பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை

ஜெ,

’பாரதியின் இறையணுக்கம் மிக முக்கியமான கூறு.வெறும் தோத்திரம் செய்யுள் என்று புறந்தள்ள முடியாத தீவிரத்தன்மை கொண்டவை அவரது ஆன்மீகப் பாடல்கள்’என்னும் முத்தையாவின் கருத்தை நானும் உடன்படுகிறேன்.விநாயகர் நான்மணிமாலை அதற்கு ஏற்றதொரு உதாரணம்.இலக்கிய,தத்துவ தளங்களில் பல ஆழமான அர்த்தப் பரிமாணங்களைக் கண்டடைவதற்கான வாயிலைத் தனது விநாயகர் நான்மணிமாலையின் வழி திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் பாரதி.

இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் பாரதியின் உரைநடையும் கூடக் கவித்துவம் பெற்றுவிடுவதைக் காண முடிகிறது.சிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி நிற்க வேண்டுமென்று விரும்பி,விடுதலையின் குறியீடாகவே அதைக் கொண்டாடிய பாரதி, ‘சிறிய தானியம் போன்ற மூக்கு;சின்னக் கண்கள்;சின்னத்தலை;அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு;கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை;துளித்துளிக் கால்கள்’எனச் சிறு சிறு சொற்றொடர்களைத் தொடுத்தபடி தனது உரை வருணனையாலேயே சிட்டுக் குருவிக்கு ஒரு தூல வடிவத்தை அளித்து விடுகிறான் .

தமிழ்ப் புதுக் கவிதைக்கு அடித்தளம் அமைத்துத்தந்த வசன கவிதைக்கான வித்துக்களைத் தத்துவம் சார்ந்த அவனது கட்டுரைகளில்தான் மிகுதியாகக் காண முடிகிறது

பாரதியின் கட்டுரை வரிகளை அவனது வசன கவிதை வரிகளுக்குப் பக்கத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலுள்ள கட்டமைப்பு ஒற்றுமை மிகத் தெளிவாகப் புலப்படுவதோடு,பாரதியின் தத்துவ வேட்கையும்,அதன் மீதான அவனது தேடல்களும் ,தரிசனங்களுமே மரபார்ந்த எல்லைக் கோடுகளை மீறி வசன கவிதைக்கு அவன் வாயில் அமைத்துக்கொண்டதற்குக் காரணம் என்பதையும் புரிய வைக்கின்றன.

தமிழ்ச் சிறுகதையின் தளர்நடைப் பருவத்தில் அதன் முன்னோடிகளாகத் திகழ்ந்தவை பாரதியின் ஆக்கங்கள்; மேலை இலக்கிய அளவுகோல்களை அவனது சிறுகதை வடிவங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதென்றபோதும் – இந்திய வாய்மொழி மரபின் வழிவந்த புனைகதைப் பாணியை உட்செரித்துக்கொண்டு,பஞ்ச தந்திரக்கதைகளின் போக்கைத் தழுவி ‘நவதந்திரக் கதை’களையும்,சிறு சிறு வேடிக்கைக்கதைகள் பலவற்றையும் உருவகப் போக்கில் உருவாக்கிக் கதை இலக்கியம் சார்ந்த உரைநடைப் பரப்பை விரிவும்,ஆழமும் பெறச் செய்திருக்கிறான் பாரதி.

தலித்தியம்,பெண்ணியம் ஆகிய நவீன இலக்கியக் கோட்பாடுகள் பரவலாக அறியப்பட்டிருக்காத காலகட்டத்தில் அவனது ‘பஞ்ச கோணக் கோட்டை’யும்,’சந்திரிகையின் கதை’யும் முறையே அவ்விரு கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றன.நவீன,பின் நவீன இலக்கியத் தளங்களில் இன்று முன்னிறுத்தப்படும் மீயதார்த்த,மாய யதார்த்தக் கூறுகளின் சில சாயல்கள் , பாரதியின் மிகு கற்பனை உரைநடைக் காவியமான ‘ஞான ரத’த்தில் காணக் கிடைக்கின்றன.

