ஆர்.கே.நாராயணன், மீண்டும்

டியர் ஜெயமோகன்,

உங்கள் ப்ளாக் பார்த்துகொண்டிருந்த பொழுது , நீங்கள் ஆர்.கே.நாராயண் பற்றி எழுதி இருந்ததை கவனித்தேன். பழைய பதிவு போல் இருந்தது. இருந்தாலும் அதைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று இதோ எழுதுகிறேன்.

ஆர்.கே.நாராயண் பற்றி உங்கள் கருத்து வெறும் நுனிப் புல்லாகவே உள்ளது.அவருடைய swami and friends பற்றிய உங்கள் விமர்சனம் சுமார். அவரை தேவன்,p.g.wodehouse போன்றவர்களுடன் ஒப்பிடுவது சற்று நெருடலாக உள்ளது. தேவன் போன்றவர்கள் humour என்பதை உருவாக்கி எழுதுபவர்கள், அவர்கள் எழுத்தால்,வார்த்தைகளால் நகைச்சுவை உருவாக்குபவர்கள். அதிலும் தேவன் ரொம்ப சுமார்.

நாராயணின் swami and friends இந்தியாவின் மிக சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லலாம். இன்று ஒரு பத்து வயது சிறுவனிற்கு படிக்கப் பரிந்துரை செய்ய வேண்டிய novel என்றால் swami and friends நிச்சியம் உண்டு. அது alice and wonderland , போன்ற ஓர் அற்புதப் படைப்பு. நீங்கள், தமிழில் அதைப் போன்ற ஒரு சிறுவர் நாவல் இருந்தால் கொடுங்கள்.

நாராயண் எழுத்து கண்டிப்பாக வெள்ளைக்காரனுக்கான எழுத்து இல்லை. அவரது நடையைப் படித்தால் நிச்சயமாக , ஒரு சாதாரண தமிழ் பேசும் ஆங்கில எழுத்தாகவே உள்ளது. இது சற்று நிதானமாகப் படித்தாலே தெரியும். அவரது எழுத்து புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது நடையில் உள்ள சிம்ப்ளிசிட்டி,நேர்மை,மற்றும் எதார்த்தமான நகைச்சுவை. நிச்சயமாக அது அருந்ததி ராய் , விக்ரம் செத் வகை கிடையாது. நீங்கள் நாராயண் பற்றிய முன் முடிவுடன் படித்தால் அது நிச்சயம் இலக்கிய விமர்சனத்திற்குத் தடை ஆகலாம். ஒட்டு மொத்தப் பார்வையுடன் பார்த்தால் நிச்சயம் சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் ஓர் அற்புதமான படைப்பே.

நன்றி
பாலா

அன்புள்ள டி.எஸ்.எஸ். பாலா

பல பாலாக்கள் இருப்பதனால் சிக்கல் ஆகவே பேரை மாற்றிவிட்டேன்.

நான் ஆர்.கே. நாராயணனைப்படித்தது பட்டப்படிப்பு இறுதிநாட்களில். அன்று எனக்கு முன்முடிவுகள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வயதில்கூட எனக்கு மெல்லிய சுவாரசியம், நீங்கள் சொல்லும் ‘நேர்மை’ இதெல்லாம் போதவில்லை.2009ல் ஆங்கில இலக்கியம் பற்றிய அந்த விவாதத்துக்குப் பின் Waiting for the Mahatma படித்தேன். கொஞ்சம் படிக்கும்போதே அதைப் படித்திருப்பது நினைவுக்கு வந்தது. 80களில் அது பல்கலையில் ஆங்கில இலக்கியத்துக்குத் துணைப்பாடமாக இருந்திருக்கிறது. அப்போது வாசித்திருக்கிறேன். மெல்லிய அங்கதம், குறைவாகச் சொல்வது என்ற இரு அம்சங்கள் தவிர அதை வாசித்துப் பெறுவதற்கு ஏதும் இல்லை என்று பட்டது. நான் முடிக்கவில்லை.

ஆர்.கே.நாராயணனைப் பேரிலக்கியவாதி என்று சொல்பவர்களுக்கும் எனக்கும் இடையே ரசனையில், வாசிப்புப்பழக்கத்தில், இலக்கியப்பார்வையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அவர்கள் உலகிலேயே நான் இல்லை.

அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு படத்தில் தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி சுடும் காட்சி ஒரு முழுநிமிடம் காட்டப்பட்டிருக்கும். அந்தக் காட்சி தோசையைப்பார்த்திராத ரசிகர்களை உத்தேசித்தது. அந்த ரசிகர்கள் அதை விரும்புவார்கள். அதேபோல அவர்களின் படங்களில் நாம் விரும்பும் அம்சங்கள் உண்டு.

இதைப் புதுமையீர்ப்பு [exotic ] என்று சொல்லலாம். கலையை மதிப்பிடுவதில் மிக நுட்பமான சிக்கல்களை உருவாக்கக்கூடியது இது. அன்னியமான ஒரு சாதாரண விஷயம் நமக்களிக்கும் ஒரு கவர்ச்சி இது. இதைக் கலையின் ஈர்ப்புடன் நாம் குழப்பிக்கொள்கிறோம்.

