சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2

[  3  ]

தொன்மையான சம்ஸ்கிருத மரபைப் பார்க்கும்போது விவாதம் அதன் அடிபப்டை இயல்பாக இருப்பதைக் காணமுடிகிறது. ‘சதஸ்’ என்னும் சபை எப்போதுமே முரண்படும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோத வழியமைக்கும் இடமாக இருந்துள்ளது. இதன் விளைவாக இரண்டு அறிவுத்துறைகள் சம்ஸ்கிருதத்தில் பெரும் வளர்ச்சி பெற்றன. ஒன்று, சொல்லாராய்ச்சி செய்யும் மீமாம்சை. விவாதத்துக்கான பொதுத்தளமான மொழியை துல்லியமாக வகுத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டதனால்தான் இவ்வளர்ச்சி. அடுத்ததாக விவாதத்தின் மெய்காணும்முறைகளை வகுத்துரைக்கும் நியாய சாஸ்திரம்.

இந்த இரு துறைகளும் தொன்மையான கிரேக்க மரபிலும் பெரும் வளர்ச்சி கொண்டிருந்ததைக் காணலாம். காரணம் கிரேக்க மரபும் சம்ஸ்கிருத மரபைப்போலவே அடிப்படையில் உரையாடல்தன்மை விவாதத்தன்மை கொண்டது. ஆனாலும் கிரேக்கமரபின் ஆகப்பெரிய சாதனையாக இருப்பது அது தர்க்கவியலை வளர்த்து எடுத்த விதம்தான்.   

சங்ககாலத்துத் தமிழ் மரபைக் கவனிக்கும்போது முதலில் நாம் காணவேண்டியது அன்று தத்துவ விவாதமோ அதற்கான அமைப்போ இருந்ததாக ஆதாரம் இல்லை என்பதே. அதே சமயம் அறிஞர்களும் கவிஞர்களும் கூடியிருந்து அறிவாய்வுசெய்யும் அமைப்புகளைப் பற்றிய பல குறிப்புகள் சங்கப் பாடல்களில் உள்ளன.

‘தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

என்று மதுரைக்காஞ்சியிலும் [761-]
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலையிய பலர் புகழ் சிறப்பின்
புலவர்

என்று புறநாநூறிலும் [ 78] புலவர் சபைகள் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய கல்வியாளர் சபைகளையே தொல்காப்பியம் முதலிய நூல்களில் ‘என்ப’ என்றும் ‘என்மனார் புலவர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது என்று ஊகிக்கலாம்.

ஆக அவை இருந்திருக்கிறது, அறிவோர் இருந்திருக்கிறார்கள். ஆனால் தத்துவ விவாதங்கள் நடந்தன என்று மட்டும் சொல்ல முடிவதில்லை. இந்த தனித்தன்மையைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருக்கிறது.

சங்ககால வாழ்க்கையைப்பற்றி அப்பாடல்கள் அளிக்கும் சித்திரங்க¨ந்த் தொகுத்துக்கோண்டும் அவ்வப்போது நேரடியாக வரும் கருத்துக்களை வைத்தும் சங்ககாலத்தின் தத்துவ நிலைபாடு என்னவாக இருந்திருக்கமுடியும் என்று ஊகிக்கலாம்

சங்க காலப் பாடல்களில் நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டியது  அக்காலத்தில் நிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம்.  சங்க காலத்தில் ஆயர்களும் பரதவர்களும் நாடோடிகளும் இருந்தார்கள் என்றாலும் அடிபப்டையில் அது ஒரு வேளாண்மைச் சமூகம் என்று சொல்லல்லாம். வேளாண்மைச் சமூகத்தில் நிலம் எப்போதுமே முக்கியமானது. மேய்ச்சல் சமூகங்களைப்போல அவர்கள் நிலத்தை விட்டுவிட்டுச் செல்வதில்லை. அவர்களுக்கு வாழ்விடம் என்பது ஒரு இடம் மட்டுமல்ல. அது பிரபஞ்சத்திலிருந்து அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு துளி

