கவிஞர் அப்பாஸ்: அஞ்சலி

அப்பாஸை நான் 1986ல் கவிஞர் கலாப்ரியா நடத்திவந்த குற்றாலம் கவிதைப்பட்டறையில் முதலில் சந்தித்தேன். அவருடன் அன்று தேவதச்சனும் சமயவேலும் சுரேஷ்குமார் இந்திரஜித்தும் இருந்தார்கள். அவர் ஒரு காரில் வந்திருந்தார். அந்தக்கார் அவர் வேலைபார்த்த ஒரு ஜமீனுக்குச் சொந்தமானது. அந்த ஜமீனில் அவரது குடும்பம் பரம்பரையாகவே கணக்குப்பிள்ளை வேலை பார்த்தது. அப்பாஸ் அடிகக்டி அந்த நண்பர்களுடன் காரில் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு மது வாசனையுடன் வெளியே வந்தார். அவரை நான் ஒரு ஜமீன்தார் என்று எண்ணிக்கோண்டேன்

பின்னர் கோயில்பட்டியில் தேவதச்சனின் பொற்கூடத்துக்குப் போனபோது மீண்டும் அப்பாஸைக் கண்டேன். கோயில்பட்டி இலக்கியக்குழுவின் மையம் தேவதச்சன். அவரிடமிருந்தே அவர்களின் மொழி, இலக்கிய நோக்கு, இலக்கிய பிரமைகள் எல்லாமே பிறந்திருக்கின்றன. அவற்றுக்கு மிகச்சரியான உதாரணம் என அப்பாஸைச் சொல்லலாம். தேவதச்சனின் முதல் சீடர் அவரே. பிறகுதான் கோணங்கி, யுவன் சந்திரசேகர், சமயவேல் ,கௌரிஷங்கர் போன்றவர்கள்.

இலக்கியக்கூட்டங்களில் நான் அடிக்கடி அப்பாசை சந்திப்பதுண்டு. அவர்களின் உலகுக்கு எனக்கும் சம்பந்தமில்லை. அது குடியைக் கொண்டாடும் சூழல். குடிக்கு தொட்டுக்கொள்ள கவிதை. ஆனாலும் நட்பும் மரியாதையும் நீடித்தது. குற்றாலம் அருவிகளில் அப்பாஸ¤டன் நின்றிருக்கிறேன். என் கையை கூர்ந்து பார்த்து சோதிடப்பிரகாரம் எனக்கு கழுத்து வலி உண்டு என்று நான் அரைமணிநேரம் முன்பு அவரிடம் சொன்னதை எனக்குச் சொல்லியிருக்கிறார். பொதுவாக நகைச்சுவை உணர்வுள்ள உற்சாகமான நண்பராக இருந்தார்.

அப்பாஸின் கவிதைகள் மொழியின் தற்செயல்களை நம்பி எழுதப்படுபவை. உண்மையான மன எழுச்சியுடன் அச்சொற்கோவைகள் இணையும்போது மட்டும் கவித்துவம் நிகழ்கிறது. கோயில்பட்டி இலக்கியக்குழுவினரே ஐரோப்பிய இலக்கியம் மேலும் அது காட்டும் வாழ்க்கைமேலும் அபரிமிதமான பிரேமை கொண்டவர்கள். பியானோ, வயலெட் பூக்கள் ,வண்ணத்துப்பூச்சிகள்போன்றவை அவர்களின் மொழியில் நிறைந்திருக்கும். அப்பாஸ் கவிதைகள் இருத்தலியல் சிக்கல்களின் நுட்பமான வெளிப்பாடுகள் எனலாம். அல்லது அடையாள உருவாக்கத்துக்கான  எத்தனமும் தோல்வியும் எனலாம். அப்பாத்துரை அப்பாஸ் ஆனது அத்தகைய ஒரு தத்தளிப்பினாலேயே

அப்பாஸ் வயலெட் நிறபூமி என்னும் தொகுப்பை எனக்கனுப்பி கருத்து கேட்டிருந்தார். நான் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதற்கு வேடிக்கையாக பதில் அனுப்பியிருந்தார். விவாதங்களைத்தாண்டி சந்திக்கும் போது எப்போதும் அன்பாக விவாதித்திருக்கிறோம்.. தேவதச்சன், அப்பாஸ், முருகேசபாண்டியன் ஆகியோர் என் வீட்டுக்கு வந்தபோது நான் போட்டுக்கொடுத்த ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ டீயைப்பற்றி ஒரு கவிதை எழுதப்போவதாக ஒருமுறை சொன்னார்.

அப்பாஸ் பலவருடங்களாகவே குடியில் மூழ்கியிருந்தார். கவிதை இலக்கியம் எல்லாவற்றையும்விட்டுவிட்டு. ஈரல் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள்காமாலையாக அது மாறியது. ஆனாலும் குடியை நிறுத்தவில்லை என்றார்கள். ஆறுமாதமாகவே கொஞ்சம் தீவிரமாக மருத்துவம்செய்தார். ஆனால் ஈரல் கைவிட்டுவிட்டது. ஈரல் அடைப்பால் மூளை செயலிழந்து 20-3-2009 அன்று கோயில்பட்டியில் தன் 49 ஆவது வயதில் மறைந்தார்

‘வரைபடம் மீறி’, ‘வயலெட் நிற பூமி’, ‘ஆறாவது பகல்’,’ முதலில் இறந்தவனின் கவிதை’ ஆகிய தொகுப்புகள் வந்திருக்கின்றன.

நாளை

எப்படி வேண்டுமானாலும்
நீ அவைகளைப் பிடித்துக்கொள்
உனது பிஞ்சு விரல்களில்
அவை படபடப்பதே இல்லை
பயமேதும் ஏல்லாமல்
அவை உன் தலையிலும்
முதுகிலும் அமர்ந்து கொள்வதும்
பின்பு அவைகளை
நீ பிடிப்பதும்
விட்டு விடுவதும்
கைகொட்டி சிரிப்பதும்
புரண்டு விழுந்து எழுந்து
ஜன்னல் கம்பிகளின் ஒளியளில்
நீ
அவைகளை விரட்டித் திரிவதும்
பயமேதும் இல்லாத உனது விளையாட்டு
வண்ணத்துப்பூச்சியே
நாைளுயும் வா

 

 

 

 

சுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60302091&format=print

 

 

அப்பாஸின் நான்கு கவிதைகள்  

அப்பாஸ் (தொகுப்பு பாவண்ணன்)

 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=303020910&format=html

முந்தைய கட்டுரைநூல்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்