சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நானும் மலையாளச் சிந்தனையாளரும் நாவலாசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணனும் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த மதுக்கடை நோக்கி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தோம். ஆட்டோக்காரர் தமிழர். ஆட்டோவில் ஒலிநாஆவை ஓடவிட்டுக்கோண்டிருந்தார். ஏதோ ஒரு தமிழ் நாட்டுப்புறப்பாடல் ஒலித்தது. அக்காலத்தில் சொந்தமாகவே பாடி பதிவுசெய்து ஒலிநாடாவெளியிடும் மோகம் பரவலாக இருந்தது.

நல்ல கரடுமுரடான குரல், உரத்த உச்சகதிக்குரல். தப்பு அல்லது முழவு போன்ற ஏதோ வாத்தியத்தின் தோழமை. நாஞ்சில்வட்டாரவழக்கில் அமைந்த பாடல். அந்த ஓட்டுநர் குமரிமாவட்டத்தின் ஏதேனும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவருக்கு அந்தப்பாடல் வழியாக அவரது நிலமும் மனிதர்களும் மீண்டுவருகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

பாடல் வரிகளை கவனித்தேன். காதல்தாபம்தான். காதலியின் உடலில் உள்ள நகைகளாக தன்னை காண்கிறான் காதலன்

கழுத்தில  ஆடுறேனே கண்ணம்மா- உன்
கவையிலே வளையறேனே கண்ணம்மா

நான் புன்னகைசெய்வதைக் கண்டு பாலகிருஷ்ணன் ”அந்த வரி என்ன?”என்றார். நான் விளக்கினேன். காதலியின் கழுத்தில் மாலையாக ஆடுகிறேன். அவளுடைய மார்புகளின் இடுக்கில் உள்ள வளைவில் நானும் வளைகிறேன். ”ஆ!”என்றார் பாலகிருஷ்ணன். பின்னர் ”நாட்டுப்புறப்பாடலின் செவ்வியல் கலந்தால் அது பிரிந்துதான் நிற்கும். ஆனால் சரியான உணர்ச்சிவேகத்துடன் அந்தக்கலவை நிகழ்ந்தால் இதைப்போல மிக அபூர்வமான ஓர் அழகு உருவாகும்” என்றார்.  

மதுகக்டைக்குப் போனதும் நான் அந்தவரியை எப்படி செவ்வியல் பண்புள்ளது என்று சொல்ல முடியும் என்றேன். அந்தப்பிரிவினை குத்துமதிப்பாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல என்று சொன்னார் பி.கெபாலகிருஷ்ணன். ஒரேவரியில் செவ்வியல்பண்பு என்றால் என்ன என்று விளக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஒரு படைப்பை கூர்ந்து கவனித்து சிந்தனைசெய்தும் கற்பனைசெய்தும்  ரசிகன் தன்னுடைய மனதில் வளர்த்து எடுத்தால் மட்டுமே அதன் அழகு கிடைக்கும் என்றால் அதுதான் செவ்வியல் பண்பு.

அப்படியானால் நாட்டார் பண்பை இதற்கு நேர் எதிரானதாகச் சொல்லலாம். கேட்கும் அனைவரிடமும் கேட்ட அக்கணத்திலேயே நேரடியாக உரையாட ஆரம்பிப்பதே நாட்டார் பண்பின் இயல்பு. அதில் நுண்பொருள் தளங்கள் இல்லை. அதற்கு ரசிகனின் நுண்ணுணர்வும் தேவையில்லை. நுண்ணுணர்வுள்ள ஒரு ரசிகன் அதன் வழியாக மேலும் மேலும் நகரமுடியக்கூடும். ஆனால் அது தன்னியல்பில் அப்பட்டமானது.

தொல்பிரதிகளைப் புரிந்துகொள்ள ‘நாட்டார் X செவ்வியல்’ என்ற பிரிவினையை  ஒரு நல்ல கருவியாக நாம் பயன்படுத்தலாம். எல்லா கருவிகளும் அக்கருவிகளின் எல்லைக்குட்பட்டவற்றையே கையாளமுடியும் என்ற  எச்சரிக்கையுடன் நாம் இதைச்செய்யவேண்டும். முதல்முற்றாக வகுத்துவிட எப்போதுமே முயலக்கூடாது.

