முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது.
அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகம் ஆகப்போவதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த உலகம் விரிவடையப்போவதில்லை. மெல்ல சலித்து அவன் தன் அன்றாட வாழ்க்கையின் முடிவில்லா அலைகளில் மூழ்கி மறைந்து போய்விடுவான்.
இந்த ஒற்றைப்பெரும்பாதைக்கு மாற்றாக அன்று இருந்த ஒரே சிறுபாதை சோவியத் நூல்களினால் ஆனது. சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் ஓர் ஆர்வமுள்ள தொடக்க வாசகனுக்கு அவனுடைய இளமையை சவாலுக்கு அழைக்கும் அற்புதமான பாதை ஒன்றை அறிமுகம் செய்தன. பேரிலக்கியங்களின் ஒளிமிக்க கனவுகளின் வழியாக அவனை நடத்திச்செல்லும் பாதை.
அன்றெல்லாம் சோவியத் நூல்கள் விற்பனை வாகனங்களில் சிறு கிராமங்களையும் வந்தடைந்தன. சந்தைகளில் முச்சந்திகளில் உடம்பெங்கும் நூல்களுடன் நிற்கும் அந்த வேன் வழியில் நம்மை மறிக்கும் மந்திரவாதியைப்போல இருக்கும். அருமனை சந்தைமுனையில் நின்ற அந்த வண்டியை வெளியே நின்று பார்த்தபோது நூல்களின் அமைப்பு பிரமிக்கச்செய்தது அன்று. உள்ளே போக தயங்கி நின்று கொண்டிருந்த என்னை ஒரு மீசைக்காரர் ”உள்ளே போ தம்பி …ஒண்ணுமில்லை” என்று ஊக்கினார்
உள்ளே உள்ள நூல்களை கையில் எடுத்து பார்க்கவே பரவசமாக இருந்தது. வழவழப்பான காகிதத்தில் துல்லியமான அச்சு. கெட்டியான அட்டை மீது அழகிய ஓவியங்களும் புகைப்படங்களும் . முற்றிலும் கேள்விப்படாத பெயர்கள். இவான் துர்கனேவ், பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி, லெவ் தல்ஸ்தோய், மக்ஸீம் கோர்க்கிய்….. ஒரு முற்றிய கோழி ஒரு ரூபாய்க்கு விற்கும் சின்னஞ்சிறு கிராமத்தில் உலக இலக்கியம் தன் மாட்சிமையுடன் வந்திறங்கியிருந்தது!
என்ன விலை. ‘இயங்கியல் பொருள்முதல்வாதம்’ ஒரு ரூபாய். பொழுதுபோக்கு பௌதிகம் என்ற அற்புதமான நூல் வெறும் மூன்று ரூபாய் [யா.பெரல்மான்] அன்று எந்த இந்திய நூல்களிலும் எதிர்பார்க்க முடியாத அற்புதமான ஓவியங்கள். ‘பேரழகி வசீலிஸா’. புத்தகங்களை விலைகொடுத்து வாங்க முடியும் என்று நான் அறிந்ததே அந்த வாகனம் வழியாகத்தான். எனக்கென்றே புத்தகங்கள்.
தேங்காயும் கோழியும் வாழைக்குலையும் விற்று கிடைத்த பணத்தைக் கொடுத்து நான் புத்தகங்களை அள்ளினேன். மார்புடன் அள்ளிக்கொண்டு வீடு நோக்கி மிதந்து சென்றேன். வீட்டுக்குப்போகாமல் கோயிலுக்குச் சென்று புத்தகங்களை அங்கே ஒளித்து வைத்துவிட்டு பக்கத்து வீட்டு ராதாகிருஷ்ணனின் பாட்டியிடம் அம்மா சொன்னார்கள் என்று எட்டு ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப்போனேன்.
மறுநாள் நள்ளிரவில் வீட்டுத்தென்னையில் ரகசியமாக ஏறி தேங்காய் பறித்து நான் ஆற்று நீரில் வீச அதை ராதாகிருஷ்ணன் ஆற்றில் நின்று எடுத்து கரைசேர்க்க அவற்றை தொலித்து சேர்த்துக் கட்டி எடுத்துக் கொண்டு மீண்டும் சந்தைக்குச் சென்றோம். ஆனால் விற்று மீண்ட பணத்தை மீண்டும் அதே வண்டியில் ஏறி புத்தகங்களாக ஆக்கினேன். ”நீ ஒருநாளைக்கும் நன்றாக மாட்டாய்” என்று ராதாகிருஷ்ணன் என்னை வைதான்.
