ஜெ,
மலையாளத்தின் மகாகவி குமாரனாசானின் “கவிதைகள்” எந்த அளவுக்குதீவிர இலக்கிய உரைகல்லில் தேறும்?
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய/தமிழக சூழலில் “கவி” என்ற சொல்ஒட்டுமொத்தமாக இலக்கியம் படைப்பவனை, சிந்தனையாளனை, எழுத்தாளனைக்குறித்தது (இதுவும் ஒரு மரபு சார்ந்த விஷயம்; வேத ரிஷிகளைக் கவிகள் என்றேநாம் அழைத்தோம்). இலக்கியத்தின் இத்தனை வடிவங்கள் பற்றிய பிரக்ஞை அப்போதுஇல்லை. இதை வைத்தே தமிழின் மாபெரும் பன்முக எழுத்துலக ஆளுமையான பாரதியை“மகாகவி” என்று ஒருசாரார் அழைத்திருக்கலாம். அது அப்படியே நிலைபெற்றுவிட்டது.
எனவே, ஒட்டுமொத்த இந்திய சூழலையும் வைத்துப் பார்க்கும்போது பாரதிக்குஇந்தப் பட்டம் பொருத்தமானது தான். சொல்லப் போனால், பாரதியை விட வேறு எந்த நவீனத் தமிழ்ப் படைப்பாளிக்கும் அந்தப் பட்டம் பொருந்தாது. யாரை நாம்முன்னிறுத்தியிருக்க முடியும் – ந.பிச்சமூர்த்தியையா அல்லது புதுமைப்பித்தனையா?
சரி, அதை விடுங்கள்.
உங்களது ‘கவிதை’ நோக்கில், கவிதை வாசிப்பில், தமிழில் கம்பனுக்குப்பிறகு யார் மகாகவி என்று நினைக்கிறீர்கள்? அதையும் தான் சொல்லுங்களேன்.பாரதி மகாகவி இல்லை என்றால், வேறு பெயர்களை சொல்லியே ஆகவேண்டும்.இல்லையென்றால் நவீன மகாகவி தோன்றாத மொழி என்ற அவச்சொல் தமிழுக்குஏற்படும்!
அன்புடன்,
ஜடாயு
நண்பர்களுக்கு
குவெம்பு பற்றி நாம் நினைக்கும் அதே சித்திரத்தையே பாரதியைப்பற்றி மலையாளிகளும் கன்னடர்களும் கொண்டிருக்கிறார்கள். பாரதி கவிதைகள் மலையாளத்தில் மூன்றுவெவ்வேறு கவிஞர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. என் நோக்கில் சாத்தியமானவரை சிறந்த மொழியாக்கங்கள் அவை. மலையாளத் திறனாய்வாளர்களும் வாசகர்களும் அவற்றை சர்வசாதாரணமான கவிதைகள் என்றே இன்றுவரை மதிப்பிட்டிருக்கிறார்கள். அதே சமயம் பாரதி ஒரு பாடலாசிரியராக என்றுமே கேரள இசைமேடைகளில் பிரபலமாக இருக்கிறார். சினிமாக்களிலும் அதைப்பார்க்கலாம். அவரது கவித்துவ மதிப்பு மிகக்குறைவு என்பதே பரவலான எண்ணமாக இருக்கிறது
ஆனால் சங்கப்பாடல்கள் மொழியாக்கமே செய்யப்படாமல் வெறும் அர்த்தம் மற்றும்மூலவரிகளுடன் நென்மாற வாசுதேவன் நாயரால் மொழியாக்கம் செய்யப்பட்டன. கம்பராமாயணம் வசனமாகவே மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆழ்வார் பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவையெல்லாம் நல்ல வாசகர் நடுவே ஆழமான மனப்பதிவை உருவாக்கின. அங்குள்ள கவிதைகளையும் பாதித்தன. மொழியாக்கம்செய்யப்பட்டுச் சென்ற சங்கப்பாடல்கள் கன்னடக்கவிதையில் மிகப்பெரிய அலையை உருவாக்கின. சங்க இலக்கிய அழகியல் பற்றிய முக்கியமான கட்டுரைகள் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளன.
