படுகிறது
ஜெ