அந்த நூல்களை மெல்ல மெல்ல வீட்டுக்குக் கொண்டுவந்தேன். அவை பள்ளியில் எனக்கு பரிசாகக் கிடைத்தவை என்று சொன்னேன். நானே அவை ஜெயமோகனுக்கு பேச்சுப்போட்டியில் பரிசாக அளிக்கப்பட்டவை என்று ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டேன். அவ்வாறு எனக்கென்றே ஒரு நூலகம் உருவாயிற்று. என்னுடைய சொந்த நூல்கள். படிக்க வேண்டாம், அவ்வப்போது வருடிப்பார்த்து அடுக்கி வைத்தாலே பேரின்பம்
அதில் ஒரு நூல் இப்போதும் என்னிடம் இருக்கிறது — ‘மார்க்ஸையும் எங்கல்ஸையும் பற்றிய நினைவுக்குறிப்புகள்’. 1981 ல் அது எனக்குப் பரிசாகக் கிடைத்தது என்று என் கையெழுத்திலேயே கல்லூரி முதல்வர் எழுதியதுபோல எழுதி போலியாக கையெழுத்தும் போட்டிருக்கிறேன். எந்த அசடுக்கும் அது நானே எழுதியது என்று பார்த்ததுமே புரியும். ஆனால் அம்மா அதை நம்பியது போல அன்று காட்டிக் கொண்டாள். அந்த நூல்களை அம்மாவும் ஆர்வமாகப் படித்தாள். இக்கட்டுரைக்காக அந்த நூலை எடுத்து அந்த வரிகளைப் படிக்கும்போது அம்மாவின் புன்னகை கண்ணில் தெரிகிறது.
அந்த நூல்கள் வழியாக நானறியாத ஓர் புத்துலகம் என் கண்முன் விரிந்தது. நான் வாசித்த தமிழ் காதல்கதைகளை சாகஸங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளச் செய்த பேரிலக்கிய அனுபவம். நான் ரஸ்கால்நிக·புடன் பீட்டர்ஸ்பர்க் தெருக்களின் இருட்டில் அலைந்தேன். நெ·ல்யுடோவின் தனிமையையும் பாவெலின் புரட்சிகரத்தையும் நெருங்கி பகிர்ந்துகோண்டேன். பெரும் விருந்துகள், அரச சபைகளின் மரியாதைகள், மானுட உடற்கடல் கொந்தளிக்கும் பெரும் போர்க்களங்கள்…. ஆக்கமும் அழிவுமாக பெருக்கெடுக்கும் வாழ்வெனும் பெருநதி. நான் என் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து உலகம் முழுக்க பரவிக்கொண்டிருந்தேன்.
இந்த முப்பத்தைந்து வருடங்களில் நான் பிறருடன் இந்த மண்ணில் வாழ்ந்ததாக என் கணக்குகள் சொல்லலாம். நான் உலகம் முழுக்க வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பதை நான் அறிவேன். எத்தனையோ நாள் நாஸ்தர்தாம் தேவாலயத்தில் தூங்கியிருக்கிறேன். எத்தனையோ முறை பாம்பியின் அழிந்த நகரத்தெருக்களில் அலைந்திருக்கிறேன். லண்டன் தெருக்களும் மாஸ்கோ தெருக்களும் என் கண்ணுக்குள் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. நான் உலக மனிதன். ஏனென்றால் நான் உலக இலக்கியத்தின் வாசகன்.
அந்த முதல் வாசலை திறந்தவர்களுக்கு நான் பட்டுள்ள நன்றிக்கடன் அளப்பரியது. அவர்கள் பலரின் பெயர்கள் எனக்கு மூதாதையர் பெயர்களைப்போல ஆகியிருந்தன. ரகுநாதன், எஸ்.ராமகிருஷ்னன், பூ.சோமசுந்தரம், ரா.கிருஷ்ணையா, நா.தர்மராஜன். அவர்கள் பலருடைய பெயரை மட்டுமே அறிந்திருந்தேன். முகங்களை அல்ல. பின்னர் பூ.சோமசுந்தரம் பூர்ணம் விஸ்வநாதனின் அண்ணா என்று கேள்விப்பட்டபோது அவரது முகத்தை பூர்ணம் அவர்களின் முகமாக எண்ணிக்கொண்டேன்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய மொழிநடை இருந்தது. சிலரது மொழிநடை மிகவும் ஆசாரமானது. அவர்கள் தமிழ் படைப்புச் சூழலில் இருந்து வெகுவாக விலகிச் சென்றிருந்தார்கள். ஆகவே மொழிநடையில் அந்த தூரம் தெரிந்தது. அதிலும் வணிக எழுத்தின் வழியாக வந்த வாசகர்களுக்கு அந்த வேறுபாடு தாண்ட முடியாத அகழியாக இருந்தது. ‘ஐயன்மீர்’ ”மேதகையீர்’ போன்ற அழைப்புகள். ‘அவனுக்கு அந்தளவு தாகம் இருந்ததனால் அவன்…’ போன்ற சொல்லாட்சிகள்.