.ஆகவே  ஊர் நீங்குதல் என்பது அவர்களைப்பொறுத்தவரை ஒருவகை மரணம். பூம்புகாரைச் சொல்லும்போது ‘பதியெழு அறியா பழங்குடி கெழீஇய என்று சொல்கிறது சிலப்பதிகாரம். ஊரை விட்டு விலகுதல் என்பது ஒரு இழிவாக அச்சமூகம் கருதியிருக்கிறது. நிலத்தை ஐந்துவகையாகப் பிரிந்த்து அதன் வழியாக இறைவனையும் மனிதர்களையும் மானுட வாழ்க்கையையும் ஐந்தாகக் கண்டது சங்க கால தமிழ் மனம்.

தமிழில் நிலம் உலகம் என்ற பொருளில் பயின்றுவருகிறது. நிலம் என்பது தத்துவம் கொள்ளும் விரிவான பொருளில் இயறகையே ஆகும். சங்ககாலப்பாடல்கள் இயற்கையின் சித்திரங்களையே தங்கள் கவித்துவத்துக்கான ஆதாரமாகக் கொண்டவை. இயற்கையே மனிதமனமாக தோற்றம் அளிக்கிறது சங்கப்பாடல்களில். துயரிலும் கலையிலும் நீங்காது கூடவே வரக்கூடிய இயற்கையை நாம் சங்கப்பாடல்களில் காண்கிறோம். சங்ககாலத்து விழாக்கள் இறைவனுடன் தொடர்புடையவையாக இல்லை. இயற்கையுடன் தொடர்புடையவை அவை. புதுப்புனலாட்டு, கொன்றை பூத்தல் போன்றவையே விழாவாக ஆகின்றன.

இயற்கை தமிழரின் முக்கியமான வழிபடுபொருள் என்பதை இன்றும் தமிழ்நாட்டு மதவழிபாட்டு முறைகளைக் கொண்டு சொல்லிவிடமுடியும். நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மரங்களின் அடியில் சிறிய கல்பதிட்டைகளாக இருந்திருக்கின்றன. அங்கிருந்து தான் அவை பேராலயங்களாக எழுந்தன. எல்லா கோயில்களுக்கும் தலவிருட்சங்கள் உள்ளன. நெல்லை என்றால் அது மூங்கில்காடுதான். வணங்கபப்ட்ட மூங்கில்காடுதான் நெல்லையப்பனாகி நெல்லை என்ற நகரமாகி வளர்ந்திருக்கிறது. ஆகவே தொன்மையான இயற்கை வழிபாட்டில் இருந்தே தமிழர்களின் தத்துவநிலைபாடு உருவாகி வந்திருக்கும் என்று கூறலாம்.

நாடனாலும் காடானாலும் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று புறநாநூறில் ஔவையார் கூறுகிறார். நிலத்தை வைத்து வகுக்கப்பட்ட மானுடவாழ்க்கையின் நெறிகளுக்கு நிலத்தில் இருந்தே ஆதாரங்கள் கொள்ளப்பட்டிருக்கலாம். அதில் ஒன்றே தமிழர் சிந்தனையில் ஆழமாக வேரூன்றிய மறுபிறப்புக் கோட்பாடு.றிந்திய தத்துவ மரபின் தொல்காலத்தில் மறுபிறவிக் கோட்பாடு அழுத்தமாக இருந்தது என்று சொல்ல முடியாது. வேதகாலத்தில் அதில் ஒலிக்கும் பல குரல்களில் ஒன்றாகவே மறுபிறப்புசிந்தனையும் இருக்கிறது.

இதிகாசங்களை எடுத்துக்கொண்டால்கூட மறுபிறப்புக்கோட்பாடு வலுவாக இருப்பதகாச் சொல்ல முடியாது. இதிகாசங்களின் மையக்கதாபாத்திரங்களின் முற்பிறப்புகள் விரிவாகச் சொல்லப்பட்டதில்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். மையமுக்கியத்துவம் இல்லாத மறுபிறப்புக்கதைகள் பெரும்பாலும் பிற்காலச் சேர்க்கைகளாக இருக்கலாம் என்று சொல்பவர்கள் உண்டு. பொதுவாக மறுபிறப்புக் கோட்பாடு இந்திய தொல்பழங்கால நம்பிக்கைகளில் இருந்து மையத்தத்துவத்துக்கு வந்த ஒன்று.