கன்னடத்தில் பாரதி மொழியாக்கம்செய்யப்பட்டபோது அனந்தமூர்த்தி சுந்தர ராமசாமியிடம் அவை ஏன் கவிதைகளாகக் கருதப்படுகின்றன என்று கேட்டதாக சொன்னார். அனந்தமூர்த்தி மேடையிலும் அதைச் சொல்லியிருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே எங்கும் நல்லவாசகர்களால் பாரதி முக்கியமான கவிஞராகக் கருதப்பட்டதில்லை.
ஆனால் தாகூர் இந்தியா முழுக்க சீரான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். இன்றும் அந்தப்பாதிப்பு நீள்கிறது. என் கணிப்பில் கண்டிப்பாக தாகூர் பாரதியை விட மேலான கவிஞர்தான்.தாகூர் மகாகவிதான். தாகூரின் ஏராளமான கவிதைகள் மொழியாக்கத்தின் இழப்பைத் தாண்டியும் படிமத்தின், தரிசனத்தின் வல்லமையால் இன்றும் தீவிரமான தாக்கத்தை உருவாக்குவதாக உள்ளன. இதை நாம் கொஞ்சம் திறந்த மனத்துடன் அணுகவேண்டும் என்பதே என் எண்ணம். தாகூரின் தனிக்கவிதைகள், அவரது கவிதைநாடகங்கள் ஆகியவற்றில் மிகச்சிறந்த கவித்துவம் வெளிப்படுகிறது. இந்திய வைணவ பக்தி கவிதைமரபுக்கும் ப்ரிட்டிஷ் கற்பனாவாத கவிதைமரபுக்கும் இடையேயான அற்புதமான முயக்கங்கள் அவை.
உரைநடையில் தாகூரின் பாதிப்பு மிக முக்கியமானது. பாரதி எழுதியது போல ஏராளமான எளிய இதழியல் எழுத்துக்கள் தாகூராலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் நாவல், சிறுகதை, பயணக்கட்டுரை, குறுங்கட்டுரை, வசனகவிதை ஆகிய தளங்களில் தாகூர் உருவாக்கிய கவித்துவமும் அழகும் பாரதியை விட பலமடங்கு பெரியவை. நவீன இந்திய கவிஞர்களில் தாகூர் ஒருவரே மகாகவி.
குவெம்பு கவிதைகள் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்படவில்லை. தமிழ் மொழியாக்கத்தை விட மலையாள மொழியாக்கங்கள் மேலானவை. குவெம்புவின் தேசிய இயக்க பாடல்கள் ‘செந்தமிழ்நாடென்னும் போதினிலே’ போன்றவை. ஆனால் இயற்கைவருணனை மட்டுமேயான கிராமியக் கவிதைகள் முக்கியமான கவிதையனுபவம் அளிக்கக்கூடியவை. ஆனால் அனைத்தையும் விட முக்கியமானவை அவரது காவியநாடகங்கள்.
மகாகவி என்பவன் எளிதில் தோன்றுபவன் அல்ல. எல்லாக் காலகட்டத்துக்கும் எல்லா மொழிக்கும் மகா கவி இருந்தாகவேண்டுமென்பதும் இல்லை. மலையாளத்திற்கு மகாகவி என்று எவரும் இல்லை — குமாரன் ஆசான் மிக முக்கியமான கவிஞர் அவ்வளவே. இந்திய மொழிச்சூழலில் இருந்து நமக்கு கிடைக்கும் மகாகவி என்றால் தாகூருக்கு முன்னால் மிர்ஸா காலிப் தான்.