செவ்வியல் என்பதன் ஐந்து அடிப்படை இலக்கணங்களை நான் இவ்வாறு அளிப்பேன்.

1. செவ்வியலில் ஆசிரியன் வலுவாக இருப்பான். அப்படைப்பின் வழியாக நாம் ஓர் ஆசிரியனின் இருப்பைச் சென்று அடைவோம் .அவன் அப்படைப்பில் நேரடியாக வெளிபப்ட மாட்டான். அவனுடைய உணர்ச்சிகள் வெளிபப்டாது. ஆனால் அவனுடைய தனித்தன்மை, அவனுடைய ஆளுமைத்திறன் அப்படைப்பில் இருக்கும்.

2. செவ்வியலை ரசிக்க தேர்ச்சிபெற்ற ரசிகன் அல்லது வாசகன் தேவை. ஒரு சமூகம் ரசனையிலும் வாசிப்பிலும் தொடர்ச்சியான பயிர்சியை தன் சமூகத்துக்கு அளிப்பதன் வழியாகவே செவ்வியலை ரசிப்பதற்கான சூழல் உருவாகிறது

3. செவ்வியலுக்கு திட்டவட்டமான வடிவ வரையறை இருக்கும் .செவ்வியல் அவ்வடிவத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்

4. செவ்வியல் ஒரு சமூகத்தின் கனவையும்  யதார்த்தத்தையும் சாராம்சப்படுத்தவும் பொதுமைப்படுத்தவும் முயலும்

5. செவ்வியல் எப்போதும் நுண்மைக்கு முயன்றபடி இருக்கும். ஆகவே ஒரு கட்டத்தில் பொதுவான விஷயங்களை நிரந்தரமாக ஆக்கிவிட்டு அதில் நுண்ணிய சுவைபேதத்தை உருவாக்குவதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தும்
 

ஒரு சமூகத்தின் தொல்பிரதிகள் பெரும்பாலும் நாட்டார் பிரதிகளாகவே இருக்கும். அல்லது நாட்டார்த்தன்மை மேலோங்கிய பிரதிகளாக இருக்கும். நாட்டார்கலைகள் வழியாக ஒருசமூகம் இலக்கியத்த்துக்கும் நுண்கலைகளுக்கும் வந்த பின்னர்தான் மெல்ல மெல்ல செவ்வியல் அங்கெ உருவம் கொள்கிறது. நாட்டார் கலைகளின் வழியாக திரண்டு வரும் சில சாராம்சங்கள் விரிவான விவாதக்களத்தில் செம்மைப்படுத்தப்பட்டு செவ்வியலின் அடிப்படைகளாக ஆகின்றன.

ரிக்வேதத்தை ஒரு நாட்டார் பிரதி என்று சொல்லலாம். வேறு சொற்களில் அதை பண்படாபிரதி என்றும் சொல்வதுண்டு. மிகத்தொன்மையான ஒரு சமூகம் தன் பண்பாட்டுநினைவுகளை மொழிவடிவில் அழியாமல் பாதுகாக்கமுடிந்ததனால் அவை நமக்குக் கிடைக்கின்றன. ரிக்வேதத்தை ஒரு நூல் என்று சொல்வதைவிட ஒரு தொகுப்பு என்றே சொல்லவேண்டும்

ரிக்வேதத்தின் ஆரம்பகாலச் செய்யுட்கள் மிகநேரடியான பிரார்த்தனைகள் மட்டுமே. ஆனால் அதன் பிற்பகுதிகள் மெல்லமெல்ல செவ்வியல்த்தன்மை கொள்கின்றன. அதன் பத்தாவது மண்டலம் ஒரு பெரும் செவ்வியல் படைப்பா¡க உள்ளது. அந்த பரிணாமத்தை நாம் ரிக்வேதம் முழுக்க காண்கிறோம். வேதங்களுக்குப் பின்னர் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ள எல்லா ஆக்கங்களும் செவ்வியல்தன்மை கொண்டவைதான்.