டி.டி.கோஸாம்பி மறுபிறப்புக் கோட்பாடு என்பது வேளாண்சமூகங்களின் அடிப்படை பிரபஞ்ச உருவகங்களில் ஒன்றாக உள்ளது என்கிறார். இதை அவர்கள் பயிர்சுழற்சியை உருவகமாகக் கொண்டு அடைந்திருக்கலாம். பயிர் கதிர்முற்றி பழுத்து மறைகிறது. ஆனால் விதையிலிருந்து அது மீண்டும் எழுந்து வருகிறது. அதற்கு அழிவில்லை. அது ஒரு நிரந்தரமான சுழற்சி அதுபோன்றதே மானுடவாழ்க்கையும் என்பதே அந்த தரிசனம்.

இந்திய நிலப்பரப்பில் இருந்த பல்வேறு தொல்குடிகளில் இந்த இரு சிந்தனைப்போக்குகளும் வலுவாக இருந்து அவை மையப்போக்குக்கு சென்று சேர்ந்திருக்கலாம் என்று நாம் ஊகிக்க முடியும். இயற்கை வழிபாடே ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியத்தின் அடிபப்டையாக அமைந்தது. நிலத்தை இயற்கையாகவும் இயற்கையை பிரம்மாண்ட வடிவில் பிரபஞ்சமாகவும் கண்டதே சாங்கியமாக ஆகியது. சாங்கியத்தின் மைய உருவகமே ஆதி இயற்கை [மூலப்பிரகிருதி] என்பதுதான். பிறவிச்சுழற்சி என்ற கருதுகோளும் அவ்வாறு மைய  விவாதத்திற்கு சென்றுசேர்ந்தது.

தமிழ்ச் சிந்தனை மரபின் அடிப்படைத்தனிச்சிறப்பாக இருப்பது அகம் -புறம் என்ற அதன் பிரிவினைதான். பின்னர் இந்த கருதுகோள்  அகப்புறம் புறப்புறம் என்று மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் அகம் புறம் என இரண்டாக பிரித்தது தமிழ் மரபு. அகம் நம் அகத்தில் நிகழ்கிறது. உணர்ச்சிகள் கனவுகள் எண்ணங்கள். ஆனால் அகம் நிகழ புறத்தின் பருப்பொருட்கள் தேவைப்படுகின்றன. சங்கப்பாடல்களைப் பார்த்தால் மிக நுண்மையான இயற்கைச் சித்திரங்கள் மனத்தைச் சொல்ல முற்படும் அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.

அதேபோல புறம் என்பது மானுட உணர்ச்சிகளினால் ஆன புறவாழ்க்கையாக உள்ளது. பின்னர் புறம் என்ற கருதுகோளை அறமும் பொருளும் இணைந்த ஒன்றாக தமிழ் மனம் பிரித்துக்கொண்டிருக்கிரது என்று சொல்லலாம். புறம் என்று சொல்லப்படும் பிரிவினையில் பொதுவாக இயற்கைச் சித்திரங்களை விட நிகழ்வுகளும் உணர்வுகளும்தான் அதிகமாக உள்ளன. வெளியே நாம் காண்பது அகத்தையே என்றும் அகமாக தோன்றுவது புறமே என்றும் புரிந்துகொண்ட ஒரு தரிசனத்தின் வெளிப்பாடுகளே சங்கப்பாடல்கள்.

