ஜெ,
குவெம்புவையும், ஆசானையும் கன்னட,மலையாள சூழலில் மகாகவி அல்ல என்றுவிமர்சன நோக்கில் மதிப்பிட்டுக் கூறும் பள்ளிகள் உண்டா? எனக்கு இது பற்றிஅவ்வளவாக பரிச்சயம் இல்லை.
இதற்கு ஒரு காரணம் தாகூர்,தனது வங்கக் கவிதைகளைத் தானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது; பிறகு ஆங்கிலத்தில் இருந்து அவை மற்ற மொழிகளுக்குச் சென்றன.
தாகூரின் ஆன்மிகப் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒருவித நெகிழ்ச்சி அம்சம் தூக்கலாக இருக்கிறது – அது வைணவ பக்தி இலக்கிய இயல்பு. ஆனால் பாரதிஅடிப்படையில் சாக்தன், எனவே அவனது ஆன்மீகம் எப்போதும் வீறுகொண்டதாகவேஇருக்கிறது. இந்த வேறுபாட்டை மனதில் கொண்டால், தாகூரின் ஆன்மிகநோக்குள்ள பாடல்களுக்கு சிறிதும் குறையாதவை பாரதியின் ஆன்மீகப் பாடல்கள்என்றே கருதவேண்டும்.
மிர்ஸா காலிப் கஜல்களை ஹிந்தி/உருதுவிலேயே படித்திருக்கிறேன்.. வழக்கமானகாதல்/போதை/மயக்கம்/ஷராப்/ஷபாப் கஜல் படிமங்களுக்கு அப்பால் அவரதுகவிதையில் காணக் கிடைக்கும் அம்சம் என்றால் இஸ்லாமிய மதக் கொள்கைகள்,மதவாதிகள் மீதான ஒரு irreverence. அதுவரையிலான முகலாய இலக்கியத்தில்காணக்கிடைக்காத ஒன்று என்ற வகையில் அது சிறப்பானது தான். ஆனால் அதைவைத்து உங்கள் கறாரான வரையறைப் படி, காலிப்பை கட்டாயமாக மகாகவியாக மதிப்பிடவே முடியது.
அவருக்கு ஒரு நூறாண்டு முன்னர் வாழ்ந்த தாயுமானவரின் பாடல்கள் காலிப்பின்கஜல்களை விடப் பலமடங்கு அபாரமான வீச்சும், படிமங்களும், தரிசனமும் கொண்டவை.அப்படியிருக்க, நீங்கள் எப்படித் தாயுமானவரைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்என்பது புரியவில்லை..கா.வ.பா.ப தொகுப்பில் இந்தியா பத்திரிகை பற்றி ஒரு புள்ளிவிபரம் வருகிறது- அந்த பத்திரிகையுடன் கொடுத்து மாற்றிக் கொள்வதற்காக ஏறத்தாழ 90இதழ்களை பத்திரிகாசிரியர் என்ற வகையில் பாரதி பார்த்திருக்கிறார்: 35ஆங்கில இதழ்கள், 30 தமிழ், 7-8 பிரெஞ்சு இதழ்கள், மீதி தெலுங்கு, ஹிந்திபோன்ற மொழிகளில் உள்ளவை.
பாரதி ஆங்கில இதழ்களுக்கு எழுதிய விரிவான வியாசஙக்ளும், கடிதங்களும்அவரது பார்வையின் விசாலத்தைக் காட்டுகின்றன. பெல்ஜியம், ரஷியா, சீனா,அமெரிக்கா என்று பல நாடுகளின் அரசியல் மாற்றங்களையும் மற்றி அவர்உரைநடையில் குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஃபிஜித் தீவில்தமிழர் படும் அவஸ்தையையும், தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களின்கஷ்டங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
குமரன் ஆசான் பற்றியும் மற்ற இந்திய மொழிகளில் அந்தக் காலகட்டத்தில் யார்என்ன எழுதினார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் தமிழில், பாரதிஅளவு சமகாலப் பார்வையுடன் எழுதியவர்கள் வெகு சிலரே. எனவே பாரதி குறித்துக் கூறப்படுவது “மிகையானது” என்று எப்படி சொல்கிறீர்கள்?
பாரதியின் ஆன்மிகப் பாடல்களும், குறிப்பாகக் கண்ணன் பாட்டும் நீங்கள்குறிப்பிடும் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தப் பாடல்களை விட அதிக அகவிரிவும்,தத்துவச் செழுமையும் கொண்டவை. இதற்குப் பல உதாரணங்கள் கொடுக்க முடியும்.
தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே,
நறைபழுத்த துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே..
பெருந்தேன் நிறைக்கும் மறைக்கூந்தல் பிடியே வருக,
முழுஞானப் பெருக்கேவருக..
