அன்புள்ள ஜெ,
உங்கள் காந்தி பதிவைக் கண்டதுமே உடனே எழுத ஆரம்பித்தேன். நீண்டநாளாகவே எழுத நினைத்து ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த கடிதம்தான். எழுத நினைத்து பாதிஎழுதி விட்டுவிடுவேன். எனக்கு கம்ப்யூட்டரிலே அதிகமாக எழுதிப் பழக்கமில்லை. ஆனால் எட்டுவருஷங்களாக உங்களை விடாமல் படித்து வருகின்றேன்.இந்த விஷயங்களைப்பற்றி நாம் நிறைய பேசியிருக்கின்றோம். நான் உங்களுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். ஞாபகமிருக்கலாம்.
காந்தியைப்பற்றிய மட்டம்தட்டிய எழுத்துக்கு பதில் சொல்கிறீர்கள். நீங்கள் இரண்டுவருடங்களாகவே இதனை சலிப்படையாமல் செய்து வருகின்றீர்கள். நான் தொடர்ந்து காந்தியைப்பற்றி ஆர்வத்துடன் வாசித்துவந்தவகையிலே இப்போது எனக்கு சில தெளிவுகள் உள்ளன. அதைச் சொல்லவிரும்புகின்றேன். பொறுத்தருள்க.
காந்தியை எதிர்ப்பவர்கள் எல்லாம் யார் யார் என்று சிந்தித்துப் பாருங்கள். முஸ்லீம்கள் காந்தியை எதிர்க்கின்றார்கள் இன்றையதினம் என்று பொதுவாக பலர் நம்புகின்றார்கள். ஆனால் அவர்கள் அப்படி பெரிய வெறுப்புடன் இல்லை என்றே நினைக்கின்றேன். அவர்கள் முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். முற்போக்கு முஸ்லீம்கள்கூட இந்த மத அடிப்படையையை விட்டுவிட மாட்டார்கள். அது அவர்களின் மதநம்பிக்கை. அவ்வளவுதான். அவர்களிடம் விவாதிக்க முடியாது.
இடதுசாரிகள் காந்தியைப் புரிந்துகொள்ளவில்லை என்று நான் நினைக்கின்றேன். நான் இடதுசாரி எண்ணம் கொண்டவன் என்றும் களச்செயல்பாட்டில் இருப்பவன் என்றும் உங்களுக்கு தெரியும். ஆனால் இடதுசாரிகள் எங்கெல்லாம் காந்தியைப் புரிந்துகொண்டிருக்கின்றார்களோ அங்கேல்லாம் ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆரம்பகாலத்தில் காந்தியைப்பற்றி இருந்த கசப்பு அவர்களுக்கு இன்று இல்லை. அவர்களில் கொஞ்சம் வாசிக்கவும் சிந்திக்கவும்கூடியவர்கள் இன்றைக்கு வேறுமாதிரி சிந்திக்கின்றார்கள். திராவிட இயக்க மனநிலையை இடதுசாரித்தனமாக உருவம் மாற்றிக் காட்டும் சிலரே காந்தியை இடதுசாரியாக நின்று வசைபாடுகின்றார்கள். இன்றைக்கு இடதுசாரிகளின் போராட்டவழிகள் காந்திய வழிகளாகவே உள்ளன. காந்தியின் பொருளாதாரக் கொள்கையை இடதுசாரிகள் கொள்கை அடிப்படையில் நிராகரித்தாக வேண்டியிருக்கிறது.
திராவிட இயக்கத்தினர் காந்தியை வெறுக்கின்றார்கள். அவர்களுடைய அரசியல் என்பதானது இனவாதம் மற்றும் சாதியவாதம் சார்ந்த அரசியல். அதற்கு காந்தி எதிரி. ஆகவே அவர்கள் காந்தியை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். அவர்களால் காந்தியை சும்மா திட்டத்தான் முடியும். அவதூறாக எதையாவது எழுதுவார்கள். மற்றவர்கள் சொல்வதைத் தாங்களும் சொல்வார்கள்.
தலித் இயக்கத்தினரின் காந்தி வெறுப்பு அம்பேத்கரிடம் இருந்து வந்தது. அம்பேத்கர் காந்திக்கும் காங்கிரஸுக்கும் எதிராக பிரிட்டிஷாரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஆகவே அவர் காந்தியை எதிர்த்தார். ஆனால் அதே காந்தியால்தான் அவர் இந்திய சட்ட அமைச்சரானார். தலித்துக்களுக்கு இன்று கிடைக்கும் இட ஒதுக்கீட்டை அளித்தார். அம்பேத்கருக்கு அதற்கான ஆதரவை காங்கிரஸ் அளித்ததற்கு காந்தியே காரணம்.