இந்தமூன்று அடிப்படைகளில்தான் சங்ககாலத்தின் தத்துவம் அமைந்திருந்தது என்று ஊகிக்கலாம். சங்ககாலத்தில் பேசப்பட்ட காதல் மானம் வீரம் மூன்றுமே இந்த பிரபஞ்ச உருவகத்தின் மீதுதான் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் தொன்மையான இந்து தத்துவப் பண்பாட்டுக் கூறுகளின் நேரடிச் செல்வாக்கு நமக்குக் கிடைக்கும் ஆகப்பழைய சங்கபாடல்களிலேயே உள்ளது. வேத-வேதாந்தக் கருத்தியலுடன் உரையாடி வளர்ந்த நிலையில் இருக்கும் சிந்தனைகளாகவே நமக்கு சங்ககால பாடல்கள் காணக்கிடைக்கின்றன. வைதிகமரபில் இருந்து பெற்ற அறம்பொருளின்பம் என்னும் மூவகை புருஷார்த்தங்கள் [வாழ்க்கைச்சாரங்கள்] நம் சிந்தனையை பின்னர் வடிவமைத்தன.

அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றுக பெரும!

[புறம் 28]

என்று புரநாநூறு குறிப்பிடுகிறது. பின்னர் திருக்குறள் வழியாக இந்த தத்துவக் கட்டுமானம் தமிழ்ச்சிந்தனையின் அடிப்படையாக ஆகியது.

இங்கே கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அறமும் பொருளும் இன்பமும் மட்டுமே புருஷார்த்தங்களாக உள்ளன என்பது. இதற்கு இரு விளக்கங்கள் உள்ளன. அறமும்பொருளும் இன்பமும் அமைந்தால் அதுவே வீடுபேறு என்ற கருத்து தமிழுக்கு உரியது என்பது ஒன்று. வீடுபேறை முக்கியமான புருஷார்த்தமாக முன்வைக்கும் கோணம் வேதகாலத்துக்குப் பின்னர் தரிசனங்களின் காலகட்டத்தில்தான் உருவாகி வந்தது என்பதும், அதற்கு முன்னரே தமிழ்ப்பண்பாட்டுடன் வேதநெறியின் உரையாடல் நடந்துவிட்டது என்பது இன்னொன்று

வேதமரபுக்குப் பின்னர் தமிழ்ப்பண்பாட்டுடன் உரையாடியது ஆசீவகம்.பின்னர் சமணம். அதன்பின்னர் பௌத்தம். இந்த உரையாடல்களின் விளைவாக தமிழில் விரிவான தத்துவவிவாதங்கள் உருவாயின.  விளைவாக காப்பியங்கள் பிறந்தன

 

[  4  ]
இந்தக் கோணத்தில் யோசிக்கும்போது காப்பியகாலகட்டத்துக்கு முன்பு ஏன் விரிவான தத்துவ விவாதங்கள் நிகழவில்லை, ஏன் முக்கியமான தத்துவநூல்கள் உருவாகவில்லை என்ற கேள்விக்கு ஒரு பதிலை ஊகிக்க முடியும்.

சம்ஸ்கிருத மரபில் ஏன் விரிவான தத்துவ விவாதங்கள் உருவாயின? வேதகாலத்திலேயே அந்தப்பண்பாடு வெளிப்பண்பாடுகளுடன் விரிவான உரையாடலுக்கு வந்திருக்கிறது. அது பிற பண்பாடுகளை நோக்கி விரிந்து அனைத்தையும் தன்னுள் இணைத்துக்கொள்ளும் தன்மையுடன் இருந்திருக்கிறது. நான்கு வேதங்களும் நான்குவகையான பண்பாடு உரையாடல்களின் விளைவுகள்.

இந்த உள்ளிழுக்கும் இயல்பு காரணமாக வேதப்பண்பாடும் வேதசிந்தனையும் பல்வேறு கருத்தியல் நெருக்கடிகளைச் சந்தித்தன. அந்நெருக்கடிகள் வழியாக அவை வந்தபோது விரிவான தீவிரமான தத்துவ விவாதத்துக்கான தேவை எழுந்தது. இதை வேதங்கள் முதல் காணலாம். அக்னி, காற்று, ஒளி, இரவுபகல்கள் போன்ற இயற்கையுருவகங்கள் சார்ந்த வழிபாட்டில் இருந்து  விஷ்ணு ருத்ரன் போன்ர தெய்வங்களை நோக்கி வருவதெ தொன்மையான ஒரு பண்பாட்டு பரிமாற்றத்தின் விளைவாகத்தான் இருக்க வேண்டும்.

