அன்புள்ள ஜெ,
கனிமொழி பற்றித் தொடுக்கப்பட்ட வினாவுக்கு, தாங்கள் அளித்த பதில் மனதைத் தொட்டது. எனக்கும் அவரின் அரசியல் சிந்தனைகள் குறித்துக் கோபம் உண்டு. உங்களின் மனச் சமநிலை பற்றிய பார்வையாளரின் கருத்தை ஆமோதித்த கனிமொழியின் மீது அப்போதைக்குத் தீராத சினம் உண்டானது. பதவியில் இருக்கும்போது எதிர்த்து நின்று எதிர்க் கருத்தைச் சொல்வதுதான் விவேகமானது. அவரின் பதவியும் புகழும் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் உண்டாகும் புண்ணை மேலும் சிதைப்பது விவேகமாகாது. உங்கள் பதிலில் நான் நெகிழ்ந்துதான் போனேன். கலைஞர் மேல் உண்டான சினம் கனிமொழியின் மீதும் சரிந்தபோது நான் கனிமொழியையும் சேர்த்தே வெறுத்தேன். ஆனால் அவர் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கோபம் பச்சாதாபமாக மாறிவிட்டது. நீங்கள் சொல்வதுபோல பெண் என்பதால் உண்டான இரக்கம் தான் எனக்கும். அவர் மீண்டும் பதவிக்கு வரட்டும் அப்போது சொல்கிறேன் என்றீர்களே ,அங்கேதான் நான் உண்மையான ஜெயமோகனை அடையாளம் காண்கிறேன்.
கோ.புண்ணியவான், மலேசியா
அன்பின் ஜெ
’கனிமொழி’ இடுகையைப் படித்தேன். தாங்கள் எழுதிய மாவோயிச வன்முறை, காந்தி மற்றும் கனிமொழி பற்றிய கட்டுரைகள் எல்லாம் சேர்ந்து நினைவிற்கு வந்தன (கனிமொழியை மாவோயிஸ்டுகளுடனோ காந்தியுடனோ ஒப்பிடுவதாலல்ல).
அதிகாரத்திலுள்ளவர்களை தைரியமாக விமர்சிக்க நம் சூழலில் நிறையப் பேர் இல்லை என்றே தோன்றுகிறது. விமர்சிக்கும் சிலரையும் தைரியமாக நினைத்ததைப் பேசுபவர்கள்/எழுதுபவர்கள் என்றுதான் சொல்ல முடிகிறதே தவிர, உண்மையை நடுநிலைமையுடன் தீர ஆராய்ந்தபின் பேசுபவர்கள்/எழுதுபவர்கள் என்று சொல்ல முடியவில்லை. அதிகாரத்திற்கும்/ஸ்தாபனத்திற்கும் விடலைகள் காட்டும் ஒரு impulsive nonformity என்ற அளவில் மட்டுமே இவை உள்ளன. ஆனால் இதற்குக் கூட பஞ்சமிருப்பதால் இம்மாதிரியான எழுத்துகளுக்கு ஒரு மௌசு உள்ளது. 3 மாதங்களாகத் தமிழ் சிற்றிதழ்களைப் படித்ததில், அதில் வரும் அரசியல் கட்டுரைகள் பெரும்பாலும் பள்ளிச் சிறுவர்களின் வீட்டுப் பாடம் போல் இருப்பதையே காண முடிகிறது. என்ன 10/12ஆம் வகுப்பல்ல ஒரு 17/18ஆம் வகுப்பு பள்ளிச் சிறுவர்களுடைய வீட்டுப் பாடம் எனலாம். அவ்வளவு தான். மாத இதழ்களில் உடனடி அரசியல் பற்றிய கட்டுரைகள் வெறும் செய்தித் தொகுப்பாகத்தான் வரும் என்று எண்ணவில்லை. அவைகளைத் தொடர்ந்து படிப்பதனால் ஒரு அரசியல் தரிசனம் கிடைக்கும் என்று எண்ணியே படிக்கத் தொடங்கினேன்.
இப்பொழுது உங்களிடம் கனிமொழி பற்றிக் கருத்து கேட்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கண்ணோட்டங்களையும் கொள்கைகளையும் வைத்துக்கொள்ளும் ஊதியதிற்காக உழைக்கும் ஊடக ஊழியர்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுடைய அமைப்பிற்குள் நீங்கள் பொருந்த மாட்டீகளென்றே தோன்றுகிறது. அப்படியே நீங்கள் கருத்து சொன்னாலும் அதனை எடிட் செய்யாமல் போடுவார்கள் என்று சொல்ல முடியுமா என்ன?
தங்களுடைய எழுத்தை நான் பின் தொடர்வது, தாங்கள் தேவையற்ற செய்திகளையும் தரவுகளையும் தவிர்த்து எடுத்துள்ள விஷயத்தின் சாரத்தை நோக்கிச் செல்வதே காரணம். பலர், அதிகாரமுள்ளவர்களை எதிர்த்தால் தம்மீது கவனம் விழும் என்பதனால் மட்டுமே எதிர்பது போன்ற பாவனை செய்கிறார்கள். தன் தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொள்ளப் பலர் ஆதரிக்கும் ஒன்றை எதிர்ப்பது மீதமுள்ளவர்களுடைய பழக்கம்.
சாரத்தை நோக்கி எழுதுகிறீர்கள் என்றாலும் தர்க்க பூர்வமாகச் சொல்ல விழையும் பொழுது அக்கட்டுரைகள் நீண்டுவிடுகின்றன. இதனைப் பற்றிய மறுமொழிகளும் உங்கள் கட்டுரைகள் மீது எழுந்துள்ளன. குறிப்பக காந்தியம் பற்றிய கட்டுரைகள்(அண்ணா ஹசாரே, ஐரோம் சர்மிளா உட்பட). இதைத் தாக்கியும் தூக்கியும் மறுபொழிகள் வந்ததைக் கண்டேன். இப்பெரிய கட்டுரைகளை நிதானமாக வாசிப்பவர்களில் நானும் ஒருவன். மாவோயிஸ வன்முறை (4 பாகங்கள்), அண்ணா (2 பாகங்கள்), சர்மிளா (2 பாகங்கள்), மார்க்ஸியம் இன்று தேவையா, இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா என்ற பெரிய கட்டுரைகளை கம்ப்யூட்டரில் படிக்க அசௌகரியமாக இருந்ததால் தனியாக அச்சிட்டு பைண்டு செய்து படித்தேன். 160 ரூபாய் ஆனது. இக்கட்டுரைகளைத் தொகுப்பாகப் பதிப்பித்திருந்தால் 4-5 பிரதிகள் வாங்கி சிலருக்குத் தந்திருப்பேன். நான் உங்கள் எழுத்தைத் தொடர்வது இம்மாதிரியான கட்டுரைகளுக்காக.
மிக்க அன்புடன்
எஸ். விஜயராகவன்