விதவை மறுமணத்தை வலியுறுத்துவதற்காகவே பாரதி எழுதத் தொடங்கிய ‘சந்திரிகையின் கதை’என்ற நாவலும்,அவனது தன் வரலாற்றைக் கூறும் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அரைகுறையாக முடிந்து விடாமல் அவனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்குமானால்,நாவலாசிரியன் என்ற பரிமாணத்தையும் பாரதி குறைவறப் பெற்றிருக்கக்கூடும்.

பாரதியின் பாடல்களில் ஆங்காங்கே தலை காட்டும் அங்கதச்சுவை , அதன் முழுமை குன்றாமல் விரிவாக வெளிப்பட அவனது கதை இலக்கியம் துணை செய்திருப்பதைப் பல இடங்களில் காண முடிந்தாலும் அவனது ‘சின்னச் சங்கரன் கதை’அங்கத உரைநடையின் உச்சமாகவே விளங்குவதைக் காண முடியும்.

எம் ஏ சுசீலா

அன்புள்ள சுசீலா,

நான் இந்தவிவாதத்தில் பாரதிக்கு ஏதேனும் பங்களிப்புள்ளதா என்ற வினாவை எழுப்பிக்கொள்ளவில்லை. பாரதி தமிழ்ப்புனைகதைக்கு ஒரு தொடக்கப்புள்ளி என்பதைச் சொன்னபின்னரே நான் ஆரம்பிக்கிறேன். நான் விவாதித்துக்கொண்டிருப்பது பாரதியைப் பற்றி மூன்றுதலைமுறையாக தமிழின் தீவிர இலக்கியவாதிகள் தொடர்ந்து முன்வைத்துவரும் விமர்சனம். அதாவது, அவரது கவிதைகளில் குறைந்த அளவுக்கே உயர்கவித்துவம் சாதிக்கப்பட்டுள்ளது, அவரது உரைநடை இந்தியாவின் அவரது சமகாலத்தவர்களின் உரைநடைச்சாதனைகளுடன் ஒப்பிட்டால் சாதாரணமானது

தமிழ் உரைநடையே அவரது காலத்தில் தளர்நடை இட்டது என்பதை நானும் மறுக்கவில்லை. அதனால் இந்திய அளவில், உலக அளவில் பாரதியை மதிப்பிடும் ஒரு விவாதத்தில் அவனுக்கு சலுகை மதிப்பெண் கொடுக்கவேண்டுமா என்ன?

பாரதி என்னென்ன எழுதினான் என்ற பட்டியல் அல்ல நான் கோருவது. அவனுடைய உரைநடை அவனை ஒரு முக்கியமான மூலச் சிந்தனையாளனாக, முக்கியமான புனைகதையாளனாக நிலைநிறுத்துகிறதா என்ற கேள்வியை மட்டும்தான்.

பாரதிக்குபின்னால் வந்த நவீனத் தமிழ் புனைவிலக்கியப் பரப்பில் பாரதியின் பாதிப்பு மிகக் குறைவு என்பதையே தமிழ்ப் புனைவிலக்கிய வரலாறு காட்டுகிறது. தமிழில் பாரதியின் உரைநடை ஆக்கங்களை விட வங்காளத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட தாகூர் உட்பட உள்ள புனைவெழுத்தாளர்களின் ஆக்கங்களே தொடர்ந்த தீவிர பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. அவையே நவீன புனைவெழுத்தை உருவாக்கியிருக்கின்றன. பாரதிக்கு சமகாலத்திலும் பின்னரும் ராஜம் அய்யர்,கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்கள் வங்க பாதிப்பையே தங்கள் தொடக்கப்புள்ளியாகக் கொண்டவர்கள்.

பாரதியில் இருந்து புதுமைப்பித்தனுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதைக் கண்டால் பாரதியில் குறைவது என்ன என்று புரியும். புதுமைப்பித்தனுடையதே நவீனத்தமிழின் முதல் காத்திரமான புனைவிலக்கிய மொழி. புனைவிலக்கியத்தின் எல்லாத் தளங்களிலும் முன்னோடி முயற்சிகளைப் புதுமைப்பித்தன் செய்திருக்கிறான். மாய யதார்த்தமோ, புராணக் கற்பனையோ, ஏன் அறிவியல் புனைவோகூட தமிழில் புதுமைப்பித்தனையே தொடக்கப்புள்ளியாகக் கொண்டிருக்கிறது.