மாதிரியான குமரகுருபரரின் வரிகளை விட
நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளின் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை..
மாதிரியான பாரதியின் வரிகள் கண்டிப்பாக அந்தரங்கத் தன்மை கொண்டவை.பாரதி தமக்குக் கிடைத்த வாழ்க்கையின் பன்முகப் பட்ட தெளிவுகளைத்தான்கண்ணன் பாட்டாக்கினார். ஆனால் கண்ணன் பாட்டு ஆழ்வார்களின் நீட்சி மட்டும்அல்ல.
மோகனரங்கன் சொல்கிறார் (பாரதிக் கல்வி, பக்-67):
தாம் ஆளாகிப் புரிந்து கொண்டும் தம்மை விஞ்சும் வியப்பை கண்னன் என்றமொழியின்றி ஒருகாலும் அவரால் தம்முள் தேக்கியிருக்க முடியாது. அதற்குப்பின்னர்தான் மற்றவர்க்குரைப்பதே. அந்த மொழியின் மூலப் பனுவல்ஆழ்வார்களிடம் இருப்பது – ‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலைஎல்லாம் கண்ணன்’. ஆனால் பாரதியின் பாவம் ஆழ்வாரின் பாவம் அன்று.
பக்திக்கும் கவிதைக்கும் பெரும் வேறுபாடு உண்டு, ஓரிழை தான்வேறுபடுத்துகிறது என்றாலும். ஆழ்வார் கண்ணன் என்ற கண்ணால் உலகைக்கண்டவர். பாரதி தாம் புரிந்து கொண்ட உலகை, கண்ணன் என்ற மொழியால் சொல்லிப்பார்த்தவர், அதுவும் தாம் உண்டாகிய, உண்டாக்கிய உலகை.
ஜடாயு
[குவெம்பு]
ஜெ.மோ,
நீங்கள் குறிப்பிடும் பிள்ளைத்தமிழ் நூல்கள் தெய்வத்தைப் பிள்ளையாகஉருவகம் செய்து பாடினாலும் “நீ தெய்வம் ” என்று தள்ளி நின்றே தரிசிக்கின்றன
ஆனால் பாரதியின் ஆவேசம் மிகப்பரவசமாய் தெய்வத்தை சட்டையைப்பிடித்திழுத்துப் பக்கத்தில் நிறுத்துகிறது.கொஞ்சுகிறது.ஏசுகிறது.கேலி செய்கிறது. நீங்கள் குறிப்பிடும் சம்பிரதாயமான வழிபாட்டுப் பாணியைப் பெருமளவு தவிர்த்தவை பாரதியின் ஆன்மீகப் பாடல்கள்.பரமஹம்சரின் பாமர பக்தியில் சித்தித்த அதே தரிசனம் பாரதியின்முரட்டு பக்தியில் மிக நிச்சயமாய்க் காணக்கிடைக்கிறது.எனவேதான் பாரதியின் ஆன்மீகக் கவிதைகளை விடுதலை இறையியல்வகைமையென மீண்டும் சொல்கிறேன்.
பாரதியின் கண்ணன் பாட்டு தருகிற தனித்தன்மையான அனுபவம்குறித்து, நான் எழுதிய எட்டயபுரமும் ஓஷோபுரமும் புத்தகத்தில்விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.கண்ணன் மேலே விழுந்து புரளாமல்அவனை மிகத் துல்லியமாகவும் துணிவாகவும்(தில்லியமாக??) அணுகும்பாரதியின் பாங்கு தமிழ் பக்தி இலக்கியத்திற்கு மிகப் புதுமையானஆக்கம்.பக்தி-ஞானம் -கம்பீரம்-கவித்துவம் ஆகியவற்றின் அபூர்வமானகலவை,கண்ணன் பாட்டு.
மரபின் மைந்தன் முத்தையா
[தாகூர்]
நண்பர்களே,
1. ஆசானோ பிறரோ மகாகவிகள் அல்ல என்று மட்டும் அல்ல முற்றிலும் நிராகரித்துக்கூட நிறையவே எழுதப்பட்டுள்ளது.
தாகூரை மிகக்கறாராக, அழகியல் ரீதியாகமுற்றிலும் நிராகரித்து, விமர்சிக்கும் ஓர் இலக்கியமரபே வங்களத்தில் உண்டு. அது தாகூர் இருந்தபோதே உருவாகி வலுவாக இருந்தது. அதுவே வங்காள நவீனத்துவத்தை உருவாக்கியது.