பல்வேறு இறை உருவகங்கள் வழிபாட்டுமுறைகள் வேதப்பண்பாட்டுக்குள் , மழைக்கால குலத்தை நிரப்பும் ஓடைகள் போல , இந்திய நிலத்தில் இருந்து வந்துகொண்டே இருந்திருக்கின்றன. அவையனைத்தையும் ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்து சமரசப்புள்ளிகளைக் கண்டடைந்து மையப்படுத்தி தொகுக்கும் ஒரு பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடு தொய்வில்லாமல் நிகழ்ந்தது. அதைச் செய்த அறிவாளர் ரிஷிகள் எனப்பட்டார்கள். வேறு எந்த மரபிலும் காணக்கிடைக்காத இத்தனை ஆயிரம் அறிவாளர்களின் தேவை இவ்வாறு உருவானதே

இந்த தேடல் சென்றடைந்த மாபெரும் உருவகமே பிரம்மம். அனைத்தையும் உள்ளடக்கிய தூய தத்துவார்த்தமான கட்வுள் உருவகம். மானுடத்தின் முதல் தத்துவார்த்தமான இறையுருவகமும் இதுவே. அதன்பின் விவாதம் முழுமுற்றாக தூய தத்துவத்துக்குள் சென்றுவிட்டது. பிரம்மத்தை மையமாக்கி தன்னுள் வந்து சேரும் எல்லா சிந்தனைகளையும் தொகுக்கும் பெருமுயற்சியே மானுடத்தின் மாபெரும் தத்துவத்தொகுப்பை உருவாக்கியது

வேதகாலத்துக்குப் பின்னர் தரிசனங்களின் காலகட்டத்திலும் சரி, அதன்பின் அவைதிக மதங்களான பௌத்த சமண மதங்களின் காலகட்டத்திலும் சரி, கடைசியில் ஆங்கில ஆட்சியின்போது வந்த ஐரோப்பிய சிந்தனைப்போக்குகளின் காலகட்டத்திலும் சரி இந்திய தத்துவ விவாதங்களின் ஒரு தரப்பாக வேதாந்தம்தான் இருந்துவந்திருக்கிறது. அதன் விவாதம் ஒருபோதும் ஓயாமல் முன்செல்கிறது.

அத்தகைய ஒரு உள்ளிழுப்பு- தொகுப்புத்தன்மை தமிழ்ப்பண்பாடில் இல்லை. ஏற்கனவே கல்வியிலும் சிந்தனையிலும் முதிர்ந்து ஒரு செவ்வியல்தன்மையை அடைந்து விட்டிருந்த தமிழ்ப்பண்பாடு தன்னுள் தான் நிறைந்து அசைவற்று இருந்தது. அதை ‘ஒரு பதிஎழுவறியா பழங்குடி’ த்தன்மை எனலாம். ஆகவே அது புறப்பண்பாடுகளுடன் உரையாடவோ அவற்றை வென்று உள்ளடக்கவோ முயலவில்லை. அதற்கும் பிற தரப்புகளுக்கும் விரிவான விவாதமே நிகழவில்லை

சங்ககாலத்துக்கு முன்னரே வேதப்பண்பாடு தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் வைதீகர் எப்போதும் அன்னியராகவே சொல்லப்படுகிறார்கள். எப்போது வைதீகர்கள் குறிப்பிடபபுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் தவம், வேள்விச்செயல்,அவர்களின் வேதம் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு மதிப்புடனும் வழிபாடுட்டனும்தான் சொல்லபப்டுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தின் உறுப்பினராக சொல்லபப்டவில்லை.

