கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

சென்ற வாரம் தொழில் நிமித்தம் சீனா சென்றிருந்தேன். குறிப்பாக ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்கள். எனக்கு சாதாரணமாகவே சீனாவின் கட்டுப்பாடு மிக பிடிக்கும். ஒரு பத்து பதினைந்து வருடங்களில் இரு நகரங்களை இப்படி மாற்ற முடியும் என்பதற்கு இவ்விரு நகரங்களும் ஒரு எடுத்துக்காட்டு. நகர அமைப்பு அதற்கான உள்கட்டமைப்புகள் சாலைகளின் மேன்மை வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு ,பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம். ஆனால் சாதாரண மக்கள் சீன கலாச்சாரத்திலிருந்து நகர்ந்து விட்டதாகத்தான் நான் பார்கிறேன். இந்த நகரங்களில் தனி மனித சுதந்திரம் ஓரளவு உள்ளது. நமக்கு வேண்டியது(!) கிடைகிறது. நம் நாட்டை ஒத்துப் பார்க்கையில பல வகையில் மேன்மை அடைந்திருக்கிறார்கள்.

அன்புடன்,
வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள விஜயகிருஷ்ணன்

மிகத்தாமதமான பதில். மின்னஞ்சல் எங்கோ சென்று மாட்டிக்கொண்டது

சீனாவைப்பற்றிய இருவேறு பிம்பங்கள் அளிக்கப்படுகின்றன. சீனாவின் பெரும்பாலான தொழில்பேட்டைகளும் குடியிருப்புநகரங்களும் பார்வையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே மிகப்பெரிய அளவில் அரசாங்க அடிமைமுறையே நிலவுகிறது என்கிறார்கள். மக்கள் இடம்பெயர்வது முழுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அந்த நிழலான இடங்களில் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது, இந்த வளர்ச்சியின் பயன் அவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்ற புரிதல் இல்லாமல் நாம் பார்க்க அனுமதிக்கப்படும் நகரங்களை வைத்து ஒரு முடிவுக்கு வருவது சரியா என்று தெரியவில்லை. வளர்ச்சி என்பது அநீதியின் மேல் கட்டப்பட்டது என்றால் அது சரியல்ல.

சீனாவில் என்ன நிகழ்கிறது என்பதைப் பெரும்பாலும் குறைவான கூலியில் மானுட உழைப்பைப் பயன்படுத்தும் அவர்களின் உற்பத்திமுறையில் இருந்தே ஊகிக்க முடியும். உழைப்பாளர்களின் வாழ்க்கைத்தரம் மேலே சென்றால் கூலியும் மேலே சென்றாகவேண்டும். அது பொருளின் விலையைக் கூட்டும். அவ்வாறு கூடினால் சீனா இன்றைப்போல உலகப்போட்டிக்கு சல்லிசான விலைக்குப் பொருளைக்கொண்டுவந்து கொட்டமுடியாது.

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு .,

தங்கள் நலம் அறிய ஆவல்.நேற்று அசோகமித்திரன் சிறுகதை தொகுப்பில் இருந்து “விரல்” சிறுகதையைப் படித்தேன். இதுவரை மும்முறை இன்னும் வேறு தொடரும் என்று நினைக்கிறேன். அது காட்டும் காட்சியில் இருந்து விடு பட முடியவில்லை சார் இதில் வரும் ராமசாமியின் மீது ஆழமான பரிவு, (சரியான வார்த்தையா என்று தெரிய வில்லை ) ஒவ்வொரு தடவை முடித்தும் சில கணங்களுக்கு சோர்வு நீடித்தபடி செல்கிறது. ஏன் என்று தொகுக்கும்போது எனக்கு எப்போவோ படித்த அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனுக்கு நீங்கள் எழுதிய அண்ணாச்சி தொகுப்பு ஒரு முக்கிய காரணம் என்று படுகிறது. அவரைப் பற்றித் தகவல் ரீதியா பெரிதும் ஏதும் இப்போது நினைவில் இல்லை. ஆனால் இந்தச் சிறுகதையைப் படிக்கும் போது மீண்டும் மீண்டும் அவரே மனதில் வந்து போகிறார். ஏன் என்று தெரியவில்லை. மீண்டும் அண்ணாச்சி தொகுப்பைப் படிக்க வேண்டும்

தினேஷ் நல்லசிவம்

அன்புள்ள தினேஷ்

இந்தக்கதையின் கதாபாத்திரம் ஜி.நாகராஜன் என்று நினைக்கிறேன். எழுதமுடியவில்லை என்ற அந்தப் புலம்பல்தான் கதை. ஆனால் அவர் ஒன்றுமே எழுதுவதில்லை என்ற குறிப்பும் கதையில் உள்ளது. கதவிடுக்கில் பட்டு நசுங்கிப்போய் எழுதமுடியாமலானது விரல் மட்டுமல்ல. ஆன்மாவின் ஏதோ ஒரு உறுப்பும்கூடத்தான்

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமியின் விமர்சன அடித்தளம்
அடுத்த கட்டுரைஎம்.டி.முத்துக்குமாரசாமிக்கு வருத்தத்துடன்…