விமர்சனமில்லாத முழுமையான ‘செண்டிமெண்டல்’ அணுகுமுறை நானறிந்தவரை தமிழ்ப்பண்பாட்டில் மட்டுமே உள்ளது
2. பாரதி சமகால உலகசிந்தனையைச் சிமிழில் அடைத்துக்கொண்டவன் என்ற வகையில் தமிழில் பலர் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள். அப்போது உடனே பாரதி மேற்கோள் காட்டிய, விவாதித்த சமகால உலக சிந்தனையாளர்கள் யார் யார் என்ற வினா எழுகிறது. அரவிந்தர் தொடர்பால் அரவிந்தர் பெரிதும் எடுத்துப்பேசிய நீட்சேவை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.ஆனால் பெரும்பாலும் உலக சிந்தனைகள் பற்றிய எந்தவிதமான குறிப்பையும் பாரதியில் காணமுடியவில்லை.
பாரதி இதழாளர். அன்றைய இதழியல் என்பது செய்திகளை மொழியாக்கம்செய்வதே. ஆகவே சமகால உலகச் செய்திகளை தெரிந்துகொண்டிருந்தார். அவ்வளவுதான். கம்யூனிசம் பற்றி அவர் செய்தி அளவிலேயே தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை எழுத்துக்கள் காட்டுகின்றன, கொள்கைகளைப் பற்றி, தத்துவம் பற்றி பாரதி தெரிந்திருந்தார் என்பதற்கான தடயங்களே இல்லை.
நாம் ஒப்பிடவேண்டியது பாரதியின் பிற சமகால கவிஞர்களுடன் அல்ல. அதை முன்னரே சொல்லிவிட்டோம், தமிழைப்பொறுத்தவரை அவர் ஒரு முன்னோடி என்று. நாம் பாரதியை ஒப்பிடவேண்டியது அவரது சமகாலத்தவரான பிற இந்திய கவிஞர்கள், மற்றும்முன்னோடிகளுடன் மட்டுமே.
பாரதியின் சமகாலத்திலேயே வாழ்ந்தவரகளில் பலர் ஆங்கிலத்தில் சமகால உலகசிந்தனைகளைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். உதாரணம், பேரா.லட்சுமிநரசு.
தாகூர் இந்தியா முழுக்கச் செலுத்திய பாதிப்பு வெறுமே மொழியாக்கம் மூலம் என்று சொல்வது அவரை எளிமையாக நிராகரிப்பதன்றி வேறல்ல.
கவிதை அழகியல் சார்ந்து அதை இப்படி விளக்கலாம். தாகூர் கவிதைகளுக்கும் பாரதி கவிதைகளுக்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடுண்டு. பாரதி தமிழின் பதினெட்டாம் நூற்றாண்டு கவிச்சூழலில் இருந்தும் ஷெல்லியில் இருந்தும் வால்ட்விட்மனில் இருந்தும் உருவானவன்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிருந்த கவிமரபு என்பது ’கவிதை என்பது நயம்பட உரைத்தல்’ என்ற அழகியல் கொண்டது. நம்முடைய சிற்றிலக்கியங்கள் முழுக்க இந்த அழகியலை நாம் காண்கிறோம். பாரதி ஒரு கவிராயராக எழுதிய ஆரம்பப்பாடல்கள், தோத்திரப்பாடல்கள் அனைத்திலும் இதுவே ஓங்கியிருக்கிறது
ஷெல்லி கவிதையை வேகம் மூலமே சாதிக்க முயன்றவன். இருபதாம் நூற்றாண்டை எதிர்நோக்கி நின்ற இளம் இலட்சியவாத மனம் அவனுடையது. கட்டற்ற வேகமே அவன் கவிதை. அதே வேகத்தை வசனத்தில் நிகழ்த்தியவன் வால்ட் விட்மன். நேரடியாக வெளியாகும் இலட்சியவாதமும் கனவெழுச்சியுமே அவன் கவிதைகள்.
இவ்விரு மரபுகளின் கலவையாகவே பாரதியின் கவிதை அமைகிறது. மரபில் இருந்து ஷெல்லி நோக்கி அங்கிருந்து வால்ட் விடமனை நோக்கி சென்றமைந்தவை பாரதியின் கவிதைகள். ஆகவே அவை நேரடியான வேகத்தையே அடைய முயன்றன.
