இசை, கடிதங்கள்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ.,

இது ஆஸ்கார் குறித்த எதிர்வினை. ரஹ்மான் குறித்ததல்ல.

இசை குறித்த ராமின் கட்டுரை இசை:ஒரு கடிதம் படித்தேன். ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடுத்தது இசையின் தோல்வி என்று எழுதியிருக்கிறார். இந்தளவு விவரமானவர், அறிவார்ந்து சிந்திப்பவர் ஆஸ்காருக்குக் கொடுக்கும் மதிப்பு அயர்ச்சி அளிக்கிறது. இதே போல் என்னை சோர்வடையச் செய்த மற்றொரு கட்டுரை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. ஆஸ்கார் குறித்துத் தன்க்குப் பெரும் மதிப்பேதும் இல்லை என்று சொல்லியவர், அடுத்த நாளே இருக்கை நுனியில் அமர்ந்து ரஹ்மானுக்கு விருது கிடைக்குமா என்று டிவி பார்த்திருக்கிறார். நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் இப்படி செய்ததை எந்தக் கோணத்தில் எடுத்துக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை.

ஆஸ்கார் என்பது அமெரிக்காவின் தேசிய விருது… அவ்வளவுதான். உண்மையில் ரசூல் மட்டுமே ஆஸ்கார் வாங்கியமைக்காகப் பாராட்டப் படக் கூடியவர். இசை குறித்து அமெரிக்கர்களின் பாராட்டுக்கு இந்தியர்கள் ஏங்கி நிற்பது, பிஹெச்டி மாணவன் பத்தாங்கிளாஸ் மாணவனின் பாராட்டுக்குக் காத்திருப்பது போலத்தான். இல்லையா?

அமெரிக்காவின் அங்கீகாரம் அகில உலக அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வகையில் பணத்திற்கும், பவருக்கும் கூழைக்கும்பிடு போடும் மனோபாவம் இந்திய ரத்தத்தில் ஊறியதோ என்றும் தோன்றுகிறது.

ஆஸ்கார் மூலம்தான் ரஹ்மானின் பெருமை நம்க்குத்தெரிய வேண்டும் என்பதில்லை. யோகாவின் பெருமையே அமெரிக்காக்காரன் சொல்லியதால்தான் நம்மால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தங்களது மூட நம்பிக்கைப் பட்டியலில் யோகாவையும் சேர்த்திருப்பார்கள் நம்மூர் புத்திசாலிகள்.

அன்புடன்
ரத்தன்

(அதிக அலட்டல் இல்லாமல் ரஹ்மானைப் பாராட்டிக் கட்டுரை எழுதிய தாங்களும், அதைவிட அதிகமாக, ஆஸ்காரின்   நியாயமான இடத்தை சுட்டிக்காட்டிய கமலும் பாராட்டுக்குரியவர்கள்)

அன்புள்ள ரதன்

விவாதங்கள் ஒருபக்கம். ஆனால் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. நம்முடைய ஒரு கலைஞர் விருதுபெறும் தருணம். அவரை அறியவும் மேலும் புரிந்துகொள்ளவும் அதைப் பயன்படுத்துவது நல்லது என்பதே என் எண்ணம். அதை யார் செய்தாலும் நல்லதே

ஜெ

அன்புள்ள ஜெ.,

ரஹ்மான் குறித்தான இசை விவாதங்களை நானும் படித்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். திரையிசை குறித்தான் எந்த ஒரு விவாதமும் எனக்கு ஆர்வமூட்டுவதே…

ஆனால்… விருது பெற்றவரை விவாதிப்பது என்பது சிறிய வட்டத்துக்குள் அடங்கிய செயல். விருதை விவாதிப்பது பெரிய வட்டம்.

ஒரு விருதை அதன் தரத்திற்கு மிக அதிகமாக மதிப்பிடும் சமூக மனோபாவத்தை விவாதிப்பது ஒரு பிரம்மாண்டமான வட்டம்.

அந்த பிரம்மாண்டமான வட்டத்தில் நுழைய இது ஒரு அரிய வாய்ப்பு என்பதினாலேயே என் கருத்தை உங்கள் முன்வைத்தேன்.

அன்புடன்
ரத்தன்

8888அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட இணைப்பில் உலகின் நூறு சிறந்த சினிமாக்களைப்பற்றிய பட்டியல் உள்ளது. உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்
கோபிநாத் ராமமூர்த்தி

அன்புள்ள ஜெ.மோ.,
திரைப்பாடல்களில் கர்நாடக இசையின் பயன்பாடு குறித்த அலசல்கள் விளக்கங்களை ஆனந்த் என்பவரின் வலைத்தளத்தில் காணக்கிடைத்தது.
90-களில் ஓர் மின் – குழாமில் இளையராஜா இசையில் செவ்வியல் நுணுக்கங்களும் பயன்பாடும் குறித்து அமெரிக்காவிலிருந்து திரு. ஸ்ரீரங்கம் லக்‌ஷ்மி நாராயணன் ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய 15 கட்டுரைகளும் இங்கே காணக்கிடைக்கின்றன. http://www.s-anand.net/blog/classical-ilayaraja/
பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்,
சாய் மகேஷ்.
முந்தைய கட்டுரைவாசம்
அடுத்த கட்டுரைஅம்மாவின் பேனா