அந்த வைதிகர்களிடமிருந்து வந்த வைதிகசிந்தனைகளில் இருந்து மூன்று புருஷார்த்தங்கள், வேள்விப்பயன் [அபூர்வம்] போன்ற சில தத்துவக் கருத்துக்களை தமிழ்ச்சிந்தனைகள் பெற்றுக்கொண்டிருந்தாலும்கூட விரிவான விவாதங்கள் நிகழ்ந்ததாகவோ அதன்மூலம் தத்துவநகர்வு உருவானதாகவோ சொல்லமுடியாது. நேர்மாறாக தமிழ்ச்சிந்தனையின் பலகூறுகளை வைதீகம் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டிருக்கலாம் என்று படுகிறது.

பின்னர் ஆசீவக சமண பௌத்த மதங்கள் வந்தபோது அவை தன்னுள் நிறைவுற்றிருந்த தமிழ்ச்சிந்தனையின் சிம்மாசனங்களை அசைத்தன. தத்துவ அறைகூவல் விடுத்தன. அந்த சிந்தனைகளை உள்வாங்கும்படி தன்னை மாற்றியமைக்கும்கட்டாயம் தமிழுக்கு உருவானது. விளைவாக தத்துவமோதல்களும் விவாதங்களும் உருவாயின.

தன் தத்துவதரிசனங்களை விவாதங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டிய வரலாற்றுத்தருணம் தமிழ்பப்ண்பாட்டுக்கு அமையவில்லை என்று சொல்லலாம். கரைகவியா ஏரி போல அது அலையற்று நெடுங்காலம் அப்படியே இருந்தது. சிந்தனைகளை பிரசிந்தனைகளை எதிர்கொள்ளும் படைக்கருவியாக ஆக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு உருவாகவில்லை. சிந்தனைகளை முறைப்படுத்தி தொகுத்துக்கொள்ள வேண்டிய தேவை மட்டுமே உருவாகியது.ஆகவேதான் தொல்தமிழ்ப்பண்பாட்டின் அக்கறை இலக்கணங்களில் ஊன்றியிருந்தது.

தமிழில் பழங்கால அறிவோர் அவை என்று நாம் காண்பவை எல்லாமே இலக்கண அவைகளாகவும் இலக்கிய அரங்கேற்றக் கூடுகைகளாகவும் இருந்தன. இலக்கண நூல்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றாக உருவாகிக் கொண்டே இருந்தன. எல்லா கருத்தும் ஏற்கனவே சொல்லபப்ட்ட ஒன்றாக இருந்தது. தத்துவம் மத்தினால் கடைந்து உருட்டி வைக்கப்படவில்லை– அது இலக்கியம் என்னும் பாலில் கரைந்தநிலையிலேயே இருந்தது.

தமிழ்ச்சிந்தனையின் மையக்கருத்துக்களான இயற்கை வழிபாடு, பிறவிச்சுழற்சி மற்றும் அகப்புறம் ஆகிய மூன்றும் இந்திய சிந்தனைமரபில் தமிழிலிருந்து சென்று வலுப்பெற்றவை என்று சொல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பிந்தைய இரு கருத்துக்களும் பௌத்தத்தில் அழுத்தமாக வேரூன்றின. சூனியவாத பௌத்தமும் விக்ஞானவாத பௌத்தமும் அதிலிருந்தே உருவாகின. அவற்றில் இருந்து அத்வைதம் விசிஷ்டாத்வைதம் துவைதம் போன்ற பிற்கால வேதாந்தங்கள் உருவாயின. இவற்றை உருவாக்கிய அனைத்து சிந்தனையாளர்களும் தென்னிந்தியாவைச்சேர்ந்தவர்கள். பலர் காஞ்சியில் படித்தவர்கள். இந்திய சிந்தனை மரபில் இன்றுள்ள வேதாந்த ஞானம் என்பது பெரும்பாலும் தெற்கின் — தமிழகத்தின் — கொடை என்றால் அது மிகையல்ல.

 

நூல்

சங்கசெவ்வியல் டாக்டர் செ.சாரதாம்பாள். மீனாட்சி புத்தகநிலையம் 1992

முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொற்றவை