தேர்திரும்பும் கணங்கள்

ஒருவர் தன் வாழ்க்கையனுபவங்களை எழுதத் தேவையானது என்ன என்று கேட்கப்பட்டபோது பெர்னாட் ஷா வாழ்க்கை என்று சொன்னதாக சொல்வார்கள். நான் நேர்மை என்று சொல்வேன். வாழ்க்கை எல்லாருக்கும்தான் இருக்கிறது, நேர்மையாக எழுதுவதுதான் கஷ்டம். நாற்பது ஐம்பது வயதுக்குமேல் ஒருவர் கண்ணாடியில் தன் முகத்தைக் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருப்பதே கஷ்டமானது, தன் வாழ்க்கை மொத்ததையும் மொழி என்னும் கன்ணாடியில்பார்ப்பதென்பது சாமானியமானதல்ல.

கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ நேர்மை ஒன்றினாலேயே பெரிதும் கவனிக்கப்பட்ட நூல். அதில் அவர் தன் இளமைப்பருவத்தை எழுதியிருந்ததை வாசித்த என் மனைவி ‘என்ன இது, இவரு தன்னை முட்டாள்னு நிரூபிக்கிறதுக்காகவே எழுதினாரா?’ என்றாள். நான் ‘முட்டாள்தானே கவிதை எழுதமுடியும்…புத்திசாலின்னா வியாபாரத்துக்கோ அரசியலுக்கோதானே போவான்?’ என்றேன். மயங்கவைக்கும் இளமைக்கால அசட்டுத்தனங்களும் எளிமையான குதூகலங்களும் கொண்ட நூல் அது. அந்தக் குதூகலம் காரணமற்றது. குட்டியாக இருக்கும் ஒரே காரணத்துக்காகவே துள்ளிக்குதிக்கும் கன்றுக்குட்டியைப்போல.

கலாப்ரியாவின் உருள்பெருந்தேர் இன்னொரு நினைவுத்தொகை. நெல்லையப்பர் தேரோட்டத்தை சுகா சொல்லி ஒருமுறை சென்று பார்த்தேன். பெரிய தேர்முன்னால் வண்ண எறும்புக்கூட்டங்கள் போல மக்கள் கூடி நின்று கூச்சலிட மலைப்பாம்பு உயிர்பெறுவதுபோல கனத்தவடங்கள் எழ தேர் கனவுகளோடு நின்றிருந்தது. காலம் முழுக்க அப்படியே நிற்குமென்பதைப்போல. கூச்சல்கள் துண்டுவீசல்கள் சக்கரங்கள் நடுவே நெம்புகோலிட்டுத் தூக்கினார்கள். தேரின் பாவட்டாக்களில் காற்று சிலுசிலுத்தது

சட்டென்று எதையோ நினைத்துக்கொண்டதுபோல தேர் திடுக்கிட்டது. கிரீச்சிட்டபடி சற்று முன்னகர்ந்தது. பின்னர் சரசரவென உருண்டோடித் தெருமுனைவரை ஒரேவீச்சில் சென்று நின்றது. வடங்கள் தாழ்ந்தன. இழுப்பவர்கள் மேல் தண்ணீரை வீசினார்கள். சிரிப்புகள் வெடித்தன. உருள்பெருந்தேர் தொகுதியின் முதல் நினைவு கதையிலேயே அந்த மெல்லிய திடுக்கிடலை உணர முடிந்தது. பள்ளிக்கால நண்பனைப் பேருந்தில் தற்செயலாகச் சந்திப்பதன் அந்த அனுபவத்தை எல்லாருமே அனுபவித்திருப்பார்கள். எந்த ஒரு வகுப்பிலும் அப்படி ஒருபையன் இருப்பான். என்னுடனும் ஒருவன் இருந்தான். ஒரு குடிகாரப் பணம்பிடுங்கியாக வந்து என்னைப் பார்த்தான். அவனுக்கு நான் அவனுடைய ஏமாளிகளில் ஒருவன் மட்டுமே என்று உணர்ந்த கணம் அவன் என் பாலியகால நண்பனாகத் தெரியாமலானான்.