ஆனால் ஆசான் பாரதிக்குச் சமகாலத்தில் எழுதிய அரசியல் கட்டுரைகளையும் சட்டசபை உரைகளையும் பாரதியின் உரைநடைக்கட்டுரைகளுடன் ஒப்பிட்டால் ஆசானுக்கு பாரதியை விட விரிவான அரசியல் வாசிப்பும் சிந்தனையும் இருப்பதைக் காணலாம். ஆசான் சமகால ஐரோப்பிய அரசியல் சிந்தனையாளர்களான ஜெ.எஸ்.மில். கார்லைல் போன்றவர்களில் தொடங்கி அனைவரையும் கவனித்திருக்கிறார். பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆராய்ந்திருக்கிறார். சர்வதேச மானுட உரிமைப்போராட்டங்களை வாசித்திருக்கிறார். அமெரிக்க உள்நாட்டுப்போர் முதல் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் வரை பல விஷயங்களை எழுதியிருக்கிறார். எமர்சன் தோரோ போன்றவர்களை வாசித்து மேற்கோள்காட்டியிருக்கிறார். வரும்கால இந்தியாவின் ஜனநாயகம் பற்றி ஆசானின் சிந்தனைகளும் கோரிக்கைகளும் மிக ஆழமானவை, தீர்க்கதரிசனம் கொண்டவை. அதேசமயம் பாரதியிடம் சமகால ஐரோப்பிய சிந்தனையாளர்களைப்பற்றிய குறிப்புகளை அனேகமாகக் காண முடியாது. இன்று பாரதியின் உரைநடைக் கட்டுரைகளை வாசிக்கையில் மிகப்பெரும்பாலானவை சாதாரணமான இதழியல்செய்திகள் என்ற எண்ணம் எழுகிறது
[ நான் என் தமிழ் மகாகவிகளின் பட்டியலை முன்னரே எழுதிவிட்டேன் ஜடாயு]
ஜெ
ஜெ
விவாதத்தில் எனக்கிருக்கும் ஐயம்.குவெம்பு மொழிபெயர்ப்பு சரியில்லைஎன்கிறீர்கள்.மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதியார் கவிதைகளின் தரம் குறித்து அக்மார்க் முத்திரை ஏதும் உண்டா?
ஆன்மீகப் பாடல்கள் வெறும் செய்யுள்கள் என்கிறீர்கள்.அவை விடுதலை இறையியல் வகைமையைச் சார்ந்தவை என்று சொல்லும் அளவு தெய்வத்துடன் நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகின்றன என்றுஎண்ணுகிறேன்.
பாரதியின் இறையணுக்கம் மிக முக்கியமான கூறு.வெறும் தோத்திரம்/செய்யுள் என்று புறந்தள்ள முடியாத தீவிரத்தன்மை கொண்டவை அவரது
ஆன்மீகப் பாடல்கள்.
ஆவுடையக்காள் பற்றிய ஒப்பீட்டில் இன்னும் ஒரு விஷயம்.ஆவுடையக்காள் முறையான மந்திரோபதேசம் பெற்றவர்.குருவிடம்சரணடைகிற மனோபாவம்.(சப்மிஷன் ஆடிட்யூட்) அவரிடம் அதிகம்.அதுமட்டுமின்றி வேதாந்த ரகசியங்களை உட்கிடையாகக் கொண்டுபாடும் பூடகமான நடை அவருடையது.
பாரதி வெடிப்புறப் பாடும் இயல்பினர்.அவருக்கு சில சாமியார்களுடன் தொடர்பிருந்தது.சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தன.அவர்களை விதந்து போற்றினாலும் பாரதி அவர்களை சஹிருதயர்களாகவே நடத்தவும் பழகவும் செய்திருக்கிறான் .மண்வெட்டிக் கூலிதினல் ஆச்சேபாடல் நீங்கலாகப் பிறவற்றில் ஆவுடையக்காள் சாயல் இருப்பதாகசொல்லவியலாது.கும்மிப் பாடல்களெல்லாம் தமிழில் முன்னரே எக்கச்சக்கம்.நாஞ்சில் கட்டுரையில் வரும் மேற்கோள்கள் சார்ந்தஒப்பீடுகள் பெருமளவு மிகையுணர்ச்சி கொண்டவை.
மரபின்மைந்தன் முத்தையா
முத்தையா,
உங்கள் தரப்பு தீவிரமான எதிர்வாதங்களுடன் இருக்கிறது, அதற்கு நன்றி.
குவெம்பு மொழியாக்கம் சரியில்லை என நான் சொல்வது குவெம்புவின் கவிதைகளை காசர்கோடு வாழ் கன்னடர்கள் மொழியாக்கம் செய்து மலையாளத்தில் வாசிப்பதற்கும் தமிழில் வந்த மொழியாக்கங்களை வாசிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு. பாரதியார் மொழியாக்கம் நன்று என்று சொல்வது மூலத்தையும் மொழியாக்கத்தையும் வாசிக்கக்கூடியவனாக இருப்பதனால்.