ஆனால் அந்த இளம் வயதில் எனக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அந்தந்த மொழிநடையை அந்த ஆக்கங்களுடன் இயல்பாக இணைத்துக் கொண்டேன். சொல்லப்போனால் அவை மொழியாக்கங்கள் என்பதே என் பிரக்ஞையில் இல்லை. அவை எல்லாம் பாதைகள் தான். நான் அவற்றின் வழியாக தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதிய கால-நிலத்துக்குச் சென்றுவிடுவேன்
பலவருடங்கள் கழித்து மதுரை புத்தகக் கண்காட்சியில் சிவகங்கையில் இருந்து வந்த இரு இளைஞர்களுடன் வந்த ஒரு முதியவர் என் படைப்புகளைப் பற்றி என்னிடம் பேசினார். நானும் அவரிடம் பேசிக்கோண்டிருந்தேன். ”இவர்தான் நா.தர்மராஜன்” என்று இளைஞர் சொன்னபோது நான் ”அப்டியா, ரொம்ப சந்தோஷம்” என்றேன்.
மேலும் பேச்சு சென்றபோது நா.தர்மராஜன் அவர் மொழியாக்கம் செய்த ஒரு கதையைப்பற்றிச் சொன்னார் ‘வாரக்கோல்’ என்ற தல்ஸ்தோயின் அக்கதை குதிரைகளைப் பற்றியது.. என் கட்டுரை ஒன்றில் அதைப்பற்றி நான் சொல்லியிருந்தேன். அப்போதுதான் என் மூளைக்கு அவர் யாரென்று உறைத்தது. நான் அவரை மாஸ்கோவில் இருப்பவராகவே கற்பனைசெய்துகொண்டிருந்தேன். ”இல்லியே விட்டுட்டு வந்து நாலஞ்சு வருஷமாச்சே” என்றார். சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப் பினர் அவர் இந்தியா வந்து சிவகங்கையில் குடியிருந்தார்.
”சார் நீங்களா?” என்றேன். ஆனால் அதன் பின் அவரிடம் என் உணர்வுகளைச் சொல்லவே முடியவில்லை. மாஸ்கோவின் இருண்டவானுடனும், பனிப்பொழிவில் கனத்து நிற்கும் ஊசிக்கோபுரங்களுடனும், பனியில் உருளும் சக்கரங்களின் ஓசையுடனும், பனி சொட்டும் நீளமேலங்கிகளுடனும், பனித்தொப்பியுடனும், ஸ்டெப்பியுடனும், சைபீரியாவுடனும், மூர்களுடனும், தார்த்தாரியர்களுடனும் இணைந்த மனிதர் சர்வ சாதாரணமாக வேட்டி சட்டையுடன் ஆள்கூட்டத்தில் இடிபட்டு நின்றிருந்தார்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மார்க்ஸியம் ஓர் அறிவுக்கொந்தளிப்பை நிகழ்த்தியது. அரசியல் சிந்தனைகளில் மட்டுமல்லாமல் இலக்கியம், தத்துவம், வரலாறு, நாட்டுப்புறவியல், இதழியல் ஆகிய துறைகளில் அதன் பங்களிப்பு மிகப்பெரியது. சென்ற அரைநூற்றாண்டின் எல்லா சிந்தனைகளும் மார்க்ஸியச் சிந்தனைகளுடன் உரையாடியே தங்களை வளர்த்துக்கொண்டன. அவையெல்லாமே மேலும் ஜனநாயகத்தன்மை கொண்டவையாகவும் நவீனமானவையாகவும் ஆயின.
அவ்வாறு உருவான அறிவாளர் பலர். இலக்கியத்தில் ஆர்.கெ.கண்ணன், ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், கெ.முத்தையா, நா.வானமாமலை, டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி , பொன்னீலன் என அப்பட்டியலை விரிவாக்கம்செய்துகொண்டே செல்ல முடியும். அந்த வரிசையில் வருபவர் நா. தர்மராஜன். அந்த செயலூக்கம் மிக்க, நம்பிக்கை எழுச்சி கொண்ட காலத்தின் மனநிலையையும் உழைப்பையும் தன் ஆளுமையாகக் கொண்டவர்..
சிவகங்கை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய நா.தர்மராஜன் 1954 ல் மாணவராக இருந்த நாட்களிலேயே ஜீவாவின் பேச்சுக்களால் கவரப்பட்டு இந்திய கம்யூனிஸ்டுக்கட்சியில் இணைந்தார். ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகட்சியின் ஊழியராக இருந்த ஜி.நாகராஜனுடன் நெருக்கமான உறவு அவருக்கு இருந்தது. அது 1980 வரை நீடித்தது.