அவன் என்னை வந்து சந்தித்துச் சென்றபின் சாலையில் சிரித்துக்குதூகலித்துப் பள்ளி சென்று கொண்டிருந்த சின்னக்குழந்தைகளைப் பார்க்கையில் ஒரு பெரும்பீதி வந்து நெஞ்சை அடைத்தது. ஒரு கைப்பிடி விதைகள். என்ன செடி என்ன மரம் என்று தெரியாத விதைகள். ஆலமரங்கள் இருக்கலாம். விஷக்களைகள் இருக்கலாம். மர்மமான எழுத்துக்களில் எழுதப்பட்ட சுவடிகள். ஒரு பெரிய ஆடலுக்காக மர்மப்புன்னகையுடன் அவன் களத்தில் பரப்பி வைத்த காய்கள்.

கல்பற்றா நாராயணனின் ஒரு கவிதையில் பாலியகால நண்பன் ஒருவனை சந்திப்பதைப்பற்றி வரும். உருத்தெரியாமல் மாறி வந்து நிற்கிறான். இருவரும் ஒருவரில் இன்னொருவர் இழந்த இளமைக்காலத்தைத் தேடுகிறார்கள். இளமைக்காலத்தை நடிக்க முயல்கிறார்கள். சரியாக வரவில்லை. ’சாலையில் செல்லும் பேருந்து தூரத்தில் இருந்து பார்க்கும்போது மரக்கூட்டங்களுக்கு நடுவே மறைந்து மறைந்து தெரிவதுபோல அவன் தெரிந்துதெரிந்து மறைந்துகொண்டிருந்தான்’ கலாப்ரியாவின் இந்த அனுபவக்கதை மொத்த நூலுக்கும் ஒரு பாதைக்குறிப்பாக இருக்கிறது. எந்தவிதமான சாராம்ச அர்த்தத்தையும் அளிக்காமல் நேரடியாகவே நிகழ்ந்து நினைவில் உதிர்ந்துகிடக்கும் வெறும் அனுபவங்கள் இவை. அர்த்தமின்மையை மட்டுமே சாராம்சமாகக் கொண்டவை.

வாழ்க்கையைத் தொகுத்துப்பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. முதன்முறையாகத் தீவிர வாசிப்பு அறிமுகமாகும் பரவசக்கணம். சாண்டில்யன் வாசிப்புக்காக வாசகசாலைக்குத் தண்ணீர்பிடித்துக்கொடுக்கிறார். ருஷ்யமொழியாக்கங்கள் என்னும் கசப்புமருந்துகளை உண்கிறார். வாசிப்பின் போதைக்கு அப்பாலும் ஒன்றிருக்கிறது என்று காட்டியது ராகுல சாங்கிருத்யாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை.

ஆனால் வாசிப்பின் பேரின்பத்தை அவருக்குக் காட்டியவர் எதற்காக வாசிக்கிறார் என்பது மொத்தத்தையும் தலைகீழாக்குகிறது. சிட்டிகை பல்பொடியை அடிக்கடி வாய்க்குள் போட்டுக்கொள்கிறார், தீரா வயிற்றுவலிக்கான தற்காலிக மருந்தாக. அதைப்போலவே அவருக்கு வாசிப்பு. செத்த எலியைப் போல வாழ்க்கையின் வளாகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவலத்தில் இருந்து ஒரு கனவுலக மீட்பு. இழந்த அல்லது அடையமுடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழும் பிரமைக்கு அப்பால் வாசிப்பு என்பது என்ன? கலாப்ரியா அதற்குமேல் அந்த வினாவில் நிற்பதில்லை.