தமிழ் மரபை எடுத்துப் பார்ப்போம். நமக்கு கிடைக்கும் ஆகப்பழைய இலக்கியப்பிரதி என்றால் அது நற்றிணை,புறநாநூறு, குறுந்தொகை ஆகிய மூன்றும் ஆக இருக்கலாம். [தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்பதே இன்றைய ஆய்வாளர் பலரின் கருத்தாகும்] இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் பிரதிகள். செவ்வியலின் எல்லா இலக்கணங்களும் கொண்டவை என்பதுடன் சிறிதளவுகூட நாட்டார் கூறுகள் இல்லாதவை என்பதும் நம் கவனத்தைக் கவர்கிறது. செவ்வியல் இலக்கியம் உருவாகி பல நூற்றாண்டுகள் வழியாக முதிர்ச்சி அடைந்து முழுமை பெற்றபின் உருவான படைப்புகள் இவை.

சமீபத்தில் ஐராவதம் மகாதேவன் போன்றவர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் முடிவுகள்கூட இந்த எண்ணத்தை உறுதிசெய்வதாகவே உள்லன. சங்க காலத்துக்கும் வெகுவாக முந்தைய தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அன்று கல்வி மிகப்பரவலாக இருந்ததை காட்டுகின்றன என்கிறார் ஐராவதம் மகாதேவன். அத்தகைய முழுமையான கல்விகொண்ட சமூகம் இயல்பாகவே செவ்வியலை உருவாக்கும் என்று சொல்லலாம்.

இன்னொரு ஆதாரத்தையும் சொல்லலாம். தமிழ் மரபின் புராதனமான சிற்ப வடிவங்களில் ஒன்று தட்சிணாமூர்த்தி. தென்றிசை முதல்வன் இன்று சிவபெருமானின் ஒரு தோற்றமாகக் கருதப்பட்டாலும்கூட அது ஆசிரியன் என்ற உருவகத்தின் சிலைவடிவம் என்பதே உண்மை. ஆலமர்ச் செல்வனாகிய தென்றிசைமுதல்வன் ஆசிரியன் என்பதை முதல் இறைவடிவாகக் கோண்ட ஒரு சமூகத்தின் நினைவு

ஆனால் உலகமெங்கும் நாம் செவ்வியலாக்கத்தையும் தத்துவமயமாக்கத்தையும் பிரித்துப்பார்க்க முடிவதில்லை. ஒரு சமூகம் தன் வளர்ச்சிப்போக்கில் சில தரிசனங்களைக் கண்டுகொள்கிறது. அவற்றை தர்க்கரீதியாக வகுத்துக்கோண்டு பொதுமைப்படுத்தி தத்துவமாக ஆக்கிக்கொள்கிறது. அந்தத் தத்துவங்கள் அந்த சமூகத்தின் அற- ஒழுக்க அடிப்படைகளை உருவாக்குகின்றன. இந்தப்போகின் உடன்விளைவாகவே செவ்வியலாக்கம் நிகழ்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. செவ்வியலாக்கம் என்பது தத்துவவளர்ச்சியின் வழிகாட்டி சக்தி என்று நான் சொல்வேன்.

நாம் சங்க காலகட்டத்தில் செவ்வியல் முழுமையைப் பார்க்கிறோம். அப்படியானால் அக்காலகட்டத்தின் தத்துவங்கள் என்ன? நமக்கு பழந்தமிழ் மரபில் இருந்து  உபநிடதங்கள், பிரம்மசூத்திரம்,  கீதை, சாங்கியகாரிகை, வைசேஷிகசூத்திரங்கள் போன்ற முழுமையான தத்துவ நூல் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி இருந்த நூல்களைப்பற்றிய தகவல்களும் இல்லை. அகத்தியம். ஐந்திரம் போன்ற இன்று கிடைக்காமல்போன நூல்கள் தத்துவ நூல்களே என்று சிலர் சொல்வதுண்டு.

