ஒருநாள், நெல்லை:கடிதங்கள்

 

அன்பின் ஜெயமோகன்,


திற்பரப்பு அருவிக்குக் கூட்டிச்சென்று எங்களைக் குளிக்கவைத்தது ஒருநாள்படிக்கும்போது நினைவில் வந்தது.அதனருகே வாழும் மலைவாழ் மக்கள் தற்காலிகமாக தமக்குரிய கடவுளரை சிருஸ்டித்து வணங்கிவிட்டு அக்கணமே அவற்றைக் கலைத்துவிட்டுச் செல்வதாக அப்போது நீங்கள் கூறீனீர்கள்.


சிதரால் மலையில் மிகப்பெரிய சமண மாநாடு நடந்ததாகவும் சீனா உள்ளிட்ட பலநாடுகளிலிருந்து தத்துவ முனிவர்கள் அம்மாநாட்டில் பங்கேற்றதாகவும்
இந்தியத்தலைவர் ஒருவர் சீனா சென்றபோது சீனத்தலைவர் அவரிடம் சிதரால் மலை குறித்துக் கேட்டதாகவும் அப்போதுதான் இந்தியத்தலைவருக்கு அம்மாநாடு,சிதரால் மலைபற்றித் தெரியவந்தாகவும்
அங்கு கூட்டிச்சென்ற குமார செல்வா கூறினார்.


அம்மலையில் ஏற்படுத்தப்பட்ட சிலைகளின் சிதைப்பு ஆர்.எஸ்.எஸ் காரர்களால் ஏற்படுத்தப்பட்டதாகவும் அதன்பின் அது தொல்லியற் துறையின் கட்டுப்பாட்டில் வந்தாகவும் குமார செல்வா மேலும் கூறினார்.


சுகன்

 

அன்புள்ள சுகன்

நெடுநாள் கழித்து ஒரு குரல்

எப்படி இருக்கிறீர்கள்? நலம்தானே? மது குறித்து எழுதினால்தான் உங்கல் அக்டிதம் வரும் என்று எண்ணியிருந்தேன். திற்பரப்பு போன இனிய நினைவுகள்  எழுகின்றன.

சிதறால் பற்றி குமாரசெல்வா சொன்னவை செவிவழி அறிதல்கள். பொதுவாக அவை மிகைப்படுத்தப்பட்டவை, மத இன முன்கணிப்புகள் கொண்டவை.

சிதறால் கோயில் எண்பது வருடம் முன்பு நாகம் அய்யாவின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவேல் காலத்திலேயே  முக்கியமான தொல்பொருள் தலமாக அடையாளம் காணப்பட்டு பதிவுசெய்யப்பட்டுவிட்டது. சமணத்துறவிகள் அங்கே வருவது 100 வருடங்களாக நடைபெறுகிறது

அக்கோயில் வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே கைவிடப்பட்டு வெறும் குகைகளாகக் கிடந்தது. எந்த சம்ன நூலிலும் அது குறித்த ஆதாரம் இல்லை. சமணம் குமரி மண்ணில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டிலேயே போய்விட்டது

பதினொன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் அது காளிகோயிலாக இன்றைய வடிவில் எடுத்துக் கட்டப்பட்டது. ஆனால் மூன்றுகருவறைகளில் மையக்கருவறையில் காளி வைக்கப்பட்டாலும் சமண தெய்வங்கள் அகற்றவோ அழிக்கவோ படவில்லை. அவற்றுக்கும் முறையான பூஜைகள் செய்யப்பட்டன- இப்போதும் செய்யப்படுகின்றன. இருமதக்கோயிலாகவே அது இன்றும் நீடிக்கிரது.

பின்னர் மீண்டும் முந்நூறுவருடம் கைவிடப்பட்டு கிடந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்  திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா அதை எடுத்துக்கட்டி மீண்டும் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். கோயிலின் சம்ன சிற்பங்கள் அழிக்கபப்டவில்லை. பூசை செய்யப்பட்டன

பின்னர் 1952ல்  அது தொல்பொருள்துறையின் கைக்குச் சென்றது. அப்போதும் நன்றாகவே பேணப்பட்டது. நான் சிறுவனாக இருந்தபோது பள்ளியில் இருந்து மதியம் அங்கே ஓடிவருவோம். அங்கே காட்டுவேளாண்மைசெய்பவர்கள் பலர் இருப்பார்கள். பலர் அங்கே தூங்குவார்கள். கள்ளச்சாராய உற்பத்தி உண்டு. ஆனாலும் சிலைகளுக்கு ஒன்றுமே ஆகவில்லை

2007ல் குமரி மாவட்ட ஆட்சியர் அதை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்குவதற்காக டெண்டர் விட்டு வேலைகள் ஆரம்பிக்கபப்ட்டன,. தொல்பொருள்துறை வேலைகள் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் நடக்கும். ஆனால் இவை மறு காண்டிராக்ட் விடப்பட்டு யாரோ சில ஆசாமிகளால் செய்யப்பட்டன. அவர்கள்தான் சிலைகளை பழுதாக்கியவர்கள்.