எஸ்.ராமகிருஷ்ணன் போல நா.தர்மராஜனும் மொழியாக்கத்தை தன்னுடைய பணியாக எடுத்துக்கொண்டார். ஆனால் முழுக்க முழுக்க ருஷ்ய- மார்க்சிய நூல்களாக அவர் மொழியாக்கம்செய்யவில்லை. 1978ல் அவர் ஸ்டீன்பெக்கின் நாவலை [நிலவு வந்து பாடுமோ’ ] மொழிபெயர்த்தார். சமீபத்தில் இ.எம்.·பாஸ்டரின் பாஸேஜ் டு இண்டியாவை ‘இந்தியா மர்மமும் சவாலும்’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார் [அமிர்தா பதிப்பகம்]
ஆனால் நா.தர்மராஜன் என் மனதில் அவரது தல்ஸ்தோய் மொழியாக்கம் சார்ந்தே எப்போதும் நினைவுக்கு வருகிறார். தல்ஸ்தோயின் ‘சிறுகதைகளும் குறுநாவல்களும்/ என்ற வெண்ணிறமான, அகலம் குறைவான தடித்த நூல் நினைவுக்கு வருகிறது. அதில் அட்டையில் தல்ஸ்தோயின் பித்துக்களை தெரியும் படம் உண்டு. 1987ல் ல் அந்நூலுடன் நான் நாகர்கோயிலுக்கு வந்தபோது சுந்தர ராமசாமி அதை கையில் வாங்கிப்பார்த்துவிட்டு ”குண்டுக்குழந்தை அம்மணமா இருக்கிற மாதிரி இருக்கு” என்று மகிழ்ந்தார். அதில் பல கதைகள் நா.தர்ராஜன் மொழியாக்கம் செய்தவை.
தல்ஸ்தோயின் ‘கசாக்குகள்’ ‘செவஸ்தபோல் கதைகள்’ போன்ற பல நூல்களை மொழியாக்கம் செய்த நா.தர்மராஜன் சமீபத்தில் ‘அன்னா கரீனினா’வை முழுமையாக மொழியாக்கம் செய்து பாரதி புத்தகநிலைய வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறார். அது அவரது மொழியாக்கப்பணியில் ஒரு சாதனை என்று சொல்லவேண்டும். அவரது மொழியாக்க நூல்கள் நூறைத்தாண்டிவிட்டன. பெரும்பாலான நூல்கள் மார்க்ஸியக் கோட்பாடு சார்ந்தவை.
இக்கட்டுரைக்காக என் நூலகத்தில் தேடியபோது ஒன்றை உணர்ந்தேன், பேராசிரியரின் பெரும்பாலான நூல்கள் என் நூலகத்தில் இல்லை. அவற்றின் அட்டைகள்கூட நினைவில் நிற்கின்றன. கடந்தகாலத்தில் பல இளம் வாசகர்களுக்கு இலக்கிய அறிமுகத்துக்காக அவற்றை அளித்திருக்கிறேன். அவர்கள் திருப்பித்தரவில்லை. கடைசியாக ஈரோட்டு நண்பர்களுக்கு அளித்த மொழியாக்க நூல்கள் திரும்பிவருமென நம்புகிரேந்- அவை மறுபடியும் அச்சாகிவரும் சூழல் இப்போது நம்மிடம் இல்லை.
பேராசிரியரின் மொழியாக்கம் எப்போதுமே மூலத்துக்கு நேரடியாகவே நெருக்கமானது. நகாசுசெய்வது, சுதந்திரங்கள் எடுத்துக்கொள்வது போன்றவற்றை அவர் செய்வதில்லை. தூயதமிழ் போன்ற பிடிவாதங்களை அவர் கடைப்பிடிப்பதும் இல்லை. ஆகவே அவரது மொழியாக்க
நடை சரளமானதாக இருக்கிறது. சோவியத் மொழுபெயர்ப்பாளர்களில் ஒப்பு நோக்க நா.தர்மராஜனின் நடைதான் சிறந்தது எனலாம்.
முழுமையான அர்ப்பணிப்புடன் அறிவியக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அந்தப்பணியிலேயே முழுமையைக் காணும் முந்தைய தலைமுறையின் வாழும் உதாரணங்களில் ஒன்று நா.தர்மராஜன். 1935 ஆகஸ்ட் நாலாம் தேதி பிறந்த தர்மராஜன் அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் வரும் 2009 ஆகஸ்டில் சிவகங்கையில் கொண்டாடப்படுகிறது.
பேராசிரியரால் உருவாக்கப்பட்ட இலக்கியவாசகர்களில் ஒருவன் என்ற முறையில் என் மனமார்ந்த வணக்கங்கள்.
பேரா.நா.தர்மராஜன்
41. முத்துசாமி நகர்
சிவகங்கை
தமிழ்நாடு
630561