இன்றையநிலையில் சங்க செவ்வியலை உருவாக்கிய தத்துவ வளர்ச்சிப்புலம் ஏது என்ற வினா மிக முக்கியமானது. அதற்கான பதிலின் அடிப்படையிலேயே நாம் இந்திய தத்துவ ஞானத்தின் பரிணாம சித்திரத்தில் தமிழ் மரபின் பங்களிப்பு என்ன என்பதை வகுக்க முடியும்

 

 
[ 2 ]

 

 
இந்த விவாதத்தில் நான் முனைவர் செ.சாரதாம்பாள் எழுதிய சங்கசெவ்வியல் என்ற ஆய்வுநூலை பரிந்துரைக்கிறேன். மரபான ஓர் ஆய்வுப்பாதையில்செல்லும் இந்த நூல்  தமிழண்ணல் அவர்களின் வழிகாட்டலில் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடாகும். இதில்செவ்வியல் என்றால் என்ன என்ற மேலைநாட்டு நோக்குகள் ஓர் அத்தியாயம் முழுக்க விரிவாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றன.

சாரதாம்பாள் செவ்வியலுக்கு மேலைநாட்டில் சொல்லப்பட்ட வரையறைகளை இவ்வாறு அளிக்கிறார். கீழ்க்கண்ட இயல்புகளினால் ஒரு படைப்பை நாம் செவ்வியல் எனலாம்.

1  கிரேக்க உரோம இலக்கியத்தின் தொடர்பு இருப்பது

2  ஓர் இலக்கிய மரபில் முதன்மைத்தன்மையுடன் இருப்பது

3  தொன்மை

4  விரிவான ஒரு பாரம்பரியம் இருப்பது

5  பல்வேறுபட்ட பண்பாட்டுக்கூறுகள் இயைந்துசெல்லும் தன்மை

6  படைப்பாளியின் அந்தரங்கக் குரல் நேரடியாக வெளிப்படாமலிருத்தல்

7  ஏதோ ஒருவகையில் உலகளாவிய ஒரு தன்மை இருப்பது

8  இலக்கியகாலகட்டத்தின் ஒரு பகுதியின் பிரதிநிதியாக இருப்பது

9  அதன் கூறுகளுக்குள் தெளிவான காரணகாரிய தொடர்பு இருப்பது

10 உருவம் உள்ளடக்கம் இரண்டும் பொருந்தி வருதல்

11 இலக்கிய உத்திகள் இருத்தல்

12 விரிவான கற்பனைத்தன்மையுடன் இருப்பது, கற்பனையைக் கோருவது

13 திரும்பத்திரும்ப ஒன்றைச்செய்து மேம்படுத்தும் தன்மை

14 பெரும் கதைமாந்தர்களை உருவாக்கும் தன்மை

16 பிறகுவரும் படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்தல்

இவற்றில் எல்லா அம்சங்களும் சங்க இலக்கியங்களுக்கு பெரிதும் பொருந்திச்செல்கின்றன. ஒன்றைத்தவிர. காரணகாரிய தொடர்பு. காரணகாரிய தொடர்பு என்னும்போது அதை எளிய விளக்கமாக புரிந்துகொள்ளக் கூடாது. பிரபஞ்ச நிகழ்வை, அதன் உட்கூறுகளை முழுமையாக விளக்கும் தன்மை என்று அதைச் சொல்லவேண்டும். வாழ்க்கையை, மரணத்தை, சரிதவறுகளை, அறத்தைப் பற்றிய திட்டவட்டமான விளக்கம்.

சங்க இலக்கியத்தை நாம் படிக்கும்போது அத்தகைய ஒரு சீரான தத்துவ விளக்கத்தைக் காணமுடிவதில்லை. தனிவெளிப்பாடுகளாக உள்ள கருத்துக்களை இணைத்து நாமே ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் நமக்கு காப்பியங்கள் இல்லை. சங்கம் மருவியகாலகட்டத்திலேயே காப்பியங்கள் உருவாகின்றன. சீரான தத்துவ விளக்கம் உருவாகாமையினால் காப்பியங்கள் உருவாகவில்லை என்று சொல்வது ஒரு விளக்கம். காப்பியங்கள் கிடைக்காமையினால் தத்துவ விளக்கம் உருவாகவில்லை என்று சொல்வது இன்னொரு விளக்கம்

மூன்று பெரும் காப்பியங்களிளும் திட்டவட்டமாகவே தத்துவார்த்தமான காரணகாரிய உறவு விளக்கப்பட்டிருக்கிறது. சிறந்த உதாரணம் சிலப்பதிகாரம். அதன் பாயிரத்திலேயே ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும்’ அதன் தத்துவ விளக்கமாகச் சொல்லப்பட்டுவிட்டது. காப்பியம் முழுக்க எல்லா தருணங்களிலும் கவுந்தி, மாடலமறையவன் போன்றவர்கள் மூலம் தத்துவ விளக்கம் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பௌத்த சமண தத்துவங்களே நம் காப்பியங்களுக்கு அடிப்படையாக  ஆயின.