இந்தக் கட்டுரைகள் முழுக்கத் தெரிந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் என் நெஞ்சை அடைக்கச்செய்கிறது. ஏனென்றால் இது என் அனுபவமும் கூட. நானும் கலாப்ரியாவின் தலைமுறையைச்சேர்ந்தவன். வறண்ட நிலத்தில் உயிர்கள் தாகநீர் தேடி அலைவதுபோல இந்த வாழ்க்கைச்சூழலில் இளம் மனங்கள் கலையனுபவத்துக்காக அலைந்துகொண்டே இருக்கின்றன. திரையரங்க வாசல்களில், ரேடியோ வைத்திருப்பவர்களின் வீட்டு வராந்தாக்களில் காத்து தவித்து நின்று திரைப்பாடல்களைக் கேட்கிறார்கள். கேட்டபாடலை நெஞ்சில் அரிய நினைவாக வைத்துக்கொண்டு சுவைக்கிறார்கள். கிழிந்த மட்கிய தாள்களில் பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்காக அலைந்து கெஞ்சிக்கேட்டுப் பெற்று வாசிக்கிறார்கள்.

சோறுபோல தண்ணீர்போல மானுட வாழ்க்கைக்குக் கலையும் இன்றியமையாதது. ஆனால் நம்முடைய சென்ற நூற்றாண்டில் ஒவ்வொரு ஊரிலும் அப்படி ஒன்று தேவை என்ற எண்ணமே இருக்கவில்லை. பெரியவர்கள் வேலைக்குப் போகவேணும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அவ்வளவுதான். அதற்குமேல் என்ன இருக்கிறது வாழ்க்கையில் என்ற எண்ணம். கோயில்கலைகளும் நாட்டுப்புறக்கலைகளும் தேங்கிவிட்டிருந்தன. இளம் மனம் அவற்றில் புதிய அனுபவங்களைக் கண்டுகொள்ளமுடியாது. புதியகலை என இருப்பது திரைப்படம் மட்டுமே. அதுவோ அன்று செலவேறிய அபூர்வப் பொருள்.

நானும் அதற்காக ஏங்கித்தவித்திருக்கிறேன். பேருந்தில் செல்லும்போது டீக்கடையில் நல்லபாட்டு கேட்டால் அங்கேயே இறங்கி நின்று கேட்டிருக்கிறேன். இளையராஜாவின் அன்னக்கிளி பாடல்கள் வந்த காலகட்டத்தில் தினமும் ஒரு டீக்கடை வாசலில் அதைக் கேட்பதற்காகப் பலமணிநேரம் காத்துக் கிடந்திருக்கிறேன். கலையனுபவம் மனதை இளகச்செய்து உருகி வழியச்செய்ய தனிமையில் நடந்து சென்று ஆற்றங்கரையில் நின்று அழுதிருக்கிறேன். கலாப்ரியாவின் இந்த அனுபவங்களில் மீண்டும் அந்தக் காலகட்டம் மறுபிறப்பெடுத்து வருகிறது.

அன்றைய தமிழ் இளைஞனுக்கு வெளியுலகமாகக் காணக்கிடைத்தது, நவீன கலையனுபவமாக அணுகமுடிந்தது சினிமா மட்டுமே. ஆகவே கலாப்ரியாவின் நினைவுகளில் தமிழ் சினிமாவே அந்தக்காலகட்டத்தின் எல்லா அடையாளங்களையும் உருவாக்குகிறது. இன்றும்கூடத் தன் திருமணத்தை, குழந்தை பிறந்ததை அப்போது வெளியான சினிமாவை நினைவுக்குக்கொண்டு வந்து சொல்பவர்கள்தான் நம்மில் பலர். கலாப்ரியாவின் நினைவுகள் முழுக்க சினிமாத்தகவல்கள். ஆனால் திரும்பிப்பார்க்கையில் அவை அற்புதமான ஒரு வரலாற்றுப்படலமாக அந்தக் காலகட்டத்தின் உணர்ச்சிகளை அவை இன்று எழுப்பும் விசித்திரமான ஏக்கத்தைப் பதிவுசெய்கின்றன

