இரு இளைஞர் கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல). இதனால் என்னால் சிலசமயம், சாப்பிடவே முடிவதில்லை. அவர்களைக் கண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் தாழ்வாகக் கருதியதில்லை. ஏனோகுறுகுறுவென்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல், முதியபணியாளர்களைக் கண்டாலும் மனம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும். இதற்கு முன்னால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அலுவகத்துக்குள் நுழையும் முன்னர், பைகளைச் சோதனை செய்ய இரண்டுபேர் நின்று கொண்டிருப்பார்கள். சிலசமயம் 35 வயது மதிக்கத்தக்க பெண்கள்இருப்பார்கள். அவர்களைக் கண்டாலும், வருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். இதைஎப்படிப் போக்குவது, அல்லது இப்படியே இருப்பதுதான் சரியா ?

நன்றி
விஜய்.

***

அன்புள்ள விஜய்

மிக இளமையில் எழக்கூடிய சஞ்சலங்கள் இவை.

என்னுடைய நோக்கில் இவற்றைப் ‘போக்கிக்’கொள்வது உங்களை முதிர்ந்த மனிதனாக ஆக்கும். லௌகீக வாழ்க்கையில் வெற்றியைக்கூட அடையச்செய்யும். ஆனால் அவற்றைக் கூர்ந்து கவனித்து அந்த சஞ்சலம் ஏன் வருகிறது என அறியமுயல்வதன்மூலமே நீங்கள் உங்கள் அகத்தைக் கண்டடையமுடியும் என்பேன்.அதுவே ஆன்மீகத்தின் வழி.

ஜெ

***

வணக்கம் ஜெ,

உங்களுடைய வெப்சைட் மிகவும் அறிவுபூர்வமாகவும் புத்திகூர்மையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது, உங்களுக்கு வந்த பல வாழ்த்து மடல்களில் இதுவும் ஒன்று என்றாலும் இதனுடைய முக்கியத்துவங்கள்

  1. நான் இப்போது தான் முதல் முறையாக வாழ்வில் ஒரு வாழ்த்து மடல் அனுப்புகிறேன், அதுவும் தமிழில் டைப் செய்து
  2. தமிழ் எழுத்தாளர்கள் ப்ளாக் பிளஸ் வெப்சைட் களில் உங்களுடையது தான் தலை சிறந்ததாகவும் அடிக்கடி அப்டேட் செய்யபடுவதாகவும் இருக்கிறது,
  3. மேலும் உங்களுடைய வாசகர்கள் எழுதும் முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்களையும் மடல்களையும் உங்களுடைய வெப்சைட் இல் எழுதி அவர்களையும் ஊக்குவிக்கிறீர்கள்,
  4. அதுமட்டுமில்லாமல் உங்களுடைய முக்கிய பணியான எழுத்தைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள் , தலை வணங்குகிறேன் .

நானும் ஒரு எழுத்தாளாராக விரும்புகிறேன் . ஒரு தலைசிறந்த எழுத்தாளனாக விரும்புகிறேன், ஆம். புத்தகத்துக்கான விஷயங்கள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் அது என்னுள்ளே இருந்து வெடித்து வெளியே வர மிக ஆர்வமாக இருக்கிறது. ஆனால் என்னுடைய தமிழ் – அது, பாமரனுக்குப் புரியும்படியும் அதே சமயம் படித்தவனுக்கும் ஏற்றாற்போல் இருக்கவேண்டுமே அதை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் உங்களிடம் கேட்கிறேன்.மேலும் இந்தப் புத்தக உலகில் நீங்கள்தான் என்னுடைய குரு. ஆதலால் வெட்கமின்றிக் கேட்கிறேன், ஆசீர்வாதத்துடன் அறிவுரையும் உங்கள் கருத்தையும் பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

கிருஷ்ண பிரசாத்

அன்புள்ள கிருஷ்ணபிரசாத்

இன்னொரு இளம் வாசகரின் கடிதம்.

நீங்கள் எழுத்தாளராக ஆக விரும்புவதற்கு வாழ்த்துக்கள். சிறந்த எழுத்தாளராக நீங்கள் ஆகவேண்டுமென வாழ்த்துகிறேன்.

உங்கள் எழுத்துக்கள் எப்படி முக்கியமானதாக ஆக முடியும்? நீங்கள் தமிழில், உலகில் இதுவரை இல்லாத ஒரு எழுத்தை அளிக்கும்போதுதான் இல்லையா? அப்போதுதான் உங்களுக்கு எனத் தனியடையாளம் உருவாகிறது. உங்கள் எழுத்து வேறு எதற்கும் சமம் அல்ல அது தனி என்ற நிலை வருகிறது. நீங்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை பிறக்கிறது

அதை எப்படி அடைவது? நீங்கள் இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் புதியதாக எழுதமுடியும். அதற்கு நீங்கள் நிறைய வாசிக்கவேண்டும். இதுவரையிலான தமிழ் இலக்கிய மரபையும் உலக இலக்கியப்போக்கையும் அறிந்திருக்கவேண்டும். வாசிக்காவிட்டால் பிறர் எழுதித் தாண்டிச்சென்றவற்றையே எழுதிக்கொண்டிருப்பீர்கள் இல்லையா?

ஆகவே வாசியுங்கள். எப்படி வாசிப்பது? வழிகாட்டியாக நிறைய நூல்கள் தமிழில் உள்ளன. என்னுடைய ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ [கிழக்கு பதிப்பகம்] ஒரு முக்கியமான வழிகாட்டி நூல். அதேபோல மேற்குச்சாளரம், கண்ணீரைப் பின் தொடர்தல் போன்ற பலநூல்கள் உள்ளன. அவை நூல்களை வாசிப்பதற்கான வழியை காட்டும். எஸ்.ராமகிருஷ்ணன் கதாவிலாசம்,நம் காலத்து நாவல்கள், விழித்திருப்பவனின் இரவு போன்ற பலமுக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். உலக இலக்கியத்தின் சாளரங்கள் அவை.

எழுத்தாளன் வாசிக்கவேண்டும் என்று சொல்வது இலக்கியத்தின் வடிவத்தைத் தெரிந்துகொள்வதற்காகவும்தான். எந்தக் கலையும் அதன் வடிவம் வழியாக வளர்ந்துகொண்டே செல்கிறது. அந்த வளர்ச்சியை முன்னெடுத்தால்தான் இலக்கியவாதியால் எதையாவது சாதிக்கமுடியும்.

நான் எழுதும்கலை [தமிழினி] என்ற நூலை எழுதியிருக்கிறேன். அது எழுத்தின் வடிவங்களை அறிமுகம்செய்யும்.

வாசியுங்கள், அது எழுதுவதற்கான முதல்படி.

ஜெ

***

முந்தைய கட்டுரைசுரதா
அடுத்த கட்டுரைகலாப்ரியா-வண்ணதாசன் கடிதம்