நாமறியும்தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்.
ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி விழுந்தன. நான் அடாடா என்றேன். கடை உரிமையாளரான பெண்மணி சிரித்துக்கொண்டு வந்து ‘பரவால்லை…என்ன சார் வேணும்?’ என்றாள். அவளே சாக்லேட் எடுத்துத் தந்தாள்.
திரும்பிச் செல்லும்போது சைதன்யா சாக்லேட் நக்கியபடி ’அப்பா கடையில் இருந்தாங்களே அந்தக் கொண்டை போட்ட டீச்சர்…’ என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க ‘அவங்க டீச்சர் இல்ல பாப்பா… கடைக்காரங்க’ என்றேன். ‘இல்ல அவங்க டீச்சர்…அவங்க அந்த அக்காவ காலை மிதிச்சாங்களே’ நான் ஆச்சரியத்துடன் ‘மிதிச்சாங்களா? எப்டி?‘ என்றேன். டெஸ்குக்கு அடியில் எப்படிக் காலை மிதித்தாள் என்று சைதன்யா நடித்துக் காட்டினாள். மிதிபட்டவளின் முகபாவனையில் இருந்தே ஊகித்துக்கொண்டிருந்தாள்.
‘பொறவு அந்த செவப்பு அக்கா செரிபோட்டும்னு சொன்னாங்க’ இன்னொரு பெண் முகபாவனையிலேயே ஆறுதல் சொல்லியிருக்கிறாள். நானறியாமல் ஒரு சோகநாடகமே நடந்து முடிந்திருக்கிறது.
இலக்கியம் கோருவது சாதாரண பெரு உண்மைகளை அல்ல. சிறிய உண்மைகளை. பொதுத் தகவல்களை அல்ல, நுண்தகவல்களை.நுண்தகவல்களின் வெளியே ஒரு நல்ல நாவலின் நெசவுப்பரப்பை உருவாக்குகிறது.
நாஞ்சில்நாடனின் எழுத்த்துக்களில் முக்கியமான ஒன்று ‘நாஞ்சில்நாட்டு வேளாளர் வாழ்க்கை’. சமூகவியல் தகவல்களின் தொகை என அதை சொல்லிவிடலாம். ஆனால் இதே தகவல்களை ஓர் ஆய்வாளர் எழுதியிருந்தால் அதை நம்மால் வாசிக்கமுடியுமா என்று பார்த்தால் இதன் உண்மையான மதிப்பு தெரியும். நாஞ்சில்நாடனின் இக்குறிப்புகள் வழியாக ஒரு வாழ்க்கையே நம்முன் விரிகிறது.