1960களில் நெல்லையின் ஒரு பொருட்காட்சித்திடல் எப்படி இருந்திருக்கும் என சாதாரணமாகச் சொல்லிச்செல்லும் நினைவுப்பதிவில் சிவாஜியும் எம்ஜியாரும் நாடகக்குழுக்கள் வைத்துப் பொருட்காட்சியில் நாடகங்கள் போட்டது வருகிறது. வளையாபதி முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஊமைத்துரையாக வந்து சிவாஜிக்கு நிகராக வசனம் பேசுவார், அவரைப் படத்தில் போடக்கூடாதென்று சிவாஜி சொல்லிவிட்டார் என்று சொல்கிறார். வளையாபதி முத்துகிருஷ்ணன் என்ற பேரே ஒரு முகத்தை ஒரு கதையைக் கண்முன் கொண்டுவருகிறது, ப.சிங்காரத்தின் டாலர் ராஜாமணி அய்யர் மாதிரி. வளையாபதி நாடகத்தில் நடித்துப் பேர்வாங்கியிருப்பார் போல.

சென்றகாலம் என்பது முகங்களின் கொந்தளிப்பு. கடல் கோடானுகோடி துளிகளாலானது, ஒரே பெரும்துளியும்கூட. வரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம். இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் முகங்கள்தான் இதை வரலாற்றுப்பதிவாகவும் ஆக்குகின்றன. ஓரம் கிழிந்த வாயோடு நாவலரின் குரலில் ‘உங்கவீட்டுப்பிள்ளை கணபதிப்பிள்ளைக்கு’ மைக்கில் இரவுபகலாய் ஓட்டு கேட்கும் அறிவிப்புத்தொழிலாளி, இந்திப்படம் பிரபலமானதும் ஷோலே ஆகப் பெயர் மாற்றம் பெற்ற சோலை, பெயர்கள் இல்லாத கிராமவாசிகளுக்குப் பெயர் சூட்டி வங்கிக்கணக்கு ஆரம்பித்துக் கூலியில் பாதியை அதில் போடும் வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்பைச்சேர்ந்த அம்மையார், அவருக்கு பயந்து திண்ணைகள் முழுக்க பரவி அமர்ந்து கையெழுத்துப் போட்டு பழகும் கிழவாடிகள், ராணிவந்திருக்காப்ல, காசீம் அவென்யூல இருக்கா என்கிற தகவலைச் சொல்லவருபவர் நேதாஜி படத்துக்கு ஜெய்ஹிந்த் சொல்லி அடிக்கும் சல்யூட் என காட்சிகளும் முகங்களுமாக நிறைந்து வழிகிறது கலாப்ரியாவின் நினைவுக்கொப்பளிப்பு.

சட் சட்டென்று உக்கிரமான கதைக்கான ஒரு சின்ன கரு மணலை அள்ளும் விரல்களுக்கு விதை தட்டுப்பட்டு மறைவது போல வந்துசெல்வது இந்தத் தொகுதியை இலக்கியவாசகனுக்குரியதாக ஆக்குகிறது. அழிந்துபோன படவூர் ஜமீனுக்குள் பார்க்கும் அந்த அழகியபெண். ஜமீன்தாரின் அப்பாவின் வைப்பாட்டி மகள், தங்கைமுறை. ஆனால் சொத்துக்கு ஆசைப்பட்டு அவளைத் தாலிகட்டி வைத்து சொத்துக்களை விற்பதற்காக மண்எண்ணை விட்டு கொளுத்திவிடுவேன் என பயமுறுத்தி வதைக்கிறார். எட்டு வரிகளில் வந்து செல்லும் ஒரு சிறுகதை.