ஆன்மீகப்பாடல்களை மதிப்பிடுவதில் எனக்கிருக்கும் புறவயமான மதிப்பீடு இதுதான். தோத்திரங்கள், பக்திப்பாடல்கள், வேதாந்தப்பாடல்கள் ஆகியவற்றில் நமக்கு ஒரு மரபு இருக்கிறது. அதில் பெரும் செல்வம் நம்மிடம் இருக்கிறது
ஒரு புதிய கவிஞன் அதிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டு இன்னொரு தளத்தைத் திறக்கிறான் என்பதைச்சார்ந்தே என் அளவுகோலில் அவன் முக்கியமானவனாக ஆகிறான். பாரதியின் தோத்திரப்பாடல்களில் மிக அபூர்வமான சில வரிகளைத் தவிர்த்தால் அவை மரபான குரலில் மரபான மனநிலைகளை மரபான அணிகளுடன் சொல்பவையாகவே இருக்கின்றன என்பதே என் எண்ணம்.
பாரதியின் சுதந்திரப்பாடல்களில், சமூகப்பாடல்களில் தெரியும் நவீன மனம் அந்த தோத்திரப்பாடல்களில் பெரும்பாலும் தெரிவதில்லை.அவரது சமகாலத்தை வைத்துப்பார்த்தால் அது மிக ஆச்சரியமளிப்பது
பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது இந்தியாவில் மரபான மத உருவகங்களில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்த காலகட்டம். தத்துவ மதமான பௌத்தம் மீட்டெடுக்கப்பட்டது. அந்த பௌத்தம் குமாரனாசான் போன்றவர்களில் உருவாக்கிய தாக்கம் மிகத்தீவிரமானது. அதற்கு முன்னரே வேதாந்தம் மறுமொழிபுக்கு உள்ளாகியது. இவை உருவாக்கிய மெய்யியல் விவாதம் காரணமாக நம்முடைய சம்பிரதாயமான இறையுருவகம் மாறுபட்டது.
இந்திய அளவில் ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு, ராமலிங்க வள்ளலார் என ஏராளமான தத்துவஞானிகளின் காலகட்டம். இக்காலகட்டத்துக் கவிஞர்கள் அனைவரிலுமே இவர்களின் பாதிப்பு உண்டு. இறைவனைப்பற்றிய சம்பிரதாயமான வர்ணனை, வேண்டுதல்களுக்கு அப்பால் அவரை ஒரு பிரபஞ்சசாரமாக , புல்லிலும் புழுவிலும் தெரியும் முடிவிலா ஆற்றலாக எல்லாம் அணுகும் பார்வையை இந்தக்கால இந்திய மறுமலர்ச்சிக்கவிஞர்கள் அனைவரிலும் காணலாம். இதை நான் ஆழ்நிலை அம்சம் என்பேன் [Transcendental element]
அந்தநோக்கு பாரதியின் வசனகவிதையில் உள்ளது. மிகக்குறைவான அளவுக்கு, சாதாரணமாக மரபின் எல்லா கவிஞர்களிடமும் தென்படும் அளவுக்கு, மட்டுமே பாரதியின் தோத்திரப்பாடல்களில் அந்த ஆழ்நிலை அம்சம் காணக்கிடைக்கிறது. எனக்கு ஒரு நவகவிஞனிடம் வேண்டியது அந்த நவீன நோக்கே. சம்பிரதாய வழிபாட்டு பாணி அல்ல.