2005ல் நானும் வசந்தகுமாரும் போய் எடுத்த புகைப்படங்களில் சிலைகள் முழுமையாக இருப்பதைக் காணலாம். அப்படங்கள் அ.கா.பெருமாளின் ‘தென்குமரியின் கதை’ நூலில் உள்ளன. அதன்பின் தேவதேவனைப்பற்றி வசந்தகுமார் எடுத்த ஆவணப்படத்திலும் சிலைகள் நன்றாகவே இருப்பதைக் காணலாம்

ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அக்கோயிலில் திருவிழா எடுக்க முயன்றார்கள்.  தொல்பொருள்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை– அவர்களின் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அதைச்சார்ந்து சில போராட்டங்கள் நிகழ்ந்தன அவ்வளவுதான்.

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை சென்ற பொழுது அதிக வெளிச்சம் இல்லாத நிலையில் அவசர அவசரமாக நெல்லையப்பர் கோவிலிலும் திருநெல்வேலியிலிம் எடுத்த சில ஃபோட்டோக்கள் இங்கே உள்ளன. உங்கள் கட்டுரைக்கு இணைப்பாக பயன் படுத்திக் கொள்ளவும்

http://picasaweb.google.com/strajan123/Tirunelveli#

http://picasaweb.google.com/strajan123/NAVATP#

அன்புடன்
ச.திருமலை

அன்புள்ள ஜெ
நெல்லை குறித்த கட்டுரை நன்றாக இருந்தது. தம் தமிழாய்வில் உள்ள முக்கியமான சிக்கலை தொட்டுககட்டியிருந்தீர்கள். ஆனால் அதில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்கவில்லை. நம் தமிழறிஞர்கள் தமிழிலக்கியத்தை சமூக- வரலாற்று- குறியீட்டியல் நோக்கில் ஆராயவேண்டுமானால் அவர்களுக்கு அந்த பயிற்சி தேவை. அதற்கு இங்கே வழியில்லை. நம்முடைய இலக்கியக் கல்வியில் இலக்கணமும் கவிதையும் உரைநடையும் மட்டுமே உள்லது. தத்துவம்கூட இல்லை. அப்படியானால் எப்படி ஆய்வுகளைச் செய்ய முடியும்?
சரவணன்
நண்பர் ஜெயமோகனுக்கு
இணையத்தில் நெல்லை படித்தேன்.எல்லாவற்றையும் பதிவு செய்ய முயலும் கவனம் வரவேற்கத்தக்கது. கருத்தரங்க அமர்வுகளில்
நீங்கள் கேட்ட அமர்வுகள் பற்றிய கருத்துக்கள் ஓரளவு உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லி விட முடியாது என்பதை முழுவதும் இருந்து கேட்டிருந்தால் உணர்ந்திருக்கலாம். இடைவெளிகளும் புரிதல்களும் நிறைய இருக்கின்றன. முதல் நாள் அமர்வுகள் சில கட்டுரைகளும் , கடைசி நாளில் பிரபாகர், பழனிவேலு, தர்மராஜ் போன்றவர்கள் எனது நோக்கத்தை நிறைவேற்றின என நினைத்துக் கொண்டிருக்கிறேன். நானும் முழுமையாக இருந்து கேட்கவில்லை. அனுப்பி வைக்கப்பட்ட கட்டுரைகளை வாசித்துப் பார்த்ததிலிருந்து சொல்கிறேன். கல்வித்துறை சார்ந்தவர்களைத் தொல்காப்பியம் பண்டைத்தமிழரின் வாழ்க்கைக்கான அத்தாட்சி என்பதிலிருந்து விலக்கி  இலக்கியக் கொள்கையைப் பேசும் ஒரு பனுவல் என்ற சிந்தனைக்குள் கொண்டு வருவதே பெரிய வேலை. திராவிட இயக்கம் கொண்டாடியது என்பதால் நானெல்லாம் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களையும் படிக்கிற காலத்தில் விரும்பி படித்தவனில்லை. எதில் கால் வைப்பது என்பது தெரியாமல் ஆற்று நீர்ப் படும் புணை போல ஓடிக் கொண்டிருப்பதில் எனக்கு வருத்தம் தான்
அ.ராமசாமி
 
Visit my blog www.ramasamywritings.blogspot.com and write ur comments

 

அன்புள்ள ராமசாமி,

நான் கேட்ட எல்லைக்குள் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன். என்ன நடக்கிறது பல்கலைகளுக்குள் என்பதை பொதுவாசகர்கள்  உணர்வது நல்லது அல்லவா?

பொதுவாக கருத்தரங்கு நன்றாகவே இருந்தது. ஆக்கப்பூர்வமான ஒன்று. பல்க்லையின் சூழலில் இத்தனைசெய்வதே பெரிய விஷயம். அதற்காக நீங்கள் பெருமைப்படலாம். ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கும்போது ஏமாற்றமே இருக்கும்–நான் நினைப்பது நிகழ்ந்திருக்காது. சற்று காலம் அக்ழித்தால் அதன் முக்கியத்துவம் நமக்கே தெரியவரும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்

ஜெ

முந்தைய கட்டுரைபழமொழிகள் ஓர் ஆய்வு
அடுத்த கட்டுரைசெம்பை