பாரதி இறந்து சில ஆண்டுகளுக்குள் புதுமைப்பித்தன் எழுத வந்துவிட்டான் என்பதை நினைவுகூருங்கள். ஆகவே பாரதி ஏதோ தமிழ் தளர்நடையிட்ட தொல்பழங்காலத்தில் வாழ்ந்தான் என்ற சலுகையை அவனுக்களிப்பதில் பொருளில்லை. புதுமைப்பித்தன் அவன் காலகட்டத்தில் உலகில் எந்த மொழியிலும் எழுதிய புனைகதையாளர்களுக்கு நிகரானவன். தாகூர் உட்பட அனேகமாக எல்லா வங்க எழுத்தாளர்களையும் சிறுகதையில் சாதாரணமாக தாண்டிச் சென்றவன்.

ந.பிச்சமூர்த்தி, கலைமரபும் மனிதநேயமும் நூலில் பற்றிய தன் கட்டுரையில் சுந்தர ராமசாமி இதையே சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழ்ப் படைப்பாளிகளில் பாரதிவரிசை புதுமைப்பித்தன் வரிசை என இரு குழுப்புகைப்படங்களை அவர் கற்பனைசெய்கிறார். அனேகமாக அத்தனை நவீனப்படைப்பாளிகளும் புதுமைப்பித்தனுக்குப்பின்னால் அணிவகுத்திருப்பதை சுந்தரராமசாமி காட்டுகிறார். காரணம் நவீன இலக்கியத்தின் சில அடிப்படைகளைப் புதுமைப்பித்தன் உருவாக்கினார் என்பதே.

அவை- ஒன்று, வாசகனுக்குக் கற்பனைக்கான சாத்தியங்களை அளிக்கும் இலக்கிய வடிவம், இரண்டு புனைவுமொழியை எளிய பேச்சாக அல்லாமல் எழுத்தாக, மறுஎழுத்தாக, உரையாடலாக எல்லா வகையிலும் எடுத்துக்கொண்டு சென்ற தன்மை. மூன்றாவதாக, இலக்கியம் என்பது கருத்துப்பிரச்சார சாதனமல்ல என்ற தெளிவு.

பாரதியின் புனைவெழுத்துக்கள் கருத்துப்பிரச்சாரத்துக்கு அப்பால் செல்லாதவை. அவரது உரைநடை எழுத்துக்கள் இதழியல் சார்ந்தவை மட்டுமே. காக்காய்பார்லிமெண்ட்,ஞானரதம் உட்பட நகைச்சுவையும் தத்துவமும் விரவி வரும் எழுத்துக்கள்கூட.

நான் பாரதியை வாசித்துவிட்டுத்தான் பேசுகிறேன் என்று நண்பர்கள் நம்பும்படி கோருகிறேன். ஆகவே பாரதி எழுதியவற்றை எனக்குச் சுட்டிக்காட்டவேண்டாம். நான் கோருவது மதிப்பீடுகளை உருவாக்கும் ஒப்பீட்டு ஆய்வை மட்டுமே

ஜெ

ஜெ

1910க்கு முன் பாரதி எழுதியதில் கவிதை அம்சம் மிகமிகக் குறைவு, அவை பாடல்கள் மட்டுமே. அத்தகைய பாடல்களாக வெளிப்பட்டவை எல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்புகளே,
ஆனால் அந்த உணர்ச்சி அடித்தளமற்றது அல்ல, அதன் பின் உண்மையான சிந்தனைப்போக்கு இருந்தது.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு
போகவோ நாங்கள் சாகவோ
அழுதுகொண்டிருப்போமோ ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ உயிர் வெல்லமோ