ஆனால் கவிதை அடுத்த காலகட்டத்துக்கு அப்போதே வந்து சேர ஆரம்பித்திருந்தது. .நவீனக்கவிதையின் பிறப்புக்காலகட்டம் அது. ’கவிதை என்பது உணர்த்துவது’ என்ற அழகியல் உருவாக ஆரம்பித்துவிட்டிருந்தது. அணிகள் இல்லாமலாகிப் படிமங்கள் முன்னால் வந்தன. வாசகன் உருவாக்கிக்கொள்ளும் ஆழ்பிரதியே கவிதையைத் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை உருவானது
தாகூரின் சிறந்த கவிதைகள் இந்த அழகியலுக்குள் வரக்கூடியவை. இந்த அழகியல் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதையில், அமெரிக்காவின் நவகவிதையில் உருவாகிவந்த காலம் அது. அந்த அழகியல் இந்தியாவுக்குத் தாகூர் வழியாக வந்தது, இந்தியாவின் மரபுடன் இணைந்தது
இந்த அம்சமே தாகூரை இந்தியாவெங்கும் கவனிக்கப்படும் கவிஞராக ஆக்கியது. இந்தியாவின் எல்லாமொழிகளிலும் தாகூரைப் போல எழுதும் கவிஞர்கள் உருவானார்கள். குவெம்பு தாகூரின் பாணியில் எழுதியவர். மலையாளத்தின் முக்கியமான கவிஞர்கள் மூவர் தாகூரின் பாணியில் எழுதியவர்கள். ஜிசங்கரக்குறுப்பு [முதல் ஞானபீடம் பெற்றவர்] பி குஞ்ஞிராமன்நாயர், வைலோப்பிள்ளில் ஸ்ரீதரமேனன்.
தமிழின் புதுக்கவிதையில் பாரதியின் பாதிப்பை விட தாகூரின் பாதிப்பு அதிகமென்பதை பலர் அறிந்திருப்பதில்லை. ந.பிச்சமூர்த்தி தமிழகதாகூர் என்றே அறியப்பட்டவர். தாகூரின் அழகியலை நெருக்கமாகப் பின்தொடர்ந்தவர்.அபி தொடங்கி ஆரம்பகாலப் புதுக்கவிஞர்கள் பலரில் தாகூரின் செல்வாக்கு உண்டு –கலாப்ரியா வரை.
ஆனால் பாரதியின் வசனகவிதையின் பாணியைப் பின்பற்றிய ஒரு கவிஞர் கூட இல்லை. அக்கவிதைகளை அங்கீகரிக்கும்போதேகூட அவற்றை நவீன கவிதை முன்னுதாரணமாகக் கருதவில்லை. ஏனென்றால் அவை ’கூறுகின்றன’ நவீனக் கவிதை ’உணர்த்துகிறது’ . பாரதியின் கவிதை ‘ஒலிக்கிறது’ நவீனக்கவிதை ’தெரிகிறது’. இந்த வேறுபாடு முக்கியமானது
பாரதி ஒரு கவிஞராக வாழ்ந்ததும் வாழ்வதும் மேடைகளில்தான். அவை அவற்றின் நேரடித்தன்மை வேகம் காரணமாக மேடையில் சட்டென்று எடுபடக்கூடியவை. ஒரு நல்ல நவீனக் கவிதையை மேடையில் மேற்கோள்காட்டமுடியாது. அதன் அமைதி அந்த கணத்தில் அத்தனை சபையினரையும் சென்று சேராது. ஆனால் செவிக்குச் சுவையான பாரதி கவிதைகள் சட்டென்று மேடையில் நிறையும். அத்தனை ரசிகர்களையும் ஒரே வீச்சில் சென்றடையும் ஆகவே மீளமீள மேடைகளில் பாரதி வாழ்கிறார்
இன்னொன்று, பாரதி இன்றைய நவீன ஜனநாயக சமூக உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளி. அன்றைய அடிப்படை ஜனநாயக தரிசனங்களை அவர் தன் வரிகளில் சொல்லியிருக்கிறார். அந்த தரிசனங்களை சொல்வதற்கான வரிகளாக அவை மெல்ல மெல்ல மாறியிருக்கின்றன. ’கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்’ போன்ற வரிகள். அவ்வரிகள் எப்போதும் மேற்கோள்காட்டப்படும்
நான் பாரதியின் இந்தப் பங்களிப்புகளை எல்லாம் முழுக்க அங்கீகரித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிக்கிறேன். நான் பேசுவது உயர்கவித்துவத்தைப்பற்றி மட்டுமே
ஜடாயு, நீங்கள் எடுத்துக்கொடுத்த பாரதியின் வரி எனக்கு ஓசையில் அமைக்கப்பட்ட வெறும் வசனம். அந்த ஓசையே மிகச்சாதாரணமானது. உன் முகத்தை எங்கும் கண்டேன் , எங்கும் உன் முகமன்றி வேறில்லை என்ற கூற்று யாப்புக்காக வளைக்கப்பட்டிருப்பதை மட்டுமே நான் அதில் காண்கிறேன்