சங்க காலத்தில் தத்துவ விவாதங்கள் நடந்தனவா? ரிக்வேதத்தை நோக்கும்போது அக்காலத்தில் பலவகையான தத்துவ விவாதங்கள் நடந்ததை நாம் பல்வேறு செய்யுட்கள் வழியாக அவதானிக்க முடிகிறது. ஆனால் சங்க காலத்தில் த்துவ விவாதத்துக்கான முறையான அமைப்புகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. அரச சபைகளுக்கு வரும் புலவர்கள் அறவுரை கூறும் காட்சிகளை நாம் புறநாநூறில் காண்கிறோம். அவர்கள் நடுவே முரண்பட்டு விவாதிக்கும் முறைமை இருந்தமைக்கு ஆதாரம் இல்லை.

புறநாநூறில் உள்ள பொருண்மொழிக்காஞ்சி திணை பொதுவாக சிந்தனைகளை முன்வைக்கிறது. அதைச்சார்ந்த பல்வேறு தனிச்செய்யுடகளை தொகுத்து ஒரு தத்துவப்போக்கை ஊகிக்கும் வகையிலான ஆய்வுகள் தொடர்ச்சியாக தமிழில் நிகழ்ந்துள்ளன. ஆனாலும் புறநாநூறில் உள்ள இப்பகுதியை தத்துவார்த்தமாக அணுகி விவாதிக்கும் போக்கு பொதுவாக நம்மிடம் குறைவே.

சங்கம் மருவிய காலகட்டத்தில் உருவான பெருங்காப்பியங்களில் மிக விரிவான தத்துவவிவாதங்கள் உள்ளன. அந்த தத்துவ விவாதங்கள் நிகழ்வதற்கான சபைகள் மற்றும் விவாதமுறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.  அது திடீரென்று நிகழ்ந்துவிடாது. ஆகவே சங்ககாலம் என நாம் வகுக்கும் ஐந்து நூற்றாண்டுக் காலகட்டத்தின் இறுதியில் பௌத்த சமண மதங்கள் தமிழ்நாட்டில் வேரூன்றி விரிவான தத்துவ விவாதங்களை உருவாக்கிவிட்டிருந்தன என்று ஊகிக்கலாம்.

இந்த நோக்கில் அணுகினால் சங்கப்பாடல்களில் உள்ள தத்துவக்கருத்துக்கள் சமண பௌத்த மதங்களின் ஆரம்பகால வடிவங்களால் உருவாக்கபப்ட்டவையாக இருக்கலாம். சமண மதத்தின் முன்னோடி வடிவமான ஆசீவகம் தமிழகத்தில் அழுத்தமாக வேரூன்றியிருந்தது என்று வலுவான ஆய்வுத்தரப்பு உண்டு. சங்ககால தத்துவ நோக்கின்  உச்சம் என்று கருதப்படும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஒரு முழுமையான ஆசீவக கொள்கைவிளக்கம் என்பதைக் காணலாம்.

இதற்கும் முற்காலத்திலேயே தமிழ்நாட்டில் செவ்வியல் உருவாகிவிட்டிருந்தது. அந்தச் செவ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த தத்துவக்கருத்துக்கள் என்ன? அவை வெளியே இருந்து வந்த சமண – பௌத்த கருத்துக்களுடன் விரிவான உரையாடலில் ஈடுபட்டு அதன் விளைவாகவே காப்பியங்களில் நாம் காணும் தத்துவ வளர்ச்சி நிகழ்ந்தது என்று ஊகிக்கலாம். அந்த தத்துவக்கருத்துக்கள் என்ன? அவற்றின் பரிணாமம் என்ன?

 

10-3- 2009 அன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆர்றிய உரை: முதல் பகுதி

முந்தைய கட்டுரைரஹ்மான்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூல்கள்:கடிதங்கள்