என்பது பிரசார வகைப் பாடல் தான். ஆனால் இதே காலகட்டத்தில் இந்தஉணர்ச்சிக்குப் பின் நிற்கும் நியாயங்களையும் தர்க்கத்தையும் கட்டுரையாகஎழுதியிருக்கிறார். அவற்றையும் இணைத்தே பார்க்க வேண்டும். கூட்டத்திற்குசிந்தனையைக் கடத்த முடியாது, உணர்ச்சிகளை அறிவிக்க மட்டுமே முடியும்.பாரதி இதை ஒரு தார்மீகக் கடமையாகவே கொண்டு செயல்பட்டிருப்பதாகத்தோன்றுகிறது. வேறு எதையும் விட, தான் சிந்தித்துப் பெற்ற முடிவுகளை“மக்களுக்கு”ச் சொல்ல வேண்டும் என்பதையே அவன் மனம் முக்கியமாகக்கருதியிருக்கிறது, அந்தக் காலகட்டத்தில். 1910க்குப் பிறகு தான் அவனதுகவிதை உள்ளம் திறக்கவே செய்கிறது – அப்போதும் அதில்பத்திரிகையாளர்,பாடலாசிரியர் பாரதி எட்டிப் பார்த்துக் கொண்டே தான்இருக்கிறார்.

அன்றாட அரசியலில் குதிக்கும் எல்லாப் படைப்பாளிக்கும் இது நேரும் என்றுதோன்றுகிறது.அண்ணா ஹசாரே போராட்டத்தின் போது அனேகமாக அது பற்றியதைத் தவிர நீங்கள்வேறு எதுவுமே எழுதவில்லை என்பதையும் இதனுடன் இணைத்து எண்ணிப்பார்க்கிறேன். நல்லவேளை அந்தப் போராட்டம் சில வாரங்களே தொடர்ந்தது !ஆனால் பாரதி சுதேசி இயக்கத்தில் படுதீவிரமாக 10 வருடம்இருந்திருக்கிறார். அப்போது அரசியல் அவர் கவிதையைக் காவு கொண்டது.பிறகு அவர் கவிதை வெளிக்குள் நுழைந்து கொண்டிருந்த போது காலம் அவரையேகாவு கொண்டு விட்டது.

ஜடாயு

அன்புள்ள ஜடாயு,

கிட்டத்தட்ட நாம் ஒரு புள்ளியை நெருங்கிவிட்டோம். பாரதியின் கவிதைகளில் கணிசமான அளவை அடைத்துள்ள ஆரம்பகாலக் கவிதைகள் நேரடியான பிரச்சாரம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளே. அவற்றை நான் புறந்தள்ள மாட்டேன் ‘ எந்தையும் தாயும்’ போன்ற சாதாரண வரிகள் கொண்ட பாடலில்கூட ’தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளையாடி’ என்ற வரியின் கவித்துவம் எனக்கு முக்கியமானதே.

அதேபோல பாரதியின் பாடல்களில் தோத்திரப்பாடல்களில் மிகப்பெரும்பாலானவை மிக சம்பிரதாயமான வடிவிலும் மொழியிலும் உள்ளடக்கத்திலும் உள்ளன என்பது என் கருத்து. அவற்றில் அவ்வப்போது வரும் வரிகளைக்கொண்டு அவற்றை பெரும்கவிதைகள் என்று நான் கொள்ள மாட்டேன். நான் ஏற்கனவே சொன்னது போல என்கருத்து மட்டும் அல்ல. தமிழின் ஒரு நீண்ட விமர்சன மரபின் மதிப்பீடு அது.

பாரதியின் கவித்துவம் முதிர்ந்து அவன் எழுதிய காலம் சொற்பமே. அதில் தனிவாழ்வின் அலைக்கழிப்புகள். புறக்கணிப்பின் காலகட்டங்கள். பாரதியின் குறுகிய வாழ்க்கையில் அவன் எழுதிய காலத்தைவிட எழுதாதுபோன காலகட்டங்களே அதிகம். அதைப் பலர் அறிவதில்லை. அவனுடைய கவித்துவம் அதன் உச்சம்நோக்கிச் செல்லும் வாய்ப்பு அவனுக்கு அமைந்ததேயில்லை.