நான் பேசிக்கொண்டிருப்பது தூய கவிதையனுபவத்தைப்பற்றி. சொல்லச்சொல்ல இனிக்கக்கூடிய, நினைக்க நினைக்க விரியக்கூடிய, காலஇடம் கடந்த கவிதையைப்பற்றி. அதைப் பலவாறாகப் பல விமர்சகர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். நீங்கள் எடுத்துக்கொடுத்துள்ள சாதாரணமான வரியைக் காண்கையில் நான் கவிதையென நினைப்பதும் நீங்கள் நினைப்பதும் வேறு வேறு எனத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை
supreme poetic utterance என அரவிந்தர் வரையறை செய்யும் உயர் கவித்துவம் ஒரு வகையில் அர்த்தமற்றது. பிறிதொருவகையில் முடிவிலாத அர்த்தம் கொண்டது. இந்த மாயமே அதன் வசீகரம். உளறலாகவும் ஞானமொழியாகவும் ஆகும் நடனம் அது
குமரகுருபரரின் இரு பிள்ளைத்தமிழ்களில் உள்ளது ஒரு மரபான பக்தி உலகம் அல்ல. கடவுளைப் பலவாறாகச் சொல்லிப் பார்ப்பது போலப் பிள்ளை என்றும் அவர் சொல்லிப்பார்க்கவில்லை.12 வயதில் சைவ மடத்தின் கட்டளைத்தம்புரானாக ஆகி வாழ்நாளின் இறுதிவரை ஒரு குழந்தையைக்கூட தொட்டுத்தூக்காத துறவி எழுதிய பிள்ளைத்தமிழில் உள்ளதுதான் தமிழின் மிகச்சிறந்த பிள்ளையனுபவம். அது இறையனுபவமாக ஆகுமிடமும் ஆகா இடமும் உண்டு.
குமரகுருபரரின் பிள்ளைத்தமிழ்வரிகளில் ஒவ்வொரு நாளும் நானறியும் பொருள்விரிவும் மொழிச்சுவையும் ஒருநாளும் நான் பாரதியில் அறிந்ததில்லை. சமகால மொழி, சமகால அரசியல் என்பதைத்தாண்டி தூய கவிதை தேடும் சிலருக்கே குமரகுருபரர் போன்ற நானூறு வருடத் தொன்மை கொண்ட பாடல்களுக்குள் செல்லமுடியும். அப்படிச் சென்று அந்தக் கவிதை கோரும் மொழிசார்ந்த கவனத்தை, பௌராணிகப்பின்னணி சார்ந்த உழைப்பைக் கொடுத்தால் அவை பெரும் கவியனுபவம் நோக்கி நம்மைக் கொண்டுசெல்லக்கூடியவை .
தேடவில்லை, சட்டென்று ஒரு பக்கத்தைப் பிரித்துக் கண்ணில்பட்ட முதல் பாட்டை எழுதுகிறேன்.
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள் ஞாளியில் ஆளியென
செருமலை செம்மலை முதலியர் சிந்த சிந்திட நந்திபிரான்
நின்றிலனோடலும் முன்னழகும் அவன் பின்னழகும் காணா
நிலவு விரிந்திடு குறுநகை கொண்டு நெடுங்கயிலைக்கிரியின்
முன்றிலின் ஆடல் மறந்து அமராடி யோர் மூரி சிலைகுனியா
முரிபிருவச்சிலை கடைகுனியச் சில முளரி கணைதொட்டு
குன்றவிலாளியை வென்ற தடாதகை கொட்டுக சப்பாணி
குடைநிழலில் புவி மகளை வளர்த்தவள் கொட்டுக சப்பாணி
[பாய்ந்து செல்லும் அம்புகள் கண்டு அஞ்சி பேய்கள், காளிகள், நாய்மேல் சிங்கம் போல செந்நிறமான வீரன் முதலியோர் குருதி சிந்த சிதறியோட; நந்தி நில்லாமல் பின் திரும்பி ஓட; அவன் முன்னழகும் பின்னழகும் கண்டு நிலவு விரிந்ததுபோல குறுநகை செய்தவளாக நெடும் கைலாய
மலையின் முற்றத்தில் இளமையிலாடிய விளையாட்டுகளை மறந்து , சமராடி அதனுள் நுழைந்து தன் போர்வில் வளையாமல் புருவ வில் வளைத்து; மலர் மொட்டு விழிகளை அம்புகளாக்கி எய்து குன்றை வில்லெனக்கொண்டவனை வென்ற கொற்றவையே சப்பாணி கொட்டுக! தன் குடைநிழலில் இந்த புவிமகளை வளர்த்தவளே சப்பாணி கொட்டுக!]
முதலில் சப்பாணி கொட்டுவதன் தாளத்திலேயே அமைந்த இதன் சந்தம் கொடுக்கும் சுவை, துல்லியமான சொல்லிணைப்புகளின் அழகு, அந்த மொழியின் ஒழுக்கில் உள்ள நெகிழ்ச்சி, அதுவே எனக்கு இதைக் கவிதையாக்குகிறது.
