அன்புள்ள ஜெ ,
நன்றி , எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு ஆனால் அவர்களில் அனேகமாக எல்லாருமே ஒரு சித்தாந்தம் அல்லது ஒரு குருவை முன்வைப்பவர்கள், நானும் நிறைய த்யான முறைகளைக் கற்றுள்ளேன் ஆனால் எனக்குத் தத்துவம் மற்றும் தத்துவத்தின் உளவியல் சாராம்சம் வியக்கவைகிறது , எனக்கு எந்த குரு மீதும் நம்பிக்கை இல்லை,அவர்கள் மீது வெறுப்பும் கிடையாது ,சில சிக்கல்கள் உள்ளன அது நான் புரிந்துகொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்று நினைகிறேன்
ரமணர், ஓஷோ , ஜே .கே , ஜக்கி , என்று பல புத்தகங்களை மற்றும் த்யான முறைகளும் கற்று சமனிலை இல்லாமல் தத்துவங்களின் பக்கம் திரும்பிய பொழுது சில நடைமுறைச் சிக்கல்கள் களைய உதவியது , அதன் மேல் ஒரு ஆர்வமும் கூடிற்று . முதலில் தத்துவமும் ஒரு “Intellectual fantasy” போல தான் இருந்தது , உங்களது சில கட்டுரைகள் சம நிலை தளத்தை நோக்கி என்னை இட்டுச் சென்றது
உங்களுக்கும், கார்ல் யுங்கிற்கும்தான் நன்றி கூறவேண்டும் , உங்கள் கட்டுரை ஒன்றில் இருந்து என்னக்கு சாங்கியம் அறிமுகம் ஆயிற்று , ஏறக்குறைய கார்ல் யுங் இன் ” Man and his symbols ” புத்தகமும் அந்தத் தளத்தில் உளவியலில் சிந்தனை மற்றும் சமநிலை தளத்தை விளக்குகிறது . ஒரு முறை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சில தத்துவ விஷயங்களை உங்களுடன் உரையாட ஆவல்.
நன்றி
லட்சின்
அன்புள்ள மது லட்சின்
இந்திய மெய்யியல் தத்துவம் பற்றி இந்த இணைய தளத்தில் சமான மனநிலை கொண்டவர்களிடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். உரையாடல் அறுபட்ட காலமே இல்லை.
தியான முறைகள், தத்துவம், குருகுல அமைப்பு, வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றை குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று மட்டுமே இப்போது சொல்ல விழைகிறேன்.
தியான முறைகள் மரபால் நெடுங்காலமாக உருவாக்கி எடுக்கப்பட்டவை. பொறுமையாக நீடித்த சாதனை வழியாக அந்தரங்கமாக அடையப்படவேண்டியவை அவை. அவற்றுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு சகபயணி என்றமுறையில் மட்டும் ஒரு குரு தேவை. அந்த குரு ஒரு நிறுவனமோ ஒரு மனிதக் கடவுளோ ஆக இருக்கவேண்டியதில்லை.
தத்துவம் என்பது தர்க்கபூர்வமாகப் புறத்தையும் அகத்தையும் வகுத்துக்கொள்ளும் ஒரு முறை. அது நம் அறிவை நிறைவடையச்செய்கிறது. ஆன்மீகத்தேடல் அமைந்திருக்கவேண்டிய உறுதியான பீடம் மட்டும்தான் அது. தத்துவமும் தியானமும் விறகும் தீயும்போல. தத்துவத்தில் தியானம் நின்றெரியும் . தத்துவத்தை தியானம் உண்ணும். எரிந்தபின் தத்துவம் இருக்காது. தியானமும் இருக்காது.
அகவய தியான அனுபவங்கள் அளிக்கும் அறிதல்களை வகுத்துக்கொள்வதற்கு மட்டுமே தத்துவம் உதவும் என்பது இந்திய மரபின் நம்பிக்கை. அதாவது யமநியமங்களில் யமம் என்பதற்குள் வருவதே தத்துவக்கல்வி.
இங்குள்ள குருகுல அமைப்பு மற்றும் அவை சார்ந்த வழிபாட்டுமுறைகள் ஒரு குறிப்பிட்ட மனநிலைக்குச் செல்வதற்கு மட்டுமே உதவுகின்றன. அவை வழிகள். சென்றுசேரும் இடங்கள் அல்ல. அவற்றை இறுதியாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.
ஜெ