ஆம்,நான் சொல்லவந்தது அதைத்தான். ஒரு மகாகவிக்கான வாய்ப்புகள் இருந்தவர் என்று நீங்கள் பாரதியைச் சொல்வதாக இருந்தால் நான் அதை இன்னும் இருமுறை உரக்கச் சொல்வேன். அதற்கான நூற்றுக்கணக்கான வரிகளை எடுத்துக்காட்டுவேன்.

இங்கே என் வாதம் இன்று கிடைக்கும்பாடல்களைக் கொண்டு நாம் பாரதியை எங்கே வைப்போம் என்பது மட்டுமே
ஜெ

ஜெ

தாகூர், பாரதி என்ற ஆளுமைகளைக் கவி -மகாகவி என்ற கோணத்தில் வைத்துப் பார்க்கலாம் — என்று கார்த்திக் கூறிப்பதை அடியொற்றி ஒரு சில கருத்துக்களைச் சொல்லிப் பார்க்கிறேன்.

அவை பொதுவான தளத்தில் பரவலாக அனைவராலும் அறியப்பட்டவையாக,பேசப்பட்டவையாகவே இருந்தாலும் குறிப்பிட்ட இந்த விவாதத்தில் அவற்றையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதை ஜெ எம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு படைப்பாளியின் வாழ்புலம் அவனது பின்னணி அவனுக்கு நேரும் சிக்கல்கள் இவையும் கூடக் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமல்லவா?நகுலன் போன்ற பல படைப்பாளிகளை இந்தத் தளத்தில் வைத்தும் பார்த்திருக்கிறோம் என்பதால் இதைச் சொல்லத் துணிகிறேன்.

தாகூர் நெடுநாள் வாழ்ந்தவர்;செல்வந்தக் குடும்பப் பின்னணியில் பிற தேவைகளுக்கான உளைச்சல்கள் அதிகமின்றி – மன ஓர்மையுடன்,அமைதியான மன நிலையில்- இலக்கியத்தில் மட்டுமே நாட்டம் செலுத்தியவர்;அரசியலிலும் பாரதி போல அதிகம் பட்டுக் கொள்ளாதவர்.

உப்புக்கும்,புளிக்குமாய் உளைச்சல் கொண்டபடி,அன்றாட வாழ்வை நடத்துவதே பெரும்பாடாய் இருந்ததோடு,அரசியல் காரணங்களால் மறைவிடம் தேடி ஆங்காங்கே ஓட நேர்ந்து,அகால மரணமடைந்த பாரதிக்கும் மேற்குறித்த சாதகமான வாழ்க்கை அமைந்திருந்தால் மகாகவி என்னும் நிலையை அவனும் எட்டியிருக்கக் கூடுமா?

பாரதி ஒரு முன்னோடி என்பதை ஏற்கும் ஜெ எம்…ஒரு மகாகவியாவதற்கான சாத்தியக் கூறுகள்,அதற்கான பொறிகளாவது அவனது கவிதைகளில் தென்படுவதாக எண்ணுகிறாரா?
சூழலைச் சாக்குக் காட்டி எதையும் நியாயப்படுத்தவோ அரவணைக்கவோ நான் முற்படவில்லை.பாரதி மாயையும் எனக்கில்லை.

எனினும் ஒரு மகாகவியாக மலர முடியாதபடி இந்தக் காரணிகள் அவனைப் பின்னுக்கிழுத்திருக்கக் கூடுமோ என்று விளைந்த ஐயத்தையே இங்கே ஒரு தெளிவு பெற வேண்டி முன் வைக்கிறேன்.
ஜெ எம்மின் விளக்கம் கிடைத்தால்/அல்லது முன்பே அவர் அதைக் கொடுத்திருந்து நான் தவற விட்டிருந்தால் அதை எடுத்துக் காட்டினால் நல்லது.

எம்.ஏ.சுசீலா

அன்புள்ள சுசீலா,

ஆம் , அது ஒரு முக்கியமான காரணம். தாகூருக்கும் பாரதிக்குமான தூரத்தை நாம் ஒப்புக்கொண்டோமென்றால் மேலே பேசும்போது அதைத்தான் பேசியாகவேண்டும். தாகூர் ஒரு கவிஞனாக ஆவதற்காக சூழல் எதையெல்லாம் அளிக்குமோ அதையெல்லாம் வாழ்க்கையில் பெற்றவர். நினைக்கவே ஒரு பொருமல் எழக்கூடிய நிலை என்றுதான் சொல்லவேண்டும்.

செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த தாகூர் இளமையிலேயே உயர்தரக் கல்வியை பெற்றார். பேரறிஞர்களும் பெரும்கலைஞர்களும் அவர் குடும்பத்திலேயே இருந்தனர். ஒவ்வொருநாளும் அவர் வீட்டில் நவீன இந்தியவரலாற்றின் மிகச்சிறந்த அறிஞர்சபை கூடியது. வாழ்க்கைக்காக ஒருநாளும் எந்தத் தொழிலும் செய்யும் கட்டாயம் ஏற்பட்டதில்லை. அவரது முழுநேரக்கவனமும் உழைப்பும் இலக்கியத்துக்கும் கவிதைக்குமே அளிக்கப்பட்டது.

அழகன். நல்ல உடல்நலமும் ஆயுளும் கொண்டவன். மிகச் சிறந்த காதல்கள் அமையப்பெற்றவன். அற்புதமான பயணங்கள். வாழ்நாளெல்லாம் தாகூர் உலகப் பயணம்செய்துகொண்டிருந்தார் என்பதை எண்ணும்போது வரலாற்றிலேயே எந்த இந்தியக் கவிஞனுக்கும் அது கிடைத்ததில்லை என்றே உணர்கிறேன். ஒருபக்கம் வங்காள பவுல்களை சேகரிக்கவும் மறுபக்கவும் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் கடிதத்தொடர்பு கொள்ளவும் அவரால் முடிந்தது. தாகூரை எண்ணும்போதெல்லாம் ‘காணிநிலம்வேண்டும்’ என்ற பாரதியின் மன்றாடல் காதுகளில் ஒலித்து நெஞ்சை அடைக்கிறது.

நமக்குப் பாமரத்தனமாக ஒன்று சொல்லப்பட்டுள்ளது. கவிஞன் என்றால் அவன் வறுமையில் வாடுவான் என்று. ஆனால் உலகவரலாற்றை எடுத்துக்கொண்டால் பெருங்கவிஞர்கள் பெரும்பாலானவர்கள் தாகூரைப்போல ஆசீர்வதிக்கப்பட்ட சூழலில் பிறக்க நேரிட்டிருக்கிறது என்றுதான் பார்ப்போம். மானுட வரலாற்றின் மாபெரும் கவிஞர்களையே பார்ப்போம். கம்பனும் காளிதாசனும் எல்லாம் மன்னர்களால் பேணப்பட்டவர்கள். கல்வியின்பெரியவன் என எண்ணுமளவுக்கு மகத்தான கல்வியை அடைய அவனுக்கு வாழ்க்கையும் சூழலும் அமைந்தது

சீனப்பெருங்கவிஞர் து ஃபு டாங் சீனாவின் மிகபெரிய பிரபுகுடும்பத்தில் பிறந்து டாங் வம்சத்து மன்னர்களின் பேரமைச்சராக இருந்தார். ருஷ்யப்பெருங்கவிஞர் புஷ்கின் ருஷ்யாவின் முதல் மூன்று பெரும் பிரபுக்குடும்பங்களில் ஒன்றில் பெரும் கல்வியாளர்கள் நிறைந்த சூழலில் புஷ்கின் என்ற முக்கியமான கவிஞருக்குப் பேரனாகப்பிறந்தவர். ஜெர்மனியில் இருந்து மொழிநிபுணர்களை வரவழைத்து அவருக்குக் காவியபாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது. ஐரோப்பிய பண்பாட்டை நிறுவியவர் என்று சொல்லத்தக்க ஜெர்மானியக் கவிஞர் ஜெர்மனியின் பிரபுகுடும்பத்தில் பிறந்து இளம்வயதில் இருபத்திமூன்று தனி ஆசிரியர்களால் இலக்கியமும் தத்துவமும் அறிவியலும் கற்றுக்கொடுக்கப்பட்டவர்.