கைகொட்டும் ஒருவயதுப் பெண்குழந்தையை எப்படி உருவகிக்கிறது இப்பாடல். பேய்களும் காளிகளும் வீரபத்ரர்களும் நந்தியும் சிதறியோட வெற்றிச்சிரிப்புடன் கைலாய வாசலை உடைத்துத் திறந்து உள்ளே செல்பவள். அடுத்த கணமே விழிவில்லால் ஈசனை வென்றவள். அடுத்தகணமே பூமிக்கே அன்னையானவள். அந்தத் தந்தையுணர்ச்சியின் மாய வசீகரம் இதன் எல்லாப் பாடல்களிலும் உண்டு. கைக்குழந்தையை தூக்கிக் கொஞ்சி ‘என்னைப் பெத்த அம்மையில்லா’ என்று கொஞ்சும் மன நெகிழ்ச்சி. முதல் வாசிப்பில் அதுவே இதைக் கவிதையாக்குகிறது
மேலும் ஆழமாகச் சென்றால் ஒரு பாடலின் நான்கு வரிகளுக்குள் தேவி ஒன்றில் இருந்து ஒன்றாக மாறும் காட்சி இது. பிரபஞ்ச சக்தியான பராசக்தி உமையாகிறாள். உமை அம்பிகை ஆகிறாள். அத்தனையும் ஆனவள் அக்கணமே கைகொட்டி விளையாடும் குழந்தையுமாக அமர்ந்திருக்கிறள்.
சாக்த மரபின்படி பார்த்தால் நேர் தலைகீழாகச் சொல்லியிருக்கிறார். அம்பிகை உமை ஆதிபராசக்தி என்று வரவேண்டும். ஆனால் இங்கே கைக்குழந்தையாக அவள் மடியில் அமர்ந்திருக்கிறாள் என்பதனால் எல்லாமே மாறிவிட்டிருக்கிறது.
நாம் ஒரு கடலின் கரையில் அமர்ந்திருக்கிறோம் ஜடாயு. அந்தப் பெருமரபே நமக்கான அளவுகோல்களை உருவாக்குகிறது. அவ்வாறு ஏன் பெரிய அளவுகோல்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும்? அப்போதுதான் நாம் இன்னும் இன்னும் என தேடிச்செல்லமுடியும். அந்தத் தேடலே நம் களஞ்சியத்தில் நிறைந்துகிடக்கும் செல்வக்குவைகளை நோக்கிக் கொண்டுசெல்லமுடியும். வெளியே சிந்திக்கிடக்கும் ஒற்றை நாணயத்துடன் நிறைவடையாமல் இருக்கவே அந்த எதிர்பார்ப்பு தேவையாகிறது
மோகனரங்கன் அவ்வரிகளில் சொல்வது ஒரு வெற்று சொல்லாட்டம். அதுவும் ஒரு மேடைப்பேச்சு முறையில். இதைப்போல எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. நான் எதிர்பார்ப்பது சுயமான கவித்துவ அனுபவத்தில் இருந்து வெளிவரக்கூடிய, அல்லது அழகியல் சார்ந்த புறவய தர்க்கத்தை உருவாக்கக்கூடிய , உரையாடலை.
பெரியாழ்வாரின் கண்ணன் முதன்மையாக பரம்பொருள் அல்ல, மடியில் தவழும் குழந்தையேதான். அது கண்ணனாக விரியும் மன உச்சம் நிகழ்கிறது அவரில். பாரதி ‘கூலி மிக கேட்பார்..’ என ஆரம்பித்து சில சர்வ சாதாரணமான அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்ணன் மீது ஏற்றிக்கூறினார் என்பதனால் அதைவிட இது கீழே நிற்கிறதே ஒழிய அந்தக் கவித்துவத்துக்கு மாற்றாக அமைவதில்லை
ஜெ
அன்புள்ள ஜெ
கண்ணன் பாட்டை மேலோட்டமான சொற்களின் அடுக்குகள் என்பதுபொருந்தாத வாதம்.ஒரு வேலையாளின் இயல்புகளை சொல்வது போல்கவிதை தொடங்கினாலும்,போகப்போக கண்ணனை வேலையாளாகஉருவகப்படுத்தும் போதே அவனுடைய பணிவையும் பரம்பொருள்தன்மையையும் ஒருசேரச் சுட்டுகிற அற்புதம் பாரதியில் நிகழ்கிறது.
நினைவிலிருந்து எழுதுகிறேன்:
’மாடுகன்று மேய்த்திடுவேன்;மக்களைநான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்’
என்பது கண்ணன் உயிர்களின் மேய்ப்பன்.கல்மழையிலிருந்துமக்களைக் காத்தவன்,உள்ளத்தைத் தூய்மை செய்து கீதைஎனும் ஞான விளக்கினை ஏற்றியவன்,பாஞ்சாலியின் துகில் தந்தவன்என்றும் பொருள்கொள்ள இடமளிக்கிறது.இதுதான் நீங்கள் சொன்ன நவில்தொறும் நூல்நயம்.
’சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்.
இன்றளவும் குழந்தைகளுக்குப் பிரியமான கடவுள் கண்ணன்.
’காட்டுவழியானாலும் கள்ளர்பயமானாலும்
சிரமங்கள் பார்ப்பதில்லை;தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமல் காப்பேன்
இவ்வளவு பணிவாய் கடவுள் அபயக்கரம் காட்டுவது வேறெங்காவது
உண்டா??
கற்றவித்தை ஏதுமில்லை காட்டு மனிதனய்யே
கடவுள் எல்லாவற்றையும் உருவாக்கினார்.எனவே கற்க வேண்டியவரல்ல.
’என்றுபல சொல்லிநின்றான்;என்னபெயர் சொல்லென்றேன்
ஒன்றுமில்லை ! கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னையென்றான்’
கடவுளுக்கு ஓரூரும் ஒருபேரும் இல்லை. ஒருநாமம் ஓருருவம் இல்லானுக்கு திருநாமம் பல சொல்லித் தெள்ளேணம் கொட்டுகிறோம்.
வேலைவாய்ப்பு கேட்டு வருகிற கடவுளை பாரதி ஒரு வேலையாளைப்போலவே எடைபோடுகிறான்.
“கட்டுறுதி உள்ள உடல் கண்களிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல்-ஈங்கிவற்றால்
தக்கவன் என்றுள்ளத்தே சார்ந்தபல மகிழ்ச்சியுடன்
மிக்கவுரை கூறி விருதுபல சாற்றுகிறாய்
கூலியென்ன கேட்கின்றாய் கூறுகென்றேன்’
இனி சம்பளம் பேச வேண்டும்.இங்கேதான் மெத்தப் பணிவாகப்
பேசும் இந்தக் காட்டுமனிதனின் கடவுட் தன்மையும் கடவுளின்
அடிமனதில் காலகாலமாய் உறைந்திருக்கும் ஏக்கமும் வெளிவருகிறது.
’நானோர் தனியாள்! நரைதிரை இலாவிடினும்
ஆன வயதிற்கு அளவில்லை;தேவரீர்
ஆதரித்தால் போதும் அடியேனை-நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்கு காசு பெரிதில்லையென்றான்’
கடவுள் தனியானவன்.அவன் காணிக்கை கேட்பதில்லை.காதலைத்தான் கேட்கிறான்.தன்னிடத்தில் தன்னைத் தவிரஇன்னொன்று கேட்காத தூய உள்ளத்திடம் வீட்டில்
வேலைக்காரனாகவும் வரக் காத்திருக்கிறான்.
இந்த தரிசனம் வேறெந்த எழுத்திலும் நான் கண்டதில்லை.ஆழ்வார்களுக்கு கண்ணன் தெய்வம்.குழந்தைத் தெய்வம்.
பாரதிக்கோ வேலையாள்.எதுவும் கற்கத் தெரியாத முட்டாள் சீடன்போல்வந்து எல்லாம் கற்றுத் தருகிறவன் (ஜெயகாந்தனின் குருபீடம் சிறுகதை
இங்கே நினைவுக்கு வருகிறது).
’பல்வகை மாண்பினிடையே கொஞ்சம் பயித்தியம் அடிக்கடித் தோன்றுவதுண்டு- என்று செல்லமாக சலித்துக் கொள்ளக் கூடியதந்தை. ‘/உண்ண உண்ணத் தெவிட்டாத முலையமுது தருகிற ,பிள்ளை வேடிக்கை பார்த்து சிரிக்கவென்றே ’கோத்த பொய் வேதங்கள்,மூத்தவர் பொய்நடைகள்,இளமூடர்தம் கவலைகள்’ஆகிய வேடிக்கைகளைக் காட்டுகிற தாய்.
’காமனைப் போன்ற வடிவமும்-இளங்காளையர் நட்பும் பழக்கமும்-கெட்டபூமியைக் காக்கும் தொழிலிலே எப்போதும் செலுத்திடும் சிந்தையும்-ஆடலும் பாடலும்’ மிகுந்திருந்தாலும் உண்மைப் பொருளுணர்ந்த சத்குரு.
கண்ணன் பாட்டின் புத்தம் புதிய உத்திகள் பக்தி உலகுக்கு மட்டுமல்ல தத்துவ உலகுக்கும் தனித்தன்மை வாய்ந்த கொடை
இன்றைக்கும்.
மரபின் மைந்தன்.