இன்றைக்கும் பெரும்பாலான இந்திய தலித்துக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள். அவர்கள் காங்கிரஸை நம்புவதற்கு காரணம் அவர்களுக்கு காந்தி மேல் உள்ள நம்பிக்கை. அவர்களை காங்கிரசில் இருந்து பிரிக்கும் எண்ணத்துடன் தலித் அரசியல்வாதிகள் காந்தியை எதிர்த்து கொச்சைப்படுத்துகின்றார்கள். அதற்கு 1935ல் அம்பேத்கர் எழுதிய வரிகளைத் தந்திரமாகப் பயன்படுத்துகின்றார்கள். இதையெல்லாம் நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள்.
இதெல்லாமே அரசியல். அரசியலில் எல்லா தரப்பும் இருக்கத்தான் செய்யும். இவை எல்லாம் வெளிப்படையாகவே உள்ளன. வெளிப்படையாக இல்லாமல் இரு காந்திய எதிர்ப்பு சக்திகள் உள்ளன. அவர்கள்தான் எல்லாவற்றையும் தூண்டிவிடுகின்றார்கள். அவர்களைப்பற்றித்தான் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
முக்கியமான சக்தி கிறிஸ்தவ சக்தி. காந்தி மீதான அவதூறுகளை அதிகமாக உருவாக்கக்கூடியவர்கள் அவர்கள்தான். இங்கே காந்தியை அவதூறு செய்யும் திராவிட இயக்கங்களும் தலித் இயக்கங்களும் கிறிஸ்தவர்களின் கருத்துக்களையே சொல்கிறார்கள். அதற்காகப் பெரிய அளவிலே நிதியுதவியும் பெறுகிறார்கள். இங்கே உள்ள எல்லா என்.ஜி.ஓக்களும் காந்தியை வெறுக்கவே சொல்லிக்கொடுக்கின்றன தெரியுமா? களத்தில் இறங்கினால் அதைக் காண்பீர்கள். காந்தியைக் கேவலமாக அவதூறு செய்து எழுதிய எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் கிறிஸ்தவ அமைப்புகளின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்டன.
ஏன் இதை செய்கின்றார்கள்? ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இருநூறு முந்நூறு வருடக்காலமாக இந்தியா மீது சொல்லிவரும் குற்றச்சாட்டுகள் சில உண்டு. இந்தியா பிற்பட்ட பண்பாடு கொண்டது என்று சொன்னார்கள். செத்து உறைந்துபோன நாகரீகம் கொண்டது இந்தியா என்றார்கள். இங்கே உள்ள மதம் காட்டுமிராண்டி வழிபாட்டு முறை கொண்டது என்றும் அதனால் இங்கிருந்து எந்த நவீன சிந்தனையும் உருவாகாது என்றும் சொன்னார்கள். இன்றைக்கும்கூட இந்தியாவைப்பற்றி எழுதும் வெள்ளைக்கார ஆய்வாளர்களிலே முக்கால்வாசிப்பேரின் உண்மையான நம்பிக்கை இதுதான்.
இந்தியாவை நாகரீகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியும் கிறித்தவ மதமும்தான் என்று இவர்கள் சொல்கின்றார்கள். இந்தியாவின் பண்பாட்டிலேயே ஏழைகளுக்கு உதவக்கூடிய மனிதாபிமானமும், சேவையும், ஜனநாயகப்பண்புகளும் கிடையாது என்கிறார்கள். பழங்குடிநம்பிக்கைகளும் மூர்க்கமான பூசலிடும் தன்மையும்தான் இங்கே உள்ளது என்று சொல்கிறார்கள். இதையே இன்றைக்கும் ஐரோப்பா முழுக்க பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தமாதிரி எதைச் சொன்னாலும் உடனே ‘அப்படியானால் காந்தியைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்றுதான் எதிர்க் கேள்வி கேட்பார்கள். இன்றைக்கு உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய சிந்தனையாளராக காந்தி இருக்கின்றார். நவீன ஜனநாயகம் என்றாலே முன்னுதாரணமான சிந்தனையாளர் காந்திதான். சுற்றுச்சூழல் சிந்தனைக்கே அவர்தான் முன்னோடி. அவரிடமிருந்தே அதிகாரப்பரவலாக்கம் பற்றிய சிந்தனைகள் ஆரம்பிக்கின்றன. அவர் எந்த ஐரோப்பிய மரபையும் ஏற்றுக்கொண்டவர் அல்ல. தன்னை ஹிந்து என்றும், பழைமையான இந்தியச் சிந்தனையைச் சேர்ந்தவர் என்றும் சொல்லிக்கொண்டவர்
ஆகவே காந்தியை கிறிஸ்தவ ஐரோப்பா மட்டம்தட்டுகிறது. அவர் போலியானவர் என்கின்றார்கள். அவர் உயிருடன் இருந்தபோதே அவர் மதவெறி கொண்டவர், இனவெறி கொண்டவர், நிறவெறி கொண்டவர் என்றெல்லாம் திரிபுகளை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இன்றைக்கு காந்தி மிக அதிகமான முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் அவர்கள் இன்னும் அதிகமாக காந்தியைத் தூற்றுகின்றார்கள்.