விதிவிலக்குகள் உண்டு. ஷேக்ஸ்பியர்போல. ஆனால் ஷேக்ஸ்பியர் பசியிலும் புறக்கணிப்பிலும் வாடவில்லை. கலைஞர்கள் கூடி வாழும் ஒரு சமூகத்தில் பெரிதும் போற்றப்பட்ட கலைஞராகவே வாழ்ந்தார். தாகூருக்கு முன் ஒரு இந்தியப் பெருங்கவிஞர் என நான் சொல்லும் மிர்ஸா காலிப் ஆப்கானிய பெரும் பிரபுகுடும்பத்தில் பிறந்தவர்.

அனைத்துக்கும் அப்பால் தாகூருக்கு ஒரு பெரும் சாதக அம்சம் இருந்தது. பெரும்பாலான பெரும் கவிஞர்களும் பெரும் படைப்பாளிகளும் ஒட்டுமொத்தமாக சமூகத்தையே தூக்கிச்சுழற்றி முன்செல்லும் பண்பாட்டுப்பேரலை ஒன்றின் மேலேறிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டமே கருத்தியல் கொந்தளிப்பு மிக்கதாக, பண்பாட்டு மாற்றம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கும் யுகசந்தியாக இருக்கும். தாகூர் இந்திய மறுமலர்ச்சியையே உருவாக்கியளித்த வங்காளத்தின் பொற்காலத்தின் உச்சகட்டத்தில் வாழ்ந்தவர்.

அந்தகாலகட்டத்தைக் கற்பனைசெய்து பார்க்க பிரமிப்பு எழுகிறது. தொடக்கப்புள்ளி பிரம்மசமாஜம் எனலாம். ஐரோப்பியப்பண்பாடும் இந்தியப்பண்பாடும் ஆக்கபூர்வமாக உரையாடிய ஒரு நிலம் வங்கம். அதன் விளைவு பிரம்ம சமாஜம். அது உருவாக்கிய பண்பாட்டுப்புரட்சி வங்கத்தையும் பின் இந்தியாவையும் துயிலெழச்செய்தது. ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் உருவான காலகட்டம். உலகமே வங்கத்தை கவனித்தது. கலையில் வங்கபாணி ஓவியம் உருவானது. வங்க நவீன இசை உருவானது. தாகூர் இவையனைத்திலும் இருந்தார். அவர் கவிஞர், நாடக ஆசிரியர் மட்டுமல்ல. புனைவெழுத்தாளர். ஓவியர், இசையமைப்பாளர்.

நாம் பாரதியை ஒப்பிடலாம். சின்னஞ்சிறு கிராமமான கடையத்தில் பிறந்த பாரதி எங்கும் எப்போதும் அவரது மேதமை அடையாளம் காணப்படாதவராகவே வாழ்ந்தவர். அவரது சிறிய அதிருஷ்டம் அவர் எட்டையபுரத்தில் இருந்து தப்பி இதழியலுக்கு வந்தது. இளவயது வறுமையின் விளைவுகள் சுமந்த உடல். அன்றாடம் உழைத்தாகவேண்டிய வாழ்க்கை. தலைமறைவு வாழ்க்கை, அதன் வறுமை. திரும்பி கடையம் வந்தபோது சாதிவிலக்கு செய்யப்பட்டு சித்தம் பிறழ்ந்தவ்ரென்று தூற்றப்பட்டு வாழ்ந்தார். கடைசிவரை உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பாரதி அடையவில்லை. .

அவர் நம்பி செயல்பட்ட சுதந்திர இயக்கம் என்றால் திருநெல்வேலிப்புரட்சி. அது மிகையான கணிப்புகளுடன் மிகையான ஆசைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு பிரிட்டிஷாரால் குரூரமாக முளையிலேயே கிள்ளப்பட்டது. பாரதியின் வாழ்க்கையின் பெரும்பகுதியை சோர்விலும் கசப்பிலும் ஆழ்த்தியது திருநெல்வேலிப்புரட்சியின் வீழ்ச்சி. அதுவே அவரை கஞ்சா அபின் போன்ற பழக்கங்களை நோக்கிக் கொண்டுசென்றது. அவரது படைப்பூக்கத்தைப் பல வருடங்களுக்கு அணைத்துப்போட்டிருந்தது அது.