அன்புள்ள முத்தையா,
பாரதியின் கண்ணன்பாடல்களை நான் மேலோட்டமான சொல்லடுக்கு என்று சொல்லவரவில்லை. சொல்லாத விஷயத்துக்கு பதில் வேண்டாம். நான் ஆரம்பத்திலேயே பாரதியில் உயர்கவித்துவம் கைகூடியிருக்கும் சில பகுதிகளில் கண்ணன் பாடலையும் சேர்த்திருக்கிறேன். ஆனால் பல கண்ணன்பாடல்கள் சாதாரணமான செய்யுட்கள் என்றும் நினைக்கிறேன்.
இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது பாரதியின் கவிதைகளில் அமரத்துவம் வாய்ந்த பெருங்கவிதைகள் எவை எவை என. அவ்வகைக் கவிதைகள் எனப் பேச்சுவரும்போது அவர் எழுதியவற்றில் மிகப்பெரும்பாலான சமூகம், அரசியல் கவிதைகளைத் தவிர்த்து வேதாந்தக் கவிதைகளையே நீங்களும் ஜடாயுவும் எடுத்துக்காட்டுகிறீர்கள் என்பதை நான் சுட்ட விரும்புகிறேன்.
ஆனால் தமிழ்நாட்டு மேடைகளில் பாரதியை இன்றும் வாழவைத்துக்கொண்டிருப்பவை அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களை வேகமான மொழியில் சொல்லும் மேற்கோள் கவிதைகள் மட்டுமே. பாரதி மறைவுக்குப்பின், இந்திய சுதந்திரப்போராட்டக்களத்தில் காந்தி உள்ளே வந்து சுதந்திரப்போர் ஒரு மக்களியக்கமாக உருவானபோது, சத்தியமூர்த்தி போன்றவர்களால் ஆவேசமாக மேடைகளில் பாடப்பட்டதன் வழியாகவே பாரதி பிரபலமைடைந்தார். வாழும்காலத்தில் அவர் நூல்கள் விற்கவில்லை. அவரது கவிதைகள் பரவலாக மக்கள்கவனமும் பெறவில்லை.
சுதந்திரப்போராட்ட காலத்தின் அலையால் கவனிக்கப்பட்ட பாரதி கவிதைகள் ‘வெள்ளைநிறமொரு குட்டி’ போன்ற வகைப் பாடல்களே. இன்றும் அவையே அதிகம்பேர் அறிந்த கவிதைகள். அதன்பின் இடதுசாரி இயக்கம் பாரதியை மேடைகளில் முழங்க ஆரம்பித்தது. ’தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால்’ வகை கவிதைகளை. இவ்விரு தரப்புகளையும் தவிர்த்துவிட்டு பாரதி கவிதைகளைப் பேச முடியாதென்பதே உண்மை.
நீங்களே அவ்வகைக் கவிதைகளைக் கணக்கில்கொள்ளவில்லை என்பதில் மகிழ்ச்சி. எஞ்சிய வேதாந்தக் கவிதைகளை, பக்திபாவக் கவிதைகளையே பாரதியின் சாதனைகளாக முன்னிறுத்துகிறீர்கள். நானும் அவற்றில் உயரிய கவித்துவம் வெளிப்படும் முக்கியமான கவிதைகள் பல உள்ளன என்பதை மறுப்பவன் அல்ல. நான் கேட்பது இரண்டு கேள்விகளையே. ஒன்று அத்தகைய கவிதைகளின் எண்ணிக்கை என்ன? இரண்டு, அவற்றில் வெளிப்படும் மெய்யியலில் பாரதிக்கே உரிய பங்களிப்பென்ன?
அத்தகைய கவிதைகள் மிகச்சிலவே. நீங்கள் சொல்லும் கவிதைகளை நானே சொல்லிவிட்டேன். அதன்பிறகே இவ்விவாதத்தை ஆரம்பித்தேன். அக்கவிதைகளின் வேதாந்த தத்துவ உள்ளடக்கம் என்பது அன்றைய இந்தியாதழுவிய நவவேதாந்த விவாதத்தின் ஒரு சிறு எதிர்வினை மட்டுமே என்று சொல்கிறேன். அவற்றின் அழகியல் ஆழ்வார்பாடல்கள், ஜெயதேவ அஷ்டபதி ஆகியவற்றில் இருந்து முன்னகராதது என்கிறேன்.
இவையே என் கருத்துக்கள். நான் விவாதிக்க விரும்புவது இவற்றைப்பற்றியே. ஆனால் நீங்கள் பாரதியின் வரிகளை எடுத்து இவ்வரிகளில் இந்த உணர்ச்சிகளைப் பெற்றேன் என்ற அளவிலேயே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
ஜெ
[குழும விவாதத்தில் இருந்து
தொடரும்