மராத்தி-தமிழ் கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

மராத்தி மொழியில் ஆதி, ஆயி போன்ற தமிழ்ச் சொற்கள் தாராளமாக புழங்குவதைக் கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல தமிழில் இருந்து அங்கு சென்றிருக்கலாம்.

பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்கள் இலங்கை, கொழும்புவிலிருந்து வெளியிட்ட “இந்து கலாசாரம் – கோவில்களும் சிற்பங்களும்” என்ற நூலில், ஆலயங்கள் மற்றும் ஆகம விதிகள் குறித்தான தகவல்கள் நிறைந்திருக்கின்றது.அதனை உங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல விழைகிறேன். இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டவர்கள் மறந்து போன பல நுண்ணிய தகவல்கள் அந்நூலில் காணக் கிடைக்கிறது. மிக முக்கியமான நூல் என்றே நான் கருதுகிறேன்.

http://www.comsys.com.sg/pdf/Hindu_Temples_Sculptures.pdf

நன்றி.

ஜெ
நலமா
அண்ணா ஹசாரே பெயர் விவாதத்துக்குள்ளாகியிருப்பதைப் பார்த்தேன். மராத்தியில் அண்ணா என்றால் தந்தை என்று அர்த்தம். எல்லா மராத்தியர்களும் தங்கள் தகப்பனாரை ‘மஜே அண்ணா ” (என் தகப்பன்) என்று தான் அழைப்பார்கள். என் தந்தையும் அவரது தகப்பனாரை அப்படித்தான் கூறுவார். (அவர் மராத்தி மாத்துவர் ). என் தலைமுறையில் மாறி நாங்கள் பாப்பா (ஹிந்தி போன்று ) அழைக்கத் துவங்கினோம். என் மனைவியின் வீட்டில் இன்றும் அண்ணா தான்.

ஹஜாரே அவர்களை பெரும் மரியாதை நிமித்தம் அண்ணா போட்டு விட்டார்கள். மற்றபடி அது சுத்த தமிழா அல்லது தனி சுவடு கொண்ட மராத்தி சொல்லா என்று தெரியவில்லை. மராத்தியர் தமிழகத்தில் அரசு செய்த போதும் இது போன்று ‘ethnic’ சொற்களை இறக்குமதி செய்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன். நாங்கள் வீட்டில் பேசும் மராத்தி சொந்த மண்ணில் இருந்து பிரிந்து நெடுங்காலம் கடந்து திரிபு அடைந்திருந்த போதும், உறவினர்களை விளிக்கும் சொற்கள் சுத்த மராட்டி தான்.

வெங்கட்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஉப்பு,மேலும் கடிதங்கள்