அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
என் ‘ஃபிலிக்கர் போட்டோஸ்ட்ரீம்’ தொகுப்பு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். இதற்கு முன்பும் இரண்டு முறை என் வலைத்தளம் பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுது, அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நன்றி சொல்வது, நான் ஏன் பிளாக் வைத்திருக்கிறேன் என்பதையும் அதைப் பரவலாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் உங்கள் எண்ணத்தையும் ஏதோ ஒருவகையில் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று உணர்ந்தேன். எனவே, அதனை கைவிட்டு விட்டேன்.
பத்திரிகைப் பணி காரணமாகக் கடந்த பத்து வருடத்தில் என் கைக்கு நிறைய புகைப்படங்கள் வந்து சென்றிருக்கிறது; தொடர்ந்தும் வருகிறது. அதில் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள் போன்ற பிரபலமானவர்கள் படங்கள் மிகச் சுலபமாகக் கிடைப்பவை; மேலும், பல தனி மனிதர்களாலும் அமைப்புகளாலும் சேகரிக்கப்பட்டும் வருபவை. ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் எழுத்தாளர்களின் படங்கள் சேகரிக்கப்படாமல் அப்படியே மறைந்துவிடுகின்றன.
வேறு யாரும் செய்யமாட்டார்கள்; மேலும், அதற்கான வாய்ப்பும் நமக்குத்தான் உள்ளது என்ற எண்ணத்தில்தான் எழுத்தாளர்களின் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இதற்காக நான் படங்கள் தேடி அலைந்தேன் என்று அர்த்தமில்லை. பணி காரணமாக என் கைக்கு வந்து செல்லும் படங்களில் ஒரு பிரதியை வைத்துக்கொண்டேன், அவ்வளவுதான். அப்படி என் கையில் இப்பொழுது அனேகமான படைப்பாளிகளின் படங்கள் சேர்ந்துவிட்டது.
ஃபிலிக்கர் இலவச பக்கத்தில் 200 படங்கள் ஏற்றுவதற்கு மட்டும்தான் இடம் தருகிறார்கள். எனவே, ஒருவருக்கு ஒரு படம் வீதம் அதில் ஏற்றியிருக்கிறேன். சில பெண் படைப்பாளிகள் படங்கள் இடம்பெற்றிருப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த பக்கத்தைப் பொறுத்தவரைக்கும், என் ரசனை அடிப்படையில் இல்லாமல், என்னைக் கவர்ந்த படைப்பாளிகள் கவராத படைப்பாளிகள் என்ற பாகுபாடியின்றி, தமிழில் எழுதுபவர்கள் என்ற அடிப்படையில் அனைத்துத் தரப்பினரையும் ஏற்றியிருக்கிறேன். ஒரே ஆண்கள் கூட்டமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும், பெண்கள் பிரதிநிதித்துவத்துக்காகவும் மிகக் குறைவாகவே எழுதியிருக்கும் ஜெனிஃபர் போன்றவர்களையும் சேர்த்திருக்கிறேன். அனேகமாக அத்தொகுப்பில் உள்ளவர்களில் ஒரு புத்தகம்கூட இன்னும் வெளிவராதவராக ஜெனிஃபர் மட்டுமே இருப்பார். அவர் தொடர்ந்து எழுதவும் இல்லை.
தமிழ் எழுத்தாளர்களின் படங்களை, வியாபார நோக்கமின்றி, முறைப்படி யாராவது சேகரிப்பார்கள் என்றால் என் கையில் இருப்பவற்றை அவர்களுக்குக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். குறிப்பாக, சாஃப்ட்வேர் தெரிந்த யாராவது ஒருவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டால் நல்லது. அவரால் அந்தப் படங்களின் ஆயுள் காலம் அதிகரிக்கவும் அனைவருக்கும் சுலபமாகக் கிடைக்கவும் வாய்ப்புண்டு.
நன்றி.
அன்புடன்
தளவாய் சுந்தரம்
அன்புள்ள தளவாய்
முக்கியமான முயற்சி. ஏற்கனவே ஒரு தளத்தில் அவர்களுக்குக் கிடைத்த சில படங்களை போட்டிருந்தார்கள். அவர்களால் நடத்த முடியவில்லை
ஆர்வம் கொண்ட நண்பர்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். பணம் செலுத்தி ஒரு தளத்தைத் தொடங்கி அதில் இந்த எல்லாப் புகைப்படங்களையும் ஏற்றலாமென்று தோன்றுகிறது
வேறுபடங்கள் கிடைக்குமா என்றுகூடத் தேடிப்பார்க்கலாம்
ஜெ