என் வாசிப்புக்கு பாரதியின் பெரும்பாலான தோத்திரக் கவிதைகள் அந்தரங்கமான இறையனுபவ வெளிப்பாடுகளாக இல்லை. அவை மரபான செய்யுட்களாகவே ஒலிக்கின்றன. அவற்றில் உள்ளதை விட தீவிரமான அக எழுச்சியை நான் மரபிலேயே பெற்றுவிட்டேன். முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழிலும் மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழிலும் உள்ள அந்தரங்கமான இறையனுபவம் பாரதியின் கண்ணன்பாட்டில் உள்ளதை விட தீவிரமானது. பிரபஞ்ச அனுபவமும் மானுடவாழ்வனுபவமும் ஒன்றாக மொழியில் நிகழ்வதன் அற்புதம் அது
ஜெ
ஜெ,
பாரதியின் கண்ணன் பாட்டு ஆழ்வார்கள் பாடியதன் நீட்சி என்பதாகக்கொள்ள இயலாது.கண்ணன் என்னும் கருத்துருவை வெவ்வேறு வகையாகத் தொடர்புபடுத்திக் காணும் சுய உத்தியே கண்ணன் பாட்டின்வெற்றி.தேவார மூவர் சிவனை தரிசித்ததற்கும் மாணிக்கவாசகர் தரிசித்ததற்கும் இருக்கும் நுட்பமான வேற்றுமையை ஆழ்வார்கள்காட்டும் கண்ணனிடமிருந்து வேறுபட்டு நிற்கும் பாரதியிடம் காணலாம்.
இனி பாரதியின் வரிகள் படைப்பு மனதுக்குள் புகுந்து பேசாப் பொருளைப்பேசுபவை.பாரதி கவிதாமண்டலம் என்றொரு வரிசை தோன்ற அதுவேகாரணம். பாரதியை வாசித்தவர்களின் மனங்களுக்குள் புலரும் புதிய வானம் ,புதிய வெளி ஆகியனவே பாரதியை இன்னும் நெருக்கமாய் உணர்த்துபவை.பாரதி வரிகளிலேயே சொல்வதானால்”பள்ளத்திலே நெடு நாளழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் வெள்ளத்தைப்போலருள் வார்த்தைகள்”கொண்டு வந்தவன் அவன்.”நவகவிதை”என்னும் தரிசன மரபின் அதிமுக்கிய ஆளுமையும் அவனே
நீங்கள் தந்த சுட்டியின் சில பகுதிகள்:
’அக்காவையும் பாரதியாரையும் மதிப்பிடும்போது நாம் பெரிதும் கவனமாக இருக்க வேண்டும். ஞானத்தைப் பற்றிய தெளிவை மக்களிடையே பரவச் செய்வதில் அக்காவுக்கு எந்த அளவுக்குத் தீவிரமான எண்ண மிருந்ததோ, அதே அளவுக்கு தீவிரமான எண்ணம் பாரதி யாரிடமும் இருந்தது
’ஒரே ஆயுதத்தை இருவரும் பயன்படுத்தினார்கள் என்கிற ஒரே அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு இருவரையும் இணைத்துப் பார்க்கவேண்டிய தேவையில்லை. இருவரும் இயங்கிய தளங்கள் வேறுவேறானவை. இருவரும் தன்னளவில் தனிப்பட்ட ஆளுமைகள்.’ [பாவண்ணன்]
மரபின்மைந்தன் முத்தையா
அன்புள்ள முத்தையா,
ஆவுடையக்கா இங்கே சுட்டப்பட காரணம் அவரிலிருந்து பாரதி உருவானார், அவரும் பாரதியும் ஒன்று என்று சொல்வதற்காக அல்ல. பாரதியின் கவிதைபாணி முன்னுதாரணம் இல்லாதது, அவரே உருவாக்கியது என்ற கூற்றுக்கு எதிரான சான்றாதாரமாகவே. பாரதி அவர்காலகட்டத்தின் பலகவிஞர்களிடமிருந்து உருவாக்கிக்கொண்டதே அவரது கவிதைபாணி.