சிலசமயம் மொத்த அனுபவமும் துல்லியமான சின்னச் சிறுகதையாக அமைந்துவிடுகிறது, வேனல் போல. அழகிய மனைவி அமைந்தும் ஆழமான ஒரு வைராக்கியத்தால் தன்னை நிரந்தரமான வேனலில் ஆழ்த்திக்கொண்ட சரக்குமாஸ்டரின் கதை. கொதிக்கும் கல்லில் விழுந்து அவர் நெஞ்சு வெந்த சித்திரம் அவருக்குள்ள்ளும் நெஞ்சு எரிந்துகொண்டிருப்பதன் குறியீடாகவே ஆகிறது. சாதாரணமாக சொல்லப்படும் அந்த அனுபவச்சித்திரத்தின் உள்ளே உரையாடல்களாகவும் குறிப்புகளாகவும் உள்ளோட்டமாக செல்லும் ஒரு மானுட கதை சொல்லப்படுகிறது. உறவுகளை விளக்க முயலவே எப்போதும் இலக்கியம் எழுதப்படுகிறது. பெரும்பாலும் விளக்கமுடியாமையை சொல்லி நின்றுவிடுகிறது.

பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள். ஒரு ராட்சதப் பயில்வான் விதவிதமாக மனிதர்களைக் குத்தி ’நாக் அவுட்’ செய்துகொண்டே இருப்பதன் சித்திரங்கள். பெண்ணை சினிமா இயக்குநருக்கு தானம் வார்த்துவிட்டுக் காணாமல் போகிறவர், மைனர்விளையாட்டுகளுக்குப்பின் உடலின் எல்லை உணர்ந்து சட்டென்று பாலில் நீர்விழுந்ததுபோல அடங்கிப்போகும் தாஸ், வண்ணதாசனின் அண்ணாவின் இளம்பருவ ஓவியமுயற்சிகள்..

நெல்லையப்பன் தேர் ஒரு முடுக்கு வரும்போது திரும்புவது கடினம் என்று சொன்னார்கள். அங்கே தேரைத் திருப்ப நெடுநாட்களாகப் பழகிய தொழில்நுட்பம் இருக்கிறது. இரண்டு வெவ்வேறு சிறு சந்துகளுக்குள் தேரைக்கொண்டு சென்றார்கள். அவற்றை இழுக்கையில் மிக அற்புதமான ஒன்று நிகழ்ந்தது. தானாகவே எண்ணம் கொண்டதுபோல தேர் அழகாகத் திரும்பி மறுசாலை நோக்கி முகம் திருப்பியது. கலையில் அதேபோன்ற கணங்கள் அபூர்வமானவை. அனுபவப்பதிவுகளான இக்கதைகளிலேயே பல கதைகளில் அதை சாதித்திருக்கிறார் கலாப்ரியா.

கதைகளில் கலாப்ரியா என்ற கவிஞர் எழுதியவை அவை என்பதன் நுண் தடயங்கள் உள்ளன. கவித்துவத்துக்காக முயல்வதில்லை, ஆனால் பழகிய அணில்பிள்ளை தோளில் ஏறி அமர்வதுபோல, பூனைக்குட்டி மடிதேடிவந்துவிடுவதுபோல கவித்துவம் நிகழ்ந்துவிடுகிறது. கண்ணுக்குத்தெரியாத சமூகப் புறக்கணிப்பால் முரட்டுத்தனம் கூடிய சின்னவீட்டுப்பிள்ளை ஆறுமுகம் [பிச்சைக்காரனா பொறக்கலாம், வப்பாட்டி மகனா பொறக்கக் கூடாது] அருவியில் குளிக்கும் இடம் அத்தகையது. இதுக்குமட்டும்தான் சின்னவீட்டுபிள்ளை பெரியவீட்டுமகன் என்கிற பேதம் இல்லை என்று அருவியில் சென்று நிற்கிறார். குளிர்ந்து கொட்டும் பேரருவி அவர் அனலை அணைக்கமுடியுமா என்று முடியும் கடைசி வரிக்கு இணையானவற்றைத் தமிழில் சிலரே எழுதியிருக்கிறார்கள்

[கலாப்ரியாவின் ’உருள்பெருந்தேர்’ நூலுக்கு எழுதிய முன்னுரை. சந்தியா பதிப்பக வெளியீடு]

முந்தைய கட்டுரைசித்பவானந்தர்-கடிதம்
அடுத்த கட்டுரைபாரதி-கடிதங்கள்