இன்னொரு உண்மையும் உண்டு, இன்றுவரை பாரதிக்கு எழுதப்பட்ட வரலாறுகளால் நுட்பமாக மறைக்கப்படுவது அது. பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் அவரைச்சூழ்ந்திருந்தவர்களில் அனேகமாக எவருமே ஒரு முக்கியமான கவிஞனாக உணர்ந்தவர்கள் அல்ல என்பதுதான் அது. பாரதியுடன் இருந்த வ.ரா. பாரதியைப்பற்றிய முதல் வரலாற்று நூலை எழுதுவது பாரதி இறந்து இருபதாண்டுக்காலம் கழித்து. அப்போது பாரதி இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பதாகையாக ஆகிவிட்டிருந்தார்.

பாரதியின் குடும்ப வாழ்க்கையையும் இன்று மென்மையாக்கியே சொல்கிறார்கள். பாரதி இறந்து பல ஆண்டுகளுக்குப்பின், அவர் ஒரு புகழ்மிக்க்க அடையாளமாக ஆனபிற்பாடு, செல்லம்மாள் பாரதி தன் கணவரைப் புகழ்ந்து பேசினார். அது நூலாகவும் வந்தது. ஆனால் பாரதி அவர் குடும்பச்சூழலில் எப்படி நடத்தப்பட்டார்? பாரதி வாழ்க்கையைப்  பல்வேறு நூல்களில் இருந்து சாதாரணமாக நுண்மையாக வாசிக்கமுடியும்.

முக்கியமான நூல் கனகலிங்கம் எழுதிய எனது குருநாதர். தலித் சாதியில் பிறந்த அவருக்கு பாரதி பூணூல் போட்டுவிட்டார். அது ஒரு சாதாரணச் சடங்கு அல்ல. ஆண்பிள்ளைகள் இல்லாத பாரதி அவரைத் தனக்கு இறுதிச்சடங்கு செய்யும் புதல்வனாகவே நினைத்திருந்தார். ஆனால் கனகலிங்கத்துக்கு பாரதி மறைவுச் செய்தி பாரதியின் குடும்பத்தாலும் நண்பர்களாலும் தெரிவிக்கப்படவேஇல்லை. மூன்றாம் நாள்தான் செய்தி கிடைத்து கனகலிங்கம் பாரதி எரிந்த சுடுகாட்டுக்குச் சென்று கதறி அழுதார். மனக்கசப்படைந்த கனகலிங்கம் சிலவருடங்களில் கிறித்தவராக மதம் மாறினார்

ஆக வாசகர்,நட்பு, குடும்பம் எல்லா சூழலிலும் பாரதி மிக மிக எதிர்மறை அழுத்தம் கொண்ட சூழலிலேயே வாழ்ந்தார். அவரது கவித்துவம் முழுமைநோக்கிச் செல்லும் வாழ்க்கை அமையவில்லை. ஆயுளும் கைகூடவில்லை.

ஆம், இதெல்லாமே உண்மை. ஆனால் மீண்டும் அந்த அடிப்படை வினா. பாரதி எழுதி நமக்குக் கிடைக்கும் படைப்புகளைக் கொண்டு பார்க்கும்போது நம்மால் அவரை ஒரு மகாகவி என்று சொல்லமுடியுமா? மகாகவி என்பதை அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்தல்லாமல் அவரது படைப்பைக்கொண்டு நம்மால் நிறுவமுடியுமா?

முடியாதென்றே சொல்ல விரும்புகிறேன். உணர்ச்சிகரமாக ஒரு பாரதிபிம்பத்தை உருவாக்கிக்கொள்வது நம்முடைய இலக்கிய மதிப்பீடுகளை மிகத்தாழ்ந்த ஒரு படிநிலையிலேயே வைத்துக்கொள்ள மட்டுமே உதவும் .பெரிதிலும் பெரிது கேட்கும் சமூகமே பெரிதை அடையும்

ஜெ

[குழும விவாதத்தில் இருந்து]

முந்தைய கட்டுரையுவன் வாசிப்பரங்கு
அடுத்த கட்டுரைபாரதி -கடிதங்கள்