இறையாற்றலை நாயக,நாயகி பாவத்தில் பாடுவதென்பது மிகமிகத் தொன்மையான கவிமரபு. இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும். இறைவனைக் குழந்தையாகக் கண்டுபாடுவதற்கும் மகத்தான முன்னுதாரணங்கள் உள்ளன. பெரும் பித்துக்கும் ஞானத்துக்கும் நடுவே ஊசலாடும் பாடல்கள். நாம் அந்த வரிசையில் வைத்தே பாரதியை அணுகவேண்டும். அதை அவருக்கு முன்னுரை வழங்கிய வ.வே.சு.அய்யர் செய்கிறார் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன்
அது பாரதி உருவாக்கிய புதிய வழி அல்ல. அது பாரதியின் அந்தரங்க அனுபவமா என்று கேட்டால் அந்த அனுபவநிலையில் நின்று அவர் வேறு கட்டுரைகள் எழுதியதில்லை, அவர் அந்த உபாசனா நிலையில் வாழ்ந்ததில்லை என்பதுவே சாட்சியமாகும். கண்ணன் பாட்டுக்கு வெளியே அந்த உபாசனைநிலை வேறெங்கும் தெரியவில்லை. ஆகவே ஆயிரமாண்டுக்கால பழக்கமுள்ள ஒரு மரபைத் தானும் கடைப்பிடித்து எழுதியிருக்கிறார் என்று கொள்வதே நல்லது. அதுவன்றி மிகையாக அவர் மேல் அவற்றின் உணர்ச்சிநிலைகளை ஏற்றவேண்டியதில்லை
மேலும் இந்த பாவபக்தி என்பது தமிழில் பாரதிக்குசமமான காலகட்டத்தில் பெரும்பாலான சித்தர்கள், நாடோடிக்கவிஞர்களின் மரபாகவும் இருந்தது. பாரதிக்கு சிலகாலம் முந்தையவரான குணங்குடி மஸ்தான் சாகிபு கூட நாயகி நாயக பாவங்களில் அல்லாவைப்பற்றிப் பாடியிருக்கிறார். அவ்வாறு பாரதிக்கு உடனடியாக பல முன்னோடிகளை காணலாம். நீங்கள் எடுத்துக்காட்டிய பாரதி வரிகளுக்கு நிகரான எத்தனையோ வரிகளை. அவர்களை எல்லாம் மங்கலாக்கியபின்னரே பாரதிக்கு ஒரு அபூர்வத்தன்மையை நீங்கள் ஏற்றமுடியும். சென்ற அரைநூற்றாண்டில் பாரதி மீண்டும் மீண்டும் அடிக்கோடிடப்பட்டுப் பேசப்பட்டு, பிறர் வாசிப்பிலிருந்து பின்னகர்த்தப்பட்டு, அவன் காலகட்டத்து சம்பிரதாய நிலையில் பாடியவற்றைக்கூட அவரது அபூர்வ நிலைகளாகச் சித்தரிக்கும்போக்கு இங்கே வேரூன்றியிருக்கிறது
கண்ணன் என்னும் கருத்துருவை வெவ்வேறு வகையாகத் தொடர்புபடுத்திக் காணும் சுய உத்தி என நீங்கள் சொல்வது ஆச்சரியமளிக்கிறது. பெருமாளை பாவபக்தி நிலையில் நின்று உறவுகளாக தரிசிக்கும் உச்சநிலை கவிதைகளை நான் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்திலேயே கண்டிருக்கிறேன். அஷ்டபதியில் கண்டிருக்கிறேன். அதை முதலிலேயே சொல்லியும் விட்டேன். பாரதி அதையே எழுதிப்பார்த்திருக்கிறான். கண்ணனை சேவகனாகக் காணும் கவிதை போன்ற சில மட்டுமே உபரியானவை. அவை வெறும் பேச்சுகளாகவே எனக்குப்படுகின்றன
கண்ணன்பாட்டுகளுக்கு முன்னுரை எழுதிய வ.வே.சு.அய்யர் பாரதி அந்த பாவநிலையில் பல இடங்களில் ரசச்சறுக்கலைச் செய்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அதையே நானும் நினைக்கிறேன். பாவ நிலையில் இருந்து இறங்கி சாதாரண லௌகீக நுட்பங்களாக இறங்கும் பாடல்களாகவே கண்ணன்பாட்டில் பல பாடல்கள் உள்ளன. அதிலுள்ள நாயக, நாயகிபாவ பாடல்களில் மட்டிலுமே கவித்துவம் நிகழ்ந்திருக்கிறது.
நான் இப்போது, இந்த சர்ச்சைகளுக்குப்பின், பாரதியின் எல்லைகள் பற்றிய இந்த விவாதத்தை இன்னும் தீவிரமாக மேலெடுக்கவேண்டுமென நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். ஏனென்றால் இந்த பாரதி மாயை நம்முடைய மரபையே மறைக்கக்கூடிய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறதா என்ற ஐயத்தை அடைகிறேன்
ஜெ
[குழும விவாதத்தில் இருந்து]
தொடரும்