அதற்கு சமானமாகவே காந்தியை வெறுக்கக்கூடியவர்கள் பிராமணர்கள். இதைத்தான் நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். அல்லது மழுப்பிக்கொண்டிருக்கின்றீர்கள். காந்தி ஒரு இந்து, ஆனால் பிராமணர் அல்ல என்பதுதான் இவர்களுக்குப் பிரச்சினை. அவர் தன்னுடைய குருவாக பிராமணர் எவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள சங்கராச்சாரிகள் யாரையும் பொருட்டாகவே நினைக்கவில்லை. இந்த ஒரு காரணத்தால்தான் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.
இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும். விவேகானந்தர் மாதிரி காந்தியும் ஒரு பிராமணரை குருவாகச் சொல்லியிருந்தால் ஒருவேளை அரைமனதுடன் ஏற்றுக்கொண்டு வசைபாடாமல் இருந்திருப்பார்கள். பிராமணர்கள் விவேகானந்தரைக்கூட இரண்டாம் இடத்திலேதான் வைப்பார்கள் என்பதற்கு நீங்கள் பெ.சு.மணி போன்ற பிராமணவெறியர்களின் புத்தகங்களைப் பார்த்தால் அறியலாம்.
இந்துமதம் என்று சொல்லும்போது பிராமணர்கள் அதை இரண்டு பகுதிகளாகவே பார்க்கின்றார்கள். ஒன்று, வேதமும் வேதாந்தமும் கோயில்களும். அதெல்லாம் பிராமணர்களுக்கு சொந்தமானவை என்கின்றார்கள். இந்துமதத்தின் மற்ற சாதிகள் எல்லாருமே Shamanism தான் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள். ஆகவே ஒரு பிராமணரல்லாதவரை நவீன இந்து அடையாளமாக உலகம் நினைப்பது அவர்களுக்கு சகிக்க்கக்கூடியதாக இல்லை.
இப்படிப் பல்வேறு உள்நோக்கங்களுடன் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள்தான் நம்மிடம் அதிகம். காந்தியைப்பற்றி எழுதுபவர்களின் தர்க்கங்களைப் பார்க்கவேண்டியதில்லை, அவர்களுக்கு உள்ளே உள்ள நோக்கம் என்ன என்று மட்டும் பார்த்தால் போதும்.
காந்தி ஒரு மகான் என்று நான் நினைக்கவில்லை. அவருடைய தர்மகர்த்தா பொருளாதாரக் கொள்கை எல்லாமே ஒருவகை அசட்டு நம்பிக்கை ஆகும். ஆனால் இன்றைக்கு நாம் சர்வதேசமூலதனம் என்ற மிகப்பெரிய சக்தியை எதிர்த்து மக்கள் போராட்டங்களை எடுக்கவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதற்கு நமக்கிருக்கும் முக்கியமான முன்னுதாரணம் காந்திதான்
நீங்கள் சொல்லி வருவதுபோல காந்தி மக்கள்போராட்டங்களை ஒருங்கிணைத்த விதமும் அவர் பொருளாதாரச் சுரண்டலை மக்களுக்குப் புரியவைத்த முறையும் நாம் கவனிக்கவேண்டியவை. மார்க்ஸின் வரலாற்று அணுகுமுறையும் காந்தியின் போராட்ட அணுகுமுறையும் இணையவேண்டும். அரசாங்கத்தைப் புரிந்துகொள்ள மார்க்ஸையும் அதிகாரத்தைப் புரிந்துகொள்ள காந்தியையும் நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கு காந்தியை இடதுசாரிகள்தான் அவதூறுகளில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும்
செம்மணி அருணாச்சலம்
[சுருக்கப்பட்டது]