கலை நாம் அன்றாடம் காண்பவற்றைப் பெரிய பின்னணியில் அமைப்பதன்மூலம் பழக்கமழிப்பு[Defamiliarization] செய்து புதியதாகக் காட்டுகிறது. அப்போது அது ஒரு குறியீடாக ஆகிவிடுகிறது. ஒரு கண்டடைதலின் பரவசத்தை அளிக்கிறது.அறிமுகமான ஒன்றின் புதிய தோற்றம்- இதுவே கலையின் இன்பம்.

ஆனால் அறிமுகமற்ற அன்னியமான ஒன்று நமக்கு அதேபோலப் பரவசத்தை அளிக்க முடியும். சிலசமயம் அறியாத நாடு அல்லது பண்பாட்டின் குறியீடாகவும் அக்கணத்தில் அது ஆகிவிடமுடியும். அதற்கும் கலை அளிக்கும் கண்டடைதலுக்கும் வேறுபாடுண்டு

தேர்ந்த ரசிகர்கள் திறனாய்வாளர்கள்கூட இந்த வேறுபாட்டை அறியாத தருணங்கள் உண்டு. அதிலும் அமெரிக்க ஐரோப்பிய மனம் இந்தியா , ஆப்ரிக்கா போன்ற நாடுகளை ஒரு வகை மேட்டிமைநோக்குடன் குனிந்தே நோக்குகிறது. ’கலையெழுச்சி, தரிசனம் எதையும் நீ அளிக்கவேண்டாம், உன் வாழ்க்கையைப்பற்றி ஏதாவது சுவாரசியமாக எனக்குச் சொல்லு, உன்னால் அதைத்தான் செய்யமுடியும்’ என்ற பாவனை. ஆகவே இந்தப் புதுமையீர்ப்பை அவர்கள் பெரிதாக நினைக்கிறார்கள்

ஐரோப்பாவில் கொண்டாடப்பட்ட பெரும்பாலும் எல்லா இந்திய ஆக்கங்களும் நமக்குச் சாதாரணமாக தெரியவதை இப்படித்தான் நான் விளங்கிக்கொள்கிறேன். ஆர்.கே.நாராயணன் பற்றிய ஃபாஸ்டர், ஜான் அப்டைக்கின் கருத்துக்கள் இப்படிப்பட்டவை. ஆர்.கே.நாராயணனில் இந்த வெள்ளைக்காரனுக்கான எக்ஸோடிக் அம்சம் அல்லாமல் வேறேதும் இல்லை.

ஆம் எதுவுமே. நான் இலக்கியம் என எதையெல்லாம் நினைக்கிறேனோ எதுவுமே. வாழ்க்கையின் முழுமையான சித்திரம், கதைமாந்தரின் அகம், உணர்ச்சிகரமான தருணங்கள், தரிசனம் எதுவுமே. கனகச்சிதமான ’நாண்டிடேய்ல்’ எழுத்து.

தமிழில் குழந்தைகளுக்கான நாவல்கள் என அதிகம் எழுதப்பட்டதில்லை- அதற்கான ‘மார்க்கெட்’ தமிழில் இல்லை. ஏனென்றால் தமிழ்ப்பெற்றோர் தமிழ் நூல்களை வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை
இருந்தாலும் கி ராஜநாராயணனின் ‘பிஞ்சுகள்’ ஒரு முக்கியமான சிறு நாவல். கண்டிப்பாக சுவாமி அண்ட் பிரண்ட்ஸை விட மேலானது. வாசித்துமுடிக்கும் குழந்தைக்கு வயதாகும்போது அதன் மனத்தில் அந்நாவல் வளர்ந்துகொண்டே செல்லும்.

அற்புத உலகில் ஆலீஸ் நீங்கள் வாசித்திருக்கக்கூடியதுபோல ஒரு சின்னப்புள்ளைக்கதை அல்ல. இலக்கியம் வாசிக்கும் பழக்கமிருந்தால் அதன் சொல்விளையாட்டுகள் மற்றும் படிமங்களில் உங்கள் வாழ்க்கை முழுக்க கூடவே வரக்கூடிய ஆழமான தத்துவத்தருணங்கள் மெய்த்தரிசனங்கள் உண்டு. சுவாமியும் நண்பர்களும் பத்துநிமிடத்துக்குமேல் நினைத்துப்பார்க்கும் எந்த உள்ளடக்கமும் இல்லாத நாவல்

நம்முடைய பார்வைகள் வேறு. நான் இலக்கியம் என்று சொல்வதற்கான அளவுகோல்கள் அல்ல உங்களுடையது.இதற்குமேல் நாம் விவாதிப்பதென்றால் இருபதாண்டுக்காலமாக நான் இலக்கியம் என்று எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் ஓரளவேனும் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்.

ஜெ

இந்திய இலக்கியம் ஆங்கிலக்கட்டுரை

முந்தைய கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி-கடிதம்
அடுத்த கட்டுரைஅறம் வாழும்-கடிதம்